நமஸ்காரங்கள் - பாபா கோதுமை மாவு அரைத்த நிகழ்ச்சியும் அதன் தத்துவ உட்கருத்தும்
புராதனமானதும், மிக்க மரியாதையை உள்ளதுமான வழக்கத்தின்படி, ஹேமத்பந்த், இந்த சாயி சரித்திரத்தைப் பல்வேறு நமஸ்காரங்களுடன் எழுத ஆரம்பிக்கிறார்.
1. முதலில் எல்லாவித இடையூறுகளை நீக்குதற் பொருட்டாகவும், தன் பணி வெற்றியுறவும் "ஐந்து கரத்தனை யானை முகத்தனை" மிக்கப் பணிவுடன் தலை தாழ்த்தி வணங்குகிறார். ஸ்ரீ ஷீர்டி சாயியே, கணபதி என்றும் கூறுகிறார்.
2. பின்னர் தன் மனத்திலே உதித்த எண்ணங்களை உயர்த்தி உணர்வூட்ட தம் தாய் சரஸ்வதியை நமஸ்கரிக்கிறார். ஸ்ரீ சாயி 'அறிவின் தெய்வமே' என்றும், அவரே தன் வாழ்க்கை கீதத்தை அழகுடன் பாடுகிறார் என்றும் கூறுகிறார்.
3. ஆக்கல், காத்தல், அழித்தல் என்னும் முத் தொழிலையும் முறையே நிகழ்த்தும் பிரம்மா, விஷ்ணு, சங்கரர் ஆகியோரையும் வணங்கி சாயிநாதர் அவர்களுடன் ஒன்றானவர் என்றும், சம்சாரம் என்னும் ஆற்றினை நாம் தாண்ட, நம்மைச் சுமந்து செல்வதில் மாபெரும் சத்குரு என்றும் விளம்பி,
4. பின்னர் பரசுராமரால் கடலினின்று உயர்த்தப்பட்ட கொங்கண தேசத்தில் அவதரித்துத் தம்மைக் காக்கும் தம் குலதெய்வமான நாராயண் ஆதிநாத் மற்றும் குடும்பத்தின் ஆதிபுருஷரையும் நமஸ்கரித்து,
5. பின்னர் தனது கோத்திரத்தில் அவதரித்த பரத்வாஜ முனிவரையும், பல்வேறு ரிஷிகளான யக்ஞவல்க்யர், பிருகு, பராசரர், நாரதர், வேதவியாசர், ஜனகர், ஜனந்தனர், ஜனத்குமாரர், சுகர், சௌனகர், விஸ்வாமித்ரர், வசிஷ்டர், வால்மீகி, வாமதேவர், ஜைமினி, வைசம்பாயனர், நவயோகீந்திரர் முதலியோரையும் நவீன மகான்களாகிய நிவ்ருத்தி, ஞானதேவர், சோபான், முக்தாபாய், ஜனார்த்தனர், ஏக்நாத், நாமதேவர், துகாரம், கனகர், நரஹரி முதலானோரையும் பணிந்து தலைவணங்கி,
6. பிறகு தனது தாத்தாவான சதாசிவரையும், தகப்பனாரான ரகுநாதரையும், தம் இளம் வயதில் மறைந்த அன்னை மற்றும் அவரை வளர்த்த அத்தை, அன்பிற்குரிய அண்ணன் ஆகியோரையும் வணங்கி,
7. பின்னர் படிப்பவர்களை வணங்கி, தமது பணிக்கு முழு அன்பையும், சிதையாத கவனத்தையும் கொடுத்தருள வேண்டிக்கொண்டு,
8. கடைசியாக தனது ஒரே அடைக்கலமும், பிரம்மமே மெய்ப்பொருள், பாரனைத்தும் மாயத்தோற்றம் என்று தனக்கு உணர்விக்கின்ற ஸ்ரீதத்தாத்ரேயரின் அவதாரமான சத்குரு ஸ்ரீ சாயிபாபா அவர்களை நமஸ்கரித்து, அங்ஙனமே எம்பெருமான் வதியும் எல்லா ஜீவராசிகளையும் வணங்கித் துதிக்கின்றார்.
பராசரர், வியாசர், சாண்டில்யர் முதலியோரது கருத்தின்படி 'பக்தியால் பலகாலும்' துதித்தவற்றைச் சுருக்கமாகக் கூறிய பின்பு ஆசிரியர் பின்வரும் நிகழ்ச்சியை விவரிக்கிறார்.
1910 ஆம் ஆண்டிற்குப்பின், எப்போதோ ஒருநாள் நல்ல காலை நேரத்தில் மசூதிக்கு சாயிபாபாவைத் தரிசிப்பதற்காகச் சென்றிந்திருந்தேன். பின்வரும் நிகழ்ச்சியைக் கண்ட நான் ஆச்சர்யத்தால் தாக்கப்பட்டேன். தமது முகம், வாய் இவற்றைக் கழுவிய பின்பு, சாயிபாபா கோதுமை மாவு அரைக்கத் தயார்படுவதில் முனைந்தார். ஒரு சாக்கைத் தரையில் விரித்து அதன்மேல் திருகையை வைத்தார். பின்பு முறத்தில் கொஞ்சம் கோதுமையை எடுத்து தம் கஃனியின் கைகளை மடக்கிவிட்டுக்கொண்டு கையளவு கோதுமையை திருகைக் குழியில் இட்டார். திருகையைச் சுற்றி கோதுமையை அரைக்கத் தொடங்கினார். பிச்சை எடுத்து வாழ்ந்து, எவ்வித உடைமையும் சேமிப்பும் அற்ற இவர் கோதுமை மாவு அரைக்க வேண்டிய அவசியமென்ன என்றவாறு நினைத்தேன். அங்குவந்த சிலரும் அவ்வாறே எண்ணினார்கள். ஆயின், ஒருவருக்கும் பாபா என்ன செய்கிறார் என்று கேட்கத் துணிவு வரவில்லை.
பாபா மாவரைக்கும் இச்செய்தி உடனே கிராமத்தில் பரவி ஆண்களும், பெண்களும் பாபாவின் செய்கையைக் காணப் பெருந்திரளாக மசூதிக்கு வந்தனர். கூட்டத்திலிருந்த தைரியம் உள்ள நான்கு பெண்மணிகள் வலிய நுழைந்து, பாபாவை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, திருகையின் கைப்பிடியைப் பற்றி பாபாவின் லீலைகளைப் பாடியவாறு மாவரைக்கத் தொடங்கினர்.
முதலில் பாபா கடுங்கோபம் அடைந்தார். ஆயின், அந்தப் பெண்மணிகளின் அன்பையும், பக்தியையும் கண்டு மிக்க சந்தோஷம் அடைந்து புன்னகை புரியலானார். அவர்கள் அவ்வாறு அரைத்துக் கொண்டிருக்கையில் "பாபாவுக்கு வீடோ, பிள்ளைகளோ அன்றி அவரைக் கவனிக்க வேறு யாருமே இல்லையாதலாலும் அவர் பிச்சை எடுத்து வழ்ந்தவராதலாலும் அவருக்கு ரொட்டி செய்ய கோதுமை மாவு தேவையிருக்கவில்லை, எனவே இவ்வளவு மாவை என்ன செய்வார்? ஒருவேளை பாபா அன்பாயிருக்கும் காரணத்தால், இம்மாவை நமக்குப் பகிர்ந்து கொடுத்துவிடுவார்." என்றவாறு எண்ணமிட்டபடி, பாடியவாறே அரைத்து முடித்து, திருகையை ஓரத்தில் நகர்த்திவிட்டு, கோதுமை மாவை நான்கு பிரிவாகப் பிரித்து ஆளுக்கு ஒவ்வொரு பகுதியாக எடுத்துக்கொள்ளத் தொடங்கினார்கள்.
இதுவரை அமைதியாகவும் அடக்கமாகவும் இருந்த பாபா கோபமடைந்து, "பெண்களே! உங்களுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா? யாருடைய அப்பன் வீட்டுப் பொருளை இவ்வாறு அபகரிக்கிறீர்கள். நீங்கள் தடங்கல் இன்றி மாவை எடுத்துச் செல்வதற்கு நான் முன்னம் உங்களிடம் கடன் பட்டிருக்கிறேனா என்ன? தயவுசெய்து இப்போது இதைச் செய்யுங்கள், இம்மாவை எடுத்துச்சென்று கிராம எல்லைகளில் கொட்டிவிட்டு வாருங்கள்" என்றார். இதைக் கேட்டபின் அவர்கள் வெட்கமடைந்து தமக்குள் ஏதோ முணுமுணுத்துக்கொண்டு கிராம எல்லைக்குச் சென்று பாபா குறிப்பிட்டபடி அங்கே மாவைப் பரப்பிவிட்டார்கள்.
பாபா செய்த இவைகளெல்லாம் என்னவென்று ஷீர்டி மக்களை வினவினேன். காலரா நோய் கிராமத்தில் பரவிக்கொண்டு இருப்பதாயும், இது அதையே எதிர்க்க பாபாவின் பரிகாரமாகும் என்றும் கூறினர். கோதுமை அரைக்கப்படவில்லை, காலராவே அரைக்கப்பட்டு கிராமத்திற்கு வெளியில் கொட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியின் பின்னர் காலரா மறைந்து கிராம மக்கள் மகிழ்ச்சியுற்றனர். நானும் இவற்றையெல்லாம் அறிந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் அதே சமயம் எனக்கு ஆச்சரியம் விளைந்தது. காலராவுக்கும், கோதுமை மாவுக்கும் பூவுலகில் உள்ள ஒற்றுமை யாது? சாதாரணமாக அவைகளுக்கு உள்ள உறவு என்ன? அவை இரண்டையும் எங்ஙனம் இணைக்க முடியும்? இந்நிகழ்ச்சி விவரிக்க இயலாததாய் இருக்கிறது. நான் இதைப்பற்றிச் சிறிது எழுதி என் மனம் நிறைவடையும்வரை பாபாவின் இனிக்கும் லீலைகளைப் பாடுவேன்.
இந்த லீலையைப் பற்றி இவ்வாறாக எண்ணமிட்டபின் என் உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்தது. இங்ஙனம் நான் பாபாவின் வாழ்க்கை வரலாறான சத்சரிதத்தை எழுத உணர்சியூட்டப்பட்டேன்.
பாபாவின் அருளுடனும், ஆசியுடனும் இப்பணி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது என்பதையும் நாமறிவோம்.
மாவரைத்ததன் தத்துவ உட்கருத்து
ஷீர்டி மக்கள் இந்நிகழ்ச்சியை ஒட்டி அமைந்த காரணத்தைத் தவிர வேறு ஒரு தத்துவ உட்கருத்தும் இருப்பதாக நாம் நினைக்கிறோம். சாயிபாபா ஏறக்குறைய அறுபது ஆண்டுகள் ஷீர்டியில் வாழ்ந்தார். இந்நீண்ட காலத்தில் அவர் பெரும்பாலும் தினசரி அரைத்தார். கோதுமையை மாத்திரமன்று பாவங்கள், உள்ளம் - உடல் ஆகியவற்றின் துன்பங்களையும், கணக்கில்லாத் தன் அடியவர்களின் துயரங்களையும் அரைத்துத் தீர்த்தார்.
கர்மம், பக்தி என்ற இரண்டு கற்கள் அவர் திருகையில் இருந்தது. முன்னது கீழ் கல்லாகும். பின்னது மேற் கல்லாகும். பாபா பிடித்து அரைத்த கைப்பிடி ஞானமாகும். சத்துவம், ராஜசம், தாமசம் என்ற முக்குணங்களைச் சேர்ந்த நமது எல்லா உணர்சிகள், ஆசைகள், பாவங்கள், அஹங்காரம் இவைகளை நிகளந்துக்களாக்கி முன்னோடி வேலையாக அரைக்கப்பட்டாலன்றி 'ஞானம்' அல்லது 'தன்னை உணர்தல்' என்பது முடியாதென்பது பாபாவின் உறுதியான தீர்ப்பாகும். இக்குணத்தைத் தள்ளிவிடுவது அத்தகைய கடினமானது. ஏனெனில் அவைகள் அவ்வளவு நுட்பமானவை.
கபீரின் ஒரு நிகழ்ச்சியை இது ஞாபகமூட்டுகிறது. ஒரு பெண்மணி சோளத்தை அரைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு அவர் தன் குரு நிபத்னிரன்ஜனிரிடம், "திருகையில் இடப்பட்ட சோளத்தைப் போன்று இவ்வுலக வாழ்க்கை என்னும் திருகையாலே நசுக்கப்படும்போது நான் அஞ்சுவதனால் அழுகிறேன்" என்று கூறினார். நிபத்னிரன்ஜனர் "பயப்படாதே, நான் செய்வது போல் இத்திருகையில் உள்ள ஞானமென்னும் பிடியைப் பிடித்துகொள். அதிலிருந்து நெடுந்தூரம் சென்று திரியாதே. ஆயின் உட்புறமாகத் திரும்பு அப்போது நீ காப்பாற்றப்படுவது நிச்சயம்" என்று பதிலளித்தாராம்.
ஸ்ரீ சாயியைப் பணிக அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
(2) டெண்டுல்கர் — தகப்பனாரும் மகனும்
(3) டாக்டர் கேப்டன் ஹாடே
(4) வாமன் நார்வேகர்
ஆகியோரின் கதைகள்
இந்த அத்தியாயம் சாயிபாபாவைப் பற்றிய மற்ற பல அற்புதமான, சுவையான கதைகளை விவரிக்கிறது.
சென்னை பஜனை சங்கம்
1916ஆம் ஆண்டில் இந்தக் குழு காசிக்குத் தீர்த்தயாத்திரையாக புறப்பட்டது. ஒரு மனிதர், அவர் மனைவி, மகள், மைத்துனி ஆகியோரையே அக்குழு கொண்டிருந்தது. துரதிர்ஷ்டவசமாக அவர்களின் பெயர்கள் குறிக்கப்படவில்லை. போகும் வழியில் அகமத்நகர் ஜில்லா கோபர்காவன் தாலுக்காவிலுள்ள ஷீர்டியில், தமது பக்தர்களுக்கும், அங்கு சென்று தங்களது திறமைகளைக் காட்டிய திறமைசாலிகளுக்கும் தினந்தோறும் பணத்தை விநியோகித்துவரும் தாராளமும், அமைதியும், சாந்தியும் உடைய பெரும்ஞானி ஒருவர் இருக்கிறார் என்று அவர்கள் கேள்விப்பட்டனர்.
சாயிபாபாவால் தஷிணையாக ஏராளமான பணம் தினந்தோறும் சேகரிக்கப்பட்டது. இத்தொகையிலிருந்து பக்த கொண்டாஜியின் மகளான அமனி என்ற 3 வயது குழந்தைக்குத் தினந்தோறும் ரூ.1ம், வேறு சிலருக்குத் தினந்தோறும் ரூ.2 முதல் ரூ.5 வரையும், அமனியின் தாயாருக்குத் தினந்தோறும் ரூ.10 முதல் ரூ.20 வரையிலும், சமயத்தில் ரூ.50 கூட அவர் வினியோகித்தார்.
இவற்றையெல்லாம் கேள்விப்பட்டு அந்தக் கோஷ்டி ஷீர்டிக்கு வந்து தங்கியது. அக்குழு மிக நன்றாக பஜனை செய்து மிகச்சிறந்த பாடல்களையெல்லாம் பாடியது. ஆனால் அந்தரங்கமாக அவர்கள் பணத்துக்காக ஆசைப்பட்டனர். அக்கோஷ்டியில் மூவர் பேராசை பிடித்தவர்களாய் இருந்தனர். ஆனால் அவ்வீட்டுத் தலைவியின் குணம் வேறுபட்டதாய் இருந்தது. அவளுக்கு பாபாவின் மேல் அன்பும், பிரியமும் இருந்தது. ஒருநாள் மத்தியான ஆரத்தியின்போது அவளது பக்தி, நம்பிக்கை இவற்றில் பெருமகிழ்வடைந்த பாபா அவளுக்கு அவளது இஷ்ட தெய்வக் காட்சியை அளித்தார். வழக்கப்படி சாயிநாதனுக்குப் பதில் சீதாநாதனாக — ராமனாக — காட்சியளித்தார். அவளது இஷ்ட தெய்வத்தைக் கண்டு மிகமிக உருகிப்போய்விட்டாள். கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பொங்கிவழிய மகிழ்ச்சியில் கைகளைத் தட்டினாள். மக்கள் அவளது ஆனந்த நிலையைக் கண்டு அதிசயமுற்றனர். ஆனால் அதன் காரணத்தை அவர்கள் அறிய இயலவில்லை.
பின்னர் மாலைப் பொழுதில் எல்லாவற்றையும் அவள் தன் கணவனுக்கு விளக்கினாள். சாயிபாபாவுக்குப் பதிலாக அவள் எங்ஙனம் ராமரைக் கண்டாள் என அவள் கூறினாள். மிகுந்த எளிமையும், பக்தியும் உடையவளாதலால் அது அவளது 'மனப் பிராந்தியே' என அவர் நினைத்தார். "மற்றவர்கள் எல்லாம் சாயிபாபாவைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது நீ மட்டும் ராமனைக் காண்பதாவது" என்று அவர் அவளைக் கேலி செய்தார். அவளது மனம் அமைதியாகவும், சாந்தமாகவும் இருந்தபோதெல்லாம் அடிக்கடி ஸ்ரீராம தரிசனத்தைக் கண்டாள். ஆதலால் அவள் இக்கூற்றுக்குச் செவி சாய்க்கவில்லை.
அற்புதக் காட்சி
இம்மாதிரியாக எல்லாம் நடந்துகொண்டிருக்கும்போது ஒருநாள் இரவு அவள் கணவர் தன் கனவில் அற்புதக் காட்சி ஒன்றைக் கண்டார். அது கீழ்வருமாறு:
அவர் ஒரு பெரிய நகரத்தில் இருக்கிறார். போலீஸ் அவரைக் கைதுசெய்து கைகளைக் கட்டி, லாக்-அப்பில் வைத்திருக்கிறது. போலீஸ் நன்றாக அழுத்திக் கட்டிக்கொண்டிருக்கும்போது ஜெயிலுக்கு வெளியில் சாயிபாபா அமைதியாக நின்றுகொண்டிருப்பதைக் காண்கிறார். பாபா இவ்வளவு அருகில் இருப்பதைக் கண்டு வெளிப்படையான குரலில் அவரிடம் "உமது புகழைக் கேள்விப்பட்டு நான் உமது திருவடிகளிடையே வந்தேன். தாங்களே நேரில் நின்றுகொண்டிருக்கும்போது எனக்கு இந்தக் கேடு ஏன் நிகழ வேண்டும்? என வினவுகிறார்.
பாபா: உனது கர்மத்தின் விளைவை நீ அனுபவித்தாக வேண்டும்.
அவர்: இந்தப் பிறவியில் இத்தகைய துரதிர்ஷ்டத்தை அளிக்கும் விதத்தில் நான் ஏதும் செய்யவில்லையே?
பாபா: இப்பிறவியில் இல்லையென்றால் உனது போன பிறவியில் நீ ஏதும் பாவம் செய்திருப்பாய்.
அவர்: எனது முந்தைய பிறவிபற்றி எனக்கு ஏதும் தெரியாது. ஆனால் அப்படியே நான் செய்திருப்பதாகவே வைத்துக்கொண்டபோதிலும் தங்கள் சாந்நித்யத்தின் முன்னர், நெருப்பில் வைக்கோல் எரிவதைப்போன்று ஏன் அவைகள் அழிக்கப்படக்கூடாது?
பாபா: உனக்கு அத்தகைய நம்பிக்கை உண்டா?
அவர்: ஆம்.
பாபா: உனது கண்களை மூடு.
அவர் கண்களை மூடியது தான் தாமதம் ஏதோ ஒன்று நிலத்தில் விழுந்து பலத்த அடி விழுவதுபோல் கேட்டது. அவர் கணைகளைத் திறந்த போது தாம் விடுதலையாகி இருப்பதையும், போலீஸ் இரத்தம் சிந்தி கீழே விழுந்து கிடப்பதையும் கண்டார். மிகவும் பீதியடைந்து பாபாவை அவர் பார்த்தார்.
பாபா: நீ இப்போது நன்றாகப் பிடிபட்டுக்கொண்டாய். இப்போது அதிகாரிகள் வந்து உன்னைக் கைது செய்வார்கள்.
அவர்: — கெஞ்சினார் — தங்களைத் தவிர என்னைக் காப்பாற்றுவார் வேறு ஒருவரும் இல்லை. எப்படியாவது என்னைக் காப்பாற்றுங்கள்.
பின்னர் பாபா அவரை மீண்டும் கண்களை மூடச் சொன்னார். அவர் அதே மாதிரியாகச் செய்து பின் கண்களைத் திறந்ததும் அவர் ஜெயிலுக்கு வெளியே விடுதலையாகி இருப்பதையும் பாபா அவரருகில் இருப்பதையும் கண்டார்.
பாபாவின் காலடிகளில் அப்போது அவர் வீழ்ந்தார், "இந்த நமஸ்காரத்திற்கும் முந்தைய நமஸ்காரங்களுக்கும் ஏதேனும் வித்தியாசம் உண்டா?" என்று பாபா கேட்டார். "ஏராளமான வித்தியாசம் இருக்கிறது. எனது முந்தைய நமஸ்காரங்களெல்லாம் தங்களிடமிருந்து பணம் பெறுவதற்காகச் செய்யப்பட்டன. ஆனால் இந்த நமஸ்காரமோ தாங்கள் கடவுள் என்ற எண்ணத்தில் செய்யப்படுகிறது. அத்துடன் தாங்கள் முஸ்லீமாக இருந்துகொண்டு ஹிந்துக்களைப் பாழ்படுத்துவதாக நினைத்தேன்.
பாபா: முஹமதியக் கடவுள் மீது உனக்கு நம்பிக்கை இல்லையா?
அவர்: இல்லை.
பாபா: 'பஞ்சா' என்ற உலோகத்தாலான கை அடையாளம் உங்கள் வீட்டில் இல்லையா? 'தாபூத்' — மொஹரம் — சமயத்தில் நீ அதனை வழிபடுவதில்லையா? கல்யாணம் மற்றும் இதர பண்டிகைக் காலங்களில் நீங்கள் அமைதிப்படுத்தி ஆற்றும் காட்பீபீ என்ற மற்றொரு முஹமதியப் பெண் தெய்வம் உங்கள் வீட்டில் இல்லையா?
அவர் இவைகளையெல்லாம் ஒத்துக்கொண்டார்.
பாபா: உனக்கு வேறென்ன வேண்டும்?
அவரது குரு ராம்தாஸின் தரிசனத்தைப் பெற அவர் மனதில் அவா ஒன்று எழுந்தது. அப்போது பாபா பின்னால் திரும்பிப் பார்க்கச் சொன்னார். அவர் திரும்பியபோது ராம்தாஸ் நின்றுகொண்டிருந்தார். அவர் காலடியில் விழப்போனபோது ராம்தாஸ் மறைந்துவிட்டார். பின்னர் அவர் பாபாவை விருப்பத்துடன் "நீங்கள் வயதானவராகத் தோன்றுகிறீர்களே, உங்கள் வயது என்னவென்று தெரியுமா?" என்று கேட்டார்.
பாபா: என்ன! நான் கிழவன் என்றா சொல்கிறாய்? என்னோடு ஒரு ஓட்டப்பந்தயம் விட்டுப்பார்த்துவிட்டுச் சொல்.
இதைக் கூறிவிட்டு பாபா ஓடத் தொடங்கினார். அவரும் பின்னால் ஓடினார். ஓடும்போது பாபா அவர்தம் பாதத்தால் எழுப்பிய தூசியில் மறைந்துவிட்டார். அவரும் கண்விழித்தார்.
விழித்தபின் கனவுக்காட்சியைப் பற்றி அவர் தீவிரமாகச் சிந்தித்தார். அவரது மனோபாவனை முற்றிலுமாக மாறிவிட்டது. பாபாவின் பெருமையை அவர் உணர்ந்துகொண்டார். இதன்பின் அவரது பறிக்கும் குணமும், சந்தேகமும் மறைந்து ஒழிந்தன. பாபாவின் பாதாம்புயத்தில் உண்மையான பக்தி அவருக்கு ஏற்பட்டது. அக்காட்சி கனவுதான். ஆனால் கேட்கப்பட்ட வினா விடைகள் மிகவும் விருவிறுப்பானதும் பொருள் செறிந்ததும் ஆகும்.
மறுநாள் காலை எல்லோரும் ஆரத்திக்காக மசூதியில் குழுமியபோது பாபா அவருக்கு இரண்டு ரூபாய் மதிப்புள்ள இனிப்புக்களையும், தம் பாக்கெட்டிலிருந்து இரண்டு ரூபாய் பணமும் எடுத்து பிரசாதமாக அளித்தார். மேலும் சில நாட்கள் அவரை அங்கு தங்கச்செய்து, "அல்ல உனக்கு தாராளமாக அளிப்பார். உனக்கு எல்லாவித நன்மைகளையும் செய்வார்" என்று ஆசி கூறினார். அங்கு அவர் அதிகமாகப் பணம் பெறவில்லை. ஆனால் அதற்கும் மேலானவைகளைப் பெற்றார். அதாவது பாபாவின் ஆசியை! அது அவருக்குத் தொடர்ந்து நன்மையளித்து வந்தது. பின்னால் அக்கோஷ்டிக்கு ஏராளமான பணம் கிடைத்தது. அவர்களது பிரயாணம் வெற்றிகரமாக முடிவடைந்தது. அவர்கள் பிரயாணத்தின்போது எவ்வித அசௌகரியமோ, தொல்லையோ ஏற்படவில்லை. பாபாவின் அருளால் எய்திய ஆனந்தத்தையும், ஆசிகளையும் நினைந்தவாறே பத்திரமாகவும், சௌக்கியமாகவும் வீடு திரும்பினர்.
டெண்டுல்கர் குடும்பம்
பாந்த்ராவில் டெண்டுல்கர் என்னும் குடும்பம் ஒன்று இருந்தது. அதன் உறுப்பினர்கள் எல்லோரும் பாபாவிடம் பக்தி பூண்டவர்களாக வாழ்ந்து வந்தனர். 'ஸ்ரீ சாயிநாத் பஜன்மாலா' என்னும் 800 செய்யுட்கள் கொண்ட ஒரு நூலை திருமதி சாவித்ரிபாயி டெண்டுல்கர் பதிப்பித்திருக்கிறார். அது பாபாவின் லீலைகள் எல்லாம் விளக்குகிறது. பாபாவைப்பற்றி ஆர்வம் கொண்டோர் எல்லோரும் படிக்க உகந்த நூல் அது.
பாபு டெண்டுல்கர் என்னும் அவர்களது புதல்வன் இரவும், பகலும் அரும்பாடுபட்டு படித்துக்கொண்டிருந்தான். அவன் மருத்துவப் பரீட்சைக்குச் செல்லவேண்டும். சில ஜோசியர்களைக் கலந்தாலோசித்தான். அவனது ஜாதகத்தைப் பரிசீலித்துவிட்டு கிரஹங்கள் அவனுக்கு இவ்வருடம் சாதகமில்லை என்றும், எனவே அடுத்த வருடம் அவன் பரீட்சைக்குச் சென்றால் நிச்சயம் வெற்றிபெறுவான் என்றும் அவர்கள் கூறினர். இது அவனைக் கவலைக்குள்ளாக்கி, நிலைகொள்ளாமலிருக்கச் செய்தது. சில நாட்களுக்குப்பின் அவனது தாயார் ஷீர்டி சென்று பாபாவைக் கண்டாள்.
பல விஷயங்களுடன், சில நாட்களில் பரீட்சை எழுதவிருந்த தன் மகனின் கவலைக்கிடமான நிலைமைகளையும் அவள் பாபாவுக்குக் கூறினாள். இதைக்கேட்டுவிட்டு பாபா கூறினார், "உனது மகனிடம் என்னை நம்பும்படி சொல். ஜாதகம், கைரேகைக்காரர்களின் ஜோசியம் ஆகிய முன்னோடி உரைகளைத் தூக்கியெறிந்துவிட்டு அவன் பாட்டுக்குப் படித்துக்கொண்டிருக்கட்டும். பரீட்சையை அமைதியாக எழுதட்டும். அவன் இவ்வாண்டு தேறுவது உறுதி. என்னை நம்பும்படியும் ஏமாற்றமடைய வேண்டாம் என்றும் சொல்".
தாய் வீட்டுக்குத் திரும்பி இச்செய்தியை மகனுக்குத் தெரிவித்தாள். பின்னர் அவன் கஷ்டப்பட்டுப் படித்து உரிய காலத்தில் பரீட்சையும் எழுதினான். எழுதும் பேப்பர்களை அவன் நன்றாகச் செய்திருந்தான். ஆனால் சந்தேகத்தால் பீடிக்கப்பட்டு பாஸ் செய்வதற்குப் போதுமான மார்க்குகள் தான் பெறப்போவதில்லை என்று எண்ணினான். எனவே வாய்மொழிப் பரீட்சைக்கு போவதைப்பற்றி அவன் கவலைப்படவில்லை. ஆனால் பரீட்சை அதிகாரி அவனை விடுவதாக இல்லை.
அவன் எழுதிய பேப்பர்களில் பாஸ் செய்துவிட்டதாகவும், வாய்மொழிப் பரீட்சைக்கு அவன் வரவேண்டும் என்றும் சகமாணவன் ஒருவன் மூலம் செய்தியனுப்பினார். இவ்வாறாக அவன் அப்பரீட்சையில் தேறுவதற்கு ஊக்குவிக்கப்பட்டு, இரண்டிலுமே வெற்றியடைந்தான். கிரஹங்கள் அவனுக்கு எதிராக இருந்தபோதிலும், பாபாவின் அருளால் அவன் இவ்வாறாக வெற்றிபெற்றான். ஐயங்களும், கஷ்டங்களும் நம்மை சற்றே அசைத்து நம்பிக்கையை உறுதிப்படுத்தவே சூழ்கின்றன என்பதை இங்கே அறியவேண்டும். நாம் வாழ்க்கையில் சோதனைக்குள்ளாக்கப்படுகிறோம். முழு நம்பிக்கையுடன் பாபாவைப் பற்றிக்கொண்டு நமது முயற்சிகளைத் தொடர்ந்து செய்வோமேயானால் நமது முயற்சிகள் அனைத்தும் முடிவாக வெற்றிமுடி சூடப்பெறும்.
இப்பையனின் தந்தையாரான ரகுநாத்ராவ் பம்பாயில் உள்ள வெளிநாட்டு வாணிபக் கம்பனி ஒன்றில் பணியாற்றி வந்தார். வயதாகிவிட்டபடியால் அவரால் வேலையைச் சரியாகச் செய்ய இயலவில்லை. எனவே அவர் ஓய்விற்காக விடுப்பு எடுக்க வேண்டியதாயிற்று. விடுமுறையின்போது அவர் தேகநிலை முன்னேறாததால் லீவை அதிகப்படுத்துவதோ அல்லது வேலையினின்று ஓய்வு பெறுவதோ தவிர்க்க முடியாததாகிவிட்டது. அவர் முதுமையும், நம்பிக்கையும் வாய்ந்த பணியாளராக இருப்பதால் அந்த ஸ்தாபனத்தின் முக்கிய மேனேஜர் அவருக்கு ஒரு பென்ஷனுடன் ஓய்வு கொடுக்கத் தீர்மானித்தார்.
எவ்வளவு பென்ஷன் கொடுப்பது என்ற பிரச்சனை இத்தகைய தீர்மானத்திலிருந்து வந்தது. அவர் மாதம் ரூ.150 பெற்று வந்தார். பென்ஷன் தொகையான ரூ.75 வீட்டுச் செலவுகளைப் பராமரிக்கப் போதுமானவை அன்று. எனவே அவர்களெல்லாம் இவ்விஷயத்தில் கவலையுள்ளவர்களாக இருந்தனர். முடிவான ஏற்பாட்டுக்குப் பதினைந்து தினங்கட்கு முன்பாக பாபா, திருமதி டெண்டுல்கரின் கனவில் தோன்றி, "பென்ஷன் நூறு ரூபாயாக அளிக்கப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன். இது உனக்குத் திருப்திதானே?" என்று கேட்டார். "பாபா இம்மாதிரி ஏன் என்னைக் கேட்கவேண்டும்? நாங்கள் உங்களையே முழுவதும் நம்புகிறோம்" என்று திருமதி டெண்டுல்கர் பதிலளித்தார். பாபா ரூ.100 என்று கூறியபோதும், ரூ.10 இன்னும் அதிகமாகவே கொடுக்கப்பட்டது. இது ஒரு விசேஷ நியதியாக, தமது பக்தர்களுக்கு அத்தகைய அற்புதமான அன்பையும், பாதுகாப்பையும் பாபா நிச்சயமாகவே காண்பிக்கிறார் என்பதை உணர்த்துகிறது.
கேப்டன் ஹாடே
பிகானீரில் தங்கியிருந்த கேப்டன் ஹாடே என்பவர் பாபாவின் மிகப்பெரும் பக்தர். ஒருமுறை அவரது கனவில் பாபா தோன்றி "என்னை மறந்துவிட்டாயா?" என்று கேட்டார். ஹாடே உடனே பாபாவின் பாதங்களைப் பிடித்துக்கொண்டு, "தனது தாயைக் குழந்தை மறந்துவிட்டால் அது எங்ஙனம் காப்பாற்றப்படும்?" என்றார்.
பின்னர் ஹாடே தோட்டத்துக்குச் சென்று அவரைக்காய் பறித்து ஒரு விருந்துக்கும், தஷிணைக்கும் ஏற்பாடு செய்துவிட்டு, இவைகளை எல்லாம் பாபாவுக்குச் சமர்ப்பிக்க இருந்தபோது விழித்துக்கொண்டார். சிலநாட்களுக்குப்பின் அவர் குவாலியர் வந்தவுடன் ஒரு நண்பருக்கு ரூ.12ஐ மணியார்டர் மூலம் அனுப்பி ரூ.2ஐ ஷிதா — மளிகை — பொருட்களுக்கும், காய்கறிகளுக்கும் ரூ.10ஐ பாபாவுக்குத் தஷிணையாக அளிக்கும் குறிப்பையும் அனுப்பியிருந்தார். அந்த நண்பர் ஷீர்டிக்குச் சென்று குறிப்பிடப்பட்ட சாமாங்களையெல்லாம் வாங்கினார். ஆனால் காய்கறிகள் கிடைக்கவில்லை. சிறிது நேரத்தில் தலையில் சுமந்துகொண்டு ஒரு கூடைக்காரி வீதியில் எதிப்பட்டாள். வியப்பிற்கேற்ப அந்தக் கூடையில் வேண்டிய அவரைக்காய் கிடைத்தது. அது வாங்கப்பட்டு மற்றெல்லாப் பொருட்களுடன் சேர்த்து கேப்டன் ஹாடேயின் சார்பில் பாபாவுக்குச் சமர்ப்பிக்கப்பட்டன.
நிமோண்கர் அடுத்த நாள் நைவேத்யம் — சோறும், காய்கறியும் — தயார் செய்து பாபாவுக்கு, கேப்டன் ஹாடேயின் சார்பில் சமர்ப்பித்தார். சாப்பிடும்போது அவரைக்காயையே பாபா முதலில் எடுத்துச் சாப்பிட்டதையும், சாதம் முதலியவற்றைத் தொடாதது கண்டும் அனைவரும் அதிசயப்பட்டனர். இதைத் தன் நண்பன் மூலமாகக் கேட்டறிந்த ஹடேயின் மகிழ்ச்சி கரைகாணாது போயிற்று.
புனிதமாக்கப்பட்ட நாணயம் பாபாவின் ஸ்பரிசத்தால் புனிதமாக்கப்பட்ட நாணயம் ஒன்று தன் வீட்டில் இருக்கவேண்டுமென பிறிதொரு சமயத்தில் கேப்டன் ஹாடே விரும்பினார். ஷீர்டிக்குப் போய்க்கொண்டிருந்த நண்பர் ஒருவரைச் சந்தித்தார். அவரிடம் தமது நாணயத்தை அனுப்பினார். அந்த நண்பர் ஷீர்டிக்குச் சென்று நமஸ்கரித்தபின் முதலில் தமது ரூபாயைத் தஷிணையாக அவர் பாபாவுக்கு அளித்தார். அதை அவர் வாங்கி சட்டைப்பையில் போட்டுக்கொண்டார். பின் நண்பர் ஹாடேயின் நாணயத்தைக் கொடுத்தார். அதை பாபா வாங்கி உற்றுப்பார்த்துவிட்டு, தமது வலதுகை கட்டைவிரலால் சுண்டிவிட்டு பிடித்து விளையாடினார்.
பின் அந்த நண்பரிடம் அவர் "உதிப் பிரசாதத்துடன் இதை அதன் உரிமையாளரிடம் திரும்பக்கோடு. அவரிடமிருந்து எனக்கு எதுவும் வேண்டியதில்லை என்று கூறு. அமைதியுடனும், திருப்தியுடனும் அவரை வாழச்சொல்" என்று கூறினார். அந்த நண்பர் குவாலியருக்குத் திரும்பி புனிதமாக்கப்பட்ட நாணயத்தை ஹாடேயிடம் திரும்ப அளித்து, ஷீர்டியில் நிகழ்ந்த எல்லாவற்றையும் அவருக்குக் கூறினார். இம்முறை ஹாடே மிகவும் மகிழ்ந்து, பாபா எப்போதும் தாம் விரும்பிய மாதிரியான நல்ல எண்ணங்களை ஊக்குவிக்கிறார் என்று உணர்ந்தார். பாபாவும் அதையே முறையாக நிறைவேற்றினார்.
வாமன் நார்வேகர்
இப்போது வாசகர்கள் மற்றொரு கதையைக் கேளுங்கள். வாமன் நார்வேகர் என்றழைக்கப்படும் மனிதர் ஒருவர் பாபாவை மிகவும் நேசித்தார். அவர் ஒருமுறை ஒரு நாணயம் கொண்டுவந்தார். அதன் ஒரு பக்கத்தில் ராமர், சீதா, லக்ஷ்மணர் ஆகியோரின் உருவங்களும், மற்றொரு பக்கத்தில் கூப்பிய கரங்களுடன் ஆஞ்சநேயர் உருவமும் பொறிக்கப்பட்டிருந்தது. அதை பாபா தமது ஸ்பரிசத்தால் புனிதப்படுத்தி உத்தியுடன் திருப்பி அளிக்கவேண்டுமென்ற எண்ணத்தில் பாபாவுக்கு அதை அவர் அளித்தார். ஆனால் பாபா உடனே அதைத் தம் பாக்கெட்டிற்குள் போட்டுக்கொண்டுவிட்டார். வாமன்ராவின் என்னத்தை ஷாமா பின்னர் பாபாவுக்கு தெரிவித்து அதைத் திருப்பியளிக்க வேண்டினார்.
பாபா பின்னர் வாமன்ராவின் முன்னிலையில் இவ்வாறு பேசினார். "அது ஏன் அவருக்குத் திருப்பியளிக்கப்படவேண்டும்? அதை நாமேதான் வைத்துக்கொள்ளவேண்டும். அதற்காக ரூ.25 கொடுத்தாரானால் அது திருப்பியளிக்கப்படும்". வாமன்ராவ் ரூ.25 சேகரித்து அவற்றை பாபாவின் முன்னிலையில் வைத்தார். பின்னர் பாபா, "அந்த நாணயத்தின் மதிப்பு 25 ரூபாயைவிட மிகமிக அதிகமாகும். ஷாமா இந்த ரூபாயை எடுத்து நமது ஸ்டோரில் வைத்துக்கொள். நாணயத்தை உனது பூஜை அறையில் வைத்து வழிபடு" என்றார்.
பாபா இம்மாதிரியான செயலை ஏன் பின்பற்றினார் என்பதைக் கேட்க ஒருவருக்கும் தைரியமில்லை. ஒவ்வொருவருக்கும் எது மிகச்சிறந்தது, மிகப் பொருத்தமானது என்பதை பாபா மட்டுமே அறிவார்.
ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
• கோவிலை மதிக்காதிருத்தல்
• காலா அல்லது கதம்ப உணவு
• ஒரு கிண்ணம் மோர்
சென்ற அத்தியாயத்தில் நாம் பாபாவின் சாவடி ஊர்வலத்தைப் பற்றிப் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் ஹண்டி— பெரிய அண்டா — என்ற பாபாவின் சமையல் பாத்திரத்தைப் பற்றியும் மற்றும் சில விஷயங்களையும் காண்போம்.
முன்னுரை
ஓ! புனிதமான சத்குரு சாயி உலகமனைத்துக்கும் மகிழ்ச்சியை நல்கி அடியவர்களின் நலன்களை நிறைவேற்றி தங்களின் திருவடிகளைச் சரணடைந்தவர்களின் பேரிடர்களைப் போக்குபவருமான தங்களை வணங்குகிறோம். மிகுந்த தாராள குணமுடையவராகவும், தங்களைச் சரணடைவோர்களின் பாதுகாவலராகவும், ரட்சகராகவும் விளங்கும் தாங்கள் மக்களுக்காக இரங்கி அவர்களுக்கு நன்மை செய்யவே அவதரித்திருக்கிறீர்கள்.
தூய ஆன்மாவின் சாராம்சமான சாறு பிரம்மாவின் அச்சில் ஊற்றப்பட்டு இதிலிருந்து ஞானிகளுக்குள் எல்லாம் முடிமணியாக சாயி அவதரித்து விளங்குகிறார். இந்த சாயி ஆத்மராமனேயாவார். தூய தெய்வீகப் பேரின்பத்தின் இருப்பிடமே அவர். வாழ்க்கையின் அனைத்துக் குறிக்கோளையும் தாமே அவர் எய்தியதோடு நில்லாது, தமது அடியவர்களைப் பற்றற்றவர்களாகவும், சுதந்திரமானவர்களாகவும் ஆக்கினார்.
பாபாவின் ஹண்டி
நமது சாஸ்திரங்களில், வெவ்வேறு காலங்களுக்கு வெவ்வேறு சாதனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.
தவம் - க்ருதயுகத்துக்கும்
ஞானம் - த்ரேதாயுகத்துக்கும்
யக்ஞம் - த்வாபரயுகத்துக்கும்
தானம் - கலியுகத்துக்கும்
சிபாரிசு செய்யப்பட்டிருக்கின்றன. தானங்கள் அனைவற்றிலும் அன்னதானமே சிறந்தது. மத்தியான நேரத்தில் நமக்கு உணவு கிடைக்காதபோது நாம் மிகவும் குழப்பமடைகிறோம்.
அதைப்போன்ற சூழ்நிலைகளில் மற்ற ஜீவராசிகளும் அங்ஙனமே உணர்கின்றன. இதையறிந்து எளியவர்களுக்கும், பசியடைந்தோர்க்கும் உணவளிப்பவரே மிகச்சிறந்த கொடையாளி அல்லது தர்மவான். "உணவே பிரம்மம். உணவிலிருந்தே எல்லா உயிர்களும் பிறக்கின்றன. பிறந்த பின்னும், உணவாலேயே உயிர் வாழ்கின்றன. அழிந்த பின்னும் உணவின் உள்ளேதான் மீண்டும் உட்செல்லுகின்றன" என்கிறது தைத்திரீய உபநிஷதம்.
விருந்தாளி ஒருவர் நம் வீட்டுக்கு வர நேர்ந்தால் அவரை உணவளித்து வரவேற்பது நம்மைக் கட்டுப்படுத்தும் ஒரு கடமையாகும். செல்வம், சொத்து, உடை முதலான மற்றவித தானங்கள் செய்வதற்கு விவேகம் தேவைப்படுகிறது. ஆனால் உணவின் விஷயத்தில் அத்தகைய யோசனைகள் எதுவும் தேவையில்லை. மத்தியான நேரத்தில் யார் வேண்டுமானாலும் நம் வீட்டு வாசலிடை வரட்டும். அவருக்கு உணவு அளிக்கப்பட வேண்டும். அதிலும் முடவர்கள், சரியாக நடக்க முடியாதவர்கள், குருடர்கள், வியாதியஸ்தர்களான ஆண்டிகள் முதலியோருக்கு முதலில் உணவு அளிக்கப்படவேண்டும்.
முதலில் குறிப்பிட்டோருக்கு உணவளிப்பதால் உண்டாகும் புண்ணியம் பின்னால் குறிப்பிட்டவர்களுக்கு அளிப்பதைவிட மிகவும் அதிகமாகும். அன்னதானம் இல்லாத மற்ற தானங்களெல்லாம், நிலவற்ற நஷத்திரங்கள் போன்றும், பதக்கமற்ற அட்டிகை போன்றும், முடிமணி அற்ற கிரீடம் போன்றும், தாமரையற்ற குளத்தைப் போன்றும், பக்தியற்ற பஜனையைப் போன்றும், குங்குமமற்ற சுமங்கலியைப் போன்றும், இனிமையான சாரீரமில்லாத பாடலைப் போன்றும், உப்பற்ற தயிரைப் போன்றுமாக இருக்கிறது.
வரண் — பருப்பு சூப் — மற்றெல்லா பதார்த்தங்களையும்விடச் சிறந்திருப்பதைப் போன்று மற்றெல்லா புண்ணியங்களையும்விட அன்னதானம் சிறந்திருக்கின்றது. இப்போது பாபா எங்ஙனம் உணவு சமைத்து அதை வினியோகித்தார் என்பதைக் காண்போம்.
பாபாவுக்காக ஒரு சிறிதே உணவு தேவைப்பட்டது என்றும் அவருக்குத் தேவையானதும் சில வீடுகளில் பிச்சையெடுத்துப் பெறப்பட்டது என்பதும் முன்னமேயே எடுத்துச் சொல்லப்பட்டுவிட்டது. ஆயின் அனைவர்க்கும் உணவளிக்க வேண்டுமென்று அவர் தீர்மானித்தால் அவராகவே எல்லா ஏற்பாடுகளையும் செய்கிறார். இந்த விஷயத்தில் அவர் எவரையும் சார்ந்திருக்கவோ, தொல்லைப்படுத்தவோ இல்லை. முதலில் கடைவீதிக்குச் சென்று சோளம், மாவு, நறுமண பலசரக்கு வகைகள் முதலிய எல்லாவற்றையும் பணம் கொடுத்து வாங்குகிறார். கோதுமை அரைத்தலையும் தாமே செய்கிறார்.
மசூதிக்கு முன்னாலுள்ள திறந்தவெளியில், ஒரு பெரிய அடுப்பை வைத்து நெருப்பை மூட்டி அதற்குமேல் ஹண்டி என்னும் ஒரு பாத்திரத்தை சரியான அளவு தண்ணீர் ஊற்றிவைக்கிறார். இரண்டு விதமான ஹண்டிகள் இருந்தன. ஒன்று சிறியது. மற்றொன்று பெரியது. முன்னது 50 பேருக்கு உணவளிக்க ஏற்றது. பின்னது 100 பேருக்கானது. சில சமயம் அவர் மிட்டா சாவல் என்னும் சர்க்கரைப் பொங்கலைச் சமைத்தார். மற்றும் சில சமயங்களில் புலவை மாமிசத்துடன் சமைத்தார். சில சமயங்களில் கொதித்துக்கொண்டிருக்கும் வரண் என்னும் சூப்பில், கோதுமை மாவை சிறு உருண்டைகளாகவோ, அல்லது தட்டையான ரொட்டிகளாகவோ செய்து மிதக்கவிட்டார்.
வாசனைப் பொருட்களை அம்மியில் வைத்து இடித்துத் தூளை சமையல் பாத்திரத்தில் போட்டார். உணவை மிகவும் சுவையானதாக்க அவர் எல்லாச் சிரமங்களையும் எடுத்துக்கொண்டார். ஜவ்வாரி — கேள்வரகு — மாவைத் தண்ணீருடன் கொதிக்கவிட்டு அதைத் தயிருடன் கலந்து அம்பீல் — கூழ் — தயார் செய்தார். உணவுடன் இந்த அம்பீலை ஒரே மாதிரியாக விநியோகித்தார். உணவு ஒழுங்காக வேகிறதா என்பதைப் பார்க்க பாபா தனது கஃப்னியின் கைகளை மேலே சுருட்டிவிட்டுக்கொண்டு தனது வெறும் கையைக் கொதிக்கும் பாத்திரத்தில் துளியும் பயமின்றி விட்டுக் கொதிக்கும் கலவையை நன்றாக மேலும் கீழும், பக்கங்களிலும் கலக்கிவிடுகிறார்.
கை வெந்ததற்கான எந்த அடையாளத்தையோ முகத்தில் பயத்தின் எவ்விதச் சாயலையோ காணமுடிவதில்லை. சமையல் முடிந்ததும், பாத்திரங்களை மசூதிக்குக் கொண்டுவந்து உரியமுறையில் மௌல்வியைக்கொண்டு புனிதமாக்கினார். முதல் உணவின் ஒரு பகுதியை மஹல்ஸாபதிக்கும், தாத்யா பாடீலுக்கும் அனுப்பிவிட்டு மிச்சத்தை எல்லா ஏழை எளியவர்களுக்கும், திக்கற்றவர்களுக்கும் அவர்கள் உளம்நிறையும் வண்ணம் தமது கையாலேயே பரிமாறினார். பாபா தாமே சமைத்து தாமே பரிமாறிய உணவை உட்கொண்டவர்கள் நிச்சயமாக ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், அதிர்ஷ்டசாலிகள். இத்தருணத்தில் ஒரு சிலர் சந்தேகத்தையும் கிளப்பலாம். பாபா காய்கறிகளையும், அசைவ உணவையும் பிரசாதமாக தமது அடியவர்களுக்கு ஒரே மாதிரியாகவா வழங்கினார்? விடை வெளிப்படையானதும், எளிதானதுமாகும். அசைவ உணவு பழக்கப்பட்டோருக்கு ஹண்டியிலிருந்து பிரசாதமாக உணவு வழங்கப்பட்டது. அதில் பழக்கமில்லாதவர்களை அதைத்தொட அனுமதிப்பதில்லை. இவ்வுணவை விசேஷமாக அனுசரிக்க அவர் அவர்களிடம் எவ்வித விருப்பத்தையோ, ஆசையையோ தூண்டிவிட்டதில்லை.
குருவே பிரசாதமாக எதையாவது அளிக்கும்போது அது ஏற்றுக்கொள்ளத்தக்கதா இல்லையா என்று எண்ணுபவன் நரகத்தை அடைகிறான் என்னும் ஒரு கொள்கை நன்றாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்தக் கொள்கையை எந்த ஒரு சீடனும் எவ்விதம் மனதில் ஏற்றுக்கொண்டிருக்கிறான் என்பதை அறிய சில நேரங்களில் பாபா சோதனைகள் நடத்துவார். உதாரணமாக பாபா ஒரு ஏகாதசி தினத்தன்று தாதா கேல்கரிடம் சில ரூபாய்கள் கொடுத்து அவரையே நேராக கொரலாவுக்குச் சென்று அங்கிருந்து மாமிசம் வாங்கிவரும்படி கூறினார். இந்த தாதா கேல்கர் ஒரு வைதீக பிராமணர். எல்லா வைதீகச் சம்பிரதாயங்களையும் வாழ்க்கையில் அனுசரித்தவர். செல்வம், தானியங்கள், உடை முதலியவைகளை சத்குருவிற்குச் சமர்ப்பிப்பதெல்லாம் போதாதென்றும், முழுநிறை நம்பிக்கையுள்ள கீழ்ப்படிதலும், அவரது உத்தரவுகளை சரி நுட்பமாக நிறைவேற்றுதலுமே அவரை மிகவும் மகிழ்விக்கும் உண்மையான தஷிணையாகும் என்பதை அவர் அறிவார்.
எனவே தாதா கேல்கர் உடைகளை உடுத்திக்கொண்டு அவ்விடத்துக்குக் கிளம்பினார். பிறகு பாபா அவரைக் கூப்பிட்டு "நீயே போகாதே. யாரையாவது அனுப்பு" என்று கூறினார். இதன் பேரில் தாதா, தமது வேலையாள் பாண்டுவை இதற்காக அனுப்பினார். பாபா அவரையும் திரும்பிவரச் சொல்லி, அதையும் ரத்து செய்துவிட்டார். மற்றொரு சந்தர்ப்பத்தின்போது 'புலவ்' என்னும் மாமிசக்கறியில் உப்பு சரியாக இருக்கிறதா என்பதைச் சற்று சுவைத்துப் பார்க்கும்படி பாபா தாதாவைக் கேட்டார். பின்னர் சாதாரணமாகவும், முறைக்காகவும் அது சரியாக இருக்கின்றது என்று கூறினார்.
அதற்கு பாபா நீ அதைக் கண்ணால் பார்த்ததோ, நாவால் சுவைத்ததோ கிடையாது. பின்னர் அது சுவையாய் இருக்கிறது என்று எப்படி உன்னால் உரைக்கமுடியும். பாத்திரத்தின் மூடியைத் திறந்து பார் என்று கூறிக்கொண்டே, பாபா அவரது கையைப் பிடித்து பானைக்குள் அழுத்தி, "கையை முன்னால் நீட்டி கரண்டியை எடுத்து, வைதீகத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பதறாமல், கொஞ்சம் எடுத்து சாப்பாட்டில் போட்டுக்கொள்" என்றார்.
தாய்க்கு குழந்தையிடம் ஒரு உண்மையான அன்பின் அலை தோன்றும்போது, அதைக் கிள்ளிவிட்டு அழத் தொடங்கியதும் தன் மார்போடு அணைத்துக்கொள்கிறாள். அவ்வாறே பாபா உண்மையான தாய் என்றமுறையில் தாதா கேல்கரை இவ்விதமாகக் கிள்ளிவிட்டார். உண்மையில் எந்த ஞானியோ அல்லது குருவோ தடுக்கப்பட்ட உணவைத் தமது வைதீகச் சீடனை உண்ணும்படி வற்புறுத்தி அதன்மூலம் தம்மை கீழ்மைப்படுத்திக் கொள்ளமாட்டார்.
இந்த ஹண்டி விவகாரம் 1910ஆம் ஆண்டுவரை சிலகாலம் நடந்தது. பிறகு நின்றுவிட்டது. முன்னரே கூறியதைப்போன்று தாஸ்கணு, பாபாவின் புகழை பம்பாய் மாகாணமெங்கிலும் தம் கீர்த்தனைகளால் பரப்பினார். அப்பகுதியிலிருந்து ஷீர்டிக்கு மக்கள் திரளாக வந்து கூடத்தொடங்கினர். ஷீர்டி சில நாட்களுக்குள்ளாகவே ஒரு புனித ஷேத்திரம் ஆகிவிட்டது. பக்தர்கள் வெகுமதி அளிப்பதற்காக பல்வேறு பொருட்களைக் கொணர்ந்தனர். வெவ்வேறு உணவுவகைகளை நைவேத்யமாகச் சமர்ப்பித்தனர். அவர்கள் அவ்வாறு அளித்த உணவுப் பொருட்கள் எவ்வளவு என்றால் பக்கிரிகளும், ஆண்டிகளும் வயிறு புடைக்க உண்டுவிட்டு பின்னும் மீதி இருக்கும் அளவு இருந்தது. எங்ஙனம் நைவேத்யம் பகிர்ந்தளிக்கப்பட்டது என்று கூறும்முன்பு, உள்ளூரில் இருந்த கோவில்களின் மீதும், தெய்வங்களின் மீதும் பாபாவுக்கு எத்தகைய மரியாதையும், ஆர்வமும் இருந்தது என்பதை விளக்கும் நானா சாஹேப் சாந்தோர்கரின் கதையை எடுத்துக்கொள்வோம்.
நானா சாஹேப் கோவிலை மதியாதிருத்தல்
சிலர் தங்களுக்கே உரியமுறையில் அனுமானித்துக்கொண்டும், யூகித்துக்கொண்டும் சாயி ஒரு பிராமணர் என்றும், சிலர் அவர் ஒரு முஹமதியர் என்றும் கூறினர். உண்மையில் அவர் எந்த ஜாதியையும் சேர்ந்தவர் அல்ல. எப்போது எந்த ஜாதியில் பிறந்தார் என்பதையும், அவரது பெற்றோர் யார் என்பதையும் ஒருவரும் நிச்சயமாக அறிந்திருக்கவில்லை.
முன்பே அத்தியாயம் 7ல் உள்ள பாபாவின் சொந்த கூற்றுப்படி அவர் பிராமணர் என்றாலும் பரமாத்மாவிடம் தன்னை முழுவதும் சரணாகதிசெய்து, அஹங்காரத்தையும் - உடல் உணர்வையும் ஒழித்து அவருடன் ஒன்றிவிடுபவனுக்கு ஜாதி - தேசம் என்னும் கேள்விகள் குறித்துக் கருத்திற்கொள்வதற்கு ஏதுமில்லை. பின்னர் அவர் எங்ஙகனம் ஒரு பிராமணராகவோ, முஹமதியராகவோ இருக்கமுடியும்? அவர் ஒரு முஹமதியர் என்றால், மசூதியில் அணையாமல் எப்போதும் துனியை எங்ஙகனம் எரியவைத்துக் கொண்டிருக்கமுடியும்? அங்கு எங்ஙனம் ஒரு துளசி பிருந்தாவனம் இருக்க முடியும்? சங்கோசை, மணி ஓசை, இன்னிசைக்கருவிகள் ஆகியவைகளை அனுமதிக்க முடியும்? அவர் ஹிந்து வழிபாட்டு முறைகளின் எல்லா அம்சம்களையும் எங்ஙனம் நடக்கவிட்டிருக்க முடியும்? அவர் ஒரு முஹமதியராக இருந்தால், அவர் காதுகள் குத்தப்பட்டிருக்குமா? ஹிந்து கோவில்களைச் செப்பனிடத் தம் கையில் இருந்த பணத்தை அவர் செலவு செய்திருக்க முடியுமா? மாறுபாடாக ஹிந்து கோவில்களையும், தெய்வங்களையும் மதியாமல் இருப்பதை அவர் சிறிதும் சகிப்பதில்லை.
ஒருமுறை நானா சாஹேப் சாந்தோர்கர் பினிவாலே என்ற தனது ஷட்டகருடன் ஷீர்டிக்கு வந்தார். அவர்கள் மசூதிக்குச்சென்று பாபாவின் முன்னால் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது பாபா திடீரென்று நானா சாஹேபின் மீது கோபம் அடைந்தார். "நீ இவ்வளவு காலம் எனது கூட்டுறவில் இருக்கிறாய். எங்ஙனம் நீ இவ்விதம் நடந்துகொள்கிறாய்?" என்று அவரைக் கேட்டார். முதலில் நானா சாஹேபுக்கு ஒன்றும் புரியவில்லை. தாழ்மையுடன் விளக்கும்படி கேட்டுக்கொண்டார். பாபா அவரை கோபர்காவன் எப்போது வந்தாரென்றும், அங்கிருந்து ஷீர்டிக்கு எங்ஙனம் வந்தாரென்பதையும் கேட்டார்.
உடனே நானா சாஹேப் தன் தவறைப் புரிந்துகொண்டார். அவர் ஷீரடிக்கு வரும்போதெல்லாம் கோபர்காவனில் கோதாவரிக் கரையிலுள்ள தத்தரின் கோவிலை வழிபட்டு வருவது வழக்கம். ஆனால் இம்முறை தத்தரின் பக்தரான தனது உறவினரையும், அக்கோவிலுக்குப் போகாமல் தடுத்து, தாமதத்தைத் தவிர்க்கும் பொருட்டு ஷீர்டிக்கு நேரடியாக வந்துவிட்டார். இக்குற்றத்தை எல்லாம் அவர் பாபாவிடம் ஒப்புக்கொண்டு கோதாவரியில் குளித்துக்கொண்டிருக்கும்போது ஒரு பெரியமுள் அவர் பாதத்தில் குத்திவிட்டதனால், அது அவருக்கு மிகுதியான தொல்லையைக் கொடுத்தது என்று கூறினார். பாபா அது அவருக்கு லேசான தண்டனை என்று கூறி எதிகாலத்தில் ஜாக்கிரதையாக இருக்கும்படி கூறினார்.
காலா — கதம்ப உணவு
நைவேத்தியம் வினியோகிக்கப்படும் கதைக்குத் திரும்புவோம். ஆரத்தி நிகழ்ச்சி முடிந்தபின்னால் எல்லோரையும் உதியுடனும், ஆசீர்வாதங்களுடனும் அனுப்பிய பிறகு உள்ளே சென்று, நிம்பாரில் தமது முதுகைச் சாய்த்துக்கொண்டு இரண்டு வரிசையுள்ள பந்தியுடன் அமர்ந்திருப்பார். நைவேத்யம் கொண்டுவந்த பக்தர்கள் பூரி, மாண்டி, போளி, பாஸந்தி, சன்ஸா, சோறு முதலியவை உள்ள தங்களது உணவுப் பதார்த்தங்களை வலிந்து உள்ளே அனுப்புவார்கள்.
பாபாவினால் புனிதமாக்கப்பட்ட உணவின் பிரசாதத்திற்காக வெளியே காத்துக்கொண்டிருப்பார்கள். எல்லா உணவுகளும் கதம்பக் கூட்டாகக் கலக்கப்பட்டு பாபாவின் முன் வைக்கப்படும். அதை அவர் கடவுளுக்குச் சமர்ப்பித்து புனிதப்படுத்துவார். அதன் பகுதிகள் வெளியில் காத்துக்கொண்டிருக்கும் நபர்களுக்கு அளிக்கப்பட்டு மீதம் உள்ளே பாபா நடுநாயகமாக அமர்ந்திருக்கும் மக்களுக்குப் பரிமாறப்படும். இரண்டு வரிசையில் அமர்ந்திருக்கும் பக்தர்களும் வயிறார உண்ணுவர். புனிதமாக்கப்பட்ட உணவை உள்ளே அமர்ந்திருக்கும் அனைவருக்கும், ஒவ்வொருவரின் தேவையையும் சௌகரியத்தையும் கவனித்துப் பரிமாறும்படி நானா சாஹேப் நிமொண்கரையும், ஷாமாவையும் பாபா தினந்தோறும் கேட்டுக்கொள்வார்.
அவர்கள் இதை மிகவும் ஜாக்கிரதையாகவும், பிரியத்துடனும் செய்வர். இவ்வாறு அளிக்கப்பட்ட ஒவ்வொரு கவள உணவும் அடியவர்களுக்குப் போஷாக்கையும், திருப்தியையும் தந்தது. எத்தகைய இனிமையான, விருப்பமான, புனிதமாக்கப்பட்ட உணவு அது! எப்போதும் புனிதமானது, தெய்வீகமானது.
ஒரு கிண்ணம் மோர்
ஒருமுறை இந்த கூட்டத்திலிருந்தபோது ஹேமத்பந்த் வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டார். அப்போது பாபா அவருக்கு ஒரு கிண்ணத்தில் மோர் கொடுத்தார். அதன் வெள்ளையான தோற்றம் அவரை மகிழ்வித்தது. ஆனால் வயிற்றில் அதற்கு இடம் இருக்காது என்று அஞ்சி லேசாக உறிஞ்சினார். மிகவும் சுவையாக இருந்தது. அவரது தடுமாறும் எண்ணத்தைப் புரிந்துகொண்ட பாபா, "எல்லாவற்றையும் குடித்துவிடு. இனிமேல் இம்மாதிரி வாய்ப்பு உனக்குக் கிடைக்காது" என்று கூறினார். அப்போது ஹேமத்பந்த் அதை முழுக்கவும் பருகினார். பாபாவின் உரை தீர்க்கதரிசனமானது என்று கண்டார். ஏனெனில் பாபா சீக்கிரத்தில் மஹாசமாதியடைந்தார்.
இப்போது வாசகர்கள் ஹேமத்பந்துக்கு நிச்சயம் நன்றி செலுத்த வேண்டும். அவர் கிண்ணத்தில் இருந்த மோரை அருந்தினார். ஆனால் பாபாவின் லீலைகள் என்ற ரூபத்தில் வேண்டிய அளவு அமிர்தத்தை நமக்கு விநியோகித்தார். பற்பல கிண்ணங்கள் அமிர்தத்தை நாம் பருகுவோம், திருப்தியடைந்து மகிழ்வோம்.
ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
• ஸோமதேவ் ஸ்வாமி
• நானா சாஹேப் சாந்தோர்கர்
ஆகியோரின் கதைகள்
முன்னுரை
வேதங்களும், புராணங்களும் பிரம்மத்தையோ, சத்குருவையோ போதுமான அளவில் விவரிக்க இயலாது. அவ்வாறெனின் ஏதுமறியாதவர்களாகிய நாம் எங்ஙனம் நமது சத்குரு, சாயிபாபாவை விவரிக்க இயலும்? இவ்விஷயத்தில் அமைதியாக இருப்பதே சிறந்தது என்று எண்ணுகிறோம். உண்மையில் மௌனவிரதம் அனுஷ்டிப்பதே, சத்குருவைப் புகழ்வதற்கு சிறப்பான வழியாகும். ஆனால் சாயிபாபாவினது நல்ல பண்புகள் மௌன விரதத்தை மறக்கச்செய்து நம்மைப் பேசுமாறு ஊக்குவிக்கின்றன. நண்பர்கள், உறவினர்கள் இவர்களும் நம்மோடு இருந்து உண்ணவில்லையாயின் நல்ல ருசியான உணவுகூட நமக்குச் சுவையாக இருப்பதில்லை. ஆனால் அவர்கள் நம்முடன் சேர்ந்து உண்பார்களானால், அவைகள் இன்னும் அதிக சுவையைப் பெறுகின்றன. சாயி லீலைகள் என்ற ரூபத்தில் உள்ள அமிர்தமான சாயி லீலாம்ருதமும் இது போன்றதே. அமிர்தத்தை நாம் மட்டுமே தனியாக உண்ணமுடியாது. நண்பர்களும், சகோதரர்களும் நம்முடன் சேரவேண்டும். எவ்வளவு அதிகமோ அவ்வளவு நலம்.
இக்கதைகளுக்குத் தெய்வீக உணர்ச்சியூட்டுவதும் தம் விருப்பப்படியே அவைகளை எழுதுமாறு செய்வதும் சாயிபாபா அவர்களேயாகும். பரிபூரண சரணாகதியடைவதும், தியானிப்பதும் மட்டுமே நமது கடமை. க்ஷேத்ராடனம், பிரதிக்ஞை, தியாகம், தர்மம் இவை எல்லாவற்றையும்விட தவமிருத்தல் நல்லது. தவமிருத்தலைக் காட்டிலும் ஹரியைத் தொழுவது நலம். இவையெல்லாவற்றையும் விட சத்குருவைத் தியானிப்பது மிகச்சிறந்தது.
ஆகவே சாயியின் நாமத்தை ஸ்மரணம் செய்து அவர் மொழிகளை மனதில் நினைத்து, அவர் உருவைத் தியானித்து, இதயபூர்வமாக அவரிடம் அன்பு செலுத்தி, அவருக்காகவே எல்லாச் செயல்களையும் செய்வோமாக. சம்சார பந்தத்திலிருந்து விடுபட இதைவிட வேறு சிறந்த வழியில்லை. மேலே கூறியவாறு நமது கடமையைச் செய்தோமானால் சாயி நமது விடுதலைக்கு உதவக் கட்டுப்பட்டவர். இப்போது இந்த அத்தியாயத்தின் கதைக்கு வருவோம்.
ஹரி கானோபா
பம்பாயைச் சேர்ந்த ஹரி கானோபா என்பவர் தனது நண்பர்கள், உறவினர்கள் மூலம் பாபாவின் பல லீலைகளைக் கேள்வியுற்றார். அவர் ஒரு சந்தேகப் பிராணியாக இருந்ததால் அவற்றை நம்பவில்லை. அவர் பாபாவைத் தாமே பரீட்சிக்க விரும்பினார். எனவே சில பம்பாய் நண்பர்களுடன் ஷீர்டிக்கு வந்தார். ஜரிகைத் தலைப்பாகையும், காலில் இரண்டு புதிய காலணிகளையும் அணிந்திருந்தார். பாபாவைத் தொலைவிலிருந்து கண்ட அவர், அவரிடம் சென்று வீழ்ந்துபணிய எண்ணினார். அவரது புதிய காலணிகளை என்ன செய்வதென்று தெரியவில்லை. எனினும் திறந்தவெளியில் ஒரு மூலைக்குச் சென்று அவைகளை வைத்துவிட்டு, மசூதிக்குள் சென்று பாபாவின் தரிசனத்தைப் பெற்றார்.
பாபாவைப் பக்தியுடன் வணங்கி உதி, பிரசாதம் இவைகளைப் பெற்றுக்கொண்டு திரும்பினார். அங்கு மூலையில் வைத்திருந்த காலணிகள் மறைந்து போயிருந்ததை அவர் கண்டார். அவைகளுக்காக வீணாகத் தேடியபின், தான் இருந்த இடத்துக்கு மிகவும் மனமுடைந்துபோய்த் திரும்பினார். குளித்து வழிபட்டு நைவேத்தியம் சமர்ப்பித்துவிட்டு, உணவுக்காக அமர்ந்தார். ஆயினும் அவ்வளவு நேரமும் காலணிகளைத் தவிர வேறொன்றையும் பற்றி அவர் நினைக்கவில்லை.
உணவை முடித்துக்கொண்டபின், கை கழுவுவதற்காக வெளியே வந்தபோது ஒரு மராத்தியப் பையன் அவரை நோக்கி வந்துகொண்டிருந்தான். அவனது கையில் ஒரு கோல் இருந்தது. அதன் நுனியில் ஒரு ஜோடி புதிய காலணிகள் தொங்கவிடப்பட்டிருந்தன. கை கழுவ வெளியேவந்த நண்பர்களிடம் பாபா தன்னை இக்கோலுடன் அனுப்பியிருப்பதாகவும், 'ஹரிகா பேடா ஜரிகா ஃபேடா!' — 'க' என்பவரின் புதல்வரான ஹரியே! ஜரிகைத் தலைப்பாகைக்காரரே! — என்று கூவிக்கொண்டே வீதிகளில் செல்லும்படி சொல்லியிருப்பதாகவும், யாராவது இக்காலணிகளைக் கேட்டால் அவரது பெயர் ஹரிதானா என்றும் அவர் 'க'வின் — அதாவது கானோபா — புதல்வர்தானா என்றும், அவர் ஜரிகை தலைப்பாகை அணிபவர்தானா என்றும் தன்னை உறுதிப்படுத்திக்கொண்ட பின்பு, அதை அவரிடம் கொடுக்கும்படி கூறியிருப்பதாகவும் சொன்னான். இதைக்கேட்டு ஹரி கானோபா மிகவும் மகிழ்வும், ஆச்சரியமும் அடைந்தார். அவர் பையனிடம் சென்று காலணிகள் தம்முடையவையே என்றார். தனது பெயர் ஹரி என்றும், தாம் 'க'வின் — கானோபா — புதல்வன் என்றும் கூறி ஜரிகைத் தலைப்பாகையையும் காண்பித்தார்.
பையன் திருப்தியடைந்து அவரிடம் காலணிகளைத் திருப்பிக் கொடுத்துவிட்டான். தனது ஜரிகைத் தலைப்பாகை வெளியில் அனைவருக்கும் தெரியுமாறு இருந்தது. எனவே பாபாவும் அதைக் கண்டு இருக்கலாம். ஆனால் தன் பெயர் ஹரி என்பதும், கானோபாவின் மகன் என்றும், தான் முதல் முறையாக ஷீர்டிக்கு வந்திருப்பதால் பாபா எங்ஙனம் அறிந்திருக்கக்கூடும் என மனதில் நினைத்து வியந்தார். வேறு எவ்வித குறிக்கோளும் இன்றி பாபாவைச் சோதிக்கும் ஒரே நோக்கத்துடன் மட்டுமே அவர் ஷீர்டிக்கு வந்தார். இந்நிகழ்ச்சியால் பாபா ஒரு மிகப்பெரும் சத்புருஷர் என்று அவர் அறிந்துகொண்டார். அவர் விரும்பியதை அறிந்துகொண்டு திருப்தியுடன் வீடு திரும்பினார்.
சோமதேவ் ஸ்வாமி
பாபாவை சோதிக்கவந்த மற்றொரு மனிதரின் கதையை இப்போது கேளுங்கள். காகா சாஹேபின் சகோதரரான பாயிஜி நாக்பூரில் தங்கியிருந்தார். 1906ம் ஆண்டில் இமயமலை சென்றிருந்தபோது கங்கோத்ரி பள்ளத்தாக்கில் உள்ள உத்தர் காசியில், ஹரித்வாரைச் சேர்ந்த சோமதேவ் ஸ்வாமி என்பாருடன் அறிமுகமானார். இருவரும் ஒருவர் மற்றவரின் பெயரை தங்கள் நாட்குறிப்பேட்டில் எழுதிக்கொண்டனர். ஐந்தாண்டுகளுக்குப்பின் சோமதேவ் ஸ்வாமி, பாயிஜியின் விருந்தினராக நாக்பூருக்கு வந்தார். பாபாவின் லீலைகளைக் கேட்டு மகிழ்வெய்தினார்.
ஷீர்டிக்குச் சென்று பாபாவைக் காண அவருக்கு ஒரு பெரும் ஆசை எழுந்தது. பாயிஜியிடம் இருந்து அறிமுகக் கடிதம் ஒன்றைப் பெற்றுக்கொண்டு, ஷீர்டிக்குக் கிளம்பினார். மன்மாட், கோபர்காவன் இவைகளைக் கடந்ததும், ஒரு வண்டியமர்த்திக்கொண்டு ஷீர்டிக்குப் போனார். ஷீர்டிக்கு அருகில் வந்ததும் மசூதியில், இரண்டு உயரமான கொடிகள் பறந்து கொண்டிருப்பதைக் கண்டார். வெவ்வேறு ஞானிகளிடம் வெவ்வேறு விதமான குணாதிசயங்களும், வெவ்வேறு வாழ்க்கை முறைகளும், வெவ்வேறு புறப்பரிவாரங்களும் இருப்பதை நாம் பொதுவாகக் காண்கிறோம். ஆயின் இப்புறச் சின்னங்கள் அந்த ஞானிகளின் தகுதிகளை எடை போடுவதற்கு உகந்த அளவுகோல் ஆகா. ஆனால் சோமதேவ் ஸ்வாமியின் விஷயத்தில், அது வேறு விதமாய் இருந்தது. கொடிகள் பறப்பதை அவர் கண்டவுடனே, "ஞானி ஒருவர், கொடிகள் மீது ஏன் ஆர்வம் வைக்கவேண்டும்? இது துறவையா உணர்த்துகிறது? இது அந்த ஞானி புகழுக்காக ஏங்குவதை அல்லவா உணர்த்துகிறது" என எண்ணினார்.
இவ்வாறாக அவர் தமது ஷீர்டி விஜயத்தை ரத்துச் செய்ய விரும்பி, தாம் திரும்பிப் போவதாக கூட வந்த சக பயணிகளிடம் கூறினார். அவர்கள் அதற்கு, "பின் இவ்வளவு தூரம் நீங்கள் ஏன் வரவேண்டும். கொடியைக் கண்டே தங்கள் மனம் கலக்கமுறும்போது ஷீர்டியில் ரதம், பல்லக்கு, குதிரை மற்றும் பல பரிவாரங்களையெல்லாம் கண்டால் தங்கள் மனம் எவ்வளவு நிலைகுலையும்" என்றார்கள். இதைக்கேட்டு ஸ்வாமி மேலும் குழப்பமடைந்தவராக, "குதிரை, பல்லக்கு இன்னோரன்ன படாடோபங்களையுடைய சாதுக்கள் சிலரை மட்டும் நான் கண்டதில்லை, — அனேகரைக் கண்டிருக்கிறேன் — அத்தகைய சாதுக்களைக் காண்பதைவிட திரும்பிப் போதலே எனக்கு நன்று" என்றுரைத்தார். இதைக்கூறிக்கொண்டு அவர் திரும்பிப்போகக் கிளம்பினார். உடன் வந்தோர் அங்ஙனம் செய்யவேண்டாம் என்றும், தொடர்ந்து போகலாம் என்றும் வற்புறுத்தினர்.
பாபாவை இங்ஙனம் குறுகிய மனமுள்ளவராக சிந்திப்பதை நிறுத்தும்படியும், அந்த சாது — அதாவது பாபா — கொடிகளையோ, பரிவாரங்களையோ, புகழையோ எள்ளளவும் பொருட்படுத்துபவர் அல்ல என்று கூறினர். அன்பாலும், பக்தியாலும் அவரது அடியவர்களும், பக்தர்களுமே இவற்றையெல்லாம் ஏற்படுத்தியுள்ளார்கள் என்றும் கூறினர். முடிவாகப் பயணத்தைத் தொடரும்படி அவரை இணங்கவைத்து ஷீர்டிக்குச் சென்று பாபாவைத் தரிசிக்கச் செய்தனர். பாபாவை முற்றத்திலிருந்து கண்டவுடன் அகமுருகி கண்களில் கண்ணீர் மல்க குரல் நெகிழ அவரது கெடுதலான எண்ணங்களெல்லாம் அவரைவிட்டு அகன்று போயின. "எங்கே நமது மனம் மிகமிக மகிழ்ந்து களிப்படைகிறதோ, அதுவே நமது இருப்பிடமும், களைப்பாறும் இடமுமாகும்", என்ற அவரது குருவின் மொழிகளை நினைவுகூர்ந்தார். பாபாவின் பாதத் தூளிகளில் அவர் புரள விரும்பி பாபாவை நெருங்கியபோது, பாபா கடுங்கோபமடைந்து "எங்களுடைய டம்பமெல்லாம் எங்களுடம் இருக்கட்டும். நீ திரும்ப உன் வீட்டிற்குப் போ. இம்மசூதிக்குள் வந்தாயோ, ஜாக்கிரதை. மசூதிமேல் கொடி பறக்கவிட்டுக் கொண்டிருக்கும் ஒருவரின் தரிசனத்தை ஏன் காணவேண்டும்? இது துறவின் அறிகுறியா? இங்கே கணமேனும் இருக்காதே" என்றார். ஸ்வாமி ஆச்சரியத்தால் திடுக்கிட்டார்.
பாபா தமது உள்ளத்தைப் படித்து அதைப் பேசினார் என உணர்ந்தார். எத்தகைய நிறைபேரறிவுடையவர் அவர்! தாம் ஞானமற்றவர் என்றும், பாபா புனிதமான உயர்ந்தோர் என்றும் அவர் உணர்ந்தார். சிலரை பாபா அரவணைப்பதையும், வேறு ஒருவரைக் கையால் தொடுவதையும், மற்றவர்களைத் தேற்றுவதையும், சிலரை நோக்கிப் புன்னகை செய்வதையும், சிலருக்கு உதிப்பிரசாதம் அளிப்பதையும், இவ்வாறாக அனைவரையும் மகிழ்வூட்டி, திருப்திப்படுத்திக் கொண்டிருப்பதையும் கண்டார். தான் மட்டும் ஏன் அவ்வளவு கடுமையாக நடத்தப்பட வேண்டும்? அதைப்பற்றி அவர் தீவிரமாகச் சிந்தித்து, தமது அந்தரங்க எண்ணமே பாபாவின் நடத்தையில் எதிரொலிப்பதை உணர்ந்து இதையே ஒரு பாடமெனக் கருதி முன்னேறவேண்டுமென நினைத்தார். பாபாவின் கோபம் மறைமுகமான ஆசீர்வாதமே. பிற்காலத்தில் பாபாவின் மீது அவருக்குள்ள நம்பிக்கை, உறுதிப்படுத்தப்பட்டு பாபாவின் ஒரு முற்றிலும் பற்றுறுதியுள்ள அடியவராக ஆனார் என்று சொல்லத் தேவையில்லை.
நானா சாஹேப் சாந்தோர்கர்
நானா சாஹேப் சாந்தோர்கரின் கதையுடன் ஹேமத்பந்த் இந்த அத்தியாயத்தை முடிக்கிறார். ஒருமுறை மசூதியில் நானா சாஹேப், மஹல்ஸாபதி மற்றுமுள்ளோருடன் அமர்ந்திருக்கையில், பீஜப்பூரிலிருந்து ஒரு முஹமதிய கனவான் தனது குடும்பத்துடன் பாபாவைக் காணவந்தார். கோஷா— பர்தா — அணிந்த பெண்மணிகளைக் கண்ட நானா, அப்பால் போய்விட விரும்பினார். ஆனால் பாபா அவர் அங்ஙனம் செய்வதைத் தடுத்துவிட்டார். பெண்மணிகள் வந்து பாபாவைத் தரிசனம் செய்தனர். பாபாவின் பாதங்களை வணங்குமுகமாக அவர்களில் ஒருத்தி முகத்திரையை எடுத்து வணங்கிவிட்டுப் பிறகு மூடும்போது, நானா சாஹேப் அவளது முகத்தைக்கண்டு அவளின் அபூர்வ அழகின் கவர்ச்சியால் பாதிக்கப்பட்டவராய், அவளது முகத்தை மீண்டும் காண விரும்பினார். அப்பெண்மணி அந்த இடத்தைவிட்டு அகன்றதும், நானாவின் குழப்பத்தை அறிந்துகொண்டு, பாபா அவரை நோக்கி,
"நானா நீ ஏன் வீணாகக் கலங்குகிறாய். புலன்கள் அவைகளுக்கிடப்பட்ட பணியை அல்லது கடமையைச் செய்யட்டும். நாம் அவைகளின் வேலையில் குறுக்கிட வேண்டாம். கடவுள் இவ்வழகிய உலகத்தைப் படைத்துள்ளார். அதன் அழகைப் பாராட்ட வேண்டியது நமது கடமையாகும். மனம் மெதுவாகப் படிப்படியாக அமைதியுறும். முன்கதவு திறந்திருக்கும்போது, பின்வழியாக ஏன் செல்ல வேண்டும். உள்ளம் தூய்மையாக இருக்குமிடத்து எவ்வகையிலும் எவ்விதக் கஷ்டமும் இல்லை. நம்மிடத்தே எவ்விதக் கெட்ட எண்ணமும் இல்லையென்றால், ஏன் ஒருவர் மற்றொருவருக்குப் பயப்படவேண்டும்? கண்கள் தம் வேலையைச் செய்யலாம், நீ ஏன் வெட்கப்பட்டுத் தடுமாறுகிறாய்?" என்றார்.
ஷாமா அவ்விடத்தில் இருந்தார். பாபா கூறியதன் பொருளை அவரால் உணர இயலவில்லை. எனவே வீடு திரும்பும் வழியில் இதை நானாவிடம் கேட்டார். நானா, அழகிய பெண்மணியைக் கண்டதும், தாம் மனக்கலக்கமடைந்ததையும், பாபா அதை எங்ஙனம் அறிந்து அதைப்பற்றி அறிவுரை கூறினார் என்பதையும் கூறினார். பாபாவின் பொருளை நானா இவ்வாறாக விளக்கினார். "அதாவது நமது மனம் இயற்கையாகவே சலனமுள்ளது. அதைத் தான்தோன்றித்தனமாகப் போக அனுமதிக்கக் கூடாது. உணர்வுகள் குழப்பமுறலாம். ஆயினும் உடம்பு கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்படவேண்டும். பொறுமையை இழக்க அனுமதிக்கக் கூடாது.
விஷயங்களின் பின்னால் உணர்வுகள் தம் குறிக்கோளை நோக்கி ஓடுகின்றன. ஆனால் அவைகளை நாம் தொடர்ந்து சென்று அவைகளின் குறிக்கோளுக்காக ஏங்கக்கூடாது. மெதுவான படிப்படியான பயிற்சியினால் சலனங்களை வெற்றிகாண இயலும். உணர்ச்சிகளால் நாம் இயக்கப்படக்கூடாது. ஆயினும் அவைகளை முழுவதுமாகக் கட்டுப்படுத்த இயலாது. தக்க முறையிலும், ஒழுங்காக சந்தர்ப்பத்துக்குத் தேவையானபடியும் அவைகளைக் கட்டுப்படுத்த வேண்டும். அழகு என்பது பார்க்கப்படவேண்டிய ஒன்றே. பொருட்களின் அழகை நாம் பயமின்றிக் காணவேண்டும். வெட்கத்துக்கோ, பயத்துக்கோ அதில் இடமில்லை. கெட்ட எண்ணங்களை மட்டும் நம் மனதில் அனுமதிக்கக் கூடாது. பற்றில்லாத மனதுடனே கடவுளின் அழகான படைப்புக்களைக் கவனிக்கவேண்டும். இவ்வாறாக உணர்வுகள் எளிதாகவும், இயற்கையாகவும் கட்டுக்குள் கொணரப்பட்டுவிடும். பொருட்களை அனுபவிப்பதில்கூட நீங்கள் இறைவனைப்பற்றி ஞாபகப்படுத்தப்டுவீர்கள்.
வெளி உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்து, மனம் இலட்சியத்தை ஓடித்தொடர அனுமதிக்கப்பட்டு அவைகள்பால் பற்றுக்கொண்டிருப்பின் ஜனன மரணச் சுழல் முடிவுறாது. புலன் உணர்வுகளின் விஷயங்கள் தீமையானது. விவேகம் என்னும் சாரதியைக்கொண்டு நாம் மனதைக் கட்டுப்படுத்தி உணர்வுகளைத் தாறுமாறாக அலையவிடாமல் இருப்போம். அத்தகையதொரு சாரதியுடன் நம் முடிவான இருப்பிடமும், நமது உண்மையான வீடுமாகிய, எங்கு சென்றால் மறுபிறவி இல்லையோ அந்தத் திருமாலின் திருவடிகளை எய்துவோம்" என்றார்.
ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
• ஸ்ரீ தேம்பே ஸ்வாமி
• பாலாராம் துரந்தர்
ஆகியோரின் கதைகள்
சத்சரிதம் மூலநூலில் ஐம்பதாவது அத்தியாயத்தின் மையப்பொருள் 39ஆம் அத்தியாயத்தில் உள்ள அதே மையப் பொருளைப் பற்றியது. ஆதலால் இந்த அத்தியாயத்துடனேயே இணைக்கப்பட்டிருக்கிறது. இப்போது 51வது அத்தியாயம் இங்கே 50ஆம் அத்தியாயமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்த அத்தியாயம் காகா சாஹேப் தீஷித், ஸ்ரீ தேம்பே ஸ்வாமி, பாலாராம் துரந்தர் ஆகியோரின் கதைகளைக் கூறுகிறது.
முன்னுரை
பக்தர்களின் மூலாதாரமும், சத்குருவும், கீதையை விளக்குபவரும், நமக்கு எல்லா ஆற்றல்களையும் கொடுப்பவருமான சாயிக்கு ஜெயம் உண்டாகட்டும். ஓ! சாயி, எங்களுக்கு அனுகூலம் செய்து ஆசீர்வதியுங்கள். மலயகிரியில் வளரும் சந்தன மரங்கள் உஷ்ணத்தைப் போக்குகின்றன. மேகங்கள் மழைநீரைப் பொழிந்து மக்களைக் குளிர்வித்து புத்துணர்வூட்டுகின்றன. வசந்தகாலத்தில் மலர்கள் மலர்ந்து அவைகளால் நாம் கடவுளை வழிபட வகை செய்கின்றன. அது போலவே சாயிபாபாவின் கதைகள் பயில்வோருக்குச் சாந்தியையும், சௌகரியத்தையும் அளிக்க முன்வருகின்றன. பாபாவின் கதைகளை எடுத்துக் கூறுவோர், அதைக் கேட்போர் இருபாலரும் மற்றும் முன்னவர்களின் வாக்கும், பின்னவர்களின் காதுகளும் ஆசீர்வதிக்கப்பட்டுப் புனிதம் அடைகின்றன.
நூற்றுக்கணக்கான பயிற்சிகளையும் செயல்முறைகளையும் நாம் கடைப்பிடித்தும், ஒரு சத்குரு அவர்தம் அருளால் நம்மை ஆசீர்வதித்தாலன்றி, நாம் ஆன்மிக இலட்சியத்தை அடையமாட்டோம். இந்த வாக்கிற்கு எடுத்துக்காட்டாக பின்வரும் கதையினைக் கேளுங்கள்.
காகா சாஹேப் தீஷித் (1864 - 1926)
ஹரி சீதாராம் என்னும் காகா சாஹேப் தீஷித் 1846ல் வத்நாகர நகர், காண்ட்வாவில் — மத்திய மாகாணம் — பிராமணக் குடும்பத்தில் அவதரித்தார். அவர் ஆரம்பக் கல்வி காண்ட்வா, ஹிங்கான்காட் என்னும் ஊர்களிலும், நடுத்தரக் கல்வி நாக்பூரிலும் பயின்றார். மேற்படிப்புக்காக பம்பாய் வந்து வில்ஸன் கல்லூரியில் முதலிலும், பின்னர் எல்பின்ஸ்டன் கல்லூரியிலும் பயின்றார். 1883இல் பட்டம் பெற்ற பிறகு அவர் யிலும் வக்கீல் பரீட்சையிலும் தேறி, அரசு தரப்பு வக்கீல்களின் லிட்டில் & கம்பெனி என்ற நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு, சிறிது காலத்திற்குப்பின் தாமே சொந்தமாக வழக்குரை அறிஞர்கள் நிறுவனத்தைத் தொடங்கினார்.
1909ஆம் ஆண்டுக்கு முன்னர் சாயிபாபாவின் பெயர், காகா சாஹேப் தீஷித்துக்குத் தெரியாமல் இருந்தது. ஆனால் அதற்குப்பின் அவர் பாபாவின் ஒரு பெரும் பக்தராக ஆனார். லோனாவாலாவில் தங்கியிருந்தபோது தனது பழைய நண்பரான நானா சாஹேப் சாந்தோர்கரைச் சந்திக்க நேர்ந்தது. பல விஷயங்களைப் பற்றிப் பேசுவதில் இருவரும் சிறிதுநேரத்தைச் செலவழித்தனர். காகா சாஹேப், தாம் லண்டனில் ஒரு டிரெயினில் போய்க்கொண்டிருக்கும்போது எங்ஙனம் ஒரு விபத்து நேரிட்டு தனது பாதம் நழுவிக் காயமடைந்தார் என்று அவருக்கு விளக்கினார். நூற்றுக்கணக்கான சிகிச்சைகள் செய்தும் எதுவும் அவருக்குப் பலனை அளிக்கவில்லை.
நானா சாஹேப் அவரிடம் அவர்தம் காலின் ஊனத்தையும், வழியையும் நீக்கிக்கொள்ள விரும்பினால் தனது சத்குரு சாயிபாபாவிடம் செல்லவேண்டும் என்றார். மேலும் சாயிபாபாவைப்பற்றிய முழு விபரத்தையும் அவர் காகாவுக்குக் கொடுத்து சாயிபாபாவின் மஹாவாக்கியமான "எனது மக்களை நெடுந்தொலைவிலிருந்தும், ஏழ்கடலுக்கு அப்பாலிருந்தும் கூட குருவியின் காலில் நூலைக் கட்டி இழுப்பதைப் போன்று இழுக்கிறேன்" என்பதைக் கூறினார்.
பாபாவின் ஆளாயில்லாவிட்டால் அவர் பாபாவால் கவரப்படமாட்டார் என்பதையும், தரிசனம் அளிக்கப்படமாட்டார் என்பதையும் அவர் தெளிவாக்கினார். இவைகளையெல்லாம் கேட்க காகா சாஹேபுக்கு மகிழ்வுண்டாயிற்று. தாம் பாபாவிடம் போவதாகவும், அவரைத் தரிசித்துப் பிரார்த்தித்து கால் ஊனத்தை அவ்வளவாக குணமாக்காவிடினும் ஊனமான ஒட்டித்திரியும் மனத்தை ஒழுங்காக குணப்படுத்தி தமக்கு எல்லையற்ற பேரின்பத்தை நல்கும்படியும் வேண்டிக்கொள்ளப் போவதாகவும் கூறினார்.
காகா சாஹேப் தீஷித் சில நாட்களுக்குப் பிறகு பம்பாய் கீழ் சட்டசபையில் தமக்கு ஒரு இடம் கிடைப்பதற்காக, ஓட்டுக்கள் பெறும் நோக்குடன் அஹமத்நகர் சென்று சர்தார் காகா சாஹேப் மிரீகருடன் தங்கினார். காகா சாஹேப் மிரீகருடைய புதல்வரான பாலா சாஹேப் மிரீகர் என்னும் கோபர்காவனின் மம்லதார், அச்சமயத்தில் அஹமத்நகருக்கு அவ்விடத்தில் நடைபெற்ற குதிரைக் கண்காட்சியைக் காணும்பொருட்டு வந்தார். தேர்தல் வேலை முடிந்ததும் காகா சாஹேப் தீஷித் ஷீர்டி செல்ல விரும்பினார். தந்தையும், மகனுமாகிய இரு மிரீகர்களும், அவருடன் அனுப்புவதற்கு ஒரு தகுதியான, ஒழுங்கான வழிகாட்டியாக யாரை அனுப்பலாம் என்று தங்கள் இல்லத்தில் யோசித்துக்கொண்டிருந்தனர்.
ஷீர்டியில் சாயிபாபா அவர்களின் வரவேற்புக்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தார். ஷாமாவுக்கு அவரின் மாமனாரிடமிருந்து ஷாமாவின் மாமியார் தீவிரமாகக் காய்ச்சலாக இருப்பதையும், ஷாமா தனது மனைவியுடன் அவளைக் காண அஹமத்நகர் வரவேண்டுமென்றும் ஒரு தந்தி வந்தது. ஷாமா பாபாவின் அனுமதியுடன் அங்கு வந்து தனது மாமியார் முன்னைவிட இப்போது நலமாகி வருவதைக் கண்டார். நானா சாஹேப் பான்சேயும், அப்பா சாஹேப் கத்ரேயும் அவர்கள் குதிரைக் கண்காட்சிக்குப் போகும்வழியில் ஷாமாவைக் கண்டு, அவரை மிரீகரின் வீட்டுக்குச் சென்று காகா சாஹேப் தீஷித்தைப் பார்த்து ஷீர்டிக்கு அவரையும் உடனழைத்துச் செல்லும்படி கூறினார்கள். காகா சாஹேப் தீஷித்துக்கும், மிரீகர்களுக்கும் கூட ஷாமாவின் வருகை தெரிவிக்கப்பட்டது. மாலையில் ஷாமா மிரீகர்களிடம் வந்தார். அவரை அவர்கள் காகா சாஹேப் தீஷித்துக்கு அறிமுகப்படுத்தினர்.
ஷாமா, காகா சாஹேப் தீஷித்துடன் இரவு 10 மணி ரயில் வண்டியில் கோபர்காவனுக்குச் செல்வதென ஏற்பாடு செய்யப்பட்டது. இது முடிவானதும் ஒரு விசித்திர நிகழ்ச்சி நடைபெற்றது. பாலா சாஹேப் மிரீகர் பாபாவின் படத்தின்மீது இருந்த திரையை அகற்றிவிட்டு அதை காகா சாஹேப் தீஷித்துக்குக் காண்பித்தார். யாரைப் பார்க்க ஷீர்டிக்குப் போகப் போகிறாரோ அவர் அவ்விடத்திலேயே தமது சித்திர ரூபத்தில் வரவேற்க இருந்ததைக் கண்டு அவர் ஆச்சரியப்பட்டார். அவர் மிகவும் மனமுருகி படத்தின்முன் வீழ்ந்துபணிந்தார். அப்படம் மேகாவுடையது. அதன்மேல் உள்ள கண்ணாடி உடைந்துவிட்டதால், பழுதுபார்க்க அது மிரீகர்களிடம் அனுப்பபட்டிருந்தது. தேவையானபடி பழுது பார்க்கப்பட்டு விட்டபடியால் படத்தை இப்போது ஷாமாவிடமும், காகா சாஹேபுடனும் அனுப்புவது என்று தீர்மானிக்கப்பட்டது.
பத்து மணிக்கு முன்னரே அவர்கள் ரயில் நிலையத்துக்குச் சென்று நுழைவுச்சீட்டு வாங்கிக்கொண்டனர். ஆனால் வண்டி வந்ததும் இரண்டாம் வகுப்பு மிகவும் கூட்டமாக இருப்பதையும், அவர்களுக்கு இடமில்லாதிருப்பதையும் அறிந்தனர். அதிர்ஷ்டவசமாக அந்த வண்டியின் கார்டு, காகா சாஹேபின் நண்பராக இருந்தார். அவர்களை முதல் வகுப்பில் அமர்த்தினார். இவ்வாறாக அவர்கள் சௌக்கியமாகப் பிரயாணம் செய்து கோபர்காவனில் இறங்கினார்கள். ஷீர்டிக்குச் செல்ல நானா சாஹேப் சாந்தோர்கரும் அங்கு வந்திருப்பதை அவர்கள் கண்டபோது அவர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை.
காகா சாஹேபும், நானா சாஹேபும் ஒருவரையொருவர் கட்டித் தழுவிக்கொண்டனர். பிறகு புனித கோதாவாரியில் நீராடிய பின்னர் அவர்கள் ஷீர்டிக்குப் புறப்பட்டனர். அங்கு போய்ச்சேர்ந்து பாபாவின் தரிசனத்தைப் பெற்றவுடன் காகா சாஹேபின் மனது உருகியது. அவர் கண்கள் குளமாயின. அவர் மகிழ்ச்சிப் பெருக்கில் மூழ்கடிக்கப்பட்டார்.
பாபா அவரிடம் தாம்கூட அவருக்காகவே காத்துக்கொண்டிருப்பதாகவும், அவரை வரவேற்பதற்காகவே ஷாமாவை முன்னால் அனுப்பியதாகவும் கூறினார்.
பின்னர் காகா சாஹேப் பல சந்தோஷமான வருடங்களை பாபாவின் கூட்டுறவில் கழித்தார். ஷீர்டியில் அவர் ஒரு வாதா— சத்திரம் — கட்டினார். ஏறக்குறைய அதையே நிரந்தர வாசஸ்தலமாக ஆக்கிக்கொண்டார். பாபாவிடமிருந்து அவர் பெற்ற அனுபவங்கள் எண்ணற்றவையாதலால் அவைகளை எல்லாம் கூறுவதற்கு இங்கு இடமில்லை. இது குறித்து சாயிலீலா சஞ்சிகை — தொகுப்பு 12, எண் 6,7,8,9 — 'காகா சாஹேப் தீஷித்" சிறப்புமலரைப் பார்க்குமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
ஒரே ஒரு உண்மையைக் கூறி இந்த விஷயத்தை முடித்துக் கொள்கிறோம். பாபா அவரை "நான் உன்னை புஷ்பக விமானத்தில் எடுத்துச் செல்கிறேன்" என்று கூறியிருந்தார். — அதாவது மகிழ்வான மரணத்தை அவருக்குக் கொடுத்தல் — இது உண்மையாயிற்று. 1926ஆம் வருடம் ஜூலை மாதம் 5ஆம் தேதி அவர் ஹேமத்பந்துடன் ரயிலில் செல்லும்போது சாயிபாபாவைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். அவர் நினைவிலேயே ஆழ்ந்திருந்தார். திடீரெனத் தமது கழுத்தை ஹேமத்பந்தின் தோள்களில் சாய்த்து எவ்வித வலியோ, அசௌகரியமோ இன்றிக் காலமானார்.
ஸ்ரீ தேம்பே ஸ்வாமி
ஞானிகள் ஒருவருக்கொருவர் சகோதர பாசத்துடன் எங்ஙனம் நேசித்துக்கொள்கிறார்கள் என்பதை விளக்கும் அடுத்த கதைக்கு வருவோம். ஸ்ரீ வாசுதேவானந்த் சரஸ்வதி என்ற தேம்பே ஸ்வாமி என்பார் ஒருமுறை ஆந்திராவில் கோதாவரிக் கரையிலுள்ள ராஜமஹேந்திரியில் வந்து தங்கியிருந்தார். அவர் பக்தியும் வைதீகமும் உடைய ஞானியாகவும், யோகியாகவும் இறைவனாகிய தத்தாத்ரேயரின் பக்தருமாக விளங்கிவந்தார். நிஜாம் ராஜ்யத்தைச் சேர்ந்த நாந்தேட் நகரின் வக்கீலான ஸ்ரீ புண்டலிக்ராவ் என்பவர் சில நண்பர்களுடன் அவரைக் காணச் சென்றிருந்தார். அவர்கள் அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது ஷீர்டி, சாயிபாபா முதலிய பெயர்கள் தற்செயலாக அப்பேச்சின்போது கூறப்பட்டன.
பாபாவின் பெயரைக் கேட்டதும், ஸ்வாமி கைகளால் வணங்கி ஒரு தேங்காயை எடுத்து அதை புண்டலிக்ராவிடம் கொடுத்து, "என் வணக்கங்களுடன் சகோதரர் சாயியிடம் இதைச் சமர்ப்பித்து விடுங்கள். என்னை மறந்துவிடாமல் என்மேல் அன்புடனிருக்கச் சொல்லுங்கள்" என்றார். மேலும் "ஸ்வாமிகள் பொதுவாக யாரையும் வணங்குவதில்லை. ஆனால் இந்த விஷயத்தில் இந்த விதி விலக்குச் செய்யப்படவேண்டும்" என்றும் கூறினார். புண்டலிக்ராவ் தேங்காயையும், செய்தியையும் பாபாவிடம் எடுத்துச்செல்லச் சம்மதித்தார். பாபாவைச் சகோதரன் என்று இந்த ஸ்வாமி அழைப்பது சரியே. ஏனெனில் அவருடைய வைதீக சம்பிரதாயப்படி அக்னிஹோத்ரம் என்ற புனித நெருப்பை இரவும், பகலும் அவர் காத்துவந்ததைப் போலவே பாபாவும் அக்னிஹோத்ரத்தை அதாவது துனியை மசூதியில் எப்போதும் எரியவிட்டுக் கொண்டிருந்தார். ஒரு மாதத்திற்குப் பின்னர் புண்டலிக்ராவும் மற்றவர்களும் தேங்காயுடன் ஷீர்டிக்குப் புறப்பட்டு மன்மாடை வந்தடைந்தனர். தாகமாக இருந்ததால் ஓர் ஓடைக்குத் தண்ணீர் பருகச் சென்றனர். வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கக் கூடாதாகையால் கொஞ்சம் சிவடா என்ற காரம் கலந்த அவலை சிற்றுண்டியாக உட்கொண்டனர். அது அதிகக் காரமாக இருந்ததால் யாரோ ஒருவர் தேங்காயை உடைத்து தேங்காய்ப்பூவை அதனுடன் கலந்துவிடலாம் என்று கூறி அதேபோல் செய்தும் விட்டார். சிவடாவை அதிகச் சுவையுள்ளதாகவும், நாவுக்கு ருசியுள்ளதாகவும் செய்துகொண்டனர். துரதிர்ஷ்டவசமாக அந்தத் தேங்காய் புண்டலிக்ராவிடம் ஒப்படைக்கப்பட்ட தேங்காயாக இருந்தது.
அவர்கள் ஷீர்டியை நெருங்கியதும் புண்டலிக்ராவ், தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொருளாகிய தேங்காய் உடைக்கப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டுவிட்டது என்பதை வெகுவருத்ததுடன் அறிந்தார். பயந்து நடுங்கிக்கொண்டு ஷீர்டிக்கு வந்து சாயிபாபாவைப் பார்த்தார். பாபா முன்னமேயே தேம்பே ஸ்வாமி தேங்காய் அனுப்பியுள்ள கம்பியில்லாத் தந்தியின் செய்தியைப் பெற்றுவிட்டார்.
பாபா தாமாகவே தமது சகோதரன் கொடுத்தனுப்பியுள்ள பொருளை முதலில் கொடுக்கும்படி புண்டலிக்ராவிடம் கேட்டார். அவர் பாபாவின் பாதங்களைப் பிடித்துக்கொண்டு தமது குற்றத்தையும் கவனமின்மையையும் கூறி, மனம் வருந்தி பாபாவின் மன்னிப்பை வேண்டினார். மற்றொரு தேங்காயை அதற்குப் பதிலாகக் கொடுத்துவிடுவதாகக் கூறினார். ஆனால் அத்தேங்காய்க்கு இணையாக வேறொன்றை ஈடுசெய்ய முடியாதென்றும், சாதாரணக் காயைக் காட்டிலும் பல மடங்கு அது உயர்ந்ததென்றும் கூறி பாபா அதைப் பெறுவதற்கு மறுத்துவிட்டார். மேலும் பாபா கூறினார், "இனிமேல் இவ்விஷயத்தைப்பற்றி நீ கவலைகொள்ளத் தேவையில்லை. எனது விருப்பத்தின் காரணமாகவே தேங்காய் உன்னிடம் ஒப்படைக்கப்பட்டு முடிவில் உடைக்கப்பட்டும் விட்டது. செயல்களின் கர்த்தாவாக உன்னையே ஏன் நீ ஆக்கிக்கொள்கிறாய்?
நற்கருமங்களையோ அல்லது தீய செயல்களையோ செய்யும் கர்த்தாவாக உன்னை நீயே எண்ணிக்கொள்ளும் உணர்வை அனுமதிக்காதே. எல்லாவற்றிலும் முழுமையாக அஹங்காரமற்று இரு. அதனால் உனது ஆன்மிக முன்னேற்றம் துரிதமடையும்" என்றார். எத்தகைய அழகிய ஆன்மிக போதனையை இந்நிகழ்ச்சியின் மூலம் பாபா உணர்த்தியிருக்கிறார்!
பாலாராம் துரந்தர் (1878 - 1925)
பாலாராம் துரந்தர், பம்பாய் சாந்தாகுருசைச் சேர்ந்த பதாரே பிரபு இனத்தைச் சேர்ந்தவர். அவர் பம்பாய் ஹைகோர்ட்டின் வக்கீலாகவும், சிறிது காலம் பம்பாய் அரசாங்க சட்டப்பள்ளியின் தலைவராகவும் பணியாற்றினார். துரந்தர் குடும்பம் முழுவதுமே தெய்வபக்தியும், மத உணர்வும் கொண்டது. பாலாராம் தனது இனத்தாருக்குச் சேவை செய்தார். அதைப்பற்றி ஒரு கட்டுரையை எழுதி அதைப் பதிப்பித்தார்.
பின்னர் அவர் ஆன்மிக மத விஷயங்களுக்கு திரும்பினார். கீதையையும், அதற்கான வியாக்கியானமான ஞானேஸ்வரியையும், மற்ற தத்துவ நூல்களையும், நுண்ணியல் கோட்பாட்டு நூல்களையும் ஆழ்ந்து படித்தார். அவர் பண்டரீபுரத்து விட்டோபாவின் பக்தர். பாபாவுடன் 1912ல் தொடர்பு கொண்டார். அதற்கு ஆறு மாதங்களுக்குமுன் பாபுல்ஜி, வாமன்ராவ் என்ற அவரின் இரு சகோதரர்களும் ஷீர்டிக்கு வந்து பாபாவின் தரிசனத்தைப் பெற்றனர். வீடு திரும்பி அவர்களின் இனிய அனுபவங்களை பாலாராமுக்கும், குடும்பத்தினருக்கும் எடுத்துரைத்தனர். அதன் பின்னர் அவர்களெல்லோரும் சாயிபாபாவைத் தரிசிக்கத் தீர்மானித்தார்கள்.
அவர்கள் ஷீரடிக்கு வரும்முன்னரே பாபா வெளிப்படையாக "இன்று எனது தர்பாரைச் சேர்ந்த பெருபாலோர் வருகிறார்கள்" என உரைத்தார். துரந்தர் சகோதரர்கள் முன்கூட்டியே செய்தி ஏதும் அனுப்பவில்லையாதலால், மற்றவர்களிடமிருந்து பாபா கூறிய இக்குறிப்பைக் கேட்டு ஆச்சரியமடைந்தனர். மற்றவர்கள் எல்லோரும் பாபாவின் முன் வீழ்ந்து வணங்கி அவருடன் உரையாடிக் கொண்டிருந்தனர். பாபா அவர்களிடம் "நான் முன்னரே குறிப்பிட்ட எனது தர்பார் மக்கள் இவர்களே" எனக்கூறி, துரந்தர் சகோதரர்களிடம் "கடந்த அறுபது தலைமுறைகளாக நாம் ஒருவரோடொருவர் உறவுபூண்டு இருக்கிறோம்" என்றார். அச்சகோதரர்கள் எல்லோரும் எளிமையுடனும், பணிவுடனும் உற்றுப் பார்த்தவண்ணம் நின்றிருந்தனர். கண்ணீர், தொண்டை அடைத்தல், மயிர்க்கூச்செறிதல் முதலான எல்லா சத்துவ உணர்வுகளும் அவர்களை உருக்கின.
அவர்களெல்லோரும் மகிழ்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் தங்களது இருப்பிடத்துக்குச் சென்று உணவு உட்கொண்டு சிறிது களைப்பாறிவிட்டு மீண்டும் மசூதிக்கு வந்தனர். பாபாவுக்கு, பாலாராம் அமர்ந்து அவரது கால்களைப் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தார். சில்லிம் என்ற மட்குழாயில் புகை பிடித்துக்கொண்டிருந்த பாபா, அதை அவரிடம் நீட்டி புகை பிடிக்குமாறு அழைத்தார். புகைபிடித்து வழக்கமில்லை எனினும், பாலாராம் அக்குழாயை வாங்கிக்கொண்டு பெருஞ்சிரமத்துடன் புகைபிடித்துவிட்டு, பக்தியுடன் வணங்கி அதைத் திருப்பி அளித்தார். பாலாராமுக்கு இதுவே மிகமிகப் புனிதமான நேரம். ஆறு ஆண்டுகளாக அவர் ஆஸ்துமாவால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார். இப்புகை அவரை முழுவதுமாகக் குணப்படுத்தியதுடன் மீண்டும் அவ்வியாதிக்கு உட்படுத்தவேயில்லை. ஆறு ஆண்டுகளுக்குப் பின் ஒரு குறிப்பிட்ட தினத்தில் மீண்டும் அவருக்கு ஆஸ்துமாவின் தாக்குதல் நேரிட்டது. இது பாபா மஹாசமாதி அடைந்த அதே நேரமாகும்.
அவர்கள் சென்றிருந்த தினம் வியாழக்கிழமையாதலால் துரந்தர் நண்பர்கள் சாவடி ஊர்வலத்தை அன்று இரவு கண்டுகளிக்கும் நல்லதிர்ஷ்டம் பெற்றிருந்தனர். சாவடியில் ஆரத்தி நிகழ்ச்சியின்போது பாலாராம் பாபாவின் முகத்தில் பாண்டுரங்கரின் ஜோதியைக் கண்டார். மறுநாள் காலை காகட் ஆரத்தியின்போதும் அதே அபூர்வ நிகழ்ச்சியை, அதாவது அவரின் அன்புக்குரிய தெய்வமான பாண்டுரங்கரின் ஜோதி பாபாவின் முகத்தில் ஒளிர்ந்ததைக் கண்டார்.
பாலாராம் துரந்தர் மராத்தியில் மகாராஷ்ட்ர ஞானி துகாராமின் வாழ்க்கைச் சரிதத்தை எழுதினார். ஆனால், அதன் பதிப்பைக் காண அவர் உயிருடனிருக்கவில்லை. பின்னர் 1928இல் அவரது சகோதரர்களால் பிரசுரிக்கப்பட்டது. பாலாராமின் வாழ்க்கையைப்பற்றிக் கொடுக்கப்பட்டுள்ள ஒரு சிறுகுறிப்பு அந்நூலின் ஆரம்பத்தில் உள்ளது. பாலாராமைப் பற்றிய மேற்கூறிய தகவல் அதில் முழுவதுமாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
அந்தப் புத்தகத்தின் 6ம் பக்கத்தில் காண்க
ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
• குருவின் கை தீண்டலினால் ஏற்படும் பயன்
• ஸ்ரீ ராமநவமித் திருவிழா
• அதன் ஆரம்பம், மாறுதல்கள் முதலியன
• மசூதி பழுது பார்த்தல்
ராமநவமித் திருவிழாவையும், மசூதி பழுத்பார்த்தலையும் பற்றி விவரிப்பதற்கு முன்னால் சத்குருவைப் பற்றி முன்னோடிக் குறிப்புக்கள் சிலவற்றை ஆசிரியர் கீழ்கண்டவாறு கூறுகிறார்.
குருவின் கை தீண்டலினால் ஏற்படும் விளைவு — பயன்
எங்கே உண்மை அல்லது 'சத்குரு' வழிகாட்டியாக இருக்கிறாரோ, அங்கே இவ்வுலகப் பெருங்கடலுக்கு அப்பால் நம்மைப் பத்திரமாகவும், எளிதாகவும் அவர் நிச்சயம் அழைத்துச் செல்வார். சத்குரு என்னும் சொல்லானது நமது மனத்திற்கு சாயிபாவைக் கொணர்கிறது. எனக்கு முன்னால் அவர் நின்றுகொண்டிருப்பது போன்றும், உதி என்னும் திருநீற்றை எனது நெற்றியில் இடுவதைப் போன்றும், அவரது ஆசிகள் நல்கும் கரத்தை என் தலைமீது வைப்பதைப் போன்றும் தோன்றுகிறது. எனது இதயம் மகிழ்ச்சியால் நிரம்புகிறது. அன்பு எனது கண்களில் இருந்து பொங்கி வழிகிறது.
குருவின் கரம் தீண்டலின் சக்தியானது வியக்கத்தக்கதாகும். உலகை அழிக்கும் நெருப்பால் அழிக்கப்படாத — எண்ணங்களும், ஆசைகளும் உடைய — இந்த நுட்பமான உடம்பு, குரு சாதாரணமாக கரம் தீண்டுவதாலேயே அழிக்கப்படுகிறது. முந்தைய பல பிறவிகளில் உண்டான பல பாவங்களும் சுத்தமாக அடித்துச் செல்லப்படுகின்றன. மதங்கள், கடவுளைப் பற்றிய பேச்சுக்களைக் கேட்டவுடனேயே சஞ்சலப்படுபவர்களின் பேச்சுக்கூட அமைதியடைகிறது. சாயிபாபாவின் சுந்தரரூபத்தைப் பார்த்தாலே மகிழ்ச்சியால் நமது தொண்டை அடைக்கிறது. கண்ணீர் வெள்ளம் பெருக்கெடுக்கிறது. உணர்ச்சிகள் உள்ளத்தை வெல்கின்றன. நானே பிரம்மம் என்னும் உணர்வை அது எழுப்பிவிடுகிறது. தன்னையறிதலின் ஆனந்தத்தை ஸ்தாபிக்கிறது. நான், நீ என்னும் வேறுபாட்டைக் கரைத்து அவ்வப்போதே நம்மை உச்சத்துடன் — ஒரே உண்மையுடன் — ஒன்றாக்குகிறது.
புனித நூல்களை யான் பயிலத் தொடங்குந்தோறும் ஒவ்வோர் அடியிலும் எனது சத்குருவால் ஞாபகமூட்டப்படுகிறேன். சாயிபாபாவே ராமனும், கிருஷ்ணனுமாகி என்னை அவரின் கதைகளைக் கேட்கச் செய்கிறார். உதாரணமாக நான் பாகவதம் கேட்கத் தொடங்கும் முன்பாக, தலையிலிருந்து கால்வரை சாயிபாபா கிருஷ்ணராகிவிடுவார். அவரே பாகவதத்தையோ, உத்தவ கீதையையோ — கிருஷ்ணபரமாத்மா தன் சீடர் உத்வருக்கு அளித்த உபதேசங்கள் — மக்களின் நன்மைக்காகப் பாடுகிறார் என்றும் நினைக்கிறேன்.
நான் உரையாடத் துவங்கும்போது, உடனே சாயிபாபாவின் கதைகள், உரிய விளக்கங்கள் தருவதற்கு ஏதுவாக என் நினைவிற்கு வருகின்றன. எதையாவது நான் எழுதத் தொடங்கும்போது சில வார்த்தைகளையோ, சில வாக்கியங்களையோ என்னால் எழுதமுடியாது. ஆனால் அவராகவே என்னை எழுதச்செய்யும்போது நான் எழுதுகிறேன், எழுதிக்கொண்டே இருக்கிறேன். சீடனின் அஹங்காரம் தலையெடுக்கும்போது, அவர் தமது கரங்களால் அதைக் கீழே அழுத்தி, தமது சக்தியைக் கொடுத்து, அவனது குறிக்கோளை எய்தும்படி செய்கிறார். இவ்வாறாகத் திருப்திப்படுத்தி ஆசீர்வதிக்கிறார். "சாயியின் முன்னால் எவன் சாஷ்டாங்க சரணம் செய்து, தனது இதயத்தையும் உயிரையும் அவரிடம் சமர்ப்பிகிறானோ, அவன் வாழ்க்கையின் நான்கு முக்கிய குறிக்கோளாகிய அறம்— தருமம் , பொருள்— செல்வம் , இன்பம்— ஆசை , வீடு— முக்தி — இவைகளை எளிதில் அடைகிறான்".
கர்மம், ஞானம், யோகம், பக்தி என்ற நான்கு வழிகள் நம்மைத் தனித்தனியே கடவுளிடம் இட்டுச்செல்கின்றன. இவைகளில் பக்திவழி முட்கள், பள்ளங்கள், படுகுழிகள் நிறைந்ததாயும், எனவே கடப்பதற்கு மிகவும் கடினமாயும் இருக்கிறது. ஆனால் நீங்கள் சாயியையே சார்ந்து, குழிகளையும், முட்களையும் விலக்கி நேராக நடப்பீர்களானால், அது உங்கள் குறிக்கோளிடத்தில் — கடவுளிடத்தில் — அழைத்துச்செல்கிறது. இவ்வாறாக சாயிபாபா நிச்சயம் கூறுகிறார். அந்தர்யாமியாய் இருக்கிற பிரம்மத்தைப் பற்றியும், இவ்வுலகைப் படைத்த அவரின் சக்தியைப் பற்றியும் — மாயை — அவ்வாறு உண்டாக்கப்பட்ட உலகத்தைப் பற்றியும் தத்துவம் பேசி, இவை மூன்றும் முடிவில் ஒன்றே என்றும் எடுத்துரைத்த பின்னர் பக்தர்களின் நலனுக்காக உத்திரவாதம் அளிக்கும் கீழ்கண்ட சாயிபாபாவின் மொழிகளை ஆசிரியர் கூறுகிறார்.
"உணவு, உடை இவற்றைப் பொறுத்தமட்டில் வறுமையோ, இல்லாமையோ எனது அடியவர்களின் வீட்டில் இருக்காது. தங்கள் மனதை எப்போதும் என்மீது ஸ்திரப்படுத்தியவர்களாய் என்னையே முழுஇதயத்துடன் வழிபாடுசெயும் அடியவர்களின் நலன்களை எப்போதும் கவனிப்பதே, எனது சிறப்பியல்பு. கீதையிலும் கிருஷ்ண பரமாத்மா இதையேதான் கூறியிருக்கிறார். எனவே உணவுக்காகவும், உடைக்காகவும் கடின முயற்சி எடுக்காதீர்கள். உங்களுக்கு ஏதாவது வேண்டுமானால், கடவுளிடம் இரந்து கேளுங்கள். இவ்வுலக கௌரவத்தை விட்டுவிடுங்கள். கடவுளின் அருளையும், ஆசியையும் பெறமுயலுங்கள். அவரின் சந்நிதானத்தில் கௌரவம் அடையுங்கள். உலக கௌரவங்களால் வழி தவறிவிடாதீர்கள். இறைவனின் ரூபம் மனதில் ஸ்திரமாகப் பதிக்கப்படவேண்டும். புலன் அனைத்தும், மனமும் எப்போதும் இறைவனது வழிபாட்டிற்கே உரித்தாக்கப்படும். வேறு எவ்விதப் பொருட்களிலும் எவ்விதக் கவர்ச்சியும் வேண்டாம். உடல், செல்வம், வீடு முதலிய வேறு எதைப்பற்றியும் மனது அலைந்து திரியாமல் எப்போதும் என்னை நினைத்துக்கொண்டிருப்பதிலேயே மனதை ஸ்திரப்படுத்துங்கள். அப்போது அது அமைதியாகவும், அடக்கமாகவும், கவலையற்றும் இருக்கும். நல்ல பழக்கங்களில் மனம் ஈடுபட்டிருப்பதற்கு இதுவே அடையாளம். மனம் அலையும் தன்மை உடையதாய் இருந்தால் அது நன்றாக ஒன்றிவிட்டது என்று கூறமுடியாது."
இம்மொழிகளைக் குறிப்பிட்ட பிறகு, ஷீர்டியில் நடக்கும் ராமநவமித் திருவிழாவின் கதையை ஆசிரியர் குறிப்பிடுகிறார். ஷீர்டியில் கொண்டாடப்பட்ட திருவிழாக்களில் ராமநவமியே மிகப் பெரியதாகையால், சாயிலீலா சஞ்சிகையில் — வருடம் 1925, பக்கம் 197 — பதிப்பான மற்றொரு முழுவிபரமும் இதில் குறிக்கப்பட்டு இரண்டு நிகழ்ச்சிகளின் கூட்டுவிபரமும் இங்கே கொடுக்கப்படுகிறது.
தோற்றம்
கோபர்காவனின் நில அளவுத்துறையில் சர்வேயராக இருந்தவர் கோபால்ராவ் குண்ட் ஆவார். அவர் பாபாவின் பெரும் அடியவர். அவருக்கு மூன்று மனைவிகள் இருந்தும் ஒரு குழந்தையும் இல்லை. சாயிபாபாவின் அருளால் அவருக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அந்த மகிழ்ச்சியினால் 1897ல் அவருக்கு ஒரு திருவிழா அல்லது உருஸ்— முஸ்லிம் ஞானியரின் நினைவுதினம் — கொண்டாடும் எண்ணம் உதிர்ந்தது. தாத்யா பாடீல், தாதா கோதே பாடீல், மாதவ்ராவ் தேஷ்பாண்டே போன்ற மற்ற ஷீர்டி அடியவர்களிடம், கோபால்ராவ் தனது எண்ணத்தை வெளியிட்டார். அவர்கள் எல்லோரும் இந்த யோசனைக்கு உடன்பட்டு, சாயிபாபாவின் அனுமதியையும், ஆசியையும் பெற்றனர். இவ்விழாவைக் கொண்ட்டாடுவாதற்கு கலெக்டரின் அனுமதி பெறுவதற்கு விண்ணப்பம் செய்யப்பட்டது. ஆனால் கிராம குல்கர்ணி — அதிகாரி — திருவிழா நடத்துவதற்கு எதிரிடையாகத் தகவல் கொடுத்ததால் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் சாயிபாபா அதை ஆசீர்வதித்திருப்பதால், அவர்கள் மறுபடியும் முயன்று, முடிவாக வெற்றிபெற்றனர்.
சாயிபாபாவிடம் கலந்தாலோசித்த பிறகு உருஸ் தினம் ராமநவமியன்று இருக்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. பாபா தமது நோக்கத்தில் ஏதோ ஒரு முடிவு வைத்திருந்ததாகத் தோன்றுகிறது. அதாவது ராமநவமி, உருஸ் என்ற இரண்டு பண்டிகைகளை இணைப்பதென்பது இரண்டு இந்து, முஸ்லிம் ஆகிய இரு சமூகத்தினரையும் ஒற்றுமைப்படுத்துவதற்காக ஆகும். இக்குறிக்கோளை அடைந்ததைப் பிற்கால நிகழ்சிகள் காட்டுகின்றன.
திருவிழாவுக்கு அனுமதி கிடைத்தது. ஆனால் மற்ற கஷ்டங்கள் முளைத்தன. ஷீர்டி ஒரு கிராமம். அங்கு தண்ணீர்ப் பஞ்சம் இருந்தது. ஷீர்டியில் இரண்டு கிணறுகள் இருந்தன. உபயோகப்படுத்திய ஒரு கிணற்றில் நீர் வற்றிவிட்டது. மற்றொன்று உப்புத் தண்ணீர். இந்த உப்புத் தண்ணீரானது சாயிபாபா மலர்களை வீசியதன்மூலம் இனிமை பொருந்தியதாக மாற்றப்பட்டது. இக்கிணற்றுத் தண்ணீர் போதாமையால் நெடுந்தூரத்திலிருந்து தோல் சாக்குகளில் கிணற்றிலிருந்து நீர் கொண்டுவருவதற்குத் தாத்யா பாடீல் ஏற்பாடு செய்ய வேண்டியதாயிற்று. தற்காலிகக் கடைகள் கட்டப்பட்டு மல்யுத்தச் சண்டைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
கோபால்ராவ் குண்டிற்கு அஹமத்நகரைச் சேர்ந்த தாமு அண்ணா காஸார் என்ற ஒரு நண்பர் இருந்தார். அவர் இரண்டு மனைவிகளைத் திருமணம் செய்தும், பிள்ளையில்லாக் குறையில் அம்மாதிரியே மகிழ்ச்சியற்றவராய் இருந்தார். அவரும் சாயிபாபாவினால் ஆசீர்வதிக்கப்பட்டு புதல்வர்களை அடைந்தார். திருவிழாவின் ஊர்வலத்திற்காக ஒரு சாதாரணக் கொடி தயாரித்துக் கொடுக்கும்படி இவரை குண்ட் தூண்டினார். நானா சாஹேப் நிமோண்கரை மற்றொரு எம்ப்ராய்டரி வேலை — சரிகைவேலை — செய்யப்பட்ட கொடி தயாரித்துக் கொடுக்கும்படி தூண்டி, அதில் வெற்றியும் பெற்றார். கிராமத்தில் திருவிழாவில் இரண்டு கொடிகளும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு த்வாரகாமாயி என்று சாயிபாபாவினால் அழைக்கப்பட்ட மசூதியின் இரண்டு மூலைகளிலும் ஊன்றப்பட்டன. இது இன்றளவும் நடைபெற்று வருகிறது.
சந்தனக்கூடு ஊர்வலம்
இத்திருவிழாவில் மற்றொரு ஊவலமும் தொடக்கப்பட்டது. கொரலாவின் முஹமதிய பக்தரான அமீர் ஷக்கர் தலால் அவர்களால் இச்சந்தன ஊர்வலத்தின் எண்ணம் உருவானது. பெரும் முஹமதிய ஞானியரைக் கௌரவிக்கும் முகமாக இவ்வூர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் சந்தனக் குழம்பும், சந்தனப் பொடியும் 'தாலி' என்னும் தட்டுக்களில் இடப்பட்டு, பேண்டு — சங்கீத இசைக் கூட்டம் — வாத்தியம் மற்றும் இசை முழங்கிவர நறுமணப் பொருட்கள் முன்னால் புகைந்துகொண்டு செல்ல கிராமத்தின் வழியாக எடுத்துச் செல்லப்பட்டது. மசூதிக்குத் திரும்பியபின்னர் தட்டுக்களில் உள்ளவை நிம்பார் என்னும் தொழுகைமாடத்தில் தெளிக்கப்பட்டு மசூதியின் சுவரில் கைகளால் பூசப்பெற்றது. முதல் மூன்று ஆண்டுகளில் அமீர் ஷக்கர் அவர்களால் இவ்வேலை மேற்பார்வையிடப்பட்டது. பின்னர் அவரது மனைவியால் பார்க்கப்பட்டது. எனவே ஒரே நாளில் முஹமதியரால் சந்தனக்கூடும், இந்துக்களால் கொடிகளும் அருகருகில் சென்றன. இப்போதும் எவ்வித இடையூறுமின்றி அங்ஙனமே நடந்துகொண்டிருக்கிறது.
ஏற்பாடு
சாயிபாபாவின் அடியவர்களுக்கு இந்தநாள் புனிதமானதும் மிகவும் பிரியமானதுமாகும். பெரும்பாலான அடியவர்கள் கூடி விழாவை நிர்வகிப்பதில் பங்கு வகித்தனர். எல்லா வெளி ஏற்பாடுகளையும் தாத்யா கோதே பாடீல் பார்த்துக்கொண்டார். உள்நிர்வாகம் முழுவதும் சாயிபாபாவின் பக்தையான ராதாகிருஷ்ணமாயிடமே ஒப்புவிக்கப்பட்டது. அவ்விழாவின்போது அவளது இருப்பிடம் விருந்தாளிகளால் நிறைந்து இருந்தது. அவர்களது தேவைகளையும், விழாவிற்குத் தேவையான ஏற்பாட்டையும் அவள் கவனித்தாக வேண்டும். மசூதி முழுவதும் அதன் சுவர், தரை முதலியவைகளைக் கழுவி சுத்தம்செய்து, சாயிபாபாவின் அணையா விளக்கான துனியினால் கரிபிடித்து கறுத்துப் போயிருக்கும் மசூதிச் சுவர்களை எல்லாம் வெள்ளையடிப்பதும் அவள் விருப்பமுடன் செய்த மற்றொரு வேலை ஆகும். இவ்வேலையை ஒருநாள் விட்டு ஒருநாள் சாயிபாபா சாவடிக்குத் தூங்கப்போயிருக்கும் முந்தைய இரவில் செய்வாள். துனி — அணையா நெருப்பு — உட்பட எல்லாப் பொருட்களையும் எடுத்துக் கசடறக் கழுவி மசூதிச் சுவரை வெள்ளையடித்த பின்னர் முன்போல் திருப்பி வைத்துவிடவேண்டும். இத்திருவிழாவில் சாயிபாபாவிற்கு மிகவும் பிடித்த அம்சமான ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குதலும் ஒரு பெரும் நிகழ்ச்சியாகும். ராதாகிருஷ்ணமாயின் இருப்பிடத்தில் பெருமளவில் சமையலும், பல்வேறு வகையான உணவுப் பொருட்களும், இனிப்புப் பதார்த்தங்களும் தயாரிக்கப்பட்டன. பல்வேறு செல்வந்தர்களான பக்தர்கள் இந்நிகழ்சிகளில் பெரும் பங்கு வகித்தனர்.
'உருஸ்'ஐ ராமநவமித் திருவிழாவாக மாற்றுதல்
இவ்வாறாக விஷயங்கள் எல்லாம் நடந்துகொண்டு இருந்தன. 1912ஆம் ஆண்டுவரை இவ்விழா படிப்படியாக முக்கியத்துவம் அடைந்துவந்து பிறகு ஒரு மாறுதல் நிகழ்ந்தது. அந்த ஆண்டு கிருஷ்ணராவ் ஜாகேஷ்வர் பீஷ்மர் — சாயி சகுணோபாசனா என்ற சிறு புத்தகத்தின் ஆசிரியர் , அமராவதியைச் சேர்ந்த தாதா சாஹேப் கபர்டேயுடன் திருவிழாவிற்கு வந்து முந்தைய தினம் தீஷித் வாதாவில் தங்கியிருந்தார். அவர் தாழ்வாரத்தில் படுத்துக்கொண்டிருந்தபோது லக்ஷ்மண்ராவ் என்ற காகா மஹாஜனி, மசூதிக்குப் பூஜை சாமான்களுடன் போய்க்கொண்டு இருந்தார். அப்போது பீஷ்மாவுக்கு ஒரு புது எண்ணம் தோன்றியது. அவர் காகாவை நோக்கிப் பின்வருமாறு கூறினார்.
"ஷீர்டியில் 'உருஸ்' அல்லது 'சந்தனத் திருவிழா', ராமநவமியன்று கொண்டாடப்படும் உண்மைக்கு ஏதோ ஒரு தெய்வ ஏற்பாடு இருக்கிறது. இந்துக்களுக்கு ராமநவமி தினம் மிகவும் முக்கியமானது. பின்னர் ஏன் இந்த நாளில் ராமநவமிக் கொண்டாட்டத்தை ஆரம்பிக்கக்கூடாது?" காகா மஹாஜனி இக்கருத்தை விரும்பினார். பாபாவின் அனுமதியை இவ்விஷயத்தில் பெறுவது என முடிவுசெய்யப்பட்டது. அத்திருவிழாவில் கீர்த்தனை செய்யும் — கடவுளின் புகழைப் பாடும் — ஹரிதாஸை— பாடகர் — எங்கனம் அடைவது என்பது முக்கியமான விஷயமாகும். ராமர் பிறந்ததைப் பற்றி தன்னுடைய பாடல்களான 'ராம அக்யன்' தயாராய் இருப்பதாகவும், தானே இக்கீர்த்தனைகளைப் பாடுவதாகவும் கூறி, பீஷ்மா இப்பிரச்சனைக்குத் தீர்வு கண்டார். காகா மஹாஜனி, அப்போது ஹார்மோனியம் வாசிக்கவேண்டும். ராதாகிருஷ்ணமாயியால் தயாரிக்கப்பட்ட சுண்ட்வடா— சர்க்கரை கலந்த இஞ்சிப்பொடி — பிரசாதமாகப் பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பின்பு அவர்கள் பாபாவின் அனுமதியைப் பெறுவதற்குச் சென்றனர். அங்கு நடந்துகொண்டிருந்த எல்லாவற்றையும் அறிந்திருந்த பாபா, "வாதாவில் என்ன நடந்துகொண்டிருந்தது" என்று மஹாஜனியிடம் வினவினார். குழப்பமடைந்த மஹாஜனி கேள்வியின் அர்த்தத்தை அறியமுடியாமல் அமைதியாக இருந்தார். பின்னர் பாபா, பீஷ்மாவை அவர் என்ன சொல்கிறார் என்று கேட்டார்.
ராமநவமித் திருவிழா கொண்டாடுவதன் கருத்தை அவர் தெரிவித்துப் பாபாவின் அனுமதியைக் கோரினார். பாபாவும் உடனே அனுமதி கொடுத்தார். எல்லோரும் மகிழ்ச்சியுற்று ஜெயந்தி விழாவிற்கு ஏற்பாடுகள் செய்யத்தொடங்கினர். மறுநாள், மசூதி துணி ஜோடனையால் அலங்கரிக்கப்பட்டது. ராதாகிருஷ்ணமாயியால் ஒரு தொட்டில் கொடுக்கப்பட்டது. பாபாவின் ஆசனத்தின் முன்னர் அது வைக்கப்பட்டு நிகழ்சிகள் ஆரம்பமாயின. பீஷ்மா கீர்த்தனைக்காக முன்னால் எழுந்து நின்றார். மஹாஜனி ஹார்மோனியம் வாசித்தார். மகாஜனியைக் கூப்பிடும்படி சாயிபாபா ஒரு ஆளை அனுப்பினார்.
பாபா நிகழ்சிகளைத் தொடர்ந்து நடத்துவதற்கு அனுமதிப்பாரா என ஐயம் கொண்டு மஹாஜனி போகத் தயங்கிக்கொண்டிருந்தார். ஆனால் அவர் போனபின்பு பாபா அவரை என்ன நடந்துகொண்டிருக்கிறது என்றும், தொட்டில் ஏன் அங்கு வைக்கப்பட்டிருக்கிறது என்றும் கேட்டார். அவர் — மஹாஜனி — ராமநவமித் திருவிழா தொடக்கப்படிருக்கிறது என்றும், தொட்டில் அதற்காக வைக்கப்படிருக்கிறது என்றும் கூறினார். அப்போது பாபா நிம்பாரிலிருந்து ஒரு மாலையை எடுத்து அவர் கழுத்திலிட்டு, பீஷ்மாவுக்கு மற்றொரு மாலையை அனுப்பினார். கீர்த்தனை துவங்கியது. அது முடிவடைந்ததும் 'ஸ்ரீ ராமருக்கு ஜெயம்' என்ற கோஷம் வானைப் பிளந்தது. குலால் என்ற சிகப்புப் பொடி வாத்திய கோஷத்திடையே சுற்றிலும் தூவப்பட்டது.
எல்லோரும் பெருமகிழ்ச்சியுற்றிருக்கையில் ஒரு கர்ஜனை கேட்டது. கண்டபடி தூவப்பட்ட சிகப்புப் பொடியானது பாபாவின் கண்களுக்குள் சென்றுவிட்டது. பாபா கோபாவேசம் அடைந்து, பெருங்குரலில் திட்டவும், கடிந்துகொள்ளவும் ஆரம்பித்தார். இக்காட்சியால் மக்கள் பீதியடைந்து ஓட ஆரம்பித்தார்கள். பாபாவை நன்கு அறிந்த அவருடைய நெருங்கிய பக்தர்கள் பாபாவின் கடிந்துரைகளையும், திட்டல்களையும் வேஷமிடப்பட்ட ஆசீர்வாதங்கள் என்று எடுத்துக்கொண்டனர்.
ராமர் அவதரித்ததும், இராவணனையும் - அஹங்காரம், கெட்ட எண்ணங்கள் முதலிய அவனுடைய அரக்கர்களையும் கொல்வதற்காக, பாபா கடுமையான கோபாவேஷம் அடைந்ததும் முறையே என அவர்கள் நினைத்தனர். மேலும் ஷீர்டியில் ஏதாவது ஒரு புதிய வேலை ஆரம்பிக்கப்படுமானால், பாபா கடுமையாக கோபம்கொள்வது வழக்கம். எனவே அவர்கள் அமைதியாய் இருந்தார்கள். பாபா, தமது தொட்டிலை உடைத்து விடுவார் என்று ராதாகிருஷ்ணமாயி பயந்துபோய் மகாஜனிஜிடம் தொட்டிலை எடுத்து வந்துவிடும்படி கூறினாள். அவர் சென்று தொட்டிலைத் தளர்த்தி கழற்றப்போன சமயம், பாபா அவரிடம் சென்று தொட்டிலை அகற்றவேண்டாம் என்று கூறிவிட்டார். பின்னர் சற்று நேரத்தில் பாபா சாந்தமடைந்தார். பின்பு மகாபூஜை, ஆரத்தி உள்ளிட்ட அந்நாளைய நிகழ்சிகள் எல்லாம் நிறைவேறின. பிறகு மகாஜனி, பாபாவிடம் தொட்டிலை அப்புறப்படுத்த அனுமதி கேட்டார். இன்னும் விழா முடியவில்லை எனக்கூறி பாபா மறுத்துவிட்டார். அடுத்த நாள் கீர்த்தனையும், கோபால்காலா விழாவும் நடைபெற்றன. — கீர்த்தனைக்குப் பிறகு தயிரும், பொறி அரிசியும் கலந்த ஓர் மண்பானை உடைப்பதற்காகத் தொங்கவிடப்பட்டிருக்கும், கிருஷ்ண பரமாத்மா தன் நண்பர்களான கோபாலர்களுக்குச் செய்ததையொப்ப, அதனுள் இருப்பவை எல்லோருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும் — அதன் பின்னரே பாபா, தொட்டிலை அப்புறப்படுத்த அனுமதித்தார்.
இவ்வாறாக ராமநவமித் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கையில், பகலில் இரண்டு கொடி ஊர்வலமும், இரவில் சந்தனக்கூடு ஊர்வலமும் வழக்கமான கோலாகலத்துடனும், அனைவரின் ஆராவாரத்துடனும் நல்லமுறையில் நடைபெற்றன. இத்தருணத்திலிருந்து பாபாவின் உருஸ் விழாவானது, ராமநவமித் திருவிழாவாக மாற்றப்பட்டது.
அடுத்த ஆண்டிலிருந்து (1913) ராமநவமியின் நிகழ்ச்சிகள் அதிகரிக்க ஆரம்பித்தன. ராதாகிருஷ்ணமாயி சித்திரை முதல் தேதியிலிருந்து நாம சப்தாஹம் செய்ய ஆரம்பித்தாள். எல்லோரும் முறை வைத்துப் பங்கெடுத்துக்கொண்டனர். அவளும் சிலநாட்கள் அதிகாலையில் கலந்துகொண்டாள். நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் ராமநவமி கொண்டாடப்படுவதால் ஹரிதாஸை— பாடகர் — பெரும் கஷ்டமானது மீண்டும் உணரப்பட்டது. ஆனால் விழாவிற்கு ஐந்து அல்லது ஆறு நாட்களுக்குமுன் நவீன துகாராம் என்றறியப்பட்ட பாலபுவாமாலியைத் தற்செயலாக மகாஜனி சந்தித்தார். அவரை அவ்வாண்டு கீர்த்தனை புரியச்செய்தார். அடுத்த ஆண்டு (1914) சாதாரா ஜில்லா, பிர்ஹாட்ஸித்த கவடே நகரைச் சேர்ந்த பாலபுபா சாதார்கர் என்பவர் தமது நகரில் பிளேக் — ஒரு கொடிய பக்டீரியா தொற்றுநோய் — பரவியிருந்த காரணத்தால் அங்கு ஹரிதாஸாக இயங்கமுடியவில்லை. எனவே, ஷீர்டிக்கு வந்து, காகா சாஹேப் மூலம் பெற்ற அனுமதியுடன் கீர்த்தனை செய்தார். அவரது முயற்சிக்குப் போதுமான அளவு சன்மானம் கொடுக்கப்பட்டது. முடிவாக ஒவ்வோர் ஆண்டும் புதிய "ஹரிதாஸ்" ஒருவர் கிடைக்கப்பெறும் சிரமத்தை 1914ன் பின் தாஸ்கணு மஹராஜை இப்பணியில் சாயிபாபா நிரந்தரமாக நியமித்ததன் மூலம் தீர்த்தார். அந்நாளிலிருந்து தற்போது வரைக்கும் அவ்வேளையைத் தாஸ்கணு வெற்றிகரமாயும், சிறப்பானமுறையிலும் நிறைவேற்றி வருகிறார்.
1912ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் திருவிழா படிப்படியாக வளரத் தொடங்கியது. சித்திரை 8ஆம் திகதியிலிருந்து 12ஆம் திகதிவரை ஷீர்டி, தேன் கூட்டைப்போல் மக்கள் திரளாகக் காட்ச்சியளித்தது. கடைகள் அதிகரிக்கத் தொடங்கின. மல்யுத்தப் போட்டிகளில் புகழ்பெற்ற மல்யுத்த வீரர்கள் பங்கு எடுத்துக்கொண்டனர். முன்னைவிடப் பெரியஅளவில் ஏழைகளுக்கு உணவு அளிக்கப்பட்டது.
ராதாகிருஷ்ணமாயியின் பேருழைப்பு, ஷீர்டியை ஒரு சமஸ்தானமாக்கியது. அதற்குத் தேவையான பொருட்கள் சேர்க்கப்பட்டன. ஓர் அழகான குதிரை, பல்லக்கு, ரதம், வெள்ளிப் பொருட்கள், பாத்திரங்கள், பானைகள், வாளிகள், படங்கள், முகம் பார்க்கும் கண்ணாடிகள் முதலியவை அன்பளிப்பாக சமர்ப்பிக்கப்பட்டன. இங்ஙனம் தமக்காக உள்ள பொருட்கள் எல்லாம் ஏராளமாக அதிகரித்த போதிலும் சாயிபாபா அவைகளை எல்லாம் மதிக்காது, தமது எளிமையை முன்போலவே பாதுகாத்து வந்தார். இரண்டு ஊர்வலங்களிலும் இந்துக்களும், முஹமதியர்களும் ஒன்றாக வேலை செய்துவந்தும் அவர்களிடையே இதுவரை எவ்விதச் சச்சரவோ, இடையூறோ இருந்ததேயில்லை. ஆரம்பத்தில் ஐயாயிரம் முதல் ஏழாயிரம் மக்கள்வரை கூடுவது வழக்கமாக இருந்தது. அனால் அவ்வெண்ணிக்கை சில ஆண்டுகளில் எழுபத்தைந்தாயிரமாக அதிகரித்தது. எனினும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க விதத்தில் எவ்விதத் தொற்றுவியாதியோ, கலகமோ கடந்த பல ஆண்டுகளாக ஏற்பட்டதேயில்லை.
மசூதி பழுபார்த்தல்
கோபால் ராவ் குண்டிற்கு மற்றொரு முக்கிய எண்ணமும் உதித்தது. உருஸ் அல்லது சந்தனக்கூடு விழாவை அவர் தொடக்கியதைப் போன்றே, மசூதியைத் தாம் ஒழுங்குபடுத்த வேண்டும் என எண்ணினார். எனவே பழுபார்க்கக் கற்களைச் சேகரித்து அதன் பக்கங்களைச் சமப்படுத்தவும் செய்தார். ஆனால் இப்பணி அவருக்கு அளிக்கப்பட்டதல்ல. இது நானா சாஹேப் சாந்தோர்கருக்கும், தாழ்வாரத்தின் வேலை காகா சாஹேப் தீஷித்திற்கும் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் முதலில் பாபா, இவ்வேலைகளைச் செய்ய அவர்களுக்கு அனுமதியளிக்க மனமில்லாதவராய் இருந்தார். ஆனால் மஹல்ஸாபதி என்ற உள்ளூர் அடியவரின் குறுக்கீட்டினால் அவர்களுக்கு அனுமதி கிடைத்து.
மசூதியில் ஒரே இரவில் தாழ்வாரப்பணி முடிவடைந்ததும், பாபா தமது வழக்கமான ஆசனமான சாக்குத் துண்டை விட்டொழித்து தாம் அமர்வதற்கென ஒரு சிறு ஆசனம் அமைத்துக்கொண்டார். 1911ல் சபாமண்டபம் பெரும் உழைப்புடனும், கடின முயற்சியுடனும் ஒழுங்குபடுத்தப்பட்டது. மசூதிக்கு முன்னாள் இருந்த திறந்த வெளியானது சிறியதாகவும், அசௌகரியமுள்ளதாகவும் இருந்தது. காகா சாஹேப் தீஷித் அதை விசாலப்படுத்தி அதற்கு மேற்கூரை போடவிரும்பினார். பெருஞ்செலவில் இரும்புத் தூண்கள், கம்பங்கள், துணிகள் முதலியவற்றை வரவழைத்து வேலையை ஆரம்பித்தார். இரவில் எல்லா அடியவர்களும் கடினமாக உழைத்து, கம்பங்களை ஊன்றினார்கள். ஆனால் மறுநாள் காலை சாயிபாபா சாவடியிலிருந்து திரும்பிவந்தபோது எல்லாவற்றையும் வேருடன் பிடுங்கி வெளியே எறிந்தார். ஒருமுறை இவ்வாறு நிகழ்ந்தது. அவர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு ஒரு கம்பத்தை ஒரு கையில் பிடித்துக்கொண்டு அதை அசைத்து வெளியே எடுக்க ஆரம்பித்து, மற்றொரு கையால் தாத்யா பாடீலின் கழுத்தைப் பற்றினார். தாத்யாவின் முண்டாசை வலிந்து பற்றியிழுத்து ஒரு நெருப்புக் குச்சியைக் கொழுத்தி அதைப் பற்றவைத்துக் குழியில் தூக்கி எறிந்தார். அச்சமயத்தில் பாபாவின் கண்கள் எரியும் நெருப்புத் துண்டம் போலிருந்தன. ஒருவருக்கும் அவரைப் பார்க்கும் தைரியம் இல்லை. எல்லோரும் பயங்கரமாக அஞ்சினார்கள்.
பாபா தமது பையிலிருந்து ஒரு ரூபாயை எடுத்து, அதை ஒரு புனித நிகழ்ச்சியின் நிவேதனம்போல் அங்கே விட்டெறிந்தார். தாத்யாவும் மிகவும் பயந்துபோனார். யாருக்கும் தாத்யாவுக்கு என்ன நிகழப்போகிறது என்பது தெரியவில்லை. ஒருவருக்கும் தலையிடத் தைரியம் இல்லை. பாபாவின் குஷ்டரோகி அடியவனான பாகோஜி ஷிண்டே என்பவன் கொஞ்சம் முன்னேறத் துணிந்தான். ஆனால் அவன் பாபாவால் தள்ளப்பட்டான். மாதவ்ராவுக்கும் அதைப்போன்ற மரியாதையே கிடைத்தது. அவர் கற்களால் அடிக்கப்பட்டார். ஆனால் சிறிது நேரத்திற்குப் பின் பாபாவின் கோபம் தணிந்து குளிர்ந்தது. கடைக்காரனிடம் ஆள் அனுப்பி பூவேலை செய்த ஒரு முண்டாசு வாங்கி வரச்செய்து, தாத்யாவுக்கு ஒரு சிறப்பான கௌரவம் செய்வதைப்போல் தாமே அவர் தலையில் கட்டிவிட்டார். பாபாவின் இவவினோதக் குணத்தைக் கண்டு எல்லோரும் ஆச்சர்யத்தால் தாக்கப்பட்டனர். அவ்வளவு வேகமாகப் பாபாவைக் கோபமடையச் செய்தது எது? தாத்யா பாடீலுக்கு உதை கொடுக்கும்படி செய்தது எது? என்பதை அவர்கள் எல்லோரும் அறிந்துகொள்ள இயலவில்லை. சிலவேளைகளில் பாபா மிகவும் அமைதியாகவும், மௌனமாகவும் இருந்தார். இனிமையான விஷயங்களை அன்புடன் பேசினார். பின்னர் உடனே சின்னப் பொய்க்காரணம் இருந்தோ, இல்லாமலோ கோபாவேசம் அடைந்தார். அத்தகைய பல சம்பவங்களை இங்கே கூறலாம். ஆனால் எனக்கு எதைச்சொல்வது, எதைவிடுவது என்று தெரியவில்லை. எனவே அவைகளை எனக்கு தோன்றியபோது கூறுகிறேன்.
அடுத்த அத்தியாயத்தில், பாபா ஒரு முஹமதியரா, இந்துவா என்னும் வினா எடுத்துக்கொள்ளப்படும். அவரின் யோகப்பயிற்சி, சக்தி மற்றும் பல விஷயங்களும் விவரிக்கப்படும்.
ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
• சாயிபாபாவின் குணாதிசயங்கள்
• அவரின் யோகா சாதனைகள்
• அவரின் எங்கும் நிறை தன்மை
• குஷ்டரோக அடியவனின் சேவை
• குழந்தை கபர்டேயின் பிளேக் வியாதி
• பண்டரிபுரத்துக்குச் செல்லல்
வியத்தகு அவதாரம்
சாயிபாபா எல்லாவித யோகப்பயிற்சிகளையும் அறிந்திருந்தார். அவர் தவ்தி — 22½ அடி நீளமும், 3 அங்குல அகலமும் உள்ள நனைக்கப்பட்ட ஒரு லினன்— சணல்நார் — துணியினால் வயிறு சுத்தம் செய்தல் , கண்ட யோகம் — உடல் உறுப்புகளைத் தனியாகக் கழற்றி பின்னர் சேர்த்தல் , சமாதி உள்ளிட்ட ஆறு முறைகளிலும் கைதேர்ந்தவராக இருந்தார். அவரை ஒரு இந்து என்று நீங்கள் கருதுவீர்களானால், ஒரு யவனரைப் போன்று தோற்றமளித்தார். நீங்கள் அவரை ஒரு யவனர் என்று கருதுவீர்களானால், ஒரு சமயாசாரமுள்ள இந்துவாகத் தோற்றமளித்தார். அவர் ஒரு இந்துவா, முஹமதியரா என்று ஒருவரும் திட்டமாக அறிந்திருக்கவில்லை.
இந்துக்களின் விழாவான ராமநவமியை உரிய சகல மரியாதைகளுடனும் கொண்டாடி, அதேநேரத்தில் முஹமதியர்களின் சந்தனக்கூடு ஊர்வலத்தையும் அனுமதித்தார். திருவிழாக்களில் குத்துச்சண்டையை ஊக்குவித்து, வெற்றிபெற்றோர்க்குப் பரிசுகள் வழங்கினார். கோகுலாஷ்டமி வந்தபோது, 'கோபால்காலா' திருவிழாவை — கிருஷ்ணர் மேனியைக் கருமை நிறமாக்கும் வைபவம் — உரியமுறைப்படி செய்வித்தார். ஈத் திருவிழாவின்போது முஹமதியர்களைத் தங்கள் தொழுகையை — நமாஸ் — தமது மசூதியில் செய்ய அனுமதித்தார். ஒருமுறை மொஹரம் திருவிழாவின்போது சில முஹமதியர்கள், மசூதியில் ஒரு 'தாஸியா' அல்லது 'தாபூத்' — முஸ்லிம் ஞானியரின் பாடை உருவகம் — செய்யவும், அதைச் சிலநாட்கள் மசூதியில் வைத்திருந்து, கிராமத்தின் வழியாக ஊர்வலமாக எடுத்துச்சென்று புதைக்கவும் தீர்மானித்தனர். நான்கு நாட்களுக்கு தாபூத்தை மசூதியில் வைத்திருக்க சாயிபாபா சம்மதித்தார். ஐந்தாவது நாள் சிறிதளவும் தமது செயல்லுக்காக வருந்தும் தன்மையேயின்றி, மசூதியில் இருந்து அதை அப்புறப்படுத்தினார். நீங்கள் அவரை ஒரு முஹமதியர் என்று கூறுவீர்களானால், — இந்து மத வழக்கப்படி — காது குத்தப்படிருந்தார். நீங்கள் அவரை ஒரு இந்து என்று கருதுவீர்களானால், அவர் சுன்னத் கல்யாணம் செய்கிற வழக்கத்தை ஆதரித்தார். ஆனால் பாபாவை நெருங்கிய நானா சாஹேப் சாந்தோர்கர் கருத்துப்படி பாபாவுக்கே சுன்னத் செய்யப்படவில்லை.
தேவ் எழுதிய 'பாபா ஹிந்து கி யவன்?' என்ற கட்டுரையை சாயிலீலா சஞ்சிகையில் — பக்கம் 562 — பார்க்க. நீங்கள் அவரை இந்து என்று அழைத்தால் எப்போதும் மசூதியில் வாழ்ந்தார். முஹமதியர் என்றால் துனி என்னும் அகண்ட நெருப்பை அவர் எப்போதும் மசூதியில் வைத்திருந்தார். மற்றும் முஹமதிய மதத்திற்கு விரோதமான பின்வரும் மூன்று பழக்கங்களையும் கொண்டிருந்தார். அதாவது திருக்கையில் அரைப்பது, சங்கு ஊதுவது, மணியடிப்பது, தீயில் ஆகுதி செய்தல், பஜனை, தண்ணீரால் சாயிபாபாவின் பாதத்தை அர்க்கிய வழிபாடு செய்தல் முதலியன எப்போதும் அங்கு அனுமதிக்கப்பட்டன. நீங்கள் அவரை முஹமதியர் என்று நினைத்தால் பிராமண ஸ்ரேஷ்டர்களும், அக்னிஹோத்ரிகளும், தங்கள் வைதீகச் சம்பிரதாயத்தை விட்டிவிட்டு அவர் பாதங்களில் சாஷ்டாங்கமாக வீழ்ந்து பணிந்தனர். அவரது தேசம் முதலியவற்றை விசாரிக்கப் போனவர்கள் அவரது தரிசனத்தால், கவரப்பட்டுத் திகைத்து வாயடைத்து ஊமையானார்கள்.
எனவே அவர் ஒரு முஹமதியரா, இந்துவா* என்பது ஒருவராலும் நிச்சயமாகத் தீர்க்க இயலாததாய் இருந்தது. இது அதிசயம் அல்ல. அஹங்காரத்தையும், உடல் உணர்வையும் ஒழிப்பதன் மூலம் பரமாத்மாவுடன் தன்னை முழுவதும் அர்ப்பணித்து, சரணாகதியடைந்து அவருடன் ஒன்றிவிடுபவனுக்கு ஜாதி, தேசம் என்னும் கேள்விகள் குறித்துக் கருத்திற்கொள்வதற்கு ஏதுமில்லை. சாயிபாபாவைப் போன்ற அத்தகைய ஒருவர் ஜாதிக்குள்ளேயும், ஜந்துக்குள்ளேயும் எவ்வித வேறுபாட்டையும் காணவில்லை. பக்கிரிகளுடன் மாமிசமும், மீனும் அவர் உண்டார். நாய்கள் அவைகளின் வாயால் அவ்வுணவைத் தீண்டியபோதும், அவர் அருவருப்புக் காட்டவில்லை.
சாயிபாபா அத்தகைய தனிச்சிறப்பு வாய்ந்த வியத்தகு அவதாரமாவார். முன்னர் செய்த நல்வினைகளின் காரணமாகவே நான் அவர் பாதத்தடியில் உட்காருவதற்கும், அவருடைய ஆசீர்வதிக்கப்பட்ட நட்பை மகிழ்ந்து அனுபவிப்பதற்கும், நல்ல அதிஷ்டத்தைப் பெற்றேன். அதிலிருந்து நான் பெற்ற மகிழ்ச்சியும், ஆனந்தமும் தன்நிகர் இல்லாதவை. உண்மையில் சாயிபாபா பரிபூரண ஆனந்தமும், உணர்வும் ஆவார். அவரின் உயர்வையும், தனித்தன்மைச் சிறப்பையும் போதுமான அளவிற்கு நான் விளக்க இயலாது. அவரின் பாதாரவிந்தங்களில் ஆனந்தத்தை நுகர்பவன் அவருடையதேயான ஆத்மாவிலேயே ஸ்தாபிக்கப்படுகிறான். முக்தியில் ஆர்வமுள்ள பல சந்நியாசிகள், சாதகர்கள் மற்றும் எல்லாவித மக்களும் சாயிபாபாவிடம் வந்தனர். எப்போதும் அவர் நடந்தார், பேசினார், அவர்களுடன் சேர்ந்து சிரித்தார். எப்போதும் தம் நாவினால், 'அல்லா மாலிக்' — இறைவனே எஜமானர் — என மொழிந்தார். அவர் விவாதத்தையோ, கலகத்தையோ விரும்பவில்லை.
அவர் சிலநேரங்களில் கடுமையாக இருப்பினும் எப்போதும் அமைதியாகவும், கட்டுப்பாட்டுடனும் இருந்தார். எப்போதும் முழு வேதாந்தத்தையும் போதித்தார். கடைசிவரை பாபா யார் என்பது ஒருவருக்கும் தெரியாது. அரசர்களும், ஏழைகளும் அவர் முன் சமமாக நடத்தப்பட்டனர். அனைவருடைய ஆழ்ந்த இரகசியங்களையும் அவர் அறிவார். அதை அவர் மொழிகளால் வெளியிட்டபோது அனைவரும் வியந்தனர். சர்வ விஞ்ஞானிகளின் கருவூலம் அவரே, எனினும் அறியாதவர்போல் நடித்தார். புகழை அவர் விரும்பவில்லை. இவைகளே சாயிபாபாவின் குணாதிசயங்கள். அவர் மானிட உருவத்தில் இருப்பினும், அவரின் செய்கைகள் அவரது கடவுள் தன்மையை எடுத்துக்காட்டியது. அனைவரும் அவரை ஷீர்டியில் இருக்கும் பரமாத்மா என்றே நம்பினர்.
சாயிபாபாவின் குணாதிசயங்கள்
பாபாவின் அற்புதங்களை விளக்கத் தெரியாத அறிவிலி நான். ஷீர்டியிலுள்ள ஏறக்குறைய எல்லாக் கோவில்களையும் அவர் பழுதுபார்க்கச் செய்தார். சனி, கணபதி, சங்கரர், சரஸ்வதி, கிராமதேவதை, மாருதி முதலிய எல்லாக் கோவில்களையும் தாத்யா பாடீல் மூலமாக ஒழுங்குபடுத்தச் செய்தார். அவருடைய தர்மமும் குறிப்பிடும்படியானது. தட்சணை என்ற பெயரில் அவர் வழக்கமாக வாங்கிவந்த பணமும் தாராளமாகப் பகிர்ந்து அளிக்கப்பட்டது. ரூ.20 சிலருக்கும், ரூ.15 அல்லது ரூ.50 மற்றவர்களுக்கும் தினந்தோறும் அளிக்கப்பட்டது. இது தூய தர்மப்பணம் என்றும், அதை உபயோகமாகப் பயன்படுத்தவும் பாபா விரும்பினார். பாபாவின் தரிசனத்தைப் பெற்றால், மக்கள் மிகப்பெரும் அளவில் பயனடைந்தார்கள். சிலர் ஆரோக்கியமும், நலமும் பெற்றனர். கொடியவர்கள் நல்லவர்களாகத் திருந்தினார்கள். சில சந்தர்ப்பத்தில் குஷ்டம் குணமாக்கப்பட்டது. பலர் தங்களின் மனோபீஷ்டங்களில் பூர்த்தி எய்தினர். குருடர்கள் தமது கண்களில் எவ்வித மருந்தோ, சாறோ விடப்படாமல் பார்வையை அடைந்தார்கள். சில முடவர்கள் கால்களை அடைந்தார்கள்.
அவரின் அசாதாரணப் பெருந்தன்மைக்கு ஒரு எல்லையை ஒருவராலும் காண இயலாது. அவரது புகழ் நெடுந்தூரம் பரவி, எல்லா திசைகளிலிருந்தும் யாத்ரீகர்கள் ஷீர்டியை நோக்கித் திரண்டனர். பாபா எப்போதும் துனி அருகிலேயே அமர்ந்திருந்தார். அங்கு தம்மை ஆசுவாசப்படுத்திக் கொண்டார். எப்போதும் தியானத்தில் அமர்ந்திருந்தார். சில சமயங்களில் குளித்தும், மற்றநேரங்களில் குளிக்காமலும் இருந்தார். தமது தலையில் ஒரு வெள்ளை டர்பனும்— தலைப்பாகை , இடுப்பில் சுத்தமான வேஷ்டியும், தமது உடம்பில் ஒரு சட்டையும் அணிவது வழக்கம். ஆரம்பத்தில் இதுவே அவரது உடையாகும். அவர் கிராமத்தில் முதலில் வைத்தியம் செய்தார். நோயாளிகளைக் கவனித்து மருந்து கொடுத்தார். அவர் எப்போதும் வெற்றிபெற்று ஹகீமைப் — வைத்தியர் — போன்று புகழடைந்தார்.
ஒரு வினோதமான விஷயத்தை இங்கு கூறலாம். ஓர் அடியவரது கண்கள் சிவந்தும், வீங்கியும் இருந்தது. ஷீர்டியில் ஒரு வைத்தியவரும் கிடைக்கவில்லை. மற்ற அடியவர்கள் அவரை பாபாவிடம் அழைத்துச் சென்றனர். அதைப்போன்ற வியாதிக்கு மற்ற டாக்டர்கள் களிம்பு, அஞ்சனம், பசும்பால், கற்பூராதி மருந்துகள் முதலியன உபயோகிப்பர். ஆனால் பாபாவின் சிகிச்சையோ முற்றிலும் தனித்தன்மை வாய்ந்தது. சிறிது பிப்பாவை — சலவை செய்பவர் குறியிடும் செங்கோட்டைக் காயின் பசை — கைகளால் இரண்டு உருண்டைசெய்து, நோயாளியின் ஒவ்வொரு கண்களிலும் அவ்வுருண்டையைத் திணித்துவிட்டு துணியால் கண்களைச் சுற்றிக் கட்டுப்போட்டுவிட்டார். மறுநாள் கட்டு அவிழ்க்கப்பட்டுத் தண்ணீரால் சுத்தப்படுத்தப்படது. எரிச்சல் மறைந்து கண்மணி வெண்மையாய் சுத்தமாகிவிட்டது. கண்கள் நுண்ணிய உறுப்பானபோதும் செங்கோட்டை பசை அவற்றுக்கு எவ்விதத் தீங்கையும் அளிக்கவில்லை. இம்மாதிரிப் பல வியாதிகளைக் குறிப்பிடலாம். ஆனால் இந்நிகழ்ச்சியே குறிப்பில் உள்ளது.
பாபாவின் யோகப் பயிற்சிகள்
பாபா யோகத்தின் எல்லாப் பயிற்சிமுறைகளையும் அறிவார். அவைகளில் இரண்டை இங்கே குறிப்பிடுவோம்.
1. தவ்தி அல்லது சுத்த விருத்தி
ஒவ்வொரு மூன்றாவது நாளும் பாபா, மசூதியிலிருந்து நெடுந்தொலைவிலுள்ள ஆலமரத்துக்கு அருகில் இருக்கும் கிணற்றுக்குச் சென்று தமது வாயைக்கழுவி குளிப்பார். ஒரு சந்தர்ப்பத்தில் தமது குடல், கும்பி முதலியவற்றை அவர் வாந்தியெடுத்து, அவைகளின் உட்புறத்தையும், வெளிப்புறத்தையும் சுத்தம் செய்து பக்கத்திலுள்ள நாவல் மரத்தில் உலர்வதற்காக வைத்தது கவனிக்கப்பட்டது. இதனைப் பார்த்தவர்கள் ஷீர்டியில் உள்ளனர். அவர்கள் இவ்வுண்மையைச் சோதனை செய்து பார்த்துவிட்டனர். 3 அங்குல அகலமும், 22½ அடி நீளமும் உள்ள நனைக்கப்பட்ட லினன் துணியால் தவ்தி செய்யப்படுகிறது. இது தொண்டைக்குள் விழுங்கபட்டு ஏறக்குறைய அரைமணி நேரத்திற்கு வயிற்றுக்குள்ளேயே கிரியைகள் நடத்த வைத்திருக்கப்பட்டுப் பிறகு வெளியே எடுக்கப்படுவதே சாதாரண தவ்தியாகும். ஆனால் பாபாவின் தவ்தியோ மிகவும் தனிச்சிறப்பானதும், அசாதாரணமானதும் ஆகும்.
2. கண்ட யோகம்
பாபா, தமது உடம்பிலிருந்து வெவ்வேறு உறுப்புக்களைப் பிய்த்தெடுத்து, மசூதியில் அவற்றைப் பல இடங்களிலும் தனியாக வைத்திருத்தார். ஒருமுறை, ஒரு பெருந்தகை மசூதிக்குச் சென்று பாபாவின் உடல் உறுப்புக்கள் தனித்தனியாக மசூதியின் பல இடங்களிலும் கிடப்பதைக் கண்டார். அவர் மிகவும் பீதியடைந்து, முதலில் கிராம அதிகாரிகளிடம் சென்று, பாபா கண்டதுண்டங்களாக வெட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டதை அறிவிக்க எண்ணினார். அவரே முதல் தகவல் தந்தவராகி விடுவராதலாலும், அவ்விஷயத்தைப் பற்றி சிறிது அறிந்து இருந்தாலும், அவர்மீது பொறுப்பு சுமத்தப்பட்டுவிடும் என எண்ணி யாரிடமும் ஏதுமே பேசாமல் இருந்துவிட்டார். ஆனால் மசூதிக்குச் சென்றபோது, பாபா தேக ஆரோக்கியத்துடன் முன்போலவே இருப்பதைக் கண்டு மிகவும் அதிசயம் அடைந்தார். தான் முதல்நாள் பார்த்தது வெறும் கனவு என்றே அவர் எண்ணினார்.
பாபா தமது சிசுப் பருவத்தில் இருந்தே யோகம் பயின்றார். அவர் பெற்றுள்ள திறமையை ஒருவரும் அறிந்திருக்கவில்லை அன்றி ஊக்கிக்கவும் இல்லை. தமது சிகிச்சைகளுக்கு எவ்வித பணமும் அவர் வசூலிக்கவில்லை. தமது தகைமைகளின் திறத்தின் பயனால் புகழ்பெற்றுப் பெருமையுற்றார். பல ஏழைகளுக்கும், துன்பப்படும் மக்களுக்கும் அவர் ஆரோக்கியம் அளித்தார். வைத்தியர்களில் எல்லாம் தலைசிறந்த புகழ்பெற்ற வைத்தியரான அவர் தமது தேவைகளை லட்சியம் செய்யவில்லை. மற்றவர்களின் நன்மைக்கும், சௌகரியத்திற்குமே எப்போதும் உழைத்தார். தாங்கமுடியாத பயங்கர வலிகளை எல்லாம் தாமே பலமுறை, இம்முறைகளில் தாங்கித் துயருற்றிருக்கிறார். எங்கும் நிறைந்திருக்கும் மிகவும் கருணையுடைய பாபாவின் குணாதிசயத்தை எடுத்துக்காண்பிக்கும் அத்தகைய ஒரு நிகழ்ச்சியை இங்கு தருகிறேன்.
பாபாவின் எங்கும் நிறை தன்மையும் கருணையும்
1910ஆம் ஆண்டில் தீபாவளி விடுமுறையின்போது, பாபா துனிக்கருகில் அமர்ந்து குளிர்காய்ந்து கொண்டிருந்தார். பிரகாசமாக எரிந்துகொண்டிருந்த துனியில் விறகை நுழைத்தார். சிறிது நேரத்திற்குப்பின் விறகுகளை நுழைப்பதற்குப் பதில், பாபா தமது கரத்தையே துனி உள்ளே நுழைத்துவிட்டார். கரம் உடனே கருகி வெந்துவிட்டது. இது வேலையாட்கள் மாதவாலும், மாதவ்ராவ் தேஷ்பாண்டேயாலும் உடனே கவனிக்கப்பட்டது. உடனே அவர்கள் பாபாவிடம் ஓடினார்கள். மாதவ்ராவ் தனது கைகளை பாபாவின் இடுப்பில் கொடுத்துச் சேர்த்து, வலிந்து பின்னால் இழுத்து, "தேவா எதற்காக இங்ஙனம் செய்தீர்" என்று கேட்டார். பின்னர் பாபா தம் உணர்வுவந்து பதில் அளித்தார். "தொலை தூரத்தில் உள்ள ஏதோ ஒரு இடத்தில், ஒரு கொல்லனின் மனைவி உலைக்களத்தில் இருந்த துருத்தியில் வேலை செய்துகொண்டிருந்தாள். அப்போது அவளது கணவன், அவளைக் கூப்பிட்டான். அவள் தனது இடுப்பில் குழந்தை இருப்பதை மறந்து அவசரமாக ஓடினாள். அதனால் ஊதுஉலைக்களத்தில் குழந்தை நழுவி விழுந்துவிட்டது. நான் உடனே உலைக்களத்தில் கையைவிட்டு குழந்தையைக் காப்பாற்றினேன். எனது கரங்கள் வெந்துபோனதைப் பற்றி, நான் பொருட்படுத்தவில்லை. குழந்தையின் உயிர் காக்கப்பட்டதை எண்ணி நான் மகிழ்வடைகிறேன்."
குஷ்டரோக அடியவரின் சேவை
மாதவ்ராவ் தேஷ்பாண்டேயிடமிருந்து பாபாவின் கரங்கள் வெந்துபோனதைக் கேள்விப்பட்ட நானா சாஹேப் சாந்தோர்கர், பம்பாயைச் சேர்ந்த புகழ்பெற்ற டாக்டரான பரமானந்த் என்பவரை ஆயின்மென்ட், லிண்ட் துணி, பாண்டேஜ் துணி உட்பட மருத்துவச் சாமான்களுடன் அழைத்துவந்து, பாபாவின் கரத்தைப் பரிசோதிக்கவும், வெந்ததினால் ஏற்பட்ட தீக்காயத்துக்கு சிகிச்சை செய்யவும் வேண்டிக்கொண்டார். ஆனால் பாபாவினால் இது மறுக்கப்பட்டது. அது முதற்கொண்டு பாகோஜி ஷிண்டே என்ற குஷ்டரோகி அடியவரால், பாபாவுக்குச் சிகிச்சை செய்யப்பட்டு வந்தது. வெந்துபோன இடத்தை நெய்போட்டு நன்றாகத் தேய்த்துவிட்டு ஒரு இலையை அதன்மீது வைத்துக் கட்டிவிடுவது அவரது சிகிச்சையாகும். நானா சாஹேப் பலமுறை பாபாவிடம் அந்தக்கட்டை நீக்கிவிட்டு, டாக்டர் பரமானந்தை காயத்தைச் சோதிக்கவும், சிகிச்சை செய்யவும், குணப்படுத்தவும் — அது விரைவில் குணப்படும் என்ற எண்ணத்துடன் — கேட்டுக்கொண்டார். டாக்டர் பரமானந்தும் அதையொப்ப பலமுறை வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அல்லாவே அவரது மருத்துவர் என்றுகூறி பாபா மறுத்துவிட்டார்.
அவரைத் தனது கையைச் சோதிக்க அனுமதிக்கவேயில்லை. டாக்டர் பரமானந்தின் மருந்துகள் ஷீர்டியில் உபயோகப்படுத்தப்படவில்லை. இருப்பினும் டாக்டருக்கு பாபாவின் தரிசனத்தைப் பெறும்படியான நல்லதிஷ்டம் இருந்தது. தினந்தோறும் பாகோஜி, அவர் கரத்திற்குச் சிகிச்சை செய்ய அனுமதிக்கப்பட்டார். சில நாட்களுக்குப்பின் கரம் குணப்படுத்தப்பட்டது. அனைவரும் மகிழ்ச்சியுற்றனர். ஏதோ இலேசான வலி இன்னும் இருந்திருக்குமோ இல்லையோ என்பதை நாம் அறியோம். தினந்தோறும் பாகோஜி தனது நிஜதிப்படி கட்டுக்களைத் தளர்த்தி, நெய்யினால் அதை நன்றாக மீண்டும் தேய்த்து, அழுத்திக் கட்டுப்போடுவார். இது சாயிபாபாவின் மஹாசமாதிவரை நடைபெற்றது.
அவர் ஒரு முழு சித்தரானதால் இந்த சிகிச்சை உண்மையில் அவருக்குத் தேவையிருக்கவில்லை. ஆனால் தமது அடியவர் மீதுள்ள அன்பின் காரணத்தால் பாகோஜியினது உபாசனையை — சேவையை — முழுவதுமாகத் தடையின்றி நடத்த அனுமதித்தார். பாபா லெண்டித் தோட்டத்திற்க்குப் புறப்பட்டபோது பாகோஜி அவருக்குக் குடைபிடித்து அவருடன் கூடச் சென்றார். துனிக்கருகில் உள்ள கம்பத்தருகில் பாபா அமர்ந்ததும் பாகோஜி தனது சேவையை ஆரம்பித்தார். பாகோஜி முந்தைய ஜென்மத்தில் தீவினையாளர். அவர் குஷ்டரோகத்தால் அவதியுற்றுக்கொண்டிருந்தார். அவரது கைகள் சுருங்கியிருந்தன. அவர் உடம்பு முழுவதும் சீழாகி, மோசமாக, நாற்றம் அடித்தது. வெளியில் அவர் துரதிர்ஷ்டசாலியாக இருப்பதைப்போல் தோன்றினாலும், அவர் மிகவும் அதிர்ஷ்டசாலியாகவும், மகிழ்ச்சியுள்ளவராகவும் இருந்தார். ஏனெனில் அவரே பாபாவின் முதன்மையான சேவகர். பாபாவின் நட்பினால் உண்டாகும் நன்மைகளை அடைந்தார்.
குழந்தை கபர்தேயின் பிளேக் வியாதி
பாபாவின் மற்றொரு வியத்தகு லீலையை இப்போது கூறுகிறேன். அமராவதியைச் சேர்ந்த தாதா சாஹேப் கபர்டேயின் மனைவி ஷீர்டியில் தன் இளம் புதல்வனுடன் சிலநாட்கள் தங்கியிருந்தாள். அப்போது அவளது புதல்வனுக்கு அதிக காய்ச்சல் வந்து, அது நெறிகட்டி பிளேக்காகப் பெரிதானது. தாயார் பயந்துபோய் மிகவும் மனவேதனையடைந்தாள். பின்பு அமராவதிக்குச் செல்ல நினைத்து, பாபா வழக்கமாக மாலையில் சுற்றுவரும்போது, வாதாவுக்கு — சமாதி மந்திர் — அருகில் வந்துகொண்டிருக்கையில் அவரது அனுமதியைப் பெறுவதற்காகப் பக்கத்தில் சென்று நடுங்கும் குரலில் தனது இளம் புத்திரன் பிளேக் நோயினால் பீடிக்கப்பட்டிருப்பதைத் தெரிவித்தாள். பாபா அவளிடம் அன்பாகவும், மிருதுவாகவும், "வானம் மேகங்களால் சூழப்பட்டிருக்கிறது, அவைகள் உருகி ஓடிவிடும். எல்லாம் எளிதாகவும் தூயதாகவும் ஆகிவிடும்" என்று கூறினார். இவ்வாறு கூறிக்கொண்டே தமது கஃப்னி உடையை இடுப்புவரை தூக்கி அங்கு பிரசன்னமாயிருந்த அனைவருக்கும் நன்றாகப் பெரிதாக முட்டை அளவிற்குத் தோன்றியிருந்த பிளேக் கட்டிகளைக் காண்பித்து, "பாருங்கள், எனது அடியவர்களுக்காக நான் எங்கனம் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. அவர்களது கஷ்டங்களெல்லாம் எனதேயாகும்" என்றார்.
இந்தச் சிறப்பான அசாதாரணச் செயலை — லீலை — மக்கள் கண்ணுற்று, ஞானிகள் தங்கள் அடியவர்களின் துன்பங்களைத் தாங்குகிறார்கள் என்று உறுதியடைந்தனர். ஞானிகளின் உள்ளமோ மெளுகைவிட மிருதுவானது. உள்ளும், புறமும் அது வெண்ணெயைப் போன்று மிருதுவாக இருக்கிறது. எவ்வித இலாபம் பெரும் நோக்கமின்றியே அவர்கள் தங்கள் அடியவர்களை நேசிக்கிறார்கள். அவர்களை உண்மை உறவினராயும் எண்ணுகின்றனர்.
பண்டரீபுரத்துக்குச் செல்லுதலும், அங்கு தங்குதலும்
பாபா எவ்வாறு தம் அடியவர்களை நேசித்தார். அவர்களின் விருப்பங்களையும், முயற்சிகளையும் எங்கனம் ஆவலுடன் எதிர்பார்த்து பூர்த்தி செய்தார் என்பதைச் சித்தரிக்கும் ஒரு கதையைக் கூறியபின்னர், இவ்வத்தியாயத்தை முடிக்கிறேன்.
கான்தேஷில் உள்ள நந்துர்பாரின் மம்லதார் நானா சாஹேப் சாந்தோர்கர் பாபாவின் பெரும் அடியவர் ஆவார். அவருக்குப் பண்டரீபுரத்துக்கு மாற்றலாகும் உத்தரவு வந்தது. சாயி பாபாவிடம் அவர் கொண்டுள்ள பக்தி பழுத்தது. ஏனெனில், அவருக்குப் 'பூலோக வைகுண்டம்' என்றழைக்கப்படும் பண்டரீபுரத்துக்குப் போய்த்தங்க உத்தரவு கிடைத்திருக்கிறது. நானா சாஹேப் அவசரமாக வேலையை ஒப்புக்கொள்ளவேண்டிய கட்டாயம் இருந்ததால் அவர் அவ்விடத்திற்கு உடனே ஒருவருக்கும் தெரிவிக்காமலும், எழுதாமலும் புறப்பட்டார். அவர் தனது பண்டரீபுரமான ஷீர்டிக்கு, ஒரு திடீர் விஜயம் செய்ய விரும்பினார். தமது விட்டோபா— சாயிபா —வைப் பார்த்து வணக்கம் தெரிவித்துப் பின்னர் புறப்பட எண்ணினார். ஒருவரும் நானா சாஹேப் ஷீர்டிக்குப் போவார் என்று கனவு கூடக் காணவில்லை. ஆனால் சாயிபாபா இது அனைத்தையும் அறிவார். ஏனெனில் அவர் கண்கள் எங்கும் வியாபித்திருந்தன — சர்வாந்தர்யாமி
ஷீர்டியிலிருந்து சில மைல்கள் உள்ள நீம்காவனை நானா சாஹேப் அடைந்தபோது ஷீர்டியில் மசூதியில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. பாபா உட்கார்ந்துகொண்டு மஹல்ஸாபதி, அப்பாஷிண்டே, காஷிராம் இவர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் திடீரென்று, "நாம் நால்வரும் பஜனை செய்வோம். பண்டாரீபுரத்தின் கதவுகள் திறந்திருக்கின்றன. நாம் மகிழ்ச்சியாய்ப் பாடுவோம்" என்றார். அப்போது கோஷ்டியாக அவர்கள் பாடத் தொடங்கினர். அதன் பல்லவி........
"நான் பண்டரீபுதத்துக்குப் போகவேண்டும்!அங்கே தங்க வேண்டும்! ஏனெனில் அதுவே என் பரமாத்மாவின் வீடு!"
பாபா பாடினார். அடியவர்களும் அவரைத் தொடர்ந்து பாடினர். சிறிது நேரத்தில் நானா சாஹேப் தனது குடும்பத்துடன் வந்து பாபாவின் முன்னால் வீழ்ந்துபணிந்து அவரைத் தங்களுடன் தங்கும்படியும் வேண்டிக்கொண்டார். அவ்வேண்டுகோள் பாபாவுக்குத் தேவையாய் இருக்கவில்லை. ஏனெனில் மற்ற அடியவர்கள் நானா சாஹேபிடம் பாபா ஏற்கனவே பண்டரீபுரத்திற்குப் போவதற்கும், அங்கு தங்குவதற்குமான ஊக்கத்துடன் இருப்பதாகத் தெரிவித்தனர். இதைக் கேட்டு நானா சாஹேப் உணர்ச்சிவசப்பட்டார். பாபாவின் காலடியில் வீழ்ந்தார். பிறகு பாபாவின் அனுமதி, உதி மற்றும் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டு, நானா சாஹேப் பண்டரீபுரத்துக்குப் புறப்பட்டார்.
பாபாவின் கதைகளுக்கு ஒரு முடிவில்லை. ஆனால் இங்கு நிறுத்தி, அடுத்த அத்தியாயத்தில் மானிட வாழ்க்கையின் முக்கியத்துவம், பாபாவின் இறந்து வாழும் வாழ்க்கை, பாயஜாபாயின் சேவை மற்றும் பலகதைகளையும் கூறுகிறேன்.
*¹ பாபாவின் நெருங்கிய பக்தரும், அவருடன் எப்போதும் மசூதியிலும், சாவடியிலும் படுத்துறங்கியவருமான மஹல்சாபதி பாபா தம்மிடம் ஒருமுறை தாம் 'பாத்ரி'யைச் சேர்ந்த பிராமணர் என்றும், பிறந்தபோதே — முஸ்லிம் — ஃபக்கீர் ஒருவரிடம் வளர்க்க ஒப்படைக்கப்படதாகவும் சொல்லியிருக்கிறார். இந்த உரையாடல் நிகழ்ந்த சமயம் பாத்திரியைச் சேர்ந்த சிலர் அங்கு வந்ததையும் அவர்களிடம் பாபா அங்கு வசிப்பவர்களைப்பற்றி விசாரித்ததையும் தெரிவித்திருக்கிறார். — சாயிலீலா சஞ்சிகை - வருடம் 1924, பக்கம் 179
*² திருமதி. காஷிபாய் கனிட்கர், புனேவைச் சேர்ந்த புகழ்பெற்ற கற்றறிந்த பெண்மணி ஆவார். இவர் தம்முடைய அனுபவமாக சொல்லியவை சாயிலீலா சஞ்சிகையில் — வருடம் 1934, தொகுப்பு 2, பக்கம் 79 — பதிக்கப்பட்டிருக்கிறது.
பாபாவின் அற்புதங்களைக் கேள்விப்பட்ட பிறகு எங்களுடைய பிரம்மசமாஜ நம்பிக்கைகளுக்கும், வழிமுறைகளுக்கும் ஏற்ப பாபா மாயவேலை செய்யும் முஹமதியரா அல்லது இந்து சித்தரா! என்று விவாதித்துக்கொண்டிருந்தோம்.
பின்பு ஒருமறை ஷீர்டி செல்லும்போது இதைப்பற்றிய எண்ணம் என் மனதில் சுழன்றுகொண்டிருந்தது. ஆனால் மசூதியின் படிகளை நான் நெருங்கியபோது, பாபா வெளியேவந்து என்னை உற்றுநோக்கி, சற்றே கடுமையான குரலில் தனது நெஞ்சை சுட்டிக்காட்டி, "நான் ஒரு பிராமணன், தூய பிராமணன். எனக்கும் மாயமந்திர வேலைக்கும் தொடர்பு எதுவுமில்லை. அது மாதிரியான சித்து வேலைசெய்யும் எந்த முஹமதியனும் இங்கு நுழையத் துணிய முடியாது" என்றார்.
மீண்டும் தன்னைச் சுட்டிக்காட்டி, "இந்த பிராமணர் இலட்சக்கணக்கான மக்களை தூய்மையான ஒளிநிறைந்த பாதைக்கு இழுத்து, அவர்களின் இலட்சியத்தை அடைய இட்டுச்செல்வார். இது பிராமண மசூதி. இங்கு மாயவேலை செய்யும் எந்த முஹமதியனின் நிழல்படவும் அனுமதிக்கமாட்டேன்" என்றார்.
ஸ்ரீ சாயியைப் பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்
• சாயிபாபா உணவுப் பிச்சையெடுத்தல்
• பாயஜாபாயின் சேவை
• சாயிபாபாவின் படுக்கை
• குஷால்சந்திடம் அவருக்கு உள்ள பிரேமை
இப்போது முந்தைய அத்தியாயத்தில் குறிப்பிட்டுள்ளபடியே மனித வாழ்க்கையின் முக்கியத்துவத்தைப்பற்றி ஹேமத்பந்த் பலப்படக் கூறிய பின்பு, சாயிபாபா அவரது உணவை எங்கனம் இரந்தார், எவ்வாறு பாயஜாபாயி அவருக்குச் சேவை செய்தார், எவ்வாறு அவர் மசூதியில் தாத்யா கோதே பாடீலுடனும், மகல்ஸாபதியுடனும் உறங்கினார், எவ்வாறு ராஹாதாவைச் சேர்ந்த குஷால்சந்த்தை விரும்பினார் என்பவைகளை விளக்கிச் சொல்லுகிறார்.
மானிடப் பிறவியின் சிறப்பு
இவ்வியத்தகு பிரபஞ்சத்தில் கடவுள் பல கோடிக்கணக்கான — இந்து சாஸ்திர கணக்குப்படி 84 இலட்சம் விதமான — மோட்சம், நரகம், நிலம், கடல், வானம், இடைப்பகுதிகள் ஆகியவைகளை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் ஜீவராசிகளை — மனிதர்கள், மிருகங்கள், பூச்சிகள், தேவர்கள், உபதேவதைகள் உட்பட — சிருஷ்டி செய்திருக்கிறார். எவருடைய புண்ணியங்கள் மேம்படுகிறதோ அவர்கள், தங்களின் செய்கைகளின் பலன்களை மகிழ்ந்து அனுபவிக்கும்தோறும் மோட்சத்திற்கு சென்று வாழ்கிறார்கள். அது முடிந்தபிறகு அவர்கள் கீழேயிறங்கி வருகிறார்கள்.
தீமைகள், பாவங்கள் அதிகமுள்ள ஆத்மாக்களோ நரகத்திற்குச் சென்று, தாங்கள் துகுதியுள்ளதோறும், தங்கள் தீவினைகளின் பலன்களை அனுபவித்து அவதியுறுகிறார்கள். நல்வினை, தீவினை இரண்டும் சம அளவாய் இருப்பின், அவர்கள் மீண்டும் இவ்வுலகில் பிறக்கின்றனர். தங்களது சுயமான முக்திக்கு உழைக்கும் முயற்சிக்கு மீண்டும் ஒரு வாய்ப்புத் தரப்படுகிறார்கள். முடிவாகத் தமது நல்வினை, தீவினை இரண்டுமே முழுமையாக அகற்றப்படும்போது அவர்கள் சுதந்திரமடைந்து விடுவிக்கப்பட்டவர்களாகிறார்கள். இரத்தினச் சுருக்கமாக உரைத்தால், அவரவர்களின் செய்கைககளுக்கும், நுண்ணறிவு, மனப்பண்பாட்டிற்கேற்பப் பிறவிகளைப் பெறுகிறார்கள்.
மானிட உடம்பின் தனிச்சிறப்பு
நாமனைவரும் அறிந்தபடியாக சர்வஜீவராசிகளுக்கும் நான்கு விஷயங்கள் பொதுவானதாகும். அதாவது உணவு, உடை, பயம், புணர்ச்சி முதலியவை ஆகும். மனிதனுடைய விஷயத்தில் அவன் ஒரு சிறப்பான சாமர்த்தியத்துடன் இயற்கையாகவே ஆக்கப்பட்டிருக்கிறான். அதாவது மற்றெல்லாப் பிறப்பாலும் அடையப்பட இயலாத ஞானத்தின் மூலம் அவன் கடவுளின் காட்சியைப் பெறலாம். இக்காரணத்திற்காகவே தேவர்கள், மனிதனது உரிமையை — நிலைமையை — குறித்துப் பொறாமைப்படுகிறார்கள். தாங்கள் முடிவான விடுதலையைப் பெறுவதற்காக, மானுடர்களாய்ப் பிறப்பதற்கு ஆவல்கொள்கிறார்கள்
கேவலமான அழுக்கு, சளி, கோழை, அசுத்தம், இவைகளால் நிரம்பியதும் தேய்வு, நோய், மரணம் ஆகியவற்றிற்குக் காரணமாய் உள்ளதுமான இம்மனித உடம்பைவிடக் கேவலமானது எதுவும் இல்லை என்று சிலர் கூறுகின்றனர். இது ஓரளவிற்கு உண்மை என்பதில் ஐயமில்லை. இவ்வாறான குற்றம், குறைகள் இருப்பினும், இம்மனித உடம்பின் சிறப்பான மதிப்பு யாதெனில், ஞானத்தை அடைய மனிதனுக்கு ஆற்றல் இருக்கிறது என்பதேயாம்.
மனித உடம்பினால் மட்டுமே அல்லது அதன்பொருட்டே அழியக்கூடிய நிலையில்லாத உடம்பின் தன்மையைப்பற்றியும், இவ்வுலகத்தைப் பற்றியும், புலன் இன்பங்களின்மீது வெறுப்பையும், நித்ய-அநித்ய வஸ்துக்களைப் பகுத்தறியும் விவேகத்தையும், இங்ஙனமாக அதன் மூலம் கடவுள் காட்சியையும் ஒருவன் எய்த இயலுகிறது. அதன் அசுத்தத் தன்மைக்காக நாம் உடம்பைப் புறக்கணித்தோமானால், கடவுள் காட்சியைப் பெறும் வாய்ப்பை இழக்கிறோம். அதையே சீராட்டி புலன் இன்பங்களின் பின்னால் ஓடுவோமானால் அது விலை மதிப்பற்றதாகையால் நாம் நரகிடை வீழ்வோம். எனவே, நாம் பின்பற்றவேண்டிய ஒழுங்கான நெறிமுறையானது பின்வருமாறு:
"உடம்பைப் புறக்கணிக்கவோ, விரும்பிச் செல்லமாக பராமரிக்கவோ கூடாது. ஆனால் முறையாகப் பராமரிக்க வேண்டும். குதிரையில் சவாரி செய்யும் ஓர் வழிப்பயணி, தான் போகுமிடத்தை அடைந்து வீடு திரும்பும்வரைக்கும் தனது குதிரையை எவ்வாறு பராமரிக்கிறானோ, அதையொப்ப இவ்வுடம்பைப் பராமரிக்கவேண்டும். இவ்வுடம்பு இவ்விதமாக எப்போதும் வாழ்க்கையின் உச்ச உயர் நோக்கமான கடவுள்-காட்சி அல்லது ஆத்மானுபூதியை அடையவே உபயோகப்படுத்தப்பட வேண்டும்".
பல்வேறு ஜீவராசிகளையும் கடவுள் படைத்தார். எனினும், அவைகளில் எதுவும் அவர்தம் வேலையை அறிந்து பாராட்ட இயலாததனால் அவர் திருப்தியடையவில்லை.
எனவே அவர் ஒரு சிறப்பான சாமர்த்தியமுள்ள ஜந்துவாக மனிதனைப் படைக்கவேண்டியதாயிற்று. 'ஞானம்' என்னும் சிறந்த வரத்தையும் அளித்தார். அவரின் லீலையையும், அற்புதமான வேலையையும், சாதுர்யத்தையும் மனிதன் பாராட்ட இயன்றபோது அவர் பெரிதும் மகிழ்ந்து திருப்தியடைந்தார். — ஸ்ரீமத் பாகவதம் 11:9:28 — இம்மானிட தேகம் எடுத்தது உண்மையிலேயே நல்ல அதிஷ்டமாகும். அந்தணர் குலத்தில் உதிப்பது அதைக் காட்டிலும் நற்பேறுடையது. அதைக் காட்டிலும் மிகச்சிறப்பான அதிஷ்டமானது சாயிபாபாவின் பாதங்களில் தஞ்சமடைந்து, சரணாகதி அடையும் வாய்ப்பைப் பெற்றதேயாகும்.
மனிதனின் முயற்சி
மனித வாழ்க்கை எவ்வளவு அருமையானதென்று உணர்ந்து, மரணம் உறுதி என்றறிந்து, அது எத்தருணத்திலும் நம்மைப் பற்றும் என்றறிந்து, நமது வாழ்க்கையின் குறிக்கோளை அடைய கூடியவரை விரைவாகச் செயல்படவேண்டும். அதாவது மனைவியை இழந்தவன் மறுமணம் புரிந்துகொள்ளக் கொண்டுள்ள மிகுதியான அக்கறை போன்றும், காணாமற்போன தன் மகனை, அரசன் சல்லடை போட்டுத் தேடுவது போன்றும் இருக்கவேண்டும். எனவே நமது இலக்கை எய்த நம்மிடத்திலுள்ள முழு ஊக்கத்துடனும், வேகத்துடனும் நாம் பாடுபட வேண்டும். அதாவது 'தன்னை உணர்தல்'. நமது சோம்பேறித்தனத்தை அகற்றிவிட்டு தூக்கத்தைக் களைந்து அல்லும், பகலும் ஆத்மஞானம் செய்தல் வேண்டும். இதைச் செய்ய நாம் தவறுவோமானால் நம்மை நாமே மிருக நிலைக்குத் தாழ்த்திக் கொண்டவர்களாவோம்.
எவ்வாறு செல்வது
கடவுள்-காட்சியைத் தாமே எய்திய தகைமையுள்ள ஞானி, முனிவர் அல்லது சத்குரு ஆகிய இவர்களை அணுகுவதே, நமது குறிக்கோளை அடைய மிகச்சிறந்த பயன் அளிக்கக்கூடியதும், துரிதமுமான வழியாகும். மதப் பிரசங்கங்களைக் கேட்டும், மத நூல்களைக் கற்றும் அடைய முடியாதவைகளை அம்மதிப்புமிக்க ஆன்மாக்களின் கூட்டுறவால் பெறலாம். சூரியன் மட்டுமே கொடுக்கும் ஒளியை, மற்றெல்லா நட்ச்சந்திரங்களும் சேர்ந்தாலும் கொடுக்க இயலாததைப் போன்றே, புனித நூல்கள் அனைத்தும், மதப்பிரசங்கங்கள் அனைத்தும் சேர்ந்து கொடுக்க இயலாத ஆத்மா விவேகத்தை சத்குரு நமக்கு அளிக்கிறார்.
அவரின் அசைவுகளும் சாதாரணப் பேச்சும் நமக்கு மௌன உபதேசத்தை நல்குகின்றது. மன்னித்தல், அடக்கம் உடைமை, அவாவின்மை, தர்மம், உதாரணகுணம், மனம் - மெய் இவற்றின் கட்டுப்பாடு, அஹங்காரமற்ற தன்மை முதலிய நற்பண்புகளெல்லாம் அத்தகைய தூய புனிதமான கூட்டுறவால் பயிற்சிக்கப்பட்டு அடியவர்களால் அனுசரிக்கப்படுகின்றன. இது அவர்களது மனதை ஒளிப்படுத்தி, ஞானத்தை நல்கி, தன்னையுணரச்செய்கிறது. சாயிபாபா அத்தகைய முன்னேற்றத்தை அருளும் 'ஞானி' அல்லது 'சத்குரு' ஆவார். பக்கிரியைப் — இரவலர் — போன்று அவர் நடித்தாலும், எப்போதும் ஆத்மாவிலேயே முற்றிலும் தன்வயப்பட்டிருந்தார். கடவுள் அல்லது தெய்வத்தன்மையை சர்வ ஜீவராசிகளும் கண்டு, அவைகளை அவர் எப்போதும் அன்பு செய்தார். இன்பங்களால் அவர் உயரவுமில்லை, துரதிஷ்டங்களால் தாழ்ச்சியுறவுமில்லை. அரசனும், ஆண்டியும் அவருக்கு ஒன்றே. எவருடைய கடைக்கண் பார்வை, பிச்சைக்காரனையும் அரசனாக்க வல்லதோ, அவர் ஷீர்டியில் வீட்டுக்கு வீடு சென்று உணவை யாசிப்பது வழக்கம். அதை அவர் எப்படிச் செய்தார் என்று இப்போது கவனிப்போம்.
பாபா உணவை இரத்தல்
பாபா, எந்த ஷீர்டி மக்களின் வீடுகள் முன்னர் ஒரு பிச்சைக்காரனைப் போல் நின்று, "ஓ! லாசி— அம்மா , ஒரு ரொட்டித்துண்டு கொடு" என்று கூவி அப்பிச்சையை ஏற்கத் தம் திருக்கரங்களை நீட்டி அருளினாரோ அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
அவர் ஒரு கையில் தகரக் குவளையும், மற்றொன்றில் ஸோலி என்ற சதுரத் துண்டும் வைத்திருந்தார். தினந்தோறும் சில குறிப்பிட்ட வீடுகளுக்கும், ஒரு வீட்டிலிருந்து மற்றொரு வீட்டிற்கும் பிச்சையெடுக்கச் சென்றார். திரவ ஆகாரமான சூப், காய்கறிகள், பால், மோர் முதலியவற்றை தகரக் குவளையிலும், சோறு, ரொட்டி முதலிய திடப் பொருட்களை துண்டிலும் வாங்கிக்கொண்டார். பாபாவுக்கு தம் நாவுமேல் கட்டுப்பாடு உண்டாதலால் அது சுவையறிவதில்லை. எனவே பல்வேறு பொருட்களை ஒன்றுகூட்டிய ருசியை எங்ஙனம் அவர் பொருட்படுத்த முடியும். துண்டிலும், தகரக் குவளையிலும் கொண்டுவரப்பட்ட எல்லா உணவுப் பொருட்களும் ஒன்று கலக்கப்பட்டு பாபாவால் அவர் மனம் நிறைவெய்தும் வண்ணம் பகிர்ந்து உட்கொள்ளப்பட்டது. சில குறிப்பிட்ட பதார்த்தங்கள் சுவையானவையாகவோ, மாறாகவோ இருப்பினும், பாபா தமது நாக்கு முழுதும் சுவையுணர்வையே இழந்துவிட்டதைப் போலக் கவனிப்பதே இல்லை.
பாபா மதியம்வரை பிச்சையெடுத்தார். ஆனால் பிச்சையெடுப்பது மிகவும் நியதியில்லாதிருந்தது. சில நாட்களில் சில சுற்றுக்களே சென்றார். சில நாட்களில் பகல் பன்னிரண்டு மணிவரையும் எடுத்தார். இவ்வாறு சேர்க்கப்பட்ட உணவு, ஒரு சட்டியில் கொட்டப்பட்டது. நாய்களும், காக்கைகளும், பூனைகளும் அதிலிருந்து தாராளமாக சாப்பிட்டன. பாபா அவைகளை விரட்டியதே இல்லை. மசூதியைப் பெருக்கிய பெண்மணி பத்து அல்லது பன்னிரண்டு ரொட்டித் துண்டுகளைத் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றாள். அவள் அங்ஙனம் செய்வதை யாரும் தடை செய்யவில்லை. கனவில் கூடப் பூனைகளையும், நாய்களையும் கடுஞ்சொற்களாலோ, ஜாடைகளாலோ விரட்டியறியாத அவர், எங்ஙனம் ஏழ்மையான திக்கற்ற மக்களுக்கு உணவை மறுக்க இயலும்? அத்தகைய உயர் குணமுடையவரின் வாழ்க்கை உண்மையிலேயே ஆசிகள் நிரம்பப்பெற்றதாகும்.
ஷீர்டி மக்கள் அவரை ஆரம்ப காலத்தில் ஒரு கேனைப் பக்கிரியாகக் கருதினர். இப்பெயராலேயே அவர் அறியப்பட்டார். இரந்த பிச்சையான சில ரொட்டித்துண்டுகளை உண்டு வாழ்ந்த அவர் எங்ஙனம் மதிக்கப்பட்டு, மரியாதை செய்யப்பட முடியும். ஆனால் இந்தப் பக்கிரியோ உள்ளத்திலும், கையிலும் மிகவும் தாராளமானவராகவும், அவாவற்றவராகவும், தர்ம சிந்தையுடையவராகவும் இருந்தார். ஸ்திரமில்லாதவராயும், இருப்புக்கொள்ளாதவராயும் புறத்தில் தோன்றினாலும் அகத்தில் உறுதியுள்ளவராயும், நிதானம் உள்ளவராயும் இருந்தார். அவருடைய வழியோ அறிவுக்கெட்டாதது. எனினும் அச்சிறு கிராமத்தில்கூட அன்பும், ஆசீர்வாதமும் உள்ள சிலர் பாபாவை பரமாத்மா என்றே உணர்ந்து மதித்தனர். அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி கீழே தரப்பட்டுள்ளது.
பாயஜாபாயின் உன்னத சேவை
தாத்யா கோதே பாடீலின் தாயார் பாயஜாபாயி ஆவார். அவர் தினந்தோறும் மதியம் ரொட்டியும், காய்கறிகளும் அடங்கிய கூடையை தன் தலையில் வைத்துக்கொண்டு காடுகளுக்குப் போவது வழக்கம். புதர், பூண்டுகளில் பல மைல் கணக்கில் அவ்வம்மையார் அலைந்து திரிந்து கேனைப் பக்கிரியைக் கண்டுபிடித்து, அவர் பாதத்தில் வீழ்ந்து, அடக்கமாகவும், அசைவில்லாமலும் தியானத்தில் அமர்ந்திருக்கும் அவர் முன்னர் இலையை விரித்து ரொட்டி, காய்கறிகள் மற்ற உணவுப் பொருட்கள் முதலியவற்றை அதன்மேல் வைத்து அவரை பலவந்தமாக உண்பித்தார். பாயஜாபாயின் நம்பிக்கையும், சேவையும் வியக்கத்தக்கதாகும். ஒவ்வொரு நாளும் அவர் காட்டில் மதிய வேளைகளில் அலைந்து திரிந்து, உணவை உண்ணும்படி பாபாவை வற்புறுத்தினார்.
அவருடைய சேவை, உபாசனை, தவம் என்று எவ்விதப் பெயரிட்டு அதை நாம் அழைத்தாலும், இறுதி மூச்சு வரையிலும் பாபா அதனை மறக்கவில்லை. அவர் செய்த சேவையை முழுமையும் ஞாபகத்தில்கொண்ட பாபா, அவரது மகனுக்கு அபாரமான அளவிற்கு உதவிசெய்தார். தாய்க்கும், மகனுக்கும் அவர்களது கடவுளான பக்கிரியின் மீது பெருமளவிற்கு நம்பிக்கை இருந்தது. பாபா அவர்களிடம் அடிக்கடி, "ஆண்டித்தனமே உண்மையான பிரபுத் தன்மையாகும். ஏனெனில், அது எப்போதும் நிலைத்திருக்கிறது. புகழ்பெற்ற பிரபுத்தனமெல்லாம் — செல்வமெல்லாம் — நிலையற்றவை" என்று கூறுவார். சில ஆண்டுகளுக்குப் பின்னால் பாபா காட்டுக்குப் போவதை விட்டுவிட்டு கிராமத்தில் வசிக்கத் தொடங்கினார். தமது உணவை மசூதியிலேயே உட்கொள்ளத் தொடங்கினார். அதிலிருந்து பாயஜாபாஜின் காடுகளில் சுற்றி அலையும் தொந்தரவுகள் முற்றுப்பெற்றன.
மூவரின் படுக்கையிடம்
எவர்களின் உள்ளத்தில் வாசுதேவர் உறைகிறாரோ, அந்த ஞானிகள் எப்போதும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அத்தகைய ஞானிகளின் கூட்டுறவைப் பெறும் அதிஷ்டமுடைய பக்தர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தாத்யா கோதே பாடீல், பகத் மஹல்ஸாபதி என்ற அத்தகையான இரு அதிஷ்டசாலிகள் சாயிபாபாவின் கூட்டுறவைச் சமமாகப் பங்கிட்டுக் கொண்டனர். பாபாவும் அவர்கள் இருவரையும் சமமாக நேசித்தார். இம்மூவரும் தங்கள் தலைகள் எல்லாம் கிழக்கு, மேற்கு, வடக்கு நோக்கி இருக்கும்படியும், தங்கள் கால்கள் எல்லாம் சந்திக்கும்படியும் மசூதியில் தூங்கினர். தங்களது படுக்கையை விரித்து அதன்மீது படுத்துக்கொண்டு பல விஷயங்களைப்பற்றி அரட்டையடித்துக்கொண்டும், வம்பு பேசிக்கொண்டும் நள்ளிரவு நெடுநேரம்வரை படுத்திருப்பர்.
அவர்களுள் யாருக்காவது தூக்க அடையாளம் தென்பட்டால் மற்றவர்கள் அவரை எழுப்பிவிடவேண்டும். உதாரணமாகத் தாத்யா குறட்டைவிடத் தொடங்கினால் பாபா உடனே எழுந்திருந்து பக்கவாட்டில் அவரை அசைத்து, தலையை அழுத்தியும், மஹல்ஸாபதி அவ்வாறு தூங்கினால் அவரை நெருங்கிக் கட்டியணைத்தும், அவரது முதுகைப் பிடித்துவிட்டும், கால்களை உதைத்தும் எழுப்பிவிடுவார். இவ்விதமாகப் பதினான்கு முழு ஆண்டுகளும், பாபாவின் மீதுள்ள அன்பால் தனது வீட்டிலுள்ள பெற்றோரை விட்டுவிட்டுத் தாத்யா மசூதியில் தூங்கினார். எத்துணை மகிழ்ச்சியும், மறக்க இயலாததுமான அத்தகைய நாட்கள்! அவ்வன்பை எவ்வாறு அளப்பது?! பாபாவின் ஆசியை எங்ஙனம் மதிப்பிடுவது?! தனது தந்தை காலமானதும் தாத்யா குடும்பப் பொறுப்பை ஏற்றார். பின்பு தமது வீட்டிலேயே தூங்க ஆரம்பித்தார்.
ராஹதாவைச் சேர்ந்த குஷால்சந்த்
ஷீர்டியைச் சேர்ந்த கண்பத் கோதே பாடீலை பாபா விரும்பினார். அதற்குச் சமமாக ராஹதாவைச் சேர்ந்த சந்த்ரபன்சேட் மார்வாடியையும் விரும்பினார். இந்த சேட் காலமான பின்பு அவர் சகோதரர் புத்திரரான குஷால்சந்த்தை அதற்குச் சமமாக அல்லது அதற்கு அதிகமாகவே கூட அன்பு செலுத்தி, அல்லும்-பகலும் அவர் நலத்தில் கண்ணாய் இருந்தார். சில சமயங்களில் மாட்டு வண்டியிலோ அல்லது குதிரை வண்டியிலோ நண்பர்களுடன் பாபா ராஹாதாவிற்குச் செல்வார். அக்கிராமத்து மக்கள் பேண்ட் வாத்திய இசையுடன் வந்து, கிராமத்தின் நுழைவாயிலில் பாபாவை வரவேற்று, அவர் முன்னால் வீழ்ந்து வணங்குவார்கள். பெரும் வியப்பொலியுடனும், விழாக்கோலத்துடனும் அவர் கிராமத்துக்குள் அழைத்துச் செல்லப்படுவார். குஷால்சந்த் அவரைத் தன் வீட்டுக்கு அழைத்துச்சென்று வசதியாக ஆசனத்தில் அமர்த்தி நல்ல உணவளிப்பார். பின்னர் அவர்கள் சரளமாகவும், மகிழ்ச்சியுடனும் சிறிது நேரம் உரையாடியபின் அனைவர்க்கும் மகிழ்ச்சியையும், ஆசியையும் நல்கிவிட்டு பாபா ஷீர்டிக்குத் திரும்புவார்.
தெற்கே ராஹாதாவுக்கும், வடக்கே நீம்காவனுக்கும் இடையே சரியான மையப்பகுதியில் ஷீர்டி அமைந்துள்ளது. இந்த இடங்களுக்கு அப்பால், பாபா தமது வாழ்நாளில் சென்றதில்லை. அவர் எவ்வித ரயில் வண்டியையும் பார்த்ததோ, பிரயாணம் செய்ததோ கிடையாது. எனினும் எல்லா வண்டிகள் வரும், புறப்படும் நேரங்கள் எல்லாம் மிகச் சரியாகவே பாபாவுக்குத் தெரியும். தாங்கள் பாபாவிடம் விடைபெற்றுக்கொண்டபோது அவரின் அறிவுரைகளின்படி நடந்தவர்கள் நன்மையடைந்தனர். அதை மதிக்காதவர்கள் பலவித துர்ச்சம்பவங்களுக்கும், விபத்திற்கும் உள்ளானார்கள். இதைப்பற்றியும் இன்னும் பல நிகழ்ச்சிகள் குறித்தும் அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.
குறிப்பு: இவ்வத்தியாயத்தின் முடிவில் கொடுக்கப்பட்ட நிகழ்ச்சி குஷால்சந்த் மீது பாபா செலுத்திய அன்பையும், அவர் ஒருநாள் மாலை காகா சாஹேப் தீஷித்தை ராஹாதாவுக்குச் சென்று குஷால்சந்தை அழைத்து வரும்படி கூறியதும், அத்தருணத்திலேயே குஷால்சந்தின் மதியத் தூக்கத்தில் கனவில் தோன்றி ஷீர்டிக்கு வரும்படி கூறியதும், இங்கு விவரிக்கப்படவில்லை. காரணம் பின்வரும் 30ஆம் அத்தியாயத்தில் அது விவரிக்கப்பட்டிருக்கிறது.
ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
ஆணைகளுக்குக் கீழ்ப்படிதல்
• கீழ்ப்படியாதிருத்தலின் விளைவு
• சில நிகழ்ச்சிகள்
• பிச்சை எடுப்பதும் அதன் அவசியமும்
• பக்தரின்— தர்கட் — குடும்ப அனுபவம்
• பாபா எவ்வாறு திருப்தியுடன்
உண்பிக்கப்பட்டார்
முந்தைய அத்தியாயத்தின் முடிவில், விடைபெறும்போது பாபாவின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிந்தவர்கள் நன்மையடைந்தனர் என்றும், அவைகளுக்குக் கீழ்ப்படியாதவர்கள் பல துர்ச்சம்பவங்களுக்கு ஆளானார்கள் என்றும் மட்டுமே கூறப்பட்டது. சில குறிப்பிட்ட நிகழ்ச்சிகளாலும் மற்றும் சம்பவங்களாலும் இக்கூற்று விவரமாக இந்த அத்தியாயத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
ஷீர்டி புனித யாத்திரையின் குணாதிசயம்
ஷீர்டி புனித யாத்திரையின் ஒரு சிறப்பான வினோதம் என்னவென்றால் எவரும் ஷீர்டியை விட்டு பாபாவின் அனுமதியின்றி அகன்று செல்லமுடியாது. அப்படிச் செல்வாரேயானால், அவர் சொல்லற்கரிய தொல்லைகளை வரவேற்கிறார். ஆனால் எவரேனும் ஷீர்டியைவிட்டு வெளியேறிச் செல்லும்படி பாபாவால் கேட்டுக்கொள்ளப்பட்டால் அவர் அங்கு அதற்குமேல் தங்கியிருக்கமுடியாது. பக்தர்கள் பாபாவிடம் சென்று வந்தனம் செய்து விடைபெற்றுச் செல்லப்போகும்போது அவர் சில யோசனைகளை அல்லது குறிப்புக்கள் வழங்குவார். இந்த யோசனைகளை பின்பற்றப்பட வேண்டும். இவைகள் பின்பற்றப்படாவிட்டாலும் அல்லது விலக்கப்பட்டு இந்தாலும், அங்ஙனம் தூண்டுரைகளுக்கு மாறாக நடந்தவர்களுக்கு விபத்துக்கள் நேரிடுவது உறுதி. இதைப்பற்றிச் சில நிகழ்ச்சிகளைக் கீழே குறிப்பிடுகிறோம்.
தாத்யா கோதே பாடீல்
தாத்யா கோதே பாடீல், ஒருமுறை கோபர்காவன் கடைவீதிக்குக் குதிரை வண்டியில் சென்று கொண்டிருந்தார். அவர் மசூதிக்கு அவசரமாகத் திரும்பிவந்து பாபாவை வணங்கி,தான் கோபர்காவன் கடைவீதிக்குச் செல்லப்போவதாகக் கூறினார். பாபாவோ, "அவசரப்படாதே. சிறிது தாமதித்துக் கடைவீதிக்குச் செல், கிராமத்தை விட்டு வெளியே செல்லாதே" என்றார். ஆனால் போவதற்கு அவருடைய வேகத்தைக்கண்ட பாபா, ஷாமாவையாவது — மாதவராவ் தேஷ்பாண்டே — உடன் அழைத்துச் செல்லுமாறு கூறினார். இவ்வுத்தரவைப் பொருட்படுத்தாது தாத்யா கோதே, உடனே குதிரை வண்டியை ஓட்டிச் சென்றார். இரண்டு குதிரைகளில், ரூ.300 விலையுள்ள குதிரை மிகவும் சுறுசுறுப்பாகவும், இருப்புக்கொள்ளாமலும் இருந்தது. ஸாவ்லிவிஹீர் கிராமத்தைத் தாண்டியபிறகு, அது தாறுமாறாக ஓடத் தொடங்கியது. இடுப்பில் சுளுக்கு ஏற்பட்டுக் கீழே விழுந்துவிட்டது. தாத்யா அதிகமாகக் காயப்படவில்லை. ஆனால் சாயிபாபாவின் உத்தரவை நினைவிற்கொண்டார். மற்றொரு சந்தர்ப்பத்தில் கோல்ஹார் கிராமத்துக்குச் செல்லும்போது, பாபாவின் நெறிமுறையை மதிக்காமல் குதிரை வண்டியில் சென்றபோது அதுவும் இதே கதிக்கு இலக்காகியது.
ஐரோப்பிய பெருந்தகை
ஷீர்டிக்கு ஒருமுறை ஒரு ஐரோப்பியப் பெருந்தகை, ஏதோ ஒரு குறிக்கோளுடன், நானா சாஹேபின் அறிமுகக் குறிப்புடன் வந்தார். ஒரு கூடாரத்தில் சௌகரியமாகத் தங்கவைக்கப்பட்டார். அவர் பாபாவின் முன் மண்டியிட்டு பாபாவின் கையை முத்தமிட விரும்பினார். எனவே அவர் மூன்றுமுறை மசூதிக்குள் நுழைய முயன்றார். ஆனால் அவர் அப்படிச் செய்வதை பாபா தடுத்துவிட்டார். கீழேயுள்ள திறந்தவெளி முற்றத்தில் அமர்ந்து, பாபாவின் தரிசனத்தைச் செய்யும்படி கேட்கப்பட்டார். தமக்கு அழிக்கப்பட்ட வரவேற்பைக்கண்டு மகிழாத ஐரோப்பியர், ஷீர்டியைவிட்டு உடனே புறப்படவிரும்பி விடைபெறுவதற்காக வந்தார். பாபா அவரை அடுத்தநாள் போகும்படியும், அவசரப்பட வேண்டாம் என்றும் கூறினார். மக்களும் அவரை பாபாவின் அறிவுரையின்படியே செய்ய வேண்டிக்கொண்டனர்.
இவற்றையெல்லாம் செவிமடுக்காது, அவர் ஒரு குதிரை வண்டியில் ஷீர்டியைவிட்டுப் புறப்பட்டார். முதலில் குதிரைகள் ஒழுங்காக ஓடின. ஆனால் ஸாவ்லிவிஹீர் கிராமத்தைத் தாண்டியதும், எதிரில் ஒரு சைக்கிள் வந்தது. இதைக்கண்டு குதிரைகள் மிரண்டு வேகமாக ஓடின. குதிரைவண்டி தலைகீழாகக் கவிழ்ந்து, அந்தப் பெருந்தகை கீழே விழுந்து சிறிது தூரம் தரையில் இழுத்துச் செல்லப்பட்டார். உடனேயே அவர் காப்பாற்றப்பட்டார் என்றாலும், தனக்கு ஏற்பட்ட காயங்களைக் குணப்படுத்துவதற்காக கோபர்காவன் மருத்துவமனைக்குச் சென்று படுக்க வேண்டியதாயிற்று. இத்தகைய அனுபவங்கள் கணக்கில் அடங்கா. பாபாவின் ஆணைகளுக்குக் கீழ்ப்படியாதவர்கள் ஏதோ ஒரு விதத்தில் விபத்துக்குள்ளானார்கள் என்றும் அவைகளுக்குக் கீழ்ப்படிந்தவர்களோ பத்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தனர் என்றும் எல்லா மக்களும் பாடம் கற்றுக்கொண்டனர்.
பிச்சை எடுப்பதன் தேவை
பிச்சை எடுப்பதைப்பற்றிய கேளிவிக்குத் தற்போது திரும்புவோம். பாபா உண்மையிலேயே அத்தகைய பெரிய சிறப்புடையவராக, கடவுளாக இருந்தால் தமது வாழ்நாள் முழுக்கப் பிச்சையெடுக்கும் வழக்கத்தைப் ஏன் அவர் மேற்கொண்டவராய் இருத்தல் வேண்டும்? என்னும் கேள்வி சிலரது உள்ளத்தில் எழக்கூடும். இக்கேள்வி, இரண்டு நோக்கு நிலைகளில் கருதப்பட்டு விடையிறுக்கப்படலாம்.
(1) பிச்சையெடுத்து வாழ்வதற்கு உரிமையுள்ள தகுதியான மக்கள் யார்? வம்சாவிருத்தி, செல்வம், புகழ் இம்மூன்று முக்கிய ஆசைகளையும் துறந்து, துறவை மேற்கொள்வோரே பிச்சையெடுத்து வாழத் தகுதியுடையோராவர் என்று நமது சாத்திரங்கள் பகருகின்றன. இவர்கள் சமைப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்து வீட்டில் உண்ணமுடியாது. அவர்களை உண்பிக்கவேண்டிய கடமை இல்லறத்தாரின் தோள்களில் விழுகிறது.
சாயிபாபா இல்லறத்தாருமல்ல, வானப்பிரஸ்தருமல்ல. அவர் பிரம்மச்சர்யம் அனுஷ்டித்த ஒரு துறவி, அதாவது சிறுபருவம் முதற்கொண்டே துறவியாவார். இப்பிரபஞ்சமே தமது வீடு என்பதும், தாமே பிரபஞ்ச ஆதாரமும், அழிவற்ற பிரம்மமுமாகிய பகவான் வாசுதேவர் என்பதும் அவருடைய உறுதியான அபிப்பிராயமுமாகும். எனவே அவருக்கு இறந்து உண்ணும் வழக்கத்திற்கு முழு உரிமை இருக்கிறது.
(2) மற்றவை கீழ்கண்ட நிலையின்படி, பஞ்ச்ஸுனா - ஐந்து பாவங்களும் அவைகளின் பிராயச்சித்தமும், உணவுப்பொருட்களும், சாப்பாடும் தயாரிப்பதற்காக இல்லறத்தார் ஐந்து செயல்கள் அல்லது நடைமுறைகளை மேற்கொள்ளவேண்டியதாய் இருக்கிறது. அதாவது,
1. கண்டணீ - பொடியாக்குதல்
2. பேஷணீ - அரைத்தல்
3. உதக்கும்பி - பானைகளைக் கழுவுதல்
4. மார்ஜனீ - பெருக்கிச் சுத்தப்படுத்துதல்
5. சுள்ளீ - அடுப்பு பற்றவைத்தல்
இச்செயல்முறைகள் எல்லாம் ஏராளமான சிறிய கிருமிகளையும், ஜந்துக்களையும் கொல்வதற்கு ஏதுவாகிறது.
இவ்வாறாக இல்லறத்தார்கள் ஓரளவு பாவத்தைச் செய்தவர்களாகிறார்கள். இப்பாவத்துக்குப் பரிகாரமாக நமது சாத்திரங்கள் ஆறுவகையான தியாகங்களைச் செய்யப் பகர்கின்றன.
1. பிரம்மயக்ஞம் அல்லது பிரம்மதுக்குச் சமர்ப்பித்தல்
2. வேத அத்யயனம் அல்லது வேத பராயணம்
3. பித்ரு யக்ஞம் - மூதாதையர்களுக்குச் சமர்ப்பித்தல்
4. தேவ யக்ஞம் - தேவதைகளுக்குச் சமர்ப்பித்தல்
5. பூத யக்ஞம் - ஜந்துக்களுக்குச் சமர்ப்பித்தல்
6. மனுஷ்ய அதிதி யக்ஞம் - மனிதர்களுக்கும்
அழைக்கப்படாத விருதாளிகளுக்கும் சமர்ப்பித்தல்
சாஸ்திரப்படி இந்தத் தியாகங்களை முறையாக அனுசரித்தால் மனத்தூய்மை பெற்று, ஞானமும், தன்னையுணர்தலையும் பெற உதவும். பாபா வீட்டுக்கு வீடு சென்றதன் மூலம் இல்லறத்தார்க்கு அவர்களின் புனிதக்கடமையை ஞாபகப்படுத்தினார். பாபாவால் தங்கள் வீட்டிலேயே இங்ஙனம் பாடம் கற்பிக்கப்பட்டவர்கள் பேறுபெற்ற மக்கள் ஆவார்கள்.
பக்தர்களின் அனுபவங்கள்
இன்னும் அதிக விருவிருப்புள்ள விஷயத்துக்குத் தற்போது திரும்புவோம். கிருஷ்ண பரமாத்மா, பகவத்கீதையில் "அன்புடனும், பக்தியுடனும் யாரொருவர் எனக்கு ஓர் இலை, மலர், பழம், அல்லது நீரை சமர்ப்பிக்கிறாரோ, அந்தத் தூய்மையான தன்னடக்கமுடைய அன்புக்காணிக்கையானது ஆர்வத்துடனும், தாமதமின்றியும் என்னால் ஏற்றுக்கொள்ளபடுகிறது" என்று கூறியிருக்கின்றார்.
சாயிபாபாவின் விஷயத்தில் ஓர் பக்தர் உண்மையிலேயே எதையாவது சமர்ப்பிக்க விரும்பியிருந்து, பின்னால் அதையே சமர்ப்பிக்க அவர் மறைந்துவிட்டாரெனினும், பாபா அவருக்கு அல்லது அவரது நண்பருக்கு அந்தக் காணிக்கையை ஞாபகப்படுத்தி, அவரை அளிக்கச்செய்து, அதை ஏற்றுக்கொண்டு பக்தரை ஆசீர்வதிக்கிறார். இதுபோன்ற சில நிகழ்சிகள் கீழே குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
தர்கட் குடும்பம் — தந்தையும் மகனும்
முன்னர், பிரார்த்தனா சமாஜத்தைச் சேர்ந்த ராமச்சந்திர ஆத்மாராம் என்னும் பாபா சாஹேப் தர்கட் சாயிபாபாவின் ஓர் உறுதியான பக்தர் ஆவார். அவருடைய மனைவியும், மகனும் சாயிபாவிடம் அதற்கு இணையாகவே அல்லது இன்னும் சற்று அதிகமாகவே கூட அன்பு செலுத்தினர். ஒருமுறை திருமதி தர்கட்டும், அவர்களது மகன் தர்கட்டும் மே மாத விடுமுறைக்கு ஷீர்டிக்குப் போவது எனத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் மகன் போக விரும்பவில்லை. காரணம் அவன் பாந்த்ரா வீட்டைவிட்டுப் போவானாகில் வீட்டில் சாயிபாபாவின் பூஜை முறையாகக் கவனிக்கப்படமாட்டாது என்று அவன் கருதியதேயாகும். ஏனெனில், அவனது தகப்பனார் பிரார்த்தனா சமாஜத்தைச் சேர்ந்தவராதலால் சாயிபாபாவின் பெரிய படத்தைப் பூஜை செய்வதை அவர் இலட்சியம் செய்யமாட்டார் என்று அவன் கருதினான். எனினும் தனது மகன் செய்வதைப்போன்று அதே விதமாக, தான் பூஜா கர்மங்களைச் செய்வதாக அவர் உறுதியாக வாக்களித்த பின்பு ஒரு வெள்ளிக்கிழமை இரவு தாயும், மகனும் ஷீர்டிக்குப் புறப்பட்டனர்.
அடுத்த நாள் — சனிக்கிழமை — தர்கட் அதிகாலையில் எழுந்திருந்து பூஜை செய்வதற்குமுன் நீராடிவிட்டுப் பூஜை அறையில் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து, "பாபா, எனது மகன் செய்த அதேமாதிரியாக நான் பூஜை செய்யப்போகிறேன். ஆனால் தயவுசெய்து அதை ஒரு இயந்திரகதியான பயிற்சியாக ஆக்கிவிடாதீர்கள்", என்று கூறிக்கொண்டே பூஜை செய்து, சில கற்கண்டுகளை நைவேத்தியமாகச் சமர்ப்பித்தார். அக்கற்கண்டு பகல் உணவின்போது பகிர்ந்தளிக்கப்பட்டது.
அந்நாள் மாலையும், அதன்பின்னர் ஞாயிற்றுக்கிழமையும் எல்லாம் நலமாகவே நடந்தேறின. தொடர்ந்து வேலைநாளான திங்கட்கிழமையும் நன்றாகவே கழிந்தது. தனது வாழ்நாளிலேயே இம்மாதிரியாகப் பூஜை செய்தறியாத தர்கட் தன மகனுக்கு வாக்களித்தபடி எல்லாம் மிகவும் திருப்திகரமானமுறையிலேயே நடந்தேறிக்கொண்டிருப்பதில் தனக்குள்ளேயே பெருமளவு நம்பிக்கை பெற்றார். அடுத்த நாளான செவ்வாயன்று வழக்கம்போல் காலையில் பூஜை நிகழ்த்தியபின் தனது வேலைக்குச் சென்றார். மதியம் வீட்டுக்கு வந்து உணவு பரிமாறப்பட்டபோது, பகிர்ந்துகொள்ள கற்கண்டு பிரசாதம் இல்லாததைக் கண்டார். அவர் தமது சமையல்காரனை விசாரித்ததில், காலையில் எவ்வித நைவேத்யமும் செய்யப்படவில்லை என்று அறிந்தார். பூஜையின் அந்த அம்சத்தை நிகழ்த்த அவர் அடியோடு மறந்துவிட்டிருந்தார். இதுகுறித்து தனது இருக்கையைவிட்டு எழுந்திருந்து பூஜையறையில் விழுந்து வணங்கி, தமது தவறுதலுக்காக வருத்தம் தெரிவித்து, அதே நேரத்தில் இத்தகைய ஒரு சாதாரணமான நடைமுறை விஷயத்தில் வழிகாட்டாததற்காக பாபாவை அவர் கடிந்துகொண்டார். பின்பு தனது மகனுக்கு உண்மைகளைக்கூறி ஒரு கடிதம் எழுதி அதை பாபாவின் பாதத்தடியில் வைத்து புறக்கணிப்பிற்காகத் தம்மைப் பொறுத்தருளவும் வேண்டுமாறு எழுதியிருந்தார். செவ்வாய்க்கிழமை மதியத்தில் பாந்த்ராவில் இது நிகழ்ந்தது.
ஏறக்குறைய இதே நேரத்தில் ஷீர்டியில் மத்தியான தீபாராதனை நிகழ்வதற்குச் சிறிது முன்பாக பாபா திருமதி கர்கட்டை நோக்கி, "அம்மா, பாந்த்ராவில் உள்ள உனது வீட்டிற்கு ஏதேனும் உண்ணலாம் என்ற எண்ணத்துடன் சென்றிருந்தேன். கதவு பூட்டப்பட்டிருப்பதைக் கண்டேன். எப்படியோ உள்ளே நுழைந்து, பாவ் — தர்கட் , நான் உண்பதற்கு ஏதும் விட்டுவைக்கவில்லை என்பதை வருத்தத்துடன் அறிந்தேன். எனவே பசி தணிக்கப்படாமலேயே திரும்பிவிட்டேன்", என்று கூறினார்.
அப்பெண்மணிக்கு இது ஒன்றும் புரியவில்லை. அருகிலிருந்த மகனோ அதாவது பாந்த்ராவில் பூஜைஜில் ஏதோ தவறு நிகழ்ந்திருக்கிறது என்று அனைத்தையும் புரிந்துகொண்டு, வீடு திரும்ப பாபாவின் அனுமதியை வேண்டினான். பாபா இதை மறுத்தார். எனினும் அங்கேயே அப்பையனைப் பூஜைசெய்ய அனுமதித்தார். அப்போது ஷீர்டியில் நிகழ்ந்த விபரங்களையெல்லாம் பற்றி பையன், தகப்பனாருக்கு ஒரு கடிதம் எழுதி, வீட்டில் பூஜையை அலட்சியம் செய்யவேண்டாமென்று மன்றாடி வேண்டியிருந்தான். இரண்டு கடிதங்களும் ஒன்றையொன்று தாண்டிப்போய் இருவருக்குமே அடுத்தநாள் கிடைத்தன. இது ஓர் அற்புதமல்லவா?
திருமதி தர்கட்
தற்போது திருமதி தர்கட்டின் நிகழ்ச்சியை எடுத்துக்கொள்வோம். அவள் மூன்று பொருட்களைச் சமர்ப்பித்தாள். அதாவது, (1) பரீத் — கத்தரிக்காய் தயிர் பச்சடி , (2) காச்சர்யா — முழு கத்தரிக்காய் பொரியல் , (3) பேடா — பால் கேக் . இவற்றை பாபா எங்கனம் ஏற்றுக்கொண்டார் என்பதைப் பார்ப்போம்.
ஒருமுறை பாபாவின் பெரும் பக்தரான, பாந்த்ராவைச் சேர்ந்த ரகுவீர் பாஸ்கர் புரந்தரே என்பவர் ஷீர்டிக்கு தன் குடும்பத்துடன் புறப்பட்டார். பாந்த்ராவில் திருமதி புரந்தரேயிடம், திருமதி தர்கட் சென்று, அவளுக்கு இரண்டு கத்தரிக்காய்கள் அளித்து, ஷீர்டியில் ஒரு கத்தரிக்காயில் பரீத்தும், மற்றதில் காச்சர்யாவும் செய்து, பாபாவுக்கு அவற்றைப் பரிமாறும்படி கூறியிருந்தாள். ஷீர்டியை அடைந்தபின்னர், திருமதி புரந்தரே தனது பரீத்துடன் மசூதிக்குச் சென்ற அதே தருணத்தில், பாபா தமது சாப்பாட்டிற்காக அமர்ந்து கொண்டிருந்தார். பாபா, பரீத் மிகவும் ருசியாக இருப்பதைக் கண்டார். எனவே அதை அவர் அனைவருக்கும் பகிர்ந்தளித்துத் தனக்கு இப்போது காச்சர்யா வேண்டுமெனக் கூறினார்.
ராதாகிருஷ்ணமாயிக்கு, பாபா காச்சர்யாக்கள் வேண்டுகிறார் என்ற செய்தி அனுப்பப்பட்டது. அது கத்தரிக்காய் சீசன் இல்லையாதலால் அவள் குழப்பமடைந்தாள். கத்தரிக்காயை எப்படிப் பெறுவது என்பதே தற்போதைய பிரச்சினை. பரீத்தை யார் கொண்டுவந்தார் என்று விசாரித்ததில் காச்சர்யா பரிமாறும் பணியிலும் திருமதி புரந்தரே ஒப்புவிக்கப்பட்டிருந்தாள் என அறியப்பட்டது. காச்சர்யாவைப் பற்றியா பாபாவின் வேண்டுதலின் உட்குறிப்பை அனைவரும் புரிந்துகொண்டனர். எங்கும் வியாபித்திருக்கும் அவர்தம் ஞானத்தைக் கண்ட அனைவரும் ஆச்சரியத்தில் செயலிழந்தனர்.
1915ஆம் வருடம் மார்கழி மாதத்தில் கோவிந்த் பாலாராம் மாநகர் என்பவன் தனது தந்தையின் திவசங்களையெல்லாம் செய்வதற்காக, ஷீர்டிக்குச் செல்ல விரும்பினான். புறப்படுவதற்குமுன் திருமதி தர்கட்டைப் பார்க்க வந்தான்.
அப்போது பாபாவுக்கு ஏதேனும் கொடுத்தனுப்ப வேண்டுமென்று திருமதி தர்கட் நினைத்தாள். வீடு அனைத்திலும் தேடியும் முன்னமே நைவேத்தியமாக அளிக்கப்பட்டிருந்த பேடா ஒன்றைத் தவிர வேறெதையும் அவள் காணவில்லை. பையன் கோவிந்த் மிகவும் துயர் கொண்ட நிலையில் இருந்தான். எனினும் பாபாவிடம் கொண்டுள்ள பெரும் பக்தியின் காரணமாக அவனிடம் பேடாவைக் கொடுத்து அனுப்பினாள். பாபா அதனை ஏற்றுக்கொள்வார் என நம்பினாள்.
கோவிந்த் ஷீர்டிக்குச் சென்று பாபாவைக் கண்டான். ஆனால் பேடாவைத் தன்னுடன் எடுத்துச் செல்ல மறந்துவிட்டான். பாபா பொறுத்திருந்தார். மறுபடியும் மாலையில் சென்றபோதும் பேடாவைக் கொண்டுசெல்லாமல் வெறுங்கையுடன் சென்றான். பாபா இதற்குமேல் பொறுக்க இயலாதவராய், "எனக்கு நீ என்ன கொண்டுவந்திருக்கிறாய்", என்று கேட்டார். "ஒன்றுமில்லை" என்று பதில் வந்தது. மீண்டும் பாபா அவனைக் கேட்டார். அதே பதில்தான் அளிக்கப்பட்டது. பின்னர் பாபா, "நீ புறப்படும்போது அம்மா உன்னிடம் எனக்காக இனிப்புப் பலகாரம் கொடுக்கவில்லையா?", என்ற குறிப்பான வினாவொன்று கேட்டார். உடனே பையனுக்கு எல்லாம் நினைவு வந்தது. வெட்கமடைந்து பாபாவிடம் தன்னை மன்னிக்க வேண்டிக்கொண்டு தான் பாபாவிடம் இருந்த இடத்திற்கு ஓடிப்போய் பேடாவைக் கொண்டுவந்து பாபாவிடம் கொடுத்தான். கையில் அதைப் பெற்றவுடனேயே, பாபா வாயிலிட்டுப் பேராவலுடன் விழுங்கிவிட்டார். இவ்வாறாகத் திருமதி தர்கட்டின் பக்தி கண்டுணரப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. "மனிதர் எவ்விதம் என்னை நம்புகிறார்களோ, அவ்விதமே நான் அவர்களை ஏற்றுக்கொள்கிறேன்" — கீதை அத். 4, ஸ்லோகம் 11 — என்பது இந்நிகழ்ச்சியால் நிரூபிக்கப்பட்டது.
பாபா எவ்வாறு திருப்தியுடன் உண்பிக்கப்பட்டார்?
ஒருமுறை திருமதி தர்கட் ஷீர்டியில் ஒரு குறிப்பிட்ட வீட்டில் தங்கியிருந்தார். மதியஉணவு தயாராகி பதார்த்தங்கள் எல்லாம் பரிமாறப்படும்போது பசியுள்ள ஒரு நாய் அங்குவந்து குரைக்கத் தொடங்கியது. திருமதி தர்கட் உடனே எழுந்திருந்து ஒரு ரொட்டித்துண்டை விட்டெறியவும், அது மிகுந்த சுவையுணர்வோடு அதைக்கவ்வி விரைவாக விழுங்கிவிட்டது. பிற்பகல் அவள் மசூதிக்குச் சென்று சிறிது தூரத்தில் அமர்ந்தபோது சாயிபாபா அவளிடம், "அம்மா நான் பெருமளவு திருப்தியுறும் வகையில் எனது பிராணன்கள் யாவும் நிறைவுபெற்றன. இவ்விதமாக எப்போதுமே நடப்பாயாக. இது உன்னை நன்னிலையில் வைக்கும். இம்மசூதியில் அமர்ந்துகொண்டு பொய் பேசவே மாட்டேன். என்னிடம் இவ்விதமாக இரக்கங்கொள்வாய்.
முதலில் பசியாய் இருப்போர்க்கு உணவு கொடுத்து, பின் நீ உண்பாயாக. இதை நன்றாகக் கவனித்துக்கொள்", என்று கூறினார். முதலில் அவளால் அதன் பொருளை உணர இயலவில்லை. எனவே அவள், "எங்ஙனம் நான் தங்களுக்கு உணவு அளித்திருக்க முடியும்? நானே உணவுக்கு மற்றவர்களைச் சார்ந்து பணம் கொடுத்துச் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்", எனக் கூறினாள். இதற்கு பாபா, "அந்த கவர்ச்சிமிகு ரொட்டியை உண்டு நான் மனப்பூர்வமாகத் திருப்தியடைந்தேன். நான் இன்னும் ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கிறேன். உணவு வேலைக்கு முன்னர் நீ பார்த்து ரொட்டி அளித்த நாயானது என்னுடன் ஒன்றியதாகும். இவ்வாறாகவே மற்ற உயிரினங்களும் — பூனைகள், பன்றிகள், ஈக்கள், பசுக்கள் முதலியன — என்னுடன் ஒன்றானவைகளாகும். நான் அவைகளின் உருவத்தில் உலாவிக் கொண்டிருக்கிறேன். என்னை இவ்வனைத்துப் படைப்புயிர்களிலும் பார்க்கிறவன் எனக்கு உகந்தவன். எனவே த்வைதத்தையும், பேதத்தையும் ஒழித்து இன்று செய்ததைப்போல் எனக்குச் சேவை செய்", என்று கூறினார். இவ்வமிர்தத்தினை நிகர் மொழிகளைக் கேட்டு அவள் உருகி, அவளது கண்கள் பனித்து, தொண்டை அடைத்து அவளது மகிழ்ச்சி எல்லையற்றதாக ஆகியது.
நீதி
'கடவுளை எல்லாப் படைப்புயிர்களிலும் காண்பாயாக' என்பதே இவ்வத்தியாயத்தின் நீதியாகும். உபநிஷதங்கள், பகவத்கீதை, பாகவதம் இவைகளெல்லாம் ஜீவராசிகள் அனைத்திலும் கடவுள் அல்லது தெய்வீகத்தைக் காணும்படியாகவே வற்புறுத்தி அறிவுறுத்துகின்றன. இவ்வத்தியாயத்தின் முடிவில் சொல்லப்பட்ட நிகழ்சியாலும் இன்னும் பல சந்தர்ப்பங்களிலும், உபநிஷத போதனைகளை எவ்வாறு நடைமுறைக்குக் கொண்டுவருவது என்று சாயிபாபா விளக்கிக் காட்டியிருக்கிறார். இவ்வாறாக சாயிபாபா உபநிஷத்தின் விரிவுரையாளராக அல்லது குருவாக இருந்தருளினார்.
ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்
• அவர் படுக்கும் பலகை
• ஷீர்டியில் அவரின் வாசம்
• அவரின் அறிவுரைகள்
• அவரின் பணிவு
• மிகவும் எளிய வழி
அன்புடன் எப்போதும் அவரையே — சாயிபாபா — நினைவூட்டிக்கொள்ளுங்கள். ஏனெனில் அனைவருக்கும் நன்மை செய்யும் கவனத்தால் கவரப்பட்டு, ஆத்மாவிலேயே உறைந்து நின்றார். வாழ்வு, சாவு என்னும் புதிரை விடுவிக்கும் வழி, அவரை நினைவுபடுத்திக்கொள்வது மட்டுமே. சாதனைகளிலேயே இதுதான் மிகமிக எளியதும், சிறந்ததுமான சாதனையாகும். ஏனெனில் அது எவ்விதச் செலவையும் உள்ளடக்காதது. இங்கு ஒரு சிறு முயற்சி பெரும் பரிசுகளைக் கொணர்கிறது. நமது புலன்கள் எல்லாம் நல்லமுறையில் இருக்குந்தோறும் நிமிடத்திற்கு நிமிடம், இந்த சாதனையைப் பழகவேண்டும். மற்ற எல்லாத் தேவைகளும் வெற்றுத் தோற்றமே. குருவே ஒரே கடவுள். சத்குருவின் புனிதத் திருவடிகளை நினைவு கூர்வோமானால், அவர் மேலும் சிறப்பான நிலைக்கு நமது அதிஷ்டத்தை மாற்றிவிட இயலும். அவருக்கு சிறப்பாகச் சேவை செய்வோமானால், நாம் நமது சம்சாரத்தினின்று விடுபடுகிறோம். நியாயம், மீமாம்ஸம் போன்ற தத்துவங்களை நாம் பயிலத் தேவையில்லை.
அவரை நமது வழிகாட்டியாக நாம் அமைத்துக்கொள்வோமானால், நமது அனைத்துத் துன்பங்கள், கவலைகள் என்னும் கடலை எளிதாகக் கடந்து செல்லலாம். ஆற்றையும், கடலையும் கடப்பதில் நாம் மாலுமியை நம்பியிருப்பதைப் போன்றே, இவ்வுலக வாழ்வெனும் கடலைக் கடப்பதில், நமது சத்குருவை நாம் நம்பவேண்டும். தமது அடியவர்களின் தீவிரமான உணர்வையும், பக்தியையும் அவர் நோக்கி ஞானத்தையும், சாஸ்வதமான கழிபேருவகையையும் அவர்களுக்கு உரித்தாக்குகிறார்.
கடந்த அத்தியாயத்தில் பாபாவின் பிச்சையைப் பற்றியும், பக்தர்களின் அனுபவங்களைப்பற்றியும், மற்ற விஷயங்களைப்பற்றியும் கூறப்பட்டது. பாபா எவ்வாறு வாழ்ந்தார், எவ்வாறு தூங்கினார், எவ்வாறு கற்பித்தார் என்று வாசகர்கள் தற்போது கேட்பார்களாக!
பாபாவின் அற்புதமான படுக்கும் பலகை
பாபா எங்கு, எவ்வாறு தூங்கினார் என்பதைக் காண்போம். நான்கு முழம் நீளமும், ஒரு முழம் அகலமும் உள்ள பலகையை பாபா படுத்து உறங்குவதற்காக நானா சாஹேப் டேங்க்லே கொணர்ந்தார். அதனைத் தரையில் போட்டு அதன்மீது உறங்குவதற்குப் பதிலாக, மசூதியின் உத்தரங்களில் இற்றுப்போன கந்தல் துணிகளால் அதை ஒரு ஊஞ்சல்போல் கட்டி, அதன்மீது படுத்துறங்க ஆரம்பித்தார். எப்படி பாபாவின் உடலை அது தங்குகிறது என்பது ஒருபுறமிருக்க, தனியாகப் படுக்கையையே தாங்குவது பிரச்சனையாகவுள்ள அளவுக்கு மெல்லியதாகவும், இற்றுப்போயும் அக்கந்தல் துணி இருந்தது. ஆனால் எவ்விதமாகவோ பாபாவின் லீலையால் மட்டுமே அக்கந்தல் துணி பாபாவின் கனத்துடனும், பலகையையும் தாங்கவே செய்தது. பலகையின் நான்கு மூலைகளிலும், மூலைக்கொரு மண்விளக்கு வீதம் ஏற்றி, இரவு முழுவதும் எரிந்துகொண்டிருக்கும்படியாக வைப்பார்.
இப்பலகையின்மீது பாபா அமர்ந்து கொண்டிருப்பதையோ, துயின்றுகொண்டிருப்பதையோ கண்ணுறும் தரிசனமானது தேவர்களுக்கும் கிடைப்பதற்கு அரியதொன்றாகும்! அதில் பாபா எங்ஙனம் ஏறி இறங்கினார் என்பது அனைவருக்கும் வியப்பை விளைவிப்பதாய் இருந்தது. இதனை அறியும் ஆர்வத்துடன் பாபா ஏறுவதையும், இறங்குவதையும் காண்பதற்காகப் பல கவனமுள்ள பார்வையாளர்கள் பார்த்துக்கொண்டிருந்தபோதிலும் ஒருவரும் அதனைக் காண்பதில் வெற்றிபெறவில்லை. இவ்விசித்திரமான அருஞ்செயலை நுணுகிக் காண்பதற்காக கூட்டம் அதிரிக்கவே, ஒருநாள் பாபா பலகையைத் துண்டுதுண்டாக உடைத்து எறிந்துவிட்டார். எட்டுவிதமான மஹாசித்திகளும் — அஷ்டமா சித்திகள் — பாபாவின் ஆணையில் இருந்தன. அவர் அவைகளை ஒருபோதும் பயிற்சிக்கவோ அவைகளுக்காக ஏங்கவோ இல்லை. அவைகள் பாபாவின் முழுமையினால் தாமாகவே அவரை வந்தெய்தின.
பிரமத்தின் உருவ வெளிப்பாடு
ஐந்தடி மூன்று அங்குல உயரமுள்ள மனிதனைப்போல் பாபா தோற்றமளித்தாலும், அனைவரின் இதயத்திலும் அவர் வாழ்வார். அந்தரங்கமாக அவர் பந்தமற்றவராகவும், அக்கறையற்றவராகவும் இருந்தாலும், பகிரங்கத்தில் பொதுமக்களின் நலத்தை விரும்பினார். அகத்திலே மிகவும் ஆர்வமற்றவராக இருப்பினும், புறத்தில் தமது பக்தர்களுக்காக ஆசைகள் நிரம்பப்பெற்றவராக இருந்தார். உள்ளே சாந்தத்தின் இருப்பிடமாக அவர் இருப்பினும், வெளியில் இருப்புக் கொள்ளாதவராய் இருந்தார். அந்தரங்கமாய் பிரமானந்த நிலையை எய்தியவராய் அவர் இருந்தார். பகிரங்கமாய் பிசாசைப்போன்று நடந்துகொண்டார். அந்தரங்கமாய் அவர் அத்வைதத்தை விரும்பினார். பகிரங்கமாய் உலகோடு கட்டுப்பட்டவராய் இருந்தார். சில நேரங்களில் அனைவரையும் பாசம் ததும்ப நோக்கினார். சில சந்தர்ப்பங்களில் அவர்கள்மீது கற்களை விட்டெறிந்தார். சிலசமயம் அவர்களைக் கடிந்துகொண்டார். சில சந்தர்ப்பங்களில் அவர்களை அன்புடன் அரவணைத்தார். அமைதியாகவும், பதட்டமற்றவராகவும், பொறுமையுள்ளவராகவும், நல்ல சமநிலையுள்ளவராகவும் இருந்தார். ஆத்மாவிலேயே உறைந்து அதனாலேயே கவரப்பட்டு அதன் வயமாக ஆனார். தமது பக்தர்களுக்காகச் செய்யவேண்டியவற்றை நன்கு செய்துமுடித்தார். எப்போதும் அவர் ஒரே ஆசனத்தில் அமர்ந்திருந்தார். ஒருபோதும் பிரயாணம் செய்யவில்லை.
அவரது தண்டம் — சந்நியாசிகள், துறவின் அடையாளமாகத் தங்களுடன் வைத்திருக்கவேண்டிய நீளமான மூங்கில் கோல் — சிறு குச்சியேயாகும். சாந்தமாகவும், எண்ணங்களிலிருந்து விடுபட்டவராகவும் இருந்தார். செல்வத்தையும், புகழையும் அவர் இலட்சியம் செய்யாது, பிச்சை எடுத்தே வாழ்ந்தார். இத்தகைய வாழ்க்கையையே அவர் நடத்தினார். 'அல்லா மாலிக்' — இறைவனே எஜமான் — என்று அவர் எப்போதும் சொல்லிக்கொண்டிருந்தார். அடியவர்களிடம் அவர் கொண்டிருந்த அன்பு ஏராளமானதும், தடையற்றதுமாகும். ஆத்மஞானச் சுரங்கமாகவும், பரமானந்தம் முழுமையும் நிரம்பப்பெற்றவராகவும் இருந்தார்.
சாயிபாபாவின் தெயவீகரூபம் இத்தகையது. அத்தகைய எல்லையற்ற, முடிவற்ற, பாகுபாடற்ற புல்-பூண்டிலிருந்து பிரம்மா வரையுள்ள பிரபஞ்சமனைத்தையும் அரவணைக்கும் ஏகதத்துவமே சாயிபாபாவாக அவதரித்தது. உண்மையில் தகைமையும், நல்ல அதிஷ்டமும் பெற்ற பெற்ற மக்கள் சாயிபாபா என்ற பொக்கிஷப் புதையலைப் பெற்றனர். உண்மையான மதிப்பை அறியாதவர்கள், அவரை ஒரு மனிதனாக, சாதாரண மானிடப் பிறவியாகக் கருதினார்கள், கருதுகிறார்கள்?! அவர்கள் உண்மையிலேயே பரிதாபத்துக்கு உரியவர்கள் ஆகிறார்கள்.
பாபாவின் ஷீர்டி வாசமும்,
பிறந்த ஆண்டு பற்றிய அனுமானமும்
சாயிபாபாவின் சரியான பிறந்தநாளையும், அவரது பெற்றோரையும் ஒருவரும் அறியார்கள். அவரது ஷீர்டி வாசத்தில் இருந்து அதை ஏறக்குறையத் தீர்மானிக்கலாம். அவர் பதினாறு வயதுப் பாலகனாக இருக்கும்போது முதலில் ஷீர்டிக்கு வந்தார். மூன்றாண்டுகள் அங்கு தங்கியிருந்தார். பின்னர் திடீரென்று சிலகாலம் மறைந்துவிட்டார். சிறிது காலத்திற்குப்பின் நைஜாம் ஓளரங்கபாத்துக்கு அருகில் இருபது வயது நிரம்பி இருக்கும்போது தோன்றினார். மீண்டும் ஷீர்டிக்கு சாந்த் பாடீலின் கல்யாண கோஷ்டியுடன் திரும்பினார். பின்னர் தொடர்ந்து அறுபது ஆண்டுகள் அவர் ஷீர்டியில் வாழ்ந்தார். அதற்குப் பின்னர் 1918ஆம் ஆண்டில் மஹாசமாதி அடைந்தார். இதில் இருந்து பாபாவின் பிறந்த வருடம் ஏறக்குறைய 1838ஆக இருக்கலாம் என்று கூற இயலும்.
பாபா மேற்கொண்ட பணியும், உபதேசமும்
முனிவர் ராம்தாஸ் (1608 - 1681) பதினேழாம் நூற்றாண்டில் செழித்தோங்கி விளங்கினார். பசுக்களையும், அந்தணர்களையும், யவனர்களிடமிருந்து — மொஹலாயர்களிடமிருந்து — காப்பாற்றுதல் என்னும் தாம் மேற்கொண்ட குறிக்கோளை பெருமளவிற்கு நிறைவு செய்தார். ஆனால் அவருக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னர், இரு வகுப்பினர்களுக்குள்ளும் மீண்டும் — இந்து - முஸ்லிம்கள் — வேற்றுமை அதிகரித்தது. அந்தப் பாதாளப் பள்ளத்தினை இணைக்கும் பாலமாக சாயிபாபா விஜயம் செய்தார்.
அனைவருக்கும் அவர்தம் நிரந்தரமான உபதேசத்தின் உட்கருத்து இவ்வாறனதாகும். "ராமரும் — இந்துக்களின் தெய்வம் — - ரஹீமும் — முஸ்லிம்களின் தெய்வம் — ஒன்றே ஒன்றுதான். அவர்களுக்குள் எள்ளளவும் வேற்றமை இல்லை. பின்னர் ஏன் அவர்களின் அடியவர்கள் சச்சரவு புரிந்து தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்கின்றனர்? கள்ளங்கபடு அறியாத மக்களாக கைகோர்த்து இரு வகுப்பினரும் ஒன்றாயிணைந்து விவேகத்துடன் நடந்துகொள்ளுங்கள். இங்ஙனமாக உங்களது குறிக்கோளாகிய தேசீய ஒற்றுமையை ஈட்டப்பெறுவீர்கள். போராடி வாதாடுதல் நன்றன்று. எனவே விவாதிக்க வேண்டாம். மற்றவர்களுடன் போட்டிபோட வேண்டாம். எப்போதும் உங்களது அக்கறையினையும், நலத்தினையுமே கருத்தில் கொள்வீர்களாக.
கடவுள் உங்களைக் காப்பாற்றுவார். யோகம், தியாகம், தவம், ஞானம் என்பன கடவுளையறியும் நெறிகள். இந்த வழிகளில் ஏதேனும் ஒன்றன் மூலம் நீங்கள் இதில் வெற்றிபெற இயலாவிடின், உங்கள் பிறப்பு வீணேயாகும். யாரேனும் ஏதாவது தீமையை உங்களுக்குச் செயவாரேயாகில், அதற்க்காகப் பழிக்குப் பழி வாங்காதீர்கள். நீங்கள் ஏதேனும் செய்ய இயலுமானால், பிறருக்குச் சிறிது நன்மையைச் செய்வீராக!" இது அனைவருக்கும் சாயிபாபா அளித்த உபதேசத்தின் சுருக்கம். இது லௌகிக, ஆன்மிக விஷயங்கள் இரண்டிலுமே நலம் பயப்பதாகும்.
சத்குருவாக சாயிபாபா
ஏராளமான குருக்கள் இருக்கின்றனர். தங்கள் கரங்களில் ஜால்ரா, தாளக்கருவி, வீணை சகிதம் வீடுதோறும் சென்று ஆத்மீகத்தைப் படாடோபம் செய்துகொள்ளும் குருக்கள் உண்டு. அவர்கள் மந்திரங்களைத் தமது சீடர்களின் காதில் ஓதி அவர்களிடமிருந்து பணத்தைக் கறப்பர். தமது சீடர்களுக்கு கடவுள் பற்றையும், கடவுள் நம்பிக்கையையும் உபதேசிப்பதாக உணர்ச்சி வகையில் வெளிப்படையாகக் காட்டிக்கொள்வர். ஆனால் அவர்களே இறையனுபவம் அற்றவராக இருப்பர். ஆனால் சாயிபாபா தமது தகைமையையும் — கடவுள்பற்று , மெய்யுணர்வையும் காண்பிப்பதற்கு எவ்வித சிறிய முயற்சியையும் எடுக்கவேயில்லை. அடியவர்களிடம் பெருமளவு அன்பு கொண்டிருந்தார். இரண்டு விதமான குருக்கள் இருக்கின்றனர்.
(1) நியத் - நியமிக்கப்படவர், குறிக்கப்பட்டவர்
(2) அநியத் - நியமிக்கப்படாதவர், பொதுவானவர்
பின்னவர்கள் தங்கள் உபதேசங்களால் நம்மிடத்தில் உள்ள நற்பண்புகளை அபிவிருத்தி செய்கின்றனர். நமது இதயத்தைத் தூய்மைப்படுத்துகின்றனர். நம்மை வீடுபேற்றை அடையும் பாதையில் செல்லத்தூண்டுகின்றனர். இதற்கு மாறுபாடாக முன்னவர்களாகிய குருக்களோ நமது தனி இயல்பை — பேத உணர்வை — அழித்து, 'நீயே அது!' என்று உணரச் செய்து, நம்மை ஏகத்வத்தில் ஸ்தாபிக்கின்றனர். பல்வேறு வகையான உலக ஞானத்தை அளிக்கும் பல திறத்தான குருக்கள் இருக்கின்றனர். ஆனால் நம்மை நமது இயற்கையில் — ஆத்மாவில் — நிலைப்படுத்தி உலகவாழ்வெனும் சாகரத்துக்கு அப்பால் நம்மைச் சுமந்து செல்பவரே சத்குரு எனப்படுவார்.
சாயிபாபா அத்தகைய ஒரு சத்குரு ஆவார். அவருடைய பெருமையை விவரிக்க இயலாது. யாரேனும் பாபாவின் தரிசனத்தைப் பெறச்சென்றால், கேட்கப்படாமலேயே அவரது கடந்தகால, நிகழ்கால, எதிர்காலங்களின் ஒவ்வொரு விவரத்தையும் உரைப்பார். எல்லா ஜீவராசிகளிடமும் அவர் தெய்வீகத்தைக் கண்டார். நண்பர்களும், பகைவர்களும் அவருக்கு ஒன்றே. அவாவற்றவராகவும், சமன் செய்யப்பட்டவராகவும் இருந்த அவர் தீயோருக்கும் கட்டுப்பட்டுச் செவி சாய்த்தார். சுபிட்சத்திலும், எதிரிடையான சூழ்நிலையிலும் அவர் ஒரே மாதிரியாய் இருந்தார். எப்போதும், எவ்வித ஐயமும் அவரைத் தீண்டவில்லை. இவ்வுடம்பில் அவர் இயங்கினாரெனினும் எள்ளளவும் தமது உடம்பிலேயோ, வீட்டிலேயோ பற்றற்றவராகவே இருந்தார். உடலுருக்கொண்டு அவர் தோற்றமளித்தாலும் உண்மையில் அருவமானவர். அதாவது இந்த வாழ்க்கையிலிருந்தே விடுதலையானவர்.
அத்தகைய சாயியை தங்கள் கடவுளாக வழிபட்ட ஷீர்டி மக்கள் ஆசீர்வதிக்கபட்டவர்கள். அவர்கள் உண்ணும்போதும், அருந்தும்போதும், பழக்கடையிலும், வயலிலும் மற்றபிற இல்லற தர்மங்களைச் செய்யும்போதும் சாயியை நினைவு கூர்ந்தார்கள். அவர்தம் புகழைப் பாடினார்கள். சாயியைத் தவிர பிறிதொரு கடவுளை அவர்களுக்குத் தெரியாது. ஷீர்டியில் வசித்த பெண்களின் அன்பின் இனிமையை எங்ஙனம் விவரிக்கமுடியும்! அறியாதவர்களாக இருப்பினும் அவர்களின் தூயஅன்பு எளிய கிராமியமொழியில் பாபாவின் புகழை கவிதையாகவும், தெம்மாங்குப் பாடலாகவும் பாட உணர்வூட்டியது. எழுத்தறிவு அவர்களிடம் இல்லையாயினும் உண்மைக் கவித்துவத்தை அவர்களின் எளிமையான பாடல்களில் தெளிவாக உணரமுடியும். படிப்பறிவு அன்று! ஆழ்ந்த அன்பே அத்தகைய பொருள்செறிந்த பாடல்களை வெளிக்கொணர்ந்தது. அப்பாடல்கள் ஆழ்ந்த அன்பின் வெளிப்பாடே. சற்றே அறிவுக்கூர்மையுள்ள ஆர்வலரால் அவற்றை உணர்ந்து இன்புறமுடியும்.
இந்த கிராமியப் பாடல்களை சேகரித்து தொகுப்பது மிகவும் அவசியமான ஒன்று. பாபாவின் விருப்பத்தால் அதிஷ்டமுடைய பக்தர் எவரேனும் இப்பணியை மேற்கொண்டு சாயிலீலா சஞ்சிகையிலோ அல்லது தனிப்புத்தகமாகவோ பிரசுரிக்கலாம்.
பாபாவின் பணிவுடைமை
பரமாத்மா அல்லது கடவுள் ஆறு குணாதிசயங்களை உடையவராகக் கூறப்படுகிறது. அதாவது புகழ், செல்வம், பற்றின்மை, ஞானம், பேராற்றல், வள்ளன்மை ஆகியவையாகும். பாபா இவை அனைத்தையும் தன்னிடத்துடையவராக விளங்கினார். இவ்வுடம்பில் அடியவர்களுக்காக அவதரித்தார். அவரது அருளும், அன்பும் அதிசயிக்கத்தக்கவை. ஏனெனில் தமது அடியவர்களைத் தம்மிடம் ஈர்த்து இழுத்தார். இல்லாவிடில் யார்தான் அவரை அறிந்திருக்க இயலும்! அவர் தமது பக்தர்களின் பொருட்டாக வாக்கின் தெய்வம் — சரஸ்வதிதேவி — கூட உரைக்கத் துணியாத அத்தகைய சொற்களை அவர் கூறினார். அதற்கு இதோ ஓர் உதாரணம், மிகவும் எளிமையுடன் அவர் கூறியது பின்வர்மாறு. "நான் அடிமைகளுள் அடிமை. உங்கள்ளுக்குக் கட்டுப்பட்டவன். உங்களது தரிசனத்திலே திருப்தியடைகிறேன். தங்களது திருவடிகளைத் தரிசிக்கும் பெரும் பாக்கியம் பெற்றேன். நான் தங்களது மலத்திலுள்ள ஒரு புழு. அங்கனமாகவே என்னை நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாகக் கருதுகிறேன்".
எத்தகைய பணிவுடைமை?! இதைப் பிரசுரிப்பதன் மூலம் சாயிக்கு எத்தகைய அவமரியாதையாவது செய்யப்பட்டது என்று எவரேனும் நினைப்பாராகில், அவர்களிடம் மன்னிப்பை வேண்டிக்கொள்கிறோம். இதற்குப் பிராயச்சித்தமாக பாபாவின் நாமத்தைப் பாடி ஜபிப்போமாக!
பாபா வெளிப்படையாக உணர்ச்சி நுகர்வுக்கூறு மற்றும் பொருட்களால் மகிழ்பவர்போல் தோன்றினாலும், அவருக்கு அவைகளில் எள்ளளவும் தனிச்சுவைத் திறமோ அவைகளை மகிழ்ந்து அனுபவிக்கும் பிரக்ஞையோ இருந்ததில்லை. அவர் உண்டார் எனினும், சுவை அறியவில்லை. பார்த்தார் எனினும், பார்த்தவைகளில் அவர் எவ்வித விருப்பையும் உணர்ந்திருக்கவில்லை. காம உணர்வுகளைப்பற்றிக் கருதும்கால் அவர் ஹனுமானைப் போன்ற பூரண பிரம்மச்சாரியாவார் என்பதாலும் பற்றற்றவராக இருந்தார். அவரே தூய உணர்வுகளின் திரளாகவும், ஆசை, கோபம், மற்ற உணர்ச்சிகள் அடங்கி அமைதியுறும் இடமாகவும் திகழ்ந்தார். சுருக்கமாக அவர் அவாவற்றவர், கட்டற்றவர், முழு நிறைவானவர். இக்கூற்றைச் சித்தரிக்கும் வகையில் ஒரு அதிசய நிகழ்ச்சியைக் கூறலாம்.
நானாவலி
ஷீர்டியில் நானாவலி என்ற பெயரில் தனிப்போக்குள்ள விசித்திரமான மனிதன் ஒருவன் இருந்தான். அவன் பாபாவின் வேலைகளையும், காரியங்களையும் கவனித்துவந்தான். ஒருமுறை அவன், ஆசனத்தில் அமர்ந்திருந்த பாபாவிடம் சென்று, தான் அதில் உட்கார வேண்டியிருப்பதால் பாபாவை எழுந்திருக்கும்படி கூறினான். பாபா உடனடியாக எழுந்திருந்து, தாம் அமர்ந்திருந்த ஆசனத்தைக் காலி செய்தார். அதில் அவன் அமர்ந்துகொண்டான். சிறிது நேரம் அமர்ந்திருந்த பின்னர் அவன் எழுந்திருந்து, பாபாவை அமர்ந்துகொள்ளச் சொன்னான். பாபா ஆசனத்தில் அமர்ந்தார். பிறகு அவன் பாபாவின் பாதங்களில் வீழ்ந்து நமச்கரித்துவிட்டுச் சென்றுவிட்டான்.
தாம் அதிகாரம் செலுத்தப்பட்டதிலும், வெளியேற்றப்படதிலும், பாபா எவ்வளவும் வருத்தம் அடையவில்லை. இந்த நானாவலி, பாபாவை மிகவும் நேசித்தான். பாபா மஹாசமாதி எய்திய பதிமூன்றாவது நாள் தாமும் சமாதி அடைந்தான்.
மிகவும் எளிய வழி
முனிவர்களுடைய கதைகளைக் கேட்பதும், அவர்களின் சத்சங்கத்தில் இருப்பதும். புறத்தில் சாயிபாபா சாதாரண மனிதர் போன்று நடித்தாலும், அவரது செய்கைகள் அவரது அசாதாரண புத்தி சாதுர்யத்தையும், திறமையையும் காண்பித்தன. அவர் எதைச் செய்தபோதிலும் அவைகள் அடியவர்களின் நன்மை கருதியே செய்யப்பட்டன. தமது அடியவர்களுக்காக, சுவாச நியமத்தையோ, அல்லது எத்தகைய வழிபாட்டுமுறையையோ, அவர் வகுத்துரைக்கவில்லை. அல்லது எவ்வித மந்திரத்தையும், எவர் காதிலும் அவர் ஓதவில்லை. எல்லாவித புத்திசாலித்தனத்தையும் விட்டொழித்துவிட்டு எப்போதும் 'சாயி சாயி' என்று ஞாபகமூட்டிக்கொள்ளும்படி அவர்களிடம் கூறினார். இதைச் செய்வீர்களானால் உங்களது கட்டுக்களெல்லாம் விடுபட்டு விடுதலை அடைவீர்கள் என்று உரைத்தார். ஐந்து நெருப்புக்களிடையே அமர்தலும், யாகங்களும், பராயணங்களும், அஷ்டாங்க யோகங்களும் அந்தணர்களால் மட்டுமே இயலுவதாகும். மற்றைய வகுப்பினருக்கு அவைகளால் எவ்விதப் பலனும் இல்லை. மனதின் தொழில், நினைப்பதாகவும். எண்ணமின்றி அது ஒரு நிமிடமும் இருக்கமுடியாது. புலன் உணர்விற்குச் சார்பான பொருளை மனதிற்கு நீங்கள் அளித்தால் அதைப்பற்றி நினைக்கும். அதற்கு குருவை அளித்தால் அது குருவைப்பற்றி எண்ணமிடும்.
நீங்கள் மிக்க கவனத்துடன் சாயியின் பெருமையையும், பேராற்றலையும் கேட்டீர்கள். இதுவே சாயியை இயற்கையாக நினைவூட்டிக்கொள்ளுதலும், வழிபடுவதும், கீர்த்தனை செய்வதும் ஆகும். மேலே கூறப்பட்ட மற்ற சாதனைகளைப்போன்று இக்கதைகளைக் கேட்பது என்பது அவ்வளவு கடினமானது அல்ல. இக்கதைகள் சம்சாரமென்னும் — உலக வாழ்க்கை — பயத்தை அழித்து, உங்களை ஆத்மீகப் பாதையில் அழைத்துச் செல்கின்றன. எனவே இக்கதைகளைக் கவனத்துடன் கேளுங்கள். அவைகளைத் தியானியுங்கள். அவைகளை ஜீரணித்துக்கொள்ளுங்கள். இம்முறை பின்பற்றப்பட்டால் அந்தணர்கள் மட்டுமன்று பெண்ணினமும், கீழ்குலத்தோரும் தூய்மை அடைந்து புனிதமடைவர்.
நீங்கள் உங்களது உலகக் கடமைகளைச் செய்துகொண்டோ, கவனித்துக்கொண்டோ இருக்கலாம். ஆனால் உங்களது மனத்தை சாயிக்கும் அவரின் கதைகளுக்கும் அளித்துவிடுங்கள். பின்னர் அவர் உங்களை ஆசீர்வதிப்பது நிச்சயமாகும். இதுவே மிகவும் எளிமையான வழியாகும். எனினும் அனைவரும் ஏன் அதைப் பின்பற்றவில்லை? காரணம் என்னவென்றால் கடவுள் அருளின்றி முனிவர்களின் கதைகளைக் கேட்கும் ஆர்வம் நமக்கு வருவதில்லை. கடவுள் அருளால் எல்லாம் தட்டுத்தடங்கல்கள் இன்றியும், எளிதாகவும் நடந்தேறுகிறது.
முனிவர்களின் கதைகளைக் கேட்பது என்பது ஒருவழியில் அவர்களின் சத்சங்கதைப் பெறுதலை நிகர்ப்பதாகும். முனிவர்களின் கூட்டுறவின் முக்கியத்துவமானது மிகவும் பெரியது. நமது உடல் உணர்வையும், அஹங்காரத்தையும் அகற்றி, பிறப்பு - இறப்பு என்னும் சங்கிலித் தொடர்ச்சியை அறவே அழிக்கிறது. இதய முடிச்சுக்களையெல்லாம் துண்டாக அறுத்துவிட்டு தூய உணர்வான கடவுளிடத்திலேயே நம்மை அழைத்துச் செல்கிறது. புலன் உணர்வு விஷயங்களைப் பற்றி நமது அவாவின்மையை நிச்சயம் அதிகரித்து, இன்ப-துன்பங்களை நாம் முழுவதும் இலட்சியம் செயாதவராக்கி, ஆத்மீகப் பாதையில் மேன்மேலும் நம்மை அழைத்துச் செல்கிறது. நாமஸ்மரணம், வழிபாடு அல்லது பக்தி போன்ற சாதனைகள் உங்களிடம் இல்லையாயினும், ஞானிகளிடம் உங்கள் முழு இதயத்தோடு சரணாகதியடைவீர்களானால், இவ்வுலக வாழ்வெனும் பெருங்கடலுக்கு அப்பால் அவர்கள் நம்மைப் பத்திரமாக இட்டுச் செல்வார்கள்.
இக்காரணத்துக்காகவே முனிவர்கள் உலகில் அவதரிக்கிறார்கள். உலகத்தின் பாவங்களை அடித்துச் செல்லும் கங்கை, கோதாவாரி, கிருஷ்ணா, காவேரி முதலிய புனித ஆறுகள்கூட முனிவர்கள் ஸ்நானத்திற்காகத் தங்களிடம் வரவேண்டுமென்றும், தங்களைப் புனிதப்படுத்த வேண்டுமென்றும் விரும்புகின்றன. முனிவரின் பேராற்றல் அத்தகையது. முந்தைய பிறவிகளில் நாம் செய்த நற்கருமங்களின் சேமிப்புக் குவியல்களால் நாம் சாயிபாபாவினுடைய திருவடிகளை அடையப்பெற்றோம். சாயியின் ரூப தியானத்துடன், இந்த அத்தியாயத்தை நாம் முடிக்கிறோம்.
அத்தகைய சுந்தரமான அழகுபடைத்த சாயி, மசூதியின் விளிம்பில் நின்றுகொண்டு 'உதி'யை ஒவ்வொரு பக்தருக்கும், அவரவர் நன்மையைக் கருத்திற்கொண்டு விநியோகித்துக் கொண்டிருக்கிறார். இவ்வுலகை வெறுமையாய்க் கருதி பரமானந்தத்திலேயே எப்போதும் திளைத்துக்கொண்டிருக்கும் அவர் முன்னால் வீழ்ந்து வணங்குவோம்.
ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்
• டாக்டர் பண்டிட்டின் வழிபாடு
• ஹாஜி சிதிக்ஃபால்கே
• பஞ்சபூதங்களின்மேல் பாபாவின் கட்டுப்பாடு
இந்த அத்தியாயத்தில் பிரம்மத்தின் அவதாரமான — சகுணப் பிரம்மமான — சாயியை விளக்குவோம். அவர் எங்ஙனம் வழிபட்டார். எங்ஙனம் அவர் பஞ்சபூதங்களை — இயற்கைச் சக்திகளை — கட்டுப்படுத்தினார் என்பதையும் காண்போம்.
சகுணப் பிரம்மமாக சாயி
கடவுளுக்கு அல்லது பிரம்மத்திற்கு இரண்டுவிதமான வழிபாடுகள் உண்டு.
1. அவதரிக்காத நிர்குண வழிபாடு
2. அவதரித்த 'சகுண வழிபாடு'
இரண்டும் ஒரே பிரம்மத்தைக் குறித்தாலும் நிர்குணம் உருவமற்றது. சகுணம் உருவமுள்ளது. சிலர் முன்னதையும், சிலர் பின்னதையும் வழிபடுவதை விரும்புகிறார்கள். கீதையில் — அத். 12 — கூறியதைப்போன்று சகுணப் பிரம்மவழிபாடு எளிதானதானதும், ஆரம்பகாலத்திற்கு உகந்ததுமாகும். மனிதனுக்கு உருவம் இருப்பதைப்போன்று — உடம்பு, உணர்வுகள் முதலியன — உருவத்துடன் கூடிய கடவுளை வழிபடுவது அவனுக்கு இயற்கையானதும், எளிதுமாகிறது. சகுணப்பிரம்மத்தை சில குறிப்பிட்ட காலக்கூறுவரை வணங்கினாலொழிய நமது அன்பும், பக்தியும் அபிவிருத்தியுறாது. நாம் முன்னேறும்போது அது நம்மை நிர்குணப் பிரம்மத்தை வழிபட — தியானிக்க — இட்டுச்செல்கிறது.
எனவே, நாம் சகுண வழிபாட்டுடன் ஆரம்பிப்போமாக! உருவம், யாககுண்டம், தீ, ஒளி, சூரியன், நீர், பிரம்மம் ஆகிய ஏழும் வழிபாட்டுக்குரியவை. எனினும், சத்குருவே இவை எல்லாவற்றையும் காட்டிலும் உயர்ந்தவர். பற்றின்மையும், அவதாரமும், முழு மனதார்ந்த தமது அடியவர்களின் உறைவிடமுமான சாயியை இத்தருணத்தில் நினைவு கூர்வோமாக. அவர் மொழிகளில் நமக்குள்ள நம்பிக்கையே ஆசனமாகும். நமது சங்கல்பமாவது — பூஜையை ஆரம்பிக்கும்போது சொல்லும் தெளிந்த தீர்மானம் — நமது ஆசைகள் அனைத்தையும் உதறித் தள்ளுதலாகும். சிலர், சாயி ஒரு பாகவதபக்தர் — கடவுளின் அடியவர் — என்று கூறுகின்றனர். மற்றும் சிலர், மஹாபாகவத் — பெரும் அடியவர் — என்றும் பகர்கின்றனர். ஆனால் நமக்கு அவர் கடவுளின் அவதாரமாவார். அவர் எல்லையற்ற அளவு மன்னிப்பாரகவும், கோபமற்றவராகவும், நேர்மையுள்ளவராகவும், மென்மையாளராகவும், சகிப்புத்தன்மை உடையவராகவும், இருந்தார். அவர் உருவமுள்ளவராகத் தோன்றினாலும், உண்மையில் உருவம் அற்றவராகவும், உணர்ச்சி வேகமற்றவராகவும், பற்றற்றவராகவும், அந்தரங்கமாய் சுதந்திரமாகவும் இருந்தார்.
கங்கை நதி, தான் கடலுக்குச்செல்லும் வழியில் உஷ்ணத்தால் பாதிக்கப்பட்ட ஜீவராசிகளுக்குக் குளிர்ச்சியளித்து, புதுக்கிளர்ச்சியூட்டி, பயிர்களுக்கும், மரங்களுக்கும் உயிரையளித்து, பலரின் தாகத்தையும் தணிக்கிறது. இதைப்போன்றே சாயி போன்ற புண்ணிய புருஷர்கள் — ஆத்மாக்கள் — வாழ்ந்துகொண்டிருக்குபோதே அனைவருக்கும் துயராற்றி, ஆறுதல் நல்கிறார்கள். கிருஷ்ண பரமாத்மாவும், "ஞானி எனது ஆத்மா, எனது வாழும் உருவம், நான் அவரே, அவரே எனது தூய வடிவம்" என்று கூறியிருக்கிறார். சத்து - சித்து - ஆனந்தம் என அறியப்படும் இந்த விவரிக்க இயலாத ஆற்றல் அல்லது கடவுளின் சக்தியே ஷீர்டியில் சாயி என்னும் ரூபத்தில் அவதரித்தது.
ஸ்ருதி — தைத்திரீய உபநிஷதம் — பிரம்மத்தை ஆனந்தம் என விவரித்திருக்கிறது. இதை நாம் தினந்தோறும் நூல்களில் படிக்கிறோம் அல்லது கேட்கிறோம். ஆனால் இப்பிரம்மத்தை அல்லது பேரானந்தத்தை ஷீர்டியில் பக்த மஹாஜனங்கள் அனுபவிக்கிறார்கள். அனைவருக்கும் ஆதாரமான அவருக்கு எவரிடமிருந்தும் எந்த ஆதாரமும் தேவையிருக்கவில்லை. ஒரு சாக்குத்துண்டையே எப்போதும் தமது ஆசனமாகக் கொண்டிருந்தார். பக்தர்களால் அது ஒரு மெல்லிய மெத்தைகொண்டு மூடப்பட்டிருந்தது. அவர் சாய்ந்துகொள்ள முதுகிற்கு ஒரு திண்டும் அவர்களாலேயே வைக்கப்பட்டது.
பாபா தமது அடியவர்களின் எண்ணங்களை மதித்தார். அவர்கள் விருப்பப்படியே தம்மை வழிபட அவர்களை அனுமதித்தார். அவர் முன்னிலையில் சிலர் சாமரம் அல்லது விசிறி வீசினர். சிலர் இசைக் கருவிகள் வாசித்தனர். சிலர் அவரின் கைகளையும், கால்களையும் கழுவினர். இன்னும் சிலர் வெற்றிலை, பாக்கு மற்றும் பல பொருட்களையும் நைவேத்யமாகச் சமர்ப்பித்தனர். ஷீர்டியில் அவர் வாழ்ந்ததுபோல் தோன்றினாலும் அவர் எங்கும் வியாபித்திருந்தார். அவரின் எங்குநிறை தன்மையை அவருடைய பக்தர்கள் தினந்தோறும் உணர்ந்தார்கள். இவ்வாறாக எங்கணும் வியாபித்திருக்கின்ற — சர்வாந்தர்யாமி — சத்குருவுக்கு நமது பணிவான சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.
டாக்டர் பண்டிட்டின் வழிபாடு
ஒருமுறை தாத்யா சாஹேப் நூல்கரின் நண்பரான டாக்டர் பண்டிட் என்பவர் ஷீர்டிக்கு பாபாவின் தரிசனத்துக்காக வந்தார். பாபாவை வணங்கியபின் மசூதியில் அவர் சிறிதுநேரம் அமர்ந்திருந்தார். பாபா, அவரைத் தாதாபட் கேல்கரிடம் செல்லுமாறு பணித்தார். தாதாபட்டிடம் அவர் சென்றார். தாதாபட் அவரை நன்கு வரவேற்றார். தாதாபட் பூஜைக்காக தனது வீட்டைவிட்டுப் புறப்பட்டார். அவருடன் டாக்டர் பண்டிட்டும் சென்றார். தாதாபட் பாபாவை வழிபாடு செய்தார். இதுகாறும் எவரும் பாபாவின் நெற்றிக்குச் சந்தனம் பூசத் துணிந்ததில்லை.
மகால்சாபதி மட்டுமே பாபாவின் கழுத்தில் சந்தனம் பூசுவது வழக்கம். ஆனால் எளிய மனதுடைய இவ்வடியவரான டாக்டர் பண்டிட் பூஜைப்பொருட்கள் வைத்திருந்த டாக்டர் தாதாபட்டின் பாத்திரத்தை எடுத்துப்போய் அதிலிருந்து பிசையப்பட்ட சந்தனத்தை எடுத்து திரிபுந்த்ரா எனப்படும் திருநீற்றுப் பட்டையை பாபாவின் நெற்றியில் இட்டார். பாபா, எல்லோருக்கும் வியப்பையளிக்கும் வகையில், ஒரு வார்த்தைகூடக் கூறாமல் அமைதியாய் இருந்தார்.
அன்றுமாலை தாதாபட் பாபாவிடம், "நெற்றியில் சந்தனம் பூசுவதை நீங்கள் தடுத்துக்கொண்டிருந்தாலும் இப்போது டாக்டர் பண்டிட் அங்ஙனம் செய்ததைத் தாங்கள் எப்படி அனுமதித்தீர்கள்?" என்று கேட்டார். இதற்கு பாபா, டாக்டர் பண்டிட் தம்மை — பாபாவை — அவரது குருவான காகாபுராணிக் என்று அழைக்கப்பட்ட தோபேஸ்வரைச் சேர்ந்த ரகுநாத் மஹராஜ் என்று நம்பியிருந்ததாகவும், அவர் குருவுக்கு செய்துகொண்டிருந்ததைப் போன்றே தமது நெற்றியிலும் சந்தனம் பூசியதாகவும் தெரிவித்தார். எனவே பாபாவால் தடுக்க இயலவில்லை. டாக்டர் பண்டிட்டிடம் விசாரித்ததில் பாபாவைத் தனது குரு காகாபுராணிக் என்று கருதியதாகவும் அதே மாதிரியாகவே அவரை உணர்ந்ததாகவும் கூறினார். எனவே அவர் தனது குருவுக்குச் செய்வதைப்போன்றே திரிபுந்த்ரத்தை பாபாவின் நெற்றியிலும் இட்டார்.
பக்தர்கள் விரும்பியவாறே தம்மை வழிபட பாபா அவர்களை அனுமதித்தார். எனினும் சில சமயங்களில் அவர் விநோதமானமுறையில் நடந்துகொண்டார். சில சமயங்களில் பூஜைத்தட்டைத் தூக்கியெறிந்து சீற்றமே அவதரித்ததுபோல் நின்றிருப்பார். அப்போது அவரை எவரே அணுக முடியும்? சில சமயங்களில் அவர் பக்தர்களைக் கடிந்தார். சில சமயங்களில் மெழுகைக்காட்டிலும் மென்மையாய் இருந்தார். சாந்தத்துக்கும், மன்னிப்புக்குமான ஓர் உருவமாய் இருந்தார். கோபத்தால் அவர் குலுங்குவதுபோல் தோன்றினாலும், அவரது சிவந்த கண்கள் சுற்றிச்சுற்றி உருண்டாலும் அவர் அந்தரங்கமாக, பாசத்தின் தாரையாக, தாயன்பு உடையவராக இருந்தார்.
உடனே தமது அடியவர்களைக் கூப்பிட்டு அவர்களிடம் தாம் ஒருபோதும் கோபமாக இருந்ததே இல்லை எனக்கூறி, தாயார் தங்களது குழந்தைகளை உதைத்தார்களானால், கடலானது ஆறுகளைப் புறக்கணித்ததென்றால் தாமும் அடியவர்களின் நலன்களை அலட்சியம் செய்வேன் எனவும் பகர்ந்தார். தமது பக்தர்களின் அடிமையான அவர் எப்போதும் அவர்களுக்கு ஆதரவாய் இருப்பதையும், அவர்கள் தம்மை அழைக்கும்போதெல்லாம் மறுமொழி கூறி அவர்களின் அன்பைப் பெறுவதற்குமே எப்போதும் அவர் பெரிதும் விரும்பினார்.
ஹாஜி சிதிக்ஃபால்கே
பாபா எப்போது ஓர் அடியவரை ஏற்றுக்கொள்வார் என்பதை அறியமுடியாது. அது அவரது இனிய சங்கல்பத்தையே பொறுத்தது. இக்கூற்றுக்கு சிதிக்ஃபால்கேயின் நிகழ்ச்சி ஓர் எடுத்துக்காட்டு. கல்யாணைச் சேர்ந்த சிதிக்ஃபால்கே என்ற ஒரு முஹமதியப் பெருந்தகை மெக்கா, மெதீனாவுக்குப் புனித யாத்திரை செய்துவிட்டு ஷீர்டிக்கு வந்தார். வடக்கு நோக்கிய சாவடியில் அவர் வாழ்ந்தார். மசூதியின் திறந்த வெளியில் அவர் அமர்ந்தார். ஒன்பது மாதங்கள் பாபா அவரைப் பொருட்படுத்தவில்லை. அவரை மசூதிக்குள் நுழையவும் அனுமதிக்கவில்லை. பால்கே மிகவும் தேற்றவியலாத நிலையை எய்தி என்னசெய்வதென்று புரியாமலிருந்தார். யாரோ ஒருவர் அவரை ஏமாற்றமடைய வேண்டாமென்றும், பாபாவின் மிக நெருங்கிய, அருகில் உள்ள அடியவரான ஷாமா — மாதவ்ராவ் தேஷ்பாண்டே — மூலம் பாபாவை அணுக முயற்சிக்கும்படியும் ஆலோசனை கூறினார். சிவபெருமான், அவரது சேவகரும், பக்தருமான நந்தியின் மூலம் அணுகப்படுதலைப்போல, ஷாமாவின் மூலம் பாபா அணுகப்படுதல் வேண்டும் என்றும் கூறினார். ஃபால்கே இந்த யோசனையை விரும்பி, ஷாமாவைத் தனக்காக மன்றாடிக் கெஞ்சிக் கேட்குமாறு வேண்டினார்.
ஷாமாவும் சமத்தித்து, பொருத்தமான ஒரு சந்தர்ப்பத்தில் பாபாவிடம், "பாபா, பலர் இம்மசூதிக்குள் தாராளமாய் வந்து தங்கள் தரிசனத்தைப் பெற்றுப் போகும்போது, தாங்கள் ஏன் அந்த முதிர்ந்த ஹாஜியை மசூதிக்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது? அவரை ஒருமுறை ஆசீர்வதித்தருளலாகாதா?" என்று அவரைப்பற்றிப் பேசினார். அதற்கு பாபா, "ஷாமா, நீ விஷயங்களையெல்லாம் புரிந்துகொள்ள இயலாத அளவு முதிர்சியற்றவனாய் இருக்கிறாய். ஃபக்கீர் — அல்லா — அனுமதிக்கவில்லைஎன்றால் நான் என்ன செய்யமுடியும்? அவரது அருளின்றி யாரே மசூதியில் ஏற வல்லார்? நன்று, அவரிடம் சென்று நாளை பார்வி கிணற்றுக்கருகிலுள்ள குறுகிய ஒற்றையடிப்பாதைக்கு வருவாரா எனக்கேட்டுவா" என்றார். ஷாமா சென்று உடன்பாட்டு விடையுடன் திரும்பிவந்தார்.
மீண்டும் அவரிடம் பாபா, "எனக்கு நாற்பதாயிரம் ரூபாய்களை நான்கு தவணைகளில் கொடுக்கச் சம்மதிப்பாரா எனக் கேள்" என்றார். சாமா சென்று, நாற்பது இலட்சம் ரூபாய்கள் கூடத் தர அவர் சம்மதிப்பதான பதிலுடன் திரும்பிவந்தார். மீண்டும் பாபா, "நாங்கள் ஒரு ஆட்டை மசூதியில் வெட்டப்போகிறோம், அவரை அதன் மாமிசம், தொடை, விதை இவைகளில் எது வேண்டுமெனக்கேள்" என்று கூறினார். ஹாஜி, பாபாவின் கோலாம்பாவிலிருந்து — மட்பாண்டத்திலிருந்து — ஏதாவது ஒரு சிறுதுணுக்கை பெற்றுக்கொள்வதிலேயே மகிழ்வதாகவும் ஷாமா பதில் கொண்டுவந்தார்.
இதைக்கேட்டு பாபா உணர்ச்சிவசப்பட்டு, தமது கையால் மட்கூஜாக்களையும், கோலாம்பாவையும் விட்டெறிந்துவிட்டு, நேராக ஹாஜிடம் சென்று தமது கஃப்னியை கைகளால் பிடித்துக்கொண்டு "ஏன் உன்னை நீயே தற்பெருமைப்படுத்தி உயர்வாகக் கற்பனை செய்துகொண்டு முதிர்ந்த ஹாஜியைப்போல் பாவனை செய்துகொண்டிருக்கிறாய். குர்ஆனை நீ இவ்விதமாகத்தான் கற்றுணர்ந்தாயா? நீ உனது மெக்கா தலயாத்திரை குறித்துப் பெருமை கொள்கிறாய். ஆனால் நீ என்னை அறியவில்லை" என்றார். இவ்வாறு கடிந்துகொள்ளப்பட்டதும் ஹாஜி குழப்பமடைந்தார். பாபா பின்னர் மசூதிக்குச் சென்று ஒரு கூடை மாம்பழங்களை வாங்கி ஹாஜிக்குக் கொடுத்தனுப்பினார். பின்னர் மீண்டும் ஹாஜியிடத்துச் சென்று தம் பையிலிருந்து ரூ.55 ஹாஜியின் கைகளில் கொடுத்தார். அதிலிருந்து பாபா ஹாஜியை விரும்பினார். உணவுக்கு அவரை அழைத்தார். பாபா ஹாஜியை விரும்பியபோதெல்லாம் மசூதியினுள் அழைத்தார். பாபா சில சமயங்களில் அவருக்கு சில ரூபாய்கள் அளித்தார். இவ்வாறாக பாபாவின் தர்பாரில் ஹாஜியும் சேர்க்கப்பட்டார்.
பஞ்சபூதங்களின் மேல் பாபாவின் கட்டுப்பாடு
பஞ்சபூதங்களின் மேல் பாபாவின் ஆணைக்கு ஈண்டு உதாரணமாக இரண்டு நிகழ்சிகளைக் கூறி இந்த அத்தியாயத்தை முடிப்போம்.
(1) ஒருநாள் மாலைநேரத்தில் ஷீர்டியில் பயங்கரமான புயல் வீசியது. கருமேகங்களால் வானம் திரையிடப்படிருந்தது. காற்று பலமாக வீசத்தொடங்கியது. மேகங்கள் கர்ஜித்து மின்னல் பளிச்சிட்டது. மழை வெள்ளமாய்ப் பொழியத் தொடங்கியது. சிறிதுநேரத்தில் அவ்விடம் முழுவதும் வெள்ளக்காடாகியது. ஷீர்டியிலிருந்த சர்வ ஜந்துக்களும், பறவைகளும், மிருகங்களும், மனிதர்களும் பயங்கர பீதியடைந்து திரளாக மசூதியில் தஞ்சமடைந்தனர். ஷீர்டியில் பல கிராம தேவதைகள் இருக்கின்றன. ஆனால் அவைகளில் எவையும் அவர்களின் உதவிக்கு வரவில்லை. எனவே அவர்கள் எல்லோரும் தங்களது பக்தியின்பால் பற்றுமீதூறும் தங்களது கடவுளான பாபாவை, அவர் குறுக்கிட்டுப் புயலைத் தணிக்க வேண்டினர். பாபா மிகவும் மனது உருகினார். பாபா மசூதியிலிருந்து வெளிப்போழ்ந்து அதன் விளிம்பில் நின்று, பெருத்த இடிமுழக்கம் போன்ற குரலில் புயலை நோக்கி, "நிறுத்து, உன் சீற்றத்தை நிறுத்தி அடங்கியிரு" எனக் கூறினார். சில நிமிடங்களில் மழை குறைந்து, காற்று வீசுவது நின்று, புயலும் அடங்கியது. பின்னர் சந்திரன் வானத்தில் உதயமாகி, மக்கள் நன்றாக மகிழ்வெய்தி வீடிட்ற்குத் திரும்பினர்.
(2) மற்றொரு சந்தர்ப்பத்தில் மத்தியான நேரத்தில் மசூதியில் துனியில் உள்ள நெருப்பு பிரகாசமாக எரியத் தொடங்கியது. அதனுடைய சுவாலை மசூதியின் விட்டத்தை அடைந்தது. மசூதியில் அமர்ந்திருந்த மக்களுக்கு என்னசெய்வதென்றே புரியவில்லை. தண்ணீரை அதன்மீது ஊற்றும்படியோ,அல்லது சுவாலையைத் தணிப்பதற்கு வேறெதுவும் செய்யும்படியாகவோ பாபாவைக் கேட்க அவர்களுக்குத் துணிவு வரவில்லை. ஆனால் சிறிதுநேரத்தில் பாபா, என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்பதை உணரத் தலைப்பட்டார். தமது சட்காவை எடுத்து முன்னுள்ள ஒரு தூணின்மீது ஓங்கியடித்து, "கீழிறங்கு, அமைதியாய் இரு" என்றார். ஒவ்வொரு அடிக்கும் சுவாலை கீழிறங்கத் தொடங்கி சில நிமிடங்களில் குறைந்து துனி அமைதியாகவும், சாதாரணமாகவும் ஆகியது.
இவரே நமது சாயி - கடவுளின் அவதாரமாவார். தம்முன் வீழ்ந்து பணிந்து சரணாகதியடைந்த எந்த மனிதரையும் அவர் ஆசீர்வதிக்கிறார். தினந்தோறும் பக்தியுடன் இவ்வத்தியாயத்தைப் படிப்பவர்கள் எல்லாக் கேடுகளில் இருந்தும் விடுபடுவார்.
இதுமட்டுமன்று, எப்போதும் சாயியின் மேல் பக்தியுடையவராகவும், அன்புடையவராகவும் இருந்து வெகுவிரைவில் கடவுள்காட்சியைப் பெறுவார். எல்லா ஆசைகளும் நிறைவேறியவராக, அவாவற்றவராக இறுதியில் உயர்நிலை எய்துவார்.
ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்
1. காகா மகாஜனி
2. வக்கீல் துமால்
3. திருமதி நிமோண்கர்
4. முலே சாஸ்திரி
5. ஒரு டாக்டர்
ஆகியோரின் அனுபவங்கள்
இந்த அத்தியாயத்தில் பக்தர்கள் பாபாவினால் எவ்வாறு வரவேற்கப்பட்டு நடத்தப்பட்டார்கள் என்பதைக் காண்போம்.
நல்லோரைக் காத்துக் கொடியோரை அழிப்பதே தெய்வ அவதாரத்தின் நோக்கம் அல்லது குறிக்கோள் என்பதை முன்னரே கண்டோம். ஞானிகளின் இறையருட்கட்டளைப் பணியோ முற்றிலும் மாறுபாடானது. அவர்கட்கு நல்லோரும், கொடியோரும் ஒன்றே. தீது செய்பவர்க்காக வருந்தி அவர்களை நெறிப்படுத்துகிறார்கள். அவர்கள் பவசாகரத்தைக் — இவ்வுலக வாழ்வெனும் பெருங்கடலை — குடிக்கும் அகஸ்தியர் அல்லது அறியாமை இருளை ஒழிக்கும் ஆதவன் ஆவார்கள். ஞானிகளிடம் கடவுள் வசிக்கிறார். உண்மையில், அவரிடமிருந்து அவர்கள் வேறானவர்கள் அல்லர். பக்தர்கள் நன்மைக்காக அவதரிக்கும் இத்தகையவர்களுள் ஒருவரே நமது சாயி ஆவார்.
ஞானத்தின் உச்சக்கட்டத்தில் தெய்வீக ஒழி சூழப்பட்டு எல்லா ஜந்துக்களையும் சமமாக நேசித்திருந்தார். அவர் பற்றற்றவர். பகைவர்களும், நண்பர்களும், அரசனும், ஆண்டியும் அவருக்கு ஒன்றே. அவருடைய அசாதாரணத் திறமையைச் செவிமடுங்கள். அடியவர்களுக்காகத் தமது தகைமைக் களஞ்சியத்தைச் செலவிட்டார். அவர்களுக்கு உதவி செய்வதில் எப்போதும் விழிப்பாய் இருந்தார். ஆனால் அவராக அடியவர்களை வரவேற்க எண்ணினாலொழிய ஒருவரும் அவரை அணுக இயலாது. அவர்களது முறை வரவில்லையானால் பாபா அவர்களை நினைப்பதில்லை. அவருடைய லீலைகளும் அவர்களின் காதை எட்டவியலாது. பிறகு அவர்கள் எங்ஙனம் அவரைப் பார்க்க எண்ணமுடியும்?
சிலர் சாயிபாபாவைப் பார்க்க விரும்பினர். ஆயினும் அவரின் மஹாசமாதிவரை அவரின் தரிசனத்தைப்பெற அவர்களுக்கு வாய்ப்பேதும் கிடைக்கவில்லை. பாபாவின் தரிசனத்தைப்பெற விரும்பிய பலரின் விருப்பமானது இங்ஙனம் நிறைவேறாமல் போயிற்று. அவர்மீது நம்பிக்கை கொண்ட இத்தகையோர் அவரது லீலைகளைச் செவிமடுப்பாராயின் பாலுக்கான — தரிசனத்திற்கான — அவர்களது ஏக்கமானது வெண்ணெயினால் — லீலைகளால் — பெருமளவு திருப்திப்படுத்தப்படும்.
வெறும் அதிஷ்டத்தினாலேயே ஷீர்டி சென்று பாபாவின் தரிசனத்தைப் பெற்ற சிலர், நீண்ட நாட்கள் அங்கு தங்க இயலுமா? இயலாது. ஒருவரும் தாமாகவே ஷீர்டி செல்லமுடியாது. தாம் நினைத்தபடி அங்கு நீண்டநாட்கள் இருக்கமுடியாது. பின்னர், அவர்களுக்கு அனுமதி கொடுத்த நாட்கள் வரைக்குமே அவர்கள் தங்கவேண்டும். பாபா அவர்கள் அவ்விடத்தை விட்டுப் போகும்படி கேட்டதும் அவ்விடத்தைவிட்டுப் போய்விடவேண்டும். எனவே அனைத்தும் பாபாவின் சங்கல்பத்தையே சார்ந்து இருந்தன.
காகா மகாஜனி
ஒருமுறை காகா மகாஜனி ஷீர்டிக்கு பம்பாயிலிருந்து சென்றார். அவர் அங்கு ஒருவாரம் தங்கி கோகுலாஷ்டமி பண்டிகையைக் கண்டு மகிழ விரும்பினார். பாபாவின் தரிசனத்தைப் பெற்றவுடனே, பாபா அவரை, "எப்போது வீட்டிற்குத் திரும்பப்போகிறாய்?" எனக் கேட்டார். அவர் இத்தகைய வினாவினால் ஆச்சரியமே அடைந்தாரெனினும் பதில் அளிக்கவேண்டும் என்பதற்காக, பாபா தம்மை அங்ஙனம் செய்ய எப்போது ஆணையிடுகிறாரோ அப்போதே தாம் வீட்டிற்குப் போகப் போவதாகக் கூறினார். பாபா, "நாளைக்குப் போ!" எனக் கூறினார்.
பாபாவின் மொழிகளே சட்டமானதால், அவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். எனவே உடனே காகா மஹாஜனி ஷீர்டியை விட்டுப் புறப்பட்டார். பம்பாயில் தனது அலுவலகத்திற்குச் சென்றபின்னர், தனது எஜமானர் தன்னுடைய வரவுக்காகக் கவலையுடன் காத்திருப்பதை அறிந்தார். எனவே காகாவின் வரவு அவருக்குத் தேவைப்பட்டது. ஷீர்டியில் காகாவுக்கு ஓர் கடிதம் அனுப்பியிருந்தார். பம்பாய்க்கு அது திருப்பி அனுப்பப்பட்டது.
வக்கீல் பாவ் சாஹேப் துமால்
இப்போது மாறுபாடான ஒரு கதையைக் கேளுங்கள். ஒருமுறை பாவ் சாஹேப் துமால் ஒரு விசாரணைக்காக நிபாட்டிற்குச் சென்றுகொண்டிருந்தார். வழியில் ஷீர்டிக்குச் சென்று பாபாவின் தரிசனத்தைப் பெற்று உடனே நிபாட்டிற்குச் செல்ல விரும்பினார். ஆனால் பாபா அவரை அங்ஙனம் செய்ய அனுமதிக்கவில்லை. ஒரு வாரமோ, அல்லது அதற்கு மேலோ அவரை ஷீர்டியில் தங்கவைத்தார். இதே நேரத்தில் நிபாட்டில் உள்ள நியாயாதிபதி அடிவயிற்றில் ஏற்பட்ட வலியினால் மிகவும் துன்புற்றார். எனவே, விசாரணை ஒத்திப்போடப்பட்டது. துமால் அங்கு சென்றபின்னரே விசாரணை தொடர்ந்தது. முடிவில் துமால் வெற்றி பெற்றார். அவரது கட்சிக்காரர் குற்றமற்றவராகத் தீர்ப்பளிக்கபட்டார்.
திருமதி நிமோண்கர்
நிமோணின் வாடண்டர் — சேவையாகச் செய்யும் கௌரவபதவி — நானா சாஹேப் நிமோண்கர், தமது மனைவியுடன் ஷீர்டியில் தங்கியிருந்தார். நிமோண்கரும் அவரது மனைவியும் மசூதியில் பாபாவுடன் பெரும்பாலான நேரத்தைக் கழித்து அவருக்குச் சேவை செய்துவந்தனர். பெலாபூரில் அவர்களது மகன் நோய்வாய்ப்பட்டான். பாபாவின் சம்மதத்துடன், பெலாபூர் சென்று மகனையும், மற்ற உறவினர்களையும் கண்டு அங்கு சில நாட்கள் தங்கிவரலாம் என்று அன்னை தீர்மானித்தாள்.
ஆனால் நானா சாஹேப் அடுத்த நாளே அவளைத் திரும்பி வரும்படி கூறினார். அன்னைக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன செய்வதென்றும் தெரியவில்லை. ஆனால் அவளுடைய இறைவன் சாயி அவளுக்கு உதவிட வந்தார். ஷீர்டியை விட்டுப் புறப்படும்போது, அவள் சாதேவின் வாதாவுக்கு முன்னால் நானா சஹேப்புடனும் மற்றவர்களுடனும் நின்றுகொண்டிருந்த பாபாவின் முன்சென்று சாஷ்டாங்கமாய் விழுந்து புறப்படுவதற்கு அனுமதி கேட்டாள். பாபா அவளிடம், "போ, சீக்கிரம் போ, அமைதியாகவும், குழப்பமடையாமலும் இரு. நான்கு நாட்களுக்கு பெலாபூரில் சௌகரியமாக இரு. உனது உறவினர்களை எல்லாம் கண்டபின் ஷீர்டிக்குத் திரும்பு" என்று உரைத்தார். பாபாவின் மொழிகள் எத்தகைய அதிஷ்டம் படைத்தது. நானா சாஹேபின் தீர்மானம் பாபாவின் தீர்ப்பினால் தோற்கடிக்கப்பட்டது.
நாசிக் முலே சாஸ்திரி
ஜோசியம், கைரேகை முதலியவற்றில் கரைகண்டவரும், ஆறு சாஸ்திரங்களைக் கற்றறிந்தவருமாகிய நாசிக்கைச் சேர்ந்த வைதீகமான அக்னிஹோத்ரி அந்தணர் முலே சாஸ்திரி ஒருமுறை நாக்பூரின் புகழ்பெற்ற கோடீஸ்வரரான பாபு சாஹேப் பூட்டியைச் சந்திக்க ஷீர்டிக்கு வந்தார். அவரைச் சந்தித்தபின்னர், அவரும் மற்றவர்களும் பாபாவைக் காண மசூதிக்குச் சென்றனர். பாபா தம்முடைய சொந்தப் பணத்திலேயே வெவ்வேறு பழங்களையும், மற்றப் பொருட்களையும் விற்பனையாளரிடமிருந்து வாங்கி மசூதியிலுள்ள மக்களுக்கு விநியோகித்தார்.
பாபா மாம்பழத்தை அதன் எல்லாப் பக்கங்களிலும் மிகத் திறமையாக அழுத்துவது வழக்கம். ஒருவன் பாபாவிடமிருந்து அதை வாங்கி உறிஞ்சுவானேயாகில், எல்லா சதைப்பற்றையும் உடனே தன வாயில் உறிஞ்சிக்கொண்டு கொட்டையையும், தோலையும் உடனே தூக்கி எறிந்துவிட முடியும். வாழைப் பழங்களை உரித்து சதைப்பற்றை அடியவர்க்கு விநியோகித்து, தோலை பாபா தமக்காக வைத்துக்கொள்வார். கைரேகை சாஸ்திரி என்ற முறையில் முலே சாஸ்திரி, பாபாவின் கையைப் பரிசோதிக்க விரும்பினார். பாவிடம் கையைக் காண்பிக்கக் கோரினர். பாபா அவருடைய வேண்டுகோளுக்குச் செவி சாய்க்கவில்லை. அவருக்கு நான்கு வாழைப்பழங்களைக் கொடுத்தார். எல்லோரும் வாதாவுக்குத் திரும்பினர்.
முலே சாஸ்திரி குளித்துப் புனித ஆடைகள் அணிந்து அக்னிஹோத்ரம் போன்ற தன நித்ய கர்மானுஷ்டங்களைச் செய்ய ஆரம்பித்தார். பாபா வழக்கம்போல் லெண்டியை நோக்கிப் புறப்பட்டார். "கொஞ்சம் ஜெரு எடு, — குங்குமப்பூ நிறத்தில் துணியைச் சாயம் போடுவதற்கான சிவப்பு மண்ணைப்போன்ற ஒரு பொருள் — நாம் இன்று குங்குமப்பூ நிற உடை உடுத்தலாம்" என்று பாபா கூறினார். பாபா என்ன சொல்கிறார் என்று ஒருவருக்கும் விளங்கவில்லை. சிறிது நேரம் கழித்து, பாபா திரும்பி வந்தார். மத்தியான ஆரத்திக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.
பாபு சாஹேப் ஜோக், முலே சாஸ்திரியிடம் அவர் தன்னுடன் ஆரத்திக்கு வருகிறாரா என்று கேட்டார். மாலையில் தாம் பாபாவைப் பார்க்கப்போவதாக அவர் பதிலளித்தார். இதற்குச் சிறிது நேரத்திற்குப்பின் பாபா தமது ஆசனத்தில் அமர்ந்தார். அடியவர்களால் வழிபடப்பட்டார். ஆரத்தியும் துவங்கியது. பிறகு பாபா "புது பிராமணனிடமிருந்து தட்ஷனை வாங்கி வா" எனக் கூறினார். பூட்டி தாமே தட்ஷனை வாங்கச் சென்றார். பாபாவின் செய்தியை முலே சாஸ்திரியிடம் தெரிவித்தபோது அவர் சொல்லப்பெறாத அளவு குழப்பம் அடைந்தார். "நான் தூய அக்னிஹோத்ரி பிராமணன். நான் ஏன் தட்ஷனை கொடுக்கவேண்டும்? பாபா பெரிய முனிவராக இருக்கலாம். நான் அவரது சீடனல்ல!" என நினைத்தார். ஆனால் சாயிபாபாவைப் போன்ற ஞானி, பூட்டியைப் போன்ற கோடீஸ்வரரிடம் தட்ஷனை கேட்டனுப்பியிருப்பதனால் அவரால் மறுக்க இயலவில்லை. எனவே தனது அனுஷ்டானத்தைப் பூர்த்தியாக்காமல் உடனே பூட்டியுடன் மசூதியை நோக்கிச் சென்றார்.
தம்மைத் தூயவராகவும், புனிதமானவராகவும், மசூதியை வேறுவிதமாகவும் கருதிய அவர் சற்று தூரத்தில் இருந்தே கைகளைச் சேர்த்து பாபாவின்மீது புஷ்பங்களை வீசினார். அப்போது ஆஹா! திடீரென்று ஆசனத்தில் அவர் பாபாவைக் காணவில்லை. காலஞ்சென்ற தனது குரு கோலப் ஸ்வாமியையே அங்கு கண்டார். ஆச்சரியத்தால் அவர் செயலிழந்தார். இது கனவாயிருக்குமோ? அல்ல, அங்ஙனமன்று! அவர் அகல விழித்திருந்தார். காலஞ்சென்ற தனது குரு கோலப் ஸ்வாமி எங்ஙனம் அங்கு இருக்கமுடியும்? சிறிதுநேரம் அவர் பேச்சற்றுவிட்டார். தன்னையே கிள்ளிவிட்டுக்கொண்டார். திரும்பவும் நினைத்தார். ஆனால் காலஞ்சென்ற தனது குரு மசூதியில் இருக்கும் உண்மையை அவரால் ஏற்கமுடியவில்லை. முடிவில் எல்லா ஐயங்களையும் களைந்துவிட்டுத் தெளிந்தநிலையில் தனது குருவின் அடிகளில் பணிந்து, கூப்பிய கரங்களுடன் நின்றிருந்தார்.
மற்ற எல்லோரும் ஆரத்தி பாடுகையில் முலே சாஸ்திரி தனது குருவின் பெயரை இரைந்து கூக்குரலிட்டார். இனப்பெருமை, புனிதத்தன்மை பற்றிய எண்ணங்களை ஒதுக்கி எறிந்துவிட்டு தனது குருவின் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து கண்களை மூடிக்கொண்டார். எழுந்திருந்தபோது பாபா தட்ஷணை கேட்டுக்கொண்டிருப்பதைக் கண்டார். பாபாவின் பேரானந்த ரூபத்தையும் சிந்தனைக்கு அப்பாற்பட்ட அவரின் சக்தியையும் கண்டு முலே சாஸ்திரி தன்னையே மறந்தார். எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தார். ஆனந்தக் கண்ணீர் வடித்தார். திரும்பவும் பாபாவை வணங்கி தட்ஷணை கொடுத்தார். தனது சந்தேகம் நீங்கிவிட்டதாகவும், தன் குருவையே கண்டதாகவும் அவர் கூறினார்.
பாபாவின் இந்த லீலையைக் கண்ணுற்ற அனைவரும், முலே சாஸ்திரி உட்பட, மிகவும் மனதுருகிப்போயினர். "ஜெரு எடு, நாம் இன்று குங்குமப்பூ வண்ண உடை உடுத்தலாம்" என்ற பாபாவின் பொன்மொழிகளை இப்போது புரிந்துகொண்டனர். சாயிபாபாவின் லீலை அத்தகைய அற்புதம் வாய்ந்ததாகும்.
ஒரு டாக்டர்
ஒருமுறை ஒரு மம்லதார் தனது டாக்டர் நண்பருடன் ஷீர்டிக்கு வந்தார். தனது தெய்வம் ராமர் என்றும், தான் ஒரு முஹமதியர் முன் பணியப் போவதில்லை என்றும் கூறி, ஷீர்டிக்கு வர விருப்பமில்லாதவராய் இருந்தார். மம்லதார் அவரிடம், அவரைப் பணியும்படி ஒருவரும் கேட்கவோ, வற்புறுத்தவோ மாட்டார்கள் என பதில் உரைத்தார். எனவே தோழமைக் கூட்டின் மகிழ்ச்சியை நல்குதற்காக அவரும் உடன் வருதல் வேண்டும். அவ்வாறாக அவர்கள் ஷீர்டிக்கு வந்து பாபாவின் தரிசனத்திற்காக மசூதிக்குச் சென்றனர். டாக்டர் முன்னால் சென்று வணங்குவதைக் கண்ணுற்ற அனைவரும் ஆச்சரியத்தால் செயலிழந்தனர்.
அவர் எங்ஙனம் தனது தீர்மானத்தை மறந்து முஹமதியர் முன் பணிந்தார் என்று அனைவரும் அவரைக் கேட்டனர். தனது அன்பிற்குரிய தெய்வம் ராமரையே ஆசனத்தில் பார்த்ததாகவும், எனவே தாம் சாஷ்டாங்கமாக வணங்கியதாகவும் கூறினார். இதை அவர் சொல்லும்போதே சாயிபாபாவை மீண்டும் அங்கே கண்டார். திகிலுற்ற அவர், "இது கனவா? எங்ஙனம் அவர் முஹமதியராக இருக்கமுடியும்? அவர் ஒரு மாபெரும் யோகநிறை — யோகசம்பன்ன — அவதாரம் ஆவார்" என நினைத்தார்.
அடுத்தநாள், தான் உண்ணாமல் விரதம் இருப்பதென்று சபதம் எடுத்துக்கொண்டார். மசூதிக்குப் போவதைத் தவிர்த்து, பாபா தன்னை ஆசீர்வதிக்கும்வரை அங்கு போவதில்லை எனத் தீர்மானம் செய்துகொண்டார். மூன்று நாட்கள் கடந்தன. நான்காவது நாள் கான்தேஷிலிருந்து அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் வந்து சேர்ந்தார். அவருடன் பாபாவின் தரிசனத்திற்காக மசூதிக்குச் சென்றார். வணக்கதிற்குப்பின் "ஓ! டாக்டரா, உம்மை இங்கு அழைத்துவர கான்தேஷிலிருந்து யார் வந்தது என்று எனக்கு முதலில் சொல்லும்?" என்று பாபா அவரைக் கேட்டார். இந்த முக்கியமான வினாவைக்கேட்டு டாக்டர் மனதுருகினார். அன்றிரவே அவர் பாபாவினால் ஆசீர்வதிக்கப்பட்டார். தூக்கத்தில் பேரானந்தப் பெருநிலையை அனுபவித்தார். இங்ஙனம் சாயிபாபாவிடம் அவரது பக்தி பன்மடங்காகப் பெருகியது.
வேறு எவ்விடத்திலும் இல்லாமல், நாம் நம்முடைய குருவினிடத்தில் உறுதியான நம்பிக்கை கொண்டவராய் இருக்கவேண்டும் என்பதே இந்தக் கதைகளின், முக்கியமாக முலே சாஸ்திரியின் கதையினுடைய நீதியாகும். அடுத்த அத்தியாயத்தில் இன்னும் அதிக லீலைகள் விவரிக்கப்படும்.
ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
1. பீமாஜி பாடீல்
2. பாலா ஷிம்பி
3. பாபு சாஹேப் பூட்டி
4. ஆலந்தி ஸ்வாமி
5. காகா மஹாஜனி
6. ஹர்தாவைச் சேர்ந்த தத்தோபந்த்
மாயையின் அளவறியா சக்தி
பாபாவின் மொழிகள் எப்போதும் சுருக்கமானவை, மிருதுவானவை, ஆழமானவை, பொருள் செறிந்தவை, திறமையானவை, நன்றாகச் சமநிலைப் படுத்தப்பட்டவை. அவர் எப்போதும் திருப்தியடைந்தவராய் இருந்தார். எதற்கும் கவலைப்படவில்லை. அவர் சொன்னார், "நான் ஒரு பக்கிரியானபோதும், எனக்கு வீடோ, மனைவியோ இல்லாதிருப்பினும் எல்லாக் கவலைகளையும் விட்டொழித்து நான் ஒரே இடத்தில் வசித்தாலும் தடுக்கமுடியாத மாயை என்னை அடிக்கடி துரத்துகிறாள். என்னை மறந்தாலும், அவளை மறக்கமுயயவில்லை. அவள் என்னை எப்போதும் சூழ்ந்துகொள்கிறாள். பரமாத்மா ஸ்ரீ ஹரியினுடைய — தோற்ற சக்தி — பிரம்மா, மற்றவர்களையும் துரத்துகிறது. பின் என்னைப்போன்ற ஏழைப் பக்கிரியைப் பற்றிப் பேச என்ன இருக்கிறது? பரமாத்மாவிடம் சரண் புகுவோர், அவரது அருளால் அவளது பந்தங்களினின்றும் விடுவிக்கபடுவர்."
மாயையின் சக்தியைப் பற்றி இம்மொழிகளால் பாபா பேசினார். கிருஷ்ண பரமாத்மா ஞானிகள் தமது உயிருள்ள ரூபங்கள் என்ற பாகவதத்தில் உத்தவருக்கு உபதேசித்திருக்கிறார். பாபா தமது அடியவர்களின் நலனுக்காக யாது கூறியிருக்கிறார் என்பதைக் கவனியுங்கள்: "யார் அதிஷ்டசாலியோ எவருடைய பாவங்கள் ஒழிந்தனவோ, அவர்கள் எனது வழிபாட்டை எய்துகிறார்கள். 'சாயி சாயி' என்று எப்போதும் கூறிக்கொண்டிருப்பீர்களானால் நான் உங்களை ஏழ்கடலுக்கு அப்பால் எடுத்துச் செல்வேன். இம்மொழிகளை நம்புங்கள். நீங்கள் நிச்சயம் நன்மையடைவீர்கள். வழிபாட்டின் கூறுகள் எட்டோ, பதினாறோ எனக்குத் தேவையில்லை. எங்கு முழுமையான பக்தி இருக்கிறதோ அங்கு நான் அமர்கிறேன்". தம்மைத்தாமே முழுவதுமாக சரணடைவோர்களின் தோழரான சாயி, அவர்களின் நன்மைக்காக என்ன செய்தார் என்பதைத் தற்போது படியுங்கள்.
பீமாஜி பாடீல்
புனே ஜில்லா, ஜுன்னர் தாலுக்கா நாரயண்காவனைச் சேர்ந்த பீமாஜி பாடீல் என்பவர் பல வியாதிகளாலும், நெடுநாள் நெஞ்சு வலியாலும் துன்பப்பட்டார். முடிவில் அது கயரோகமாக மாறியது. அவர் எல்லாவித சிகிச்சைகளையும் முயன்று ஒரு பிரயோசனமுமில்லை. எல்லா நம்பிக்கைகளையும் இழந்து, முடிவாகக் கடவுளை நோக்கி அவர் வேண்டிக்கொண்டார். "ஓ! நாராயண மூர்த்தியே, இப்போது என்னைக் குணப்படுத்தும்". சூழ்நிலைகள் எல்லாம் நன்றாய் இருக்கையில் நாம் கடவுளைப் பற்றி நினைப்பதில்லை. கேடும், துரதிஷ்டமும் நம்மைத் தாக்கும்போது நாம் அவரை நினைக்கிறோம். எனவே பீமாஜி இப்போது கடவுளை நோக்கித் திரும்பினார். இவ்விஷயத்தில் பாபாவின் பெரும் அடியவரான நானா சாஹேப் சாந்தோர்க்கரைக் கலந்தாலோசிக்க அவருக்குத் தோன்றியது. தனது துன்பமனைத்தையும் கூறி அவருக்கு ஒரு கடிதம் எழுதி அவருடைய கருத்தைத் தெரிவிக்கக் கேட்டிருந்தார்.
நானா தமது பதிலில் ஒரேஒரு வழிதான் இருக்கிறது. அதாவது பாபாவின் பாதங்களினின்று உதவி பெறுவதேயாகும் என்று கூறினார். ஷீர்டிக்கு அவர் அழைத்துவரப்பட்டு பாபாவின் முன்னர் அமர்த்தப்பட்டார். நானா சாஹேப்பும், ஷாமாவும் — மாதவ்ராவ் தேஷ்பாண்டே — அங்கு இருந்தனர். முன்னைய தீய கர்மங்களாலேயே இவ்வியாதி என்று பாபா சுட்டிக்காண்பித்து முதலில் இதில் தலையிடத் தீமானம் இல்லாதவராய் இருந்தார். நோயாளியோ தாம் அனாதரவானவர் என்றும், அவரையே சரணாகதி அடைந்திருப்பதாகவும், அவர்தாம் கடைசி கதியென்றும், கருணை காட்டும்படியும் கூறி அலறத் தொடங்கினார். அப்போது பாபாவின் உள்ளம் உருகியது. அவர் கூறியதாவது, "பொறு, உன்னுடைய கவலைகளைத் தூர ஏறி, உன்னுடைய துன்பங்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டன. ஒருவன் எவ்வளவுதான் நசுக்கப்பட்டு, வேதனைப்பட்டவனாக இருப்பினும், இம்மசூதியில் கால் வைத்தவுடனே அவன் மகிழ்ச்சியின் பாதையில் செல்கிறான். இங்கேயுள்ள பக்கிரி மிகவும் அன்பானவர். அவர் இவ்வியாதியைக் குணப்படுத்துவார். எல்லோரையும் அன்புடனும், ஆசையுடனும் பாதுகாப்பார்". ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை நோயாளி இரத்த வாந்தி எடுத்துக்கொண்டிருந்தார். ஆனால் பாபாவின் சந்நிதானத்தில் எவ்வித வாந்தியும் இல்லை. நம்பிக்கையும், கருணையும் கொண்ட மொழிகளை பாபா உதித்த அதே தருணத்திலிருந்தே வியாதி குணமடையும் நிலைக்குத் திரும்பியது. அசௌகரியமும், சுகாதாரக் குறைவுமுள்ள பீம்பாயின் வீட்டில் தங்கும்படி பாபாவால் கேட்கப்பட்டார். ஆனால் பாபாவின் உத்தரவுக்குக் கீழ்ப்படியவேண்டும். அவர் அங்கு தங்கியிருக்கையில் பாபா அவரை இரண்டு கனவுகள் மூலம் குணப்படுத்தினார்.
முதல் கனவில் தன்னை ஒரு பையனாகவும், மராட்டிச் செய்யுள் ஒப்பிக்காததற்காக உபாத்தியாயரின் கடுமையான பிரம்படியை வாங்கிக் கஷ்டப்படுவதைப் போன்றும் கண்டார். இரண்டாவது கனவில் ஒரு கல்லை யாரோ ஒருவர் தனது நெஞ்சின்மீது மேலும் கீழும் உருட்டிக் கடுமையான வலியையும், வேதனையையும் உண்டாக்குவதாகக் கண்டார். கனவில் அவர்பட்ட இக்கஷ்டத்துடன் அவரின் சிகிச்சை முடிவடைந்து அவர் வீடு திருப்பினார். பின்னர் அடிக்கடி ஷீர்டி வந்து பாபா தனக்குச் செய்ததை நன்றியுடன் நினைத்து சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார்.
பாபாவும் நன்றியுள்ள நினைப்பு, மாறாத நம்பிக்கை, பக்தி இவற்றைத் தவிர வேறெதையும் எதிர்பார்க்கவில்லை. மகாராஷ்டிர மக்கள் பதினைந்து தினங்களுக்கு ஒருமுறை தங்களது இல்லங்களில் சத்யநாராயண பூஜையை எப்போதும் செய்கிறார்கள். ஆனால் தனது கிராமத்திற்கு திரும்பியபோது பீமாஜி பாடீல் புதிய சத்யசாயி விரத பூஜையை, சத்யநாராயண பூஜைக்குப் பதிலாக தனது இல்லத்தில் ஆரம்பித்தார்.
பாலா கண்பத் ஷிம்பி
பாபாவின் மற்றொரு பக்தரான பாலா கண்பத் ஷிம்பி என்பவர், கொடியவிதத்தைச் சேர்ந்த மலேரியாவினால் மிகவும் கஷ்டப்பட்டார். எல்லாவித மருந்துகளையும், கஷாயங்களையும் உபயோகித்தார், பலனேதுமில்லை. ஜூரம் சிறிதளவும் குறைந்தபாடில்லை. அவர் ஷீரடிக்கு ஓடி பாபாவின் பாதங்களில் வீழ்ந்தார். பாபா இவ்விஷயத்தில் ஒரு நூதனமான செயல்முறையை அனுசரிக்கச் செய்தார். கொஞ்சம் சாதத்தைத் தயிருடன் கலந்து, லக்ஷ்மி கோவிலுக்கு முன்னால் உள்ள கருப்பு நாய்க்குக் கொடுக்கும்படி கூறினார். பாலாவுக்கு இதை எங்ஙனம் நிறைவேற்றுவதென்று புதிராக இருந்தது. ஆனால் அவர் வீட்டிற்குப் போனவுடனேயே, தயிரையும் சாதத்தையும் கண்டார். அவை இரண்டையும் கலந்து லக்ஷ்மி கோவிலுக்கு அருகில் கொணர்ந்தார். அப்போது ஒரு கருப்பு நாய் வாலையாட்டிக்கொண்டு நிற்பதைக் கண்டார். நாயின் முன்னர் தயிருடன் கலந்த சாதத்தை வைத்தார். நாயும் அதை உட்கொண்டது. ஆச்சர்யமாகவே, பாலா கண்பத் ஷிம்பி மலேரியாவிலிருந்து விடுபட்டார்.
பாபு சாஹேப் பூட்டி
ஸ்ரீமான் பூட்டி, ஒருமுறை வாந்தியெடுத்தல், வயிற்றுப்போக்கு முதலியவற்றால் அவதியுற்றார். அவருடைய அலமாரி மருந்து, மாத்திரைகளால் நிறைந்து இருந்தது. ஆயினும் அவற்றால் ஒரு பயனும் இல்லை. வாந்தியெடுத்து வயிற்றுப்போக்கு ஆனதன் காரணமாக பாபு சாஹேப் மிகவும் தளர்ச்சி அடைந்தார். எனவே பாபாவின் தரிசனத்திற்காக மசூதிக்குச் செல்லக்கூட அவரால் இயலவில்லை. பாபா அப்போது அவரைக் கூட்டனுப்பி, அவரைத் தன்முன் உட்காரச் செய்து, "இப்போது கவனி, இனிமேல் நீ வெளியேறக்கூடாது" என்று கூறி, தமது ஆட்காட்டி விரலை ஆட்டி, மேலும் "வாந்தியெடுத்தலும் நிற்கவேண்டும்" எனக் கூறினார். இப்போது பாபாவின் சொற்களில் உள்ள சக்தியைக் கவனியுங்கள். இரண்டு வியாதிகளும் ஓடிவிட்டன. பூட்டியும் குணமானார்.
மற்றோர்முறை காலராவால் அவர் தாக்கப்பட்டு கடினமான தாகத்தால் அல்லலுற்றார். டாக்டர் பிள்ளை எல்லாவித சிகிச்சைமுறைகளைக் கையாண்டும் குணமளிக்க முடியவில்லை. பின்னர் அவர் பாபாவிடம் சென்று தனது தாகத்தைத் தணித்துத் தன்னைக் குணமாக்கும் ஒரு பானத்தைப் பற்றிக் கலந்தாலோசித்தார். பாபா அவருக்கு, சர்க்கரை கலந்த பாலில் வேகவைக்கப்பட்ட கலவைக்கூழாகிய பாதாம் பருப்பு, வால்நட் பருப்பு, பிஸ்தா பருப்பு இவற்றைச் சாப்பிடுவதைத் தேர்ந்து அருளினார். எந்த வைத்தியராலும் இது நிலைமையை மோசப்படுத்தி முடிவுக்குக் கொண்டுவந்துவிடும் என்று கருதப்படும். ஆனால் பாபாவின் கட்டளையை அறவே கீழ்ப்படியும் குணத்தால் இவை உட்கொள்ளப்பட்டு அதிசயப்படும் வகையில் குணமாக்கவும் பட்டது.
ஆலந்தி ஸ்வாமி
பாபாவின் தரிசனத்தைப்பெற விரும்பிய ஒரு சாமியார் ஆலந்தியிலிருந்து ஷீர்டிக்கு வந்தார். தன் காதிலுள்ள கடுமையான வலியால் அவர் அல்லலுற்றார். அது அவரைத் தூங்க விடாமல் தடை செய்தது. இதற்க்காக அவர் ரணசிகிச்சை செய்யப்பட்டார். ஆனால் அது அவருக்கு எவ்விதப் பலனையும் அளிக்கவில்லை. இவ்வலி மிகவும் கடினமானதாய் இருந்தது. அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவர் திரும்பிச் செல்லும்போது பாபாவின் அனுமதியைப் பெற வந்தார். அப்போது ஷாமா, ஸ்வாமிகளின் காது வலிக்கு ஏதாவது செய்யுமாறு பாபாவை வேண்டினார். "அல்லா அச்சா கரேகா!" எனக் கூறித் தேற்றினார். பிறகு ஸ்வாமிகள் புனேவுக்குத் திரும்பினார். ஒருவாரம் கழித்து ஷீர்டிக்குக் கடிதம் ஒன்று அனுப்பியிருந்தார். அதில் தனது காதுவலி மறைந்துவிட்டது என்றும், வீக்கம் இருந்தது என்றும், அவ்வீக்கத்தைப் போக்குவதற்காக பம்பாய்க்கு, ரணசிகிச்சை செய்துகொள்ளச் சென்று இருந்ததாகவும், ஆனால் டாக்டர் காதைச் சோதித்துவிட்டு ரணசிகிச்சை தேவையில்லை எனக்கூறியதாகவும் குறிப்பிட்டிருந்தார். பாபாவின் மொழிகளுக்கு அத்தகைய ஆற்றல் இருந்தது.
காகா மஹாஜனி
பாபாவின் மற்றொரு அடியவரான காகா மஹாஜனி என்பவர் ஒருமுறை வயிற்றுப்போக்கால் அவதியுற்றார். பாபாவுக்குத் தனது சேவை தடைப்படாமல் இருக்க, ஒரு மூலையில் பானையில் தண்ணீரை வைத்துவிட்டு, பாபா கூபிடும்போதேல்லாம் செல்வார். சாயிபாபா அனைத்தையும் அறிந்தவராயிருப்பதால் தனது வியாதியையும் அவர் சீக்கிரம் குணப்படுத்துவார் என்று எண்ணிய காகா அதைப்பற்றி எதையுமே பாபாவிடம் தெரிவிக்கவில்லை. மசூதிக்கு முன்னால் கட்டப்பட்டிருக்கும் தாழ்வாரத்தின் வேலை, பாபாவால் அனுமதியளிக்கப்பட்டுவிட்டது. ஆனால் உண்மையில் வேலை தொடங்கியவுடன் பாபா கொந்தளிப்புற்று பலமாகக் கூச்சலிடத் தொடங்கினார். எல்லோரும் ஓடினார்கள். காகாவும் ஓடினார். பாபா அவரைப் பிடித்து அங்கேயே உட்கார வைத்தார்.
பின்னர் நேரிட்ட குழப்பத்தில் யாரோ ஒருவர் ஒரு சிறிய நிலக்கடலைப் பையை விட்டு ஒடியிருந்தார். பாபா கைநிறையக் கடலைப் பருப்புக்களை எடுத்து தமது கைகளால் அவற்றைத் தேய்த்து, தோலை ஊதி சுத்தமான கடலைப் பருப்புக்களை காகாவிடம் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார். திட்டுவது, கடலையச் சுத்தம் செய்வது, காகாவைச் சாப்பிடச் சொன்னது என்பன சமகாலத்தில் நடைபெற்றன. பாபா தாமே சிலவற்றைச் சாப்பிட்டார். பையில் உள்ளவை தீர்ந்ததும், பாபா அவரைத் தாம் தாகமாய் இருப்பதால் தண்ணீர் கொணரச் சொன்னார். பின்னர் பாபா சிறிது தண்ணீர் அருந்திவிட்டு, காகாவைத் தண்ணீர் குடிக்கும்படி கூறினார். பாபா அப்போது, "உனது வயிற்றுப்போக்கு நின்றுவிட்டது. நீ இனிமேல் தாழ்வாரத்தின் வேலையைக் கவனிக்கலாம்" என்று கூறினார்.
இதற்கு இடையில் ஓடிப்போனவர்கள் எல்லாம் திரும்பிவந்தனர். தனது வயிற்றுப்போக்கு நின்றுபோன காகாவும் திரும்பி வந்து வேலையில் கலந்துகொண்டார். நிலக்கடலையா வயிற்றுப்போக்கு மருந்து? நிகழ்கால மருத்துவப்படி நிலக்கடலை வயிற்றுப்போக்கை அதிகரிக்கும். அதைக் குணப்படுத்தாது. பாபாவின் மொழிகளே இவ்விஷயத்திலும், மற்ற விஷயங்களிலும் உள்ள உண்மையான சிகிச்சையாகும்.
ஹர்தாவைச் சேர்ந்த தத்தோபந்த்
ஹர்தாவிலிருந்து வந்த தத்தோபந்த் என்னும் பெருந்தகை பதினான்கு ஆண்டுகளாக வயிற்றுவலியால் அல்லலுற்றார். எவ்விதச் சிகிச்சையும் அவருக்கு எந்தப் பலனையும் அளிக்கவில்லை. பின்னர், பாபா பார்வையாலேயே வியாதியைக் குணப்படுத்துகிறார் என்ற அவரின் புகழைக் கேள்விப்பட்டு ஷீர்டிக்கு ஓடிவந்து பாபாவின் பாதங்களில் வீழ்ந்தார். பாபா அவரை அன்புடன் நோக்கி ஆசீர்வாதங்கள் அளித்தார். பாபா தமது கரத்தை அவரது தலையின்மீது வைத்து ஆசீர்வாதத்தையும், உதியையும் அளித்தபின் அவர் குணமடைந்தார். அதற்கப்பால் இவ்வியாதியைப் பற்றி எவ்விதத் தொந்தரவும் இல்லை. இந்த அத்தியாயத்தின் முடிவில் மூன்று நிகழ்ச்சிகள் அடிக்குறிப்பில் காணப்படுகின்றன.
(1) மாதவ்ராவ் தேஷ்பாண்டே மூல வியாதியால் அல்லலுற்றார். பாபா அவருக்கு சோனமுகியின் — சூரத்தாவாரை - மிதமான பேதி மருந்து — கஷாயத்தைத் தேர்ந்து கொடுத்தார். இது அவரைக் குணமாக்கியது. இரண்டு ஆண்டுகளுக்குப்பின் இத்தொந்தரவு மீண்டும் தலையெடுத்தது. மாதவ்ராவ் பாபாவைக் கலந்தாலோசிக்காமல் அதே மருந்தை உட்கொண்டார். பெருமளவிற்கு இது வியாதியை அதிகப்படுத்தியது. ஆனால் பின்னர் அது பாபாவின் அருளால் குணமாக்கப்பட்டது.
(2) கங்காதர் பந்த் என்ற காகா மகாஜனியின் அண்ணன் பல ஆண்டுகளாக வயிற்றுவலியால் அவதியுற்றுக்கொண்டிருந்தார். பாபாவின் புகழைக் கேள்விப்பட்டு ஷீர்டிக்கு வந்து தன்னைக் குணமாக்கும்படி வேண்டிக்கொண்டார். பாபா அவரின் வயிற்றைத் தொட்டு "கடவுள் குணமாக்குவார்" என்று கூறினார். அது முதற்கொண்டு அவருக்கு வயிற்றுவலி ஏதுமில்லை. அவர் முழுவதுமாகக் குணமாக்கப்பட்டார்.
(3) ஒருமுறை நானா சாஹேப் சாந்தோர்கரும் கடுமையான வயிற்றுவலியால் அல்லலுற்றார். இரவு, பகல் முழுவதும் அவரால் இருப்புக்கொள்ள முடியவில்லை. டாக்டர்கள் ஊசி போட்டும் பலனளிக்கவில்லை. பின்னர் அவர் பாபாவை அணுகினார். பின்னர் அவரை பர்ஃபி என்ற இனிப்புப் பண்டத்தை நெய்யுடன் உண்ணச் சொன்னார். இச்செயல்முறையைப் பின்பற்றியதும் அவர் முழுக்கக் குணமடைந்தார்.
பாபாவின் சொற்களும் கருணையுமே பல்வேறு வியாதிகளை நிரந்தரமாகக் குணப்படுத்திய உண்மையான மருந்தாகும் என்று இக்கதைகள் நமக்குக் காட்டுகின்றன. மருந்துகளோ மாத்திரைகளோ அல்ல.
ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
ரத்தன்ஜி வாடியா
• மௌலா சாஹேப் முனிவர்
• தட்ஷிணை சாஸ்திரம்
• மீமாம்ஸா
பாபா சொல்லும், கருணையும் எங்ஙனம் குணமாக்க முடியாத வியாதிகளையும் குணமாக்கியது என்பதைச் சென்ற அத்தியாயத்தில் கண்டோம். இப்போது பாபா எங்ஙனம் ரத்தன்ஜி வாடியாவை ஆசீர்வதித்துக் குழந்தையை அருளினார் என்பதை விவரிப்போம்.
இயற்கையிலேயே ஞானியினது வாழ்க்கையானது உள்ளும் - புறமும் இனிமையானதாய் இருக்கிறது. அவரது பல்வேறு செயல்கள் சாப்பிடுதல், நடத்தல், அவரின் இயற்கையான மொழிகள் எல்லாம் இனிமை வாய்ந்தவை. அவர்தம் வாழ்க்கையோ பேரானந்தம் மானிட உருப்பெற்றதாகும். தம்மைத் தமது அடியவர்கள் நினைப்பதற்கு வழிமுறையாக சாயி அதனை வெளியிட்டார். கடமை, செயல் இவற்றைப்பற்றி பல்வேறு கதைகளை அவர்கட்குச் சொன்னார். அது கடைமுடிவாக அவர்களை உண்மையான மதத்திற்கு இட்டுச்சென்றது. இவ்வுலகில் அவர்கள் மகிழ்ச்சியாக வாழவேண்டும். ஆனால் அவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். வாழ்க்கையின் நோக்கத்தை அவர்கள் பெறவேண்டும். அதாவது ஆத்மானுபூதியை.
முந்தைய ஜென்மங்களிலுள்ள நல்வினைகளால் நாம் இவ்வுடம்பைப் பெற்றிருக்கிறோம். பக்தியையும், விடுதலையையும் இவ்வுதவியைக்கொண்டு பெறுவது தகுதியுடையதாகும். எனவே, எப்போதும் நாம் சோம்பலின்றி இருக்கவேண்டும். நமது குறிக்கோளையும், நோக்கத்தையும் பெறுவதில் நாம் எப்போதும் விழிப்பாய் இருக்கவேண்டும்.
நீங்கள் தினந்தோறும் சாயி லீலைகளைக் கேட்பீர்களானால், அவரை எப்போதும் காண்பீர்கள். நீங்கள் இவ்வண்ணமாக சாயிலீளைகளை நினைவூட்டிக் கொள்வீர்களானால், உங்கள் மனது அடிக்கடி மாறி ஓடித்திரிதலின்றி விடுபடும். இவ்விதமாகவே சென்றுகொண்டிருந்தால், அது முடிவாகச் சுத்த ஞானத்தில் இரண்டாகக் கலந்துவிடும்.
நாந்தேடைச் சேர்ந்த ரத்தன்ஜி
இப்போது இவ்வத்தியாயத்தைச் சேர்ந்த ஒரு முக்கியமான கதைக்கு வருவோம். நைஜாம் சமஸ்தானத்தில் உள்ள நாந்தேடில், ஒரு பார்சி மில் காண்ட்ராக்டரும், வியாபாரியுமான ரத்தன்ஜி ஷாபூர்ஜி வாடியா என்பவர் வசித்து வந்தார். அவர் பெருமளவு செல்வம் சேகரித்து வயல்களையும், நிலங்களையும் பெற்றிருந்தார். ஆடு, மாடு, குதிரை, போக்குவரத்து வசதிகள் இவ்வளவையும் பெற்று மிகவும் சுபிட்சத்துடன் இருந்தார். புறத்தோற்றங்கள் அனைத்திற்கும் மிகவும் திருப்தி வாய்ந்தவராகவும், சந்தோஷமுடையவராகவும் காணப்பட்டார். ஆனால் அந்தரங்கமாகவும், உண்மையாகவும் அவர் அங்ஙனம் இருக்கவில்லை. எவரும் முழுமையும் செல்வந்தராகவும், மகிழ்ச்சியுற்றவராகவும் இருக்கக்கூடாதென்பது பரலோகத் தீர்ப்பாய் இருக்கிறது. ரத்தன்ஜியும் இதற்கு விதிவிலக்கல்ல.
அவர் தாரளமானவராயும், தான தர்மசீலராயும், ஏழைகட்கு உணவு, உடையளித்தும் அனைவருக்கும் பல்லாற்றானும் உதவிபுரிந்தார். மக்கள் அவரை நல்லவர், மகிழ்ச்சி நிரம்பியவர் என்று கருதினர். ஆனால் நெடுநாளாகத் தனக்கு ஆணோ, பெண்ணோ எக்குழந்தையுமே இல்லாததனால் தமக்குள்ளேயே அவர் மிக்க துயர் கொண்டவரானார். அன்பும் பக்தியுமின்றிப் பாடப்பெறும் இறைவன் புகழ் குறித்த கீர்த்தனை போன்றும், பக்க வாத்தியங்களற்ற இசையைப் போன்றும், பூணூல் அற்ற பிராமணனைப் போன்றும், பொது அறிவின்றிக் கலைகளில் பெற்ற சிறப்பறிவைப் போன்றும், பாவத்திற்காகக் கழிவிரக்கமின்றிச் செய்யும் தீர்த்த யாத்திரையைப் போன்றும், அட்டிகை அற்ற ஆபரண அணிமணிகள் போன்று அழகற்றதாகவும், பயனற்றதாகவும் இருப்பதைப் போன்றே ஆண் குழந்தையற்ற இல்லறத்தானுடைய நிலையுமாம்.
இவ்விஷயத்தைப் பற்றியே ரத்தன்ஜி சதா சிந்தித்து, எனக்கொரு புத்திரனைக் கடவுள் எப்போதாவது மகிழ்ந்தருளுவாரா? என்று ஏங்கினார். இவ்வாறாக அவர் கலகலப்பின்றியும், முகவாட்டத்துடனும் காணப்பட்டார். உணவில் அவருக்குச் சுவை ஈடுபாடு இல்லை. தான் ஒரு புதல்வனுக்காக ஆசீர்வதிக்கப்படுவோமோ என்று அவர் அல்லும் பகலும் இதே கவலையால் பீடிக்கப்பட்டார். தாஸ்கணு மகராஜிடம் அவருக்கு மரியாதை அதிகம். அவரைக் கண்டு தன் உள்ளத்தை வெளியிட்டார். தாஸ்கணுவும் அவரை ஷீர்டிக்குப் போகும்படியும், பாபாவின் தரிசனத்தைப் பெற்று அவர்தம் பாதங்களில் வீழ்ந்து ஆசீர்வாதத்தைப் பெற்று குழந்தை வேண்டுமென வேண்டிக்கொள்ளவும் அவருக்கு அறிவுறுத்தினார். ரத்தன்ஜிக்கு இக்கருத்துப் பிடித்தது. ஷீர்டிக்குப் போகவும் தீர்மானித்தார்.
சில நாட்களுக்குப் பின்னர் அவர் ஷீர்டிக்குச் சென்று பாபாவின் தரிசனத்தைப் பெற்று அவர் பாதங்களில் வீழ்ந்தார். பிறகு தம் கூடையைத் திறந்து ஒரு அழகிய பூமாலையை எடுத்து, அதை பாபாவின் கழுத்திலிட்டுக் கூடைநிறையப் பழங்களையும் சமர்ப்பித்தார். பாபாவுக்கு அருகில் மிக்க மரியாதையுடன் அவர் அமர்ந்து பின்வருமாறு வேண்டத்தொடங்கினார். "இக்கட்டான நாட்களில் இருக்கும்போதே அநேகர் தங்களிடம் வருகிறார்கள். தாங்கள் அவர்களின் துன்பங்களை உடனே துடைக்கிறீர்கள். இதைக்கேட்டு நான் தங்களது பாதகமலத்தை அடைக்கலம் புகுந்தேன். ஆகவே தயவுசெய்து என்னை ஏமாற்றாதீர்கள்".
பாபா ரத்தன்ஜி கொடுக்க இருந்த ரூ.5 ஐக் கேட்டார். ஆனால் ரூ. 3.14 ஐத் தாம் முன்னரே வாங்கிக்கொண்டதாகவும், மீதத்தையே கொடுக்கவேண்டும் என்றார். ரத்தன்ஜி பெரிதளவில் குழப்பமடைந்தார். பாபா என்ன கூறினார் என்று அவரால் புரிந்துகொள்ள இயலவில்லை. அவர் ஷீர்டிக்குச் செல்வது இதுவே முதல்முறை. முன்னமே ரூ. 3.14 ஐ தாம் வாங்கிக்கொண்டதாக பாபா கூறியது எங்ஙனம் என்று அவர் நினைத்தார். அவரால் புதிரை விடுவிக்க இயலவில்லை. ஆனால் அவர் பாபாவின் பாதத்தடியில் அமர்ந்து, கேட்கப்பட்ட மீதமுள்ள தட்ஷிணையை அளித்தார்.
பாபாவிடம் தாம் வந்த காரணத்தை முழுமையும் விளக்கிக்கூறி, அவருடைய உதவியைக் கோரினார். தமக்கு ஒரு புத்திரனை பாபா ஆசீர்வதித்தருள வேண்டும் என வேண்டிக்கொண்டார்.
பாபாவும் மனதுருகி, அவரைக் கவலைப்படாமல் இருக்கும்படியும், அதிலிருந்து அவரின் கஷ்டமான நாட்கள் முடிந்துவிட்டன என்றும் கூறினார். பினார் அவருக்கு உதியை அளித்து, அவரது தலையில் கையை வைத்து, அல்லா அவரது உள்ளத்தின் ஆசையைப் பூர்த்திசெய்வார் என்றும் கூறினார்.
பின்னர் பாபாவிடம் விடைபெற்றுக்கொண்டு நாந்தேடுக்குத் திரும்பி, ஷீர்டியில் நடந்த எல்லாவற்றையும் தாஸ்கணுவுக்குக் கூறினார். அங்கு எல்லாம் நன்றாகவே நிறைவேறியதாகவும், தாம் பாபாவின் தரிசனத்தையும், ஆசீர்வாதத்தையும், பிரசாதத்துடன் பெற்றதாகவும், ஆனால் அவரால் ஒன்றை மட்டுமே புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் கூறினார். பாபா அவரிடம் தாம் ஏற்கனவே ரூ 3.14 ஐ வாங்கிக்கொண்டதாகக் கூறினார். இக்குறிப்பினால் பாபா என்ன கூறுகிறார் என்பதைத் தயவுசெய்து விவரியுங்கள். நான் ஷீர்டிக்குப் போனதேயில்லை. பிறகு பாபாவிடம் அத்தொகையை நான் எவ்விதம் கொடுத்திருக்க முடியும் என்று தாஸ்கணுவிடம் கூறினார். தாஸ்கணுவுக்கும் அது ஒரு புதிராகத்தான் இருந்தது. அதைப்பற்றிப் பெரிதும் அவர் நீண்ட நேரம் சிந்தித்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு பின்வரும் நிகழ்ச்சி அவர் கவனத்திற்கு வந்துற்றது. சில நாட்களுக்கு முன் ரத்தன்ஜி, மௌலா சாஹேப் என்ற ஒரு முஹமதிய முனிவரை வரவேற்று, அவரின் வரவேற்பு உபசாரணைக்காக கொஞ்சம் பணம் செலவழித்தார்.
மௌலா சாஹேப், நாந்தேட் மக்கள் நன்றாக அறிந்த ஒரு முனிவர். — சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்தவர் — ரத்தன்ஜி ஷீர்டிக்குப் போகத் தீர்மானித்தபோது, இந்த மௌலா சாஹேப் தற்செயலாய் ரத்தன்ஜியின் வீட்டிற்கு வந்தார். ரத்தன்ஜி அவரை அறிந்திருந்தார். அவரிடம் அன்பு செலுத்தினார். எனவே அவரைக் கௌரவிக்குமுகமாக ஒரு விருந்து கொடுத்தார். தாஸ்கணு, ரத்தன்ஜியிடமிருந்து விருந்து உபசாரத்துக்கான செலவுக் குறிப்புக்களை வாங்கிப் பார்த்தார். எல்லாம் சரி நுட்பமாக ரூ 3.14 ஆகியிருந்தது. அதற்குக் கூடவோ, குறையவோ இல்லாதது கண்டு எல்லோரும் ஆச்சர்யத்தால் செயலிழந்தனர். அவர்கள் பாபா எங்கும் நிறை பேரறிவுடையார் என்பதை அறியத் தலைப்பட்டார்கள். ஷீர்டியில் வாழ்ந்தாலும், ஷீர்டியிலிருந்து நெடுந்தூரம் உள்ள வெளியிடங்களில் நடப்பதையும் அவர் அறிந்திருந்தார்.
உண்மையில் அவர் நடந்தது, நடப்பது, நடக்கப்போவது எல்லாவற்றையும் அறிந்திருந்தார். எவருடைய நெஞ்சத்தினுள்ளும், ஆவியினுள்ளும் தம்மை அவர் அடையாளம் கண்டுகொள்ள முடியும். மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சியில் மௌலா சாஹேபிடம் தம்மைக் காணாமலும், அவருடன் தாம் ஒன்றாகவும் இல்லாதிருப்பின் ரத்தன்ஜி மௌலா சாஹேபுக்குக் கொடுத்த வரவேற்பு பற்றியும், அதற்கு அவர் செலவழித்த தகையைப் பற்றியும் பாபா எங்ஙனம் அறிந்திருக்க முடியும்?
ரத்தன்ஜி தாஸ்கணுவின் விளக்கத்தால் திருப்தியுற்றார். பாபாவிடம் அவருக்குள்ள நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டுப் பல்கிப் பெருகியது. பின்னர் உரிய காலத்தில் அவருக்கு ஒரு ஆண் குழந்தை ஆசீர்வதிக்கப்பட்டது. அவரின் மகிழ்ச்சிக்கு எல்லையேயில்லை. அவருக்குப் பன்னிரண்டு குழந்தைகள் மொத்தத்தில் பிறந்தன என்றும் அதில் நான்கே உயிர் பிழைத்தன என்றும் கூறப்படுகிறது.
இவ்வத்தியாயத்தின் அடிக்குறிப்பில் பாபா, ராவ்பகதூர் ஹரி விநாயக் சாதே என்பவரை, அவர் முதல் மனைவி இறந்த பின்னர் மீண்டும் மணம் செய்துகொள்ளும் படியும், அவருக்கு மகன் பிறப்பான் என்றும் கூறினார். சாதே இரண்டாவது மணம் புரிந்துகொண்டார். இம்மனைவி மூலம் அவருக்குப் பெண் குழந்தைகளே பிறந்தன. எனவே அவர் மிகவும் மனத்தளர்வடைந்தார். ஆனால் மூன்றாவது ஆண் குழந்தையாகப் பிறந்தது. பாபாவின் சொற்கள் உண்மையாயின. அவரும் திருப்தியுற்றார்.
தட்ஷிணை - மீமாம்ஸம் — தட்ஷிணை பற்றிய தத்துவம்
தட்ஷிணையைப் பற்றிய சில குறிப்புக்களுடன் இவ்வத்தியாயத்தை முடிக்கிறோம். பாபாவைப் பார்க்கச் சென்றவர்களிடத்து அவர் தட்ஷிணை கேட்டார் என்பது எல்லோரும் அறிந்த உண்மை. சிலர் பாபா ஒரு பக்கிரியாகவும் அறவே பற்றன்றியும் இருந்தால், அவர் ஏன் தட்ஷிணை கேட்கவேண்டும்? ஏன் பணத்தைப்பற்றி இலட்சியம் செய்யவேண்டும்? என்று வினவலாம். இவைகளை இப்போது விளக்கமாகக் கவனிப்போம்.
ஆரம்பத்தில் நெடுநாட்களுக்கு பாபா எதையுமே கேட்கவில்லை. அவர் எரிக்கப்பட்ட தீக்குச்சிகளைச் சேமித்து தம் பைகளில் வைத்துக்கொண்டார். எவரிடமிருந்தும், அவர் அடியவராக இருப்பினும் பாபா எதையும் ஒருபோதும் கேட்கவில்லை. யாராவது ஒரு பைசாவோ, இரண்டு பைசாவோ அவர் முன்னால் வைத்தால், அவர் எண்ணெயோ அல்லது புகையிலையோ வாங்கினார். அவர் புகையிலையின் மீது விருப்பமுடையவராக இருந்தார். ஏனெனில் அவர் எப்போதும் பீடி அல்லது சில்லிம் — புகைபிடிக்கும் ஒரு மண்குழாய் — குடித்தார்.
பின்னர் சில ஞானிகள் வெறும் கையுடன் பார்க்கக் கூடாது என நினைத்தனர். எனவே அவர்கள் பாபாவின் முன்னால் சில செப்புக் காசுகளை வைத்தனர். ஒரு பைசா கொடுக்கப்பட்டால் அதை அவர் பைக்குள் போட்டுக்கொள்வார். இரண்டு பைசா நாணயமாக இருப்பின் அது உடனே திருப்பிக் கொடுக்கப்படும். பாபாவின் புகழ் திக்கெங்கும் பரவிய பின்னர், மக்கள் அவரிடம் பெருந்திரளாக மண்டத் தொடங்கினர். அவர்களிடம் பாபா தட்ஷிணை கேட்கத் தொடங்கினார். ஒரு தங்கக் காசு வைக்கப்படாலன்றி கடவுளர்களின் பூஜை பூர்த்தியாவதில்லை என்று ஸ்ருதி — வேதங்கள் — பகர்கின்றது. கடவுள்களின் பூஜைக்குக் காசு தேவைப்பட்டிருந்தால், ஞானிகளின் பூஜைக்குக் கூட ஏன் அது அங்ஙனம் இருக்கக்கூடாது? முடிந்த சார்பாக ஒருவன் கடவுள், அரசன், ஞானி, குரு இவர்களைப் பார்க்கும்போது வெறும் கையுடன் போகலாகாது என்று விதிக்கப்பட்டது. அவன் காசோ, பணமோ எதையாவது அவருக்குச் சமர்ப்பிக்க வேண்டும். இது சம்பந்தமாக உபநிஷதங்கள் சிபாரிசு செய்த கருத்தை நாம் கவனிக்கலாம். பிருதாரண்ய உபநிஷதம் பிரஜாபதிக் கடவுள்கள், தேவர்கள், மனிதர்கள், பிசாசுகள் இவைகளை 'த' என்ற ஒரே எழுத்தால் விளித்ததாகப் பகர்கின்றது. இச்சொல்லால்,
தேவர்கள் தாங்கள் தமா — தன்னடக்கம் — பழகவேண்டுமென்று புரிந்துகொண்டனர். மனிதர்கள் தானம் அல்லது தர்மம் செய்யவேண்டுமென்று புரிந்துகொண்டனர். பேய்கள் தயை அல்லது பரிவு செய்யவேண்டுமென்று புரிந்துகொண்டன. எனவே மனிதர்கள் தர்மம் அல்லது ஈகை செய்யவேண்டுமென்று பரிந்துரைக்கப்படுகின்றது. தைத்ரீய உபநிஷத்தின் குரு தனது மாணவர்களை தர்மத்தையும், மற்ற நல்ல பண்புகளையும் பயிலும்படி ஊக்குவித்து உபதேசிக்கிறார். தர்மத்தைப்பற்றி அவர், நம்பிக்கையுடன் கொடுங்கள், அது இல்லாமலும் கொடுங்கள், பெருந்தன்மையுடன் கொடுங்கள், அதாவது தாராளமாகக் கொண்டுங்கள், பணிவுடன் கொடுங்கள், பயபக்தியுடன் கொடுங்கள், இரக்கத்துடன் கொடுங்கள் என்று அறிவுறுத்துகிறார்.
தான தர்மத்தை அடியவர்களுக்குப் போதிப்பதற்கும், பணத்தில் அவர்களுக்கு உள்ள பற்று குறைவதற்கும் அதன் மூலம் அவர்கள் மனது சுத்தமடையும்படி செய்வதற்கும், பாபா அவர்களிடமிருந்து தட்ஷிணையைக் கட்டாயமாகப் பெற்றார். ஆனால் அதில் இவ்விசித்திரம் இருந்தது. "அதாவது தாம் வாங்கியதைப் போன்று நூறு பங்குக்கு மேலேயே திரும்பக் கொடுத்தாக வேண்டும்". இவ்வாறாகப் பல இடங்களில் நிகழ்ந்தது. உதாரணத்துக்கு ஒன்று சொன்னால், பிரசித்திபெற்ற நடிகரான கணபதிராவ் போடஸ் தனது மாராத்திய சுயசரிதையில், பாபா தம்மைத் திரும்ப திரும்ப தட்ஷிணை கேட்டதாகவும், தனது பணப்பையையே அவர் முன்னர் காலியாக்கியதாகவும், இதன் விளைவாகப் பிற்கால வாழ்வில் தமக்கு ஏராளமாகப் பணம் வந்ததால் பணத் தேவையே இருக்கவில்லை என்றும் கூறுகிறார்.
பல சந்தர்ப்பங்களில் தட்ஷிணைக்கு பாபா பணவகை சார்ந்தவற்றையே விரும்பிக் கேட்காத மறைபொருளும் உண்டு. இரண்டு நிகழ்சிகளை இதற்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம்.
பேராசிரியர் நார்கேயிடமிருந்து பாபா தட்ஷிணையாக ரூ. 15 கேட்டார். நார்கே தன்னிடம் பைசாகூட இல்லையென்று பதிலளித்தார். அதற்குப் பாபா கூறியதாவது, "உன்னிடம் பணம் இல்லையென்பதை நான் அறிவேன். யோக வசிஷ்டத்தை நீங்கள் படித்திருக்கிறீர்கள். அதிலிருந்து எனக்கு தட்ஷிணை கொடுங்கள்". தட்ஷிணை அழிப்பது என்பதற்கு இந்த சந்தர்ப்பத்தின் பொருளாவது, நூலிலிருந்து நீதிகளை உய்த்துணர்ந்து அவைகளை பாபா வாசம் செய்கிற ஒவ்வொருவர் உள்ளத்திலும் இருத்திக்கொள்ளுதலேயாம்.
இரண்டாவது சந்தர்ப்பத்தின்போது, திருமதி தர்கட் என்ற அம்மையாரிடம் ரூ.6 தட்ஷிணையாகக் கொடுக்கும்படி பாபா கேட்டார். ஏதும் அவள் கொடுக்க இயலவில்லை என்று மன வருத்தம் அடைந்தாள். பின்னர் அவளது கணவர், பாபா ஆறு உட்பகைவர்களையே — காமம், குரோதம், லோபம், மோஹம், மதம், மாத்சர்யம் — தம்மிடத்துச் சமர்ப்பிக்கும்படி கேட்டார் என்று அம்மையாருக்கு விளக்கினார். பாபா இவ்விளக்கத்துக்கு உடன்பாடு தெரிவித்தார்.
தட்ஷிணையின் மூலம் பாபா ஏராளமாகப் பணம் சேகரித்தார் என்பதும், அவ்வளவு பணத்தையும் அதே நாளில் பகிர்ந்தளித்து விடுவார் என்பதும், அடுத்த நாள் காலை வழக்கம்போல் அவர் ஒரு ஏழைப் பக்கிரியாகிவிடுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏறக்குறையப் பத்து வருடங்களாக ஆயிரம் ஆயிரம் ரூபாய்களைத் தட்ஷிணையாகப் பெற்றுவந்த பாபா, பின்னர் மஹாசமாதி அடைந்தபோது அவருடைய உடமையில் சில ரூபாய்களே இருந்தன.
சுருக்கமாகத் துறவையும், தூய்மையையும் போதிப்பதே அவர்களிடமிருந்து தட்ஷிணை பெற்றதன் முக்கிய காரணமாகும்.
பின்னுரை
தேவ் என்பவர் ஓய்வுபெற்ற மம்லதாரும், பாபாவின் பெரும் அடியவர்களுள் ஒருவரும் ஆவார். அவர் சாயிலீலா சஞ்சிகையில் — தொகுப்பு 7, எண். 25, பக்கம் 26 — தட்ஷிணையைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
"பாபா எல்லோரிடமிருந்தும் தட்ஷிணை கேட்கவில்லை. கேட்காமலேயே சிலர் தட்ஷிணை அளித்தால் அவர் அதைச் சிலசமயங்களில் ஏற்றுக்கொண்டார். மற்ற நேரங்களில் மறுத்துவிட்டார். சில குறிப்பிட்ட அடியவர்களிடமே அவர் அதைக் கேட்டார். பாபா தங்களிடம் அதற்காகக் கேட்கவேண்டும், அப்போதே தாம் கொடுக்கவேண்டும் என்று நினைத்தவர்களிடம் அவர் கேட்டதேயில்லை. பாபாவின் விருப்பத்திற்கு மாறாக யாரேனும் அதைச் சமர்ப்பித்தால், அவர் தொடுவதில்லை. அந்த அடியவர் அஃதை அங்கேயே வைத்திருந்தாள், அதை அப்பால் எடுத்துக்கொள்ளும்படி பாபா அவரைக் கேட்டார். பக்தர்களின் விருப்பம், பக்தி, சௌகர்யம் இவைகளுக்கேற்றவாறு அவர் சிறிய, பெரிய தொகைகளைக் கேட்டார். எல்லாச் செல்வந்தர்களையும் கேட்கவில்லை. அன்றி எல்லா ஏழைகளிடமும் கேட்கவுமில்லை.
தட்ஷிணை கேட்டு கொடுக்காதவர்களிடம் பாபா கோபம் அடைந்ததே இல்லை. யாரேனும் நண்பன் மூலம் தட்ஷிணை அனுப்பப்பட்டு, அவன் அதை பாபாவிடம் கொடுக்க மறந்துவிட்டானாயின், அவர் அவனுக்கு அதை எப்படியோ ஞாபகமூட்டி அவனைக் கொடுக்கும்படி செய்தார். சில சந்தர்ப்பங்களில் தட்ஷிணையாகக் கொடுத்த பணத்தில் கொஞ்சப் பணத்தைத் திருப்பிக் கொடுத்து, அதைப் பாதுகாக்கும்படியோ அல்லது வழிபாட்டிற்காக அவரது பூஜை அறையில் வைக்கும்படியோ கேட்டுகொள்வார்.
இம்முறையானது பணம் அளித்தவருக்கோ அல்லது அந்த பக்தருக்கோ எல்லையற்ற அளவு நன்மையளித்தது. தான் கொடுக்க நினைத்திருந்ததைவிட அதிகமாக யாரேனும் கொடுத்தால், அவர் அதிகப்படியான மீதமுள்ள தொகையைத் திரும்ப அளித்துவிடுவார். சிலரிடம் தாங்கள் முதலில் கொடுக்க நினைத்திருந்ததைவிட அதிகமாகவும், அப்படி அவர்களிடம் பணம் இல்லையானால் மற்றவர்களிடம் பிச்சை எடுத்தோ, கடன் வாங்கியோ அளிக்கச் சொன்னார். சிலரிடம் அவர் ஒருநாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை தட்ஷிணை கேட்டார்.
தட்ஷிணையாகச் சேர்ந்த பணத்திலிருந்து அவர் தமக்காக மிகவும் கொஞ்சமே செலவழித்தார். அதாவது சில்லிம் என்ற புகைக் குழாய் வாங்குவதற்கும், துனி என்ற புனித அடுப்புக்கு எரிபொருள் வாங்குவதற்கும் செலவழித்து மிச்சமனைத்தையும் பல்வேறு மனிதர்களுக்கு வேறுபடும் விகிதங்களில் தர்மமாகப் பகிர்ந்து அளித்தார். ஷீர்டி சமஸ்தானத்தின் சிறுசிறு பொருட்களெல்லாம் அப்போது இருந்த பணக்கார அடியவர்களால் ராதாகிருஷ்ணமாயின் வேண்டுகோள், யோசனையின் பேரில் வாங்கி அளிக்கப்பட்டவை. விலைமதிப்புள்ள, செல்வமிகு பொருட்களை யாரேனும் கொணர்ந்தால் பாபா சீற்றமடைந்து அவர்களைக் கடிந்துகொள்வார். நானா சாஹேப் சாந்தோர்கரிடம் தமது உடைமைகள் ஒரு கௌபீனம், ஒரு துண்டு, ஒரு கஃப்னி, ஒரு தகரக்குவளை என்றும் அவரைப் பலர் தேவையற்ற, பயனற்ற விலையுயர்ந்த பொருட்களெல்லாம் கொண்டுவந்து தொல்லைப்படுத்துவதாகவும் கூறினார்.
நமது பரமார்த்திக வாழ்வில் இருக்கும் இரு பெரிய தடங்கல்கள் பெண்ணும், செல்வமும். பாபா ஷீர்டியில் இரண்டு நிலையான அமைப்புமுறைகளை ஏற்படுத்தினார். அதாவது தட்ஷணையும், ராதாகிருஷ்ணமாயியும் ஆகும். எனவே பக்தர்கள் அவரிடம் வந்தபோதெல்லாம் அவர்களிடம் தட்ஷணை கேட்டார். பள்ளிக்கூடத்துக்குப் போகச் சொன்னார். பள்ளிக்கூடமென்பது ராதாகிருஷ்ணமாயியின் வீடு. அவர்கள் இவ்விரண்டு சோதனைகளில் நன்றாகத் தேறினார்களேயானால், அதாவது செல்வத்துக்கும், பெண்ணுக்குமுள்ள பற்றுக்களிலிருந்து விடுபட்டவர்கள் என்று தெளிவுபடுத்துவார்களேயானால் அவர்களின் ஆன்மீக முன்னேற்றம் துரிதமானது. பாபாவின் அருளாலும், ஆசிகளாலும் உறுதியளிக்கப்பட்டது.
தேவ், கீதை உபநிஷதங்களிளிருந்து புண்ணிய க்ஷேத்திரத்தில் புண்ணிய ஆத்மாவுக்குக் கொடுக்கப்பட்ட தர்மமானது கொடுத்தவருக்கு அதிக பலன் அளிக்கிறது என்பதை ஸ்லோகங்கள் மூலம் எடுத்துக் காண்பித்து இருக்கிறார். ஷீர்டியில் அதில் உறையும் தெய்வவுமான சாயிபாபாவையும் தவிர புனிதமானது என்ன இருக்க முடியும்?!
ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்
• சோல்கரின் சர்க்கரை இல்லாத தேநீர்
• இரண்டு பல்லிகள்
ஷீர்டியில் ராமநவமித் திருவிழாவைப் பற்றி ஆறாவது அத்தியாயத்தில் குறிப்பிட்டதை நூலைக் கற்போர் நினைவு கூர்ந்தறியலாம். எவ்விதம் அத்திருவிழா முதன்முதலாக நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது, எவ்வாறு ஆரம்ப வருடங்களில் அவ்விழாவின்போது கீர்த்தனைகள் பாடுவதற்கான ஒரு ஹரிதாசைப்— பாடகர் — பெறுவது மிகக்கடினமாய் இருந்தது, எவ்வாறு தாஸ்கணுவிற்கே இவ்விழாவினுடைய கீர்த்தனைப் பொறுப்பை நிரந்தரமாக பாபா ஒப்படைத்தது, அதிலிருந்து தாஸ்கணு அதனை எவ்வாறு வெற்றிகரமாக நிறைவேற்றிக்கொண்டு வருகிறார் ஆகியவைகளை நினைவு கூர்ந்தறியலாம்.
நாரத இசை - பத்ததி
பொதுவாக நமது ஹரிதாசர்கள் கீர்த்தனைகள் செய்யும்போது, மகிழ்வுநாள் உடைகளையும், முழு உடைகளையும் அணிகிறார்கள். ஃபேடாவோ, டர்பனோ ஏதோ ஒரு தலைப்பாகை அணிந்து கொள்கிறார்கள். நீளமான அலைமோதும் கோட், உள்ளே ஒரு சட்டை, தோள்களில் அங்கவஸ்திரம், இடுப்புக்குக் கீழே வழக்கமான நீள வேட்டி ஆகியவற்றை அணிகிறார்கள். ஷீர்டி கிராமத்தில் ஒரு கீர்த்தனைக்காக தாஸ்கணு ஒருமுறை இவ்வாறாக உடையணிந்து, பாபாவிடம் வணங்குவதற்காகச் சென்றார். பாபா "நல்லாயிருக்கு மாப்பிளே! இவ்வளவு அழகாக உடையணிந்து நீ எங்கே சென்றுகொண்டிருக்கிறாய்? என்று கேட்டார். "கீர்த்தனை செய்வதற்கு" என்று பதில் வந்தது.
அப்போது பாபா, "இச்சிறு அலங்காரப் பொருட்கள் எல்லாம் எதற்கு? கோட்டு, அங்கவஸ்திரம், குல்லாய் முதலிய எல்லாவற்றையும் எனக்கு முன்னால் கழற்றிவிடு" என்று கூறினார். தாஸ்கணு உடனே அவற்றை எடுத்து பாபாவின் பாதத்தடியில் வைத்தார். அதிலிருந்து கீர்த்தனை செய்யும்போது தாஸ்கணு இடுப்புக்குமேல் ஒன்றும் அணிவதில்லை. கைகளில் ஒரு ஜதை சப்ளாக் கட்டை, கழுத்தில் மாலை இவற்றுடனேயே எப்போதும் இருந்தார். எல்லாப் பாடகர்களும் கைக்கொள்ளும் முறையுடன் இது ஒத்ததாய் இல்லை. ஆனால் இதுவே மிகச்சிறந்த, மிகத்தூய வழியாகும். கீர்த்தனை பத்ததிகளை படைத்துருவாக்கிய நாரத ரிஷியே மேல் உடம்பிலும், தலையிலும் ஏதும் அணியவில்லை. தம் கையில் வீணையேந்தி இடந்தோறும் அலைந்து திரிந்து கடவுளின் புகழைப் பாடினார்.
சோல்கரின் சர்க்கரை இல்லாத தேநீர்
புனே, அஹமத்நகர் ஜில்லாக்களில் பாபா அறிந்துகொள்ளப்பட்டார். ஆனால் நானா சாஹேப் சாந்தோர்கர் தனது சொந்த தனிப்பட்டமுறையிலான உரையாடல்களாலும், தாஸ்கணு தனது மிக உயர்வான கீர்த்தனைகளாலும் கொங்கணத்தில் — பம்பாய் ராஜதானி — பாபாவின் புகழைப் பரப்பினார்கள். உண்மையில் தாஸ்கணுதாம் - அவரைக் கடவுள் ஆசீர்வதிப்பாராக, தமது அழகிய ஒப்புவமையற்ற கீர்த்தனைகளால் அங்கேயிருந்த ஏராளமான மக்களை பாபாவினால் பயனுறும்படி செய்தார்.
கீர்த்தனைகளைக் கேட்கவந்த மக்கள் வெவ்வேறு சுவையுள்ளவர்களாய் இருப்பர். சிலர் ஹரிதாசின் அறிவாழத்தை அல்லது புலமையை விரும்புபவர். சிலர் அவரது அபிநயங்களையும், சிலர் அவரது பாடலையும், சிலர் அவரது விகட நகைச்சுவைகளையும், சிலர் அவரது துவக்க வேதாந்த வியாக்கியானங்களையும், மற்றும் சிலர் அவரது முக்கிய கதைகளையுமாக பலர் பலவிதமாக ஆர்வம் கொண்டிருப்பர். அவர்களுக்குள் மிகச்சிலரே கீர்த்தனைகளைக் கேட்பதன் வாயிலாக ஞானிகளிடத்தோ, கடவுளிடத்தோ, நம்பிக்கையும், பக்தியும் பெறுகிறார்கள். ஆயினும் தாஸ்கணுவின் கீத்தனைகளைக் கேட்கும் அவையோர்களது மனங்களின் விளைவு மின்சாரமாகும். அது அங்ஙனமே இருந்தது. கீழ்கண்ட ஒரு நிகழ்ச்சியை இங்கு தருகிறோம்.
தாஸ்கணு ஒருமுறை தாணேவில் கௌபினேஷ்வர் கோவிலில் சாயிபாபாவின் புகழைப்பாடி கீர்த்தனை செய்துவந்தார். அவையோர்களுள் சோல்கர் என்பவர் சிவில் கோட்டில் ஒரு தற்காலிக ஊழியராக வேலைபார்த்துவந்த ஒரு ஏழை ஆவார். மிகவும் கவனத்துடன் தாஸ்கணுவின் கீர்த்தனையை அவர் கேட்டுப் பெரிதும் உருகிப்போனார். அவர் அங்கேயே, அப்போதே மனத்தினால் பாபாவுக்கு வணக்கம் செலுத்தி விரதம் எடுத்துக்கொண்டு பின்வருமாறு கூறினார்.
"பாபா, நான் என் குடும்பத்தைக் காப்பாற்ற இயலாத ஓர் ஏழை. தங்களுடைய அருளினால் நான் இலாகாவிற்குரிய தேர்வில் வெற்றிபெற்று, நிரந்தர உத்தியோகம் பெற்றால் ஷீர்டிக்குச் சென்று, தங்கள் பாதங்களில் வீழ்ந்து, தங்கள் நாமத்தினால் கற்கண்டை வினியோகிப்பேன்." இது நிறைவேறுவதற்குரிய நல்ல அதிஷ்டம் இருந்ததால், சோல்கர் பரீட்ஷையில் தேர்வு பெறவே செய்தார். எவ்வளவு விரைவோ, அவ்வளவு நலம் என்பதாக, தனது விரதத்தை நிறைவேற்றுவது ஒன்றே அவருக்கு எஞ்சியிருந்தது. பெருங்குடும்பத்தைத் தாங்கவேண்டிய ஏழை மனிதர் சோல்கர், அவரால் ஷீர்டி பயணத்திற்கு நேரும் செலவைத் தாங்குதல் இயலாது. தாணே ஜில்லாவில் உள்ள நாணே காட்டையா அல்லது சஹ்யாத்ரி மலைத்தொடரையோகூட ஒருவன் எளிதில் கடந்துவிடலாம். உம்பரேகாட்டை, அதாவது வீட்டின் தலைவாயிலை, ஓர் ஏழை மனிதன் கடப்பது என்பது மிகமிகக் கடினமானது.
எவ்வளவு விரைவில் தனது விரதத்தைப் பூர்த்திசெய்ய முடியுமோ, அவ்வளவு விரைவில் பூர்த்திசெய்ய ஆவலும், கவலையுமுற்ற சோல்கர் தனது செலவைக் குறைத்துச் சிக்கனப்படுத்தி பணத்தைச் சேகரிக்கத் தீர்மானித்தார். தனது உணவிலும், தேநீரிலும் சர்க்கரை உபயோகிப்பதில்லை என முடிவுசெய்து, தேநீரைச் சர்க்கரை இன்றியே அருந்தத் தொடங்கினார். இவ்வாறாக அவர் சிறிது பணம் சேகரிக்க இயன்றதும், ஷீர்டியை வந்தடைந்து பாபாவின் தரிசனத்தைப் பெற்றார். அவர் பாதங்களில் வீழ்தார். இரு தேங்காயை அர்ப்பணித்தார். தனது விரதப்படி அந்தக்கரண சுத்தியுடன் கற்கண்டை விநியோகித்தார்.
பாபாவிடம், அவரது தரிசனத்தால் தான் மிகவும் மகிழ்ச்சியுற்றதாகவும், அன்றைய தினத்தில் அவரது ஆசைகள் பூர்த்தியாயின என்றும் கூறினார். தன்னுடைய உபசரிப்பளராகிய பாபு சாஹேப் ஜோகுடன், சோல்கர் மசூதியில் இருந்தார். விருந்து உபசரிப்பாளரும், விருந்தினருமாகிய இருவரும் எழுந்து மசூதியை விட்டுப் புறப்படப் போனபோது, பாபா, ஜோகிடம் பின்வருமாறு கூறினார். "அவருக்கு — விருந்தினருக்கு — சர்க்கரை நிறை முழுமையாய் கரைக்கப்பட்ட தேநீரைக் கொடுப்பீர்". இத்தகைய உட்கருத்து வளஞ்செறி சொற்களைக் கேட்டு சோல்கர் மிகவும் மனதுருகிப் போனார். வியப்பால் செயலிழந்தார். அவரின் கண்கள் கண்ணீரால் பனித்தன. மீண்டும் பாபாவின் பாதங்களில் வீழ்ந்தார். தனது விருந்தினருக்கு அழிக்கபடவேண்டிய தேநீரைப்பற்றிய வழிநெறியைக் கேட்டு ஜோகும் ஆச்சரியமடைந்தார்.
தமது சொற்களின் மூலம் சோல்கரின் மனத்தில் நம்பிக்கையையும், பக்தியையும் தோற்றுவிக்க பாபா விரும்பினார். அவருடைய விரதப்படி தாம் கற்கண்டைப் பெற்றுக்கொண்டதையும், உணவில் சர்க்கரை பயன்படுத்தக் கூடாது என்ற அவரது இரகசியத் திட்டத்தையும் தாம் முழுமையாக அறிந்திருப்பதாக, அங்ஙனம் இருந்தபடியே, பாபா குறிப்பிட்டார். பாபா கூறியதன் பொருளாவது, "என் முன்னர் பக்தியுடன் உங்களது கரங்களை நீட்டுவீர்களேயானால், உடனேயே இரவும், பகலும் உங்களுடன் கூடவே நான் இருக்கிறேன். இவ்வுடம்பால் நான் இங்கேயே இருப்பினும், ஏழ்கடலுக்கப்பால், நீங்கள் செய்வதையும் நான் அறிவேன். இந்த பரந்த உலகின்கண் நீங்கள் விரும்பியபடி எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். நான் உங்களுடனேயே இருக்கிறேன். உங்களது இதயமே எனது இருப்பிடம். நான் உங்களுக்குள்ளேயே இருக்கிறேன். உங்களது இதயத்துள்ளும், அதைப் போன்ற சகல ஜீவராசிகளின் இதயங்களினுள்ளும் இருக்கும் என்னையே எப்போதும் வணங்குவீர்களாக! என்னை இங்ஙனமாக அறிபவர் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவரும், அதிஷ்டசாலியும் ஆவர்".
இவ்வாறாக, எவ்வித அழகிய முக்கியமான நீதி பாபாவினால் சோல்கருக்கு உபதேசிக்கபட்டது!
இரண்டு பல்லிகள்
இரண்டு சிறிய பல்லிகளின் கதையுடன் இவ்வத்தியாயத்தை முடிப்போம். ஒருமுறை பாபா மசூதியில் அமர்ந்திருந்தார். ஒரு பக்தரும் அவர் முன்னர் அமர்ந்திருந்தார். ஒரு பல்லி, 'டிக்!.. டிக்!... " துடிப்பை விளைவித்தது. ஆச்சரியத்தால் உந்தப்பட்ட அடியவர், பல்லியின் இத்துடிப்பு, ஏதேனும் பின்விளைவு காட்டுதல் குறித்ததா? அது நல்ல அடையாளமா அல்லது தீய சகுனமா என்று பாபாவைக் கேட்டார். அப்பல்லியின் சகோதரி அதனைப் பார்க்க ஓளரங்காபாத்திலிருந்து வந்துகொண்டிருப்பதாயும், அதனால் அப்பல்லி மிகவும் மகிழ்ச்சியுற்றிருக்கிறது என்றும் பாபா கூறினார். பாபா சொல்லுவதன் அர்த்தம் புரியாமல் அவர் மௌனமாய் அமர்ந்து இருந்தார். உடனேயே ஓளரங்காபாத்திலிருந்து குதிரையில் ஒரு பெருந்தகை பாபாவைப் பார்க்க வந்தார்.
அவர் மேற்கொண்டு பயணத்தைத் தொடர விரும்பினார். ஆனால் அவரது குதிரை பசியாய் இருந்தபடியால், நகர்வதாக இல்லை. அதற்குக் கொள்ளு தேவைப்பட்டது. கொள்ளு கொண்டு வருவதற்காகத் தனது தோளில் இருந்து ஒரு பையை எடுத்தார். தூசியைப் போக்குவதற்காகத் தரையில் அடித்தார். அதிலிருந்து ஒரு பல்லி விழுந்தது.
எல்லோர் முன்னிலையிலும் அது சுவரில் ஏறியது. கேள்விகேட்ட பக்தரிடம் அப்பல்லியை நன்றாகக் கவனிக்கும்படி பாபா கூறினார். அது உடனே தனது பெருமையான நடையுடன் தன் சகோதரியை நோக்கிச் சென்றது. நீண்ட காலத்திற்குப் பின்னர் இரண்டும் சந்தித்தன. ஒன்றையொன்று முத்தம் கொடுத்துக் கட்டியணைத்துக் கொண்டன. சுற்றிச்சுற்றி ஓடி வந்து அன்பால் நடனம் ஆடின. ஷீர்டி எங்கே இருக்கிறது? ஓளரங்காபாத் எங்கே இருக்கிறது? குதிரையிலிருந்த மனிதர் எங்ஙனம் ஓளரங்காபாத்திலிருந்து வந்தார்? இரண்டு சகோதரிகள் சந்திக்கப்போவதை எங்ஙனம் பாபா முன்னாலேயே தீர்க்க தரிசனம் செய்தார்? இவையெல்லாம் உண்மையிலேயே மிகவும் ஆச்சரியமானதும், பாபாவின் எங்குநிறை பேரறிவையும், அனைத்தையும் உணரும் ஆற்றலையும் மெய்ப்பிப்பதுமாகும்.
பிற்சேர்க்கை
எவரொருவர் இவ்வத்தியாயத்தை பக்தியுடன் படிக்கிறாரோ அல்லது தினமும் கருத்தூன்றிப் பயில்கிறாரோ, சத்குரு சாயிபாபாவின் அருளால் அவரது அனைத்து ஆழ்துயர் நிலைகளும் அகற்றப்படும்.
ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
இவ்விரண்டு அத்தியாயங்களும் சாயிபாபாவிடமிருந்து துரிதமாக பிரம்மஞானத்தைப் பெறவிழைந்த ஒரு செல்வந்தரின் கதையைப் பற்றிக் கூறுவதாகும்.
முன்னுரை
முன் அத்தியாயத்தில் சோல்கரின் சிறிய அளவிலான சமர்ப்பண விரதம் எவ்விதம் நிறைவேற்றப்பட்டு ஏற்கப்பட்டதென விளக்கப்பெற்றது. அன்புடனும், பக்தியுடனும் அளிக்கப்படும் எத்தகைய சிறிய பொருளையும், பாராட்டுதல்களுடன் ஏற்றுக்கொள்வார் என்று அக்கதையின் வாயிலாக சாயிபாபா அறிவுறுத்தினார். ஆனால் அதுவே பெருமையுடனும், இறுமாப்புடனும் அளிக்கப்பட்டால் ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுவார். தாமே சச்சிதானந்தத்தினால் — சத்து - சித்து - ஆனந்தம் — முழுமையும் நிரம்பப் பெற்றிருந்தமையால், வெறும் புறச்சம்பிரதாயங்களை அவர் பெருமளவு இலட்சியம் செய்வதில்லை. அடக்கவொடுக்கத்துடனும், பணிவான உணர்வுடனும் ஒன்று சமர்ப்பிக்கப்படுமானால், அதை அவர் வரவேற்று பேரார்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் ஏற்றுக்கொள்வார்.
உண்மையில் சாயிபாபாவைப் போன்ற சத்குருவைக் காட்டிலும், மிகுதியான தாராளம், தயை முதலான பண்புகள் அமையப்பெற்ற பிறிதொருவர் எவரும் இல்லை. அவரை சிந்தாமணிக் கல்லுக்கோ— நினைத்தவை அனைத்தையும் தரும் ஓர் அரும் பொன்மணி , கற்பக தருவிற்கோ— விருப்பங்களை ஈடேற்றும் தெய்வீக மரம் , காமதேனுவிற்கோ— விருப்பங்களை ஈடேற்றும் தெய்வீகப்பசு — ஒப்பிடமுடியாது. ஏனெனில் நாம் விரும்பியவற்றை மட்டுமே அவை அளிக்கின்றன. ஆனால் சத்குருவோ, கருதுதற்கியலாத, ஆராய்ந்து அறிதற்கியலாத, மெய்ப்பொருளாம் விலைமதிப்பற்ற பொக்கிஷத்தை நமக்கு நல்கிறார்.
இப்போது சாயிபாபாவிடம் வந்து தனக்கு பிரம்மஞானம் அளிக்க வேண்டுமென்று மன்றாடி வேண்டிக்கொண்ட ஒரு பணக்காரரைச் சமாளித்து, எப்படி அனுப்பி வைத்தார் என்னும் கதையைக் கேட்போம். தனது வாழ்க்கையில் மிகவும் சுபிட்சத்துடன் விளங்கிய பணக்காரர் ஒருவர் இருந்தார். — துரதிஷ்ட வசமாக அவர் பெயர், இருப்பிடம் முதலியன குறிக்கப்படவில்லை
அவர் ஏராளமாக செல்வம், வீடுகள், வயல்கள், நிலங்கள் முதலியவற்றைப் பெருந்திரளாகக் குவித்திருந்தார். பல வேலையாட்களும், சார்ந்து வாழ்வோரும் வாய்க்கப்பட்டவராக இருந்தார். பாபாவினது புகழ் அவர் செவிகளை எட்டியபோது, அவர் தனது நண்பர் ஒருவரிடம், தனக்கு எவ்விதமான பொருளும் தேவையிருக்கவில்லை என்றும், எனவே அவர் ஷீர்டிக்குச் சென்று, பாபாவிடம், பிரம்ம ஞானத்தை அருளும்படி வேண்டப்போவதாகவும், அங்ஙனம் அதை அவர் பெற்றால், அது நிச்சயம் தன்னை இன்னும் அதிக மகிழ்ச்சியுடையவராக்கும் என்றும் கூறினார். அவருடைய நண்பர் பின்வருமாறு உரைத்து, அவர் கருத்தை மாற்ற முயன்றார். "பிரம்மத்தை அறிவதென்பது அவ்வளவு எளிதல்ல. அதிலும் குறிப்பாக மனைவி, மக்கள், செல்வம் என்னும் கவனங்களிலேயே முழுவதுமாகக் கவரப்பட்டிருக்கும் பேராசைக்காரருக்கு அது எளிதே அல்ல. ஒரு பைசாவும் தர்மத்திற்காக ஈயா மனிதராகிய உம்முடைய பிரம்மஞான நாட்டத்தை யாரே திருப்தி செய்ய இயலும்?"
இப்பேர்வழி, தமது நண்பரின் அறிவுரையைப் பொருட்படுத்தாது போய்வர குதிரைவண்டியைப் பேசியமர்த்தி ஷீர்டிக்கு வந்தார். மசூதிக்குச் சென்று சாயிபாபாவைப் பார்த்தார். அவர் பாதங்களில் வீழ்ந்து, "பாபா, இங்கு வருவோர் அனைவர்க்கும் எவ்விதத் தாமதமுமின்றித் தாங்கள் பிரம்மத்தைக் காண்பிக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டு தொலைவிலுள்ள இடத்தில் இருந்து நான் இங்கு வந்திருக்கிறேன். எனது பிரயாணத்தால் மிகவும் களைப்படைந்து உள்ளேன். நான் தங்களிடமிருந்து பிரம்மத்தைப் பெறுவேனாகில் எனது கடின முயற்சிகளெல்லாம் நன்றாக ஊதியம் அளிக்கப்பட்டு, பரிசு நல்கப்பட்டவையாகும்" என்றார்.
பாபா அப்போது கூறியதாவது, "ஓ! எனதருமை நண்பனே, ஏங்கிக் கவலையுறாதே. நான் உடனேயே உனக்குப் பிரம்மத்தைக் காண்பிக்கிறேன். எனது நடைமுறைத் தொடர்புகள் அனைத்தும் ரொக்கத்திலேதான். கடனில் அல்ல. எனவே பலர் என்னிடம் வந்து, செல்வம், தேக ஆரோக்கியம், ஆற்றல், புகழ், பதவி, நோய் தீர்த்தல் போன்ற இவ்வுலகப் பொருட்களையே கேட்கின்றனர். இங்கு வந்து பிரம்ம ஞானத்தைக் கேட்டவர் மிகவும் அரிது. இவ்வுலகப் பொருள்களைக் கேட்டவர்களுக்குப் பஞ்சமே இல்லை. ஆத்மார்த்த விஷயங்களில் ஆர்வமுடைய மனிதர்களைக் காண்பது மிகவும் அரிதாகையால், உம்மைப்போன்ற மனிதர்கள் வந்து என்னைப் பிரம்மஞானம் தரச்சொல்லி வற்புறுத்தும்போது அத்தருணத்தை யான் அதிஷ்டமும், புனிதமும் வாய்ந்ததாகக் கருதுகிறேன். எனவே, உடனே மகிழ்ச்சியுடன் உனக்கு பிரம்மத்தின் சுற்றுச்சூழலையும், அதை அடைவதில் உள்ள சிக்கல்களையும், தெரிவித்துத் தெளிவிப்பேன்" என்றார்.
இதைப் புகன்ற பின்னர், பாபா பிரம்மத்தைப் புலப்படுத்த ஆரம்பித்தார். அவரை அங்கே அமரும்படி செய்து, பிறிதோர் உரையாடலிலோ, விவகாரத்திலோ அவர் ஈடுபடும்படியாகச் செய்தார். இவ்வாறாகத் தற்காலிகமாக அவரைத் தம் வினாவினை மறக்கச் செய்தார். பிறகு ஒரு பையனைக் கூப்பிட்டு, அவனை நந்து மார்வாடியிடம் சென்று ஐந்து ரூபாய் கைமாற்று வாங்கி வரும்படி கூறினார். பையன் சென்று உடனே திரும்பிவந்து, இல்லையென்றும் அவர் வீடு பூட்டி இருப்பதாயும் கூறினான். பின்னர் பாபா அவனை, மளிகைக் கடைக்காரர் பாலாவிடம் சென்று அவரிடமிருந்து குறிப்பிட்ட கைமாற்றை வாங்கிவரும்படி கூறினார். இம்முறையும் பையன் வெற்றிபெறாமல் திரும்பி வந்தான். இந்தப் பரிசோதனை இரண்டு, மூன்று முறை அதே விளைவுடன் நடத்தப்பட்டது.
நாம் அனைவரும் அறிந்தவாறு சாயிபாபா வாழ்ந்து கொண்டிருக்கின்ற, இயங்கிக் கொண்டிருக்கின்ற அவதாரமாகும். பின்னர் அற்பத் தொகையான ஐந்து ரூபாய் அவருக்கு ஏன் தேவைப்படுகிறது? அதனைக் கைமாற்றாகப் பெறுவதற்கு அவர் ஏன் அரிதில் முயலவேண்டும் என்று சிலர் வினவக்கூடும். உண்மையில் அவருக்கு இத்தொகை தேவையிருக்கவில்லை. நந்துவும், பாலாவும் அவரவர் இடங்களில் இல்லை என்பதை பாபா நிச்சயமாக முழுமையும் தெரிந்துகொண்டே இருந்தார். இவ்வழிமுறையை பிரம்மத்தினை எய்த நினைக்கின்றவருக்கு ஒரு சோதனையாக மேற்கொண்டார் போலும். அப்பெருந்தகை கரன்சி நோட்டுக்களின் கற்றை ஒன்றைத் தம் பையில் வைத்திருந்தார். அங்ஙனம் அவர் உண்மையிலேயே ஆர்வமுள்ளவராக இருந்திருப்பின், ஐந்து ரூபாயைப் பெறுவதற்காக பாபா தீவிரமாக முயற்சித்துக் கொண்டிருக்கும் அத்தருணம், அங்கே அமைதியாக உட்கார்ந்துகொண்டு, நிகழ்வனவற்றின் வெறும் மேலோட்டப் பார்வையாளராக இருந்திருக்க மாட்டார். பாபா தமது மொழிகளைக் காப்பாற்றுவார் என்றும், கடனைத் திருப்பிக் கொடுத்துவிடுவார் என்றும், தேவையான பணமும் ஓர் அற்பத் தொகையே என்றும் அவர் அறிந்தே இருந்தார். எனினும் அவருக்கு ஓர் உறுதியான தீர்மானத்துக்கு வரவோ, தொகையை முன்வந்து அளிக்கவோ இயலவில்லை. அத்தகைய மனிதர் உலகிலேயே மிகமிகப் பெரிய பொருளான பிரம்மஞானத்தை பாபாவிடமிருந்து பெற விரும்பினார்.
பாபாவிடம் அன்பு பூண்ட வேறெந்த மனிதனும் சும்மா பார்த்துக்கொண்டிருப்பதற்குப் பதிலாக உடனடியாக பாபாவுக்கு ஐந்து ரூபாயை அளித்திருப்பான். இம்மனிதரின் இயல்போ வேறானதாக இருந்தது. அவர் எவ்விதப் பணமும் கொடுக்கவில்லை, அமைதியாகவும் அமர்ந்திருக்கவில்லை. திரும்பிச் செல்வதற்குப் பதட்டமாக இருந்தமையால், பொறுமை இழக்கத் தொடங்கினார். பாபாவிடம் மன்றாடி, "ஓ! பாபா, தயவு செய்து சீக்கிரம் எனக்கு பிரம்மத்தைக் காண்பியுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.
பாபாவும், "ஓ! எனதருமை நண்பனே, நீ பிரம்மத்தைக் கண்ணுறும் பொருட்டாகவே இவ்விடத்தில் அமர்ந்துகொண்டு நான் நுணுக்க விபரமாக ஆய்ந்த வழிமுறைகளையெல்லாம் நீ புரிந்து கொள்ளவில்லையா? சுருக்கமாக அவை இவ்வாறானதாகும்.
பிரம்மத்தினைக் கண்டுணர்வதற்கு ஒருவன் ஐந்து பொருட்களைக் கொடுக்கவேண்டும். அதாவது ஐந்து பொருட்களைச் சமர்ப்பிக்கவேண்டும். அவையாவன:
(1) ஐந்து பிராணன்கள் — முக்கிய சக்திகள்
(2) ஐந்து உணர்வுகள் — செயலில் ஐந்து, பார்வையில் ஐந்து
(3) மனது
(4) புத்தி
(5) அஹங்காரம்
பிரம்மஞானம் அல்லது ஆத்மானுபூதி என்னும் வழியானது கத்தி முனையில் நடப்பதனை நிகர்த்த கடினமான ஒன்றாகும்" என்று ஆரம்பித்து இப்பொருளினைப்பற்றி சாயிபாபா நீண்ட போதனை அளித்தார். அதனுடைய கருத்துரை கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.
பிரம்மஞானம் அல்லது ஆத்மானுபூதியைப் பெறுவதற்கு வேண்டிய முன்னீட்டான வரையறைகள் — தகுதிகள் .
எல்லோரும் தத்தமது வாழ்நாட்களிலேயே பிரம்மத்தைப் பார்க்கவோ, தெளிவாக உணரவோ மாட்டார்கள். அதற்காக சில தகுதிகள் முழுமையாகத் தேவைப்படுகின்றன.
1. முமுக்ஷை - விடுதலையடைய செறிந்த விருப்பம்
தான் கட்டுப்படிருப்பதாக நினைத்து, தடைகளினின்று விடுபட வேண்டும் என்ற அந்த இலட்சியத்திற்கே ஊக்கத்துடனும், தீர்மானத்துடனும் உழைப்பவன், மற்றெதைப் பற்றியும் கவலையுறாதவன் ஆத்மீக வாழ்க்கைக்குத் தகுதியுடையவன் ஆகின்றான்.
2. விரக்தி - இவ்வுலக, மறுஉலகப் பொருட்களின் மீதுள்ள வெறுப்புணர்ச்சி
இகபரங்களில் தனது செய்கையால் விளையும் பொருட்கள், ஆதாயங்கள், கௌரவங்கள் இவைகளை ஒருவன் வெறுத்தாலன்றி ஆத்மீக ராஜ்ஜத்தின் எல்லைக்குள் நுழைய உரிமை இல்லை.
3. அந்தர் முகதா - உண்முக சிந்தனை
கடவுளால் நமது உணர்வுகளனைத்தையும் புறத்தே செல்லும் போக்குடையவைகளாய் படைக்கப்பட்டிருக்கின்றன. எனவே, மனிதன் எப்போதும் தனக்குப் புறத்தே உள்ளனவற்றையே நோக்கி அகத்தைப் பாராதிருக்கிறான். ஆத்மானுபூதியையும், இறவாப் புகழுடைய பெருவாழ்வையும் விரும்புபவன், தனது கூர்ந்த நோக்கை உண்முகமாகத் திருப்பி உள்ளிருக்கும் ஆத்மாவைப் பார்க்கவேண்டும்.
4. தீவினைகள் கசடறக் கழிபடுதல்
ஒருவன் கொடுந்தன்மைகளிருந்து மாறினாலன்றியும், தவறுகள் செய்வதை நிறுத்தினாலன்றியும், தன்னைத் தான் ஒருங்கிணைத்து அமைதியுற்றாலன்றியும், மனம் சாந்தமுற்றாலன்றியும், தத்துவ ஞானத்தின் மூலமாக மட்டும் ஆத்மானுபூதியை எய்துவிட இயலாது.
5. ஒழுங்கான நடத்தை
உண்மையுடைய, தவமுடைய, உள்தரிசனத்துடன் கூடிய பிரம்மச்சர்ய வாழ்க்கையை நடத்தினாலன்றி, ஒருவன் இறையனுபூதியை எய்த இயலாது.
6. புலனுணர்வு மகிழ்ச்சி - நலம் பயப்பவை
பொருட்கள் இரண்டு படித்தரமானவை. அதாவது நன்மையானவைகளும், மனமகிழ்ச்சிக்குரியவையுமாகும். முன்னவை ஆன்மீகச் செயல் தொடர்புடையவை. பின்னவை இகலோகப் பொருட்களின் செயல் தொடர்புடையவை. தம்மை ஏற்றுக்கொள்ளும்படி இவை இரண்டுமே மனிதனை அணுகுகின்றன. ஆலோசித்து அவற்றினுள் ஒன்றை அவன் தேர்ந்தெடுக்க வேண்டும். விவேகமுள்ளவன் மகிழ்வைவிட நன்மையைத் தேர்ந்தெடுக்கிறான். அவிவேகியோ, பேராசையாலும், பற்றாலும், மகிழ்ச்சியையே தேர்ந்தெடுக்கிறான்.
7. மனத்தையும் மற்ற உணர்வுகளையும் அடக்கியாளுதல்
உடம்பே தேர், ஆத்மாவே எஜமானர், புத்தியே தேரோட்டி, மனதே கடிவாளம், உணர்வுகளே குதிரைகள், உணர்விற்குரிய பொருட்களே அவைகளின் பாதைகள். எவனொருவனுக்கு பற்றுணர்வு மிக்கத்திறமில்லையோ, எவனுடைய மனம் கட்டுப்பாட்டுடன் தடுக்கப்பட இயலாததோ, எவனுடைய உணர்வுகள் அடக்கியாளப்பட முடியாதவைகளோ, தேரோட்டியின் குறும்புச் சூழ்ச்சியுடைய பொல்லாத குதிரையின் செயலை நிகர்ப்ப, அவன் தன் பயண இலக்கை — ஆத்மானுபூதியை — சென்றடையாமல் பிறப்பு-இறப்பு என்னும் சுழலுக்கு ஆட்படுகிறான்.
ஆனால், எவனொருவனுக்குப் பற்றுணர்வுத்திறம் உள்ளதோ, அவனது மனம் அடக்கியாளப்படுகிறதோ, எவனது உணர்வுகள் கட்டுப்பாட்டில் இருக்கின்றனவோ, அவன் சாரதியின் குதிரையின் செயலை நிகர்ப்ப, சேரும் இடத்தையடைகிறான். அதாவது, ஆத்மானுபூதியென்ற நிலைய எய்துகிறான். அங்கே அவன் மீண்டும் பிறப்பதில்லை. தனது சாரதியை — வழிகாட்டியை — போன்ற பற்றுணர்வுத் திறம் உள்ளவனும், தன் மனத்தைக் கடிவாளத்தினால் கட்டுப்படுத்தக் கூடியவனும், பிரயாணத்தின் இலக்கான எவற்றினும் மேம்பட்ட எங்கும்நிறை விஷ்ணுவின் — கடவுள் — வாசஸ்தலத்தை எய்துகிறான்.
8. மனத்தூய்மை
ஒருவன் தனது பணித்துறைக் கடைமைகளை மனநிறைவுடனும், பற்றின்றியும் செய்தாலொழிய மனம் தூய்மைப்படாது. மனம் தூயதாக்கப்படாவிடில் அவன் ஆத்மானுபூதியைப் பெற இயலாது. தூய்மையான மனம் ஒன்றினாலேயே விவேகமும் — நித்ய - அநித்ய வஸ்துக்களைப் பரிந்துணரும் ஆற்றல் , வைராக்கியமும் முளைத்து மேல் எழும்பி ஆத்மானுபூதிக்கு இட்டுச் செல்கின்றன.
9. குருவின் இன்றியமையாமை
ஆத்ம ஞானமானது, எவரொருவரும் தன்னுடைய சுய முயற்சியால் அடைவோம் என்று ஒருகாலும் நினைக்கக்கூட முடியாத அளவுக்கு, சூட்சுமமாகவும், அறிவுநிலை கடந்ததாகவும் இருக்கிறது. ஆகவே தாமே ஆத்மானுபூதி எய்தப்பெற்ற மற்றொருவர் - அதாவது, குருவின் உதவி முழுமையாகத் தீராது வேண்டப்படுகிறது. பெரும் உழைப்பாலும், பாடுகளாலும் பிறர் அளிக்க இயலாதவைகளை அத்தகைய குருவின் உதவியால் எளிதில் ஈட்டலாம். ஏனெனில், அவர், தாமே அப்பாதையில் நடந்திருப்பதால் தன் சீரடர்களை ஆன்மீக முனேற்றத்தின் ஏணியில், பட்ப்படியாக எளிதில் அழைத்துச் செல்ல முடியும்.
10. இறுதியாக கடவுள் அனுக்ரகம்
மிகமிக முக்கியமான பொருளாகும். கடவுள் எவர்மீதாவது மகிழ்ச்சியுற்றவராயின், அவருக்கு விவேகம், வைராக்கியத்தை அளித்து, இகவாழ்வென்னும் பெருங்கடலைத் தாண்டி பத்திரமாக அவரை அழைத்துச் செல்கிறார். "ஆத்மாவானது வேதங்களைக் கற்பதாலோ, புத்தியாலோ, மிகுதியான புலமையினாலோ பெறப்படுவதன்று. ஆத்மா எவனைத் தேர்ந்தெடுக்கின்றதோ, அவனாலேயே அது பெறப்படுகின்றது. அவனுக்கே, அது தனது பண்பை வெளிப்படுத்துகின்றது" என்று கடோபநிஷதம் பகர்கின்றது.
இவ்வாறாக விளக்கவுரையை முடித்ததும், பாபா, அப்பெருந்தகையிடம் திரும்பி, "நல்லதையா, உனது பையில் ஐந்து ரூபாயைப் போன்று ஐம்பது மடங்குள்ள உருவில் — ரூ. 250 — பிரம்மம் — பணத்தெய்வம் — இருக்கிறது. அவற்றைத் தயவுசெய்து வெளியே எடு" என்றார். அப்பெருந்தகையும் நோட்டுக்களின் கற்றையைத் தமது பையினின்று வெளியே எடுத்தார். அவற்றை அவர் எண்ணியபோது அவரது பெருவியப்பிற்குரிய வகையில், ஒவ்வொன்றும் பத்து ரூபாயான இருபத்தைந்து நோட்டுக்கள் இருப்பதைக் கண்டார். பாபாவின் எங்கும்நிறை பேரறிவைக் கண்ணுற்று, அவர் மனதுருகி, பாபாவின் ஆசீவாதங்களுக்காக ஏங்கி அவர் பாதத்தடியில் வீழ்ந்தார்.
அப்போது பாபா அவரிடம், "உனது கட்டுப்பிரம்மதைச் சுருட்டிக்கொள்க.— அதாவது கரன்சி நோட்டுக்கள் — உன் பேராசையை முழுமையாக விட்டொழித்தாலன்றி, மெய்யான பிரம்மத்தை நீ அடையமுடியாது. செல்வம், மக்கள், சுபிட்சம் என்னும் கவனங்களால் முழுமையுமாய் கவரப்பட்டிருக்கும் மனதை உடைய மனிதன், அவைகளுக்கான அவனது பற்றுக்களையெல்லாம் விட்டொழித்தாலன்றி, எங்கனம் பிரம்மத்தை அறிவதை எதிர்பார்க்கமுடியும். பற்றென்னும் மாயத்தோற்றம் அல்லது பணத்தாசை என்னும் இறுமாப்பு, பொறாமை என்னும் முதலைகள் நிறைந்த துன்பப் பெருநீர்ச்சுழி ஆகும். ஆசைகளை நீந்துவனுக்கே சுழியைக் கடத்தல் இயலுவதாம். பேராசையும், பிரம்மமும் எதிர் எதிர் துருவங்கள். அவைகள் நிரந்தரமாக ஒன்றுக்கொன்று முரண்பட்டவை. எங்கே பேராசை நிலவுகிறதோ, அங்கே பிரம்மத்தைப்பற்றிய எண்ணத்திற்கோ, தியானத்திற்கோ இடமில்லை. பின்னர் எங்கனம் ஒரு பேராசைக்காரன் சாந்தத்தையும், பரகதியையும் பெற்றிடமுடியும். பேராசைக்காரனுக்கு அமைதியில்லை, திருப்தியுமில்லை, நிலையுறிதிப்பாடுமில்லை.
எவ்வளவு பேராசை மனத்தகத்திருப்பினும் கூட, சாதனைகள் — ஆன்மீக முயற்சிகள் — அனைத்தும் பயனற்றவையேயாம். தனது கர்மங்களின் விளைவால் அடையவிருக்கும் பழத்தின் அல்லது பயனின் ஆசையினின்று விடுபடாமலும், அவைகளின்மேல் வெறுப்புறாமலும் உள்ள நன்றாகக் கற்றறிந்தவனுடைய ஞானமும் கூடப் பயனில்லை. அது அவனுக்கு ஆத்மானுபூதியைப் பெறுவதில் உதவ இயலாது. அஹங்காரம் முழுமையும் நிரம்பப்பெற்று புலனுணர்வுப் பொருட்களையே சிந்தித்துக்கொண்டு இருப்பவனுக்குக் குருவின் போதனைகள் கூடப் பயனற்றவையே. மனத்தூய்மையே அறவே தேவைப்படுகிறது. அஃதின்றி நமது ஆன்மீக சாதனைகள் யாவும் பயனற்ற வெளித்தோற்றமும், பகட்டு ஆரவாரமுமேயன்றிப் பிறிதில்லை. எனவே, ஒருவனால் ஜீரணிக்க முடிந்த, கிரகிக்க இயன்றவற்றை மட்டுமே எடுத்துக் கொள்வது நலமாகும். எனது கருவூலம் நிறைந்திருக்கிறது. எவனுக்கும் அவன் விரும்புவதை நான் அளிக்க முடியும். ஆனால் நான் கொடுப்பதைப் பெற்றுக்கொள்ளும் தகுதி அவனுக்கு இருக்கிறதா என்பதை நான் கவனிக்க வேண்டும். என்னைக் கவனத்துடன் கேட்பீர்களானால், நீங்கள் உண்மையிலேயே நன்மை அடைவீர்கள். இம்மசூதியில் அமர்ந்துகொண்டு நான் உண்மையைத் தவிர வேறெதையும் பேசவில்லை" என்று உரைத்தார்.
ஒரு வீட்டிற்கு விருந்தினர் ஒருவர் அழைக்கப்பட்டிருக்கும்போது, வீட்டைச் சேர்ந்தவர்களும், அங்கிருக்க நேரிடும் மற்ற நண்பர்களும், உறவினர்களும், விருந்தாளியுடன் உபசரிக்கப்பட்டு மகிழ்வெய்துவார்கள். அவ்வாறே மசூதியில் அப்போது இருந்த அனைவரும், பாபாவினால் பணக்காரப் பெருந்தகைக்குப் பரிமாறப்பட்ட ஆன்மீக விருந்தில் பங்குகொண்டனர். பணக்காரப் பெருந்தகை உள்ளிட்ட அனைவரும், பாபாவின் ஆசீர்வாதங்களைப் பெற்ற பின்னர், மிகவும் திருப்தியுடனும், மகிழ்ச்சியுடனும் அந்த இடத்தைவிட்டுச் சென்றனர்.
பாபாவின் சிறப்பான குணாதிசயங்கள்
தங்களது வீட்டைத் துறந்து காடுகளில், குகைகளில், துறவி மடங்களில் தனிமையில் இருந்துகொண்டு, தங்களுக்கே விடுதலை அல்லது பரகதி தேட முயற்சிக்கும் பல முனிவர்கள் உள்ளனர். மற்றவர்களைப் பற்றி அவர்கள் கவலைப் படுவதில்லை. எப்போதும் அந்தராத்மாவிலேயே தம்மை மறந்து மூழ்கி இருப்பார்கள். சாயிபாபா அவ்வகையைச் சார்ந்தவர் அல்ல. அவருக்கு வீடில்லை, மனைவி இல்லை, மக்களில்லை, சேய்மை அண்மைய உறவினர்கள் யாருமே இல்லை. எனினும் அவர் இவ்வுலகில் — சமூகத்தில் — வாழ்ந்தார். நாலைந்து வீடுகளிலிருந்து தமது உணவை அவர் இரண்டு உண்டு, எப்போதும் வேப்பமரத்தடியிலேயே வாழ்ந்தார்.
உலக விவகாரங்களை நடத்திக்கொண்டு, மக்களுக்கு உலகில் எங்ஙனம் நடக்கப் பழகவேண்டுமெனப் போதித்தார். கடவுள் காட்சியைப் பெற்றபின் மக்களின் சுபிட்சத்துக்காகப் பாடுபடும் முனிவர்களையோ, சாதுக்களையோ காண்பதரிது. சாயிபாபா இவர்களிலெல்லாம் தலையாயவர். எனவே ஹேமத்பந்த் பின்வருமாறு கூறுகிறார்.
"இத்தகைய அசாதாரணமான, அறிவெல்லைகடந்த, விலைமதிப்பற்ற, தூய்மையான மாணிக்கக்கல் — சாயிபாபா — அவதரித்த நாடு ஆசீர்வதிக்கப்பட்டது. குடும்பம் ஆசீர்வதிக்கப்பட்டது. தூயவர்களாகிய அவரின் பெற்றோர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்."
ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
• திருவாளர் சாதே, திருமதி தேஷ்முக்கின் கதைகள்
• நல்ல எண்ணங்களின் அவா நிறைவேற்றத்தை ஊக்குவித்தல்
• உபதேச வகைகள்
• அவதூறு பேசுவது பற்றியும், உழைப்புக்கு ஊதியம் கொடுப்பது பற்றியும் போதனைகள்
முந்தைய இரு அத்தியாயங்களில் துரித பிரம்மஞானத்தை பெறவிழைந்த பணக்காரர் பாபாவால் எவ்வாறு நடாத்தப்பட்டார் என்பதை ஹேமத்பந்த் விவரித்தார். இந்த இரண்டு அத்தியாயங்களிலும் அவர் தாமே பாபாவால் எவ்வாறு ஏற்கப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டார் எனவும், எங்ஙனம் நல்ல எண்ணங்களை பாபா ஊக்குவித்து அவைகளைப் பலனளிக்கச் செய்தார் எனவும் விவரித்து, ஆன்மீக முன்னேற்றத்தைப் பற்றியும், அவதூறு பேசுவது குறித்தும், உழைப்புக்குரிய ஊதியத்தைப் பற்றியும் உள்ள பாபாவின் போதனைகளையும் அளிக்கிறார்.
முன்னுரை
தமது அடியவர்களின் தகுதிகளை முதலில் சத்குரு கவனிக்கிறார் என்பதும் பின்னர் அவர்கள் மனத்தை எவ்வளவும் குழம்பச் செய்யாமல், பொருத்தமான செயல்துறைக் கட்டளைகளை அளித்து ஆத்மானுபூதி என்ற இலட்சியத்திற்கு, தொடர்ந்து அவர்களை இட்டுச்செல்கிறார் என்பது நன்றாக அறியப்பட்ட உண்மை ஆகும். இவ்வகையில் சத்குரு எவைகளை உபதேசிக்கிறாரோ, அல்லது கட்டளையிடுகிராரோ அவைகள் பலரறிய வெளியிடப்படக்கூடாது என்று சிலர் கூறுகிறார்கள். அவர்களுடைய உபதேசங்கள் பிரசுரிக்கப்பட்டால், அவை பயனற்றதாகிவிடுகின்றன என்று சிலர் நினைக்கிறார்கள். இக்கருத்து சரியானதன்று.
சத்குருவானவர் ஒரு பருவமேகம் போன்றவர். தமது அமிர்தத்தினை நிகர்மொழிகளைத் தங்குதடையின்றி விரிவாக அனைத்து இடங்களிலும் பரவும்படி கருதரிய ஆனந்தமழை பொழிகிறார்கள். இவைகளை நாம் மகிழ்ந்தனுபவித்து நமது உள்ளம் நிறைவெய்தும்வரை ஜீரணித்துக்கொண்டு, அதன்பின் தனிப்பயன் கருதி ஷேம ஒதுக்கீடு ஏதுமின்றி மற்றவர்களுக்கும் பரிமாறவேண்டும். நமது விழிப்பு நிலையில் அவர் போதிப்பவைகளுக்கு இந்நியதி பொருந்துவதுடன் நில்லாது, கனவு நிலையில் அவர் நமக்கு அளிக்கும் காட்சிகளுக்கும் இது பொருந்துவதேயாம். உதாரணத்துக்கு ஒரு நிகழ்ச்சியைக் கூறுமிடத்து புதகௌசிக ரிஷி, தாம் கனவில் கண்டத்தான புகழ்பெற்ற ராமரக்ஷ ஸ்தோத்திரத்தைப் பதிப்பித்தார். — ஸ்ரீ ராமரைப் புகழ்ந்து இரக்ஷணையை வேண்டி பாடப்பெறும் இரட்டை வரி செய்யுட்களான ஸ்லோகம்
தனது குழந்தைகள் உடல் நலம் பெறுதற்பொருட்டாக கசப்பான ஆனால் ஆரோக்கியமான மருந்துகளை அவைகளின் தொண்டைக்குள் வலிந்து புகட்டும், பாசமுள்ள தாயைப் போன்றே, சாயிபாபா தமது அடியவர்களுக்கு ஆன்மீக செயல்துறைக் கட்டளைகளைத் தெரிவித்தார். அவரது முறைமை திரையிடப்பட்டதோ, இரகசியமானதோ அல்ல. ஆனால் முற்றிலும் வெளிப்படையானவை. அவருடைய கட்டளைகளைப் பின்பற்றிய அடியவர்கள் தங்களின் குறிக்கோளை எய்தினார்கள்.
சாயிபாபாவைப் போன்ற சத்குருக்கள் நமது அறிவாற்றல் என்னும் கண்களைத் திறந்துவிட்டு, ஆத்மாவின் தெய்வீக அழகுகளை நமக்குப் புலப்படுத்துகிறார்கள். இது செய்யப்படும்போது புலனுணர்வுப் பொருட்களில் நமக்குள்ள ஆசை மறைந்துவிடுகிறது. விவேகம்— பகுத்துணர்தல் , வைராக்கியம்— பற்றறுத்தல் — என்னும் இரட்டை கனிகள் நமது கைகளுக்குக் கிட்டுகின்றன. ஞானமென்பது தூக்கத்தில் கூடத் துளிர்விடுகின்றது.
முனிவர்களின் — சத்குரு — தொடர்பைப் பெறும்போதும், அவர்களுக்குச் சேவை செய்யும்போதும், அவர்களின் அன்பைப் பெறும்போதும், இவைகள் அனைத்தினையும் நாம் எய்துகிறோம்.
தமது அடியவர்களின் அவாக்களைப் பூர்த்தி செய்யும் ஆண்டவன், நமது உதவிக்கு வருகிறார். நமது தொல்லைகளையும், கஷ்டங்களையும் நீக்கி மகிழ்வெய்தச் செய்கிறார். ஆண்டவனாகவே கருதப்படும் சத்குருவின் உதவியே இம்முன்னேற்றத்திற்கு முழுவதுமான காரணமாகும். எனவே நாம் எப்போதும் சத்குருவையே பின்பற்றி இருந்து, அவர்தம் கதைகளைச் செவிமடுத்து அவரின் பாதத்தில் வீழ்ந்து வணங்கி அவருக்கே சேவை செய்யவேண்டும். இப்போது பிரதானமான கதைக்கு வருவோம்.
திருவாளர் சாதே
பல ஆண்டுகளுக்கு முன் பம்பாயின் கவர்னர் ரே பிரபுவால் அடக்கப்பட்ட க்ராஃபோர்ட் நடப்பாட்சியின்போது, சிறிதளவு பிரசித்தி பெற்றிருந்த சாதே என்னும் பெருந்தகை ஒருவர் இருந்தார். அவர் வணிகத்தில் கடுமையான நஷ்டமடைந்தார். மற்றுமுள்ள பிரதிகூலமான சூழ்நிலைகளும் அவருக்குப் பெருமளவு தொல்லையளித்து கவலையடையவும், உள்ளம் சோர்வுறவும் செய்தது. இருப்புக்கொள்ளாமல் இருந்துகொண்டிருந்த அவர் வீட்டை விடுத்துத் தொலை தூரத்திற்கு வெளியேறிப் போய்விட எண்ணினார்.
பொதுவாக மனிதன் கடவுளை நினைப்பதில்லை. ஆனால் இடர்பாடுகளும், பேராபத்துக்களும் அவனைச் சூழும்போது அவன் ஆண்டவரை நோக்கித் திரும்பி நிவாரணத்திற்காக வேண்டுகிறான். அவனுடைய தீய கர்மங்கள் யாவும் முடிவுற்றதென்றால், முனிவர் ஒருவரை அவன் சந்திக்கும் வாய்ப்பினைக் கடவுள் ஏற்பாடு செய்கிறார். அம்முனிவரும் அவனுக்கு நலமளிக்கக்கூடிய வழிமுறைகளை உபதேசிக்கிறார். சாதேவுக்கும் அத்தகைய அனுபவமே ஏற்பட்டது. தத்தம் தேவைகள் பூர்த்தி செய்யப்படவும், மனச்சாந்தியை அடைவதற்கும் ஏதுவாக சாயிபாபா தரிசனத்தைப் பெற ஏராளமான மக்கள் திரளாகச் சென்றுகொண்டிருக்கும் ஷீர்டிக்குப் போகும்படி அவருக்கு அவரது நண்பர்கள் அறிவுரை கூறினார்கள். அவருக்கு இக்கருத்து பிடித்திருந்தது. உடனே ஷீர்டிக்கு 1917ல் வந்தார்.
பரப்பிரம்மமாகவும், சுஜஞ்ஜோதியாகவும், களங்கமற்றதாயும், தூயதாகவுமுள்ள சாயிபாபாவின் ரூபத்தைக் கண்ணுற்று அவரது மனம் பதைபதைப்பை விடுத்துச் சாந்தமுற்றது. தமது முற்பிறவிகளில் ஏற்பட்ட நல்வினைகளின் குவியலே தம்மை பாபாவின் புனிதத் திருவடிகளுக்குக் கொணர்ந்தது என அவர் நினைத்தார். அவர் உறுதியான மனதிட்டம் வாய்க்கப்பெற்ற மனிதர். உடனேயே அவர் குருசரித்திரம் — ஸ்ரீ தத்தாத்ரேயர் மற்றும் அவரது மறுஅவதாரங்களான ஸ்ரீபாத, ஸ்ரீவல்லபர், ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி ஆகியோரின் புனித சரித்திரம் — செய்யத் தொடங்கினார். ஸப்தாகத்தில் — ஏழு நாட்களில் — பாராயணம் பூர்த்தியானதும் அன்று இரவு பாபா அவருக்கு ஒரு காட்சி அளித்தார். அது இவ்வாறானது:
பாபா குருசரித்திரத்தை தமது கரங்களில் வைத்துக்கொண்டு அதன் உட்பொருளை, முன்னால் அமர்ந்து கவனத்துடன் கேட்டுக்கொண்டிருந்த சாதேவிற்கு விவரித்துக்கொண்டிருந்தார். அவர் விழித்தெழுந்து பின்னர் தமது கனவினை நினைவுகூர்ந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அறியாமையில் குறட்டைவிடும் தம்மைப் போன்ற ஆத்மாக்களை பாபாவின் எல்லையற்ற கருணையே எழுப்பிவிட்டு குருசரித்திர அமுதத்தினைச் சுவைக்கும்படி செய்கிறது என்று அவர் நினைத்தார்.
மறுநாள் காகா சாஹேப் தீஷித்திடம் இக்காட்சியைப்பற்றி அவர் தெரிவித்து சாயிபாவிடம் அதன் பொருளைப்பற்றிய நுட்பக்குறிப்பினைக் குறித்துக் கேட்கும்படி வேண்டிக்கொண்டார். அதாவது ஒருவாரம் பராயணம் செய்தது போதுமா? அல்லது மீண்டும் ஆரம்பிக்க வேண்டுமா என்பதாக. காகா சாஹேப் தீஷித்தும் தமக்குக் கிடைத்த ஓர் உரிய சந்தர்ப்பத்தில் பாபாவை நோக்கி, "தேவா — ஓ! தெய்வமே — இந்தக் காட்சியால் சாதேவுக்கு எதனைக் குறிப்பிடுகிறீர்கள்? அவர் சப்தாஹத்தை நிறுத்திவிடலாமா? தொடர வேண்டுமா? அவர் ஓர் எளிய அடியவர். அவரது அவா நிறைவேற்றப்படுதல் வேண்டும். அவருக்கு காட்சியின் பொருள் விளக்கப்பட்டு, அவர் ஆசீவதிக்கப்படவேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார். பாபாவும் "அவர் மற்றுமொரு சகாப்தம் பாராயணம் செய்யவேண்டும். அதை அவர் கவனமாகக் கற்பாராயின் அவர் தூயவராகி நன்மை பெறுவார். பரமாத்மாவும் மகிழ்வடைந்து, இச்சம்சார வாழ்க்கையின் பந்தங்களினின்று அவரை விடுவிப்பார்" எனப் பதிலளித்தார்.
இச்சமயத்தில் ஹேமத்பந்த் அங்கே இருந்தார். அவர் பாபாவின் கால்களைப் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தார். பாபாவின் சொற்களைக் கேட்டதும், அவர் தன் மனதில் பின்வருமாறு சிந்திக்கலானார். "என்ன! சாதே ஒரு வாரமே படித்துப் பரிசைப் பெற்றுக்கொண்டார். நாற்பது ஆண்டுகளாக ஒரு பயனுமின்றி நான் படித்துக் கொண்டிருக்கிறேன். இந்த இடத்தில் அவரது எழுநாள் வாசம் பலனளிக்க நேரிட்டு எனது ஏழுவருட வாசம் (1910-1917) பலனேதுமின்றிப் போகின்றது?! தம் அறிவுரையால் என்னை ஆசீர்வதிக்க வேண்டும் எனவும், தமது அமுதத்தை என்மீது பொழியவேண்டும் எனவும் கருணை மேகத்திற்காக — பாபாவிற்காக — காத்துக் கொண்டிருக்கும் சாதகப் பறவையைப் போல எப்போதும் நான் காத்துக் கொண்டிருக்கிறேன்". இந்த எண்ணம் அவர் மனதில் குறுக்கிட்ட அத்தருணமே, பாபா அதனை அறிந்துகொண்டார்.
பாபா பக்தர்களின் எண்ணங்களையும் படித்துப் புரிந்துகொண்டு தீய எண்ணங்களைக் கீழடக்கி, நல்ல எண்ணங்களை ஊக்குவித்தார் என்பது அடியவர்களின் அனுபவமாகும். ஹேமத்தின் உள்ளத்தைப் படித்தறிந்துகொண்ட பாபா, உடனே அவரை எழுந்து ஷாமாவிடம் — மாதவ்ராவ் தேஷ்பாண்டே — சென்று ரூ. 15ஐ தட்ஷணையாகப் பெற்றுக்கொண்டு, அங்கு சிறிது நேரம் அவருடன் உரையாடியபின்னர் திரும்பிவரும்படி கேட்டார். பாபாவின் மனத்தில் கருணை உதயமாகியது. எனவேதான் அவர் இக்கட்டளையை இட்டார். யார்தான் பாபாவின் ஆணையை மீற முடியும்?
ஹேமத்பந்த் உடனே மசூதியைவிட்டு, ஷாமாவின் வீட்டிற்கு வந்தார். அவர் அப்போதுதான் குளித்துவிட்டு வேட்டியை உடுத்திக் கொண்டிருந்தார். அவர் வெளியே வந்து ஹேமத்பந்த்ஐ நோக்கி, "தங்கள் இப்போது இங்கே இருப்பது எங்கனம்? மசூதியிலிருந்து தாங்கள் வந்துள்ளதாகத் தோன்றுகிறதே? இருப்புக் கொள்ளாதவரைப் போன்றும், உளச்சோர்வுடையவராகவும் ஏன் காணப்படுகிறீர்கள்? ஏன் தாங்கள் தனித்து இருக்கிறீர்கள்? தயவுசெய்து அமர்ந்து சிறிதுநேரம் இளைப்பாறுங்கள். நான் எனது வழிபாட்டை உடனே முடித்துவிட்டுத் திரும்புகிறேன். அதுவரை வெற்றிலை - பாக்கு போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் மகிழ்ச்சியுடன் உரையாடலாம்" என்று கூறிவிட்டு உள்ளே சென்றார்.
ஹேமத்பந்த் முன் திண்ணையில் அமர்ந்திருந்தார். ஜன்னலில் 'நாதபாகவதம்' என்ற பிரசித்திபெற்ற மராத்தி நூலை அவர் கண்டார். பெரிய சமஸ்கிருத நூலான பாகவதத்தின் பதினோராவது ஸ்கந்தத்தைப் — அத்தியாயம் — பற்றிய ஏக்நாத் முனிவரின் விளக்கவுரையாகும். சாயிபாபாவின் யோசனையின் பேரில் அல்லது சிபாரிசின் பேரில் திருவாளர்கள் பாபு சாஹேப் ஜோகும், காகா சாஹேப் தீஷித்தும் ஷீர்டியில் தினந்தோறும் பகவத்கீதையையும் — கிருஷ்ணருக்கும் அவரது தோழரும் பக்தருமான அர்ஜுனனுக்குமிடையே நிகழ்ந்த உரையாடலை அதன் மராத்திய விளக்க உரையான பாவார்த்த தீபிகா அல்லது ஞானேஷ்வரியுடன் , நாதபாவதத்தையும் — கிருஷ்ணருக்கும் அவரது சேவகரும் பக்தருமான உத்வருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல் — மற்றும் மற்றைய பெரிய நூலான ஏக்நாத்தின் பாவார்த்த ராமாயணத்தையும் படித்தார்கள்.
பாபாவிடம் அடியவர்கள் வந்து சில குறிப்பிட்ட கேள்விகளைக் கேட்டபோது சிலசமயங்களில் அதில் ஒரு பகுதிக்கு விடையளித்துவிட்டு பாகவத தர்மத்தின் முக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகளான மேட்குறிப்பிட்ட நூல்களைப் பராயணம் செய்வதைச் சென்று கேட்கும்படி கூறுவார். அடியவர்கள் சென்று அவற்றைக் கேட்கும்போது தங்கள் வினாக்களுக்குப் பூரண திருப்தியான பதில்களைப் பெறுவார்கள். நாதபாகவதம் என்ற நூலின் சில பகுதிகளை ஹேமத்பந்தும் படிப்பது வழக்கம். அன்று மசூதிக்குச் சென்றுகொண்டிருந்த சில அடியவர்களுடன் சேர்ந்து செல்வதற்காக தினந்தோறும் தாம் படிக்கும் பகுதியை அவர் பூர்த்தி செய்யவில்லை.
ஷாமாவின் ஜன்னலிலிருந்து அந்த புத்தகத்தினை எடுத்து, தற்செயலாக அதைப் புரட்டியபோது, அவரது ஆச்சரியத்திற்கேட்ப முடிக்கப்படாத பகுதி வந்தது. தமது நித்ய பாராயணத்தைப் பூர்த்தி செய்வதற்கு ஏதுவாக பாபா தன்னை வெகு அன்புடன் ஷாமாவின் வீட்டிற்கு அனுப்பி இருப்பதாக அவர் எண்ணினார். எனவே முடிக்கப்படாத பகுதியைப் படித்து பூர்த்தி செய்தார். இது முடிவடைந்த உடனேயே ஷாமா வழிபாட்டை முடித்துவிட்டு வந்தார். அவர்களிடையே பின்வரும் உரையாடல் நிகழ்ந்தது.
ஹேமத்பந்த்: பாபாவிடமிருந்து ஒரு தூதுக் குறிப்புடன் நான் வந்துள்ளேன். தங்களிடமிருந்து தட்ஷிணையாக ரூ.15 பெற்றுக்கொண்டு, சிறிது நேரம் தங்களுடன் அமர்ந்து மகிழ்ச்சியாக உரையாடிவிட்டு, பின்னர் தங்களுடன் மசூதிக்குத் திரும்பும்படி என்னை அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
ஷாமா: — ஆச்சரியத்துடன் — என்னிடம் கொடுக்கப் பணம் ஏதுமில்லை. ரூபாய்களுக்குப் பதிலாக என்னுடைய பதினைந்து நமஸ்காரங்களை பாபாவிடம் எடுத்துச் செல்லுங்கள்.
ஹேமத்பந்த்: மிக நல்லது. தங்களுடைய வணக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இப்போது நாம் சிறிது உரையாடுவோம். நமது பாவங்களை அழிக்கும் பாபாவின் கதைகளையும், லீலைகளையும் கூறுங்கள்.
ஷாமா: அப்படியென்றால் சற்றே இங்கே அமருங்கள். இக்கடவுளின் — பாபா — விளையாட்டு — லீலை — வியக்கத்தக்கது. அது தங்களுக்கு முன்னமே தெரியும். நான் ஒரு கிராமத்துக் குடியானவன். ஆனால் தாங்களோ அறிவுடைய குடிமகன். தாங்களே இங்கு வந்துற்றது முதலாகச் சிறிது அதிகமாகவே லீலைகளைக் கண்டுகொண்டிருக்கிறீர்கள். அவற்றை எங்ஙனம் நான் தங்கள் முன் விவரிப்பேன்?! நன்று இந்தாருங்கள் வெற்றிலை-பாக்கு சேர்த்து தாம்பூலம் போட்டுக்கொள்ளுங்கள். நான் உள்ளே சென்று உடுத்திக்கொண்டு வந்துவிடுகிறேன்.
சில நிமிடங்களில் ஷாமா வெளியே வந்து ஹேமத்பந்த்துடன் பேசத்தொடங்கினார். அவர் சொன்னார். "இந்த ஆண்டவனின் — பாபா — லீலைகள் அறிந்த்கொள்ள இயலாதவை. அவர் தம் லீலைகட்கு முடிவில்லை. யாரே அவற்றைக் கண்டுகொள்ள இயலும்? தமது லீலைகளினால் அவர் விளையாடுகிறார் என்றாலும், அவைகளுக்குப் புறம்பாகவே — அதனால் பாதிக்கபடாதவராகவே — இருக்கிறார். நாகரீகமற்றவர்களாகிய நமக்கு என்னதான் தெரியும்? பாபா தாமே ஏன் கதைகள் சொல்லவில்லை. தங்களைப் போன்ற கற்றறிந்தோரை என்போன்ற அறிவிலிகளிடம் அவர் ஏன் அனுப்புகிறார்? அவர்தம் வழிகள் கருதுதற்கு இயலாதவை. அவைகள் மனிதத் தன்மை வாய்ந்தவையல்ல என்று மட்டுமே என்னால் கூறு இயலும்."
இந்த முன்னுரையுடன் ஷாமா தொடர்ந்தார். "இப்போது என் நினைவில் இருக்கும் ஒரு கதையை நான் தங்களுக்கு விவரிக்கிறேன். அதை நானே நேரிடையாக அறிவேன். ஓர் பக்தன் எவ்வளவுதூரம் நெஞ்சுரங்கொண்டவனாகவும், தீர்மானமுள்ளவனாகவும் இருக்கிறானோ, அங்ஙனமே பாபாவின் உடனடியான பிரதிச்செயலும் இருக்கிறது. சில சமயம் பாபா தனது பக்தர்களைத் தீவிரமாக சோதனைக்கு உட்படுத்திப் பின்னர் அவர்களுக்கு உபதேசம் — செயல்துறைக் கட்டளைகள் — அளிக்கிறார். உபதேசம் என்ற வார்த்தையைக் கேட்டவுடனேயே, ஹேமத்பந்த்திற்கு தனது மனதில் ஏதோ ஒரு மின்னலைப் போன்ற ஒளி பாய்ந்தது போன்றிருந்தது.
அவர் உடனே சாதேவின் குருசரித்திரப் பாராயணக் கதையை நினைவுகூர்ந்து தமது பதைபதைப்பான மனதிற்கு அமைதியளிக்கவே நிச்சயமாக பாபா தம்மை ஷாமாவிடம் அனுப்பியிருக்கவேண்டும் என்று எண்ணினார், என்றாலும் இந்த உணர்வை அடக்கிக் கட்டுப்படுத்திக்கொண்டு ஷாமாவின் கதைகளைக் கேட்கத் தொடங்கினார். அவை அனைத்தும் பாபா தமது பக்தர்களிடம் எவ்வளவு அன்புடனும், பாசமுடனும் இருக்கிறார் என்பதைத் தெரிவிக்கின்றன. இவைகளை எல்லாம் கேட்ட ஹேமத்பந்த் ஒருவித மகிழ்ச்சியை எய்தலானார். பிறகு பின்வரும் கதையை ஷாமா கூறத் தொடங்கினார்.
திருமதி ராதாபாய் தேஷ்முக்
ராதாபாய் என்ற பெயருடைய கிழவி ஒருத்தி இருந்தாள். அவள் காஷாபா தேஷ்முக் என்பாரின் தாயாராவாள். பாபாவின் புகழைக் கேள்விப்பட்டு சங்கம்னேர் நகர மக்களுடன் அவள் ஷீர்டிக்கு வந்தாள்.
பாபாவின் தரிசனத்தைப் பெற்று மிகவும் திருப்தியடைந்தாள். பாபாவை மிகவும் உள்ளார்ந்த அன்புடன் அவள் நேசித்தாள். தான் பாபாவைக் குருவாக ஏற்றுக்கொண்டு அவரிடமிருந்து ஏதேனும் உபதேசம் பெறவேண்டும் என்று தீர்மானித்தாள். அதைத்தவிர அவளுக்கு வேறு ஒன்றும் தெரியாது. பாபா அவளை ஏற்றுக்கொண்டு மந்திரமோ, உபதேசமோ அளிக்காத வரையில் தான் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக உறுதிபூண்டாள். தனது இருப்பிடத்தில் தங்கி, மூன்று நாட்களாக உணவையும், நீரையும் விட்டொழித்தாள்.
கிழவியின் இந்த மிகக் கடுமையான பரீட்சையைக் கண்டு நான் திகிலடைந்தேன். அவரல் சார்பில் பாபாவிடம் இடையிட்டுப் பரிந்து பேசினேன். நான் கூறினேன், "தேவா, தாங்கள் இவ்வாறாகத் தொடங்கியிருப்பது என்ன? தாங்கள் ஏராளமானவர்களை இவ்விடம் ஈர்த்து இழுக்கிறீர்கள். தங்களுக்கு அக்கிழவியைத் தெரியும். அவள் மிகவும் பிடிவாதமுடையவளாகவும், தங்களையே முழுவதுமாகச் சாய்ந்தும் இருக்கிறாள். தாங்கள் அவளை ஏற்றுக்கொள்ளும்படி உபதேசம் தந்தாலொழிய சாகும்வரை சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதாகத் தீமானித்து இருக்கிறாள். ஏதாவது மோசமாக நிகழ்ந்துவிட்டால் மக்கள் தங்கள்மீது பழி சுமத்துவார்கள். பாபா அவளுக்கு உபதேசிக்கவில்லை. அதன் விளைவாக அவள் மரணமடைந்தாள் என்று கூறுவார்கள். எனவே அவள்மீது கருணைகூர்ந்து அவளை ஆசீர்வதியுங்கள், அவளுக்கு அறிவுறுத்துங்கள்". அவளது தீர்மான உறுதியைக் கண்டு பாபா அவளைக் கூப்பிட்டு அனுப்பினார். பின்வருமாறு அவளிடம் உரையாற்றி அவளது மனப்போக்கை மாற்றினார்.
"ஓ! அம்மா, — பாபா எப்போதும் பெண்களை அம்மா என்றும், ஆண்களை காகா, பாபா, பாவ் என்றும் அன்புடன் அழைப்பார் — ஏன் தேவையற்ற சித்திரவதைக்குத் தங்களைத் தாங்களே உட்படுத்திக்கொண்டு சாவை எதிர்நோக்குகிறீர்கள்? தாங்கள் உண்மையிலேயே எனது தாய். நான் தங்களது குழந்தை. என்மேல் இரக்கம்கொண்டு நான் சொல்வதை முழுவதும் கேட்பீர்களாக. எனது சொந்தக் கதையிலேயே சொல்கிறேன். அதைக் கவனமாகக் கேட்பீர்களானால், தங்களுக்கு அதனால் நன்மை விளையும். எனக்கு ஒரு குரு இருந்தார். அவர் ஒரு மாபெரும் முனிவர். மிக்க கருணையுள்ளவர்.
நான் அவருக்கு நெடுங்காலம் சேவை செய்தேன். பன்னெடுங்காலம். எனினும், அவர் ஏன் காதுகளில் எவ்வித மந்திரத்தையும் ஓதவில்லை. அவரை ஒருபோதும் விட்டுப் பிரியாமல் இருக்கவும், அவருடனேயே தங்கியிருந்து அவருக்குச் சேவை செய்யவும், எப்பாடுபட்டாவது அவரிடமிருந்து சிறிது உபதேசம் பெறவும் எனக்குக் கூரிய ஆர்வம் இருந்தது. ஆனால் அவருக்குத் தமக்கே உரிய வழிமுறை இருந்தது. அவர் ஏன் தலையை மொட்டை அடிக்கச்செய்து, இரண்டு பைசாக்களைத் தட்ஷிணையாகக் கேட்டார். நான் அவைகளை உடனே அளித்தேன். எனது குரு முழு நிறைவானவராய் இருப்பதால் அவர் ஏன் பணத்தைக் கேட்கவேண்டும்? அப்படியாயின் அவரை எங்ஙனம் பற்றற்றவர் என்று கூற இயலும்? என்று தாங்கள் கேட்பீர்கள் என்றால், காசுகளை அவர் இலட்சியம் செய்யவில்லை என்று நான் ஒளிவு மறைவின்றி பதில் கூறுவேன். அவைகளைக்கொண்டு அவருக்கு ஆகவேண்டியது என்ன?
அவர்தம் இரண்டு பைசாக்களாவன:
(1) உறுதியான நம்பிக்கை — நிஷ்டா
(2) பொறுமை அல்லது விடாமுயற்சி — சபூரி
இந்த இரண்டு பைசாக்களை நான் அவருக்கு அளித்தேன். அவர் பெரிதும் மனம் மகிழ்ந்தார். எனது குருவிடம் தஞ்சமாக நான் பன்னிரண்டு ஆண்டுகள் இருந்தேன். அவர் என்னை வளர்த்தார். உணவுக்கும், உடைக்கும் பஞ்சமில்லை. அவர் முழுமையும் அன்புடையவராக இருந்தார். ஆம், அவர் அன்பின் அவதாரமே ஆவார். எங்ஙனம் நான் அதை விவரிக்க இயலும்? அவர் என்னை மிகமிக அதிகமாக விரும்பினார். அவரைப்போன்ற குரு அபூர்வம். நான், அவரை நோக்கும்போது ஆழ்ந்த தியானத்தில் இருப்பதாகக் காணப்பட்டார். பின்னர் நாங்கள் இருவரும் பேரின்பத்தில் நிரம்பிவிடுவோம். இரவும், பகலும் நான் பசி தாகத்தை மரத்து, அவரையே ஆழ்ந்து நோக்கிக்கொண்டு இருப்பேன். அவரின்றி நான் இருப்புக்கொள்ளாதவன் ஆனேன். எனக்கு, எனது தியானதிற்கு அவரைத்தவிர வேறெவ்விதப் பொருளும் இல்லை. அன்றி அவருக்குப் பணிவிடை செய்வதைத் தவிர எனக்கு வேறெவ்வித வேலையும் இல்லை. அவரே எனது ஒரே அடைக்கலம். எனது மனம் எப்போதும் அவர்மீதே உறுதிப்பட்டுக்கொண்டிருந்தது.
இந்த நிஷ்டா — உறுதியான நம்பிக்கை — ஒரு பைசா தட்ஷிணையாகும். சபூரி — பொறுமை அல்லது விடாமுயற்சி — என்பது மற்றொரு பைசாவாகும். குருவிடம் நான் பொறுமையுடன் மிக நீண்டகாலம்வரை சேவை செய்தேன். இந்த சபூரியானது உங்களை இவ்வுலக வாழ்க்கை என்னும் பெருங்கடலைக் கடப்பதற்குரிய தோணியிலேற்றி அக்கரை சேர்ப்பிக்கும். மனிதனிடத்தில் உள்ள ஆண்மையே சபூரி. அது பாவங்களையும், வேதனைகளையும் நீக்குகிறது. பல்வேறு வகைகளில் பேராபத்துக்களை விலக்குகிறது. எல்லா அச்சம்களையும் அப்பால் அகற்றுகிறது. கடைமுடிவாக உங்களுக்கு வெற்றியளிக்கிறது. சபூரி நற்பண்புகளின் சுரங்கம். நல்லெண்ணங்களின் கூட்டாளி. நிஷ்டாவும் — நம்பிக்கை , சபூரியும் — பொறுமை — ஒருவரையொருவர் மிக நெருக்கமாக நேசிக்கும் இரட்டைச் சகோதரிகளை நிகர்த்தவை.
என்னுடைய குரு ஒருபோதும் வேறெதையும் என்னிடமிருந்து எதிர்பார்த்ததில்லை. அவர் என்னை ஒருபோதும் புறக்கணித்ததும் இல்லை. எப்போதும் என்னைப் பாதுகாத்தார். நான் அவருடன் தங்கி வாழ்ந்தேன். சிலசமயம் அவரைவிட்டுப் பிரிந்து வாழ்ந்தேன். எனினும் நான் ஒருபோதும் அவர்தம் அன்புடைமைக்குத் தேவையையோ, அன்பின்மையையோ கண்டதில்லை. தாய் ஆமையானது தனது இளங்குட்டிகள் தன்னருகில் இருப்பினும், தன்னை விட்டு நீங்கி ஆற்றின் அக்கரையில் இருப்பினும் தனது அன்புப் பார்வையால் பேணிவளர்க்கும். அதேவிதமாக, அவர்தம்முடைய கண்ணோட்டத்தினாலேயே எப்போதும் என்னைப் பாதுகாத்தார். ஓ! அன்னையே, எனது குரு எனக்கு எவ்வித மந்திரத்தையும் போதிக்கவில்லை. பின்னர் நான் எங்ஙனம் தங்கள் காதுகளில் மந்திரத்தை ஓதமுடியும்? குருவின், ஆமையினத்தை நிகர்த்த அன்புக் கண்ணோட்டம் ஒன்றே நமக்கு மகிழ்ச்சியை நல்குகிறது. எவரிடமிருந்தும் மந்திரமோ, உபதேசமோ பெற முயலாதீர்கள். என்னையே உங்களது எண்ணங்கள், செயல்கள் இவற்றின் ஒரே குறிக்கோளாக அமைத்துக் கொள்ளுங்கள். சந்தேகம் ஏதுமின்றி நீங்கள் நிச்சயம் பரமார்த்திகத்தை — வாழ்வின் ஆன்மீகக் குறிக்கோளை — எய்துவீர்கள். என்னை உங்களது முழுமனத்தோடு நோக்குங்கள். பதிலாக நானும் அங்ஙனமே தங்களை நோக்குவேன்.
இம்மசூதியில் அமர்ந்துகொண்டு நான் உண்மையே பேசுகிறேன். உண்மையைத் தவிர வேறெதையும் பேசவில்லை. சாதனைகள் ஏதும், ஆறு சாஸ்திரங்களில் கைதேர்ந்த அறிவு ஏதும் தேவை இல்லை. உங்களது குருவினிடத்தில் நம்பிக்கையும், பற்றுறுதியும் கொள்ளுங்கள். குருவே தனி ஒருவராக நடத்துனர், இயக்குனர் என நம்புங்கள். தனது குருவின் பெருமையை அறிபவன், அவரையே ஹரிஹர பிரம்மமென்ற திருமூர்த்தி அவதாரமென்று கருதுபவன், ஆசீர்வதிக்கப்பட்டவன்." இவ்வாறாக அறிவுறுத்தப்பட்டு, கிழவி உடன்பட்டாள். அவள் பாபாவை வணங்கி உண்ணாவிரதத்தைக் கைவிட்டாள்.
இக்கதையைக் கவனத்துடனும், கருத்துடனும் கேட்டுக்கொண்டிருந்த ஹேமத்பந்த் அதன் குறிப்பு நுட்பத்தையும், பொருத்தத்தையும் குறித்துப் பெருமளவு ஆச்சரியத்தில் மூழ்கினார். பாபாவின் இவ்வதிசய லீலையைக் கண்டுகொண்டு உச்சி முதல் உள்ளங்கால் வரை அவர் உருகினார். மகிழ்ச்சிப் பெருக்கால் பொங்கி வழியலானார். அவர்தம் தொண்டை அடைத்தது. ஒரு வார்த்தை கூட அவரால் பேச முடியவில்லை. ஷாமா இந்நிலையில் அவரைநோக்கி, "தங்களுக்கு என்ன நேர்ந்தது? ஏன் மௌனமாகி விட்டீர்கள்? பாபாவின் கணக்கற்ற லீலைகள் இன்னும் எவ்வளவை நான் விவரிக்க வேண்டும்?" என்று கேட்டார்.
இத்தருணம் மத்தியான வழிபாடும், ஆரத்தி சடங்கும், மசூதியில் ஆரம்பமாகிவிட்டன என்பதை அறிவிக்கும் வகையில் மசூதியில் இருக்கும் மணி அடிக்கத் தொடங்கியது. எனவே ஷாமாவும், ஹேமத்பந்த்தும் மசூதியை நோக்கி விரைந்தனர். பாபு சாஹேப் ஜோக் அப்போதுதான் வழிபாட்டைத் துவக்கி இருந்தார். பெண்கள் மசூதியினுள்ளே மேல்தளத்திலும், ஆண்கள் கீழே உள்ள திறந்த வெளித் தாழ்வாரத்திலும் ஆராத்தியைக் கோஷத்துடன் பலமாக மேளங்கள் முழங்கப் பாடிக்கொண்டிருந்தனர். ஷாமா தன் கூடவே ஹேமத்பந்த்தையும் இழுத்துக்கொண்டு மேலே சென்றார். பாபாவுக்கு வலதுபுறம் அவரும், ஹேமத்பந்த் முன்னாலும் அமர்ந்தனர். அவர்களைக் கண்டு ஷாமாவிடமிருந்து கொண்டுவந்த தட்ஷிணையைக் கொடுக்கும்படி ஹேமத்பந்த்திடம் பாபா கேட்டார்.
ஹேமத்பந்த் அவ்விடம் நேரே சென்றிருந்ததாகவும் ஷாமா ரூபாய்க்குப் பதிலாக நமஸ்காரங்களை அளித்ததாகவும் அவர் அங்கேயே நேரில் இருப்பதாகவும் கூறினார். பாபா அதற்கு, "நன்று, தாங்கள் இருவரும் சம்பாஷித்தீர்களா? அப்படி என்றால் நீங்கள் பேசியவை அனைத்தையும் குறித்து எனக்குச் சொல்லுங்கள்" என்றார். மணியோசை, மேளம், கோஷ்டிகானம் இவற்றைப் பொருட்படுத்தாது ஹேமத்பந்த் அவர்கள் பேசியதைக் கூற ஆவலாய் இருந்தார். அதை எடுத்துரைக்கவும் ஆரம்பித்தார். பாபாவும் அதைக் கேட்பதற்கு ஆவலாய் இருந்தார். எனவே அவர் தமது திண்டைவிட்டு நீங்கி முன்னால் சாய்ந்து கொண்டார். தாம் உரையாடியவை எல்லாம் மிகவும் மகிழ்வழிக்கின்றவை. குறிப்பாக கிழவியின் கதை மிகமிக அற்புதமானது என்றும், அதைச் செவிமடுத்ததன் பொருட்டு அவர் பாபாவின் லீலை விவரிக்க இயலாதது என்றும், கதை என்ற புறத்தோற்றத்தில் பாபா தம்மையே உண்மையில் ஆசீவதித்திருப்பதாகத் தாம் நினைப்பதாகக் கூறினார். பின்னர் பாபா "கதை அற்புதமானது, எங்ஙனம் நீங்கள் ஆசீவதிக்கப்பட்டீர்கள்? நான் உங்களிடமிருந்து எல்லாவற்றையும் அறிந்துகொள்ள விரும்புகிறேன். எனவே அவை அனைத்தையும் குறித்து இப்போது சொல்லுங்கள்" என்றார். ஹேமத்பந்த் தாம் சற்றுமுன்னர் கேட்ட தனது உள்ளத்தில் நிலையான முத்திரையை ஏற்படுத்திய கதையை முழுக்க விவரித்தார். இதைக் கேட்டு பாபா மிகவும் மகிழ்ச்சியுற்றார். மேலும் அவரை நோக்கி, "இக்கதை உமதுள்ளத்தில் பதிவுற்றதா? அதன் குறிப்பு நுட்பத்தைப் பிடித்துக் கொண்டீரா?!" என்றார். அவர் "ஆம் பாபா! எனது மனத்தின் பதைபதைப்பு மறைந்தொழிந்தது. எனக்கு உண்மையான சாந்தியும், அமைதியும் கிடைத்தன. நான் உண்மையான வழியை அறியப்பெற்றேன்" என்றார்.
பாபா பின்வருமாறு உரைத்தார். "எனது நிகழ்முறை மிகவும் தனித்தன்மை வாய்ந்தது. இக்கதையை நன்றாக ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆத்மாவின் ஞானத்தை — அனுபூதி — அடைவதற்குத் தியானம் இன்றியமையாதது. அதை இடையறாது பயிற்சித்தீர்களானால் விருத்திகள் — எண்ணங்கள் — அமைதிப்படுத்தப்படும். ஆசைகள் அற்ற நிலையில் இருந்துகொண்டு, நீங்கள் அனைத்துயிர்களிலும் இருக்கின்ற ஆண்டவரைத் தியானியுங்கள். மனது ஒருமுகப்படுத்தப்பட்ட பின்பு நமது குறிக்கோள் எய்தப்பட்டுவிடும். ஞானமெனும் — சத்து — பண்பே திருவுருக்கொண்டது எனவும், உணர்வுத் திரளும் பேரானந்தமுமாகிய எனது உருவமற்ற இயல்பை எப்போதும் தியானம் செய்யுங்கள். இதைச் செய்ய தங்களால் இயலாவிடின் இங்கே இரவும், பகலும் காண்பதைப் போன்று, உச்சி முதல் உள்ளங்கால் வரையுள்ள எனது ரூபத்தைத் தியானம் செய்யுங்கள். இதைத் தாங்கள் செய்துகொண்டே போகும்போது, தங்களின் விருத்திகள் — எண்ணங்கள் — ஒரே இல்லக்கில் குவிக்கப்படும். தியானம் செய்பவர், தியானம், தியானிக்கப்படும் பொருள் இவைகளிலுள்ள வேறுபாடு மறைந்துவிடும். தியானம் புரிபவர் உச்ச உணர்ச்சித்திரளுடன் ஒன்றி, பிரம்மத்துடன் கலந்து ஐக்கியமாய் விடுவார்.
தாய் ஆமை, நதியின் ஒரு கரையிலும் அதன் குட்டிகள் மறுகரையிலும் இருக்கின்றன. அவைகளுக்கு அது பாலோ, உஷ்ணமோ அளிப்பதில்லை. அதனுடைய கண்ணோட்டம் ஒன்றே அவைகளைப் போஷிக்கிறது. குட்டிகள் தமது தாயாரை ஞாபகத்தில் கொள்ளுதலைத் — தியானிப்பதை — தவிர வேறொன்றும் செய்வதில்லை. தாய் ஆமைகளின் கண்ணோட்டம் குட்டிகளுக்கு, காலூன்றிப் பெய்யும் அமுதமழையாகவும், ஊட்டப்பண்பிற்கும், மகிழ்ச்சிக்கும் உள்ள ஒரே தோற்றுவாயாகவும் இருக்கிறது. குருவுக்கும், சீடர்களுக்கும் இடையிலுள்ள உறவும் அத்தகையதேயாகும்".
பாபா இம்மொழிகளை உதிர்த்து முடித்தபின்பு ஆரத்தி கோஷ்டிகானம் முடிவுற்றது. அனைவரும் உரக்க ஒரே குரலில் "சச்சிதானந்த சொரூபியாய் இருக்கிற சத்குரு சாயிநாத் மஹராஜுக்கு ஜெய்" என்று கூவினார்கள்.
அன்பானத வாசகர்களே! நாமும் இந்த நேரம் மசூதியில் கூட்டத்துடன் நின்றுகொண்டிருப்பதாக நினைத்துக் கொள்வோம். ஜய ஜய கோஷத்தில் நாமும் அவர்களுடன் பங்கு கொள்வோம்.
ஆரத்திச் சடங்கு முடிவடைந்த பின்னர் பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. வழக்கம்போல் பாபா சாஹேப் ஜோக் முன்னே வந்து பாபாவை வணங்கியபின் அவரின் உள்ளங்கை நிறையக் கற்கண்டை அளித்தார். பாபா இவை முழுவதையும் ஹேமத்பந்த்தின் கைகளில் திணித்து அவரிடம், "இக்கதையை உள்ளத்தில் இருத்தி நன்றாக நினைவில் வைத்துக் கொள்வீர்களேயானால், தங்களது நிலையும் கற்கண்டைப் போலவே சுவையுள்ளதாகும். உங்களது எல்லா விருப்பங்களும் நிறைவேற்றப்படும். நீங்களும் சந்தோஷமாய் இருப்பீர்கள்" என்று கூறினார். ஹேமத்பந்த் பாபாவின் முன்னால் பணிந்து வணங்கி "இவ்வாறே எனக்கு அனுகூலம் செய்யுங்கள். என்னை எப்போதும் ஆசீர்வதித்துக் காப்பாற்றுங்கள்" என்று கெஞ்சிக் கேட்டுகொண்டார். பாபா அதற்கு "இக்கதையைக் கேட்டு, அதனைக் குறித்துத் தியானித்து, அதன் மெய்க்கருத்தை ஜீரணித்துக் கொள்ளுங்கள். அப்போது உங்களிடமிருந்து தாமே உருவெளிப்படுத்திக் காட்டுகின்ற ஆண்டவரை எப்போதும் ஞாபகமூட்டித் தியானித்துக் கொண்டிருப்பீர்கள்" என்று பதிலளித்தார்.
அன்பான பக்தர்களே! அப்போது ஹேமத்பந்த் கற்கண்டுப் பிரசாதத்தைப் பெற்றார். நாமும் இப்போது கற்கண்டுப் பிரசாதம் அல்லது இக்கதையின் அமிர்தத்தைப் பெறுவோம். அதை நாம் உளநிறைவடையும்வரை பருகுவோம். அதைத் தியானிப்போம். அதை ஜீரணித்துக்கொள்வோம். பாபாவின் அருளினால் வலிமையுடனும், மகிழ்ச்சியுடனும் இருப்போம். ஆமென். பத்தொன்பதாம் அத்தியாயத்தின் இறுதியில் ஹேமத்பந்த் மற்றும் சில விஷயங்களைப் பற்றிக் கூறியிருக்கிறார். அவைகள் கீழே தரப்பட்டுள்ளன.
நமது குணத்தைப்பற்றி பாபாவின் அறிவுரை
பின்வரும் பாபாவின் மொழிகள் பொதுவானவை. விலைமதிக்க முடியாதவை. அவைகள் மனதில் இருத்தப்பட்டு அதற்கேற்பச் செயல்படுத்தப்பட்டால் எப்போதும் உங்களுக்கு நன்மை அளிக்கும். "ஏதேனும் உறவோ, தொடர்போ இல்லாவிடில் இருவரும் எங்கும் செல்வதில்லை, ஏதேனும் ஜீவராசிகளோ, மனிதர்களோ உங்களிடம் வரநேர்ந்தால், அவர்களைப் பண்பின்றி விரட்டிவிட வேண்டாம். அவர்களை நன்றாக வரவேற்று உரியமரியாதையுடன் நடத்துங்கள். தாகமாய் இருப்போர்க்குத் தண்ணீர் கொடுத்தபோதும், பசியாய் இருப்போர்க்கு உணவு அளித்தபோதும், ஆடையற்றவர்களுக்கு ஆடையளித்தபோதும், உட்காருவதற்கும், இளைப்பாறுவதற்கும் உங்களது திண்ணையை மற்றொருவர் அளித்தபோதும் ஸ்ரீஹரி நிச்சயம் மகிழ்வெய்துகிறார்.
யாராவது உங்களிடம் பணம் கேட்டு உங்களுக்கு கொடுக்க மனதில்லாமல் இருந்தால், கொடுக்காதீர்கள். ஆனால் அவரைப் பார்த்து நாய் போன்று குறைக்க வேண்டாம். யாரேனும் நூற்றுக்கணக்கான விஷயங்களை உங்களுக்கு எதிராகக் கூறட்டும், ஆனால் கசப்பாக எவ்விதத்திலும் அவர்களுக்குப் பதிலளிக்கும்படியாக சீற்றங்கொள்ளாதீர்கள்.
இவ்வாறான விஷயங்களை எப்போதும் சகித்துக் கொண்டிருப்பீர்களேயானால், நீங்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைவீர்கள். உலகம் தலைகீழாக மாறட்டும். நீங்கள் இருந்த இடத்திலே இருங்கள். உங்கள் இருப்பிடத்தில் நின்றுகொண்டோ, வசித்துக்கொண்டோ அனைத்து விஷயங்களையும் உங்கள் முன்னர் கடந்து செல்லும் காட்சியாக அமைதியுடன் பார்த்துக்கொண்டிருப்பீர்களாக! உங்களிடமிருந்து என்னைப் பிரிக்கும் வேற்றுமைச் சுவரை இடித்து விடுங்கள். பின்னர் நமது சந்திப்பிற்குரிய சாலையானது தடங்கலின்றியும், திறந்தும் இருக்கும். 'நான்', 'நீ' என்ற வேறுபாட்டுணர்வே குருவிடமிருந்து சீடனைப் பிரிக்கும் தடையரணாகும். அது அழிக்கப்பட்டாலன்றி இரண்டறக் கலத்தல் அல்லது ஐக்கியமாதல் இயலாது.
கடவுளே சகலத்திற்கும் ஒரே உரிமையாளர். 'அல்லா மாலிக்' வேறோருவரும் நமது பாதுகாவலரல்ல. அவர் வேலைசெய்யும் முறைமை அசாதாரணமானது, விலை மதிக்கமுடியாதது. அறிவாலறிய முடியாதது. அவரது சங்கல்பமே ஈடேறும். அவர் நமக்கு வழிகாட்டுவார். நமது உள்ளத்தின் ஆசைகளைப் பூர்த்தி செய்வார். ருணானுபந்தத்தின் — முன்ஜென்மத்தின் உறவு — மூலமாகவே நாம் இணைந்துள்ளோம். ஒருவருக்கொருவர் அன்பாயிருந்தும், செவைசெய்தும் நாம் மகிழ்ச்சியுடனிருப்போம். எவன் வாழ்க்கையில் மிகமிக உயர்ந்த குறிக்கோளை எய்துகிறானோ அவன் இறவாப் புகழுடையவன், மகிழ்ச்சியுடையவன். மற்றவர் எல்லாம் வெறுமனே உளதாயிருக்கிறார்கள் அல்லது மூச்சு விடும்வரை வாழ்ந்திருக்கிறார்கள்.
நல்ல எண்ணங்களின் அவா நிறைவேற்றத்தை ஊக்குவித்தல்
நல்ல எண்ணங்களை சாயிபாபா எங்ஙனம் ஊக்குவித்தார் என்பதை அறிவது சுவாரசியமானது. அன்புடனும், பக்தியுடனும் முழுமையாக உங்களை நீங்கள் அவரிடம் சரணாகதியாக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் எவ்வளவோ விஷயங்களில் அடிக்கடி அவர் உங்களுக்கு உதவி செய்வதைக் காண்பீர்கள். தூக்கத்திலிருந்து எழுந்த உடனே உங்களுக்கு ஏதாகிலும் ஒரு நல்ல எண்ணம் உதிக்கின்ற போது அதையே பின்னர் பகற்பொழுதில் அனுசரித்தால் உங்களது புத்தியின் திறம் மலர்ந்து வெளிப்பட்டு மனது சாந்தியடையும் என்று ஒரு முனிவர் கூறியிருந்தார்.
ஹேமத்பந்த் இதை முயற்சிக்க விரும்பினார். ஒரு புதன்கிழமை இரவு படுக்கும்முன் அவர் சிந்தித்தார். "நாளை வியாழக்கிழமை ஒரு புனிதமான நாள், ஷீர்டியும் மிகவும் புனிதமான இடம். எனவே நான் நாளை முழுவதும் ராமநாமத்தை நினைவூட்டிக் கொள்வதிலும், போற்றுவதிலும் கழிப்பேன்" என்றவாறு அவர் உறங்கினார். அடுத்தநாள் காலை அவர் துயில் நீங்கி எழுந்தபோது, எவ்வித முயற்சியும் இன்றி ராமநாமத்தை நினைவு கூர்ந்தார். தமது காலைக் கடமைகளை முடித்துக்கொண்டபின், மலர்களுடன் பாபாவைக் காணச் சென்றார். தீஷித் வாதாவிலிருந்து புறப்பட்டு, பூட்டி வாதாவை — தற்போதைய சமாதி மந்திர் — கடந்து கொண்டிருக்கும் அதே தருணத்தில் பாபாவுக்கு முன்னால், மசூதியில் ஔரந்காபாத்கர் என்னும் இனிமையாகப் பாடப்படுகின்ற ஓர் அழகிய பாடலைக் கேட்டார்.
அது ஏக்நாத்தின் 'குரு கிருபாஞ்ஜன் பாயோ மேரே பாயி..!' என்ற பாடல், அப்பாடலில் குருவின் கடாஷம் என்னும் ரூபத்தில் அஞ்சனம் அவருக்குக் கிடைத்தது என்றும், அது அவரின் பார்வையைத் திறந்துவிட்டு அவருக்கு ராமரை அகத்தும், புறத்தும், உறக்கத்திலும், கனவிலும், விழிப்பு நிலையிலும், எவ்விடத்தும் காணும்படி செய்தது என்றும் கூறினார். எவ்வளவோ பாடல்கள் இருக்கின்றன. பின்னர் ஏன் இக்குறிப்பிட்ட பாட்டு, பாபாவின் பக்தரான ஔரந்காபாத்கரினால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். பகற்பொழுதில் ராமநாமத்தை இடைவிடாமல் பாடவேண்டும் என்ற ஹேமத்பந்த்தின் தீமானத்திற்கு ஊட்டமளிக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்யப்பட்டதல்லவா தனித்திறம் வாய்ந்த இந்நிகழ்வுப் பொருத்தம்!
உபதேஷங்களின் விதங்கள்
- அவதூறு பேசுவோர் — புறங்கூறுவோர் — கண்டிக்கபடுதல்
அறிவுரை வழங்குவதற்கு, சாயிபாபாவிற்கு எத்தகைய சிறப்பான இடமோ, குறிப்பிட்ட நேரமோ தேவை இருக்கவில்லை. சந்தர்ப்பம் நேரிட்ட போதெல்லாம் தாராளமாக அவற்றை அவர் வழங்கினார். ஒருமுறை பாபாவின் பக்தனொருவன் வேறொருவரை அவர் அறியாதபடி மற்ற ஜனங்களின் முன்னிலையில் திட்டினான். தனது சகோதரரின் நன்மைகளையெல்லாம் புறத்தொதுக்கி, அவரின் குறைபாடுகள் குறித்து கேட்போர்கள் அருவருப்படையும்படியாக பழித்துப் பேசினான்.
அவசியமின்றி மற்றவர்களைப் புறங்கூறுவது மக்களுக்குரிய ஒரு மனப்பாங்காக இருப்பதைப் பொதுவாக நாம் காண்கிறோம். முனிவர்கள் இந்தப் புறங்கூறுதலை வேறொரு கோணத்தில் இருந்து நோக்குகிறார்கள். அழுக்கை நீக்குவதற்குப் பல வழிகள் இருக்கின்றன. மண், நீர், சோப்பு முதலானவை. ஆனால் புறங்கூறுபவனுக்கோ அவனுக்கே உரித்தான வழி இருக்கிறது. அவன் மற்றவர்களது அழுக்கை — குறைபாடுகளை — தனது நாவினால் அகற்றி நீக்குகிறான். ஒருவகையில் அவன் தன்னால் திட்டப்படுபவனுக்கே உதவுகிறான். இதற்காக அவனுக்கு நன்றி செலுத்தவேண்டும். புறங்கூறுபவனைத் திருத்துவதற்கு சாயிபாபாவுக்கு அவருக்கே உரியதான வழி இருக்கிறது.
அவர் தமது நிறைபேரறிவினால் அந்த புறம் கூறுவான் செயலை அறிந்திருந்தார். மதியம் அவர் அவனை லெண்டித் தோட்டத்துக்கருகில் பார்த்தபோது, வேலிக்கருகில் இருந்த மலத்தை உண்ணும் பன்றியை அவனுக்குச் சுட்டிக்காண்பித்து, "பார், அது எத்தகைய சுவைமணச் சிறப்புடன் மலத்தைப் பேராவலுடன் விழுங்குகின்றது, உனது நடத்தையும் அத்தகையதே. உனது தோழர்களை நீ மனதாரத் திட்டித்தீர்த்துகொண்டே இருக்கிறாய். பல்வேறு நல்வினைகளைச் செய்ததன் பலனாக நீ மனிதனாகப் பிறந்திருக்கிறாய். இவ்வாறு நீ நடந்துகொண்டால், ஷீர்டி உனக்கு எவ்விதத்திலாவது உதவி செய்யுமா?" என்று கேட்டு அவனுக்கு அறிவுரை வழங்கினார். அப்பக்தன் இப்பாடத்தை உள்ளத்தில் ஏற்றுக்கொண்டு சென்றான் என்று சொல்லத் தேவையில்லை.
இவ்விதமாக பாபா அவசியம் நேரிட்டபோதெல்லாம் அறிவுரைகளை வழங்கிக்கொண்டே இருந்தார். இவைகள் நமது மனத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதன்படி செயலாற்றப்பட்டால், ஆன்மீக இலட்சியம் — அனுபூதி — வெகுதொலைவில் இல்லை. ஏன் ஹரி — கடவுள் — இருந்தால் அவர் எனது கட்டிலிலேயே உணவளிப்பார் என்னும் ஒரு பழமொழி இருக்கிறது. உணவு, உடை விஷயத்தில் மட்டுமே இப்பழமொழி உண்மை. ஆனால் இதை நம்பி எவனாகிலும் அமைதியாக அமர்ந்துகொண்டு, ஆன்மீக விஷயங்களில் ஒன்றும் செய்யாமல் இருந்தால் அவன் படு வீழ்ச்சி எய்துவான். ஆன்ம உணர்வடைய தன்னைத்தானே தனக்கு இயலும், உச்ச அளவு செயலில் முனைவித்துக் கொள்ளவேண்டும். எவ்வளவு அதிகம் அவன் பெருமுயற்சி கொள்கிறானோ, அவ்வளவு அதிகம் அவனுக்கு நல்லது.
பாபா தாம் நிலம், காற்று, நாடு, உலகம், ஒளி, மோஷம் ஆகியவை எங்கணும் நிறைந்திருக்கும் சர்வவியாபி என்றும் தாம் ஒரு வரையறை உடையவரல்ல என்றும் கூறினார். பாபா மூன்றரை முழ உயரமுள்ள அவரின் உடம்பே என்று எண்ணுபவர்களின் தவறான கருத்தை நீக்குதற்பொருட்டாக அவர் இந்த ரூபத்தில் தாமே அவதரித்துக் கொண்டார். இரவும் பகலும் எந்த பக்தனாவது பூர்ண ஆத்மசரணாகதியுடன் அவர்மீதே தியானம் புரிவானாயின், அவன் அவருடன் இரண்டற இனிப்பும் - சர்க்கரையும் போன்றும், அலையும் - கடலும் போன்றும், கண்ணும் - ஒளியும் போன்றும் முழுமையான ஐக்கியத்தைத் துய்த்துணர்வான். பிறப்பு - இறப்பு என்னும் சுழலை ஒழித்து அமைதியுற வேண்டியவன், நேர்மையான வாழ்க்கை நடத்த வேண்டும். அமைதியாகவும், கட்டுப்பட்ட மனத்துடனும் இருக்க வேண்டும். யாரையும் புண்படுத்தும் படியாக வெடுக்கென்று பேசக்கூடாது. எப்போதும் நல்வினைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். தனது கடமைகளைச் செய்யவேண்டும். தானே உள்ளத்தாலும், உயிராலும் அவரிடம் சரணாகதி அடையவேண்டும். அதன் பின்னர் அவன் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. அவரையே முழுமையாக நம்புபவனும், அவரது லீலைகளைக் கேட்டு அதையே விவரமாக எடுத்துக் கூறுபவனும், வேறெதைப் பற்றியும் சிந்திக்காதவனும் ஆத்மானுபூதியை அடைவது உறுதி.
பாபா தமது பெயரையே நினைவில் வைக்கும்படியும் தம்மிடமே சரணாகதி அடையும்படியும் பலரைக் கேட்டுக்கொண்டார். ஆனால் தாங்கள் யார்? என்று — நான் யார் விசாரணை — அறிய விரும்பியவர்களுக்கு ஸ்வரணத்தையும்— கற்றல் , மனனத்தையும்— தியானம் — அறிவுறுத்தினார். சிலரைக் கடவுள் பெயரை நினைவில் வைத்துக் கொள்ளும்படியும், சிலரை அவரது லீலைகளைக் கேட்டுக் கொண்டிருக்கும்படியும், சிலரைத் தமது பாதபூஜை செய்யும்படியும், சிலரை அத்மாத்ய ராமாயணம், ஞானேஸ்வரி, மற்றும் பிற திருமுறை நூல்களைப் படிக்கும்படியும் அறிவுறுத்தினார். சிலரைத் தமது பாதத்தடியில் அமரும்படி இருத்தி வைத்தார். சிலரைக் கண்டோபா கோவிலுக்கு அனுப்பினார். சிலரை விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களை ஜெபம் செய்யும்படியும், மற்றும் சிலரை சாந்தோக்ய உபநிஷதம், கீதையைக் கற்கும்படியாகவும் கூறினார். அவர்தம் உபதேஷங்களுக்கு எவ்வித வரையறையோ, கட்டுப்பாடோ கிடையாது. சிலருக்கு அதை நேரிடையாகவே கொடுத்தார். மற்றும் சிலருக்கு கனவில் காட்சிகள் மூலம் அளித்தார்.
குடிப்பழக்கத்துக்கு அடிமையாய் இருந்த ஒருவரின் கனவில் தோன்றி அவரது மார்பில் உட்கார்ந்து அழுத்தி, மதுவைத் தொடுவதில்லை என்று அவர் சத்தியம் செய்துகொடுத்தபின்பு அவரை விட்டகன்றார். சிலருக்கு கனவில் 'குரு பிரம்மா... குரு விஷ்ணு....' போன்ற மந்திரங்களை விளக்கினார். ஹடயோகம் பழகிக்கொண்டிருந்த பக்தர் ஒருவருக்கு ஹடயோகப் பயிற்ச்சியை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்றும், அமைதியுடன் அமர்ந்து பொறுமையாய் — சபூரி — இருக்கவேண்டும் என்றும் சொல்லியனுப்பினார். அவரது எல்லா வழிகளையும், செயல் முறைகளையும் விவரிக்க இயலாது. சாதாரண உலக விவகாரங்களில் தமது செயல்களால் முன் உதாரணகள் அமைத்தார். அவைகளில் ஒன்று கீழே தரப்பட்டிருக்கிறது.
உழைப்புக்குக் கூலி
ஒருநாள் மத்தியான வேளையில் ராதாகிருஷ்ணமாயின் வீட்டிற்கு அருகில் பாபா வந்து, "எனக்கு ஒரு ஏணி கொண்டுவாருங்கள்" என்று கூறினார். சிலர் அதைக் கொண்டுவந்து பாபா குறிப்பிட்டபடி அதை ஒரு வீட்டுச் சுவரில் சாய்த்து வைத்தனர். வாமன் கோந்த்கருடைய வீட்டுக் கூரையின் மீது ஏறி, ராதாகிருஷ்ணமாயின் கூரையின் மீது நடந்து சென்று, மற்றொரு மூலையில் இருந்து கீழே இறங்கினார். பாபா எந்தக் குறிக்கோளுடன் இறந்தார் என்பதை ஒருவராலும் அறிய இயலவில்லை. மலேரியா காய்ச்சலால் ராதாகிருஷ்ணமாயி நடுங்கிக் கொண்டிருந்தாள். அதை ஒட்டி விரட்டுதற்பொருட்டே அவர் மேலே ஏறியிருக்கலாம். கீழே இறங்கியவுடனே ஏணியைக் கொண்டுவந்தவர்களுக்கு பாபா இரண்டு ரூபாய் கொடுத்தார். சிலர் தைரியத்துடன் பாபாவை ஏன் அவர் அவ்வளவு அதிகம் பணம் கொடுத்தார் எனக் கேட்டனர். அதற்கு அவர் ஒருவரும் மற்றவர்களின் உழைப்பை வெறுமையாகக் கொள்ளக்கூடாது என்று கூறினார். உழைப்பவனுக்கு அவனுக்கு உரியவைகள் ஒழுங்காகவும், தாராளமாகவும் கொடுக்கப்பட வேண்டும். பாபா அறிவுறுத்திய இக்கொள்கை பின்பற்றப்பட்டால், அதாவது உழைப்பிற்கான கூலி ஒழுங்காகவும், திருப்திகரமாகவும் அளிக்கப்பட்டால் தொழிலாளர்கள் இன்னும் சிறப்பாக வேலை செய்வார்கள். தொழிலாளர்களும், முதலாளிகளும் இலாபம் அடைவார்கள். இழுத்து மூடுவதற்கோ வேலை நிறுத்தங்களுக்கோ இடமேயில்லை. தொழிலாளி, முதலாளி மனஸ்தாபமும் இல்லை.
ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
இவ்வத்தியாயத்தில் காகா சாஹேப் தீஷித்தின் வேலைக்கரப் பெண்ணால் எங்ஙனம் தாஸ்கணுவின் பிரச்சனைக்கு விடை காணப்பட்டது என்பதை ஹேமத்பந்த் விவரிக்கிறார்.
முன்னுரை
சாயி — கடவுள் — முதலில் அருவமாய் இருந்தார். பக்தர்களுக்காக ஒரு ரூபத்தை அவர் புனைந்து கொண்டார். பிரபஞ்சம் என்னும் பெரும் நாடகத்தில் மாயை என்ற நடிகையின் உதவியுடன் அவர் நடிகரின் பாத்திரத்தை ஏற்று நடித்தார். நாம் சாயியை— கடவுளை — ஞாபகப்படுத்திக் கொள்வோம். அகக்காட்சியாக உருவாக்கிக் காண்போம். ஷீர்டிக்குச் சென்று மதிய ஆரத்திக்குப் பின் உள்ள நிகழ்ச்சிகளைக் கவனத்துடன் நோக்குவோம். ஆரத்திச் சடங்கு முடிந்த பின்னர் சாயிபாபா மசூதிக்கு வெளியில் வந்து அதன் விளிம்பில் நின்றுகொண்டு, மிகுந்த பட்சமும் அன்பும் கூடிய பார்வைகளுடன் பக்தர்களுக்கு உத்தியை வினியோகிப்பது வழக்கம். பக்தர்களும் அதேயளவு உணர்ச்சிவேகத்துடன் அவருடைய பாதங்களைப் பற்றிப் பிடித்துக்கொண்டனர். நின்றுகொண்டும், அவரை உற்று நோக்கிக்கொண்டும் உதிமழையை மகிழ்ந்தனுபவித்தார்கள். பாபா கைநிறைய உதியை பக்தர்களின் கைகளில் கொடுத்து அவர்களது நெற்றியில் தமது கைவிரல்களால் பூசிவிட்டார். அவர் தம்முடைய இதயத்தில் அவர்களுக்காகக் கொண்டிருந்த அன்பு எல்லையற்றது.
பிறகு அவர் பக்தர்களை நோக்கிப் பின்வருமாறு அளவளாவினார். "ஓ! பாவ் சாப்பிடச் செல்லும், அண்ணா நீர் உமது இருப்பிடத்திற்குச் செல்லும். ஓ! பாபு உமது உணவை மகிழ்ச்சியுடன் சாப்பிடும்". இவ்வாறாகவே ஒவ்வொரு பக்தரையும் அழைத்துப் பேசி அவர்களை வீட்டிற்கு அனுப்பினார். இப்போதும்கூட இக்காட்சிகளை உங்களது கற்பனையைத் தட்டிவிடுவதன் மூலம் நீங்கள் மகிழ்ந்து அனுபவிக்கலாம். நீங்கள் அவைகளைக் கண்டு இன்புறலாம். இப்போது சாயியை அவரது பாதங்களிலிருந்து முகம்வரை நமது மனத்தில் உருவகப்படுத்தித் தியானிப்போம். அவர் முன்னிலையில் தாழ்மையுடனும், அன்புடனும், மரியாதையுடனும் வீழ்ந்து பணிந்துவிட்டு இவ்வத்தியாயத்தின் கதைக்குத் திரும்புவோம்.
ஈசா உபநிஷதம்
தாஸ்கணு ஒருமுறை ஈசா உபநிஷதத்துக்கு மராத்திய விளக்க உரை எழுத ஆரம்பித்தார். முதலில் இவ்வுபநிஷதத்தைப் பற்றிய சுருக்கமான கருத்து ஒன்றை மேற்கொண்டு தொடரும்முன் கூறுவோம். வேதசம்ஹிதையின் மந்திரங்களில் அது உள்ளடக்கப்பட்டிருப்பதால் அது மந்திரோபனிஷத் என்று அழைக்கப்படுகிறது. வாஜஸனேய சம்ஹிதையின் — யஜூர் வேதம் — இறுதியான அல்லது நாற்பதாவது அத்தியாயத்தை இணைத்து உருவாக்குவதால் வாஜஸனேய சம்ஹிதோபனிஷத் என்று அழைக்கப்படுகிறது. பிராம்மணங்களிலும், ஆரண்யங்களிலும் — மந்திரங்கள், வைதீகச் சடங்குகள் பற்றி விளக்கும் விக்கியானங்கள் — காணப்படும் வேதசம்ஹிதைகளில் உள்ளடக்கப்பட்டிருப்பதால், இதுவே மற்ற எல்லா உபநிஷதங்களையும் விடச் சிறப்பானது என்று கருதப்படுகிறது. இது மட்டுமன்று, மற்ற உபநிஷதங்கள் எல்லாம் ஈசா உபநிஷத்தில் சுருக்கமாகக் கூறப்பட்டிருக்கும் உண்மைகளைப் பற்றிய வியாக்கியானங்களேயாகும் என்று எண்ணப்படுகிறது. உதாரணமாக உபநிஷதங்களிலேயே பெரிதான பிருஹதாரண்யக உபநிஷதமாவது ஈசா உபநிஷத மூலத்தோடு இணைந்த விளக்கவுரை என்று பண்டிட் சத்வலேகர் கருதுகிறார்.
பேராசிரியர் ரானடே கூறுகிறார், "ஈசா உபநிஷதம் ஒரு சிறிய உபநிஷதமேயாகும். இருப்பினும் அசாதாரணமாகத் துளைத்து உட்செல்லும் ஆழ்ந்த நுண்ணறிவுத் திறத்தைக் காட்டுகின்ற பல குறிப்புக்களையும் அது பெற்றிருக்கின்றது. பதினெட்டே செய்யுட்களுள்ள குறுகிய வட்டப்பரப்பில், ஆத்மாவைக் குறித்து மதிப்பு மிகப்பெற்ற அகநிலை உணர்வு சார்ந்த வர்ணனையை, தீயன செய்யத்தூண்டும் மயக்கங்களுக்கும், கவலைகளுக்கும் இடையில் கலக்கமுறாத முழுநலம் வாய்க்கப்பட்ட கர்மயோகம் என்னும் போதனைத் தொகுப்பிற்கு முன்னோடியான அறிவிப்பையும், இறுதியாக ஞானம் - கர்மம் இவைகளின் தகுதிகளைப் பற்றிய கருத்து முரண்பாடு நீக்கத்திற்குரிய ஒரு விளக்கத்தையும் அளிக்கிறது. ஞானம் - கர்மம் என்ற எதிரிடைகளின் வாதப் பொருத்தமுடைய கூட்டிணைப்பே உபநிஷத்தின் ஆணிவேரில் உறைந்திருக்கும் மிகமிக மதிப்புள்ள கருத்தாகும். உயர்நிலை இணைப்பாக்கத்தின்போது பேதம் துடைதழிக்கப்படுகிறது. அவர் மற்றுமோர் இடத்தில் நீதி, மறை மெய்மை, நுண்பொருள் கோட்பாட்டியல் இவைகளின் ஒருமித்த கலவையே ஈசா உபநிஷதத்தின் பாடல்கள் என்றும் கூறுகிறார்.
மேலே தரப்பட்ட இவ்வுபநிஷதத்தைப் பற்றிய சுருக்கமான விளக்கங்களால், வட்டாரப் பேச்சு மொழியில் இதனை மொழி பெயர்ப்பது என்பதும் சரிநுட்பமான அதே அர்த்தத்தைக் கொணர முற்படுவதும் எவ்வளவு கடினமானது என்று எவரொருவரும் அறிய இயலும். தாஸ்கணு இதைச் செய்யுள் - செய்யுளாக மராத்திய 'ஒவி' யாப்பு வகையில் மொழிபெயர்த்தார். ஆயினும் உபநிஷதத்தின் சாராம்சத்தை அவர் புரிந்துகொள்ளாததால் தமது செயல்நிறைவு பற்றி அவர் திருப்தி கொள்ளவில்லை. மன நிறைவடையாதவராய் சில அறிஞர்களைத் தமது சந்தேகங்கள் பற்றியும், கஷ்டங்களைப் பற்றியும் கலந்து ஆலோசித்து அவர்களுடன் அதைப்பற்றி மிகவும் விரிவாக விவாதித்தார். அவர்கள் அவைகளுக்கு விடைகாணவும் இல்லை, அறிவாராய்ச்சி முறை சார்ந்தோ, திருப்தியுடையதோவாகிய விளக்கமும் அளிக்கவில்லை. எனவே தாஸ்கணு இதனைப் பற்றிச் சிறிது மன உளைச்சலுடன் இருந்தார்.
சத்குரு ஒருவரே விளக்கமளிக்க உரிமையும் தகுதியும் உடையவர்
நாம் பார்த்தவிதமாக இவ்வுபநிஷதம் வேதங்களின் சாராம்சமாகும். அது ஆத்மானுபூதியின் விஞ்ஞானமுமாகும். அது பிறப்பு, இறப்பு என்னும் கட்டுக்களை அறுத்தெறியக்கூடிய, நம்மை விடுவிக்கின்ற அரிவாள் அல்லது ஆயுதமாகும். எனவே, தாமே ஆத்மானுபூதி அடையப்பெற்ற ஒருவரே உபநிஷதத்திற்கு உண்மையான, சரியான விளக்கம் அளிக்கமுடியும் என்று அவர் நினைத்தார். தாஸ்கணுவை ஒருவரும் திருப்திப்படுத்த இயலாதபோது, சாயிபாபாவை இது விஷயமாக அவர் கலந்து ஆலோசிக்க முடிவுசெய்தார். ஷீர்டிக்குப் போக அவருக்கு ஒரு சந்தர்ப்பம் நேரிட்டபோது சாயிபாபாவை அவர் கண்டார். அவர்முன் வீழ்ந்து பணிந்தார். ஈசா உபநிஷத்தைப் பற்றிய தனது கஷ்டங்களைத் தெரிவித்து, அதைப் பற்றிய சரியான தீர்வு தரும்படி அவரை வேண்டிக்கொண்டார். சாயிபாபா அவரை ஆசீர்வதித்துக் கூறியதாவது, "நீ கவலைப்பட வேண்டியதில்லை. இவ்விஷயத்தைப் பற்றி எவ்விதக் கஷ்டமும் இல்லை. நீ வீட்டிற்குத் திரும்பிப் போகும்வழியில், விலேபார்லேயில் காகாவின் — காகா சாஹேப் தீஷித்தின் — வேலைக்காரி உனது சந்தேகங்களைத் தீர்த்து வைப்பாள்".
பாபா இதைச் சொல்லும்போது அங்கிருந்து இதனைக் கேட்டுக்கொண்டிருந்த மக்கள் பாபா வேடிக்கை செய்கிறார் என்றும், "கல்வி அறிவற்ற வேலைக்காரி ஒருத்தி இவ்வாறான சிக்கல்களை எங்ஙனம் தீர்த்துவைக்க முடியும்?" என்றும் சொல்லிக்கொண்டனர். ஆனால் தாஸ்கணுவோ வேறுவிதமாக எண்ணினார். பாபா எதைப் பேசியபோதும் அவை உண்மையில் நிறைவேறியே தீரும். பாபாவின் சொல்லே பிரம்மத்தின் — ஆண்டவரின் — ஆணைப்பத்திரமாகும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
காகாவின் வேலைக்காரி
பாபாவின் மொழிகளில் முழுமையான நம்பிக்கைகொண்டு ஷீர்டியை விட்டு அவர் விலேபார்லேவிற்கு — பம்பாயின் புறநகர்ப்பகுதி — வந்து காகா சாஹேப் தீஷித்துடன் தங்கினார். அடுத்தநாள் காலை தாஸ்கணு மகிழ்வாக ஒரு சிறுதுயில் கொண்டிருக்கும்போது — சிலர் அவர் வழிபாடு செய்துகொண்டிருக்கும்போது என்று கூறுகின்றனர் — ஒரு ஏழைப் பெண் அழகான பாடல் ஒன்றை இனிமையான குரலில் பாடிக்கொண்டிருந்தாள். பாடலின் உட்பொருளாவது:
"கருஞ்சிவப்புக் கலர் உடை, அது எவ்வளவு நன்றாய் இருக்கிறது. அதன் எம்ராய்டரி வேலை எவ்வளவு நேர்த்தியாய் இருக்கிறது. அதன் முந்தாணையும், பார்டரும் எவ்வளவு அழகாய் இருக்கிறது" என்பதாக..!
அவரை வெளியே ஈர்க்கும் அந்த அளவிற்கு அப்பாடலை அவர் விரும்பினார். வெளியே வந்து பார்த்தபோது, காகா சாஹேபின் வேலைக்காரனான நாம்யாவின் சகோதரியான ஒரு சிறுமியால் அது பாடப்பெற்றதைக் கண்டார். அப்போது அச்சிறுமி பாத்திரம் கழுவிக்கொண்டு இருந்தாள். அவளது மேனியில் கிழிந்த உடை ஒன்றே இருந்தது. அவளது வறுமையான நிலையையும், அவளது களிப்பான உளப்பாங்கையும் கண்டு தாஸ்கணு அவளுக்காகப் பரிதாபப்பட்டார். அடுத்தநாள் ராவ்பகதூர், ப்ரதான் என்பவருக்கு ஒரு ஜதை வேஷ்டி கொடுத்தபோது, அவரை தாஸ்கணு அந்த ஏழைச் சிறுமிக்கு புதிய உடை வங்கி அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். ராவ் பகதூரும் அழகிய பாவாடைத் தாவணி ஒன்றை வாங்கிவந்து அவளுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்.
பசியால் வாடும் ஒருவனுக்கு, அதிஷ்டவசமாக உண்பதற்கு நல்ல விருந்து கிடைக்கப்பெற்றதைப் போன்றே, அவளது களிப்பு கரைகாணாது போயிற்று. மறுநாள் புத்தாடையை அவள் அணிந்துகொண்டாள். பெருமகிழ்ச்சியுடனும், கொண்டாட்டத்துடனும் சுற்றிச்சுற்றி ஓடினாள். சுழன்று நடனம் ஆடினாள். மற்றச் சிறுமிகளுடன் ஃபுகடி — கோலாட்டம் — விளையாடி அவர்களை எல்லாம் வென்றாள். அதற்கடுத்த நாள் அதை வீட்டிலேயே வைத்துவிட்டுத் தனது பழைய கந்தலையே அணிந்து வந்தாள். ஆனால் முன்தினம் காணப்பெற்ற மாதிரியே அதேயளவு ஆனந்தத்துடன் காணப்பட்டாள். இதைக் கண்ணுற்ற தாஸ்கணுவின் இரக்கவுணர்ச்சி, புகழ்ச்சியாக மாறியது. அச்சிறுமி ஏழையானதால் கந்தலையே அணியவேண்டும். ஆனால் தற்போது அவளிடம் ஒரு புதிய உடை இருக்கிறது. அதை அவள் பத்திரப்படுத்தி இருக்கிறாள். பழைய கந்தலையே உடுத்தியும், எவ்வளவு துன்பமோ, மனச்சோர்வோ இல்லாதபடி அவற்றை அவள் தாங்கிக் கொண்டாள்.
இவ்வாறாக நமது மனத்தின் இன்ப, துன்ப உணர்ச்சிகள் எல்லாம் நமது மனத்தின் பாங்கைப் பொறுத்தே இருக்கின்றன என்பதை அவர் உணர்ந்தார். இந்நிகழ்ச்சியைப் பற்றியே அவர் ஆழ்ந்து, ஆராய்ந்து கடவுள் முன்னும், பின்னும், எல்லாத் திசைகளிலும், எல்லாப் பொருட்களிலும் சூழ்ந்து ஊடுருவி இருக்கிறார் என்றும், கடவுளால் அவனுக்கு வழங்கப்பட்டவை அனைத்தும், உறுதியாக அவனது நன்மைக்கேயாகும் என்னும் மறக்கவியலாத திட நம்பிக்கையுடன் கடவுளால் தனக்கு அருளப்படவைகள் அனைத்தையும் மகிழ்ந்து அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் உணர்ந்தார்.
இக்குறிப்பிட்ட சம்பவத்தில் ஏழைச் சிறுமியின் வறுமை நிலை, அவளது கந்தல் உடை, புதுப்பாவாடைத் தாவணி, அதை அன்பளிப்பாகக் கொடுத்தவர், அன்பளிப்பைப் பெற்றவள், அதனை ஏற்றுக்கொள்ளுதல் எல்லாம் கடவுளின் கூறுகளே. அவரே எல்லாவற்றிலும் ஊடுருவிப் பார்த்து இருக்கிறார் என்று தாஸ்கணு உபநிஷதப் பாடத்தின், நடைமுறைச் சான்று விளக்கத்தினை இவ்விடத்தில் பெற்றார். எது நேரினும் அது கடவுளின் ஆணையே என்றும், கடைமுடிவாக அது நமக்கு நன்மை அளிக்கும் என்று தமக்குரியதானவைகளிடம் திருப்தி கொள்ளுதல் என்பதுமாகும்.
தந்நேரில்லா போதனைமுறை
மேற்கூறிய நிகழ்ச்சியிலிருந்து பாபாவின் வழிகள் தனித்தன்மை வாய்ந்தவை, மற்றவற்றிநின்றும் மாறுபாடானவை என்பதை வாசகர்கள் காண்பார்கள். பாபா ஒருபோதும் ஷீர்டியை விட்டுச் சென்றதில்லையாயினும் அவர் சிலரை மச்சிந்த்ரகட்டுக்கும், சிலரை கோலாப்பூர் அல்லது ரேலாப்பூருக்கும் சாதனைகள் பயில்வதற்கு அனுப்பினார். சிலருக்குத் தமது வழக்கமான ரூபத்தில் தோன்றினார். சிலருக்கு விழிப்பு நிலையிலோ அல்லது கனவிலோ, இரவிலோ அன்றிப் பகலிலோ தோன்றி அடியவர்களுக்கு பாபா உபதேசிக்கக் கையாண்ட எல்லா வழிகளையும் விவரிப்பதென்பது இயல்லாத காரியம்.
இக்குறிப்பிட்ட விஷயத்தில் அவர் தாஸ்கணுவை விலேபார்லேக்கு அனுப்பினார். அங்கே வேலைக்காரியின் மூலம் அவரது பிரச்னையை பாபா தீர்த்து வைத்தார். தாஸ்கணுவை வெளியே அனுப்பியிருக்க வேண்டியதில்லை. நேரிடையாகவே பாபா அதை அவருக்குக் கற்பித்து இருக்கலாம் என்று கூறுவோர்க்கு பாபா சரியான அல்லது மிகச்சிறந்த வழியையே பின்பற்றினார் என்று நாம் கூறுகிறோம். அல்லாவிடில் ஏழைச் சிறுமியும், அவளது புடவையும் கடவுளால் வியாபிக்கப்பட்டு இருக்கிறது என்னும் பெரியதோர் பாடத்தினை தாஸ்கணு எவ்வாறுதான் கற்றிருக்க முடியும்! இவ்வுபநிஷத்தைப் பற்றிய மற்றொரு உயர்ந்த பகுதியைக் கூறி இவ்வத்தியாயத்தை முடிக்கிறேன்.
ஈசாவின் நீதி
ஈசா உபநிஷதத்தின் முக்கிய அம்சங்களுள் ஒன்று அது அளிக்கும் நீதிபோதனைகள்.
நுண்பொருள் கோட்பாட்டியல் நிலைகளைக் குறித்து உபநிஷதங்களில் காணும் முன்னேற்றத்தை அடிப்படையாகக்கொண்டே நிச்சயமாக உபநிஷதத்தின் நீதியும் அமைக்கப்பட்டுள்ளது. உபநிஷதத்தின் ஆரம்ப மொழிகளே கடவுள் எங்கும் வியாபித்திருக்கிறார் என்பதை நமக்கு அறிவிக்கின்றன. இந்த நுண்பொருள் கோட்பாட்டியல் நிலையென்று தெளியப்பட்ட முடிவிலிருந்து கிளைத்தெழும் பிறிதோர் முடிவாக அது அளிக்கும் நீதிபோதனையாவது, அவரே யாண்டும் நிலவியுள்ளார். தனக்குக் கடவுளால் அருளப்பட்ட யாவையும் நிச்சயமாக நன்மைக்காகவே ஆனது என்னும் உறுதியான நம்பிக்கையில் கடவுள் தனக்கு அருளியவற்றை மகிழ்ந்து அனுபவிக்க வேண்டும் என்பதாகும்.
பிறர் பொருளைக் கண்டு பேராசைப்படுவதை உபநிஷதம் தடுக்கிறது என்பது இயல்பாகவே தொடர்ந்து அறியப்படுகிறது. யாதாகினும் கடவுளின் ஆணையே என்றும் எனவே, அது நமக்கு நன்மையளிக்கும் என்ற நம்பிக்கையில் நமக்குள்ளவைகளைக் கொண்டு நாம் திருப்தியடையவேண்டும் என்று நாம் பொருத்தமாகவே அறிவுறுத்தப்படுகிறோம்.
மற்றுமொரு நீதிபோதனை யாதெனின், சாஸ்திரங்களில் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த கர்மங்களை ஆண்டவரது சங்கல்பம் என்று அமைவடக்கத்துடன் ஏற்றுக்கொண்டு, அந்த நம்பிக்கை உள்ள மனப்பாங்குடன் மனிதன் தனது வாழ்நாளை எப்போதும் கர்மம் செய்துகொண்டிருப்பதிலேயே கழிக்கவேண்டும் என்பதேயாகும். செயலின்மை என்பது இவ்உபநிஷதத்தின்படி, நமது ஆன்மாவை அரிக்கும் புழுவாகும். மனிதன் இம்முறைப்படி கர்மங்கள் புரிவதில் தனது வாழ்நாளைக் கழிக்கும்போது மட்டுமே நிஷ்காம்யம் என்கிற நிலையை எய்துவதை எண்ண இயலும்.
முடிவாக அதன் வாசகங்கள் கூறுவதாவது "ஆத்மாவினுள் அனைத்து ஜீவராசிகளையும், அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் ஆத்மாவையும் காண்பவன் - உண்மையில் அனைத்து ஜீவராசிகளும், மற்றும் உளதாய் இருக்கும் ஒவ்வொரு பொருளும் ஆத்மாவாகவே ஆகிவிட்ட அப்பேர்ப்பட்ட மனிதன் எங்ஙனம் மயக்க நிலைக்கு ஆட்பட இயலும்? ஆழ்ந்த மனத்துயரமடைவதற்கு அவனுக்கு அடிப்படைக் காரணம் யாதாக இருக்க முடியும்?
வெறுப்புணர்ச்சி, சித்தத்தின் மயக்கம், ஆழ்ந்த மனத்துயரம், யாவும் ஆத்மாவை யாண்டும் தரிசிக்க இயலாத நமது பண்பிலிருந்தே கிளம்புகின்றன. ஆயின் எவனொருவன் அனைத்துப் பொருட்களிலும் ஏகத்தையே — ஒருமையையே — தெளிவாக உணர்கிறானோ, எவனுக்கு ஒவ்வொரு பொருளும் ஆத்மாவாகிவிட்டதோ, அதே உண்மையின் காரணமாக மனித இனத்தின் குறைபாடுகளினால், இனி ஒருபோதும் பாதிக்கப்படாதவனாகின்றான்".
ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
• அனந்தராவ் பாடண்கர்
• பண்டாரீபுரத்து வக்கீல்
ஆகியோரின் கதைகள்.
இவத்தியாயத்தில் விநாயக் ஹரிச்சந்திர டாகூர், புனேவைச் சேர்ந்த அனந்தராவ் பாடண்கர், பண்டரீபுரத்தைச் சேர்ந்த ஒரு வக்கீல் ஆகியோரின் கதைகளை ஹேமத்பந்த் விவரிக்கிறார். இந்தக் கதைகளெல்லாம் நிறைந்த சுவையானவை. அவைகளை மிகுந்த கவனத்துடன் கற்றுக் கிரகித்துக் கொண்டால் வாசகர்களை அது ஆன்மீகப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.
முன்னுரை
முற்பிறவிகளில் சேகரித்த நல்வினைகள் என்ற ரூபத்திலுள்ள நமது நல்ல அதிஷ்டமே முனிவர்களின் கூட்டுறவை நாம் பெறுவதற்கு அடிகோலி, அதனால் பயன் எய்தும்படி செய்கிறது என்பது பொதுவான நியதியாகும். இந்நியதியின் விளக்கமாக ஹேமத்பந்த் தமது சொந்த நிகழ்ச்சியை எடுத்துக் காண்பிக்கிறார். பம்பாயின் புறநகர்ப்பகுதியான பாந்த்ராவில் பல ஆண்டுகளாக அவர் ரெஸிடெண்ட் மாஜிஸ்ட்ரேட்டாக இருந்தார்.
பீர் மௌலானா என்னும் பெயருடைய புகழ்பெற்ற முஹமதிய முனிவர் ஒருவர் அங்கு வசித்து வந்தார். பல இந்துக்கள், பார்ஸியர்கள், மற்றும் பல மதத்தினரும் அவரிடம் சென்று தரிசனம் பெறுவது வழக்கம். இனூஸ் என்ற பெயர்கொண்ட அவருடைய முஜாவர்— பூசாரி — இரவும், பகலும் பலமுறை அவரைச் சென்று தரிசிக்கும்படி ஹேமத்பந்தை வற்புறுத்தி வந்தார். ஆனால் என்ன காரணத்தாலோ அவரால் பீர் மௌலானாவைத் தரிசிக்க முடியவில்லை. பல ஆண்டுகட்குப் பிறகு அவருடைய முறை வந்தது. ஷீர்டிக்கு அவர் அழைக்கப்பட்டார். அவர் அங்கேயே சாயிபாபாவின் தர்பாரில் நிரந்தரமாகச் சேர்க்கப்பட்டார். துரதிஷ்டம் உள்ளவர்கள், முனிவர்களின் தொடர்பை இப்படிப் பெறுவதில்லை. அதிஷ்டசாலிகள் மட்டுமே அதைப் பெறுகிறார்கள்.
முனிவர்களின் நிறுவனங்கள்
நினைவுக்கும் எட்டாத பழங்காலத்திலிருந்து இவ்வுலகில் முனிவர்களுடைய நிறுவனங்கள் — ஆச்சிரமங்கள் — இருந்துவருகின்றன. வெவ்வேறு முனிவர்கள் வெவ்வேறு இடங்களில் தம்மைத் தாம் தோற்றுவித்துக்கொண்டு — அவதரித்து — தங்களுக்காக ஒதுக்கபட்ட பணித்திட்டங்களை நிறைவேற்றுகிறார்கள். வெவ்வேறு இடங்களில் செயலாற்றியபோதும் அவர்கள் அனைவரும் ஒருவரேயாவர்.
அனைத்தும் வல்ல பரம்பொருள் என்கின்ற பொதுவான ஆணையுரிமையின் கீழ் அவர்கள் அனைவரும் ஒத்தியையுடன் செயல்படுகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் மற்றவர்கள் தத்தம் இடங்களில் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பது நன்றாகவே தெரியும். தேவைகள் ஏற்படும்போது பிறிதொருவரின் வேலையை நிறைவு செய்கிறார்கள். இதை விளக்கும் ஒரு நிகழ்ச்சி கீழே தரப்பட்டிருக்கிறது.
திரு. டாகூர்
டாகூர், என்பவர் வருவாய்த்துறை அலுவலகத்தில் ஒரு குமாஸ்தா. அவர் ஒருமுறை ஒரு சர்வே கோஷ்டியுடன் பெல்காமுக்கு — தெற்கு மஹாராஷ்ட்ரம் — அருகிலுள்ள வட்காவனுக்கு வந்தார். அங்கு அவர் கன்னட முனிவர் ஒருவரைக் கண்டு அவர் முன் வணக்கம் செலுத்தினார். நிச்சலதாஸின் 'விசார சாகரம்' என்ற நூலின் — வேதாந்தத்தைப் பற்றிய இயன்மதிப்பார்ந்த இலக்கியப் படைப்பு — ஒரு பகுதியை அவையோரின்முன் எடுத்து விளக்கிக் கொண்டிருந்தார். டாகூர் புறப்படுவதற்காக முனிவரிடம் விடை பெறும்போது அவர், "நீ இந்தப் புத்தகத்தைக் கற்கவேண்டும். அங்ஙனம் செய்வாயேயாகில் உனது விருப்பங்கள் நிறைவேற்றப்படும். எதிர்காலத்தில் உனது அலுவலகக் கடமைகளின் நிமித்தமாக நீ வடக்கே செல்லும்போது உனது நல்ல அதிஷ்டத்தினால் ஒரு பெரிய முனிவரைக் காண்பாய். அவர் உனக்கு எதிர் காலத்திற்குரிய வழியைக் காண்பிப்பார். உனது மனதுக்கு ஓய்வுகொடுத்து உன்னை மகிழச் செய்வார்" என்று கூறினார்.
பின்னர் அவர் ஜுன்னருக்கு மாற்றப்பட்டார். நாணேகாட் என்ற நாணே மலைத்தொடரை அவர் கடந்து செல்லவேண்டியதாய் இருந்தது. மலைத்தொடர் மிகவும் செங்குத்தாகவும், கடப்பதற்கு இயலாததாகவும் இருந்தது. அதனைக் கடக்க ஒரு எருமை மாட்டைத் தவிர வேறு எவ்விதப் போக்குவரத்து வசதியும் இல்லை. எனவே மலைத்தொடரின் மீது செல்வதற்கு அவர் எருமையின் மீது சவாரி செய்யவேண்டியதாயிற்று. அது அவரை மிகுந்த அசௌகரியத்திற்கும், வலிக்கும் உட்படுத்தியது.
பின்னர் அவர் கல்யாணுக்கு உயர்ந்த பதவியில் மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு நானா சாஹேப் சாந்தோர்கரின் பழக்கம் ஏற்பட்டது. சாயிபாபாவைப் பற்றி அவரிடமிருந்து நிரம்பக் கேள்விப்பட்டிருந்தார். அவரைப் பார்க்க விரும்பினார். அடுத்தநாள் நானா சாஹேப் ஷீர்டிக்குச் செல்வதாக இருந்தார், போகும்போது டாகூரையும் தன்னுடன் கூடவரும்படி அழைத்தார். டாகூரால் அவருடன் செல்ல இயலவில்லை. ஏனெனில், ஒரு சிவில் வழக்கு விஷயமாக அவர் தாணே சிவில் கோட்டில் ஆஜராக வேண்டியிருந்தது. எனவே, நானா சாஹேப் தனியாகச் சென்றார். டாகூர் தாணேவுக்குச் சென்றார். அனால், அங்கு விசாரணை ஒத்திப்போடப்பட்டது. பின்னர், அவர் தாம் நானா சாஹேபுடன் செல்லாததற்கு பச்சாதாபப்பட்டார். எனினும் அவர் ஷீர்டிக்குச் சென்றார். அங்கு சென்றபோது அதற்கு முதல் தினமே நானா சாஹேப் ஷீர்டியை விட்டுச் சென்றதாக அறிந்தார். அவ்விடத்தில் சந்தித்த அவருடைய மற்ற நண்பர்கள் அவரை பாபாவிடம் அழைத்துச் சென்றார்கள். அவர் பாபாவைத் தரிசித்து அவருடைய பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். அளவு கடந்த மகிழ்ச்சியடைந்தார். அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்கியது. அவர் உடம்பு புல்லரித்தது. சிறிது நேரத்திற்குப் பின்னர் எங்கும் நிறை பேரறிவாளராகிய பாபா அவரைநோக்கி, "இவ்விடத்தினுடைய வழியானது கன்னடதேச முனிவரான அப்பாவின் உபதேசங்களைப் போன்றோ, நாணேகாட்டின் எருமைச் சவாரியைப் போன்றோ அவ்வளவு எளிதானதன்று. இவ்வாத்மிக வழியில், அது மிகவும் கடினமானதாகையால் நீர் உமது மிகச்சிறந்த முயற்சியைக் கைக்கொள்ளுதல் அவசியமாகும்" என்று கூறினார். தாம் மட்டுமே அறிந்த இத்தகைய உட்கருத்து வளஞ்செறிந்த அடையாளங்களையும், சொற்களையும் கேட்டு டாகூர் ஆனந்தக் களிப்பில் மூழ்கினார். கன்னடதேச முனிவரின் மொழிகள் உண்மையானதைத் தெரிந்துகொண்டார். பின்னர் அவர் தனது இருகரங்களையும் கூப்பி வணங்கித் தன சென்னியை பாபாவின் பாதங்களில் வைத்து, தாம் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆசீர்வதிக்கப்படவேண்டும் என்று வேண்டினார். பின்னர் பாபா கூறினார், "அப்பா உன்னிடம் சொன்னது சரியானதே. ஆனால், இவைகள் பயிலப்பட்டு வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்பட வேண்டும். வெறும் கல்வியினால் பயனேதும் இல்லை. நீங்கள் சிந்தித்து, கற்றபடி நெறியில் நிற்றல் வேண்டும். இல்லாவிடில் அவைகளால் ஒரு பலனும் இல்லை. குருவின் அனுக்கிரஹமின்மையும், ஆத்மானுபூதியின்றியும் உள்ள வெறும் ஏட்டுப் படிப்பால் பயனில்லை". விசார சாகரம் என்ற நூலின் கோட்பாட்டியல் பகுதி டாகூரினால் படிக்கப்பட்டு வந்தது. ஆனால் ஷீர்டியில் அவருக்கு நடைமுறையிலான வழி காண்பிக்கப்பட்டது. பின்னால் கொடுக்கப்பட்ட்ட மற்றொரு நிகழ்ச்சியும், இவ்வுண்மையை இன்னும் அதிக வன்மையுடன் வெளிக்கொணர்கிறது.
அனந்தராவ் பாடண்கர்
புனேவைச் சேர்ந்த அனந்தராவ் பாடண்கர் என்னும் பெருந்தகை ஒருவர் பாபாவைக் காணவிரும்பினார். அவர் ஷீர்டிக்கு வந்து பாபாவின் தரிசனத்தைப் பெற்றார். அவரது கண்களில் ஆவல் நிறைவேறின. அவர் மிகவும் ஆனந்தமடைந்தார். பாபாவின் பாதங்களில் வீழ்ந்து உரிய வழிபாட்டை நிகழ்த்தியபின்பு, பாபாவிடம் "நான் ஏராளமாகப் படித்திருக்கிறேன். வேதங்கள், வேதாந்தங்கள், உபநிஷதங்கள் இவைகளைப் பயின்றும், புராணங்களைக் கேட்டும் இருக்கிறேன். என்றாலும் எனக்கு மன அமைதி ஏற்படவில்லை.
எனவே, எனது கல்வியறிவு யாவும் பயனற்றவை என நினைக்கிறேன். எளிய, ஒன்றும் அறியாத பக்தியுள்ள மக்கள் என்னைவிடச் சிறந்தவர்கள். மனம் அடங்கினாலன்றி எந்த நூலறிவும் பயனில்லை. தங்கள் திருநோக்கினாலும், விளையாட்டான மொழிகளாலும் தாங்கள் எளிதாக எவ்வளவோ மக்களுக்கு மனச்சாந்தி வழங்குகிறீர்கள் என்று நான் பலரிடம் இருந்து கேட்டிருக்கிறேன். எனவே, நான் இங்கு வந்திருக்கிறேன். தயவுசெய்து என்மேல் இரக்கம் காண்பித்து, என்னை ஆசீர்வதியுங்கள்" என்று கூறினார். இதற்கு பாபா அவருக்கு ஒரு உருவகக் கதை சொன்னார்.
ஒன்பது லத்தி உருண்டைகளின் கதை — நவவித பக்தி
ஒருமுறை ஒரு வணிகன் இவ்விடம் வந்தான். அவன் முன்னால் ஒரு குதிரை லத்தி — சாணம் — இட்டது. — ஒன்பது உருண்டை லத்தி — வணிகன் மனமார்ந்த அக்கறையுடன் தனது வேட்டியின் முனையை விரித்து அந்த ஒன்பது உருண்டைகளையும் அதில் சேகரித்தான். அதன் மூலம் அவன் மன ஒருமைப்பாட்டை — மன அமைதி — அடைந்தான்.
பாடண்கருக்கு இக்கதையின் உட்பொருள் விளங்கவில்லை. எனவே, அவர் கணேஷ் தாமோதர் என்ற தாதா கேல்கரிடம் பாபா இதன்மூலம் என்ன போருல்கொல்கிறார் என்று கேட்டார். அவர் "எனக்கும் பாபா பொருள்கொள்வது, சொல்லுவது அனைத்தும் தெரியாது என்றாலும், அவருடைய தெய்வீக அகத்தூண்டுதலால் நான் தெரிந்துகொண்டதைக் கூறுகிறேன். குதிரையே கடவுளின் அருள். வெளிப்பட்ட ஒன்பது உருண்டைகள் பக்தியின் ரூபங்கள் அல்லது வகைகள். அவையாவன:
(1) ஸ்ரணவம் - கேட்டல்
(2) கீர்த்தனை - வேண்டுதல்
(3) ஸ்மரணம் - நினைவுறுத்திக்கொள்ளுதல்
(4) பாத சேவனம் - பாதங்களைத் தஞ்சமடைதல்
(5) அர்ச்சனை - பூஜை
(6) நமஸ்காரம் - வணங்குதல்
(7) தாஸ்யா - சேவை
(8) சக்யத்வா - நட்பு
(9) ஆத்மா நிவேதனம் - தன்னையே இறைவனுக்குச் சமர்ப்பித்தல்
இவைகள் பக்தியின் ஒன்பது விதங்கள். இவைகளில் ஏதாகிலும் நம்பிக்கையுடன் பின்பற்றப்பட்டால் பரமாத்மாவாகிய ஹரி மகிழ்வெய்தி பக்தனின் வீட்டில் தாமே வெளிப்படுவார். எல்லாச் சாதனைகளும் அதாவது ஜபம், தபம், யோகப்பயிற்சி, வேதபாராயணம் அவைகளின் வியாக்கியானப் பேச்சு ஆகியவை யாவும் பக்தியுடன் சேர்ந்திருந்தாலன்றி முழுவதுமாகப் பயனற்றவையே ஆகும். வேதஞானம் அல்லது பெரும் ஞானி என்ற புகழ், வெறும் சம்பிரதாய பஜனை இவற்றால் பயனில்லை. அன்பான பக்தியே தேவைப்படுவதாகும். வணிகனைப் போன்றோ அல்லது உண்மையைத் தேடும் ஒருவனைப் போன்றோ உங்களைக் கருதிக்கொள்ளுங்கள். ஒன்பதுவகை பக்தியை விளைவிப்பதில் அல்லது ஒன்பதுவகை சேகரிப்பதில் அவன் கொண்டதைப் போன்ற கவலையுடனும், ஆர்வத்துடனும் இருங்கள். அப்போது நீங்கள் நிலையுறுதியையும், மனச்சாந்தியையும் எய்துவீர்கள்".
அடுத்தநாள் பாடண்கர் பாபாவை வணங்கச் சென்றபோது பாபா அவரை ஒன்பது லத்தி உருண்டைகளையும் சேகரித்தீரா எனக் கேட்டார். அதற்கு அவர் தான் ஒரு எளியவனாக இருப்பதால் பாபா அவருக்கு முதலில் அருள்செய்ய வேண்டுமென்றும், பின்னர் அவைகளை எளிதாகச் சேர்க்கலாம் என்றும் தெரிவித்தார். அதன் பின் பாபா அவரை ஆசீவதித்து அவர் மன அமைதியையும், நமையும் அடைவார் என்று கூறி ஆறுதல் அளித்தார். இதைக்கேட்டு பாடண்கர் அளவுகடந்த இன்பமும், மகிழ்ச்சியும் அடைந்தார்.
பண்டரீபுரத்து வக்கீல்
பாபாவின் எங்கும்நிறை பேரறிவையும், மக்களைத் திருத்துவதையும், சரியான பாதையில் அவர்களை நேரிப்படுத்துவதையும் கூறி இவ்வத்தியாயத்தை முடிப்போம். ஒருமுறை பண்டரீபுரத்திலிருந்து ஒரு வக்கீல் ஷீர்டிக்கு வந்து மசூதிக்குச் சென்றார். சாயிபாபாவைக் கண்டார். அவர்தம் பாதத்தடியில் வீழ்ந்தார். கேட்காமலேயே சிறிது தட்ஷணை அளித்தார். ஒரு மூலையில் அமர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் உரையாடலைக் கேட்க ஆர்வமுள்ளவராக இருந்தார்.
பின்னர் பாபா, தமது முகத்தை அவர் பக்கம் திருப்பி, "மக்கள் தாம் எவ்வளவு வஞ்சனை உடையவர்களாக இருக்கிறார்கள்! அவர்கள், பாதங்களில் விழுகிறார்கள், தட்ஷணை அளிக்கிறார்கள், ஆனால் அந்தரங்கமாக, காணாவிடத்தில் திட்டுகிறார்கள். இது அற்புதமாக இல்லையா? என்று கூறினார். இக்குல்லாய் — குறிப்பு — வக்கீலுக்குப் பொருத்தமாக இருந்தது. ஒருவருக்கும் இக்குறிப்பு விளங்கவில்லை. வக்கீல் இதைக் கிரகித்தார். ஆனால் அவர் அமைதியாய் இருந்தார்.
அவர் வாதாவுக்குத் திரும்பியபோது, வக்கீல் காகா சாஹேப் தீஷித்திடம் சொன்னதாவது, "பாபா குறிப்பிட்டது சரிநுட்பமாக உண்மையே ஆகும். இக்கணை என்மேலேயே எய்யப்படடது. அதாவது மற்றவர்களைத் திட்டுவதிலோ, அவதூறு பேசுவதிலோ, நான் மனம்போன போக்கில் போகக்கூடாது என்ற எனக்குரிய குறிப்பேயாகும். பண்டாரீபுரத்தின் முன்சீஃப் அல்லது சப்-ஜட்ஜ் — நூல்கர் — தமது உடல்நல முன்னேற்றத்தை முன்னிட்டு இவ்விடம் வந்து தங்கியிருந்தபோது, பண்டரீபுரத்தின் பார்-ரூமில் — வக்கீல்கள் அறை — இந்த விஷயத்தைப் பற்றிய விவாதம் — மற்ற பார் அறைகளில் நடப்பதுபோன்று — நடந்தது.
துன்புற்று வந்த நோய்கள் யாவும் சாயிபாபாவின் பின்னால் போவதால் மட்டுமே மருந்துகள் இன்றி குணப்படுத்தப்படும் வாய்ப்பு சிறிதேனும் உள்ளதா என்றும், சப்-ஜட்ஜைப் போன்ற படித்தவர்கள் இதைப்போன்ற முறைகளை அனுசரிப்பது சரியா என்றும் சொல்லப்பட்டது அல்லது விவாதிக்கப்பட்டது. அதாவது மறைமுகமாக சாயிபாபா அவதூறு பேசப்பட்டார் அல்லது குறைகூறப்பட்டார். நானும் இந்த விஷயத்தில் கொஞ்சம் பங்கு கொண்டேன். இப்போது சாயிபாபா எனது ஒழுங்கீனத்தை எடுத்துக் காட்டினார். இது எனக்குரிய கண்டனமாகாது, ஆனால் ஓர் சகாயமாகும். ஓர் உபதேசமாகும். அதாவது நான் பிறரைத் தூற்றுவது, துஷ்பிரசாரம் செய்வது இவற்றில் தன்னிச்சையுடன் செயல்படக்கூடாது என்பது பற்றியும் அனாவசியமாகப் பிறர் காரியங்களில் தலையிடக்கூடாது என்பது பற்றியுமாகும்".
ஷீர்டி, பண்டாரீபுரத்திலிருந்து முந்நூறு (300) மைல் தூரத்தில் இருக்கிறது. எனினும் அங்குள்ள பார் அறையில் என்ன நிகழ்ந்தது என்பதை பாபா தமது எங்கும் நிறை பேரறிவால் அறிந்திருந்தார். இடையில் உள்ள இடங்கள், ஆறுகள், காடுகள், மலைகள் யாவும் அவர்தம் அனைத்தையும் உணரும் பார்வைக்குத் தடை செய்வன அல்ல. அவர் எல்லோருடைய இதயங்களையும் பார்க்க முடியும், படிக்க முடியும். எதுவும் அவருக்கு இரகசியமோ, மறைக்கப்பட்டதோ அன்று. அண்மையிலோ, சேய்மையிலோ உள்ள ஒவ்வொன்றும் பட்டப் பகலொளியைப் போன்று தெட்டத் தெளிவாகவும், சுத்தமாகவும் அவருக்குத் தெரியும்.
ஒரு மனிதன் பக்கத்தில் இருந்தாலும் அவன் சாயிபாபாவின் எங்கும்நிறை கூர்ந்த பார்வையினின்று தப்ப முடியாது. இதிலிருந்து மற்றவர்களைப் பற்றித் தூஷணையாகப் பேசக்கூடாது என்றும், தேவையில்லாமல் மற்றவரைக் குறைகூறக் கூடாது என்றும் வக்கீல் அறிந்துகொண்டார். இவ்வாறாக அவர்தம் கெட்டகுணம் முழுவதுமாக மறைந்து நல்வழிக்குத் திருப்பபட்டார். இக்கதை வக்கீலுக்கே என்றாலும், அனைவருக்கும் இது பொருந்துவதேயாகும். அனைவரும் இந்நியதியை உள்ளத்தில்கொண்டு, அதனால் வரும் பயனை அடையவேண்டும்.
சாயிபாபாவின் பெருமை ஆழங்காண இயலாதது. அவ்வாறே அவர்தம் அற்புதமான லீலைகளுமாகும். அவர்தம் வாழ்க்கையும் அங்ஙனமேயாகும். ஏனெனில் அவரே பரப்பிரம்ம அவதாரம் ஆவார்.
ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
(1) பாலா சாஹேப் மிரீகர்
(2) பாபு சாஹேப் பூட்டி
(3) அமீர் ஷக்கர்
(4) ஹேமத்பந்த்
பாம்புகளைக் கொல்வதைப் பற்றி பாபாவின் கருத்து
முன்னுரை
பாபாவை எங்ஙனம் தியானிப்பது? கடவுளின் தன்மையையோ, ரூபத்தையோ ஆழ்ந்தறிய யாராலும் இயலாது. வேதங்களும், ஆயிரம் நாவு படைத்த ஆதிசேஷனும்கூட அதை முழுமையாக விவரிக்க இயலவில்லை. கடவுளின் ரூபத்தைத் தரிசிக்கவும், அறியவும் அடியவர்களால் மட்டுமே இயலும். ஏனெனில் அவர்தம் பாதங்கள் மட்டுமே அவர்களுடைய மகிழ்ச்சிக்குரிய ஒரே வழி என்பதை அவர்கள் அறிவார்கள். வாழ்க்கையின் உச்ச உயர் இலட்சியத்தை அடைய அவர்தம் பாதங்களைத் தியானிப்பதைத் தவிர அவர்களுக்கு வேறெவ்வித வழியும் தெரியாது. ஹேமத்பந்த் தியானத்திற்கும், பக்திக்கும் ஒரு எளிய வழியைப் பின்வருமாறு தெரியப்படுத்துகிறார்.
ஒவ்வொரு மாதமும் தேய்பிறையின் பதினைந்து நாட்கள் சிறிது சிறிதாகக் கழிவுறுவதைப் போன்றே சந்திரனது ஒளியும், அதே நுட்ப அளவில் தேய்வடைகிறது. அமாவாசையன்று நாம் சந்திரனையே பார்க்கமுடிவதில்லை. அதனது ஒளியையும் பெறுவது இல்லை. எனவே வளர்பிறை நாட்கள் தொடங்கும்போது மக்கள் சந்திரனைக் காண்பதில் மிக்க ஆவலாக இருக்கிறார்கள். முதல்நாள் அது தெரிவதில்லை. இரண்டாம் நாளும்கூட அது தெளிவாகத் தெரிவதில்லை. பின்னர் மரத்தின் இரண்டு கிளைகளுக்கு நடுவிலுள்ள திறப்பிலிருந்து அச்சந்திரனைப் பார்க்கும்படி மக்கள் கேட்க்கப்படுகிறார்கள்.
அவர்களும் ஆர்வத்துடனும், ஒரே கவனத்துடனும் நோக்கும்போது தூரத்திலுள்ள அவ்விளம்பிறை அவர்களின் காட்சி எல்லைக்கு எட்டுவதை அவர்கள் பேருவகையுடன் காண்கிறார்கள். இந்த வழிக்குறிப்பைத் தொடர்ந்தே நாம் பாபாவின் ஒளியைக் காண முயலுவோம். பாபாவின் தோற்ற அமைப்பைக் காணுங்கள். அது எவ்வளவு அருமையாக இருக்கிறது! அவர் அட்டணக்கால் இட்டு அமர்ந்திருக்கிறார். வலதுகால் இடது முழங்கால் மேலும், இடது கையின் விரல்கள் வலது பாதத்திலும் படரப்பட்டு இருக்கின்றன. வலதுகால் பெருவிரலில் அவர்தம் இரண்டு கைவிரல்கள் ஆள்காட்டிவிரலும், நடுவிரலும் படர்ந்திருக்கின்றன.
இத்தோற்ற அமைப்பால் பாபா குறிப்பிடுவதாகத் தோன்றுவதாவது, நீ எனது ஒளியைக் காண விரும்பினால் அஹங்காரமற்றவனாகவும், மிகமிகப் பணிவுடனும் இருப்பாயாக. எனது கால் பெருவிரலை இரண்டு கிளைகள் வழியாகத் தியானிப்பாயாக. அதாவது சுட்டுவிரல், நடுவிரல் ஆகியவற்றிடையே. அதன்பின் நீ எனது ஒளியைக் காண இயலும். இதுவே பக்தியை அடைய மிகமிக எளிய வழியாகும்.
சில கணங்கள் நாம் பாபாவின் வாழ்க்கையை நோக்குவோம். பாபாவின் வாசத்தால் ஷீர்டி ஒரு புண்ணிய ஷேத்திரமாக மாறியது. எல்லாத் திசைகளிலிருந்தும் மக்கள் அங்கே கூடத் தொடங்கினார்கள். ஏழைகளும், பணக்காரர்களும் ஒன்றுக்கு மேலிட்ட பல வகைகளால் ஏதோ ஒரு ரூபத்தில் நன்மையடையத் தொடங்கினார்கள். பாபாவின் எல்லையற்ற அன்பையும், அவரின் வியத்தகு இயற்கையான ஞானத்தையும், அவரின் சர்வவியாபகத் தன்மையையும் யாரே விவரிக்க இயலும்! இவைகளுள் ஒன்றையோ அல்லது அனைத்தையுமோ யார் அனுபவிக்க வல்லரோ அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
சில நேரங்களில் பாபா நீண்டநேரம் மௌனம் அனுஷ்டித்தார். அது ஒருவகையில் பிரம்மத்தைப் பற்றிய அவரின் நீண்ட விளக்கமாகும். மற்ற சிலநேரங்களில் தமது அடியவர்களால் சூழப்பட்டு உணர்ச்சிகளின் திரள், ஆனந்தம் இவைகளின் அவதாரமாகத் தோன்றினார். சில நேரங்களில் அவர் உருவகக் கதைகளால் பேசினார். மற்ற சில நேரங்களில் தமாஷுக்கும், நகைச்சுவைக்கும் அதிக இடம் கொடுத்தார். சில நேரங்களில் அவர் முழுவதும் ஐயமின்றியும், சில நேரங்களில் சீற்றம் கொண்டவர் போலும் தோன்றினார். சில சமயங்களில் தமது நீதியை இரத்தினச் சுருக்கமாகச் சொன்னார். வேறுசில சந்தர்ப்பங்களில் அதைப் பற்றி நெடிய விவாதம் நடத்தினார். பல சமயங்களில் அவர் மிகவும் வெளிப்படையாக இருந்தார். இவ்வாறாக அவர் பலருக்கும் வெவ்வேறுவிதமான செயல்துறைக் கட்டளைகளை அவரவர்களின் தேவைக்கேற்ப அளித்தார். எனவே அவர் வாழ்க்கையானது அறிவால் அறிந்துகொள்ள இயலாதது. நமது மனத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டது. நமது புத்தி சாதுர்யத்தையும், மொழிகளையும் கடந்தது. அவரது முகத்தைப் பார்க்க, அவருடன் பேச, அவரது லீலைகளைக் கேட்க இருக்கும் நமது பேரார்வமானது திருப்தி செய்யப்படவேயில்லை என்றாலும் நாம் மகிழ்ச்சியால் நிரம்பி வழிகிறோம். மழையின் துளிகளை நாம் எண்ணிவிடலாம். காற்றைத் தோல் பையினுள் அடைத்துவிடலாம். ஆனால் அவரது லீலைகளை யாரே அளக்கமுடியும்!
அவைகளில் ஒரு பண்புக்கூற்றினைப் பற்றி இங்கே நாம் கூறுகிறோம். எங்ஙனம் எதிர்பார்த்திருந்த, முன்னால் அறியப்பட்டிருந்த, பக்தர்களின் பேராபத்துக்கள் உரிய நேரத்தில் எச்சரிக்கப்பட்டு தவிர்க்கப்பட்டன என்பதைக் காண்போம்.
பாலா சாஹேப் மிரீகர்
கோபர்காவனில் மம்லதாரான பாலா சாஹேப் மிரீகர் — சர்தார் காகா சாஹேப் மிரீகர் என்பவரின் மகன் — சிதலீக்குச் சுற்றுப் பயணமாகச் சென்றுகொண்டிருந்தார். வழியில் அவர் ஷீர்டிக்கு சாயிபாபாவைப் பார்க்க வந்தார். மசூதிக்குச் சென்று பாபாவின் முன்னால் வீழ்ந்து பணிந்ததும், உடல்நலம் மற்றும் வேறு விஷயங்கள் பற்றிய வழக்கமான உரையாடல் துவங்கியது. பாபா எச்சரிக்கைக் குறிப்பு ஒன்றை விடுத்தார். "உங்களுக்கு நம்முடைய த்வாரகாமாயியைத் தெரியுமா? " பாலா சாஹேபுக்கு இது புரியாததால் அவர் அமைதியாக இருந்தார்.
பாபா தொடர்ந்து, "நீங்கள் அமர்ந்துகொண்டிருக்கும் இதுவே நமது த்வாரகாமாயி. தனது மடியில் அமரும் குழந்தைகளின் எல்லா ஆபத்துக்களையும், கவலைகளையும் அவள் தடுத்து விலக்குகிறாள். இந்த மசூதி மாயி — அடக்கி ஆட்சி செய்யும் இதன் அம்பிகை — மிகவும் கருணையுள்ளவள். அவள் எளிய பக்தர்களின் தாயாவாள். அவர்களைப் பேராபத்துக்களிளிருந்து அவள் பாதுகாக்கிறாள். ஒரு மனிதன் அவளது மடியில் ஒருமுறை அமர்ந்தால் அவனது எல்லாக் கஷ்டங்களும் முடிவடைந்துவிடும். அவளது நிழலில் இளைப்பாறுவோர் பேரானந்தம் எய்துகின்றனர்" என்றார்.
பின்னர் பாபா அவருக்கு உதியை அளித்து தமது பாதுகாக்கின்ற கரங்களை அவர் தலையில் வைத்தார். பாலா சாஹேப் புறப்படப்போகும் அத்தருணத்தில், "உங்களுக்கு லம்பா பாபாவைத் தெரியுமா? — நீண்ட பெருந்தகை — அதாவது பாம்பை?" என்றார். பின்னர் இடது கை முட்டியை மூடிக்கொண்டு வந்து தமது இடது புஜத்தை பாம்பின் படம் போன்று ஆட்டிக்கொண்டு அவர் "அவன் எவ்வளவு பயங்கரமானவன், ஆனால் த்வாரகாமாயியின் குழந்தைகளை அவன் என்ன செய்யமுடியும்?! த்வாரகாமாயியானவள் பாதுகாக்கும்போது பாம்பு என்ன செய்யமுடியம்" என்று கூறினார்.
இவையனைத்திற்கும் பொருள், மிரீகருக்கு அதுபற்றிய சுட்டுக்குறியீடு ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள அங்கு பிரசன்னமாயிருந்த அனைவரும் ஆவலாய் இருந்தனர். ஆனால் ஒருவருக்கும் இதைப்பற்றி பாபாவிடம் கேட்கத் துணிவு இல்லை. பின்னர் பாலா சாஹேப் பாபாவை வணங்கிவிட்டு ஷாமாவுடன் மசூதியை விட்டுப் புறப்பட்டார். பாபா, ஷாமாவைத் திரும்ப அழைத்து பாலா சாஹேபுடன் கூடச் செல்லும்படியும் சிதலீ சுற்றுலாவை மகிழ்ந்தனுபவிக்கும்படியும் கூறினார்.
ஷாமா பாலா சாஹேபிடம் வந்து பாபாவின் விருப்பப்படி தாமும் அவருடன் வருவதாகக் கூறினார். அது அசௌகரியமாய் இருக்குமாதலால் அவர் வரவேண்டியதில்லையென்று பாலா சாஹேப் கூறினார். ஷாமா பாபாவிடம் திரும்பிவந்து பாலா சாஹேப் தம்மிடம் கூறியதைத் தெரிவித்தார். அப்போது பாபா, "நன்று, போகாதே, நாம் நல்லவற்றையே செய்யவேண்டும். எதுதானென்று விதிக்கப்பட்டிருக்கிறதோ அதுவே நிச்சயம் நடந்தேறும்" என்று கூறினார்.
இதற்கிடையில் பாலா சாஹேப் இதைப்பற்றி மீண்டும் சிந்தித்து ஷாமாவைக் கூப்பிட்டுத் தன்னுடன் வரச்சொன்னார். பின்னர் ஷாமா மீண்டும் பாபாவிடம் சென்று, அவரிடம் விடைபெற்றுக்க்கொண்டு பாலா சாஹேபுடன் ஒரு குதிரை வண்டியில் புறப்பட்டார். அவர்கள் சிதலீக்கு இரவு ஒன்பது மணிக்குப் போய்ச்சேர்ந்தார்கள். மாருதி கோவிலில் தங்கினார்கள். அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் வரவில்லையாதலால் அவர்கள் கோவிலிலேயே பேசிக்கொண்டும், அரட்டையடித்துகொண்டும் அமர்ந்திருந்தனர்.
பாலா சாஹேப், பாயின் மீது அமர்ந்து செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தார். அவரது மேல் வேட்டி இடுப்பின்மீது போடப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியில் ஒரு பாம்பு கவனிக்கபடாமல் அமர்ந்து கொண்டிருந்தது. அது ஒரு சலசல சத்தத்துடன் நகர்ந்தது பியூனுக்குக் கேட்டது. அவன் ஒரு விளக்கு கொண்டுவந்து பாம்பைப் பார்த்துவிட்டு "பாம்பு... பாம்பு...!" என்று அபாயக்குரல் எழுப்பினான். பாலா சாஹேப் திகலடைந்து நடுங்கத் தொடங்கினார். ஷாமாவும் திகைத்தார். பின்னர் அவரும் மற்றவர்களும் சந்தடி செய்யாமல் தடிகளையும், குச்சிகளையும் எடுத்து வந்தனர். பாம்பு மெதுவாக இடுப்பைவிட்டுக் கீழிறங்கி பாலா சாஹேபை விட்டு அப்பால் செல்லத் தொடங்கியது. அது உடனே கொல்லப்பட்டது. இவ்விதமாக பாபாவின் தீர்க்க தரிசனத்தால் அறிவித்திருந்த பேராபத்து தடுக்கப்பட்டது. பாலா சாஹேபுக்கு பாபாவிடமுள்ள அன்பு மிகவும் ஆழமாக உறுதிப்படுத்தப்பட்டது.
பாபு சாஹேப் பூட்டி
நானா சாஹேப் டேங்க்லே என்னும் பெரிய ஜோசியர் ஒருவர், அப்போது ஷீர்டியிலிருந்த பாபு சாஹேப் பூட்டியிடம் ஒருநாள், "இந்நாள் தங்களுக்கு ஒரு அமங்கலமான நாள், தங்களது உயிருக்கு ஆபத்து இருக்கிறது" என்று கூறினார். இது பாபு சாஹேபை இருப்புக்கொள்ளாமல் செய்தது. அவர் வழக்கம்போல் மசூதிக்கு வந்தபோது பாபா, பாபு சாஹேபிடம், "இந்த நானா என்ன கூறுகிறார்? அவர் உமக்கு மரணமென்று ஜோசியம் கூறுகிறார். நன்று, நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. அவரிடம் தைரியத்துடன் சொல்லுங்கள், எங்ஙனம் சாவு கொல்கிறது என்பதைக் காண்போம் என்று கூறுங்கள்" என்று கூறினார்.
பாபு சாஹேப் பிறகு மாலை நேரத்தில் இயற்கைக் கடன்களைச் செய்து முடிப்பதற்காகத் தனியிடத்திற்குச் சென்றார். அங்கு ஒரு பாம்பைக் கண்டார். அவரது சேவகன் அதைக் கண்டு அதை அடிப்பதற்காக ஒரு கல்லை எடுத்தான். பாபு சாஹேப் ஒரு பெரிய தடியை எடுத்து வரும்படி கூறினார். வேலையாள் தடியுடன் வரும் முன்பே பாம்பு நகர்ந்து சென்று எங்கோ மறைந்துவிட்டது. பாபாவின், "அஞ்ச வேண்டாம்!" என்ற மொழிகளை பாபு சாஹேப் மகிழ்வுடன் நினைவுகூர்ந்தார்.
அமீர் ஷக்கர்
அமீர் ஷக்கரின் சொந்த ஊர் கொபர்காவன் தாலுக்காவைச் சேர்ந்த கொரலா என்னும் கிராமமாகும். அவர் இறைச்சி விற்கும் ஜாதியைச் சேர்ந்தவர். அவர் பாந்த்ராவில் கமிஷன் ஏஜண்டாக வேலை பார்த்தார். அங்கு மிகவும் பிரசித்தமானவர். அவர் ஒருமுறை கீழ்வாதத்தால் கஷ்டப்பட்டார். அது அவருக்கு மிகுந்த கவலையை அளித்தது. அப்போது அவர் கடவுளை நினைவுகூர்ந்தார். தனது தொழிலை விட்டுவிட்டு ஷீர்டிக்கு வந்து தனது பிணியிலிருந்து தன்னை விடுவிக்கும்படி பாபாவை வேண்டிக்கொண்டார். பாபா அவருக்கு சாவடியில் தங்க இடம் அமர்த்திக்கொடுத்தர்.
சாவடி ஈரம் நிரம்பியதாகவும், சுகாதாரமற்ற இடமாகவும், அத்தகைய நோயாளி தங்குவதற்கு ஏற்றதாய் இல்லாமலும் இருந்தது. கிராமத்திலுள்ள மற்ற எந்த இடமும் அல்லது கொரலா கிராமமே கூட அவர் தங்குவதற்கு இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஆனால் பாபாவின் மொழிகளே இதைத் தீர்மானிக்கின்ற காரணக்கூறும், ஸ்ரேஷ்டமான மருந்துமாகும். பாபா அவரை மசூதிக்கு வர அனுமதிக்கவில்லை. ஆனால் சாவடியிலேயே நிலைநிறுத்தித் தங்கவைத்தார். அங்கே அவருக்குப் பெரும் நன்மை விளைந்தது. பாபா சாவடி வழியாக ஒவ்வொருநாள் காலையும், மாலையும் கடந்து சென்றார். ஒருநாள் விட்டு ஒருநாள் ஊர்வலமாகச் சென்று அங்கு துயின்றார். எனவே அமீர், பாபாவின் தொடர்பை மிகவும் எளிதாக அடுத்தடுத்துப் பெற்றார்.
அமீர் ஒன்பது மாதங்கள் முழுமையாகத் தங்கியிருந்தார். பின்னர் எப்படியோ அவ்விடத்தில் அவருக்கு வெறுப்பு ஏற்பட்டது. எனவே ஒருநாள் ஒருவரும் அறியாமல் அவ்விடத்தைவிட்டு அகன்றார். கோபர்காவனுக்கு வந்து அங்கு தர்மசாலையில் தங்கினார். அப்போது முதுமையான, இறந்துகொண்டிருக்கும் பக்கீர் ஒருவர் அவரிடம் தண்ணீர் கேட்டார். அமீர் அதைக்கொண்டு வந்து அவரிடம் கொடுத்தார். அவர் அதை அருந்திய உடனேயே மரணம் அடைந்தார். அமீர் இக்கட்டான நிலையை அடைந்தார். அவர் சென்று அதிகாரிகளிடம் இதுபற்றித் தெரிவிப்பாரேயாகில், அவரே முதல் தகவல் அளித்தவராதலாலும், தகவலும் அவருடையது மட்டுமேயானதாலும் அதுகுறித்து அவர் சிறிதளவாவது அறிந்திருப்பதனாலும் அவரே மரணத்துக்குப் பொறுப்பாக்கப்படுவார் என்று நினைத்தார். பாபாவிடம் விடைபெற்றுக் கொள்ளாமல் ஷீர்டியை விட்டு வந்ததைப்பற்றி தமது செய்கைக்காக அவர் நனியிரங்கி, பாபாவை வேண்டிக்கொண்டார். அவர் பின்னர் ஷீர்டிக்குத் திரும்பத் தீர்மானித்தார்.
அதே இரவு வழிநெடுக பாபாவின் பெயரை நினைவு கூர்ந்துகொண்டும், உச்சரித்துகொண்டும் பொழுது விடிவதற்குள் ஷீர்டிக்குத் திரும்ப ஓடி வந்துவிட்டார். கவலையிலிருந்து விடுபட்டவரானார். பாபாவின் பரிபூரண விருப்பத்திற்கும் ஆணைகளுக்குமிணங்க சாவடியிலேயே தங்கியிருந்தார். குணப்படுத்தவும்பட்டார். ஒருநாள் நள்ளிரவு பாபா, "ஓ! அப்துல், ஏதோ ஒரு பிசாசு ஜந்து என் படுக்கையின் பக்கங்களில் மோதிக்கொண்டு இருக்கிறது" என்று சொன்னார்.
அப்துல் விளக்குடன் வந்தான். பாபாவின் படுக்கையைச் சோதித்தான். ஆனால் அவன் ஒன்றையும் காணவில்லை. பாபா அவனை எல்லா இடங்களையும் கவனத்துடன் பார்க்கும்படி கூறி தமது சட்காவைத் தரையை நோக்கி அடிக்கத் தொடங்கினார். இந்த லீலையைக் கண்டு ஏதாவது பாம்பு அங்கே வந்திருப்பதாக பாபா சந்தேகப்பட்டிருக்க வேண்டுமென்று அமீர் நினைத்தார். நீண்ட நாள் பழக்கத்தின் காரணமாக பாபாவின் மொழிகட்கும், செயல்களுக்கும் அமீர் பொருள் தெரிந்துகொள்ள வல்லவராயிருந்தார். பாபா அமீரின் மெத்தைக்கு அருகில் ஏதோ அசைந்து கொண்டிருப்பதைப் பார்த்தார். அப்துல்லை விளக்கைக் கொணரும்படி சொன்னார். அவன் அதைக் கொணர்ந்ததும் அங்கு ஒரு பாம்பு தன் தலையை மேலும், கீழும் அசைத்துக்கொண்டு, சுருட்டிக்கொண்டு கிடப்பதைக் கண்டான். அதன் பின்னர் பாம்பு உடனே அடித்துக் கொல்லப்பட்டது. இவ்வாறாக பாபா குறித்த நேரத்தில் எச்சரிக்கை கொடுத்து அமீரைக் காப்பாற்றினார்.
ஹேமத்பந்த் — தேளும் பாம்பும்
(1) பாபாவின் பரிந்துரையின் பேரில் காகா சாஹேப் தீஷித் தினந்தோறும் ஏக்நாத் மஹராஜின் இரண்டு நூல்களைப் பாராயணம் செய்துவந்தார். அதாவது பாகவதமும், பாவார்த்த ராமாயணமுமாகும். அவைகள் பாராயணம் செய்யப்படும்போது கேட்டுக்கொண்டிருந்த நல்லதிஷ்டம் பெற்ற மக்களில் ஹேமத்பந்தும் ஒருவராவார். தமது தாயாரின் அறிவுரையின்படி ஹனுமான் ராமரின் பெருமையைச் சோதிக்கும் கட்டம் படிக்கப்பட்டபோது அனைவரும் மந்திரத்துக்குக் கட்டுப்படவர்கள் போன்று கேட்பதில் மூழ்கியிருந்தனர்.
ஹேமத்பந்தும் அவர்களுள் ஒருவர். அப்போது ஒரு பெரிய தேள் — அது எங்கிருந்து வந்ததென்று யாரும் அறியவில்லை — ஹேமத்பந்தின் வலது தோள் மீதிருந்த துண்டின்மீது தாவியது. முதலில் அது கவனிக்கப்படவில்லை. ஆனால் கடவுள் தமது கதைகளை ஆர்வத்துடன் கேட்பவர்களைப் பாதுகாக்கிறார். எனவே ஹேமத்பந்த் தற்செயலாகத் திரும்பியபோது பெரிய தேளைத் தோள்மீது கண்டார். அது மரண அமைதியுடன் இருந்தது. இப்பக்கமோ, அப்பக்கமோ சிறிதும் அசையவில்லை. அதுவும் பாராயணத்தைக் கேட்டு மகிழ்வது போன்றே தோன்றியது. பின்னர் ஹேமத்பந்த் கடவுளருளால், அவையோரைத் தொந்தரவு செய்யாமல் வேட்டியின் இரு முனைகளையும் எடுத்துத் தேளை உள்ளே மடித்துக்கொண்டார். பின்னர் வெளியேசென்று அதைத் தோட்டத்தில் எறிந்தார்.
(2) மற்றுமொரு சந்தப்பத்தின்போது ஒருநாள் சிலர் காகா சாஹேப் வாதாவின் மாடியில் அந்தி சாய்வதற்குச் சிறிதே முன்பாக உட்கார்ந்துகொண்டு இருந்தனர். அப்போது ஒரு பாம்பு ஜன்னல் நிலையிலுள்ள துவாரத்தின் வழியாக ஊர்ந்து வந்து சுருட்டிக்கொண்டு அமர்ந்தது. விளக்கு ஒன்று கொண்டுவரப்பட்டது. முதலில் அது மிரட்சி அடைந்தபோதும் அமைதியாக அமர்ந்து தலையை மேலும் கீழும் அசைத்துக் கொண்டிருந்தது. பின்னர் பலர் கம்புகளுடனும், தடிகளுடனும் ஓடி வந்தனர். அது ஒரு இடக்குமுடக்கான இடத்தில் அமர்ந்துகொண்டு இருந்தமையால், ஒரு அடியும் அதன்மீது படவில்லை. மனிதர்களின் சப்தங்களைக் கேட்டு பாம்பு தான் வந்த துவாரம் வழியாகவே விரைவாகத் திருபிச் சென்றுவிட்டது. பின்னர் அங்கிருந்த அனைவரும் கவலையை விடுத்தனர்.
பாபாவின் கருத்து
முக்தாரம் என்ற ஒரு பக்தர் அந்த வாயில்லா ஜீவன் தப்பிச்சென்றது நல்லது என்று கூறினார். ஹேமத்பந்த் பாம்புகள் கொல்லப்படவே வேண்டும் என்று அவருக்குச் சவால் விட்டார். முன்னவர் பாம்பு போன்ற ஜந்துக்கள் கொல்லப்படக் கூடாதென்றும், பின்னவர் கொல்லப்பட வேண்டும் என்றும் இருவருக்குமிடையே சூடான விவாதம் நடந்தது. இரவு வந்ததும் விவாதம் எவ்வித முடிவுமின்றி முடிவடைந்தது. மறுநாள் இது பாபாவிடம் தெரிவிக்கப்பட்டது.
பாபா தமது தீர்க்கமான கருத்தைப் பின்வருமாறு தெரிவித்தார். தேளானாலும், பாம்பானாலும் கடவுள் எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் வசிக்கிறார். அவரே இவ்வுலகில் மிகப்பெரிய பொம்மலாட்டக்காரர். அனைத்து ஜீவராசிகளும் — பாம்பும், தேளும் — அவரின் ஆணைக்குக் கீழ்ப்படிகின்றன. அவர் நினைத்தாலொழிய யாரும், எதுவும் பிறருக்குத் தீங்கு செய்துவிட முடியாது. உலகம் அவரையே முழுவதும் சார்ந்திருக்கிறது. எவருமோ, எதுவுமோ சுதந்திரமானவர்களல்ல. எனவே நாம் கருணைகூர்ந்து எல்லா ஜீவராசிகளையும் நேசிக்கவேண்டும். துணிச்சல், வீரமுள்ள கொலைகளையும், சண்டைகளையும் விடுத்துப் பொறுமையாய் இருக்கவேண்டும். கடவுளே அனைவரின் பாதுகாப்பாளர்.
ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
• பாம்புக் கடியினின்று ஷாமா
குணமாக்கப்படுதல்
• வாந்தி பேதியின் — காலரா — கட்டளைகள் மீறப்பட்டன
• குரு பக்திக்குக் கடுமையான சோதனை
முன்னுரை
உண்மையிலேயே இந்த ஜீவன் — மனித ஆத்மா — சத்துவம், ராஜஸம் என்ற மூன்று குணங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் இருக்கிறது. ஆனால் மனிதன் மாயையால் மறைக்கப்பட்டுத் தனது இயற்பண்பான சச்சிதானந்தப் பெருநிலையை மறந்து தானே செய்விப்பவனும், அனுபவிப்பவனும் என்று நினைத்துக்கொண்டு இவ்வாறாக முடிவற்ற இடர்ப்பாடுகளில் தன்னைத்தானே சிக்கவைத்துக் கொள்கிறான். விடுவித்துக்கொள்ளும் வழியும் அவனுக்குப் புலப்படவில்லை.
குருவின் பாதங்களில் செலுத்தும் அன்பான பக்தி ஒன்றே விடுதலையடைவதற்கான ஒரே வழி. சாயிபிரபு என்னும் மகத்தான விளையாட்டுக்காரர் அல்லது நடிகர், தம் அடியவர்களை மகிழ்வித்தார். அவர்களைத் தாமாகவே, தமது பண்புருவாகவே மாற்றம் செய்துகொண்டார்.
முன்னரே குறிப்பிட்ட காரணங்களால் சாயிபாபாவை நாம் ஒரு அவதாரமாகவே கருதுகிறோம். ஆனால் தான் கடவுளின் பணிவுள்ள ஒரு சேவகன் என்றே அவர் எப்போதும் கூறினார். அவர் தாமே ஓர் அவதாரமானபோதும்கூட எங்ஙனம் திருப்தியான வகையில் மக்கள் நடந்துகொள்ளவேண்டும், வாழ்க்கையில் தாங்கள் தங்கள், பணித்துறையிடத்திற்கேற்ற — வருணாஸ்ரம தர்மத்திற்கேற்ப — கடமைகளைச் செய்யவேண்டும் என்று வழி காண்பித்தார்.
அவர் ஒருபோதும் எந்த வகையிலும் மற்றவர்களைப் போட்டியிட்டு மேம்படும் முயற்சிகளைக் கொண்டதில்லை அல்லது தமக்காக ஏதேனும் செய்யும்படி அவர்களைக் கேட்டதில்லை. இவ்வுலகின் அசையும், அசையாப் பொருட்கள் யாவற்றிலும் கடவுளைக் கண்ட அவருக்குப் பணிவுடைமையே மிகவும் பொருத்தமானதொன்றாகும். ஒருவரையும் அவர் புறக்கணித்ததில்லை அல்லது மதிக்காமல் இருந்ததில்லை. நாராயணனை — கடவுளை — சர்வ ஜீவராசிகளிடமும் கண்டார். 'நான் கடவுள்' என்று ஒருபோதும் அவர் சொன்னதில்லை. ஆனால் தான் ஒரு பணிவுள்ள சேவகன் என்றும், எப்போதும் அவரை நினைவில் வைத்திருப்பதாகவும் கூறினார். 'அல்லா மாலிக்' — இறைவனே எஜமான் — என்று எப்போதும் உச்சரிப்பார்.
பல்வேறு வகையான முனிவர்களையெல்லாம் நமக்குத் தெரியாது. எங்ஙனம் அவர்கள் நடந்து கொள்கிறார்கள், என்ன செய்கிறார்கள், எதைச் சாப்பிடுகிறார்கள் என்பதெல்லாம் நாமறியோம். அறியாமையிலுள்ள, பிணிக்கப்பட்ட ஆன்மாக்களை விடுவிப்பதற்காகக் கடவுள் அருளால் அவர்கள் இவ்வுலகத்தில் தங்களை அவதரித்துக்கொள்கிறார்கள்.
நல்வினைகளின் சேமிப்பு ஏதேனும் நமது கணக்கில் இருக்குமானால் முனிவர்களின் கதைகள் அல்லது லீலைகளைக் கேட்பதற்கு நமக்கு ஓர் ஆர்வம் அல்லது சுவாரசியம் ஏற்படுகிறது. அல்லாவிடில் கேட்பதற்கு ஆர்வம் எழாது. இந்த அத்தியாயத்தின் முக்கிய கதைகளுக்கு இப்போது திரும்புவோம்.
யோகமும் - வெங்காயமும்
நானா சாஹேப் சாந்தோர்கருடன் ஒருமுறை ஷீர்டிக்கு ஒரு யோகப் பயிற்சியாளர் — யோகா சாதகர் — வரும்படி நேரிட்டது. பதஞ்சலியின் யோகசூத்திரங்கள் உள்ளிட்ட எல்லா யோகப் புத்தகங்களையும் அவர் கற்றிருந்தார். எனினும் யோகத்தில் நடைமுறை அனுபவம் ஏதும் அவருக்கு இல்லை. தமது மனதை ஒருமுகப்படுத்தி குவிக்கவும், சமாதி நிலையை ஒரு சிறிதுநேரம் எய்தவும் அவரால் முடியவில்லை. சாயிபாபா தம்பால் மகிழ்ச்சி அடைந்தாரென்றால், நீண்டநேரம் சமாதிநிலையை எய்துவதற்கு அவர் தமக்கு வழிகாட்டுவார் என்று நினைத்தார். உள்ளத்தில் இக்குறிக்கோளுடன் அவர் ஷீர்டிக்கு வந்தார்.
மசூதிக்கு அவர் சென்றபோது சாயிபாபா ரொட்டியை வெங்காயத்துடன் சாப்பிட்டுகொண்டிருப்பதைக் கண்டார். இதைக் கண்ணுற்ற அவருக்கு மனதில் ஓர் எண்ணம் எழுந்தது. "மட்கிப்போன ரொட்டியுடன் பச்சை வெங்காயத்தை உண்டுகொண்டிருக்கும் இம்மனிதர் எங்ஙனம் எனது தொல்லைகளுக்கு விடைகண்டு எனக்கு உதவிசெயயமுடியும்?!"
சாயிபாபா அவரது உள்ளத்தைப் படித்தறிந்து நானா சாஹேபை நோக்கிக் கூறினார், "ஓ! நானா, வெங்காயத்தை ஜீரணிக்கும் ஆற்றல் உள்ளவன் மட்டுமே அதை உண்ணவேண்டும். மற்ற ஒருவரும் அங்ஙனம் செய்யக்கூடாது".
இக்குறிப்பைக் கேட்ட யோகி ஆச்சரியத்தால் செயலிழந்தார். பின்னர் பூரணசரணாகதியுடன் பாபாவின் பாதங்களில் வீழ்ந்தார். தூய, திறந்த உள்ளத்துடன் தனது தொல்லைகளைக் கேட்டு பாபாவிடமிருந்து அவைகளுக்கு விடையும் பெற்றார். இவ்வாறாகத் திருப்தியும், மகிழ்ச்சியும் அடையப்பெற்று பாபாவின் உதி ஆசீர்வாதங்களுடன் அவர் ஷீர்டியை விட்டுச்சென்றார்.
பாம்புக் கடியினின்று குணமாகுதல்
இக்கதையைத் தொடங்கும் முன்பாக ஹேமத்பந்த், ஜீவனைக் கிளிக்கு மிக நன்றாக ஒப்பிடலாம் என்றும், ஒன்று உடம்பினுள்ளும் மற்றொன்று கூண்டினுள்ளுமாக இரண்டுமே கட்டுண்டிருக்கின்றன என்றும், கட்டுண்டுகிடக்கும் அவைகளது தற்போதைய நிலையே அவைகளுக்கு ஏற்ற நன்மையானது என்று அவைகள் கருதுவதாகவும் கூறுகிறார். உதவியாளர் ஒருவர் அதாவது குரு வரும்போது கடவுளருளால் அவைகளின் கண்ணைத் திறந்து, அவைகளின் கட்டுக்களினின்று அவைகளை விடுவிக்கும்போது மட்டுமே அவைகளின் கண்கள், இன்னும் பெரியதும் சிறந்ததுமான வாழ்க்கைக்குத் திறந்துவிடப்படுகிறது. இத்துடன் அவர்கள் முன்னைய வரையறையை உடைய வாழ்க்கையை ஒப்பிட்டால் அது சூன்யமே ஆகும்.
கடந்த அத்தியாயத்தில் மிரீகருக்கு நேரிடவிருந்த பேராபத்தினை எங்ஙனம் பாபா அறிந்திருந்தார் என்பதையும், அதிலிருந்து எங்ஙனம் அவரைக் காப்பாற்றினார் என்பதையும் கண்டோம். இதைவிடச் சிறப்பான கதை ஒன்றினை இப்போது வாசகர்கள் கேட்பார்களாக!
ஒருமுறை ஷாமாவை நச்சுப்பாம்பு ஒன்று கடித்துவிட்டது. அவரது கையிலுள்ள சுண்டு விரலில் கடிபட்டு விஷம் உடம்பு முழுக்கப் பரவத்தொடங்கியது. ஷாமாவும் தாம் இறந்துவிடுவோமேன்று என்று எண்ணுமளவிற்கு வலியும் அவ்வளவு தீவிரமாக இருந்தது. அந்த மாதியான விஷயங்களுக்கு எல்லாம் அடிக்கடி அனுப்பப்படும் விட்டோபா கடவுளிடம் அவரது நண்பர்கள் அவரை எடுத்துச் செல்ல விரும்பினர்.
ஆனால் ஷாமா, மசூதிக்குத் தமது விட்டோபாவிடம் — சாயிபாபா — ஓடிவந்தார். அவரைப் பார்த்ததும், பாபா திட்டவும், கண்டிக்கவும் தொடங்கினார். அவர் மூர்க்கமடைந்து "ஓ! இழிந்த பதுர்த்யா! — பூசாரியே — மேலே ஏறாதே. அங்ஙனம் ஏறினாயோ ஜாக்கிரதை" என்று கர்ஜித்தார். பின்பு "போ, அப்பாலே போ! கீழிறங்கு" என்றார். இங்ஙனம் பாபா சீற்றத்தினால் சிவந்து இருப்பதைப் பார்த்த ஷாமா பெரிதும் குழப்பமடைந்து ஏமாற்றமடைந்தார். அவர் மசூதியே தமது வீடு என்றும், சாயிபாபாவே தமது ஒரே அடைக்கலம் என்றும் எண்ணியிருந்தார். ஆனால் இங்ஙனம் விரப்பட்டால் அவர் எங்கே செல்வார்? உயிர் வாழ்வதின் நம்பிக்கை அனைத்தையும் இழந்து அமைதியாய் இருந்தார். சிறிது நேரத்திற்குப் பின் பாபா சாதாரணமாகவும், அமைதியாகவும் ஆனார். அப்போது ஷாமா மேலே சென்று அவர் அருகில் அமர்ந்தார்.
பின்னர் பாபா அவரிடம், "பயப்படாதே, எள்ளளவும் கவலைப்படாதே! கருணையுள்ள பக்கிரி உன்னைக் காப்பாற்றுவார். போய் வீட்டில் அமைதியாக அமர்ந்திரு, வெளியில் செல்லாதே. என்னை நம்பு. பயப்படாமல் இரு, கவலைப்படாதே" என்று கூறினார். பின்னர் அவர் வீட்டிற்கு அனுப்பப்பட்டார். அதன் பின்னர் ஷாமா எதை விரும்புகிறாரோ, அதை உண்ணவேண்டுமென்றும், வீட்டில் நடையுடையாக இருக்கவேண்டும் என்றும், ஆனால் படுத்து உறங்கவே கூடாது என்றும் குறிப்புக்களுடன் தாத்யா பாடீலையும், காகா சாஹேப் தீஷித்தையும் உடனேயே பாபா அனுப்பினார். இவ்வுரைகள் பின்பற்றப்பட்டன என்றும், சிறிது நேரத்தில் ஷாமா குணப்படுத்தப்பட்டார் என்றும் கூறவும் வேண்டுமா!
இது சம்பந்தமாக நினைவில் வைக்கவேண்டியது ஒன்றுதான். பாபாவின் மொழிகள் — போ, அப்பாலே ஓடு!, 'கீழிறங்கு' என்னும் ஐந்தெழுத்து மந்திரம் — மேலெழுந்தவாரியாக அது காணப்பட்டாற்போல் ஷாமாவை நோக்கிக் கூறப்பட்டதல்ல. அவை ஷாமாவின் உடலினுள் புகுந்து இரத்த ஓட்டத்துடன் கலக்க வேண்டாமென்று பாம்புக்கும், அதன் விஷத்துக்கும் இடப்பட்ட நேரடிக் கட்டளைகளாகும். மந்திர சாஸ்திரத்தில், நல்லறிவுத் திறமுடைய பிறர்களைப் போன்று எவ்வித மந்திர உச்சாடனமிடப்பட்ட அரிசியையோ, தண்ணீரையோ உபயோகிக்க வேண்டியிருந்ததில்லை. அவர்தம் சொற்களே ஷாமாவின் உயிரைக் காப்பதில் மிகச்சிறந்த பயனுள்ளனவாய் இருந்தன.
இக்கதைகளையும் அதைப் போன்றவற்றையும் கேட்கும் எவனும் சாயிபாபாவின் பாதங்களில் உறுதியான நம்பிக்கை அடையப் பெறுவான். மாயை என்னும் பெருங்கடலைக் கடப்பதற்கு பாபாவின் பாதங்களை எப்போதும் நினைவில் வைத்திருப்பதே ஒரே வழியாகும்.
காலாரா வியாதி
ஒருமுறை ஷீர்டியில் காலரா நச்சுத்தன்மை மிகுந்து தாண்டவமாடியது. ஊர்க்காரர்கள் மிகவும் பயந்து புறத்தேயுள்ள மக்கள் தொடர்பையெல்லாம் நிறுத்திக்கொண்டனர். பஞ்சாயத்தார் கூடி தொத்துவியாதி தடுப்புக்கும், ஒழிப்பிற்கும் இரண்டு கட்டளைகளை ஏற்படுத்தினர். அவைகளாவன:
1. எவ்வித எரிபொருள் — விறகு — வண்டியையும் கிராமத்திற்குள் வர அனுமதிக்கக்கூடாது.
2. அங்கு ஒரு ஆடு கூட கொல்லப்படக்கூடாது.
எவரேனும், இக்கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் இருந்தால் கிராமப் பஞ்சாயத்தார்களாலும், அதிகாரிகளாலும் அபராதம் விதிக்கப்படுவர். இவைகளெல்லாம் வெறும் மூட நம்பிக்கையென்று பாபா அறிந்தவராதலால் காலராக் கட்டளைகளை சிறிதளவும் இலட்சியம் செய்யவில்லை. இக்கட்டளைகள் அமுலில் இருக்கும்போது ஒரு எரிபொருள் வண்டி அங்கு வந்து கிராமத்துக்குள் நுழைய விரும்பியது. கிராமத்தில் எரிபொருள் பஞ்சம் இருந்தது எல்லோருக்கும் தெரிந்திருந்தது என்றாலும் மக்கள் எரிபொருள் வண்டியை விரட்ட ஆரம்பித்தனர்.
பாபாவுக்கு இவைகளெல்லாம் தெரியவந்தன. அவர் அவ்விடத்திற்குச் சென்று வண்டிக்காரனை மசூதிக்கு ஓட்டிவரும்படி கூறினார். பாபாவின் செய்கைக்காக ஒருவருக்கும் குரல் எழுப்பத் தைரியம் இல்லை. தமது துனிக்கு அவருக்கு எரிபொருள் தேவைப்பட்டது. எனவே அதை அவர் வாங்கினார். அக்னிஹோத்ரி தனது புனித நெருப்பை தன் வாழ்நாள் முழுவதும் எரியவிடுவது போன்றே பாபா தமது துனியை இரவும், பகலும் எரியவிட்டார். இதற்காக அவர் எப்போதும் எரிபொருளைச் சேமித்து வைத்திருந்தார். பாபாவின் பாபாவின் வீடான மசூதி அனைவருக்கும் தடைகளற்றும், திறந்து வைக்கப்பட்டும் இருந்தது. அதற்குப் பூட்டோ, சாவியோ கிடையாது. அங்கிருந்து சில ஏழை மக்கள் தங்கள் உபயோகத்திற்காக விறகை எடுத்துக்கொண்டு சென்றனர்.
பாபா இதைக்கண்டு முணுமுணுக்கவில்லை. பிரபஞ்சமனைத்திலும் கடவுள் வியாபித்திருந்ததை அவர் கண்டார். எனவே எவருடனும் அவர் பகையோ, கேட்ட எண்ணமோ கொண்டதில்லை. முழுவதுமாகத் துறந்தவராயினும் மக்களுக்கு ஒரு முன்உதாரணமாக இருக்கும் பொருட்டு அவர் இல்லறத்தார் போன்று வாழ்ந்தார்.
குருபக்திக்குக் கடுமையான சோதனை
இரண்டாவது காலராக் கட்டளை பாபாவினால் எங்ஙனம் செயல்படுத்தப்பட்டது என்பதைத் தற்போது காண்போம். கட்டளை அமுலில் இருக்கையில் யாரோ ஒருவர் மசூதிக்கு ஒரு ஆட்டைக் கொண்டுவந்தார். அது பலவீனமாயும், மூப்புடனும் இறக்கபோகும் தருவாயிலும் இருந்தது. இத்தருணத்தில் மாலிகானைச் சேர்ந்த ஃபக்கீர் பீர் முஹமது என்ற படேபாபா அருகில் இருந்தார்.
சாயிபாபா அவரை அதை ஒரே வெட்டில் வெட்டிப் பலியிட்டுச் சமர்ப்பிக்கும்படி கேட்டார். இந்த படேபாபா என்பவர் சாயி பாபாவால் மிகவும் மதிக்கப்பட்டவர். சாயிபாபாவின் வலதுபுறத்திலேயே அவர் எப்போதும் அமர்ந்திருந்தார். ஹூக்காவை அவர் முதலில் குடித்தபின்பு அது பாபாவுக்கும் பிறருக்கும் அளிக்கப்படும். மத்தியான உணவுவேளையின் போது கறிவகைகள் எல்லாம் பரிமாறப்பட்டபின்பு பாபா, படேபாபாவை மரியாதையுடன் கூப்பிட்டுத் தமது இடப்பக்கத்தில் அமர்த்திய பின்பு எல்லோரும் உண்டனர். தட்ஷிணையாகச் சேகரிக்கப்பட்ட பணத்திலிருந்தும் பாபா அவருக்கு தினசரி ரூ.50 அளித்து வந்தார். அவர் போகும்போது பாபாவும் நூறு அடி தூரம்வரை அவருடன் கூடச் செல்வார். பாபாவிடம் அவருக்கிருந்த அந்தஸ்து அத்தகையது.
ஆட்டை வெட்டும்படி பாபா அவரிடம் கேட்டபோது அவர் அதைத் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். "எதற்கும் பயனின்றி அது ஏன் கொல்லப்படவேண்டும்?" என்று அவர் கேட்டார். பின்னர் பாபா ஷாமாவை அதனைக் கொல்லும்படி கேட்டுக்கொண்டார். ராதாகிருஷ்ணமாயிடம் சென்று கத்தி ஒன்றை அவளிடமிருந்து வாங்கிவந்து அதை பாபாவின் முன்னால் வைத்தார். கத்தி எதற்காக வாங்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்த ராதாகிருஷ்ணமாயி அதைத் திருப்பி எடுத்துக்கொண்டாள்.
பின்னர் ஷாமா மற்றொரு கத்தியைப் பெறுவதற்காகச் சென்று உடனே திரும்பிவராமல் காகா சாஹேப் தீஷித்தின் வாதாவில் தங்கிவிட்டார். அப்போது காகா சாஹேபின் முறை வந்தது. அவர் 'நல்ல தங்கம்' தான் என்பதில் ஐயமில்லை என்றாலும் பரீட்சிக்கப்படவேண்டும். கத்தியை வாங்கி வந்து ஆட்டைக் கொல்லும்படி பாபா அவரைக் கேட்டார். அவர் சாதேவின் வாதாவுக்குச் சென்று ஒரு கத்தியுடன் திரும்பிவந்தார். பாபா ஏவியதும் கொல்லுவதற்குத் தயாராக அவர் இருந்தார். தூய பிராமணக் குடும்பத்தில் பிறந்த அவருக்குத் தமது வாழ்க்கையில் கொலையைப் பற்றியே தெரியாது. ஹிம்சைச் செயலுக்கு முற்றும் அவர் எதிரானபோதும் ஆட்டைக் கொல்வதற்குத் தன்னைத்தானே தைரியப்படுத்திக்கொண்டார்.
முஹமதியரான படேபாபா அதைக் கொல்வதற்கு விருப்பமற்றவராய் இருப்பதையும், இந்த தூய பிராமணர் அதைக் கொல்வதற்கு ஆயத்தப்படுத்திக்கொண்டு இருப்பதையும் கண்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். தன் வேட்டியை இறுகக் கட்டிக்கொண்டு கையைக் கத்தியுடன் தூக்கிக்கொண்டு பாபாவின் முடிவான அனுமதிக் குறிப்புக்காக அவரைப் பார்த்தார். பாபா "எதை நினைத்துக் கொண்டு இருக்கிறாய், உம்! வெட்டு" என்றார்.
பின்னர் கைகள் வெட்டுவதற்குத் தயாராக கீழே இறக்கப்படவிருந்த அதே தருணம் பாபா, "நிறுத்து, நீ எவ்வளவு கொடுமையானவனாய் இருக்கிறாய்! பிராமணனாயிருந்துகொண்டு ஆட்டைக் கொல்கிறாய்" என்றார். காகா சாஹேப் கீழ்ப்படிந்து கத்தியைக் கீழே வைத்துவிட்டு பாபாவிடம் கூறினார். "அமிர்தத்தையொத்த தங்கள் சொல் எங்களுக்குச் சட்டமாகும். எங்களுக்கு வேறு எவ்விதச் சட்டமும் தெரியாது. எப்போதும் தங்களையே நினைவு கூர்கிறோம். தங்கள் ரூபத்தைத் தியானிக்கிறோம். இரவும், பகலும் தங்களுக்கே கீழ்ப்படிகிறோம். கொல்வது சரியா, தப்பா என்பது எங்களுக்குத் தெரியாது அல்லது அதை நாங்கள் கருதுவதில்லை. பொருட்களுக்கான காரணத்தை ஆராயவோ, விவாதிக்கவோ நாங்கள் விரும்புவதில்லை. ஆனால் குருவின் கட்டளைகளுக்கு ஐயுறாப் பற்றுறுதிப்பாட்டுடன் ஒழுங்கான பணிவிணக்கப் பண்புடன் நடத்தலே எங்களது கடமையும், தர்மமும் ஆகும்."
பின்னர் பாபா, காகா சாஹேபிடம் தாமே பலியிடுதலையும், வெட்டும் வேலையையும் செய்துவிடுவதாகக் கூறினார். ஃபக்கீர்கள் அமரும் தகியா என்னும் இடத்தில் ஆட்டை வெட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது. பின்னர் ஆடு அவ்விடத்துக்குக் கொண்டுசெல்லபடுகையில் வழியிலேயே இறந்து விழுந்தது.
ஹேமத்பந்த் அடியவர்களைப் பாகுபடுத்துவதுடன் இந்த அத்தியாயத்தை முடிக்கிறார். மூன்று விதமானவர்கள் இருப்பதாக அவர் கூறுகிறார்.
(1) முதல் தரம் அல்லது சிறந்தவர்கள்
(2) இரண்டாம் தரம் அல்லது நடுவானவர்கள்
(3) மூன்றாம் தரம் அல்லது சாதாரணமானவர்கள்
முதல் தரமானவர்கள் குரு என்ன விரும்புகிறார் என்பதை ஊகித்தறிந்து அதை உடனே நிறைவேற்றி அவர்களிடமிருந்து உத்தரவு வரும்வரை காத்திராமல் அவர்களுக்குச் சேவை செய்கிறார்கள்.
இரண்டாம் தரமானவர்கள் தங்களது குருவின் கட்டளையை அட்சர சுத்தமாக சிறிதும் தாமதமின்றிக் கீழ்ப்படிகிறார்கள்.
மூன்றாம் தரமானவர்களோ குருவின் கட்டளையை நிறைவேற்றுதலை ஒத்திப்போட்டுக்கொண்டும், ஒவ்வொரு படியிலும் தவறு செய்துகொண்டும் இருக்கிறார்கள்.
அறிவுக்கூர்மையைப் பின்னணியாகக்கொண்ட உறுதியான நம்பிக்கையைச் சீடர்கள் பெற்றிருக்க வேண்டும். பொறுமையும் இவைகளுடன் சேருமானால் ஆன்மீக இலட்சியம் தொலைவில் இல்லை. மூச்சுக் கட்டுப்பாடு — உள் மூச்சு - வெளி மூச்சு — அல்லது ஹடயோகம் அல்லது பிற கடினப் பயிற்ச்சிகள் தேவையே இல்லை. மேலே குறிப்பிடப்பட்ட குணாதிசயங்களை அடியவர்கள் பெறுவார்களேயானால் இன்னும் அதிகமான செயல் திட்டங்களுக்கு அவர்கள் தயாராகின்றார்கள். பின்னர் குருமார்கள் தோன்றி ஆன்மீக பாதையின் முழுநிறைவுக்கு அவர்களை வழிநடத்துகிறார்கள்.
அடுத்த அத்தியாயத்தில் நாம் பாபாவின் விறுவிறுப்பான நகைச்சுவையையும், தமாஷையும் காண்போம்.
ஸ்ரீ சாயியை பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
- சணா லீலை
(1 ) ஹேமத்பந்த்
(2 ) சுதாமர்
(3 ) அண்ணா சிஞ்சணீ கரும் மௌஷிபாயியும்
முன்னுரை
சத்குருவின் பாதங்களில் நம் அஹங்காரத்தை சமர்ப்பித்தாலன்றி நமது வேலையில் வெற்றிபெறமாட்டோம். அஹங்காரத்தை ஒழித்தால் நமது வெற்றி உறுதியளிக்கப்படுகிறது.
சாயிபாபாவை வணங்குவதால் இகபர சௌபாக்கியம் இரண்டுமே கிடைக்கிறது. நம் உண்மையான இயற்கையில் நிலையாக்கப்பட்டு அமைதியும், மகிழ்ச்சியும் அடைகிறோம். எனவே எவரொருவர் அவரது அவரது சுபிட்சத்தைப்பெற விரும்புகிறாரோ அவர் சாயிபாபாவின் லீலைகளையும், கதைகளையும் பக்தியுடன் கேட்கவேண்டும். அவைகளைத் தியானம் செய்யவேண்டும். இவைகளை அவர் செய்வாரேயானால் தமது வாழ்க்கையின் இலட்சியத்தை சுலபமாக அடைந்து பேரானந்தம் பெறுவார்.
பொதுவாக அனைவரும் தமாஷையும், வேடிக்கையையும் விரும்புவார்கள். ஆனால் தங்களைப் பொருளாக வைத்து தமாஷ் செய்யப்படுவதை அவர்கள் விரும்புவதில்லை. ஆனால் பாபாவின் வழியோ விசித்திரமானது. அவைகள் அபிநயத்துடன் சேரும்போது பொதுமக்களுக்கு மிகவும் ஆர்வமூட்டுவதாகவும், அறிவுரை தருவதாகவும் இருக்கின்றன. எனவே கேலிக்கு அவர்கள் இலக்காயினும் பொருட்படுத்துவதில்லை. ஹேமத்பந்த் தனது சொந்த அனுபவத்திலேயே கீழே குறிப்பிடுகின்றார்.
சணா லீலை
ஷீர்டியில் ஞாயிறுதோறும் சந்தை நடைபெறும். அண்டையிலுள்ள கிராமங்களிலிருந்து மக்கள் அங்குவந்து தெருவில் பந்தல் கடைகளைப் போட்டு தங்களது பொருட்களையெல்லாம் விற்பனை செய்வர். ஒவ்வொரு மாலையும் மசூதியில் ஏறக்குறைய கும்பல் வந்துவிடும். ஆனால் ஞாயிறு மாலையோ மூச்சுத் திணறும் அளவுக்குக் கூட்டம் கூடிவிடும். அத்தகைய ஒரு ஞாயிற்றுக் கிழமையின்போது ஹேமத்பந்த் பாபாவின் முன்னால் அமர்ந்து பாபாவின் கால்களை நீவிப் பிடித்துக்கொண்டும், கடவுள் பெயரை முணுமுணுத்துக்கொண்டும் இருந்தார்.
ஷாமா பாபாவின் இடப்பக்கத்திலும் வாமன்ராவ் வலப்பக்கத்திலும் இருந்தனர். அப்போது பாபா சிரித்துக்கொண்டே அண்ணா சாஹேபிடம், "பாரும் உமது கோட்டின் கை மடிப்பில் தானியங்கள் இருக்கின்றன" என்று கூறிக்கொண்டே அவர் கோட்டு மடிப்பைத் தொட்டு அங்கு தானியங்கள் இருப்பதைக் கண்டார். ஹேமத்பந்த் விஷயம் என்னவென்று அறிவதற்காகத் தனது இடது முழங்கையை நீட்டினார். அப்போது அனைவரின் ஆச்சரியத்திற்கேற்ப சில பருப்பு மணிகள் கீழே உருண்டோடி சுற்றி உட்கார்ந்திருந்தவர்களால் பொறுக்கியெடுக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியே தமாஷிற்கான விஷயமாக ஆனது. அங்கிருந்த அனைவரும் எங்ஙனம் தானியம் கோட்டு மடிப்புக்குள் சென்று அவ்வளவு நேரமும் அங்கேயே இருந்தன என்று யூகிக்க இயலவில்லை. ஒருவரும் இவ்விஷயத்தில் திருப்தியான பதிலை அளிக்க இயலாத இவ்வினோதத்தைப் பற்றி அதிசயித்துக் கொண்டிருக்கையில் பாபா கூறினார்.
"இந்த ஆளுக்கு — அண்ணா சாஹேப் — தனியாகத் தின்னும் பழக்கம் இருக்கிறது. இன்றைக்குச் சந்தை நாளாகையால் பருப்பு மணிகளை அசைபோட்டுக்கொண்டே வந்தார். அவர் பழக்கம் எனக்குத் தெரியும். அதற்கு இதுவே சாட்சி, இவ்விஷயத்தில் வேறென்ன ஆச்சரியமிருக்கிறது?"
ஹேமத்பந்த்: பாபா பொருட்களைத் தனியாகத் தின்று நானறியேன். பின்னர் என்மீது இந்தக் கெட்ட வழக்கத்தை ஏன் சுமத்துகிறீர்கள்? ஷீர்டி சந்தையையே நான் இன்னும் பார்த்தது இல்லை. இன்றைக்கு, சந்தைக்கு நான் போகவே இல்லை. பின்னர் எங்ஙனம் நான் பருப்பு மணிகள் வாங்கியிருக்க முடியும்? அவைகளை வாங்காதபோது எப்படி நான் உண்ணமுடியும்? எனதருகில் உள்ளவர்களுக்குப் பகிர்ந்து கொடுக்காமல் நான் ஒருபோதும் எதையும் சாப்பிடுவதில்லையே!
பாபா: அருகிலிருப்பவர்களுக்கு நீர் கொடுப்பது உண்மைதான். ஆனால் ஒருவரும் அருகில் இல்லையென்றால் நீரோ, நானோ என்னசெய்யமுடியும்? ஆனால் நீர் உண்ணும்முன் என்னை நினவு கொள்கிறீரா? எப்போதும் நான் உம்முடன் இருக்கவில்லையா? பின்பு நீர் உண்ணும் முன்பாக எதையேனும் எனக்கு அளிக்கிறீரா?
நீதி
இந்நிங்கழ்சியின் வாயிலாக பாபா நமக்கு என்ன போதிக்கிறார் என்பதைக் கவனத்துடன் நினைவில் வைப்போமாக! புலன்கள் தரும் தேவைகளை அடையும் முன்னதாகவே மனமும், அறிவும் அவைகளின் பலன்களை அனுபவித்துவிடுகின்றன என பாபா அறிவுறுத்தியுள்ளார். முதலில் பாபாவை நினை. அதுவே உன் மனதில் நிலைகொண்டுள்ள அவருக்கு நிவேதனம் செய்யும் முறையாகிறது. புலன்கள் முதலியன தங்கள் தேவைகளை அடையாமல் இருக்க இயலாது. ஆனால் அவைகள் முதலில் குருவுக்குச் சமர்ப்பிக்கப்பட்டால் அவைகளின் மீதுள்ள பற்று இயற்கையாகவே மறைந்துவிடுகிறது. இவ்விதமாக ஆசை, கோபம், வெறுப்பு முதலியவை பற்றிய நமது எல்லா எண்ணங்களும் முதலில் குருவிடம் சமர்ப்பிக்கப்பட்டு அவரை நோக்கிச் செலுத்தும் பயிற்சியானது அளிக்கப்பட்டால் எல்லாவித எண்ணங்களையும் களைவதற்குக்
கடவுள் உதவிசெய்வார்.
பொருட்களை அனுபவிக்கும்முன் பாபா அருகிலோ, அல்லது அங்கிருப்பதாகவோ, நினைத்துக்கொண்டால் அப்பொருள் அவர் அனுபவிக்கத்தக்கதா அல்லவா என்ற கேள்வி உடனே எழும். பின் அனுபவிக்கத்தகாதவை எல்லாம் நம்மால் ஒதுக்கப்பட்டு, நமது தீய பண்புகள் அல்லது செயல்கள் நம்மைவிட்டு மறைகின்றன. நமது பண்பும் வளர்கிறது. பின்னர் குருவிடம் உள்ள அன்பு வளர்ந்து தூய ஞானம் துளிர்க்கிறது.
இந்த ஞானம் வளரும்போது, 'நான்', 'எனது' என்ற எண்ணம் அழிந்து நமது அறிவு ஆன்ம உணர்வுடன் கலக்கிறது. பின்னர் நாம் பேரின்பத்தையும், திருப்தியையும் பெறுகிறோம். குருவுக்கும், கடவுளுக்கும் பேதமில்லை. அவர்களுள் பேதம் காண்பவன் கடவுளை எவ்விடத்தும் காண்பதில்லை. எனவே பேத மனப்பான்மையை ஒழித்துக் குருவையும், கடவுளையும் ஒன்றாகக் கருதவேண்டும். எனவே எண்ண மாறுபாடுகளை நீக்கி குருவைக் கடவுளாக வழிபடவேண்டும். இவ்வாறு நமது குருவுக்குப் பணிவிடை செய்தோமானால் கடவுள் நிச்சயம் மகிழ்வடைந்து நமது மனத்தைத் தூய்மைப்படுத்தி நம்மை நாமே அறியும் உணர்வையளிக்கிறார். இரத்தினச் சுருக்கமாக, முதலில் குருவை நினைக்காமல் நாம் எப்பொருட்களையும் புலன்கள் வழி அனுபவிக்கக்கூடாது.
இவ்விதமாகப் பயிற்சியளிக்கப்பட்டால், நம் மனம் பாபாவால் நிறைந்து, பாபாவின் தியானம் விரைவில் வளரும். பாபாவின் சகுணரூபம் எப்போதும் நம் கண்முன் இருக்கும். பிறகு பக்தி, பற்றின்மை, முக்தி யாவும் நம்முடையதேயாம். இங்ஙனமாக நமது மனக்கண்ணில் பாபாவின் ரூபம் நிலைப்படுத்தப்பட்டால் நாம் பசி - தாகத்தையும், இச்சம்சார வாழ்க்கையையும் மறைந்துவிடுகிறோம். உலக போகங்களில் நமக்கிருக்கும் ஞாபகம் மறைந்துவிடும். நமது மனம் அமைதியையும், மகிழ்ச்சியையும் அடையும்.
சுதாமரின் கதை
மேற்கூறிய கதை சொல்லப்படும்போது ஹேமத்பந்த் அதே மாதிரியான சுதாமரின் கதையை நினைவுகூர்கிறார். அதே தத்துவத்தை இக்கதையும் விளக்குவதால் இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது.
கிருஷ்ணரும், அவரது அண்ணனான பலராமரும் சுதாமர் என்ற தோழருடன் அவர்களது குரு சாந்தீபனி முனிவரின் ஆச்சிரமத்தில் வசித்து வந்தனர். ஒருமுறை கிருஷ்ணரும், பலராமரும் காட்டிற்கு விறகு கொண்டுவருவதற்காக அனுப்பப்பட்டனர். பின்னர் சாந்தீபனியின் மனைவி அதேபோல் சுதாமரையும் மூவருக்குமான கடலைப் பருப்புகளுடன் காட்டுக்கு அனுப்பினாள்.
கிருஷ்ணர், சுதாமரைக் காட்டிடையே கண்டபோது அவரிடம், "தாதா, நான் தாகமாயிருப்பதால் எனக்கு தண்ணீர் வேண்டும்" என்றார். அதற்கு சுதாமர் "வெறும் வயிற்றுடன் தண்ணீர் குடிக்கக்கூடாது. சிறிதுநேரம் இளைப்பாறுவது நல்லது" என்றார். அவர் தன்னிடம் கடலை இருப்பதாகவோ, அதைச் சிறிது அவர் எடுத்துக்கொள்ளலாம் என்றோ கூறவில்லை. கிருஷ்ணர் களைப்பாயிருந்தமையால் சுதாமரின் மடியில் தலைவைத்துப் படுத்துக் குறட்டைவிட்டார். இதைக்கண்டு சுதாமர் தன்னிடமிருந்த கடலையை எடுத்து உண்ணத் தொடங்கினார். கிருஷ்ணர் திடீரெனக் கேட்டார், "தாதா என்ன சாப்பிடுகிறாய்? சப்தம் எங்கிருந்து வருகிறது?"
அதற்கு சுதாமர், "சாப்பிடுவதற்கு என்ன இருக்கிறது? நான் குளிரால் நடுங்கிக்கொண்டு இருக்கிறேன். எனது பற்கள் தாளம் அடித்துக்கொண்டிருக்கின்றன. விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைப் கூட என்னால் திருத்தமாகப் பராயணம் செய்யமுடியவில்லை" என்றார்.
இதைக்கேட்ட சர்வவியாபியான கிருஷ்ணர், "மற்றவர்களது பொருட்களை உண்ணும் ஒரு மனிதனைக் கனவில் கண்டேன், அதைப்பற்றிக் கேட்டபோது தின்பதற்கு ஒன்றுமில்லை என்ற பொருளில், 'என்ன? மண்ணா தின்பதற்கு உள்ளது!' எனக் கேட்டான். அதற்கு மற்றொருவன் 'அது அங்ஙனமே இருக்கட்டும்' என்றான். தாதா இது ஒரு கனவுதான். நீ எதையும் எனக்கில்லாமல் உண்ணமாட்டாய் என்று எனக்குத் தெரியும். ஆயினும் கனவில் கண்ட ஞாபகத்தில் நீ என்ன உண்கிறாய் என்று நான் கேட்டேன்?" என்றார்.
சர்வவியாபியான கிருஷ்ணரைப் பற்றியும், அவர்தம் லீலையைப் பற்றியும், சுதாமர் எள்ளளவேனும் அறிந்திருப்பாராயின் அவர் அவ்வாறு நடந்துகொண்டிருக்கமாட்டார். எனவே தன் செய்கைக்காக அவர் வருந்த வேண்டியதாயிற்று. அவர் கிருஷ்ணரின் நெருங்கிய நண்பரானபோதும் தமது வாழ்க்கையை அஷ்டதரித்திரத்தில் கழிக்க வேண்டியதாயிற்று.
ஆனால் பின்னர் அவர் கிருஷ்ணருக்குத் தன் மனைவியின் சொந்த உழைப்பால் ஈட்டிய ஒரு பிடி அவலை அளித்தபோது கிருஷ்ணர் மகிழ்ச்சியடைந்து அவருக்கு அனுபவிப்பதற்காக ஒரு பொன் நகரத்தை அளித்தார். மற்றவர்களுடன் பகிர்ந்துண்ணாது தனியாகத் தின்போர் இக்கதையை நினைவில் வைக்கவேண்டும். கடவுளுக்கு முதலில் சமர்ப்பித்து அவைகள் அவரால் திருப்தியடையப்பெற்ற பிறகே அவற்றை அனுபவிக்க வேண்டும் என்று ஸ்ருதியும் பகர்கின்றது. பாபாவும் நமக்கு அதையே அவர்தம் ஒப்புவமையற்ற வேடிக்கையான வழியில் கற்பித்திருக்கிறார்.
அண்ணா சிஞ்சணீ கரும் மௌஷிபாயியும்
ஹேமத்பந்த் இப்போது சமாதானம் நிலைநாட்டுவோரின் பாகத்தை பாபா ஏற்றுக்கொண்ட மற்றொரு வேடிக்கையான சம்பவத்தைக் கூறுகிறார். தாமோதர் கனஷ்யாம் பாபரே என அழைக்கப்பட்ட அண்ணா சிஞ்சணீ கர் என்ற அடியவர் ஒருவர் இருந்தார். அவர் எளிமையானவர், முரடர், நேர்மையானவர். அவர் எவரையும் இலட்சியம் செய்யமாட்டார். எப்போதும் கரவின்றிப் பேசி எல்லாவற்றையும் கைமேல் காசிலேயே நடத்தினார். வெளிப்படையாகக் கடுமையாகவும், வசப்படாதவராயும் இருந்தபோதும் அவர் நட்பண்புடையவராயும், கள்ளமின்றியுமிருந்தார். எனவே சாயிபாபா அவரை நேசித்தார்*. — * இவர் பின்னர் தனது சொத்துக்கள் யாவற்றையும் ஷீர்டி சாயிபாபா சமஸ்தானத்துக்கு எழுதி வைத்தார்.
ஒருநாள், ஒவ்வொருவரும் ஒரு வழியில் சேவை செய்வதைப்போன்று, அண்ணாவும் தலைகுனிந்து நின்றுகொண்டு கைப்பிடியில் இருந்து இடது கைக்கு நீவிக்கொண்டிருந்தார். அம்மா என்று பாபாவாலும் மௌஷிபாயி என்று பிறராலும் அழைக்கப்பட்ட கிழ விதவையான வேணுபாஜி கௌஜல்கி வலது புறத்தில் அவளுக்கே உரிய விதத்தில் சேவை செய்தாள். மௌஷிபாயி தூய உள்ளத்துடன் கூடிய முதியவள். அவள் தன் இரு கைவிரல்களையும் கோர்த்துக்கொண்டு பாபாவின் அடிவயிற்றைச்சுற்றி அழுத்தமாக பதித்துப் பிசைந்தாள்.
அடிவயிறே தட்டையாகி விடும்படியான வேகத்துடன் சேவை செய்துகொண்டிருந்தாள். பாபா இப்படியும் அப்படியும் புரண்டுகொண்டிருந்தார். மற்றொருபுறமிருந்த அண்ணா நிதானத்துடன் இருந்தார். ஆனால் மௌஷிபாயின் அசைவுகளுடன் அவளது முகமும் அசைந்தது. ஒருதரம் அவளது முகம் அண்ணாவின் முகத்திற்கு மிக அருகில் வந்துவிட்டது. வேடிக்கையான பண்புடைய அவள், "ஓ! இந்த அண்ணா ஒரு கெட்டவன். அவன் என்னை முத்தமிட விரும்புகிறான். தலை நரைக்கும் வயதாகியும் முத்தமிடுவதற்கு அவன் வெட்கப்படவில்லை" என்றாள். இச்சொற்கள் அண்ணாவைக் கொபாவேசமடையச் செய்தன. முஷ்டியை மடக்கிவிட்டுக்கொண்டு அவர் "நான் ஒரு கெட்ட கிழவன் என்றா கூறுகிறாய்? நான் அவ்வளவு முட்டாளா? நீயே சண்டையை ஆரம்பித்தாய், என்னுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறாய்?" என்றார்.
அங்கிருந்த அனைவரும் அவர்களுக்கிடையே நடைபெறும் விஷயங்களை ரசித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் இருவரையுமே பாபா சமமாக நேசித்தார். சண்டையை நிறுத்த விரும்பிய அவர் இவ்விஷயத்தை மிகத்திறமையுடன் கையாண்டார். அன்புடன் அவர் கூறினார். "அண்ணா, ஏன் அனாவசியமாக இக்கூச்சலையும், குழப்பத்தையும் உண்டாக்குகிறாய்? தாய் முத்தமிடும்போது உள்ள நெறியின்மை அல்லது தீங்குதான் என்ன என்பது எனக்கு விளங்கவில்லை?" என்றார். பாபாவின் இம்மொழிகளைக் கெட்ட இருவரும் திருப்தியடைந்தனர். எல்லோரும் மன மகிழ்வுடன் தங்கள் உளம் நிறைவடையும்வரை சிரித்தனர்.
பாபாவின் குணாதிசயம் - பக்தர்களின்பால் அவரின் சார்பு
பாபாவின் அடியவர்கள் அவரர்வர்களுக்குரிய வழியிலேயே அவருக்குச் சேவைசெய்ய அவர் அனுமதித்திருந்தார். இதில் பிறர் தலையிடுவதை அவர் விரும்பவில்லை. உதாரணமாக இதே மௌஷிபாஜி மற்றொரு சந்தர்ப்பத்தில் பாபாவின் அடிவயிற்றைத் தேய்த்துவிட்டுக் கொண்டிருந்தாள். அவள் உபயோகித்த கடுமையையும், வேகத்தையும் கண்டு மற்ற அடியவர்களெல்லாம் மனந்தளர்ந்து கவலை கொண்டவரானார்கள். அவர்கள் "ஓ! அம்மா இன்னும் நிதானமாகவும், மெதுவாகவும் செயல்படு. அல்லாவிடில் பாபாவின் இரத்தக்குழாய், நரம்பு இவைளை உடைத்துவிடுவாய்" என்று அவளிடம் கூறினார்கள்.
இதன் பேரில் பாபா உடனே தன் இருக்கையை விட்டு எழுந்தார். தமது சட்காவைத் தரையில் ஓங்கி அடித்தார். அவர் கோபாவேசம் அடைந்தார். அவரது கண்கள் நெருப்புத் துண்டம் போலாயின. ஒருவருக்கும் அவர் முன் நிற்கவோ, பேசவோ தைரியம் இல்லை. பின்னர் அவர் சட்காவின் ஒரு முனையைத் தன் இரு கைகளாலும் எடுத்துக்கொண்டு, வயிற்றிலுள்ள தொப்புளில் குச்சியின் ஒரு நுனியை அமுக்கினார். மற்றொரு நுனியைக் கம்பத்தில் பொருத்தவைத்து அழுத்த இரண்டு - மூன்றடி நாலமுள்ள சட்கா முழுவதும் அடிவயிற்றுக்குள் சென்றுவிட்ட மாதிரியாகத் தோன்றியது.
இன்னும் சிறிது நேரத்தில் அடிவயிறு கிழிந்துவிடுமென்று மக்கள் பயந்தனர். தூண் உறுதியானது. அசையாதது. பாபா அதனருகில் மிகமிக நெருக்கமாகப் போகத்தொடங்கித் தூணைப் பலமாக அணைத்தார். எந்த வினாடியிலும் வயிறுகிழியுமென எதிர்பார்க்கப்பட்டது. அவர்கள் எல்லாம் பீதியடைந்து என்ன செய்வதென்று தெரியாமல் பயத்தாலும், வியப்பாலும் ஊமையாகி நின்றனர். பாபா தமது அடியவனுக்காகவே இவ்விதம் கஷ்டப்பட்டார். மற்ற அடியவர்கள் மௌஷிபாஜிடம் அவளது சேவையில் இன்னும் நிதானமாக இருக்கும்படியும் பாபாவுக்கு எவ்வித வலியையோ, தொல்லையையோ உண்டாக்கவேண்டாம் என்றும் குறிக்கவே விரும்பினர். நல்லெண்ணத்துடனே அவர்கள் இதைச் செய்தனர். ஆனால் பாபா இதைக்கூடப் பொறுக்கவில்லை. தங்களது நல்லெண்ண முயற்சியினால் பெருந்துன்பம் விளைவிக்கும் இத்திடீர் விளைவைக் கண்ட அவர்கள் ஆச்சரியமடைந்தனர். காத்திருந்து பார்ப்பதைத் தவிர அவர்களுக்கு வேறொன்றும் செய்யமுடியவில்லை.
அதிஷ்டவசமாக பாபாவின் ஆவேசம் சீக்கிரம் குளிர்ந்தது. அவர் குச்சியை விட்டுவிட்டுத் தன் இடத்தினுள் வந்து அமர்ந்தார். இதிலிருந்து அடியவர்கள் மற்றவர் சேவைகளில் குறுக்கிடக்கூடாது என்றும் தாங்கள் விரும்பியவண்ணமே பாபாவுக்கு அவர்கள் சேவைசெய்ய விட்டுவிடவேண்டுமென்கிற பாடத்தைத் தெரிந்துகொண்டனர். ஏனெனில் அவர்கள் செய்யும் சேவைகளின் மதிப்பையும், தகுதியையும் பாபாவே அளக்க வல்லமையுடையவராய் இருக்கிறார்.
ஸ்ரீ சாயியை பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
1. வியாபார விவகாரம்
2. மாம்பழலீலை
முன்னுரை
கருணைக் கடலும், ஈசுவர அவதாரமும், பரப்பிரம்மமும், மாபெரும் யோகீஸ்வரனும் ஆகிய சாயிபாபாவுக்கு நமது அஷ்ட அங்கங்களாலும் நமஸ்கரித்துவிட்டு நாம் இந்த அத்தியாயத்தைத் தொடங்குகிறோம். ஞானிகளின் முடிமணியாகவும், எல்லாப் புனிதப் பொருட்களின் இருப்பிடமாகவும் நமது ஆத்மராமனேயனாகவும், பக்தர்களுக்கு ஒரு வல்லமை வாய்ந்த அடைக்கலப் பொருளாகவும் விளங்கும் சாயிபாவுக்கு ஜெயம் உண்டாகட்டும். வாழ்க்கையின் இலட்சியம், குறிக்கோள் இவற்றை எய்திய அவர்முன் வீழ்ந்து வணங்குவோம்.
சாயிபாபா எப்போதுமே கருணை நிறைந்தவராக இருக்கிறார். அவர்பால் முழுமனதான பக்தியே நம்மைப் பொறுத்தவரை தேவைப்படுவதாகும். உறுதியான நம்பிக்கையும், பக்தியும் ஒரு பக்தன் பெறும்போது அவனது விருப்பங்கள் விரைவில் நிறைவேறுகின்றன. சாயிபாபாவின் வாழ்க்கையையும், லீலைகளையும் எழுதவேண்டுமென்ற ஆர்வம் ஹேமத்பந்தின் உள்ளத்தில் எழுந்தபோது அதை உடனே அவரைக்கொண்டு எழுதிமுடிக்கச் செய்தார். குறிப்புகள், ஞாபகங்கள் இவைகளை வைத்துக்கொள்ள உத்தரவு கொடுக்கப்பட்டபோது, ஹேமத்பந்த் உணர்வூட்டப்பெற்றார். அவரது அறிவு, வேலையை மேற்கொண்டு முடிப்பதற்கு வேண்டிய உறுதியும், தைரியமும் பெற்றது.
இப்பணியை மேற்கொள்ளத் தாம் தகுதியுடியவரல்ல என்றும், ஆனால் பாபாவின் அருள் நிறைந்த ஆசீர்வாதங்களே மேற்கொண்ட பணியை சம்பூர்ணம் செய்வதற்கு அவரை ஊக்குவித்தது என்றும் அவர் கூறினார். எனவே சத்சரிதம் என்ற இக்கிணற்றிலிருந்து அல்லது நீர்த்தேக்கத்தினின்று அல்லது சோமகாந்தக்கல்லிலிருந்து சாயி லீலைகள் என்ற ரூபத்தில் அமிர்தம் ஊறி வருகிறது. படிப்போர் அதை மனதாறப் பருகுகிறார்கள்.
சாயிபாபாவின் மீது எந்த ஒரு பக்தனுக்கு முழுமனதான, பூரணமான பக்தி ஏற்படுகிறதோ அவனது கேடுகளும், அபாயங்களும் துடைக்கப்பட்டு அவனது நலம் பாபாவால் கவனிக்கப்படுகிறது. அகமத்நகரிலிருந்த — பிற்பாடு புனே — தாமோதர் சாவ்லாராம் ராஸனே காஸார் என்ற தாமு அண்ணாவின் கதை மேற்கூறிய கருத்தின் விளக்கமாகக் கீழே தரப்படுகிறது.
தாமு அண்ணா
அத்தியாயம் 6ல் ஷீர்டியில் ராமநவமித் திருவிழா சம்பந்தமாக இவரைப்பற்றி முன்னமே கூறப்பட்டிருப்பதை வாசகர்கள் கவனித்திருப்பார்கள். ஏறக்குறைய 1895ல் ராமநவமி உற்சவக் கொண்டாட்டம் துவக்கப்பட்டபோது அவர் ஷீர்டிக்குச் சென்றார். அதிலிருந்து ஒவ்வொரு வருட விழாவின்போதும் அவர் அலங்காரக் கொடியையோ அல்லது பொம்மையுள்ள குச்சியையோ ஏற்பாடு செய்துவந்தார். அவ்விழாவுக்கு வரும் ஏழைகளுக்கும், பக்கிரிகளுக்கும் அன்னதானம் செய்தார்.
அவரது வியாபார ஊக பேரங்கள்:
(1) பஞ்சு
தாமு அண்ணாவும், பம்பாய் நண்பரொருவரும் கூட்டாகப் பஞ்சு பேர வியாபாரம் செய்யவேண்டுமென்றும் அது பல இலட்சங்களை இலாபமாகக் கொணரும் என்றும் எழுதியிருந்தார். — ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமியிடம் 1936ல் தாமு அண்ணா கொடுத்த வாக்குமூலத்தின்படி, பம்பாய் விவகாரம் கூட்டாளி இல்லாமல் தரகர் ஒருவரிடமிருந்து பெற்றதென்பதும், தாமு அண்ணா மட்டும் இலாபம் பெறுவார் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் — 1874-1956 — சென்னை, திருமலை சாயிபாபா கோவிலையும், அகில இந்திய சாயி சமாஜத்தையும் நிறுவியவர்
வியாபாரம் நன்றாயிருக்கிறது என்றும், எவ்வித அபாயமுமில்லை என்றும் வாய்ப்பு தவறவிடப்படக்கூடாது என்றும் தரகர் எழுதி இருந்தார். தாமு அண்ணா மனதில் ஊசலாடிக் கொண்டிருந்தார்.
இந்த விவகாரத்தில் உடனே முடிவெடுக்க அவரால் முடியவில்லை. இதைப்பற்றி அவர் சிந்தித்தார். அவர் பாபாவின் பக்தர். எல்லாத் தகவல்களையும் கொடுத்து அவர் ஷாமாவுக்கு ஒரு கடிதம் எழுதினார். இதுகுறித்து பாபாவைக் கேட்டு அவரது ஆலோசனையை எழுதும்படியும் வேண்டிக்கொண்டிருந்தார். அடுத்தநாள் கடிதம் ஷாமாவுக்குக் கிடைத்தது. மத்தியானம் மசூதிக்கு வந்து, அதை பாபாவின் முன் வைத்தார். ஷாமாவை விஷயம் என்னவென்று கேட்டு, கடிதம் எதைப்பற்றியது என்று வினவினார்.
ஷாமா: சில விஷயங்கள் பற்றி அகமத்நகரைச் சேர்ந்த தாமு அண்ணா தங்களைக் கேட்க விரும்புகிறார்.
பாபா: அவன் என்ன எழுதுகிறான். என்ன திட்டம் போடுகிறான்? கடவுள் கொடுத்ததைக் கொண்டு திருப்தியடையாமல் ஆகாயத்தைப் பிடிக்க முயற்சி செய்வதாகத் தெரிகிறது. கடிதத்தைப் படி.
ஷாமா: தாங்கள் இப்போது கூறியதைத் தான் இக்கடிதம் கூறுகிறது. ஓ! தேவா, நீங்கள் இங்கே அமைதியாகவும், அடக்கமாகவும் அமர்ந்துகொண்டு பக்தர்களைக் குழம்பச்செய்து அவர்கள் அமைதியற்றுத் தவிக்கும்போது சிலரைக் கடிதம் மூலமாகவும், சிலரை நேரடியாகவும் இங்கு இழுக்கிறீர்கள். கடிதத்தில் அடங்கியுள்ள விஷயம் தங்களுக்கு தெரியுமென்றால் பின் என்னை ஏன் படிக்கும்படி சொல்லி வற்புறுத்துகிறீர்கள்?
பாபா: ஓ! ஷாமா, தயவுசெய்து அதைப்படி, சந்தர்ப்பவசமாக நான் ஏதாவது பேசுவேன். அதை யார் நம்புவார்கள்?
பின் ஷாமா அக்கடிதத்தை வாசித்தார். பாபா அதைக் கவனத்துடன் கேட்டு உணர்ச்சியுடன் கூறினார், "சேட்டுக்கு — தாமு அண்ணாவுக்கு — பைத்தியம் பிடித்துவிட்டது. அவனது வீட்டில் எதுவும் தேவையிருக்கவில்லை. இப்போது அவனுக்கு இருப்பதைக்கொண்டு திருப்தியடைந்து இலட்சங்களைப்பற்றிக் கவலைப்படாமல் இருக்கும்படி பதில் எழுது."
தாமு அண்ணா ஆவலுடன் காத்திருந்த பதிலை ஷாமா அனுப்பினார்.
அதைப்படித்துவிட்டு இலட்சரூபாய்களை இலாபமாகப் பெறவிருந்த அவரின் ஆர்வமும், நம்பிக்கையும் தரைமட்டமாக்கப்பட்டத்தை அறிந்தார். பாபாவைக் கலந்தாலோசித்ததில் தாம் தவறு செய்துவிட்டதாகக் கருதினார். ஆனால் பதிலில் ஷாமா, பார்ப்பதற்கும், கேட்பதற்கும் அதிக வித்தியாசம் இருப்பதாகவும், அவரே ஷீர்டிக்கு நேரடியாக வரவேண்டுமெனவும், பாபாவைக் காணவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்ததால் தாமே ஷீர்டிக்குச் சென்று பாபாவை நேரடியாக இவ்விஷயத்தைப் பற்றிக் கேட்பதே சரியானது என்று நினைத்தார். எனவே அவர் ஷீர்டிக்குச் சென்று பாபாவைக் கண்டு, வீழ்ந்துபணிந்து அவரது கால்களைப் பிடித்துவிட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார். விவகாரத்தைப் பற்றி வெளிப்படையாகக் கேட்க அவருக்குத் தைரியமில்லை. பாபாவுக்குக் கொஞ்சம் பங்கு கொடுத்தால் நலமாயிருக்கும் என அவர் எண்ணினார்.
பாபா இந்த வியாபாரத்தில் தமக்கு உதவி செய்தால் அவருக்குக் கொஞ்சம் பங்கையோ, இலாபத்தையோ அளிக்கலாம் என மனதில் நினைத்தார். தாமு அண்ணா தன மனதில் இரகசியமாகச் சிந்திதுக்கொண்டிருந்தார். ஆனால் பாபாவுக்கு எதுவுமே திரையிடப்பட்டிருக்கவில்லை. நடந்தது, நடப்பது, நடக்கப்போவது யாவும் அவருக்கு உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிவாக இருந்தது. குழந்தை இனிப்பை விரும்புகிறது. ஆனால் தாய் அதற்குக் கசப்பான மாத்திரைகளைப் புகட்டுகிறாள். முன்னது அதன் தேக நிலைக்குக் கேடு செய்கிறது. பின்னது நலப்படுத்துகிறது. சிசுவின் நலன்கருதியே தாய் கசப்பான மாத்திரையை அதற்குச் சமாதானம் செய்து புகட்டுகிறாள்.
அன்பான தாயான பாபாவும், பக்தர்களின் நிகழ்கால, எதிர்கால நன்மைகளை அறிந்தவராதனால் தாமு அண்ணாவின் மனதில் இருப்பதை அறிந்து, "பாபு, அம்மாதிரியான உலக விவகாரத்திலெல்லாம் — இலாபப் பங்கு — நான் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை" என்றார். பாபாவின் சம்மதமின்மையை அறிந்த தாமு அண்ணா அந்த எண்ணத்தைக் கைவிட்டார்.
2. தானிய வியாபாரம்
பின் அவர் தானியம், அரிசி, கோதுமை, பலசரக்குச் சாமான்கள் இவைகளில் வியாபாரம் செய்யலாம் என நினைத்தார். பாபா அவரின் இந்த எண்ணத்தையும் படித்து "ரூபாய்க்கு 5 சேர் என வாங்கி 7 சேர் என விற்பாய்" எனக் கூறினார். எனவே இந்த வியாபாரமும் கைவிடப்பட்டது. தானிய விலையேற்றம் சிலநாள்வரை இருந்தது. பாபாவின் தீர்க்க தரிசனம் பொய்யாகிவிடும்போல் தோன்றியது. ஆனால் ஓரிரண்டு மாதங்களில் எங்கும் மழை பெய்து, விலைகளெல்லாம் திடீரென இறங்கிப் போய்விட்டன.
எனவே தானியத்தைச் சேர்த்து வைத்தவர்கள் எல்லாம் நஷ்டம் அடைந்தனர். இவ்விதியிலிருந்து தாமு அண்ணா காப்பாற்றப்பட்டார். மற்றொரு வியாபாரியுடன் தரகர் நடத்திய பஞ்சு வியாபாரமும் பயங்கரமான நஷ்டம் அடைந்ததெனக் கூறத்தேவையில்லை. பஞ்சு, தானியம் என்ற இரண்டு வியாபாரங்களிலும் உள்ள பலத்த நஷ்டத்தில் இருந்து தன்னைக் காப்பற்றியதைக் கண்ட தாமு அண்ணாவின் நம்பிக்கை பலமடைந்து பாபாவின் உண்மை பக்தராக இன்றுவரை கூட இருந்து வருகிறார்.
ஆம்ர லீலா — மாம்பழ அற்புதம்
ஒருமுறை 300 நல்ல மாம்பழங்கள் கொண்ட ஒரு பார்சல் ஷீர்டிக்கு வந்தது. அது கோவாவிலிருந்து ராலே என்ற மம்லதரால் பாபாவுக்காக ஷாமாவின் பேரில் அனுப்பப்பட்டு இருந்தது. அது திறக்கப்பட்டதும் எல்லா மாம்பழங்களும் நன்றாக இருந்தன. அவைகளில் நான்கை மட்டும் தமது கோலம்பாவில் வைத்துக்கொண்டு மீதியை ஷாமாவிடம் ஒப்படைத்தார். "இந்த நாலு பழமும் தாமு அண்ணாவுக்கு, அவைகள் இங்கேயே இருக்கட்டும்" என்றார் பாபா.
இந்த தாமு அண்ணாவுக்கு மூன்று மனைவிகள். முன்னரே சொல்லப்பட்ட அவருடைய வாக்குமூலத்தின்படி அவருக்கு மூன்று அல்ல, இரண்டு மனைவியர் தாம். அவருக்குக் குழந்தை இல்லை. பல ஜோசியர்களைக் கலந்தும் தாமே ஜோதிடத்தை ஓரளவு கற்றும் ஒரு பாபா கிரகம் தன ஜாதகத்தில் புத்திர ஸ்தானத்தில் இருப்பதால் தனக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என அறிந்து கொண்டார். ஆனால் பாபாவிடம் அவருக்குப் பெரும் நம்பிக்கை உண்டு. மாம்பழம் வந்து சேர்ந்த இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர் பாபாவை வணங்க அவர் ஷீர்டிக்குச் சென்றபோது, மற்றவர்களெல்லாம் அந்த மாம்பழத்துக்காக ஏங்கினார்களாயினும், அவை தாம்யாவினுடையதே. யாரைச் சேரவேண்டுமோ அவர் அதை "உண்டு மரிக்கவேண்டும்" என பாபா கூறினார்.
இவ்வார்த்தைகளை முதலில் தாமு அண்ணா கேட்டபோது அதிர்ச்சி அடைந்தார். ஆனால் மஹல்சாபதி அவைகளை விளக்கினார். சாவு என்பது 'தான்' என்ற அஹங்காரச் சாவு ஆகும். அது பாபாவின் திருவடிகளருகில் நிகழ்வது ஓர் ஆசியேயாகும். மனம் தெளிந்து தாம் பழத்தை வாங்கிச் சாப்பிடுவதாகத் தாமு கேட்டுக்கொண்டார். ஆனால் பாபா அவரிடம், "நீயே திண்ருவிடாதே. உனது இளைய மனைவிக்குக் கொடு. இந்த ஆம்ரலீலா — மாம்பழ அற்புதம் — அவளுக்கு நான்கு மகன்களையும், நான்கு மகள்களையும் கொடுக்கும்". காலப்போக்கில் பாபாவின் மொழிகளே உண்மையாயின, ஜோசியர்களுடையது அல்ல என்றும் அறியப்பட்டது.
பாபாவின் கூற்றுக்களின் திறமும், பெருமையும் அவர் வாழ்நாளில்தான் நிரூபனமாயிற்றென்றால், ஆச்சரியத்திலும் ஆச்சரியம்! அவர் சாமதியடைந்த பின்னும் அது மாதிரியே நிகழ்ந்தன. "நான் இறந்து விட்டபோதிலும் என்னை நம்புங்கள். எனது சமாதியில் உள்ள எலும்புகள் உங்களுக்கு நம்பிக்கையையும், தைரியத்தையும் அளிக்கும். நான் மட்டுமல்ல, என்னிடம் முழு இதயத்தோடு சரணடைபவர்களுடன் என்னுடைய சமாதியும் பேசும், கூடச் செல்லும், தொடர்புகொள்ளும். நான் உங்களிடத்து இல்லையென்பதாகக் கவலை கொள்ளாதீர்கள். எனது எலும்புகள் உங்களது நலத்தைக் குறித்துப் பேசி விவாதிப்பதைக் கேட்பீர்கள். ஆனால் என்னையே எப்போதும் நினைவு கூறுங்கள். உள்ளம், உயிர் இவற்றால் என்னை நம்புங்கள். அப்போதுதான் நீங்கள் மிகுந்த பலனை அடைவீர்கள்" என்றார்.
பிரார்த்தனை
இவ்வத்தியாயத்தை ஹேமத்பந்த் ஒரு வேண்டுதலுடன் முடிக்கிறார். "ஓ! சாயி சத்குருவே, பக்தர்களின் கற்பகதருவே! நாங்கள் வேண்டுகிறோம். தங்கள் பாதாம்புஜத்தை மறக்கவோ, காணாமலோ இருக்கக்கூடாது. இச்சம்சார வாழ்க்கையில் பிறப்பு, இறப்புகளால் நாங்கள் அல்லலுற்றுக் கொண்டிருக்கிறோம். இச்சூழலில் இருந்து எங்களை இப்போது விடுவித்தருளும். எங்களது புலன்கள் ஆசைகளைத்தேடி ஓடுவதிலிருந்து தடுத்தருளி அந்தர்முக ஆத்மதரிசனத்தைப்பெறத் திருப்பிவிடுங்கள். புலன்களும், மனதும் இப்படி வெளியில் ஓடித்திரியும் இயல்பைத் தடுக்காவிடில், தடை செய்யப்படாதவரை, தன்னை உணரும் நல்வாய்ப்பே கிடையாது. மகனோ, மனைவியோ, நண்பனோ இறுதியில் நமக்கு உதவுவது கிடையாது. தாங்கள் மட்டுமே எங்களுக்கு முக்தியையும், மகிழ்ச்சியையும் அளிப்பீர்கள்.
எங்களது விவாதப் பண்பையும், மற்ற பல கெடுதலான விஷயங்களையும் அறவே அழித்துவிடுங்கள். தங்களது நாமத்தை உச்சரிப்பதில் எங்களது நாவுக்கு ஒரு பேராவல் ஏற்படட்டும். எங்களது நல்ல, கெட்ட எண்ணங்களையெல்லாம் துரத்திவிட்டு எங்களது வீடு, உடல் இவைகளைப்பற்றிய உணர்வை மறக்கச்செய்து, எங்களது 'தான்' என்ற அஹங்காரத்தை அழித்துவிடுங்கள். எப்போதும் தங்கள் நாமத்தை நினைவுகூர்ந்து மற்ற எல்லாவற்றையும் மறந்துவிடச் செய்யுங்கள். எங்களது மனச்சலனங்களை அடக்கி அமைதி, சாந்தம் இவைகளை எங்களுக்கு அருளுங்கள். தாங்கள் எங்களைச் சற்றே அரவணைத்தால், எங்கள் அறியாமை இருள் மறைந்து உங்கள் ஒளிபெற்ற மகிழ்வுடன் வாழ்வோம்.
தங்களது நல்லருளினாலும் எங்களது முந்தைய நல்வினைகளாலும் தங்களது லீலாம்ருதத்தை பருகச்செய்து ஆழ்ந்த துயிலிலிருந்து எங்களை எழுப்பிவிட்டீர்கள்".
ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
(2) ஹரிச்சந்திர பிதலே
(3) கோபால் ஆம்டேகர்
ஆகியோரின் கதைகள்
முன்னுரை
இப்பிரபஞ்சத்தில் நாம் காணும் யாவும் மாயையின் விளையாட்டே. கடவுளின் ஆக்கும் ஆற்றலே. இவைகள் உண்மையில் இருப்பவை அல்ல. உண்மையான பரப்பிரம்மமே நிச்சயமாக இருக்கிறது. இருளின் காரணமாக ஒரு கயிற்றையோ, ஒரு மாலையையோ பாம்பாக நாம் எண்ணிக்கொள்வதைப் போலவே, புறத்தோற்றத்தை மட்டுமே நாம் காண்கிறோம். காணக்கூடிய பொருட்களிலெல்லாம் உள்ளுறைந்து கிடக்கும் மெய்ப்பொருளை நாம் காண்பதே இல்லை.
நமது அறிவுக் கண்களை சத்குரு மட்டுமே திறந்துவிடுகிறார். பொருட்களை அவைகளின் தோற்றத்தில் காணப்படுவதுபோல் பாராமல் உண்மையான ஒளியில் அவைகளைக் காணுமாறு நம்மை ஊக்குவிக்கிறார். எனவே நாம் சத்குருவை வணங்கி, உண்மையான காட்சியை அதாவது கடவுள் காட்சியை நமக்கருள வேண்டிநிற்போம்.
ஒரு நூதன வழிபாட்டை ஹேமத்பந்த் நமக்குக் கொடுத்திருக்கிறார். சத்குருவின் பாதாம்புயத்தைக் கழுவும் நன்னீராக நமது ஆனந்தக் கண்ணீரை உபயோகித்து, பரிசுத்தமான அன்பு என்னும் சந்தனத்தை அவர் மேனியில் பூசிவிட்டு, உண்மை நம்பிக்கை என்னும் உடையை அவர் மேனிக்கு உடுத்தி, நமது எட்டு விதமான சாத்வீக உணர்ச்சிகள் என்னும் அஷ்ட கமலங்களையும் 'ஒருமை மனது' என்னும் கனியையும் அவருக்குச் சமர்ப்பிப்போம். பக்தி என்னும் நறுமணக் கரும்பொடியை அவர் தலைக்கு இட்டு, பற்று என்னும் வேட்டியைக் கட்டிவிட்டு நமது தலையை அவர் பாதங்களில் வைப்போம்.
இத்தகைய எல்லா அணிமணிகளாலும் சத்குருவை அலங்கரித்துவிட்டு, நமதனைத்தையும் அவரிடம் சமர்ப்பித்து விடுவோம். உஷ்ணத்தைப் போக்குவதற்குப் பக்தி என்னும் சாமரம் கொண்டு வீசுவோம். இத்தகைய பேரானந்த வழிபாட்டுக்குப் பின் அவரை இங்ஙனம் வேண்டுவோம்.
"எங்களது புத்தியை திசை திருப்பிவிடுங்கள். அந்தர்முகமாகச் செய்யுங்கள். நித்ய - அநித்ய வஸ்துக்களைப் பகுத்துணரும் விவேகம், எல்லா உலகப் பொருட்களின் மீது பற்றின்மை ஆகியவைகளை எங்களுக்கு நல்கி ஆத்மா உணர்வை அடைய இவ்விதமாக எங்களை ஊக்குவியுங்கள்.
ஆன்மாவையும், உடலையும் — உடலுணர்வு, மற்றும் அகங்காரம் — உம்மிடம் ஒப்புவித்தோம். எங்களுடைய கண்களைத் தங்களது ஆக்குங்கள். அதன்மூலம் நாங்கள் இன்ப - துன்பங்களையே உணராதிருப்போம். தங்கள் சங்கல்பத்தின்படி, விருப்பத்தின்படி எங்களது மனதையும், உடலையும் கட்டுப்படுத்துங்கள். தங்கள் பாதாம்புஜத்தில் எங்களது மனம் ஆறுதல் பெறட்டும்."
இப்போது இந்த அத்தியாயத்தின் கதைகளுக்கு வருவோம்.
பகத் பந்த்
மற்றொரு சத்குருவின் சீடரான பந்த் என்பவர் ஷீரடிக்கு வரும் நல்லதிர்ஷ்டம் பெறநேர்ந்தது. அவருக்கு ஷிர்டிக்குச் செல்லும் எண்ணமில்லை. ஆயின் மனிதன் ஒரு விதமாக எண்ணக் கடவுள் வேறொரு விதமாகச் செயல்படுகிறார். அவர் ரயில் வண்டியில் பிரயாணம் செய்துகொண்டிருக்குபோது ஷிர்டிக்குப் போய்க்கொண்டிருந்த தனது பல நண்பர்களையும், உறவினர்களையும் காண நேர்ந்தது. அவர்கள் எல்லோரும் அவரை உடன் அழைத்தனர். அவரால் இயலாதென்று சொல்ல முடியவில்லை. அவர்கள் எல்லோரும் பம்பாயில் இறங்கினர். பந்த் விராலில் இறங்கினார்.
பின்னர் ஷீர்டி விஜயத்திற்காகத் தனது சத்குருவிடம் உத்தரவு பெற்றுக்கொண்டு செலவுக்கு ஏற்பாடுகள் எல்லாம் செய்தபின் அக்கோஷ்டியுடன் ஷீர்டிக்குப் புறப்பட்டார். எல்லோரும் மறுநாள் ஷீர்டியை அடைந்து மசூதிக்குச் சுமார் 11 மணிக்குச் சென்றனர். பாபாவின் வழிபாட்டுக்காகக் குழுமியுள்ள பக்தர்கள் வந்துகொண்டும், போய்க்கொண்டும் இருப்பதைக் கண்ட அவர்கள் எல்லோரும் மிகவும் மகிழ்ந்தனர். ஆனால் பந்த் திடீரென்று வலிப்பு வந்து உணர்வின்றிக் கீழே சாய்ந்தார். அவர்கள் எல்லோரும் பீதியடைந்தனர். எனினும் அவரைத் திரும்ப உணர்வுக்குக் கொண்டுவர தங்களால் இயன்றதைச் செய்தனர். பாபாவின் அருளாலும், அவர் தலைமீது தெளிக்கப்பட்ட நீராலும் பிரக்ஞைக்கு வந்து, அப்போதுதான் தூக்கத்திலிருந்து விழித்தவர் போல் எழுந்து உட்கார்ந்தார்.
மற்றொரு குருவின் சீடர் அவர் என்று அறிந்துகொண்ட சர்வாந்தர்யாமியான பாபா அஞ்சாமலிருக்கும்படி அவருக்கு உறுதிகூறி, அவரது சொந்தக் குருவின் மீதுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்திக் கீழ்கண்டவாறு அவரிடம் கூறினார். "வருவது வரட்டும், விட்டு விடாதே. உனது ஆதாரத்தையே — குருவையே — உறுதியாகப் பற்றிக்கொண்டு எப்போதும் நிதானத்துடனும், சதாகாலமும் அவருடன் ஒன்றியும் இருப்பாய்".
இம்மொழிகளின் குறிப்பை பந்த் உடனே அறிந்துகொண்டார். இவ்விதமாக அவர் சத்குருவை நினைவுகூர்ந்தார். பாபாவின் இந்த அன்பை அவர்தம் வாழ்நாளில் மறக்கவே இல்லை.
ஹரிச்சந்திர பிதலே
பம்பாயில் ஹரிச்சந்திர பிதலே என்னும் பெயருள்ள மனிதர் ஒருவர் இருந்தார். காக்காய் வலிப்பால் அவதியுறும் ஒரு மகன் அவருக்கு இருந்தான். பல அலோபதி ஆயுர்வேத வைத்தியர்களிடம் காண்பித்தும் குணமேதும் ஏற்படவில்லை. ஒரே ஒரு வழிதான் பாக்கி இருந்தது. அதாவது ஞானிகளிடம் அடைக்கலம் புகுவது. தாஸ்கணு தமது மிகச்சிறந்த, அற்புதமான கீர்த்தனைகளால் பம்பாய் ராஜதானி எங்கும் பாபாவின் புகழைப் பரவச் செய்தார் என்று அத்தியாயம் 15ல் முன்னரே குறிக்கப்பட்டுள்ளது. பிதலே இக்கீர்தனைகள் சிலவற்றை 1910ல் கேட்டார்.
அதிலிருந்து மற்றவர்கள் மூலமாகவும் பாபா தமது ஸ்பரிசத்தாலும், வெறும் பார்வையாலும் மட்டுமே அனேக தீர்க்க முடியாத வியாதிகளைக் குணப்படுத்தியிருப்பதாக அறிந்தார். அதனால் சாயிபாபாவைக் காண அவர் மனதில் ஆர்வம் எழுந்தது. எல்லா ஏற்பாடுகளையும் செய்துகொண்டு, வெகுமதிகளையும், பழக்கூடைகளையும் எடுத்துக்கொண்டு, பிதலே குடும்பத்துடன் ஷீர்டிக்கு வந்து சேர்ந்தார். பின்னர் அவர்களுடன் மசூதிக்குச் சென்று பாபாவின்முன் வீழ்ந்து நமஸ்கரித்துவிட்டு தனது நோயாளிப் புதல்வனைப் பாபாவின் பாதங்களில் வைத்தார். பாபா அக்குழந்தையைக் கண்ட அத்தருணத்திலேயே ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தது. கண்களைச் சுற்றிக்கொண்டு அப்புதல்வன் உணர்வற்றுக் கீழே விழுந்தான். அவனது வாய் நுரைதள்ளி, உடம்பு முழுவதும் வியர்த்துக் கொட்டியது. உயிரை விட்டுவிட்டான் போல் தோன்றியது. இதைக் கண்டு பெற்றோர் மிகவும் படபடத்து உணர்ச்சி வசப்பட்டனர். பையனுக்கு அடிக்கடி வலிப்பு வருமாயினும் இந்த வலிப்பு நீண்டதாகத் தோன்றியது.
தாயாரின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து அழத் தொடங்கிவிட்டாள். கொள்ளைக்காரனுக்குப் பயந்து ஒரு வீட்டில் ஒளிந்த ஒருவன் மீது அவ்வீடு சரிந்து விழுந்துவிட்டதைப் போலவும், புலிக்குப் பயந்து ஓடிய பசு ஒன்று கசாப்புக் கடைக்காரன் கையில் அகப்பட்டுக்கொண்டதைப் போலவும், வெப்பம் தாங்காது ஒரு மரத்தடியில் ஒதுங்கிய ஒரு வழிப்போக்கன் மீது அம்மரமே சாய்ந்து விழுந்துவிட்டதைப் போன்றும், பக்தியுள்ள ஒருவன் கோவிலுக்கு வழிபடச் சென்றபோது அக்கோவிலே அவன்மீது இடிந்து விழுந்துவிட்டதைப் போன்றும் தனது நிலையிருப்பதாகக் கூறி அவள் ஓலமிடத் தொடங்கினாள்.
பின் பாபா அவளை நோக்கி, "இம்மாதிரி ஓலமிடாதே. கொஞ்சம் பொறு. அமைதியாய் இரு. உன் இருப்பிடத்துக்கு இவனை எடுத்துச் செல். அரைமணி நேரத்தில் அவன் சுவாதீனத்துக்கு வருவான்" என்று கூறித் தோற்றினார். பாபா கூறியபடியே அவர்கள் செய்தனர். பாபாவின் மொழிகள் உண்மையானதைக் கண்டனர். வாதாவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட உடனேயே பையன் குணமடைந்தான். பிதலேயின் குடும்பத்தவர் அனைவரும் மிகவும் ஆச்சரியம் அடைந்தனர். அவர்கள் ஐயம் அழிந்தது.
பின் பிதலே தன மனைவியுடன் பாபாவைக் காணவந்தார். அவர்முன் மிகப்பணிவாகவும், மரியாதையாகவும் வீழ்ந்து நமஸ்கரித்துவிட்டு பாபாவின் கால்களைப் பிடித்துவிட்டவாறே, மனதில் பாபாவின் உதவிக்கு நன்றி செலுத்தினார். பாபா புன்சிரிப்புடன், "உமது எல்லா எண்ணங்களும், சந்தேகங்களும், கருத்துக்களும் இப்போது சாந்தப்படுத்தப்பட்டனவா? நம்பிக்கையும், பொறுமையும் உடையோரையே ஹரி காப்பாற்றுகிறார்" என்றார். பிதலே வசதியுள்ள பணக்கார மனிதர். பெருமளவில் அவர் இனிப்புக்களை விநியோகித்து பாபாவுக்கு மிகச்சிறந்த பழங்களையும், வெற்றிலை பாக்கையும் அளித்தார். பிதலேயின் மனைவி மிகச்சிறந்த பண்புடையவள். எளிமை, அன்பு, நம்பிக்கை உடையவள். தூணுக்கு அருகில் அமர்ந்து கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்கிவழிய பாபாவையே உற்றுப் பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தாள். அவளது நட்பும், அன்புமுள்ள குணத்தைக் கண்டு பாபா மிகவும் சந்தோஷமடைந்தார். முழு மனத்தோடும், முழு ஆத்மாவோடும் தம்மிடம் சரணடைந்து வழிபடுவோர்பால் ஞானிகளும், கடவுளரும் சார்ந்திருக்கின்றனர் அன்றோ! பாபாவின் சந்நிதானத்தில் சில இன்பமான நாட்களைக் கழித்த பின்னர் அக்குடும்பத்தினர் புறப்படுவதற்குப் பாபாவின் அனுமதியைப் பெற மசூதிக்கு வந்திருந்தனர். உத்தியையும், ஆசீர்வாதத்தையும் அவர்களுக்கு பாபா அளித்த பின்பு பிதலேயை அருகே அழைத்தார். "பாபு நான் உனக்கு முன்பே இரண்டு ரூபாய் கொடுத்திருக்கிறேன். இப்போது மூன்று ரூபாய் தருகிறேன். இதை உனது பூஜை அறையில் வைத்துக்கொள். நீ நன்மையடைவாய்" என்று கூறினார்.
இவைகளைப் பிரசாதமாக ஏற்றுக்கொண்டு மீண்டும் அவர்முன் வீழ்ந்து வணங்கிவிட்டு, அவரது ஆசீர்வாதத்துக்காக வேண்டி நின்றார். ஷீர்டிக்கு இதுவே தமது முதல் விஜயமாதலால் பாபா தாம் முன்னரே இரண்டு ரூபாய் கொடுத்ததாகச் சொல்லியது தமக்கு விளங்கவில்லை என்ற எண்ணம் அவர் மனதில் எழுந்தது. இப்புதிர் விடுபடுவதற்கு அவர் ஆவலாய் இருந்தார். ஆனால் பாபா மெளனமாக இருந்துவிட்டார். பிதலே பம்பாய்க்குத் திரும்பியபின் தனது கிழத்தாயாருக்கு ஷீர்டியில் நடந்த எல்லாவற்றையும், பாபா அவருக்கு முன்னரே இரண்டு ரூபாய் கொடுத்திருப்பதாகச் சொன்ன புதிரையும் கூறினார்.
அந்தக் கிழவிக்கும் அப்புதிர் புரியவில்லை. ஆனால் இதைப்பற்றித் தீவிரமாகச் சிந்தித்தபின், நினைவுக்கு வந்த ஒரு பழைய சம்பவம் அப்புதிரை விடுவித்தது. "உனது மகனோடு இப்போது நீ சாயிபாபாவைப் பார்க்கச் சென்றதுபோல், பல ஆண்டுகளுக்குமுன் உனது தந்தையும் உன்னை அக்கல்கோட்டுக்கு அப்பெருமானின் தரிசனத்துக்காக அழைத்துச் சென்றார். அப்பெருமான்கூட ஒரு சித்தர், பரிபூரண யோகி, சர்வவியாபி, தாராள மனதுடையவர். உனது தந்தை தூயவர், பக்தியுடையவர். அவரது வழிபாடு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவர் உனது தந்தைக்கு இரண்டு ரூபாய்களைப் பூஜையறையில் வைத்து வழிபடுவதற்காக அளித்தார். உனது தந்தை, தான் சாகும்வரை அதை முறைப்படி வழிபட்டு வந்தார். ஆனால் அதற்குப்பின் வழிபாடு புறக்கணிக்கப்பட்டு அந்த ரூபாய்கள் தொலைந்துபோயின. சில ஆண்டுகளுக்குப் பின் அவற்றின் நினைப்பும் மறந்துபோயின. தற்போது நீ அதிஷ்டசாலியாக இருந்ததால், சாயிபாபாவின் ரூபத்தில் அக்கல்கோட் மஹராஜ் உனது கடமைகள், வழிபாடு இவற்றை நினைவூட்டவும், அபாயங்களை அகற்றிவிடவும் தோன்றியிருந்தார்.
இனிமேலாவது ஜாக்கிரதையாக எல்லா ஐயங்களையும் கெட்ட எண்ணங்களையும் அகற்றிவிடு. உனது மூதாதையர் வழிநின்று நன்றாக நடந்துகொள். குடும்ப தெய்வங்களையும், காசுகளையும் வணங்கி, நன்றாக எடைபோட்டு, ஞானிகளின் ஆசிகளில் பெருமைகொள். உனது பக்தி உணர்ச்சிக்கு சமர்த்த சாயி அன்புடன் புத்துணர்ச்சி ஊட்டியிருக்கிறார். உனது நன்மைக்காக அதைப் பயிர் செய்வாய்" என்று கூறினாள். தாயாரின் இம்மொழிகளைக் கேட்டு பிதலே மிகவும் ஆச்சரியப்பட்டார். பாபாவின் சர்வவியாபித்துவத் தன்மையை அவர் அறிய தலைப்பட்டு, அதில் உறுதியானார். பாபாவின் தரிசனத்தின் முக்கியத்துவத்தையும் அவர் அறிந்தார். அதிலிருந்து அவர் குணத்தைப் பற்றி சர்வ ஜாக்கிரதையுடையவரானார்.
ஆம்ப்டேகர்
புனேவைச் சேர்ந்த கோபால் நாராயண் ஆம்ப்டேகர் என்பவர் பாபாவின் பக்தர். அவர் பத்து ஆண்டுகளுக்கு தாணே ஜில்லாவிலும், பின் ஜவ்கர் ஜில்லாவிலும் எக்ஸெய்ஸ் டிபார்ட்மென்டில் பணியாற்றிய பிறகு ஓய்வுபெற்றார். வேறு ஒரு வேலை பெறுவதற்காக அவர் முயற்சித்தார். ஆனால் முடியவில்லை. மற்ற கேடுகளால் அவர் தாக்கப்பட்டு அவரது நிலை நாளுக்கு நாள் மோசமடைந்துகொண்டே வந்தது. இதே நிலைமையில் ஷீர்டிக்கு ஒவ்வோர் ஆண்டும் சென்று தனது கவலைகளை பாபாவின்முன் சமர்ப்பிப்பதுமாக ஏழாண்டுகள் கழித்தார். 1916ல் அவரது நிலைமை மோசமாகி, ஷீர்டியிலேயே தற்கொலை செய்துகொள்வது எனத் தீர்மானித்தார்.
எனவே தன் மனைவியுடன் ஷீரடிக்கு வந்து இரண்டு மாதங்கள் தங்கியிருந்தார். ஒருநாள் தீஷித் வாதாவின் முன்னால் உள்ள மாட்டு வண்டியில் அமர்ந்துகொண்டிருக்கும்போது பக்கத்திலுள்ள ஒரு கிணற்றில் குதித்துத் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ள அவர் தீர்மானித்துவிட்டார். அவர் ஒரு மாதிரியாக எண்ண, பாபா வேறொருவிதமாக நடப்பித்தார். இந்த இடத்துக்குச் சில அடி தூரத்தில் இருந்த ஒரு ஹோட்டல் முதலாளியும், பாபாவின் அடியவருமான சகுண் என்பவர் வெளியே வந்து அவரிடம், "அக்கல்கோட் மஹராஜின் இச்சரிதத்தை நீங்கள் எப்போதாவது படித்திருக்கிறீர்களா?" என்று கேட்டார். ஆம்ப்டேகர் அவரிடமிருந்து அந்நூலை வாங்கிப் படிக்கத் தொடங்கினார். எதேச்சையாக அல்லது தெய்வாதீனமாகக் கீழ்கண்ட ஒரு கதையை அவர் படிக்கத் தொடங்கினார்.
அக்கல்கோட் மஹராஜின் அடியவன் ஒருவன் தீர்க்கப்படமுடியாத ஒரு வியாதியால் மிகவும் அல்லலுற்றுக்கொண்டிருந்தான். அந்த வேதனையை மேற்கொண்டு தாங்கமுடியாமற்போகவே அவன் மனம் உடைந்து தனது தொல்லைகள் எல்லாம் ஒரு முடிவுக்குக் கொண்டுவர ஒருநாள் நள்ளிரவு கிணற்றில் குதித்துவிட்டான்.
உடனே மஹாராஜ் அங்குவந்து அவனைத் தன் கரங்களாலேயே வெளியே எடுத்து, "நல்லதோ, கெட்டதோ உன் முந்தைய கர்மத்தின் பயனை நீ அடைந்தாக வேண்டும். அதன் அனுபவித்தல் பூரணமெய்தவில்லையானால் தற்கொலை உனக்கு உதவியளிக்காது. மீண்டும் ஒரு பிறவி எடுத்து அக்கஷ்டத்தையே அடையவேண்டும். எனவே உன்னை நீயே கொன்று கொள்வதற்குப் பதிலாக ஏன் இன்னும் கொஞ்சம் கஷ்டப்பட்டு உழைத்து, முந்தைய கர்மத்தின் பலன்களை எல்லாம் முழுவதுமாக தீர்த்துவிடக்கூடாது?" என்றார்.
இந்தப் பொருத்தமான, தக்க சமயத்தில் கிடைத்த கதையைப் படித்துவிட்டு ஆம்ப்டேகர் மிகவும் ஆச்சரியப்பட்டார். உள்ளம் உருகினார். பாபாவின் குறிப்பை இக்கதையின் மூலம் அவர் பெற்றிருக்காவிட்டால் அவர் உயிருடன் இருந்திருக்க மாட்டார். பாபாவின் சர்வ வியாபித்துவத்தையும், தயாளத்தையும் கண்டு, பாபா மேலுள்ள நம்பிக்கை அவருக்கு உறுதியாகி, பாபாவின் பெரும் பக்தராகிவிட்டார். அவர் தந்தையார் அக்கல்கோட் மஹராஜின் பக்தராக இருந்தவர். சாயிபாபா அவரையும் அவர் தந்தையார் சென்ற அடிச்சுவட்டிலேயே சென்று அவரிடம் பக்தி பூண்டவராகத் தொடர்ந்திருக்கும்படி விரும்பினார். பின்னர் பாபாவின் ஆசீர்வாதம் பெற்றார். அவரின் எதிர்காலம் சிறப்புறத் தொடங்கியது. பின்னர் ஜோதிடம் படித்து, அதில் திறமை பெற்றுத் தனது செல்வத்தைப் பெருக்கினார். போதுமான பணத்தை சம்பாதிக்க அவரால் இயன்று, தனது பிற்கால வாழ்வை சௌகரியமாகவும், வசதியாகவும் கழித்தார்.
ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
ஸ்ரீமத் பாகவதம் ஆகியவற்றைக்
கொடுத்து அனுகூலம் செய்தல்
• தீஷித்தின் விட்டல் காட்சி
• கீதா ரஹஸ்யம்
• கபர்டே குடும்பம்
பாபா தமது ஸ்பரிசத்தால் புனிதப்படுத்தி, மத சம்பந்தமான நூல்களைப் பாராயணத்துக்காகவும், இதர விஷயங்களுக்காகவும் பக்தர்களுக்கு அளித்து எங்ஙனம் அனுகூலம் செய்தார் என்பதை இவ்வத்தியாயம் கூறுகிறது.
முன்னுரை
ஒரு மனிதன் கடலில் மூழ்கும்போது, எல்லா தீர்த்தங்களிலும், புனித ஆறுகளிலும் நீராடிய புண்ணியம் அவனை வந்தெய்துகிறது. அதே மாதிரியாக ஒரு மனிதன் சத்குருவின் பாதங்களில் அடைக்கலம் புகும்போது, மூவரையும் — பிரம்மா, விஷ்ணு, மஹாதேவர் , பரப்பிரம்மத்தையும் வணங்கும் பேறு அவனுக்கு உண்டாகிறது. கற்பகத் தருவும், ஞானசாகரமும் நமக்கு ஆன்ம உணர்வை அளிப்பவருமான சாயிக்கு ஜெயம் உண்டாகட்டும்.
ஓ! சாயி, தங்களது கதைகள்பால் எங்களுக்கு ஆர்வம் உண்டாகச் செய்யுங்கள். சாதகப் பறவை மேகங்களினுள் உறையும் நீரைப் பருகி இன்பமடையும். இதைக் கற்போரும், கேட்போரும் அதே மன நிறைவுப் பாங்கில் இவைகளை ஆர்வத்துடன் பருகட்டும். தங்களது கதைகளைக் கேட்டுக்கொண்டிருக்கும்போது அவர்களும், அவர்களது குடும்பமும் சாத்வீக உணர்வுகள் அனைத்தையும் பெறட்டும். அதாவது மனம் உருகி கண்களில் நீர் நிறைய அவர்கள் மூச்சு ஒரே சீராக அமைந்து அவர்கள் மனம் அமைதியடைந்து, மயிர்க்கூச்செறிந்து, அழுது, தேம்பி உடல் குலுங்கட்டும். எங்கள் பகைமையும் வித்தியாசங்களும், பெரியனவாயினும் சிறியனவாயினும் மறைந்தொழியட்டும்.
இவைகள் எல்லாம் நடந்தால், குருவின் கிருபை அவன்மீது மலர்ந்திருக்கிறது என்பது பொருள். இத்தகைய உணர்வுகள் உன்பால் எழும்போது குரு மிகமிக மகிழ்கிறார். ஆத்ம உணர்வு என்னும் இலட்சியத்தில் குரு உனக்கு நிச்சயமாக வழிகாட்டுவார். பாபாவிடம் முழுமையான, இதயபூர்வமான சரணாகதி எய்துதலே மாயையின் பிடிகளிலிருந்து விடுபடுவதற்கு மிகச்சிறந்த வழியாகும். மாயைக்கு அப்பால் வேதங்களால் உன்னை எடுத்துச்செல்ல முடியாது. சத்குரு ஒருவரே அங்ஙனம் செய்யமுடியும். பரம்பொருளை எல்லா ஜீவராசிகளிடமும் காணமுடியும்.
புனிதமாக்கப்பட்ட நூலை அளித்தல்
பாபா உபதேசம் அளிக்கும் பலமுறைகளை முந்தைய அத்தியாயங்களில் நாம் முன்னரே கண்டிருக்கிறோம். அவற்றில் ஒருமுறையை இங்கு காண்போம். தாங்கள் சிறப்பாகப் பாராயணம் செய்ய விரும்பிய சில மத சம்பந்தமான நூல்களை பாபாவிடம் எடுத்துச்சென்று அவரது திருக்கரங்கள்பட்டு புனிதம் ஆக்கப்பட்டபின் அவைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வது சிலரின் வழக்கமாக இருந்து வந்தது.
அத்தகைய நூல்களை அவர்கள் தினந்தோறும் படிக்கும்போது பாபா அவர்களுடன் இருப்பதாக உணர்ந்தனர். ஒருமுறை காகா மஹாஜனி ஏக்நாத் பாகவதம் புத்தகம் ஒன்றுடன் ஷீர்டிக்கு வந்தார். ஷாமா இந்நூலைப் படிப்பதற்காக மசூதிக்கு எடுத்துச் சென்றார். பாபா அதை அவரிடமிருந்து வாங்கி இங்கும் அங்குமாக சில பக்கங்களைப் புரட்டிவிட்டு ஷாமாவிடம் திரும்ப அளித்து, "இதை நீ வைத்துக்கொள்" என்றார்.
ஷாமா: அது காகாவுடையது. அவருக்கு அதைத் திரும்பக் கொடுத்துவிடவேண்டும்.
பாபா: இல்லையில்லை. நான் உனக்கு அளித்தால் நன்மைக்காக உன்னிடமே வைத்துக்கொள். உனக்கு அது பயன்படும்.
இவ்விதமாகப் பல நூல்கள் ஷாமாவிடம் ஒப்படைக்கப்பட்டன. காகா இன்னமும் சில நாட்களில் மற்றொரு பாகவதத்துடன் வந்து அதை பாபாவின் கரங்களில் அளித்தார். பாபா அவருக்கு அதைப் பிரசாதமாகத் திரும்ப அளித்து, அதை நன்றாகப் பாதுகாக்கும்படியும் அது அவரை நல்ல நிலையில் வைத்திருக்கும் என்றும் கூறினார். காகாவும் அதை வணக்கத்துடன் பெற்றுக்கொண்டார்.
ஷாமாவும், விஷ்ணு ஸஹஸ்ரநாமமும்
ஷாமா, பாபாவின் மிக நெருங்கிய பக்தர். விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் ஒரு பிரதியை அவருக்கு அளிப்பதன் மூலம் பாபா அவருக்கு அருள் செய்ய விரும்பினார். ஒருமுறை ஒரு ராம்தாஸி பக்தர் ஷீர்டிக்கு வந்து அங்கு சில காலம் இருந்தார். அவர் தினந்தோறும் பின்பற்றிய ஒருமுறை ஒழுங்குமுறை கீழ்வருமாறு. அதிகாலையில் அவர் எழுந்திருந்து முகம் கழுவி, குளித்துவிட்டு, காவி ஆடை உடுத்திக்கொண்டு, திருநீற்றை உடலில் தரித்துக்கொண்டு, விஷ்ணு ஸஹஸ்ரநாமம், அத்யாத்ம ராமாயணம் ஆகிய புனித நூல்களை நம்பிக்கையுடன் படிப்பார். அவர் இவற்றை அடிக்கடி பலமுறை படித்தார்.
சில நாட்களுக்குப் பின்னர் பாபா விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை ஷாமாவுக்கும் ஆரம்பித்து வைத்து, அவருக்கு அருள்செய்ய நினைத்தார். எனவே ராம்தாஸியைத் தன்னருகில் அழைத்து, "நான் தாங்கமுடியாத வயிற்றுவழியால் அல்லலுறுகிறேன். சூரத்தாவாரை — மிதமான பேதி மருந்து — உட்கொண்டாலன்றி வலி நிற்காது. எனவே கடை வீதிக்குப் போய் இம்மருந்தை வாங்கி வா" என்றார். பின்னர் தமது யதாஸ்தானத்திலிருந்து இறங்கி ராம்தாஸி படித்துக்கொண்டிருந்த இடத்திற்கு வந்து விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை எடுத்துத் தமது இடத்துக்கு வந்து ஷாமாவிடம், "ஓ! ஷாமா, இப்புத்தகம் மிகவும் பயனுள்ளது, பலனுள்ளது, எனவே இதை உனக்குப் பரிசளிக்கிறேன். ஒருமுறை நான் தீவிரமாகக் கஷ்டப்பட்டேன். என் உயிர் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தது. அத்தகைய தருணத்தில் நான் இந்நூலை எனது மார்போடு வைத்து அணைத்துக்கொண்டேன். அப்போது, அது எத்தகைய ஆறுதலை அளித்தது. அல்லாவே என்னைக் காப்பாற்றக் கீழிறங்கி வந்தாரென்று நினைத்தேன். எனவே இதை உனக்குக் கொடுக்கிறேன். மெதுவாகப் படி. தினந்தோறும் குறைந்த பட்சம் ஒரு நாமத்தையாவது படி, அது உனக்கு நன்மை செய்யும்".
ஷாமா: அது எனக்கு வேண்டாம். அதன் சொந்தக்காரனான ராம்தாஸி ஒரு பைத்தியம், பிடிவாதக்காரன், கோபக்காரன். நிச்சயம் என்னுடன் சண்டைக்கு வருவான். மேலும் நான் ஒரு பட்டிக்காட்டான். ஆதலால் எனக்கு இந்நூலிலுள்ள சமஸ்கிருத எழுத்துக்கள் படிக்கத் தெரியாது.
ஷாமா, பாபா தமது இச்செய்கையின் மூலம் தன்னை ராம்தாஸிக்கு எதிராகக் கிளப்பிவிடுவதாக நினைத்தார். பாபா அவருக்காக என்ன நினைத்தார் என்ற எண்ணமே அவருக்கு இல்லை. ஷாமா ஒரு பட்டிக்காடாக இருந்தபோதும், அவருடைய நெருங்கிய பக்தராகையால் இந்த விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை அவர் கழுத்தில் சூட்டி உலகத் துபங்களினின்று அவரைக் காக்க பாபா எண்ணியிருக்க வேண்டும்.
கடவுள் நாமத்தின் சக்தி யாவரும் அறிந்ததே. அது நம்மை எல்லாப் பாவங்களினின்றும் காப்பாற்றி, பிறப்பு - இறப்புச் சுழலிநின்றும் நம்மை விடுதலையாக்குகிறது. இதைவிடச் சுலபமான சாதனம் வேறெதுவும் இல்லை. நம் மனதை மிகச்சிறந்த முறையில் அது தூய்மைப்படுத்துகிறது. அதற்கு எவ்வித சடங்குமுறைகளோ, தடையோ கிடையாது. அது அவ்வளவு சுலபம், அவ்வளவு பயனுள்ளது. ஷாமா இந்த சாதனையில் ஆர்வம் கொள்ளாதவராய் இருப்பினும் பாபா இதைத்தான் ஷாமாவைச் செய்யும்படி விரும்பினார். எனவே பாபா அதை அவர்மேல் திணித்தார்.
ஏக்நாத் மஹராஜ் இம்மாதிரியாகவே ஒரு ஏழைப்பிராமணனிடம் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைத் திணித்து அவனைக் காப்பாற்றினார் என்று வெகு நாட்களுக்கு முன்பே கூறப்பட்டிருக்கிறது. விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்வதும் மனதைத் தூய்மைப்படுத்துகின்ற திறந்த அகலமான வழியாகும். எனவேதான் பாபா இதை ஷாமாவிடம் திணித்தார்.
ராம்தாஸி சூரத்தாவாரை விதைகளுடன் உடனே திரும்பினார். அங்கிருந்த அண்ணா சிஞ்சணீ கர் நாரதர் வேலை செய்யவிரும்பி நடந்ததையெல்லாம் அவரிடம் உரைத்தார். ராம்தாஸி உடனே கோபத்தால் குதித்தார். தனது முழு வெறியுடன் ஷாமாவிடம் இறங்கி வந்தார். தனக்கு வயிற்றுவலி என்ற பெயரில் மருந்து வாங்கிவர அவரை அனுப்பும்படி பாபாவைத் தூண்டிவிட்டது ஷாமாதான் என்றும் இவ்வாறாக அவரது புத்தகத்தை எடுத்துக்கொண்டார் என்றும் கூறினார். ஷாமாவை அவர் திட்டவும் செய்து அவர் புத்தகத்தைத் திருப்பித் தரவில்லையானால் அவர்முன் தன் மண்டையை உடைத்துக்கொள்ளப் போவதாகக் கூறினார். ஷாமா அமைதியாக அவருடன் எதிர்த்துப் பார்த்தார். அது பயனளிக்கவில்லை. பின் பாபா அன்புடன் அவரைநோக்கி "ஓ! ராம்தாஸி, என்ன விஷயம்? ஏன் இவ்வளவு கலங்கிப் போயிருக்கிறாய்? ஷாமா நம் பையன் இல்லையா? வீணாக அவனை ஏன் திட்டுகிறாய்? இவ்வளவு சண்டைபோடும் ஆளாக நீ எப்படி இருக்கிறாய்? மிருதுவான, இனிமையான மொழிகளைப் பேச உன்னால் முடியாதா? நீ தினந்தோறும் இந்தப் புனித நூல்களைப் படிக்கிறாய், எனினும் உன் மனது தூயமையற்றதாயும், உனது உணர்வுகள் கட்டுப்பாடில்லாமலும் இருக்கின்றன! நீ என்ன ராம்தாஸி போ! இவைகள் எல்லாவற்றிலும் நீ பற்றற்று கவனமின்றி இருக்கவேண்டும்.
இந்தப் புத்தகத்தை நீ இவ்வளவு அதிகமாக விரும்புவது வியப்பாயில்லை? உண்மையான ராம்தாஸிக்கு 'மமதா' — பற்று — இருக்கக்கூடாது, ஆனால் 'சமதா' — எல்லோரையும் ஒன்று எனப்பாவிக்கும் பண்பு — இருக்கவேண்டும். ஷாமா பையனுடன் ஒரு புத்தகத்துக்காக நீ இவ்வளவு சண்டை செய்துகொண்டிருக்கிறாய், போ! உன் இடத்தில் அமர்ந்துகொள். பணம் கொடுத்தால் ஏராளமாகப் புத்தகங்கள் கிடைக்கும். ஆனால் மனிதர்கள் கிடைக்கமாட்டார்கள். நன்றாக நினைத்துப் பார். நன்றாக நினைத்துப் பார்த்துத் தயவுள்ளவனாய் இரு. உன் புத்தகம் என்ன மதிப்புப் பெறும்? ஷாமாவுக்கு அதைப்பற்றிக் கவலையில்லை. நான்தான் அதை எடுத்து அவனிடம் கொடுத்தேன். உனக்கு அது மனப்பாடமாகத் தெரியும். ஷாமா அதைப் படித்துப் பலனடைய வேண்டும் என்று நான் எண்ணினேன். எனவேதான் அதை அவனிடம் கொடுத்தேன்" என்றார்.
பாபாவின் மொழிகள் எவ்வளவு இனிமையாக இருக்கின்றன. அவைகளின் பலன் ஆச்சரியமானது. ராம்தாஸி அமைதியானார். ஷாமாவிடம் அதற்குப் பதிலாக பஞ்சரத்னி கீதை ஒன்று எடுத்துக் கொள்வதாகக் கூறினார். ஷாமா அதிக சந்தோஷமடைந்து, "ஒன்று ஏன்? பதிலாக உனக்குப் பத்துப் பிரதிகள் தருகிறேன்" என்று கூறினார்.
முடிவாக இவ்விஷயம் சமாதானத்துக்கு வந்தது. எந்தக் கடவுளை அறியவேண்டுமென்று அவர் கவலைப்பட்டது கிடையாதோ அவரைப் பற்றிய விஷயங்கள் அடங்கியுள்ள பஞ்சரத்னி கீதையை ராம்தாஸி கேட்டது ஏன்? தினந்தோறும் மசூதியில் பாபாவின்முன் மதப் புத்தகங்களைப் படித்த ராம்தாஸி, ஷாமாவிடம் அவர் முன்னிலையிலேயே சண்டை செய்வானேன்? என்ற கேள்விகளையெல்லாம் கருதுங்கால் பழியை யாரிடம் ஒதுக்குவது என்பதையும், யாரைத் திட்டுவது என்பதையும் நாம் அறியோம். இந்நிகழ்ச்சி நடந்திராவிட்டால் ஈஸ்வர நாமத்தின் மகிமை, விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் ஆகிய விஷயங்களெல்லாம் ஷாமாவின் அறிவிற்கு எட்டியிருக்காது என்பதை மட்டும் நாம் அறிவோம். எனவே பாபாவின் கற்பிக்கும் முறையும் ஆரம்பித்துவைக்கும் முறையும் விசேஷமானது என்று நாம் காண்கிறோம். இவ்விஷயத்தில் ஷாமா அந்நூலைப் படிப்படியாகக் கற்கவே செய்தார். புனே இன்ஜினியரிங் கல்லூரி பேராசிரியரும் ஸ்ரீமான் பூட்டியின் மருமகனுமான பேராசிரியர் நார்கே,, என்பவருக்கு அதை விவரித்துச் சொல்லும் அளவுக்கு அதில் வல்லமை பெற்றார்.
விட்டல் காட்சி
ஒருநாள் காகா சாஹேப் தீஷித் ஷீர்டியில் உள்ள தனது வாதாவில் காலைக் குளியலுக்குப்பின் தியானம் செய்துகொண்டிருக்கும்போது விட்டலின் தெய்வீகக் காட்சி ஒன்று கிடைத்தது. அதன் பின்பு பாபாவை அவர் காணச் சென்றபோது, "விட்டல் பாடீல் வந்தாரா? நீர் அவரைக் காணவில்லையா? அவர் மிகவும் நழுவேல் பேர்வழி. இறுக்க அவரைப் பிடித்துக்கொள்ளும், இல்லாவிட்டால் உமக்கு 'டேக்கா' கொடுத்துவிட்டு ஓடிப்போய் விடுவார்" என்று கூறினார் பாபா. பின்னர் மத்தியான வேளையில் பண்டரீபுரத்து விட்டலின் 20-25 படங்களுடன் ஒரு வியாபாரி வந்தான். தான் தியானத்தில் கண்ட விட்டலின் உருவத்துடன் இது அப்படியே அச்சாகப் பொருந்தியிருப்பது கண்டு தீஷித் அதிசயமடைந்தார். பாபாவின் மொழிகளை நினைவு கூர்ந்து, மிகுந்த விருப்பத்துடன் ஒரு படத்தை வாங்கி, தனது பூஜையறையில் வழிபாட்டுக்காக வைத்தார்.
கீதா ரஹஸ்யம்
பிரம்ம வித்தையைக் கற்பவர்களை பாபா எப்போதும் நேசித்தார். அவர்களை ஊக்குவித்தார். உதாரணத்துக்கு ஒன்று, ஒருமுறை பாபு சாஹேப் ஜோக் ஒரு பார்சலைப் பெற்றார். லோகமான்ய திலகர் எழுதிய கீதாரஹஸ்யத்தின் ஒரு பிரதி அதனுள் இருந்தது. தனது அக்குளில் அதை வைத்தவாறு மசூதிக்கு வந்து அவர் பாபாவின் முன் வீழ்ந்து பணிந்தபோது பார்சல் பாபாவின் பாதத்தில் சென்று விழுந்தது. பாபா அது என்ன என்று விசாரித்தார். அவ்விடத்திலேயே பார்சல் உடைக்கப்பட்டு அப்புத்தகம் பாபாவின் கரத்தில் வைக்கப்பட்டது. இங்குமங்குமாக அதன் சில பக்கங்களை அவர் புரட்டிவிட்டுத் தமது பையிலிருந்து ஒரு ரூபாயை எடுத்து அதன்மீது வைத்து, அதை ஜோகிடம் அளித்து, "இதை முழுமையும் படி, உனக்கு நன்மை விளையும்" என்றார்.
கபர்டே குடும்பம்
கபர்டேயைப் பற்றிய விளக்கங்களுடன் இவ்வத்தியாயத்தை நாம் முடிப்போம். ஒருமுறை தாதா சாஹேப் கபர்டே தன் குடும்பத்துடன் ஷீர்டிக்கு வந்து சில மாதங்கள் தங்கியிருந்தார். — அவர் தங்கியிருந்ததன் நாட்குறிப்பு சாயிலீலா சஞ்சிகையில் — தொகுப்பு 7 — ஆங்கிலத்தில் பதிக்கப்பட்டு, தற்போது தமிழில் "கபர்டே டைரி"யாக மொழிபெயர்க்கப்பட்டு சமஸ்தானத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
தாதா சாஹேப் சாதாரண மனிதரல்ல. அவர் அமராவதியின் மிகப்பெரிய பணக்காரர், மிகவும் புகழ்பெற்ற அட்வகேட்டும், டெல்லி கவுன்சிலின் அங்கத்தினர்களுள் ஒருவரும் ஆவார். மிகுந்த புத்திசாதுர்யமுடையவரும், மிகச்சிறப்பான பேச்சாளருமாவார். ஆயினும் பாபாவின் முன் வாய்திறக்க அவருக்குத் தைரியமில்லை. பெரும்பாலான பக்தர்கள் பாபாவுடன் அடிக்கடி பேசி விவாதித்தனர். ஆனால் கபர்டே, நூல்கர், பூட்டி ஆகிய மூவர் மட்டும் எப்போதும் மெளனமாக இருந்தனர். அவர்கள் சாந்தம், எளிமை, பொறுமை, நற்பண்பு வாய்க்கப்பெற்றவர்கள். தாதா சாஹேப் மற்றவர்களுக்கு பஞ்சதசியை — புகழ்பெற்ற வித்யாரண்யாரால் இயற்றப்பெற்ற அத்வைத தத்துவத்தைப் பற்றிய பிரசித்தமான சம்ஸ்கிருத நூல் — படித்து விளக்கம் செய்யும் வல்லமை உடையவர். அவர் மசூதிக்கு பாபாவின்முன் வந்தபிறகு ஒருவார்த்தைகூடப் பேசமாட்டார்.
வேதங்களில் கூட ஒருவன் எவ்வளவுதான் கற்றுத் தேறியிருப்பினும் பிரம்மத்தை அறிந்தவன்முன் உண்மையிலேயே மங்கிவிடுகிறான். ஆன்ம அறிவின்முன் கல்வி பிரகாசிக்க முடியாது. தாதா சாஹேப் நான்கு மாதங்கள் தங்கியிருந்தார். ஆனால் அவர் மனைவியோ ஏழு மாதங்கள் தங்கியிருந்தாள். இருவரும் தங்களின் ஷீர்டி வாசத்தைப் பற்றி மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். திருமதி கபர்டே பாபாவின்பால் விசுவாசம், பக்தி, ஆழ்ந்த அன்பு இவைகளைக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு மதியமும் மசூதிக்கு அவளே பாபாவுக்கு நைவேத்தியத்தை எடுத்து வருவாள். அது பாபாவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்புதான் அவள் உண்ணச் செல்வாள். அவளது நிதானமான, உறுதியான பக்தியை பாபா மற்றவர்களுக்குக் காட்ட விரும்பினார். ஒருநாள் அவள் சன்ஸா — கோதுமை பலகாரம் , பூரி, சாதம், சூப், சர்க்கரைப் பொங்கல், வற்றல் இவைகளுடன் மசூதிக்கு வந்தாள். வழக்கமாக மணிக்கணக்கில் காக்கும் பாபா உடனே எழுந்திருந்து தனது சாப்பாட்டு இடத்துக்குச் சென்று, பாத்திரத்தின் மூடியை எடுத்துவிட்டு ஊக்கத்துடன் அவைகளை உண்ணத் தொடங்கினார்.
ஷாமா: ஏன் இந்தப் பாரபட்சம்? மற்றவர்களின் உணவை வீசியெறிந்துவிட்டு, அவைகளைக் கண்ணெடுத்துப் பார்ப்பதற்கும் கவலை கொள்ளாமல் இருக்கிறீர்கள். ஆனால் இதையோ தாங்களே ஊக்கத்துடன் வாங்குகிறீர்கள். அதற்கு நியாயம் செய்யுங்கள். இப்பெண்மணியின் பலகாரங்கள் மட்டும் ஏன் அவ்வளவு இனிமையாக இருக்கின்றன? இது எங்களுக்கு எல்லாம் ஒரு பிரச்சினையாக இருக்கிறது.
பாபா: உண்மையிலேயே இவ்வுணவு அசாதாரனமானதுதான். முந்தைய பிறவியில் இவள், ஒரு வியாபாரியின் கொளுத்த பசுவாக அதிக பால் கொடுத்து வந்தாள். பின்னர் அவள் மறைந்து ஒரு தோட்டக்காரன் குடும்பத்திலும், பின்னர் ஒரு ஷத்திரியக் குடும்பம் ஒன்றிலும் பிறந்து, ஒரு வணிகனைத் திருமணம் செய்துகொண்டாள். பின்னர் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தாள். மிக நீண்ட காலத்துக்குப் பின் நான் அவளைக் காண்கிறேன். அவளது பாத்திரத்திலிருந்து சில அன்புக் கவளங்களை நான் உண்பேன். இவ்வாறு கூறிக்கொண்டே அவளது பலகாரத்துக்குரிய முழுத் தீர்ப்பையும் வழங்கி, தமது வாய், கை முதலியவற்றைக் கழுவிக்கொண்டு மனநிறைவின் அறிகுறியாக ஏப்பம் விட்டுத் தமது இருக்கையில் அமர்ந்தார்.
பின்னர் அவள் வணங்கி அவர் கால்களைப் பிடித்துவிடத் தொடங்கினாள். பாபா ஆவலுடன் பேசத்தொடங்கி தம் கைகளைப் பிடித்துவிட்டுக்கொண்டிருந்த கையை ஆதரவாகப் பிடித்துவிடத் தொடங்கினார். இந்தப் பரஸ்பர சேவையைக் கண்டுவிட்டு ஷாமா வேடிக்கை செய்ய ஆரம்பித்தார். "இது நன்றாக இருக்கிறது. கடவுளும் - பக்தையும் ஒருவருக்கொருவர் சேவை செய்து கொள்வதைக் காண்பது அற்புதக் காட்சியாகும்" என்றார். அவளது விசுவாசமான சேவையைக்கண்டு பாபா அவளை, மெதுவான, மிருதுவான அற்புதமான குரலில் 'ராஜாராமா...! ராஜாராமா...!" என்று அப்போதிலிருந்து எப்போதும் ஸ்மரிக்கும்படியாகக் கூறி "இதை நீ செய்துவந்தால், உனது வாழ்க்கையின் நோக்கத்தை எய்துவாய். உனது மனம் சாந்தி பெற்று பெருமளவு நீ பயனடைவாய்" என்றார். ஆன்மீக விஷயங்களைப் பற்றிப் பழக்கமில்லாதவர்களுக்கு இது ஒரு சாதாரண விஷயமாகத் தோன்றும். உண்மையில் அது அவ்வாறில்லை. 'சக்தி-பாத்' என்றழைக்கப்படும் குருவின் சக்தியை சீடனுக்கு மாற்றிவிடுவதாகும். பாபாவின் மொழிகள் எவ்வளவு வல்லமை வாய்ந்தவைகளாகவும், பலனுள்ளவையாகவும் இருக்கின்றன. ஒரே வினாடியில் அவைகள் அவளது உள்ளத்தைத் துளைத்து அங்கே இடம் பிடித்துக்கொண்டன.
குருவுக்கும், சீடனுக்கும் இருக்கவேண்டிய உறவுத் தன்மையைப் பற்றி இந்நிகழ்ச்சி நமக்கு விளக்குகிறது. இருவரும் ஒருவருக்கொருவர் அன்புகூர்ந்து சேவை செய்யவேண்டும். அவர்களிடையே எவ்விதப் பாகுபாடும், வித்தியாசமும் இல்லை. இருவரும் ஒருவரே. ஒருவரில்லாமல் மற்றவர் வாழ முடியாது. சீடன் குருவின் பாதங்களில் தனது தலையை வைப்பது புறத்தோற்றமே. உண்மையில் அந்தரங்கமாக அவர்கள் ஒன்றேயாம். அவர்களிடையே எவ்விதப் பாகுபாட்டையும் காண்பவன் இன்னும் பக்குவமடையாதவன், ஒழுங்கற்றவன்.
ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
• 1. லக்ஷ்மிசந்த்
• 2. புர்ஹாண்பூர் மாது
• 3. மேகா
சாயி முடிவானவரோ, வரையறைக்கு உட்பட்டவரோ அல்ல. எறும்பு, பூச்சிகள் முதற்கொண்டு பிரம்மாவரையுள்ள எல்லா ஜீவராசிகளிலும் அவர் உறைந்திருக்கிறார். அவர் சர்வவியாபி. வேதஞானத்தில் நன்றாகப் பயிற்சியுடையவர். அங்ஙனமே ஆத்ம உணர்விலும். இவை இரண்டிலுமே அவர் வல்லவராகையால் சத்குருவாய் இருப்பதற்கு அவர் மிகப்பொருத்தமானவர். சீடர்களைத் தட்டியெழுப்பி, அவர்களை ஆத்ம உணர்வில் ஸ்தாபிக்க இயலாத யாரும், எவ்வளவு கற்றறிந்தவராக இருப்பினும் சத்குரு என்றழைக்கப்படுவதற்குத் தகுதியுடையவராகார். பொதுவாக இவ்வுடலை அன்னை ஈன்றெடுக்கிறாள். தவறாமல் வாழ்வை, சாவும் பின் தொடர்கிறது. ஆனால் சத்குருவோ, வாழ்வு - சாவு இரண்டையுமே சத்குரு அழித்துவிடுகிறார். எனவே மற்றெவரைக் காட்டிலும் அதிகக் கருணையும், அன்பும் உடையவராவார்.
சாயிபாபா அடிக்கடி கூறுவதாவது: "எனது ஆள் — பக்தன் — எவ்வளவு தூரத்திலிருந்தாலும், என்னிடமிருந்து மூவாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்தாலும் காலில் நூல் கட்டியுள்ள சிட்டுக்குருவியைப் போன்று ஷீரடிக்கு இழுக்கப்படுவான்". இந்த அத்தியாயம் அம்மாதிரி மூன்று சிட்டுக்குருவிகள் இழுக்கப்பட்ட கதையைக் கூறுகின்றது.
(1) லாலா லக்ஷ்மிசந்த்
பம்பாயில் ஸ்ரீ வெங்கடேஸ்வர் அச்சகத்தில் இம்மனிதர் பணியாற்றி வந்தார். பின்னர் ரயில்வே டிபார்ட்மெண்டிலும் அதன்பின் ராலி பிரதர்ஸ் & கம்பெனியிலும் இவர் குமாஸ்தாவாகப் பணியாற்றினார். 1910ல் அவர் பாபாவின் தொடர்பு பெற்றார். கிறிஸ்துமஸுக்கு ஓரிரண்டு மாதங்களுக்கு முன்பாக, தாடியுடன் கூடிய கிழவனார் ஒருவர் தம் பக்தர்கள் புடைசூழ நின்று கொண்டிருப்பதைத் தான் சாந்தாக்ருஸில் இருக்கும்போது கனவில் கண்டார். சிலநாட்களுக்குப் பின் தாஸ்கணுவின் கீர்த்தனையைக் கேட்பதற்காகத் தமது நண்பரான தத்தாத்ரேயா மஞ்சுநாத் பிஜூர் என்பவரின் வீட்டுக்குச் சென்றார். கீர்த்தனை செய்யும்போது மக்கள்முன் பாபாவின் படத்தை வைப்பது தாஸ்கணுவின் வழக்கமாகும். தான் கனவில் கண்ட கிழவனாரின் உருவ அமைப்புக்கள் எல்லாம் இப்படத்துடன் அப்படியே அச்சாகப் பொருந்தியிருப்பது கண்டு லக்ஷ்மிசந்த் அதிசயப்பட்டார். தான் கனவில் கண்ட கிழவனார் சாயிபாபாவே என்ற முடிவிற்கு வந்தார்.
இச்சித்திரத்தின் தரிசனம், தாஸ்கணுவின் பாடல், அவர் உரை நிகழ்த்திய துகாராமின் வாழ்க்கை இவை அனைத்தும் அவர் மனதில் ஓர் ஆழ்ந்த உணர்வை ஏற்படுத்தியது. அவர் ஷீர்டி போகத் தீர்மானித்தார். சத்குரு தேடும் படலத்திலும், ஆன்மிக முயற்சியிலும் கடவுள் எப்போதும் உதவி செய்கிறார் என்பது பக்தர்களின் அனுபவமாகும். அதனால் இரவு 8 மணியளவில் சங்கர் ராவ் என்ற அவரது நண்பர், வீட்டுக் கதவைத் தட்டி, ஷீர்டிக்குத் தன்னுடன் அவர் வருவாரா என்று கேட்டார். அவரது மகிழ்ச்சி கரை காணவில்லை. உடனே அவர் ஷீர்டி செல்லத் தீர்மானித்தார். தனது மாமாவிடமிருந்து ரூ.15ஐ கடன் வாங்கிக்கொண்டு உரிய ஏற்பாடுகளையெல்லாம் செய்தான பிறகு அவர் ஷீர்டிக்குப் புறப்பட்டார். ரயிலில் அவரும் அவரது நண்பரும் சில பஜனைப் பாடல்களைப் பாடினர். ஷீர்டிக்கு அருகில் உள்ள தங்கள் ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்த, உடன் வந்த நான்கு முஹமதியப் பிரயாணிகளிடம் அவர்கள் இருவரும் சாயிபாபாவைக் குறித்து விசாரித்தனர்.
பல ஆண்டுகளாக ஷீர்டியில் வசித்துவரும் சாயிபாபா ஒரு பெரும் ஞானி என்று அவர்கள் எல்லோரும் கூறினர். அவர்கள் கோபர்காவனை அடைந்தபோது, பாபாவுக்குச் சமர்ப்பிப்பதற்காக சில பழங்களை லக்ஷ்மிசந்த் வாங்க விரும்பியிருந்தார். ஆனால் அங்குள்ள இயற்கைக் காட்சிகள், வேடிக்கை வினோதங்கள் இவற்றில் அவ்வளவு தூரம் கவரப்பட்டவராய் அதிலேயே ஆழ்ந்து மூழ்கி மேற்படிப் பழங்களை வாங்குவதை மறந்தே போய்விட்டார். ஷீர்டியை அவர்கள் நெருங்கிக் கொண்டிருந்தபோது மீண்டும் பழங்களைப் பற்றி அவருக்கு நினைவு வந்தது. அதே சமயத்தில் தலையில் பழக்கூடையுடன் இருந்த கிழவி ஒருத்தி வண்டியைத் தொடர்ந்து ஓடி வந்துகொண்டிருப்பதைக் கண்டார். வண்டி நிறுத்தப்பட்டது. மகிழ்வுடன் சில பழங்களைப் பொறுக்கி அவர் வாங்கினார். அப்போது, "மீதமுள்ளவற்றையும் எடுத்துக்கொண்டு போய் என் சார்பில் பாபாவுக்குச் சமர்ப்பியுங்கள்" என்றாள் அக்கிழவி. பழங்களை அவர் வாங்க எண்ணியிருந்தது, அவர் அதை மறந்துபோனது, அக்கிழவியின் குறுக்கீடு, பாபாவின்பால் அவளது பக்தி, ஆகிய இந்த உண்மைகள் அனைத்தும் அந்த இரு நண்பர்களுக்கும் வியப்பையூட்டியது.
இந்தக் கிழவி, தான் கனவில் கண்ட கிழவனாருக்கு ஏதேனும் உறவுபோலும் என்று லக்ஷ்மிசந்த் நினைத்தார். பின்னர் மீண்டும் அவர்கள் சவாரி செய்து ஷீர்டிக்கருகில் வந்தனர். மசூதியில் கொடி பறந்துகொண்டிருப்பதைக் கண்டு அதற்கு அவர்கள் வணக்கம் செலுத்தினர். கையில் பூஜை சாமான்களுடன் மசூதிக்குச் சென்று உரியமுறையில் பாபாவை வழிபட்டனர். லக்ஷ்மிசந்த் பாபாவைக் கண்டதும் மிகவும் உருகி, அதிக மகிழ்ச்சியடைந்தார். நறுமணம் கமழும் தாமரை மலரால் தேனீ ஒன்று கவரப்படுவதுபோல் பாபாவின் திருவடிகளில் அவர் கவரப்படார்.
பின்னர் பாபா கூறினார்: "வஞ்சகமான ஆசாமி! வழியில் பஜனை செய்கிறான். மற்றவர்களை விசாரிக்கிறான். ஏன் மற்றவர்களைக் கேட்கவேண்டும்? நமது கண்களாலேயே எலாவற்றையும் நாம் காணவேண்டும். மற்றவர்களைக் கேட்கவேண்டிய அவசியம் என்ன? உனது கனவு மெய்யா, பொய்யா என்று நீயே எண்ணிப்பார். மார்வாடியிடமிருந்து கடன் வாங்கிக்கொண்டு தரிசனத்துக்காக வரவேண்டிய தேவையென்ன? உள்ளத்தின் ஆசை இப்போது நிறைவடைந்ததா?"
இம்மொழிகளைக் கேட்டு பாபாவின் சர்வ வியாபித்துவத்தைக் கண்டு லக்ஷ்மிசந்த் அதிர்ச்சியடைந்தார். தனது வீட்டிலிருந்து தான் ஷீர்டிக்கு வரும் வழியில் நிகழ்ந்தது எல்லாவற்றையும் பாபா அறிந்தது எங்ஙனம் என்று திகைத்து நின்றார்.
தமது தரிசனத்தைப் பெறுவதற்காகவோ, எந்த ஒரு விழா நாட்களைக் கொண்டாடுவதற்காகவோ, தீர்த்த யாத்திரை செய்வதன் பொருட்டோ மக்கள் கடனாளியாவது பாபாவுக்குப் பிடிக்கவே பிடிக்காது என்பதே இவ்விடத்தில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயமாகும்.
சன்ஸா — கோதுமைப் பணியாரம்
மத்தியான வேளையில் லக்ஷ்மிசந்த் உணவுக்காக அமர்ந்திருந்தபோது, ஒரு பக்தரிடமிருந்து பிரசாதமாகக் கொஞ்சம் சன்ஸாவை அவர் பெற்றார். மறுநாளும் அதை அவர் எதிர்பார்த்தார். ஆனால் ஒன்றும் பெறவில்லை. எனவே அதைப்பெற அவர் கவலையுற்றார். மூன்றாம் நாள் பாபாவிடம் ஆரத்தி நேரத்தின்போது என்ன நைவேத்யம் தான் கொண்டுவர வேண்டுமென ஜோக் கேட்டார். சன்ஸாவைக் கொண்டுவரும்படி பாபா கூறினார்.
பின் பக்தர்கள் இரண்டு பானை நிறைய சன்ஸாவைக் கொண்டுவந்தனர். லக்ஷ்மிசந்த் மிகவும் பசியை இருந்தார். அவர் முதுகில் கொஞ்சம் வலி இருந்தது. பாபா அப்போது, "நீ பசியாயிருப்பது நன்று. அதற்காகக் கொஞ்சம் சன்ஸாவை உட்கொள். முதுகு வழிக்கு ஏதாவது மருந்து போட்டுக்கொள்" என்று அவரிடம் கூறினார். பாபா மீண்டும் தம் மனதைப் படித்து, அங்கு என்ன நடந்து கொண்டிருந்தது என்பதை உணர்த்தியது குறித்து அவர் மீண்டும் ஆச்சரியத்தால் தாக்கப்பட்டார். எத்தகைய சர்வவியாபியாக பாபா இருக்கிறார்.
த்ருஷ்டி
இத்தருணத்தில் லக்ஷ்மிசந்த் ஓர் இரவு சாவடி ஊர்வலத்தைக் கண்ணுற்றார். பாபா அப்போது இருமலால் மிகுந்த அல்லல் பட்டுக்கொண்டிருந்தார். பாபாவின் இத்தொல்லை சிலரின் த்ருஷ்டி பட்டதால் இருக்கவேண்டும் என்று நினைத்தார். மறுநாள் காலை அவர் மசூதிக்குச் சென்றபோது பாபா ஷாமாவிடம் "நேற்றிரவு நான் இருமலால் அவதியுற்றேன். அது த்ருஷடினாலோ? சிலரின் த்ருஷடி என்மீது வேலை செய்கிறது. எனவேதான் நான் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறேன்" என்றார். இவ்விஷயத்தில் லக்ஷ்மிசந்தின் உள்ளத்தில் இருந்ததை பாபா பேசினார்.
பாபாவின் சர்வ வியாபித்துவத்துக்கான இந்த நிரூபணங்களையெல்லாம் கண்டுவிட்டு பாபாவை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து, "நான் தங்கள் தரிசனத்தால் பெருமகிழ்ச்சியடைகிறேன். எப்போதும் என்பால் அன்புகொண்டு தயவுள்ளவராக இருந்து என்னைக் காத்து இரட்சியுங்கள். தங்கள் பாதாம்புயத்தைத் தவிர பிறிதொரு கடவுள் எனக்கில்லை. தங்கள் பஜனையின்பாலும், பாதகமலங்களின்பாலும் என் மனம் எப்போதும் இலயித்து இருக்கட்டும். இவ்வுலகில் துன்பங்களிலிருந்து தங்களின் அருள் எங்களைப் பாதுகாக்கட்டும். நான் எப்போதும் தங்கள் நாமத்தையே உச்சரிக்க வேண்டும். மகிழ்வுடன் இருக்கவேண்டும்" என்று வேண்டினார்.
பாபாவின் உதியையும், ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டு மிகவும் அகமகிழ்ந்து, திருப்தியுற்று வழியெல்லாம் பாபாவின் புகழைப் பாடியவண்ணம் தன் நண்பனுடன் வீடு திரும்பினார். அது முதற்கொண்டு பாபாவின் தீவிர பக்தராக அவர் இருந்தார். ஷீர்டிக்குச் செல்லும் எந்த நண்பனிடமும் பூமாலைகள், தட்சிணை, கற்பூரம் இவைகளை அவர் கொடுத்தனுப்புவார்.
புர்ஹாண்பூர் அம்மையார்
இப்போது மற்றுமொரு குருவியிடம் திரும்புவோம். — பக்தனுக்கு பாபா அழைக்கும் பெயர் — புர்ஹாண்பூரில் உள்ள ஒரு மாது, சாயிபாபா தன் வீட்டுக்கு வந்து அவர்தம் உணவுக்காக கிச்சடி — உப்பு, பருப்பு கலந்த சாதம் — கேட்டுக்கொண்டிருப்பதாகக் கனவு கண்டாள். விழித்துப் பார்க்கையில் வாசற்படியில் யாரையும் காணோம் என்றபோதும் அக்காட்சியால் அவள் மனம் மிக நெகிழ்ந்து தனது கணவன் உள்ளிட்ட அனைவருக்கும் கூறினாள். தபால் இலாகாவில் அவர் பணியாற்றி வந்தார். அவர் அகோலாவுக்கு மாற்றப்பட்டபோது பக்தர்களான கணவனும், மனைவியும் ஷீர்டிக்குப் போவதெனத் தீர்மானித்தனர். ஒரு பொருத்தமான நாளில் இருவரும் புறப்பட்டு வழியில் கோமதி தீர்த்துக்குச் சென்றுவிட்டு ஷீர்டியை அடைந்து அங்கு இரண்டு மாதங்கள் தங்கினர்.
ஒவ்வொரு நாளும் அவர்கள் மசூதியை அடைந்து பாபாவை வழிபட்டு, காலத்தைச் சந்தோஷமாகக் கழித்தனர். அவ்விருவரும் கிச்சடியை நைவேத்யமாக சமர்ப்பிக்க ஷீரடிக்கு வந்தனர். ஆனால் முதல் பதினான்கு தினங்களுக்கு என்ன காரணத்தினாலோ அதை சமர்ப்பிக்க அவர்களுக்கு இயலவில்லை. அப்பெண்மணிக்கு இந்தக் காலதாமதம் பிடிக்கவில்லை. பின் பதினைந்தாவது நாள் அவள் தனது கிச்சடியுடன் மசூதிக்கு வந்தாள். பாபாவும் மற்றவர்களும் ஏற்கனவே சாப்பாட்டுக்காக அமர்ந்துகொண்டிருப்பதையும் திரை தொங்கவிடப்பட்டதையும் கண்டாள். ஆனால் அவளால் பொறுக்க இயலவில்லை. திரையைக் கையால் விலக்கிவிட்டு உள்ளே நுழைந்தாள். அப்பலகாரத்துடன் அவள் வந்ததும் பாபா மிகவும் மகிழ்ந்து கரண்டி - கரண்டியாகப் பச்சடியை உண்டார். இவ்விஷயத்தில் பாபாவின் ஊக்கத்தைக் கண்டு எல்லோரும் அதிசயமடைந்தனர். இந்தக் கிச்சடிக் கதையைக் கேட்பவர்களுக்கெல்லாம் பக்தர்கள்பால் பாபா கொண்டிருந்த அசாதாரண அன்பு உறுதியாயிற்று.
மேகா
இப்போது நாம் மூன்றாவதும், பெரியதுமான சிட்டுக்குருவியிடம் போவோம். ராவ்பஹதூர் ஹரிவிநாயக் சாதேவின் பிராமணச் சமையல்காரனான வீரம்காவனைச் சேர்ந்த மேகா என்பவன் எளிமை மிகுந்தவன், படிக்காதவன். அவன் ஒரு சிவபக்தன். 'நமசிவாய:' என்ற பஞ்சாஷரத்தை அவன் சதாகாலமும் ஸ்மரித்து வந்தான். சந்தியாவைப் பற்றியோ அதன் முக்கிய மந்திரமான காயத்ரியைப் பற்றியோ அவனுக்கு எதுவும் தெரியாது. சாதே அவனிடம் ஆர்வம் பூண்டு அவனுக்கு சந்தியாவையும், காயத்ரியையும் கற்பித்தார். ஷீர்டி சாயிபாபா சிவனின் அவதாரம் என்று அவனுக்குக் கூறி ஷீரடிக்கு அவனைப் புறப்படச் செய்தார். ப்ரோச் ரயில் நிலையத்தில் சாயிபாபா ஒரு முஹமதியர் என்று கேள்விப்பட்டான். அவனது வைதீகமான எளிய மனம் ஒரு முஹமதியர் முன் வணங்குவதைக் குறித்து மிகவும் குழப்பமடைந்ததால் தன்னை அங்கு அனுப்ப வேண்டாமென தனது எஜமானரை வேண்டிக்கொண்டான். ஆனால் அவரோ போகவேண்டியத்தை வற்புறுத்தி அவ்விடமிருந்த தனது மாமனாரான கணேஷ் தாமோதர் என்ற தாதா கேல்கருக்கு ஒரு கடிதம் கொடுத்து அவனை சாயிபாபாவுக்கு அறிமுகப்படுத்துமாறு அனுப்பினார்.
அவன் ஷீர்டிக்குச் சென்று மசூதியை அடைந்தபோது பாபா மிகவும் கோபமாய் இருந்தார். அவனை மசூதிக்குள் நுழைய விடவில்லை. "அந்த ராஸ்கலை வெளியே தள்ளு" என்று கர்ஜித்தார். "நீ உயர்ந்த ஜாதி பிராமணன், நான் கீழான முஹமதியன். இங்கு வருவதால் நீ உனது ஜாதியை இழந்துவிடுவாய். எனவே நீ போய்விடு" என்று அவனை நோக்கி உரைத்தார். இவ்வுரைகளைக் கேட்டதும் மேகா நடுங்கத் தொடங்கினான். தன் மனதில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை பாபா எங்ஙனம் அறியலானார் என்பது குறித்து அவன் ஆச்சரியப்பட்டுக்கொண்டிருந்தான்.
அவன் அங்கு சில நாட்கள் தங்கி பாபாவுக்குத் தனக்கே உரியமுறையில் சேவை செய்துகொண்டிருந்தான். ஆனால் இன்னும் பக்குவமடையவில்லை. பின்னர் வீட்டிற்குச் சென்றுவிட்டு த்ரயம்கேஸ்வரத்தில் ஒன்றரை ஆண்டுகள் தங்கியிருந்துவிட்டு மீண்டும் ஷீர்டிக்கு வந்தான். இம்முறை தாதா கேல்கரின் குறுக்கீட்டால் மசூதிக்குள் நுழையவும், ஷீர்டியில் தங்கவும் அனுமதிக்கப்பட்டான். மேகாவுக்கு பாபா உதவியது வாய்மொழிக் குறிப்புக்கள் எதனாலும் அல்ல. மேகாவின்மேல் அவர் மானசீகமான அருள் செய்தார். இதனால் மேகா பெருமளவு மாறுதலுற்று நன்மை அடைந்தான். பின்னர் சாயிபாபாவை சிவனின் அவதாரமாகவே அவன் கருதலானான். சிவனை வழிபடுவதற்கு வில்வ இலைகள் தேவையாய் இருந்ததால் மேகா ஒவ்வொருநாளும் அவைகளைக் கொணர்வதற்காக மைல் கணக்கில் நடந்துசென்று தனது சிவனை — பாபாவை — வழிபடுவான்.
கிராமத்தில் உள்ள எல்லா தெய்வங்களையும் வணங்கிய பின்னர் மசூதிக்கு வந்து பாபாவின் ஆசனத்திற்கு வணக்கம் செலுத்திய பின்னர் அவன் பாபாவை வழிபட்டு, சில சேவைகளைச் — பாபாவின் பாதங்களைப் பிடித்துவிடுவது — செய்து பின்பு பாபாவின் பாதங்களைக் கழுவிய தீர்த்ததைப் பருகுவது ஆகியவை அவனது வழக்கம். ஒருமுறை கண்டோபா கோவிலின் கதவு சாத்தியிருந்ததால் அவன் அந்தக் கடவுளை வழிபடாமலே மசூதிக்கு வந்தான். பாபா அவனது வணக்கத்தை ஏற்றுக்கொள்ளாமல் கதவு திறந்திருக்கிறது என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டார். மேகா அங்கு சென்று கதவு திறந்தது கண்டு கண்டோபாவை வணங்கிய பின் வழக்கம்போல் பாபாவிடம் திரும்பி வந்தான்.
கங்கா ஸ்நானம்
ஒரு மகர சங்கராந்தி தினத்தன்று பாபாவின் உடலில் சந்தானம் பூசி அவரைக் கங்கை நீரால் குளிப்பாட்ட மேகா விரும்பினான். இந்த செயல்முறைக்கு உடன்பட முதலில் பாபா மனதில்லாதவராய் இருந்தார். ஆனால் அவனது தொடர்ந்த வேண்டுதல்களின் காரணமாக சம்மதித்தார். கோமதி ஆற்றிலிருந்து புனிதநீர் கொணர்வதற்காக அவன் 24 மைல் நடந்து போய்வர வேண்டும். அவ்வாறு நீர் கொண்டுவந்து மத்தியான ஸ்நானத்திற்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, பாபாவை அதற்காகத் தயாராய் இருக்கும்படி கேட்டுக்கொண்டான்.
ஒரு பக்கிரி என்ற முறையில் தனக்கும் கங்கை நீருக்கும் ஒன்றும் தொடர்பு இருக்கவில்லை என்றுகூறி மீண்டும் அவனிடம் இந்தக் குளியலிலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டினார். ஆனால் மேகா அதற்குச் செவி சாய்க்கவில்லை. கங்கை நீர் அபிஷேகத்தால் சிவபெருமான் மகிழ்கிறார் என்று அவனுக்குத் தெரியும். அந்த நல்ல நாளன்று அவனது சிவனுக்கு — பாபா — அந்த அபிஷேகத்தைச் செய்தாக வேண்டும். பின்னர் பாபா சமதித்துக் கீழிறங்கி வந்து ஆசனப் பலகையில் அமர்ந்து தலையை முன்னால் நீட்டிக்கொண்டு "ஓ! மேகா, இதையாவது தயவு செய்வாயாக, தலையே உடம்பின் பிரதான பாகமாதலால் தலைமேல் மட்டும் நீர் ஊற்று. உடம்பு முழுவதும் குளிப்பதற்கு அது சமமாகும்" என்றார். "அப்படியே என்றான் மேகா. அபிஷேக கலயத்தை மேலே தூக்கி தலையின்மேல் ஊற்றத் தொடங்கினான். ஆனால் அப்படி செய்துகொண்டிருக்கும்போது அன்பால் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு "ஹர்... ஹர்... கங்கே!" என்று கூவிக்கொண்டே அவர் உடல் முழுவதும் நீரை ஊற்றிவிட்டான். கலயத்தைப் புறத்தில் வைத்துவிட்டுப் பாபாவைப் பார்க்கத் தொடங்கினான். அவனது வியப்புக்கும் ஆச்சரியத்துக்கும் ஏற்ப பாபாவின் தலை மட்டுமே நனைந்திருந்தது. உடம்பு ஈரமில்லாமலே இருந்தது.
திரிசூலமும் லிங்கமும்
பாபாவை மேகா இரண்டு இடங்களில் வழிபட்டான். மசூதியில் நேரடியாகவும், வாதாவில் நானா சாஹேப் சாந்தோர்கர் அளித்த பாபாவின் பெரிய படத்தின் மூலமாகவும் பூஜித்து வந்தான். இதை அவன் ஓராண்டுகாலம் செய்துவந்தான். பின்னர் அவனது பக்தியை மெச்சி அவனது நம்பிக்கையை உறுதி செய்வதற்காக பாபா அவனுக்கு ஒரு காட்சி நல்கினார். ஒருநாள் அதிகாலையில், மேகா இன்னும் படுக்கையைவிட்டு எழாமலிருக்கையில் ஆனால் கண்கள் மூடியிருந்த நிலையில் — விழிப்புடன் , பாபாவின் உருவத்தை அவன் தெளிவாகக் கண்டான்.
அவன் விழித்திருப்பதை அறிந்து பாபா அவன்மீது அக்ஷதையை வீசியெறிந்து "மேகா! திரிசூலம் வரை" என்று உரைத்து மறைந்துவிட்டார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவன் ஆவலுடன் கண்களைத் திறந்தான். ஆனால் அங்கு பாபாவைக் காணவில்லை. அக்ஷதை மட்டும் அங்குமிங்கும் சிதறிக் கிடப்பதைக் கண்டான். பின்னர் பாபாவிடம் சென்று காட்சியைப்பற்றிக் கூறி ஒரு திரிசூலம் வரைவதற்கு அவரின் இசைவையும் கேட்டான்.
பாபா: திரிசூலம் வரையும்படி நான் உன்னைக் கேட்ட மொழிகளை நீ கேட்கவில்லையா? எனது மொழிகள் எப்போதும் பொருள் என்னும் சூல் கொண்டிருக்கின்றன.ஒருபோதும் வேருமையானதல்ல.
மேகா: என்னைத் தாங்கள் எழுப்பியதாகக் கருதினேன். ஆனால் எல்லாக் கதவுகளும் மூடியிருந்ததால் அதை ஒரு காட்சியாக நினைத்தேன்.
பாபா: நான் நுழைவதற்கு எனக்கு எவ்விதக் கதவும் தேவையில்லை. எனக்கு எவ்வித உருவமோ, நீளமோ கிடையாது. எப்போதும் எங்கும் நான் வசிக்கிறேன். என்னை நம்பி என்பால் லயமாகும் மனிதனின் எல்லாக் காரியங்களையும் பொம்மலாட்டதைப் போன்று நான் நின்று நடத்துகிறேன்.
மேகா, வாதாவுக்குத் திரும்பிவந்து பாபாவின் படத்தருகே சிவப்பு திரிசூலம் ஒன்றைச் சுவரில் வரைந்தான். மறுநாள் புனேவில் ஒரு ராம்தாஸி பக்தர் வந்து பாபாவை வணங்கி அவருக்கு ஒரு லிங்கத்தைச் சமர்ப்பித்தார். இச்சமயத்தில் மேகாவும் அவ்விடம் வந்தான். பாபா அவனிடம், "பார், சங்கர் வந்துவிட்டார். இப்போது அவரைக் காப்பாற்று — அதாவது வழிபடு . சூலத்தை, லிங்கம் உடனே தொடர்ந்து வந்தது கண்டு மேகா அதிசயமடைந்தான். வாதாவிலும் கூட காகா சாஹேப் தீஷித் குளித்தபின் கையில் துவட்டிய துண்டுடன் நின்று சாயியை நினைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது மனக்காட்சியில் ஒரு லிங்கத்தைக் கண்டார். இது குறித்து அவர் அதிசயப்பட்டுக் கொண்டிருக்கையில் மேகா அவரிடம் வந்து, பாபா தனக்கு பரிசளித்த லிங்கத்தை அவரிடம் காட்டினான். தான் சில நிமிட நேரங்களுக்கு முன் காட்சியில் தரிசித்த லிங்கம் இதனுடன் அச்சாகப் பொருந்தியிருப்பது கண்டு அவர் மிகவும் மகிழ்வுற்றார். சில நாட்களில் திரிசூலம் வரைவதும் முடிவடைந்தது. பாபா அந்த லிங்கத்தை, மேகா வழிபட்டுக்கொண்டிருந்த பெரிய படத்தின் அருகில் ஸ்தாபித்தார். சிவா பூஜை செய்வது மேகாவுக்கு மிகவும் பிடித்தமானது. திரிசூலம் வரையச் செய்வித்தும், அதனருகில் லிங்கத்தை ஸ்தாபித்தும் பாபா அவனது நம்பிக்கையை ஊர்ஜிதம் செய்தார்.
பல ஆண்டுகள் தொடர்ந்த சேவைக்குப் பின்னர், ஒவ்வொரு நாள் மத்தியானமும், மாலையும் வழக்கமான வழிபாட்டையும், ஆரத்தியையும் செய்த பின்பு, 1912ல் மேகா சிவபதம் சேர்ந்தான். பின்னர் பாபா தனது கைகளை அவனது உடல்மீது தடவி, "இவன் என் உண்மை பக்தன்" என உரைத்தார். தமது சொந்த செலவிலேயே வழக்கமான சாப்பாடு பிராமணர்களுக்குச் செய்துவைக்க ஆணையிட்டார். இது காகா சாஹேப் தீஷித்தால் நிறைவேற்றப்பட்டது.
ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
(2) டெண்டுல்கர் — தகப்பனாரும் மகனும்
(3) டாக்டர் கேப்டன் ஹாடே
(4) வாமன் நார்வேகர்
ஆகியோரின் கதைகள்
இந்த அத்தியாயம் சாயிபாபாவைப் பற்றிய மற்ற பல அற்புதமான, சுவையான கதைகளை விவரிக்கிறது.
சென்னை பஜனை சங்கம்
1916ஆம் ஆண்டில் இந்தக் குழு காசிக்குத் தீர்த்தயாத்திரையாக புறப்பட்டது. ஒரு மனிதர், அவர் மனைவி, மகள், மைத்துனி ஆகியோரையே அக்குழு கொண்டிருந்தது. துரதிர்ஷ்டவசமாக அவர்களின் பெயர்கள் குறிக்கப்படவில்லை. போகும் வழியில் அகமத்நகர் ஜில்லா கோபர்காவன் தாலுக்காவிலுள்ள ஷீர்டியில், தமது பக்தர்களுக்கும், அங்கு சென்று தங்களது திறமைகளைக் காட்டிய திறமைசாலிகளுக்கும் தினந்தோறும் பணத்தை விநியோகித்துவரும் தாராளமும், அமைதியும், சாந்தியும் உடைய பெரும்ஞானி ஒருவர் இருக்கிறார் என்று அவர்கள் கேள்விப்பட்டனர்.
சாயிபாபாவால் தஷிணையாக ஏராளமான பணம் தினந்தோறும் சேகரிக்கப்பட்டது. இத்தொகையிலிருந்து பக்த கொண்டாஜியின் மகளான அமனி என்ற 3 வயது குழந்தைக்குத் தினந்தோறும் ரூ.1ம், வேறு சிலருக்குத் தினந்தோறும் ரூ.2 முதல் ரூ.5 வரையும், அமனியின் தாயாருக்குத் தினந்தோறும் ரூ.10 முதல் ரூ.20 வரையிலும், சமயத்தில் ரூ.50 கூட அவர் வினியோகித்தார்.
இவற்றையெல்லாம் கேள்விப்பட்டு அந்தக் கோஷ்டி ஷீர்டிக்கு வந்து தங்கியது. அக்குழு மிக நன்றாக பஜனை செய்து மிகச்சிறந்த பாடல்களையெல்லாம் பாடியது. ஆனால் அந்தரங்கமாக அவர்கள் பணத்துக்காக ஆசைப்பட்டனர். அக்கோஷ்டியில் மூவர் பேராசை பிடித்தவர்களாய் இருந்தனர். ஆனால் அவ்வீட்டுத் தலைவியின் குணம் வேறுபட்டதாய் இருந்தது. அவளுக்கு பாபாவின் மேல் அன்பும், பிரியமும் இருந்தது. ஒருநாள் மத்தியான ஆரத்தியின்போது அவளது பக்தி, நம்பிக்கை இவற்றில் பெருமகிழ்வடைந்த பாபா அவளுக்கு அவளது இஷ்ட தெய்வக் காட்சியை அளித்தார். வழக்கப்படி சாயிநாதனுக்குப் பதில் சீதாநாதனாக — ராமனாக — காட்சியளித்தார். அவளது இஷ்ட தெய்வத்தைக் கண்டு மிகமிக உருகிப்போய்விட்டாள். கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பொங்கிவழிய மகிழ்ச்சியில் கைகளைத் தட்டினாள். மக்கள் அவளது ஆனந்த நிலையைக் கண்டு அதிசயமுற்றனர். ஆனால் அதன் காரணத்தை அவர்கள் அறிய இயலவில்லை.
பின்னர் மாலைப் பொழுதில் எல்லாவற்றையும் அவள் தன் கணவனுக்கு விளக்கினாள். சாயிபாபாவுக்குப் பதிலாக அவள் எங்ஙனம் ராமரைக் கண்டாள் என அவள் கூறினாள். மிகுந்த எளிமையும், பக்தியும் உடையவளாதலால் அது அவளது 'மனப் பிராந்தியே' என அவர் நினைத்தார். "மற்றவர்கள் எல்லாம் சாயிபாபாவைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது நீ மட்டும் ராமனைக் காண்பதாவது" என்று அவர் அவளைக் கேலி செய்தார். அவளது மனம் அமைதியாகவும், சாந்தமாகவும் இருந்தபோதெல்லாம் அடிக்கடி ஸ்ரீராம தரிசனத்தைக் கண்டாள். ஆதலால் அவள் இக்கூற்றுக்குச் செவி சாய்க்கவில்லை.
அற்புதக் காட்சி
இம்மாதிரியாக எல்லாம் நடந்துகொண்டிருக்கும்போது ஒருநாள் இரவு அவள் கணவர் தன் கனவில் அற்புதக் காட்சி ஒன்றைக் கண்டார். அது கீழ்வருமாறு:
அவர் ஒரு பெரிய நகரத்தில் இருக்கிறார். போலீஸ் அவரைக் கைதுசெய்து கைகளைக் கட்டி, லாக்-அப்பில் வைத்திருக்கிறது. போலீஸ் நன்றாக அழுத்திக் கட்டிக்கொண்டிருக்கும்போது ஜெயிலுக்கு வெளியில் சாயிபாபா அமைதியாக நின்றுகொண்டிருப்பதைக் காண்கிறார். பாபா இவ்வளவு அருகில் இருப்பதைக் கண்டு வெளிப்படையான குரலில் அவரிடம் "உமது புகழைக் கேள்விப்பட்டு நான் உமது திருவடிகளிடையே வந்தேன். தாங்களே நேரில் நின்றுகொண்டிருக்கும்போது எனக்கு இந்தக் கேடு ஏன் நிகழ வேண்டும்? என வினவுகிறார்.
பாபா: உனது கர்மத்தின் விளைவை நீ அனுபவித்தாக வேண்டும்.
அவர்: இந்தப் பிறவியில் இத்தகைய துரதிர்ஷ்டத்தை அளிக்கும் விதத்தில் நான் ஏதும் செய்யவில்லையே?
பாபா: இப்பிறவியில் இல்லையென்றால் உனது போன பிறவியில் நீ ஏதும் பாவம் செய்திருப்பாய்.
அவர்: எனது முந்தைய பிறவிபற்றி எனக்கு ஏதும் தெரியாது. ஆனால் அப்படியே நான் செய்திருப்பதாகவே வைத்துக்கொண்டபோதிலும் தங்கள் சாந்நித்யத்தின் முன்னர், நெருப்பில் வைக்கோல் எரிவதைப்போன்று ஏன் அவைகள் அழிக்கப்படக்கூடாது?
பாபா: உனக்கு அத்தகைய நம்பிக்கை உண்டா?
அவர்: ஆம்.
பாபா: உனது கண்களை மூடு.
அவர் கண்களை மூடியது தான் தாமதம் ஏதோ ஒன்று நிலத்தில் விழுந்து பலத்த அடி விழுவதுபோல் கேட்டது. அவர் கணைகளைத் திறந்த போது தாம் விடுதலையாகி இருப்பதையும், போலீஸ் இரத்தம் சிந்தி கீழே விழுந்து கிடப்பதையும் கண்டார். மிகவும் பீதியடைந்து பாபாவை அவர் பார்த்தார்.
பாபா: நீ இப்போது நன்றாகப் பிடிபட்டுக்கொண்டாய். இப்போது அதிகாரிகள் வந்து உன்னைக் கைது செய்வார்கள்.
அவர்: — கெஞ்சினார் — தங்களைத் தவிர என்னைக் காப்பாற்றுவார் வேறு ஒருவரும் இல்லை. எப்படியாவது என்னைக் காப்பாற்றுங்கள்.
பின்னர் பாபா அவரை மீண்டும் கண்களை மூடச் சொன்னார். அவர் அதே மாதிரியாகச் செய்து பின் கண்களைத் திறந்ததும் அவர் ஜெயிலுக்கு வெளியே விடுதலையாகி இருப்பதையும் பாபா அவரருகில் இருப்பதையும் கண்டார்.
பாபாவின் காலடிகளில் அப்போது அவர் வீழ்ந்தார், "இந்த நமஸ்காரத்திற்கும் முந்தைய நமஸ்காரங்களுக்கும் ஏதேனும் வித்தியாசம் உண்டா?" என்று பாபா கேட்டார். "ஏராளமான வித்தியாசம் இருக்கிறது. எனது முந்தைய நமஸ்காரங்களெல்லாம் தங்களிடமிருந்து பணம் பெறுவதற்காகச் செய்யப்பட்டன. ஆனால் இந்த நமஸ்காரமோ தாங்கள் கடவுள் என்ற எண்ணத்தில் செய்யப்படுகிறது. அத்துடன் தாங்கள் முஸ்லீமாக இருந்துகொண்டு ஹிந்துக்களைப் பாழ்படுத்துவதாக நினைத்தேன்.
பாபா: முஹமதியக் கடவுள் மீது உனக்கு நம்பிக்கை இல்லையா?
அவர்: இல்லை.
பாபா: 'பஞ்சா' என்ற உலோகத்தாலான கை அடையாளம் உங்கள் வீட்டில் இல்லையா? 'தாபூத்' — மொஹரம் — சமயத்தில் நீ அதனை வழிபடுவதில்லையா? கல்யாணம் மற்றும் இதர பண்டிகைக் காலங்களில் நீங்கள் அமைதிப்படுத்தி ஆற்றும் காட்பீபீ என்ற மற்றொரு முஹமதியப் பெண் தெய்வம் உங்கள் வீட்டில் இல்லையா?
அவர் இவைகளையெல்லாம் ஒத்துக்கொண்டார்.
பாபா: உனக்கு வேறென்ன வேண்டும்?
அவரது குரு ராம்தாஸின் தரிசனத்தைப் பெற அவர் மனதில் அவா ஒன்று எழுந்தது. அப்போது பாபா பின்னால் திரும்பிப் பார்க்கச் சொன்னார். அவர் திரும்பியபோது ராம்தாஸ் நின்றுகொண்டிருந்தார். அவர் காலடியில் விழப்போனபோது ராம்தாஸ் மறைந்துவிட்டார். பின்னர் அவர் பாபாவை விருப்பத்துடன் "நீங்கள் வயதானவராகத் தோன்றுகிறீர்களே, உங்கள் வயது என்னவென்று தெரியுமா?" என்று கேட்டார்.
பாபா: என்ன! நான் கிழவன் என்றா சொல்கிறாய்? என்னோடு ஒரு ஓட்டப்பந்தயம் விட்டுப்பார்த்துவிட்டுச் சொல்.
இதைக் கூறிவிட்டு பாபா ஓடத் தொடங்கினார். அவரும் பின்னால் ஓடினார். ஓடும்போது பாபா அவர்தம் பாதத்தால் எழுப்பிய தூசியில் மறைந்துவிட்டார். அவரும் கண்விழித்தார்.
விழித்தபின் கனவுக்காட்சியைப் பற்றி அவர் தீவிரமாகச் சிந்தித்தார். அவரது மனோபாவனை முற்றிலுமாக மாறிவிட்டது. பாபாவின் பெருமையை அவர் உணர்ந்துகொண்டார். இதன்பின் அவரது பறிக்கும் குணமும், சந்தேகமும் மறைந்து ஒழிந்தன. பாபாவின் பாதாம்புயத்தில் உண்மையான பக்தி அவருக்கு ஏற்பட்டது. அக்காட்சி கனவுதான். ஆனால் கேட்கப்பட்ட வினா விடைகள் மிகவும் விருவிறுப்பானதும் பொருள் செறிந்ததும் ஆகும்.
மறுநாள் காலை எல்லோரும் ஆரத்திக்காக மசூதியில் குழுமியபோது பாபா அவருக்கு இரண்டு ரூபாய் மதிப்புள்ள இனிப்புக்களையும், தம் பாக்கெட்டிலிருந்து இரண்டு ரூபாய் பணமும் எடுத்து பிரசாதமாக அளித்தார். மேலும் சில நாட்கள் அவரை அங்கு தங்கச்செய்து, "அல்ல உனக்கு தாராளமாக அளிப்பார். உனக்கு எல்லாவித நன்மைகளையும் செய்வார்" என்று ஆசி கூறினார். அங்கு அவர் அதிகமாகப் பணம் பெறவில்லை. ஆனால் அதற்கும் மேலானவைகளைப் பெற்றார். அதாவது பாபாவின் ஆசியை! அது அவருக்குத் தொடர்ந்து நன்மையளித்து வந்தது. பின்னால் அக்கோஷ்டிக்கு ஏராளமான பணம் கிடைத்தது. அவர்களது பிரயாணம் வெற்றிகரமாக முடிவடைந்தது. அவர்கள் பிரயாணத்தின்போது எவ்வித அசௌகரியமோ, தொல்லையோ ஏற்படவில்லை. பாபாவின் அருளால் எய்திய ஆனந்தத்தையும், ஆசிகளையும் நினைந்தவாறே பத்திரமாகவும், சௌக்கியமாகவும் வீடு திரும்பினர்.
டெண்டுல்கர் குடும்பம்
பாந்த்ராவில் டெண்டுல்கர் என்னும் குடும்பம் ஒன்று இருந்தது. அதன் உறுப்பினர்கள் எல்லோரும் பாபாவிடம் பக்தி பூண்டவர்களாக வாழ்ந்து வந்தனர். 'ஸ்ரீ சாயிநாத் பஜன்மாலா' என்னும் 800 செய்யுட்கள் கொண்ட ஒரு நூலை திருமதி சாவித்ரிபாயி டெண்டுல்கர் பதிப்பித்திருக்கிறார். அது பாபாவின் லீலைகள் எல்லாம் விளக்குகிறது. பாபாவைப்பற்றி ஆர்வம் கொண்டோர் எல்லோரும் படிக்க உகந்த நூல் அது.
பாபு டெண்டுல்கர் என்னும் அவர்களது புதல்வன் இரவும், பகலும் அரும்பாடுபட்டு படித்துக்கொண்டிருந்தான். அவன் மருத்துவப் பரீட்சைக்குச் செல்லவேண்டும். சில ஜோசியர்களைக் கலந்தாலோசித்தான். அவனது ஜாதகத்தைப் பரிசீலித்துவிட்டு கிரஹங்கள் அவனுக்கு இவ்வருடம் சாதகமில்லை என்றும், எனவே அடுத்த வருடம் அவன் பரீட்சைக்குச் சென்றால் நிச்சயம் வெற்றிபெறுவான் என்றும் அவர்கள் கூறினர். இது அவனைக் கவலைக்குள்ளாக்கி, நிலைகொள்ளாமலிருக்கச் செய்தது. சில நாட்களுக்குப்பின் அவனது தாயார் ஷீர்டி சென்று பாபாவைக் கண்டாள்.
பல விஷயங்களுடன், சில நாட்களில் பரீட்சை எழுதவிருந்த தன் மகனின் கவலைக்கிடமான நிலைமைகளையும் அவள் பாபாவுக்குக் கூறினாள். இதைக்கேட்டுவிட்டு பாபா கூறினார், "உனது மகனிடம் என்னை நம்பும்படி சொல். ஜாதகம், கைரேகைக்காரர்களின் ஜோசியம் ஆகிய முன்னோடி உரைகளைத் தூக்கியெறிந்துவிட்டு அவன் பாட்டுக்குப் படித்துக்கொண்டிருக்கட்டும். பரீட்சையை அமைதியாக எழுதட்டும். அவன் இவ்வாண்டு தேறுவது உறுதி. என்னை நம்பும்படியும் ஏமாற்றமடைய வேண்டாம் என்றும் சொல்".
தாய் வீட்டுக்குத் திரும்பி இச்செய்தியை மகனுக்குத் தெரிவித்தாள். பின்னர் அவன் கஷ்டப்பட்டுப் படித்து உரிய காலத்தில் பரீட்சையும் எழுதினான். எழுதும் பேப்பர்களை அவன் நன்றாகச் செய்திருந்தான். ஆனால் சந்தேகத்தால் பீடிக்கப்பட்டு பாஸ் செய்வதற்குப் போதுமான மார்க்குகள் தான் பெறப்போவதில்லை என்று எண்ணினான். எனவே வாய்மொழிப் பரீட்சைக்கு போவதைப்பற்றி அவன் கவலைப்படவில்லை. ஆனால் பரீட்சை அதிகாரி அவனை விடுவதாக இல்லை.
அவன் எழுதிய பேப்பர்களில் பாஸ் செய்துவிட்டதாகவும், வாய்மொழிப் பரீட்சைக்கு அவன் வரவேண்டும் என்றும் சகமாணவன் ஒருவன் மூலம் செய்தியனுப்பினார். இவ்வாறாக அவன் அப்பரீட்சையில் தேறுவதற்கு ஊக்குவிக்கப்பட்டு, இரண்டிலுமே வெற்றியடைந்தான். கிரஹங்கள் அவனுக்கு எதிராக இருந்தபோதிலும், பாபாவின் அருளால் அவன் இவ்வாறாக வெற்றிபெற்றான். ஐயங்களும், கஷ்டங்களும் நம்மை சற்றே அசைத்து நம்பிக்கையை உறுதிப்படுத்தவே சூழ்கின்றன என்பதை இங்கே அறியவேண்டும். நாம் வாழ்க்கையில் சோதனைக்குள்ளாக்கப்படுகிறோம். முழு நம்பிக்கையுடன் பாபாவைப் பற்றிக்கொண்டு நமது முயற்சிகளைத் தொடர்ந்து செய்வோமேயானால் நமது முயற்சிகள் அனைத்தும் முடிவாக வெற்றிமுடி சூடப்பெறும்.
இப்பையனின் தந்தையாரான ரகுநாத்ராவ் பம்பாயில் உள்ள வெளிநாட்டு வாணிபக் கம்பனி ஒன்றில் பணியாற்றி வந்தார். வயதாகிவிட்டபடியால் அவரால் வேலையைச் சரியாகச் செய்ய இயலவில்லை. எனவே அவர் ஓய்விற்காக விடுப்பு எடுக்க வேண்டியதாயிற்று. விடுமுறையின்போது அவர் தேகநிலை முன்னேறாததால் லீவை அதிகப்படுத்துவதோ அல்லது வேலையினின்று ஓய்வு பெறுவதோ தவிர்க்க முடியாததாகிவிட்டது. அவர் முதுமையும், நம்பிக்கையும் வாய்ந்த பணியாளராக இருப்பதால் அந்த ஸ்தாபனத்தின் முக்கிய மேனேஜர் அவருக்கு ஒரு பென்ஷனுடன் ஓய்வு கொடுக்கத் தீர்மானித்தார்.
எவ்வளவு பென்ஷன் கொடுப்பது என்ற பிரச்சனை இத்தகைய தீர்மானத்திலிருந்து வந்தது. அவர் மாதம் ரூ.150 பெற்று வந்தார். பென்ஷன் தொகையான ரூ.75 வீட்டுச் செலவுகளைப் பராமரிக்கப் போதுமானவை அன்று. எனவே அவர்களெல்லாம் இவ்விஷயத்தில் கவலையுள்ளவர்களாக இருந்தனர். முடிவான ஏற்பாட்டுக்குப் பதினைந்து தினங்கட்கு முன்பாக பாபா, திருமதி டெண்டுல்கரின் கனவில் தோன்றி, "பென்ஷன் நூறு ரூபாயாக அளிக்கப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன். இது உனக்குத் திருப்திதானே?" என்று கேட்டார். "பாபா இம்மாதிரி ஏன் என்னைக் கேட்கவேண்டும்? நாங்கள் உங்களையே முழுவதும் நம்புகிறோம்" என்று திருமதி டெண்டுல்கர் பதிலளித்தார். பாபா ரூ.100 என்று கூறியபோதும், ரூ.10 இன்னும் அதிகமாகவே கொடுக்கப்பட்டது. இது ஒரு விசேஷ நியதியாக, தமது பக்தர்களுக்கு அத்தகைய அற்புதமான அன்பையும், பாதுகாப்பையும் பாபா நிச்சயமாகவே காண்பிக்கிறார் என்பதை உணர்த்துகிறது.
கேப்டன் ஹாடே
பிகானீரில் தங்கியிருந்த கேப்டன் ஹாடே என்பவர் பாபாவின் மிகப்பெரும் பக்தர். ஒருமுறை அவரது கனவில் பாபா தோன்றி "என்னை மறந்துவிட்டாயா?" என்று கேட்டார். ஹாடே உடனே பாபாவின் பாதங்களைப் பிடித்துக்கொண்டு, "தனது தாயைக் குழந்தை மறந்துவிட்டால் அது எங்ஙனம் காப்பாற்றப்படும்?" என்றார்.
பின்னர் ஹாடே தோட்டத்துக்குச் சென்று அவரைக்காய் பறித்து ஒரு விருந்துக்கும், தஷிணைக்கும் ஏற்பாடு செய்துவிட்டு, இவைகளை எல்லாம் பாபாவுக்குச் சமர்ப்பிக்க இருந்தபோது விழித்துக்கொண்டார். சிலநாட்களுக்குப்பின் அவர் குவாலியர் வந்தவுடன் ஒரு நண்பருக்கு ரூ.12ஐ மணியார்டர் மூலம் அனுப்பி ரூ.2ஐ ஷிதா — மளிகை — பொருட்களுக்கும், காய்கறிகளுக்கும் ரூ.10ஐ பாபாவுக்குத் தஷிணையாக அளிக்கும் குறிப்பையும் அனுப்பியிருந்தார். அந்த நண்பர் ஷீர்டிக்குச் சென்று குறிப்பிடப்பட்ட சாமாங்களையெல்லாம் வாங்கினார். ஆனால் காய்கறிகள் கிடைக்கவில்லை. சிறிது நேரத்தில் தலையில் சுமந்துகொண்டு ஒரு கூடைக்காரி வீதியில் எதிப்பட்டாள். வியப்பிற்கேற்ப அந்தக் கூடையில் வேண்டிய அவரைக்காய் கிடைத்தது. அது வாங்கப்பட்டு மற்றெல்லாப் பொருட்களுடன் சேர்த்து கேப்டன் ஹாடேயின் சார்பில் பாபாவுக்குச் சமர்ப்பிக்கப்பட்டன.
நிமோண்கர் அடுத்த நாள் நைவேத்யம் — சோறும், காய்கறியும் — தயார் செய்து பாபாவுக்கு, கேப்டன் ஹாடேயின் சார்பில் சமர்ப்பித்தார். சாப்பிடும்போது அவரைக்காயையே பாபா முதலில் எடுத்துச் சாப்பிட்டதையும், சாதம் முதலியவற்றைத் தொடாதது கண்டும் அனைவரும் அதிசயப்பட்டனர். இதைத் தன் நண்பன் மூலமாகக் கேட்டறிந்த ஹடேயின் மகிழ்ச்சி கரைகாணாது போயிற்று.
புனிதமாக்கப்பட்ட நாணயம் பாபாவின் ஸ்பரிசத்தால் புனிதமாக்கப்பட்ட நாணயம் ஒன்று தன் வீட்டில் இருக்கவேண்டுமென பிறிதொரு சமயத்தில் கேப்டன் ஹாடே விரும்பினார். ஷீர்டிக்குப் போய்க்கொண்டிருந்த நண்பர் ஒருவரைச் சந்தித்தார். அவரிடம் தமது நாணயத்தை அனுப்பினார். அந்த நண்பர் ஷீர்டிக்குச் சென்று நமஸ்கரித்தபின் முதலில் தமது ரூபாயைத் தஷிணையாக அவர் பாபாவுக்கு அளித்தார். அதை அவர் வாங்கி சட்டைப்பையில் போட்டுக்கொண்டார். பின் நண்பர் ஹாடேயின் நாணயத்தைக் கொடுத்தார். அதை பாபா வாங்கி உற்றுப்பார்த்துவிட்டு, தமது வலதுகை கட்டைவிரலால் சுண்டிவிட்டு பிடித்து விளையாடினார்.
பின் அந்த நண்பரிடம் அவர் "உதிப் பிரசாதத்துடன் இதை அதன் உரிமையாளரிடம் திரும்பக்கோடு. அவரிடமிருந்து எனக்கு எதுவும் வேண்டியதில்லை என்று கூறு. அமைதியுடனும், திருப்தியுடனும் அவரை வாழச்சொல்" என்று கூறினார். அந்த நண்பர் குவாலியருக்குத் திரும்பி புனிதமாக்கப்பட்ட நாணயத்தை ஹாடேயிடம் திரும்ப அளித்து, ஷீர்டியில் நிகழ்ந்த எல்லாவற்றையும் அவருக்குக் கூறினார். இம்முறை ஹாடே மிகவும் மகிழ்ந்து, பாபா எப்போதும் தாம் விரும்பிய மாதிரியான நல்ல எண்ணங்களை ஊக்குவிக்கிறார் என்று உணர்ந்தார். பாபாவும் அதையே முறையாக நிறைவேற்றினார்.
வாமன் நார்வேகர்
இப்போது வாசகர்கள் மற்றொரு கதையைக் கேளுங்கள். வாமன் நார்வேகர் என்றழைக்கப்படும் மனிதர் ஒருவர் பாபாவை மிகவும் நேசித்தார். அவர் ஒருமுறை ஒரு நாணயம் கொண்டுவந்தார். அதன் ஒரு பக்கத்தில் ராமர், சீதா, லக்ஷ்மணர் ஆகியோரின் உருவங்களும், மற்றொரு பக்கத்தில் கூப்பிய கரங்களுடன் ஆஞ்சநேயர் உருவமும் பொறிக்கப்பட்டிருந்தது. அதை பாபா தமது ஸ்பரிசத்தால் புனிதப்படுத்தி உத்தியுடன் திருப்பி அளிக்கவேண்டுமென்ற எண்ணத்தில் பாபாவுக்கு அதை அவர் அளித்தார். ஆனால் பாபா உடனே அதைத் தம் பாக்கெட்டிற்குள் போட்டுக்கொண்டுவிட்டார். வாமன்ராவின் என்னத்தை ஷாமா பின்னர் பாபாவுக்கு தெரிவித்து அதைத் திருப்பியளிக்க வேண்டினார்.
பாபா பின்னர் வாமன்ராவின் முன்னிலையில் இவ்வாறு பேசினார். "அது ஏன் அவருக்குத் திருப்பியளிக்கப்படவேண்டும்? அதை நாமேதான் வைத்துக்கொள்ளவேண்டும். அதற்காக ரூ.25 கொடுத்தாரானால் அது திருப்பியளிக்கப்படும்". வாமன்ராவ் ரூ.25 சேகரித்து அவற்றை பாபாவின் முன்னிலையில் வைத்தார். பின்னர் பாபா, "அந்த நாணயத்தின் மதிப்பு 25 ரூபாயைவிட மிகமிக அதிகமாகும். ஷாமா இந்த ரூபாயை எடுத்து நமது ஸ்டோரில் வைத்துக்கொள். நாணயத்தை உனது பூஜை அறையில் வைத்து வழிபடு" என்றார்.
பாபா இம்மாதிரியான செயலை ஏன் பின்பற்றினார் என்பதைக் கேட்க ஒருவருக்கும் தைரியமில்லை. ஒவ்வொருவருக்கும் எது மிகச்சிறந்தது, மிகப் பொருத்தமானது என்பதை பாபா மட்டுமே அறிவார்.
ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
(2) பம்பாயைச் சேர்ந்த பஞ்சாபி ராம்லால்
இவ்வத்தியாயத்தில் ஷீர்டிக்கு இழுக்கப்பட்ட இன்னும் இரண்டு அடியவர்களைப் பற்றி விவரிக்கப்பட்டிருக்கிறது.
முன்னுரை
கருணையின் இருப்பிடமாம் ஷீர்டி சாயிராம், தம் அடியவர்களிடம் பாசமும், அளவில்லா நேசமும் காட்டி அவருடைய வெறும் தரிசனத்தாலேயே இச்சம்சார வாழ்க்கையில் அவர்களுக்குள்ள பயத்தைப் போக்குகிறார். அவர்களின் பெருங்கேடுகளை அழிக்கிறார். அவர் முதலில் அருவமாய் இருந்தார். ஆயின் தம் அடியவர்களின் பக்தியின் பொருட்டு ஓர் உருவத்தை எடுக்க வேண்டியவரானார். ஞானிகளின் வருகையின் காரணம் அடியவர்களுக்கு 'விடுதலை' - 'தன்னையறிதல்' அளிப்பதேயாகும். அவர்களில் ஸ்ரேஷ்டரான சாயிக்கு அக்காரணம் தவிக்க இயலாதது. எவர், அவர்தம் பாதாரவிந்தங்களில் சரணாகதி அடைகிறார்களோ, அவர்களின் முன்னேற்றம் நிச்சயமானது. அவர்தம் பாதாரவிந்தங்களை நினைத்துக்கொண்டு பிராமணர்கள் புனித க்ஷேத்திரங்களினின்றும், வந்து அவர்தம் சன்னிதானத்தில் வேதங்களை ஓதுகிறார்கள். காயத்ரி மந்திரத்தை ஜெபிக்கிறார்கள். பலவீனங்களைக் கொண்டவர்களாகவும், எவ்வித ஏற்றமும் அற்ற நாம் 'பக்தி' என்றால் என்ன என்பதை அறியோம். ஆனால் மற்றெல்லோரும் கைவிட்டபோதிலும் சாயி நம்மைக் கைவிடமாட்டார் என்ற அளவு அறிவோம். யாரை அவர் ஆச்சீர்வதிக்கிறாரோ அவர்கள் எல்லையற்ற வலிமைபெற்று, மெய் - பொய் ஆகியவற்றைப் பகுத்துணரும் ஞானம் எய்துகிறார்கள்.
தம் அடியவர்களின் ஆசையை சாயி முழுமையாக அறிகிறார். அவைகளை நிறைவேற்றுகிறார். எனவே அவர்கள் விரும்பியதைப் பெற்று நன்றியுடையவர்களாக இருக்கிறார்கள். எனவே அவரைப் பிரார்த்திக்கிறோம். அவர்முன் வீழ்ந்து வணங்குகிறோம். நமது குற்றங்கள் பலவற்றையும் பொறுத்துக்கொண்டு கவலைகளினின்றும் நம்மை அவர் விடுவிக்கட்டும். பெருந்துயரங்களால் அவதியுற்றுக்கொண்டிருப்பவன் சாயியை இங்ஙனம் நினைத்துத் தியானிக்கிறான். அவரது அருளாலே அவன் மனம் அமைதியடைகிறது.
இந்த சாயி கருணைக்கடல், தம்மீது அவர் கருணை பொழிந்ததன் விழைவே இந்த சத்சரிதம் என்கிறார் ஹேமத்பந்த். அல்லாவிடில் அவருக்கு என்ன தகுதி இருக்கிறது! யார்தான் இவ்வேலையை மேற்கொள்ள இயலும்! ஆனால் சாயி எல்லாப் பொறுப்புக்களையும் ஏற்றுக் கொண்டதால் ஹேமத்பந்த் எவ்வித பாரத்தையும் உணரவில்லை. இது குறித்து எவ்விதக் கவலையும் கொள்ளவில்லை. அவரது பேச்சையும், பேனாவையும் உணர்வூட்ட ஆற்றல் மிக்க ஞானஒளி இருக்கும்போது அவர் ஏன் சந்தேகம் கொள்ளவேண்டும்? அல்லது ஏன் எவ்விதக் கவலையும் கொள்ளவேண்டும்? இது அவர்தம் முன்வினைப் புண்ணியவசத்தால் ஸ்ரீசாயி அவர்கள் இச்சேவைக்குத் தம்மை ஆட்படுத்தி, ஆசீர்வதித்த அதிர்ஷ்டசாலியாக நினைத்துக் கொள்கிறார்.
இந்தப் பின்வரும் நிகழ்ச்சி ஓர் சுவையான கதை மட்டுமன்று, புனிதமான அமுதமுமாகும். இதைப் பருகுபவன் சாயியின் பெருமையையும் அவர்தம் எங்கும்நிறை தன்மையையும் உணர்வான். விவாதிக்க, விமர்சிக்க விரும்புவோர் இந்தக் கதைகளுக்குச் செல்லக்கூடாது. இங்கு தேவையாய் உள்ளது விவாதமல்ல. அளவற்ற அன்பும், பக்தியுமேயாம். கற்றறிந்தோர், பக்தியுடையோர், உண்மையுடன் நம்பிக்கை கொண்டுள்ளோர் மட்டுமின்றி ஞானிகளின் சேவகர் என்று தம்மைக் கருதுவோர்களும் இக்கதைகளை விரும்பிப் பாராட்டுவர்.
மற்றவர்கள் அவைகளைக் கற்பனைக் கதைகள் என்றுகொள்வர். சாயியின் அதிர்ஷ்டம் வாய்ந்த அடியார்கள் சாயி லீலைகளைக் கற்பகதருவாகக் கருதுவர். இந்த சாயி லீலைகளின் அமிர்தத்தைப் பருகுவது அறியாமையில் மூழ்கியுள்ள ஜீவன்களுக்கு முக்தி கொடுக்கும். இல்லறத்தார்க்கு மனநிறைவளிக்கும். இலட்சியவாதிகளுக்குச் சாதனை கைகூடும். இது பற்றிய கதையைக் கவனிப்போம்.
காகாஜி வைத்யா
நாசிக் ஜில்லாவைச் சார்ந்த வணியில் காகாஜி வைத்யா என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் அங்கே சப்தஷ்ரிங்கிதேவி உபாசகர். சாதகமற்ற சூழ்நிலைகளாலும், துயரங்களாலும் அவர் பெருமளவு மன அமைதியை இழந்து சலனமுற்று இருந்தார். இத்தகைய சூழ்நிலையில் ஒருநாள் மாலை தேவியின் கோவிலுக்குச் சென்று தம்மைக் கவலைகளிலிருந்து மீட்குமாறு மிகவும் பக்திபூர்வமாக, மனமுருகிப் பிரார்த்தனை செய்தார். தேவி அவரது பக்தியால் மிகவும் மகிழ்ந்து அதேநாள் இரவு கனவில் தோன்றி அவரிடம் கூறினாள், "பாபாவிடம் நீ செல்வாயாக, பின் உன் மனம் அமைதியடையும்". இந்த பாபா யார் என்று அவளிடமிருந்து அறிவதில் காகாஜி ஆர்வமுற்றார். ஆனால் எவ்வித விளக்கமும் பெறும்முன்னரே தூக்கம் கலைந்து எழுந்துவிட்டார். தேவி, தன்னைக் காணுமாறு பணித்த இந்த பாபா யாராக இருக்கக்கூடும் என்று எண்ணத் தொடங்கினார்.
சிறிது எண்ணத்திற்குப்பின் இந்த பாபா த்ரயம்பகேஸ்வராக — சிவனாக — இருக்கவேண்டும் என முடிவு கட்டினார். எனவே அவர் த்ரயம்பத்திற்குச் — நாசிக் ஜில்லா — சென்றார். அங்கு பத்து நாட்கள் தங்கினார். அவ்வமயம் தினந்தோறும் அதிகாலை குளித்து, 'ஸ்ரீருத்ரம்' ஓதி, அபிஷேகம் மற்றபிற சமய சம்பிரதாயங்களையும் செய்தார். இவைகள் எல்லாம் செய்தும்கூட முன்போலவே அவர் சலனமுற்றவராகவே இருந்தார். பின்னர் அவர் தமது இருப்பிடத்திற்குச் சென்று மீண்டும் இரங்கத்தக்க நிலையில் வேண்டினார். அன்றிரவு தேவி மீண்டும் அவர் கனவில் தோன்றி, "நீ ஏன் த்ரயம்பகேஸ்வரத்திற்குச் சென்றாய்? நான் பாபா என்று கூறியது ஷீர்டியைச் சேர்ந்த ஸ்ரீ சமர்த்த சாயியை" என்றாள்.
எப்போது ஷீர்டிக்குப் போவது, எப்படி பாபாவைப் பார்ப்பது என்பதே காகாஜியின் இப்போதைய கேள்வியாக இருந்தது. ஒரு ஞானியைத் தரிசிக்க ஒருவன் உண்மையான ஆர்வமுள்ளவனாக இருப்பின், ஞானி மாத்திரமல்ல, கடவுளும் அவனது வேண்டுகோளை நிறைவேற்றுகிறார். உண்மையில் 'ஸந்த்'தும் — ஞானி , 'அனந்த்'தும் — கடவுள் — ஒருவரே. எள்ளளவும் அவர்களிடையே வேறுபாடு இல்லை. ஒரு ஞானியைப் பார்க்க அவனாகவே செல்கிறான் என்று ஒருவன் நினைத்தால் அது வெறும் டம்பமேயாகும். ஞானியின் அருளின்றி எவரே அவரை அணுகித் தரிசிக்க இயலும்?! மரத்தின் இலைகூட அவன் ஆணையின்றி அசைவதில்லை. ஞானியிடம் செல்ல பக்தன் எவ்வளவு அதிகம் கவலையுள்ளவனாக இருக்கிறானோ, எவ்வளவு அதிகம் பக்தியுடனும், நம்பிக்கையுடனும் இருக்கிறானோ, அவ்வளவு விரைவில் அவன் மனநிறைவு அடையும் வண்ணம் அவனது எண்ணம் நிறைவேற்றப்படும். யாரையாவது விருந்துக்கு அழைக்கும் ஒருவன் அவரை வரவேற்பதற்கு சகல ஏற்பாடுகளையும் செய்கிறான். காகாஜி சம்பந்தப்பட்ட விஷயமும் அங்ஙனமே நடந்தது.
ஷாமாவின் வேண்டுதல்கள்
ஷீர்டிக்கு தமது விஷயத்தைப் பற்றி காகாஜி நினைத்துக்கொண்டிருக்கையில் அவரை அழைத்துச்செல்ல ஒருவர் அவர் இருப்பிடத்திற்கே வந்தார். அவர் வேறு யாருமல்ல, பாபாவின் மிக்க நெருங்கிய பழக்கமுள்ள அடியவரான ஷாமாவே ஆவார். இத்தருணத்தில் அவர் வணிக்கு எங்ஙனம் வந்தார் என்பதைத் தற்போது கவனிக்கலாம். ஷாமா தமது இளம்வயதில் தீவிரமாக நோய்வாய்ப்பட்டார். அவரது தாயார் அவர்களின் குலதெய்வமான வணியில் உள்ள சப்தஷ்ரிங்கிதேவியிடம் தன் மகன் குணமடைந்தால் அழைத்து வந்து அவள் பாதத்தில் சமர்ப்பிப்பதாக வேண்டிக்கொண்டாள்.
தாயாரோ சில ஆண்டுகளுக்குப் பிறகு தனது ஸ்தனங்களில் ஒருவிதத் தோல் வியாதியால் அவதியுற்றாள். அத்தருணத்தில் தனது தெய்வமான தேவியிடம் மீண்டும் ஒரு வேண்டுதலைச் செய்தாள். இந்த இரண்டு வேண்டுதல்களும் நிறைவேற்றப்படாமலே இருந்தன. அவளது மரணப் படுக்கையில் தனது மகன் ஷாமாவைத் தன் அருகே அழைத்து வேண்டுதல்களைக் குறித்து அவரது கவனத்தை ஈர்ந்து அவற்றை நிறைவேற்றுவதாக சத்தியம் வாங்கிய பின்பு உயிர் நீத்தாள். சிலநாட்களுக்குப் பின்னர் ஷாமா இவ்வேண்டுதல்களைக் குறித்து மறந்துவிட்டார். இவ்வாறாக முப்பது ஆண்டுகள் கடந்தன.
இத்தருணத்தில் ஒரு புகழ்பெற்ற ஜோதிடர் ஷீர்டிக்கு வந்து அங்கு ஒரு மாதம் தங்கியிருந்தார். ஸ்ரீமான் பூட்டியையும், மற்றவர்களையும் குறித்து அவர் கூறிய முன்னோடிச் செய்திகள் யாவும் உண்மையாயின. அனைவரும் மகிழ்ந்தனர். ஷாமாவின் தம்பியான பாபாஜியும் ஜோதிடரைக் கலந்து ஆலோசித்தார். அப்போது அவரது தாயாரின் வேண்டுதல்களை அவரின் அண்ணன் அவளின் மரணப்படுக்கையில் நிறைவேற்றுவதாக வாக்களித்து இன்னும் நிறைவேற்றப்படவில்லை. எனவே கடவுள் அவர்கள்மீது மகிழ்வுறாமல் அவர்களுக்குத் துன்பங்களை அளித்துக்கொண்டிருக்கிறார் என்று கூறினார். பாபாஜி இதைத் தன் அண்ணனிடம் கூறவும் அவர் நிறைவேற்றப்படாத வேண்டுதல்களை நினைவுகூர்ந்தார். மேற்கொண்டு எவ்விதத் தாமதமும் ஆபத்தானது என எண்ணி ஒரு பொற்கொல்லனை அழைத்து ஒரு ஜதை வெள்ளி ஸ்தனங்களைத் தயாரிக்கச் சொன்னார்.
பின்னர் அவர் மசூதிக்குச் சென்று பாபாவின் முன்னால் வீழ்ந்துபணிந்து அவர் முன்னர் இரண்டு வெள்ளி ஸ்தனங்களையும் வைத்து ஏற்றுக்கொண்டு தம்மை வேண்டுதல்களினின்று விடுவிக்கும்படி — ஏனெனில், பாபாவே ஷாமாவுக்கு சப்தஷ்ரிங்கி தெய்வம் — வேண்டிக்கொண்டார். சப்தஷ்ரிங்கி கோவிலுக்கு அவரையே போகும்படியும், அவற்றைத் தேவியின் பாதங்களில் அவரையே சமர்ப்பிக்கும்படியும் பாபா வற்புறுத்தினார். பாபாவின் அனுமதியையும், உதியையும் பெற்றபின் ஷாமா வணிக்குப் புறப்பட்டார். அங்கு அவர் பூசாரியைத் தேடிக்கொண்டு காகாஜியின் வீட்டை வந்தடைந்தார். காகாஜி அப்போதுதான் பாபாவைப் பார்க்க மிக்க கவலையுள்ளவராக இருந்தார். அத்தருணத்தில் ஷாமாவும் அங்கு வந்தடைந்தார். எத்தகைய வியத்தகு ஒற்றுமை இது!
காகாஜி அவரை யார் அவர் என்றும் எப்போது அவர் வந்தார் என்றும் விசாரித்தார். அவர் ஷீர்டியிலிருந்து வந்திருக்கிறார் என்றறிந்தவுடன் உடனே அவரைக் கட்டியணைத்துக்கொண்டார். அன்பால் அவர் அந்த அளவிற்கு ஆக்கிரமிக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர்கள் சாயியின் லீலைகளைப் பற்றிப் பேசினர். ஷாமாவின் வேண்டுதல்களை நிறைவேற்றியபின்னர் இருவரும் ஷீர்டிக்குப் புறப்பட்டனர். காகாஜி மசூதிக்குச் சென்று பாபாவின் பாதத்தில் வீழ்ந்தார். உடனே அவர் கண்கள் குளமாயின. அவர் அமைதியுற்றார்.
தேவியின் காட்சியின்படியே பாபாவைப் பார்த்தவுடன் அவர் மனம் சலனங்களை இழந்து அமைதியாயும், அடக்கமாகவும் ஆயிற்று. தமது மனதில் காகாஜி கீழ்கண்டவாறு எண்ண ஆரம்பித்தார், "என்ன வியத்தகு சக்தி இது! பாபா ஒன்றும் பேசவில்லை. எவ்விதக் கேள்வி பதிலும் இல்லை. ஆசீர்வதிக்கவில்லை. வெறும் தரிசனம் ஒன்றே இவ்விதமாக மகிழ்ச்சிக்கு அடிகோலுகிறது. எனவே அமைதியின்மை அவரது வெறும் தரிசனத்தாலேயே மறைந்து 'இன்ப உணர்வு' எனக்கு வந்திருக்கிறது. இதுவே 'தரிசனத்தின் பெருமை' எனப்படுவது". அவரது பார்வை சாயியின் பாதங்களில் நிலைகொண்டது. அவரால் ஒரு வார்த்தைகூடப் பேச இயலவில்லை. பாபாவின் லீலைகளைக் கேட்டு கரைகாணா மகிழ்ச்சியடைந்தார். பாபாவிடம் முழுமையாகச் சரணடைந்து தம் கவலைகளையும், கஷ்டங்களையும் மறந்தார். கலப்பற்ற இன்பத்தை அவர் எய்தினார். அங்கு அவர் பன்னிரெண்டு நாட்கள் தங்கி இருந்தார். பாபாவிடம் விடைபெற்று உதி, ஆசீர்வாதம் இவைகளுடன் வீடு திரும்பினார்.
ரஹாதாவைச் சேர்ந்த குஷால்சந்த்
அதிகாலை நேரங்களில் நாம் காணும் கனவானது, விழித்திருக்கும்போது நனவாகிறது என்று சொல்லப்படுகிறது. அம்மாதிரி இருக்கலாம். ஆனால் பாபாவின் கனவுகட்குக் காலநியதியில்லை. நிகழ்ச்சி ஒன்றைக் குறிக்குங்கால் - ஒருநாள் மாலை பாபா, காகா சாஹேப் தீஷித்தை அழைத்து, ராஹாதாவிற்குச் சென்று, தாம் நெடுநாள் குஷால்சந்தை பார்க்காத காரணத்தால் அவரை ஷீர்டிக்கு அழைத்து வருமாறு கூறினார். அங்ஙனமே காகா சாஹேப் ஒரு குதிரை வண்டியை அமர்த்திக்கொண்டு ராஹாதா சென்று பாபாவின் செய்தியைத் தெரிவித்தார். அதைக்கேட்டு குஷால்சந்த் ஆச்சரியமடைந்தார்.
அன்று மதியம் உண்டபின் சிறுதுயில் கொண்டிருந்தபோது, பாபா அவர் கனவில் தோன்றி உடனே ஷீர்டிக்கு வரும்படி கூறினார். பக்கத்தில் தமது குதிரை இல்லாததால், தமது மகனை பாபாவுக்கு அறிவிக்கும்படியாக அனுப்பியிருந்தார். அவருடைய மகன் கிராம எல்லைக்குப் போய்க்கொண்டிருந்தபோது தீஷித்தின் வண்டி எதிரே வந்தது. தீஷித் குஷால்சந்தை அழைத்துவரவே தாம் அனுப்பப்பட்டிருப்பதாக அறிவித்தார். பின் இருவரும் ஷீர்டி திரும்பினர். குஷால்சந்த் பாபாவைக் கண்டார். அனைவரும் மகிழ்ச்சியுற்றனர். பாபாவின் இந்த லீலையைக் கண்டு குஷால்சந்த் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார்.
பம்பாயைச் சேர்ந்த பஞ்சாபி ராம்லால்
பம்பாயைச் சேர்ந்த ராம்லால் என்ற பஞ்சாபி பிராமணர் ஒரு கனவு கண்டார். அதில் பாபா தோன்றி ஷீர்டிக்கு வரும்படி கூறினார். காட்சியில் அவர் ஒரு மஹந்த் — மஹான் — ஆகத் தோன்றினார். ஆனால் அவர் எங்கிருப்பார் என ராம்லால் அறியார். பாபாவைச் சென்று பார்க்க எண்ணினார். ஆனால் அவரது விலாசத்தை அறியார். என்ன செய்வதென்றும் அவருக்குத் தெரியவில்லை. ஒரு பேட்டிக்காக ஒருவரை அழைப்பவன் தேவையான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்கிறான். இந்த விஷயத்தில் அதுவே நடந்தது.
அதேநாள் மாலை, வீதிகளில் மெதுவாக நடந்துகொண்டிருக்குபோது பாபாவின் ஒரு படத்தை ஒரு கடையில் அவர் கண்டார். அவர் கனவில் கண்ட மஹானின் உருவாம்சங்கள் இப்படத்துடன் மிகப்பொருத்தமாக ஒன்றின. விசாரித்ததில் அவர் ஷீர்டியைச் சேர்ந்த சாயிபாபா எனத் தெரிந்துகொண்டார். ஷீர்டிக்கு உடனே சென்றார். தனது இறுதிக்காலம்வரை அங்கேயே தங்கினார்.
தரிசனத்துக்காக இவ்விதமாக பாபா ஷீர்டிக்குத் தமது அடியவர்களைக் கொணர்ந்தார். அவர்களின் ஆத்மார்த்த, லௌகிகத் தேவைகளைப் பூர்த்தி செய்தார்.
ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
(2) பாலாராம் மான்கர்
(3) நூல்கர்
(4) மேகா
(5) புலி
இவர்களெல்லாம் பாபாவின் முன்னிலையில் உயிர் நீத்தல்
முன்னுரை
தனது மரணத் தறுவாயில் ஒருவனுக்குள்ள ஆசை அல்லது எண்ணம் அவனது எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது. கிருஷ்ணரும் கீதையில், "எவன் என்னை முடியுந்தறுவாயில் எண்ணுகிறானோ, அவன் உண்மையில் என்னிடமே வருகிறான். அத்தருணத்தில் வேறெதையும்பற்றி எண்ணுபவன் அவன் விரும்பியபடியே செல்கிறான்" என்று கூறுகிறார். நமது கடைசித் தறுவாயில் ஒரு குறிப்பிட்ட நல்லெண்ணத்தை நினைவில்கொள்ளவேண்டும் என்பதில் நாம் நிச்சயமாக இருக்கமுடியாது. இல்லை என்பதைவிடப் பெரும்பாலும் பல்வேறு காரணங்களால் நாம் பயந்து பீதியடைய அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.
எனவே எப்போதாவதோ அல்லது நமது கடைசித் தருணத்திலோ கொள்ளவேண்டிய நாம் விரும்புகிற புனித நினைவுகளை நம் மனதில் நிலைப்படுத்த நிலையான பயிற்சி அவசியம். எனவே கிளம்புவதற்கான இறுதிநேரம் வந்தபோது குழப்பம் அடையாமல் இருப்பதற்காக, எப்போதும் இறைவனை நினைவுகூர்ந்து அவனது நாமத்தைச் சதாகாலம் உச்சரிக்குமாறு எல்லா ஞானிகளும் போதிக்கிறார்கள். அடியவர்கள் தம்மைத்தாமே முழுமையாக ஞானிகளிடம் அர்ப்பணித்து விடுகிறார்கள். சர்வமும் அறிந்த ஞானிகள் அவர்களது கடைசிக் காலத்தில் அவர்களை வழிநடத்தி உதவுவார்கள் என்ற நம்பிக்கைதான் அதற்குக் காரணம். இம்மாதிரியான சில நிகழ்சிகள் பின்வருமாறு:
சந்நியாசி விஜயானந்
சென்னையைச் சேர்ந்த விஜயானந்த் என்ற ஞானி மானஸரோவருக்குத் தீர்த்த யாத்திரை புறப்பட்டார். வழியில் பாபாவின் புகழைக் கேள்வியுற்று ஷீர்டியில் தங்கினார். அங்கு ஹரித்துவாரைச் சேர்ந்த சோமதேவ் ஸ்வாமியைச் சந்தித்தார். மானஸரோவர் பயணத்தைப்பற்றி அவரிடம் விசாரித்தார். கங்கோத்ரிக்கு மேல் மானஸரோவர் 500மைல் உயரத்திலுள்ளது என்றும் ஏராளமான பனி, 50 காத தூரத்திற்கு ஒருமுறை மொழிமாற்றம், வழியில் யாத்ரீகர்களுக்கு ஏராளமாக தொல்லை கொடுக்கும் பூட்டான் மக்களின் சந்தேக குணங்கள் போன்ற யாத்திரையிலுள்ள கஷ்டங்களை விவரித்தார்.
இதைச் செவிமடுத்த துறவி மனந்தளர்வுற்றார். தமது விஜயத்தை இரத்துச் செய்தார். அவர் பாபாவிடம் சென்று சாஷ்டாங்கமாகப் பணிந்தபோது பாபா கோபாவேஷம் அடைந்து கூறினார், "அந்த உபயோகமற்ற துறவியைத் துரத்துங்கள், அவரின் நட்பு பயனற்றது".
பாபாவின் குணத்தை அத்துறவி அறியார். ஆயினும் அங்கு அமர்ந்து அங்கே நடந்துகொண்டிருந்த நிகழ்சிகளை எல்லாம் கவனித்துக்கொண்டிருந்தார். அது காலைநேர தர்பார். மசூதியில் கூட்டம் அதிகமாய் இருந்தது. பாபா பல்வேறு விதமாக ஆராதிக்கப்பட்டார். சிலர் அவரின் கால்களைக் கழுவிக்கொண்டிருந்தனர். சிலர் அவர் கால் கட்டைவிரலினின்று புனிதநீரை எடுத்து மனநிறைவுடன் குடித்துக்கொண்டிருந்தனர். சிலர் சந்தனம் பூசினர். சிலர் அவர்தம் புனிதமேனிக்கு நறுமணம் தடவினர். குலம், ஆசாரம் இவற்றை மறந்து அனைவரும் வழிபாடு செய்தனர். பாபா அத்துறவியின் மேல் கோபம் கொண்டவராய் இருந்தாலும் அவர் பாபாவின்பால் பாசம் நிரம்பியவராய் மசூதியைவிட்டுப் போகவில்லை.
ஷீர்டியில் அவர் இரண்டு நாட்கள் தங்கியிருந்தார். சென்னையிலிருந்து அப்போது அவருடைய தாயார் மிகவும் நோய்வாய்ப்பட்டிருப்பதாக அவருக்குக் கடிதம் வந்தது. அவர் மிகவும் மனம் தளர்ந்து, தமது தாயார் அருகில் செல்ல விரும்பினார். ஆனால் அவரால் பாபாவின் அனுமதியின்றிச் செல்ல முடியாது. எனவே தமது கரத்தில் கடிதத்துடன் பாபாவைக்கண்டு வீடு திரும்ப அனுமதி கேட்டார். வருங்காலத்தை அறிந்த எங்கும்நிறை பாபா அவரிடம் "உன்னுடைய தாயாரை நீ இவ்வளவு நேசிக்கும்போது ஏன் துறவியானாய்? சொந்தபந்தங்களும், ஆபாசங்களும் காவி உடைக்கு ஒத்துவராது. உன்னுடைய இருப்பிடத்திற்குச் சென்று அமைதியாக அமர்ந்து பொறுமையுடன் சில நாட்கள் காத்திரு. வாதாவில் கொள்ளைக்காரர்கள் இருக்கிறார்கள். உனது கதவுகளை நன்றாகத் தாழிடு. அதிக ஜாக்கிரதையாக இரு. திருடர்கள் அனைத்தையும் எடுத்துச் சென்றுவிடுவர். செல்வமும், சுபிட்சமும் நிலையற்றவை. இவ்வுடல் அழிவிற்கும், மரணத்திற்கும் உட்பட்டது. இதை உணர்ந்து இம்மை - மறுமைப் பொருட்களின் மீதுள்ள பற்று அனைத்தையும் விட்டுவிட்டு உனது கடைமையைச் செய். இவ்வாறாகச் செய்து, எவன் ஹரியின் பாதங்களில் சரணாகதி அடைகிறானோ அவன் தொல்லைகள் யாவினின்றும் விடுபட்டு 'பேரானந்தப் பெருநிலை' எய்துகிறான். அன்புடனும், பாசத்துடனும் எவன் அவரை நினைத்துத் தியானிக்கிறானோ, பரமாத்மா அவனுக்கு ஓடிச்சென்று உதவி புரிகிறார். உனது முந்தைய நல்வினைகளின் சேகரிப்பு அதிகம். எனவே நீ இங்கு வந்துள்ளாய். இப்போது நான் சொல்வதைக் கவனி, உனது அந்திம வாழ்க்கையை உணர். ஆசைகளற்று நாளைமுதல் பாகவதத்தைப் பாராயணம் செய்யத் தொடங்கு. மூன்றுமுறை சப்தாஹம் செய். அதாவது பக்தி பூர்வமாக மூன்றுவாரம் மூன்றுமுறை பாராயணம் செய்க. பரமாத்மா உன்னிடம் மகிழ்வெய்தி நினது கவலைகளை அழிப்பார். உனது துயர் நிலை மறைந்து நீ அமைதியுறுவாய்" என்று கூறினார்.
அவரது முடிவு நெருங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்து பாபா இந்த சிகிச்சையை தேர்ந்தளித்தார். மரணத் தெய்வமான எமனை மகிழ்விக்கும் 'ராம விஜயம்' படிக்கும்படி செய்தார். அடுத்தநாள் காலை குளித்து மற்ற தூய சம்பிரதாயங்களைச் செய்த பிறகு லெண்டித் தோட்டத்திலுள்ள ஒரு தனிமையான இடத்திற்குச் சென்று பாகவதம் படிக்கத் தொடங்கினார். இரண்டுமுறை பாகவதப் பாராயணம் செய்தார். அதன் பின்னர் மிகச் சோர்வடைந்தார். வாதாவிற்குத் திரும்பினார். இரண்டு நாட்கள் தமது இருப்பிடத்தில் தங்கினார்.
மூறாவது நாள் 'பக்கீர் பாபா' என்ற படேபாபாவின் மடியில் உயிர் துறந்தார். பாபா அவரது உடலை ஒருநாளைக்கு ஒரு நல்ல காரணம் கருதி பாதுகாக்கும்படி மக்களைக் கேட்டுக்கொண்டார். பின்னர் போலீஸ் வந்து உரிய விசாரணை செய்து, உடலை அடக்கம் செய்யும்படி அனுமதி அளித்தனர். உரிய இடத்தில் தக்க மரியாதையுடன் அவரது புனித உடல் அடக்கம் செய்யப்பட்டது. இவ்விதமாக பாபா துறவிக்கு உதவி அளித்து, அவருக்கு நற்கதியளித்தார்.
பாலாராம் மான்கர்
பாலாராம் மான்கர் என்ற இல்லறவாசியான பாபாவின் அடியவர் ஒருவர் தம் மனைவி காலமான பின்பு பெரிதும் சஞ்சலமடைந்தார். வீட்டுப் பொறுப்பைத் தன் மகனிடம் ஒப்புவித்துவிட்டு, வீட்டைத் துறந்து ஷீர்டி சென்று பாபாவுடன் வாழ்ந்து வந்தார். பாபா அவர்தம் பக்தியால் மகிழ்ந்து, அவரின் வாழ்க்கைக்கு ஒரு நல்ல திருப்பத்தை அளிக்க விரும்பினார். அதை அவர் இவ்வாறாகச் செய்தார். அவருக்கு ரூ.12 அளித்து சாதாரா ஜில்லாவில் உள்ள மச்சிந்த்ரகட்டுக்குச் சென்று வாழும்படி கோரினார். மான்கர் முதலில் பாபாவைப் பிரிந்துசென்று அங்கு தங்குவதில் மனமில்லாதவராய் இருந்தார். ஆனால் இதன்மூலம் அவருக்கொரு சிறந்த வாழ்க்கைமுறையைக் கொடுத்துள்ளதாக உறுதிகூறி அவரைத் தேற்றினார்.
ஒரு நாளைக்கு மூன்றுமுறை தியானம் செய்யுமாறும் கேட்டுக்கொண்டார். பாபாவின் சொற்களை நம்பி மான்கர் மச்சிந்த்ரகட்டுக்கு வந்தார். இன்பமான காட்சிகள், தூயநீர், ஆரோக்கியமான காற்று, சுற்றுப்புறம் இவற்றால் மிகவும் மகிழ்ந்து ஏகாக்கிர சித்தத்துடன் பாபா அறிவுறுத்தியபடி தியானம் செய்யத் தொடங்கினார். சில நாட்களுக்குப் பிறகு ஒரு தெய்வீகக் காட்சி அவருக்கு ஏற்பட்டது. அடியவர்கள் பொதுவாக அவர்களது சமாதிநிலையில் அல்லது தியானத்தில் தான் அதனைப் பெறுகிறார்கள். ஆனால் மான்கரைப் பொறுத்தமட்டிலோ, தியான நிலையிலிருந்து விடுபட்டு சாதாரண நிலைக்கு வந்தபோதே அதை அவர் பெற்றார். பாபா தாமே அவர்முன் தோன்றினார். மான்கர் அவரைப் பார்த்தது மட்டுமல்லாது தான் ஏன் அங்கு அனுப்பப்பட்டிருக்கிறார் என்றும் கேட்டார்.
பாபா பதில் அளிக்கையில், "ஷீர்டியில் பல்வேறு எண்ணங்களும், கருத்துக்களும் உன் மனதில் உருவாக ஆரம்பித்தன. உனது நிலையற்ற மனதை அடக்கவே இங்கு உன்னை அனுப்பினேன். நான் ஷீர்டியில் இருப்பதாக நீ எண்ணுகிறாய். பஞ்ச பூதங்களால் ஆனதும், 3 1/2 முழ நீளம் ஆனதுமாகிய உடம்பில் நான் வசிக்கிறேன் என்றும் அதற்கு வெளியில் நான் இல்லை என்றும் நீ நினைக்கிறாய். இப்போது நீ கண்ணார ஷீர்டியில் கண்ட அதே மனிதர்தானா இவர் என்று தீர்மானித்துக்கொள். இந்த காரணத்திற்காகத்தான் உன்னை நான் இங்கு அனுப்பினேன்" என்று கூறினார். குறிப்பிட்ட காலம் முடிந்த பின்னர் மான்கர் மச்சிந்த்ரகட்டை நீங்கி தன் சொந்த ஊரான பாந்த்ராவை நோக்கி புறப்பட்டார். புனேவில் இருந்து தாதர் வரை அவர் ரயிலில் பிரயாணம் செய்ய விரும்பினார். ஆனால் அவர் டிக்கெட் பெற புக்கிங் ஆபீசுக்கு சென்றபோது மிகவும் கூட்டமாக இருப்பதைக் கண்டார். விரைவில் அவரால் டிக்கெட் பெற முடியவில்லை.
அப்போது தனது இடுப்பில் கோவணத்துடன் ஒரு கிராமவாசி அவரருகில் வந்து, "நீங்கள் எங்கு போகிறீர்கள்?" எனக் கேட்டார். மான்கர், "தாதருக்கு" என்று பதிலளித்தார். அவர், "தவுசெய்து என்னுடைய தாதர் டிக்கெட்டை எடுத்துக்கொள்ளுங்கள். இங்கு எனக்கு சில அவசர வேலைகள் இருப்பதால் நான் தாதர் பயணத்தை இரத்துச் செய்துவிட்டேன்" என்று சொன்னார். மான்கர் டிக்கெட்டைப் பெற்றுக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைந்தார். பணத்தைத் தம் பையிலிருந்து எடுத்துக்கொண்டிருக்கும்போது அந்த கிராமவாசி கூட்டத்தில் மறைந்துவிட்டார். மான்கர், அவரைக் கூட்டத்தில் தேடியும் பயனில்லை. ஸ்டேஷனைவிட்டு வண்டி போகும்வரை மான்கர் அவருக்காகக் காத்திருந்தார். ஆனால் அவரைப்பற்றி எவ்விதச் சுவட்டையும் அவர் காணவில்லை.
இது மான்கர் விநோதமாகப் பெற்ற இரண்டாவது காட்சியாகும். மான்கர் பின்னர் தனது வீட்டிற்குச் சென்றுவிட்டு மீண்டும் ஷீர்டிக்குத் திரும்பி பாபாவின் ஏவலையும், சேவையையும் செய்துவந்தார். அங்கேயே பாபாவின் பாதங்களிலேயே இருந்தார். பாபாவின் முன்னிலையிலேயே அவருடைய ஆசீர்வாதங்களுடனேயே இந்த உலகத்தைத் துறக்கும் நல்லதிர்ஷ்டம் படைத்திருந்தார்.
தாத்யா சாஹேப் நூல்கர்
தாத்யா சாஹேப் குறித்து, ஷீர்டியில் உயிர் நீத்தார் என்று மட்டுமே ஹேமத்பந்த் குறிப்பிட்டுள்ளார். சாயிலீலா சஞ்சிகையில் அவரைப்பற்றி வெளியானதன் சுருக்கம் இங்கு தரப்படுகிறது. 1909ஆம் ஆண்டு நானா சாஹேப் அங்கு மம்லதராக இருக்கும்போது பண்டரீபுரத்தில் தாத்யா சாஹேப் ஒரு சப்-ஜட்ஜாக இருந்தார். இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசினர். தாத்யா சாஹேப் ஞானிகளை நம்புவதில்லை. ஆனால் நானா சாஹேப் அவர்களை விரும்பினார். சாயிபாபாவின் லீலைகளை நானா சாஹேப் அவருக்குக் கூறினார். ஷீர்டிக்குச் சென்று சாயிபாபாவைப் பார்க்க அவரை வற்புறுத்தினார். முடிவாக இரண்டு நிபந்தனைகளின் பேரில் ஷீர்டிக்குப் போகச் சம்மதித்தார்.
(1) ஒரு பிராமண சமையற்காரர் அவருக்குக் கிடைக்கவேண்டும்
(2) அன்பளிப்புக்காக நல்ல நாக்பூர் ஆரஞ்சுகளைப் பெறவேண்டும்
இவ்விரண்டு நிபந்தனைகளும் தெய்வாதீனமாக நிறைவேறின. நானா சாஹேபிடம் சேவைக்காக ஒரு பிராமணர் வந்தார். அவர் தாத்யா சாஹேபிடம் அனுப்பப்பட்டார். தாத்யா சாஹேப் நூறு அழகிய ஆரஞ்சுப் பழங்கள் அடங்கிய பார்சலைப் பெற்றார். அனுப்பியவர் யார் என்று தெரியவில்லை.
நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டதால் தாத்யா சாஹேப் ஷீர்டிக்குப் போகவேண்டியதாயிற்று. முதலில் பாபா அவரிடம் மிகவும் கோபாவேஷம் அடைந்தார். ஆனால் படிப்படியாக தாத்யா சாஹேப் தமது அனுபவங்களால் பாபா கடவுள் அவதாரமே என்று உறுதி பெற்றார். பாபாவிடம் அத்தகைய அன்பு பூண்டு தனது மரணம்வரை அங்கேயே தங்கினார். அவருடைய முடிவு நெருங்கிக்கொண்டிருக்கும்போது அவரிடம் புனித வேதங்கள் படிக்கப்பட்டன. முடியுந்தறுவாயில் பாபாவின் பாததீர்த்தம் கொண்டுவரப்பட்டு குடிப்பதற்காக அவரிடம் தரப்பட்டது. பாபா அவருடைய மரணத்தைக் கேள்விப்பட்டு, "ஓ! தாத்யா, நம்மை விட்டுச் சென்றுவிட்டார். அவர் மீண்டும் பிறக்கமாட்டார்" என்றார்.
மேகா
மேகாவின் கதை முன்னாலேயே 28 ஆம் அத்தியாயத்தில் விளக்கப்பட்டு இருக்கிறது. மேகா இறந்தபின்பு கிராமத்தார் எல்லோரும் சவ ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். பாபாவும் அவர்களுடன் கூடச் சென்று மலர்களை மேகா உடல்மீது பொழிந்தார். சடங்குகள் செய்யப்பட்ட பிறகு சாதாரண மனிதர்களைப் போன்று பாபாவின் கண்களினின்றும் நீர் வழிந்தது. பெருந்துக்கத்தாலும், கவலையாலும் பீடிக்கப்பட்டிருப்பதாகக் காணப்பட்டார். பின்னர் அவரது உடம்பை மலரால் மூடி நெருங்கிய உறவினரைப் போல் அழுதபின்பு பாபா மசூதிக்குத் திரும்பினார்.
மனிதர்களுக்குப் பல ஞானிகள் சத்கதி அளிப்பது கண்ணுறப்பட்டிருக்கிறது. ஆனால் சாயிபாபாவின் பெருமை ஒப்புவமையற்றது.
புலி
பாபா சமாதியடைவதற்கு ஏழு நாட்களுக்குமுன் ஷீர்டியில் ஓர் வியத்தகு சம்பவம் நிகழ்ந்தது. ஒரு கிராமப்புற வண்டி வந்து மசூதிக்கு முன்னால் நின்றது. தனது பயங்கர முகம் வண்டியின் பின்புறம் நோக்கித் திரும்பியிருக்க இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுள்ள ஒரு புலி வண்டியில் இருந்தது. அது ஏதோவொரு நோயால் அல்லது பயங்கர துன்பத்தால் அவதியுற்றுக் கொண்டிருந்தது. அதனுடைய காவலாளர்களான மூன்று தெர்வஷிகள் அதை ஊரூராக எடுத்துச் சென்று காண்பிப்பதன் மூலம் பொருளீட்டி வந்தனர். அதுவே அவர்களின் ஜீவனோபாயமாகும். அந்தப் புலி அனுபவித்துக்கொண்டிருக்கும் வேதனைகளினின்று அதை விடுவிக்க, குணமளிக்க அவர்கள் எடுத்துக்கொண்ட பலவித சிகிச்சைமுறைகளும் பலனற்றதாய்விட்டன.
அப்போது அவர்கள் பாபாவின் புகழைக் கேள்வியுற்று மிருகத்துடன் அவரைப் பார்க்க வந்தனர். தங்கள் கைகளில் சங்கிலியுடன் அதை அவர்கள் கீழிறக்கி, கதவருகில் அதை நிற்கும்படி செய்தனர். அது இயற்கையிலேயே குரூரமானது. அத்துடன் நோய்வாய்ப்பட்டது. எனவே அது இருப்புக்கொள்ளாமல் இருந்தது. மக்கள் அதை பயத்துடனும், வியப்புடனும் பார்க்கத் துவங்கினர். தெர்வஷிகள் உள்ளேசென்று புலியைப் பற்றிய அனைத்தையும் பாபாவுக்குக் கூறி, அவருடைய அனுமதியுடன் அதை அவர் முன்னர் கொணர்ந்தனர். புலி படிகளை நெருங்கியதும் பாபாவின் ஒளியினால் அதிர்சியுற்றுத் தனது தலையைத் தாழ்த்தியது. பாபாவும், புலியும் சந்தித்துக்கொண்டபோது அது படியேறி பாபாவைப் பாசத்துடன் நோக்கியது. தனது வாலில் உள்ள மயிர்க்கொத்தை ஆட்டி, அதை மூன்றுமுறை தரையில் அடித்து உணர்ச்சியற்று சாய்ந்தது.
அது இறந்தது கண்டு தெர்வஷிகள் முதலில் பெருந்துன்பமுற்று சோகம் நிரம்பியவர்களாய் இருந்தனர். ஆனால் பக்குவமடைந்த எண்ணத்திற்குப்பின் அவர்கள் தங்கள் நிலைக்குத் திரும்பினர். புலி வியாதியால் பீடிக்கப்பட்டிருந்ததால் அது தனது முடிவை நெருங்கிகொண்டிருந்தது என்றும், அது மிகுந்த தகைமை உடையதாய் இருந்ததால் பாபாவின் பாதாரவிந்தகளில் அவர்தம் முன்னிலையில் மரணத்தைச் சந்திக்கும் நிலை அடைந்ததென்றும் கருதினார்கள். அது அவர்களின் கடனாளி, கடன் தீர்ந்ததும் விடுதலையடைந்து தன் முடிவை சாயியின் சரண கமலங்களில் சமர்ப்பித்தது. — ஷீர்டியில் மஹாதேவ் மந்திரின் எதிரில் இந்தப் புலியின் சமாதி உள்ளது — ஏதேனும் ஒரு ஜந்து ஞானிகளின் பாதங்களில் தலை தாழ்த்தித் தன் முடிவைச் சந்தித்தால் அது நற்கதியடைந்ததாகிவிடுகிறது. அத்தகைய ஜந்துக்களைப் பொறுத்தவரை அவைகள் புண்ணியசாலிகளாக இருந்தாலன்றி எங்ஙனம் அத்தகைய மகிழ்சிகரமான முடிவை எய்தவியலும்?!
ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
இந்த அத்தியாயத்தில் ஹேமத்பந்த் இரண்டு விஷயங்களை விவரிக்கிறார்.
(1 ) பாபா எங்ஙனம் தமது குருவைக் காடுகளில் சந்தித்தார்? அவர் மூலம் கடவுள் சந்திப்பு.
(2 ) மூன்று நாட்கள் விரதமிருக்க எண்ணிய திருமதி.கோகலேயை எங்ஙனம் பாபா பூரணப்போளியைச் சாப்பிடச் செய்தார்.
முன்னுரை
முதலில் கண்ணுக்குத் தெரியும் இச்சம்சார வாழ்க்கையை ஹேமத்பந்த் ஆலமரத்துடன் ஒப்பிடுகிறார். கீதையின் சொற்களில் வேர் மேலும், கிளைகள் கீழும் என்பதாக அதன் கிளைகள் மேலும், கீழும் பரவுகின்றன. குணங்களால் போஷிக்கப்படுகின்றன. அதன் துளிர்கள் புலன்களாகின்றன. அதன் வேர்கள் செயல்களாக மனிதர்களின் இவ்வுலகம்வரை நீண்டிருக்கின்றன. இவ்வுலகத்தில் அதன் ரூபமோ, முடிவோ, ஆரம்பமோ அல்லது அதன் பற்றுக்கேடோ தெரியாது. வலிமையான வேர்களுள்ள இவ்வாலமரத்தைப் பற்றின்மை என்னும் கூரிய ஆயுதத்தால் வெட்டுவதன் மூலம் அதற்கப்பாலுள்ள பாதையை ஒருவன் தேடவேண்டும். அதில் செல்பவன் திரும்பிவருதல் கிடையாது.
இப்பாதையில் செல்வதற்கு நல்ல வழிகாட்டியின் — குரு — உதவி இன்றியமையாதது. ஒருவன் எவ்வளவுதான் கற்றறிந்தவனாய் இருப்பினும் வேதவேதாந்தங்களில் எவ்வளவுதான் ஆழ்ந்த அறிவுடையவனாக இருப்பினும் தனது பயணமுடிவை அவன் பத்திரமாகச் சென்றடைய முடியாது. வழிகாட்டி ஒருவர் அவனுக்கு உதவ அங்கிருந்தால் சரியான வழியைக் காண்பித்துப் பயணத்தின் போதுள்ள இடர்கள், குழிகள், கொடிய மிருகங்கள் இவற்றை ஒதுக்கிச் செல்லமுடியும். பயணமும் இலகுவானதாகிவிடும். இவ்விஷயத்தில் பாபாவின் சொந்த அனுபவமாக அவர் சொன்ன கதை உண்மையில் ஆச்சரியமானது. கேட்டறியும்போது நம்பிக்கை, பக்தி, ரஷணை ஆகியவற்றை அளிக்கிறது.
தாகம்
ஒருமுறை எங்களில் நால்வர் மத சாஸ்திரங்களையும், மற்ற புத்தகங்களையும் படித்துக்கொண்டிருந்தோம். இவ்வாறாக உற்சாகம் பெற்றுப் பிரம்மத்தின் குணத்தைப் பற்றி விவாதிக்கத் தொடங்கினோம்.
எங்களுள் ஒருவர்: "அவரவர் ஆன்மாவைத் தத்தம் ஆன்மாவாலேயே உயர்த்தவேண்டும் என்றும் பிறரை நாடக்கூடாது என்றும் கூறினார்".
இதற்கு இரண்டாமவர்: "யார் மனத்தைக் கட்டுப்படுத்துகிறானோ, அவன் ஆசீர்வதிக்கப்பட்டவன். எண்ணங்கள், யோசனைகள் இவற்றிலிருந்து நாம் விடுபட்டவர்களாக இருக்கவேண்டும். நாமில்லாமல் இவ்வுலகத்தில் ஒன்றும் கிடையாது" என்றார்.
மூன்றாமவர்: உலகம் — தோற்றம் — எப்போதும் மாறிக்கொண்டேயிருக்கிறது. அருவமே நிலைத்தது — முடிவற்றது . எனவே நாம் நிலையான, நிலையற்றவற்றைப் பகுத்துணர வேண்டும்.
நான்காமவர் — பாபா : — தீவிரமாக — ஏட்டறிவு பயனற்றது. நமக்கிடப்பட்ட கடைமைகளைச் செய்து, குருவின் பாதத்தில் உடல், மனம், ஐந்து பிராணன்கள் இவற்றைச் சமர்ப்பித்துவிட வேண்டும். குருவே கடவுள், சர்வ வியாபி, இவ்வுறுதியான மனநிலை பெறுவதற்கு எல்லையற்ற திடநம்பிக்கை அவசியமாகும்.
இவ்வாறாக விவாதித்துக்கொண்டு கற்றறிந்த நாங்கள் நால்வரும் காடுகளில் கடவுளைத் தேடி அலையத் தொடங்கினோம். அம்மூவரும் அறிவின் துணைகொண்டே சுதந்திரமாக எவர் உதவியுமின்றி தேட முயன்றனர். வழியில் ஒரு வனஜாரி — எருமையின் மீது தானியத்தைக் கொண்டுசென்று விற்பவன் — எதிர்ப்பட்டான்.
வனஜாரி: இப்போது உஷ்ணமாயிருக்கிறது. எங்கே இவ்வளவு தூரம் போகிறீர்கள்?
நாங்கள்: காட்டில் தேடுவதற்கு
வனஜாரி: எதைத் தேடிச் செல்கிறீர்கள்.
நாங்கள் அவனுக்கு நம்பமுடியாத மழுப்பும் விதத்தில் ஒரு பதில் கொடுத்தோம். திக்குதிசை தெரியாமல் காட்டில் நாங்கள் அலைந்துகொடிருப்பதைக் கண்ட அவன் மனதிரங்கி, "காடுகளை முழுவதும் அறியாமல், திடீரென்று நீங்கள் இப்படி திசை தெரியாமல் அலையக்கூடாது. காடுகளிடையே நீங்கள் செல்லவிரும்பினால் ஒரு நல்ல வழிகாட்டியை அழைத்துச் செல்லவேண்டும். இந்த கடுமையான உச்சிவேளையில் அனாவசியமாக ஏன் அலைந்துகொண்டிருக்கிறீர்கள். தேடும் உங்களது இரகசியத்தை நீங்கள் எனக்கு வெளியிட வேண்டாம். ஆயினும் நீங்கள் அமர்ந்து, சாப்பிட்டு, நீர் குடித்து இளைப்பாறிய பின் செல்லலாம். உள்ளத்தில் எப்போதும் பொறுமையாய் இருங்கள்" என்று கூறினான். அவ்வளவு இனிமையாகப் பேசியபோதும் அவனது வேண்டுதலை நிராகரித்துவிட்டு மேலே நடக்கத் தொடங்கினோம்.
நாங்கள் தன்னறிவு நிரம்பியவர்கள் என்றும், ஒருவரின் உதவியும் எங்களுக்குத் தேவையில்லை என்றும் நினைத்தோம். காடு பரந்ததாகவும், பாதையற்றதாகவும் இருந்தது. சூரியஒளி கூட உட்புகாத அளவுக்கு மரங்கள் அவ்வளவு நெருக்கமாகவும், உயரமாகவும் வளர்ந்து இருந்தன. எனவே நாங்கள் வழிதவறி இங்குமங்கும் நெடுநேரம் அலைந்துகொண்டிருந்தோம். முடிவாக நலதிர்ஷ்டம் ஒன்றினால் மட்டுமே எங்குவிட்டோமோ அங்கேயே வந்துசேர்ந்தோம். வனஜாரி திரும்பவும் எங்களைச் சந்தித்தான்.
வனஜாரி: உங்கள் சொந்த புத்திசாதுர்யத்தை மட்டுமே நம்பி வழியை நீங்கள் தவற விட்டுவிட்டீர்கள். சிறிய அல்லது பெரிய விஷயங்களில் வழிகாட்ட ஒரு வழிகாட்டி நமக்கு எப்போதும் தேவை. வெறும் வயிற்றுடன் எந்த இலட்சியத்திலும் வெற்றியடைய இயலாது. கடவுள் நினைத்தாலன்றி ஒருவரும் நம்மை வழியில் சந்திப்பதில்லை. உணவளிக்கப்படுவதை மறுக்காதீர்கள். பரிமாறப்பட்ட உணவு தள்ளப்படக்கூடாது. ரொட்டி, உணவு ஆகியவை கிடப்பது வெற்றியின் அடையாளமாகும்.
இதைக் கூறிக்கொண்டே அவன் மீண்டும் எங்களுக்கு உணவை வைத்து அமைதியுடனும், பொறுமையுடனும் இருக்கும்படி கூறினான். மீண்டும் என்னுடன் இருந்தவர்களுக்கு இந்த நல்ல விருந்தோம்பல் பிடிக்கவில்லை. அவனை நிராகரித்துவிட்டுச் சென்றுவிட்டனர். தாகத்தையும், பசியையும் தீர்த்துக்கொள்ளாமலேயே மூவரும் செல்லும் அளவுக்குப் பிடிவாதமாக இருந்தனர். எனக்குப் பசியாயும், தாகமாயும் இருந்ததால் வனஜாரியின் அசாதாரண அன்பில் உருகினேன். மிகவும் கற்றறிந்தவர்கள் என்று எங்களை எண்ணிக்கொண்டோம். அன்புக்கும், இரக்க குணத்திற்கும் நாங்கள் புதியவர்களாகவே இருந்தோம். வனஜாரி கல்வியறிவற்றவன், தகுதியற்றவன். கீழ்குலத்தைச் சேர்ந்தவன் என்றாலும் அவன் உள்ளத்தில் அன்பு இருந்தது. அவன் எங்களை உண்ணச் சொன்னான். மற்றவர்களை நிஷ்காமியாக நேசிப்பவன் உண்மையிலேயே உயர்த்தப்படுகிறான். அவனது விருந்தோம்புதலை ஏற்றுக்கொள்ளுதலே ஞானத்தை ஏற்றுக்கொள்வதற்கான சிறந்த ஆரம்பமாகுமென நான் நினைத்தேன். எனவே அளிக்கப்பட்ட ரொட்டித்துண்டை மிக்க மரியாதையுடன் நான் ஏற்றுக்கொண்டேன். தண்ணீரையும் பருகினேன்.
அப்போது ஆ! குருவே எங்கள்முன் வந்து நின்றார். "எதைப்பற்றி சர்ச்சை?" என்று அவர் கேட்டார். நடந்த எல்லாவற்றையும் நான் கூறினேன். அப்போது அவர், "நீ என்னுடன் வர விரும்புகிறாயா? உனக்குத் தேவையானதை நான் காண்பிப்பேன். ஆனால் நான் சொல்வதில் நம்பிக்கையுடையவனே வெற்றியடைவான்" என்றார். மற்றவர்கள் அவர் கூறியதை ஒப்புக்கொள்ளாமல் அவரை விட்டுச் சென்றனர். ஆனால் நான் அவரை வணங்கி அவரது கொள்கையை ஏற்றுக்கொண்டேன். பின்னர் அவர் என்னை ஒரு கேணிக்கு அழைத்துச் சென்றார். என் கால்களைக் கையிற்றால் கட்டினார். என்னைத் தலைகீழாக பக்கத்தில் இருந்த மரத்தில் தொங்கவிட்டார். கிணற்று நீர் மட்டத்திலிருந்து மூன்றடி உயரத்துக்கு மேலே தொங்கவிடப்பட்டிருந்த எனக்குத் தண்ணீர் கைகளுக்கோ வாய்க்கோ எட்டவில்லை.**
** நாலைந்து மணிநேரம் தலைகீழாகக் கிணற்றில் தொங்கவிடப்படுதலை உண்மையாக அப்படியே நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது. அது சமாதி நிலையைக் குறிக்கும் ஒரு ரூப விளக்கமாகும். உணர்வுகளில் இரண்டு வகைகள் உண்டு.
(1 ) புலன் வழி உணர்வுகள்
(2 ) ஆன்ம வழி உணர்வுகள்
தங்கள் இலட்சியத்தை அடைய புலன்களும், மனதும் வெளியேறி தங்கள் ஆசையை அடையும்படி படைக்கப்பட்டிருக்கின்றன. நமக்கு அப்போது இன்பமோ அல்லது துன்பமோ, தனியோ அல்லது கலப்போ ஆகிய புலன்வழி உணர்வுகள் ஏற்படுகின்றன. ஆனால் பேரின்பநிலையோ, மகிழ்ச்சியோ கிடைப்பதில்லை. புலன்களும், மனதும் தங்கள் ஆசையிலிருந்து திருப்பிவிடப்பட்டு தலைகீழான நிலை அவைகளுக்குக் கொடுக்கப்படும்போது அதாவது உள்நோக்கி ஆன்மாவில் சங்கமிக்கும்போது மற்றொன்றான ஆன்ம உணர்வைப் பெறுகிறோம். அது சொல்லால் விவரிக்க முடியாத அளவு பேரின்பத்தையும், கலப்பற்ற மகிழ்ச்சியையும் நமக்கு அளிக்கிறது. "நான் பேரானந்தத்தின் உச்ச நிலையில் இருந்தேன். நான் அனுபவித்த மகிழ்ச்சியை எங்ஙனம் கூறுவேன்" என்னும் மொழிகள் குரு அவரை சமாதிநிலையில் வைத்தாரென்றும் தண்ணீர் மேலென்பது அமைதியற்ற புலன், மனம் இவைகளுக்கு அப்பால் என்பதாம்.
இவ்வாறாக என்னைத் தொங்கவிட்டு அவர் போய்விட்டார். எங்கு போனாரென்பது ஒருவருக்கும் தெரியாது. நாலைந்து மணிநேரம் கழித்து அவர் திரும்பி வந்தார். என்னைத் துரிதமாக வெளியில் எடுத்து, எப்படி இருந்தது என்று கேட்டார். "நான் பேரானந்தத்தின் உச்சநிலையில் இருந்தேன். என்னைப் போன்ற முட்டாள் அந்தப் பேரானந்தத்தை எங்ஙனம் விவரிக்க முடியும்?" என்று பதில் சொன்னேன். இவ்விடையைக் கேட்டு அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். என்னை அவர்பால் இழுத்துத் தட்டிக்கொடுத்து என்னை அவரிடம் வைத்துக்கொண்டார்.
தாய்ப்பறவை தன் குஞ்சைப் பேணுதல் போன்று என்னை அன்புடன் கவனித்தார். அவருடைய குருகுலத்தில் என்னைச் சேர்த்துக்கொண்டார். எத்தகைய அழகுடையது அது! அங்கே என் பெற்றோர்களை மறந்தேன். பாசத்தைத் துறந்தேன். எளிதாக விடுவிக்கப்பட்டேன். அவரது கழுத்தைக் கட்டியணைத்து எப்போதும் அவரையே உற்றுநோக்கிக் கொண்டிருக்கவேண்டுமென்று நினைத்தேன். அவரது ரூபம் எனது கண்மணியில் பதிக்கப்படாவிட்டால் நான் குருடாயிருப்பதே நலம். குருகுலம் அத்தகையது. அதனுள் ஒருமுறை நுழைந்த யாரும் வெறுங்கையுடன் திரும்ப இயலாது. எனது வீடு, சொத்து, தாய், தந்தை அனைத்தும் முழுக்க முழுக்க குருவேயானார். எனது உணர்வுகள் எல்லாம் தங்கள் இடத்தை விட்டுவிட்டு எனது கண்களிலேயே ஒருமை அடைந்தன. எனது பார்வை அவரை மையமாகக் கொண்டிருந்தது. எனது தியானத்தின் ஒரே இலட்சியமாக அவர் இருந்தார்.
அவரைத் தவிரப் பிறரைப்பற்றி நான் உணரவில்லை. இவரே எனது குரு. அவரைத் தியானம் செய்யும்போது எனது மனமும், புத்தியும் அசையாமல் நின்றுவிட்டன. இவ்வாறாக நான் அமைதியாக இருக்கவேண்டியதாயிற்று. அமைதியுடன் அவரை வணங்க வேண்டியதாயிற்று.
நீங்கள் முழுவதும் வேறான காட்சிகளைக் காணும் மற்ற குருகுலங்கள் உள்ளன. ஞானத்தைப் பயில்வதற்காக சீடர்கள் அங்கு செல்கிறார்கள். பணம், காலம், உழைப்பு இவைகளைச் செலவழிக்கிறார்கள். ஆனால் முடிவாக அவர்கள் வருத்தப்பட நேரிடும். அங்கேயுள்ள குரு தனது இரகசிய ஞானத்தைப் பற்றியும், தனது நேர்மையைப் பற்றியும் பெருமையடித்துக்கொள்கிறார். தனது புனிதத் தன்மையையும், தூய்மையையும் அவர் ஒரு காட்சியாக்கிகொள்கிறார். ஆனால் அவர் தன் உள்ளத்தில் பட்சமாய் இல்லை. தனது புகழைப் பற்றியே அவர் பலப்படப் புகழ்ந்து பாடிக்கொள்கிறார். ஆனால் அவரது சொந்த மொழிகளே அடியவர்களை உருவாக்குவதில்லை. அவர்களும் தெளிவடைவதில்லை. தன்னையறிதலைப் பொறுத்தவரை அவரிடம் ஒன்றுமில்லை. சீடர்களுக்கு அத்தகைய பள்ளிகள் என்ன விதத்தில் பயன்படும்? அதனால் அவர்கள் என்ன நன்மை அடைவார்கள்?
இதற்கு முன்னர் குறிப்பிட்ட குருவானவர் வேறுவிதமானவர். அவரது அருளால் எவ்வித முயற்சி, படிப்புமின்றியே ஞானம் தானாகவே எனக்குப் பளிச்சிட்டது. நான் எதையும் தேடவில்லை. ஆனால் எனக்கு எல்லாம் வெள்ளிடைமலையென விளங்கியது. குரு மட்டுமே 'தலைகீழ் தொங்கவிடுதல்' எவ்வாறு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்பதை அறிவார்.
அந்நான்கு பேர்களில் ஒருவன் கர்மகர்த்தா. அவனுக்கு எவ்வாறு சில சடங்குமுறைகளை செய்வது அல்லது செய்யாமல் இருப்பது என்று மட்டுமே தெரியும். இரண்டாமவன் ஞானி. தனது ஞானப் பெருகையில் ஊறியவன். மூன்றாவது ஆள் கடவுள் ஒருவரே ஆட்டுவிப்பவர் என்று நம்பி அவரிடம் தம்மை முழுமையாக சரணாக்கிவிட்ட பக்தன். மூவரும் விவாதித்து வாதம் பண்ணிக்கொண்டிருக்கையில் கடவுளைப் பற்றிய கேள்வி எழுந்தது. முறையான வழிகாட்டுதல் இல்லாத அறிவுடன் அவரைத் தேடிக்கொண்டு போனார்கள். விவேகம், பற்றின்மை இவைகளின் அவதாரமான சாயி நால்வருள் ஒருவர்.
அவரே பிரம்ம அவதாரமாயிருந்தும் ஏன் அவர்களுடன் சேர்ந்து முட்டாள்தனமாக நடந்துகொள்கிறார் என்று சிலர் கேட்கலாம். மக்கள் நன்மையடைவதற்கும், அவர்கள் தம்மைப் பின்பற்றும்படி தாம் ஓர் எடுத்துக்காட்டாக இருக்கவுமே அவர் இதைச் செய்தார். தாமே ஒரு அவதாரமாயிருந்தும் கீழான வனஜாரியை மதித்து, 'உணவே கடவுள்' — அன்னம் - பிரம்மம் — என்று உறுதியான நம்பிக்கையுடன் அதை ஏற்றுக்கொண்டார்.
வனஜாரியின் விருந்தோம்பலை ஏற்காதவர்கள் எங்ஙனம் கஷ்டப்பட்டார்கள் என்றும் குருவின்றி ஞானம் அடைவது இயலாதென்பதையும் அவர் காண்பித்தார். ஸ்ருதி — தைத்ரீய உபநிஷதம் — நமக்கு மாதா - பிதா - குருவின் வழிபாட்டையும், புனித கிரந்தங்களைக் கற்பதையும், கற்பிக்க வேண்டுவதையும் வற்புறுத்துகின்றது. இவைகளே நமது மனதைத் தூய்மைப்படுத்தும். இத்தூய்மை செய்யப்பட்டாலொழிய தன்னையறிதல் இயலாததாகும். உணர்சிகளோ, மனதோ, புத்தியோ ஆன்மாவை எட்டுவதில்லை. காணுதல், அறிந்துகொள்ளுதல் இவ்விஷயத்தில் நமக்கு உதவாது. குருவின் அருள் ஒன்றே எண்ணப்படுவதாகும். நமது வாழ்க்கையின் இலட்சியங்களான தர்மம், அர்த்தம், காமம் ஆகியவை நமது முயற்சியாலேயே அடையப்படுகிறது. ஆனால் மோட்ஷம் — விடுதலை — குருவின் உதவியாலேயே அடையப்படுகிறது.
சாயியின் தர்பாரில் பல மனிதர்கள் தோன்றி தங்கள் பாத்திரத்தை நடித்தார்கள். ஜோசியர்கள் வந்து தங்கள் ஜோசியங்களைக் கூறினார்கள். இளவரசர்கள், கனவான்கள், ஏழைகள், பணக்காரர்கள், சந்நியாசிகள், யோகிகள், பாடகர்கள் மற்றும் பலரும் தரிசனத்திற்காக வந்தனர். மஹார் — கீழ்ஜாதியினர் — கூட வந்து தனது ஜோஹாரைத் — வந்தனத்தைத் — தெரிவித்துவிட்டு சாயிபாபாவே தனது மாயிபாபா — உண்மையான பெற்றோர் — என்கிறார். ஜாலவித்தைக்காரன், கோந்தலிகள் — வில்லுப்பட்டுக்காரர்கள் , குருடு, நொண்டி, நாத்பன்திகள் — பாடகர்கள் , நாட்டியக்காரர்கள், விளையாட்டு வீரர்கள் இவ்வாறாக மற்றும் பலரும் வந்தனர். உரிய வரவேற்பு அளிக்கப்பட்டனர். வனஜாரியும் தனது தருணத்தில் தனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தை நடித்தான். நாம் இப்போது வேறொரு கதைக்குப் போவோம்.
உண்ணாவிரதமும் திருமதி கோகலேயும்
பாபா ஒருபோதும் பட்டினி இருந்ததில்லை. மற்றவர்களையும் பட்டினியிருக்க அனுமதிக்கவில்லை. விரதம் இருப்பவன் மனது அமைதியாய் இருப்பதே இல்லை. பின்னர் அவன் எங்ஙனம் பரமார்த்திகத்தை அடையமுடியும்? வெறும் வயிற்றுடன் கடவுள் அறியப்படமாட்டார். முதலில் ஆன்மா சாந்தப்படவேண்டும். வயிற்றில் உணவின் ஈரம் இல்லையாயின் அவர்தம் புகழை எந்நாவுடன் நாம் இசைக்க முடியும்? கடவுளை எந்தக் கண்களுடன் பார்க்க முடியும்? அல்லது எந்தக் காதுகளால்தான் அவர் புகழைக் கேட்க முடியும்?
சுருக்கமாக, நமது எல்லா உறுப்புக்களும் அவைகட்குரிய போஷிப்பைப் பெற்று நன்றாக இருக்கும்போது கடவுளை அடைவதற்குரிய பக்தி மற்றும் பல சாதனைகளையும் நாம் பெற முடியும். எனவே பசியோடிருத்தலோ மிகவும் உண்பதோ ஆகாது. உடலுக்கும், மனதுக்கும் மிதமான போக்கே உண்மையில் நல்லது.
திருமதி கோகலே என்ற பெண்மணி பாபாவின் பக்தையான திருமதி காஷிபாய் கனிட்கர் என்பவளிடமிருந்து தாதா கேல்கருக்கு ஒரு அறிமுகக் கடிதம் வாங்கிவந்தாள். அதற்கு முந்தின தினம் பாபா, தாதா கேல்கரிடம் தமது குழந்தைகளை ஷிம்காவின் — புனித நாட்கள் — போது பட்டினியாயிருப்பதைத் தாம் அனுமதிக்க முடியாது என்று கூறினார்.
அடுத்த நாள் அப்பெண்மணி தாதா கேல்கருடன் சென்று பாபாவின்முன் அமர்ந்தபோது பாபா, உடனே அவளை நோக்கி, "பட்டினியிருக்கத் தேவையென்ன?" என்று கேட்டார். தாதாபட்டின் வீட்டுக்குப் போய் பூரணப் போளியைச் — கடலை மாவு, வெல்லம் சேர்ந்த கோதுமை ரொட்டி — செய்து அவர் குழந்தைகளுக்குக் கொடுத்து நீயும் உண்பாய் என்று கூறினார். பண்டிகை நன்னாட்கள் இருந்தன. திருமதி கேல்கர் அப்போது வீட்டு விலக்கம் ஆகியிருந்தாள். தாதாபட்டின் வீட்டில் சமையல் செய்ய ஒருவரும் இல்லை, எனவே பாபாவின் அறிவுரை 'காலத்திநாற்' செய்ததாயிற்று. திருமதி கோகலே தாதாபட்டின் வீட்டிற்குச் செல்லவேண்டியதாயிற்று. சொல்லியபடி அப்பண்டத்தைச் செய்யவேண்டியதாயிற்று. அன்றைக்கு அவள் சமைத்து மற்றவர்க்கும் போட்டுத் தானும் உண்டாள். என்ன அருமையான கதை. எத்தகைய ஆழமான படிப்பினை!
பாபாவின் எஜமானர்
பாபா தமது பால்யப் பருவத்தின் கதை ஒன்றைப் பின்வருமாறு சொன்னார். "நான் சிறு பையனாக இருந்தபோது உணவுக்காக வேலை தேடிக்கொண்டிருந்தேன். பீட்காவனுக்கு சென்றேன். அங்கு எனக்கு எம்ப்ராய்டரி வேலை கிடைத்து. ஒரு துன்பத்தையும் பாராது கடுமையாக உழைத்தேன். முதலாளி என்மீது மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். எனக்குமுன் மற்ற மூன்று பையன்களும் வேலை செய்தனர். முதல்வன் ரூ.50ம், இரண்டாமவன் ரூ.100ம், மூன்றாமவன் ரூ.150ம் பெற்றனர். இவர்களின் மொத்தத் தொகையைப் போல் இரண்டு பங்கு நான் பெற்றேன். அதாவது ரூ.600ஐப் பெற்றேன். எனது புதிசாதுர்யத்தைக் கண்ட முதலாளி என்னை நேசித்தார், துதித்தார். முழுஆடை, தலைக்கு டர்பன், உடம்புக்கு ஷேலா— சால்வை — முதலியவற்றைத் தந்து என்னைக் கௌரவித்தார். இவற்றி உபயோகிக்காமல் நான் பத்திரமாக வைத்திருந்தேன். எந்த ஒரு மனிதன் அளிப்பதும் நெடுநாள் இருப்பதில்லை. அது முழுமையுடையதுமல்ல. ஆனால் எனது எஜமானர் — கடவுள் — அளிப்பதோ காலமுடிவு பரியந்தம் நிலைத்திருக்கிறது. அவரின் வெகுமதியை வேறெந்த வெகுமதியுடனும் ஒப்பிடமுடியாது. எனது எஜமானரோ, 'எடுத்துக்கொள், எடுத்துகொள்' என்கிறார். ஆனால் எல்லோரும் என்னிடம் வந்து 'கொடு, கொடு' என்கிறார்கள். நான் கூறுவதன் பொருளை ஒருவரும் கவனத்துடன் பார்ப்பதில்லை.
எனது எஜமானரின் கஜானா நிரம்பியிருக்கிறது. நிரம்பி வழிகிறது. நான் கூறுவதாவது, வண்டிப் பாரங்களில் இச்செல்வத்தை எடுத்துச் செல்லுங்கள். சத்தியவதியான தாயாரின் ஆசீர்வதிக்கப்பட்ட மகன் இச்செல்வத்தால் தன்னை நிரப்பிக் கொள்ளட்டும். எனது பக்கீரின் திறமை, எனது பகவானின் லீலை, எனது எஜமானரின் இயகையான செயல்வன்மை இவை மிகவும் நூதனமானவை. என்னைப்பற்றி என்ன? உடம்பு — மண் — மண்ணுடன் கலந்துவிடும். இந்நேரம் இனிமேல் மீண்டும் வராது. நான் எங்கோ செல்கிறேன். எங்கோ அமர்கிறேன். மாயை என்னைக் கடுமையாகத் தொல்லைப்படுத்துகிறது. இருப்பினும் எனது மாந்தர்களுக்காக எப்போது நான், ஆசைபூண்டு கவலைப்படுகிறேன். எதையாவது — ஆன்மிக முயற்சி — செய்யும் ஒருவன் அதன் பழத்தை அறுவடை செய்கிறான். எனது இம்மொழிகளைக் கேட்பவன் விலைமதிப்பற்ற சந்தோஷத்தைப் பெறுகிறான்".
ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
• தேள்கடி - பிளேக் வியாதிகள்
குணமாக்கப்படுதல்
• ஜாம்நேர் அற்புதம்
• நாராயண்ராவின் வியாதி
• பாலாபுவா சுதார்
• அப்பா சாஹேப் குல்கர்ணி, ஹரிபாவ் கர்ணிக்
சென்ற அத்தியாயத்தில் குருவின் பெருமையைப்பற்றி நாம் விவரித்தோம். இந்த அத்தியாயத்தில் உதியின் பெருமையைப்பற்றி விளக்குவோம்.
முன்னுரை
இப்போது பெரும் ஞானிகளின் தலைதாழ்த்தி வணங்குவோம். அவர்களின் கருணை நிறைந்த கடைக்கண் பார்வைகளே மலைபோன்ற பாவங்களை அழித்து, நமது ஒழுக்கத்திலுள்ள தீய கறைகளை நீக்கிச் சீர்படுத்துகிறது. அவர்களின் சாதாரணப் பேச்சே நல்ல உபதேசத்தை அளித்து நமக்கு அழியாத இன்பத்தை நல்குகிறது. 'இது எங்களுடையது, அது உங்களுடையது' என்ற பாகுபாடு அவர்கள் மனதில் எழுவதே இல்லை. அவர்களது கடனானது இப்பிறவியிலும், இனிவரும் பிறவிகளிலும் நம்மால் திருப்பிக் கொடுக்கப்படப் போவதேயில்லை.
உதி
பாபா அனைவரிடமிருந்தும் தஷிணையைப் பெற்றார். இவ்வாறாகச் சேகரிக்கப்பட்ட பணத்திலிருந்து அவர் பெருமளவு தர்மத்திற்கும், மீதியை விறகு வாங்குவதற்கும் செலவழித்தார். அவர் எப்போதும் எரியவிட்டுக்கொண்டிருந்த துனி என்ற புனித நெருப்பில் விறகை இட்டார். இந்நெருப்பிலிருந்து வரும் சாம்பலானது 'உதி' என்று அழைக்கப்பட்டது. பக்தர்கள் ஷீர்டியைவிட்டுப் புறப்படும் சமயத்தில் இந்த உதியானது தாராளமாக வினியோகிக்கப்பட்டது.
இந்த உதியினால் பாபா குறிப்பிடுவது அல்லது உபதேசிப்பது என்ன? இப்பிரபஞ்சத்தில் காணப்படும் நிகழ்ச்சிகள் யாவும் சாம்பலைப் போன்று நிலையற்ற பொருள் என்பதே. பஞ்ச பூதங்களால் அமைக்கப்பட்ட நம் உடம்பானது அவைகளின் எல்லா இன்பங்களையும் துய்த்து முடித்து ஓய்ந்த பின்னர் சாம்பலாக்கப்படும். அவர்களின் உடல் சாம்பலாக்கப்படும் என்ற உண்மையை பக்தர்களுக்கு நினைவூட்டவே பாபா உதியை வழங்குகிறார். பிரம்மம் ஒன்றே மெய்ப்பொருள் என்பதையும், பிரபஞ்சம் நிலையற்றது என்றும் தந்தை, தாய், மகன் இவர்கள் யாவரும் உண்மையில் நம்முடையவர் அல்ல என்றும் இதனால் உபதேசித்தார். இவ்வுலகத்துக்கு நாம் தனியாக வந்தோம். தனியாகவே உலகைவிட்டுப் போகவேண்டும். உதி பலவிதாமான உடல்-மன நோய்களைக் குணப்படுத்தியது என்பது அறியப்பட்டது. இப்போதும் கூட அறியப்பட்டுக் கொண்டிருக்கிறது.
நித்ய - அநித்ய வஸ்துக்களைப் பகுத்துணரும் விவேகம், மற்றும் அநித்ய வஸ்துக்களில் பற்றின்மை முதலியதான தத்துவங்களை பாபா அவரது உதி, தஷிணையின் மூலம் அடியவர்களின் காதுகளில் ஓத விரும்பினார். முன்னது — உதி — விவேகத்தையும், பின்னது — தஷிணை — பற்றின்மையையும் நமக்கு அறிவுறுத்தியது. இவ்விரண்டும் நம்மிடத்தில் இருந்தாலொழிய நாம் இச்சம்சார சாகரத்தைக் கடக்க முடியாது. எனவே பாபா தஷிணையைக் கேட்டுப் பெற்றார். அவர்கள் விடைபெறும்போது உதியைப் பிரசாதமாக அளித்து அதை அவர்கள் நெற்றியிலிட்டுத் தமது வரம் நல்கும் கரத்தை அவர்கள் தலைமீது வைத்தார். பாபா மகிழ்வான மனநிலையில் இருக்கும்போது ஆனதமாகப் பாடுவார். அத்தகைய ஒரு பாட்டு, உதியைப் பற்றியதாகும். உதி பாடலின் பல்லவி இவ்வாறானது.
ரமதே ராம் ஆவோஜி! ஆவோஜி!
உதியாங்கி கோனியா லாவோஜி! லாவோஜி!
ஓ! விளையாட்டு ராமா, வாரும்! வாரும்!
பாபா இதனை மிகுந்த தெளிவான இனிமையான குரலில் பாடுவது வழக்கம்.
உதியைப் பற்றி ஆன்மிகக் குறிப்பாகச் சொல்லப்பட்ட பொருள் இவ்வளவே. அதற்குத் தன்னுடையதான லௌகிக தனிமுறைச் சிறப்பும்கூட உண்டு. உதி ஆரோக்கியம், சுபிட்சம், கவலைகளினின்று விடுதலை மற்றும் பல லோகாயத லாபங்களை அளித்தது. உதி பற்றிய கதைகளை நாம் இப்போது தொடங்குவோம்.
தேள்கடி
நாசிக்கைச் சேர்ந்த நாராயண் மோதிராம் ஜனி என்பவர் பாபாவின் ஒரு அடியவர். இவர் ராமச்சந்திர வாமன் மோடக் என்ற பாபாவின் மற்றுமொரு அடியவரின் கீழ் வேலை பார்த்து வந்தார். ஒருமுறை அவர் தமது தாயாருடன் சென்று பாபாவைப் பார்த்தார். அப்போது பாபா அவளிடம், அவரது மகன் இனிமேல் வேலைசெய்யக் கூடாதென்றும் சுய வியாபாரம் ஆரம்பிக்க வேண்டுமென்றும் கூறினார். சில நாட்களுக்குப் பின் இவ்வுரை உண்மையானது. நாராயண் ஜனி வேலையை விட்டுவிட்டு ஆனந்தாஸ்ரம் என்ற ஒரு தாங்கும் விடுதியை ஆரம்பித்தார். அது செழிப்பாக வளர்ந்தது.
ஒருமுறை இந்த நாராயண் ஜனியின் நண்பர் ஒருவரைத் தேள் கடித்தது. அதனால் ஏற்பட்ட வலி தீவிரமானது. தாங்கிக்கொள்ள முடியாதது. அத்தகைய சந்தர்ப்பங்களில் உதி மிகவும் பலனுள்ளது. வலிக்கும் இடத்தில் அது தடவப்படவேண்டும். எனவே நாராயண் உதியைத் தேடினார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் அவர் பாபாவின் படத்தின்முன் நின்று பாபாவின் உதவியைவேண்டி, அவர் நாமத்தை ஜெபித்து பாபாவின் படத்தின் முன்னால் புகைந்து கொண்டிருக்கும் ஊதுபத்தியின் சாம்பலிலிருந்து ஒரு சிட்டிகை எடுத்து அதை பாபாவின் உதியாக நினைத்துக்கொண்டு வலிக்கும் இடத்திலும், கடிவாயிலும் தடவினார். அவர் விரலை எடுத்த உடனேயே வலி மறைந்துவிட்டது. இருவருமே உணர்ச்சிவசப்பட்டுப் பெருமகிழ்ச்சியுற்றனர்.
நெறிகட்டும் பிளேக் வியாதி
ஒருமுறை பாந்த்ராவிலுள்ள அடியவர் ஒருவர் வேறோர் இடத்திலுள்ள தனது மகள், நெறிகட்டும் பிளேக் வியாதியால் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறாள் என்பதை அறிந்தார். அவரிடம் உதி இல்லை. எனவே அவர் நானா சாஹேப் சாந்தோர்கரிடம் அதை அனுப்பும்படி விஷயத்தைத் தெரியப்படுத்தினார். நானா சாஹேப் தனது மனைவியுடன் கல்யாணுக்குப் பயணம் செய்து கொண்டிருந்தபோது தாணே ரயில் நிலையத்துக்கருகில் உள்ள ஒரு சாலையில் இவ்விஷயத்தைக் கேள்விப்பட்டார். அப்போது அவரிடம் உதி இல்லை. எனவே அவர் தரையிலிருந்து கொஞ்சம் மண்ணை எடுத்து பாபாவைத் தியானம் செய்து அவரது உதவியைத் தொழுது வேண்டிக்கொண்டு அருகிலிருந்த தனது மனைவியின் நெற்றியில் இட்டார். அடியவர் இவையெல்லாவற்றையும் கண்டார். பின்பு அவர் தமது மகள் வீட்டுக்குச் சென்றபோது மூன்று நாட்களாகக் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த தனது மகள், தாணே ரயில் நிலையத்தருகில் நானா பாபாவை வேண்டிக்கொண்ட அதே சமயத்திலிருந்து குணமடையலானாள் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
ஜாம்நேர் அற்புதம்
சுமாராக 1904-05ம் ஆண்டில், நானா சாஹேப் சாந்தோர்கர் ஷீர்டியிலிருந்து நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள கான்தேஷ் ஜில்லாவிலுள்ள ஜாம்நேரின் மம்லதாராக இருந்தார். அவரது மகளான மைனாதாயி கருவுற்றுப் பிரசவிக்க இருந்தாள். அவளது பிரசவம் மிகவும் கஷ்டமாகி இரண்டு மூன்று நாட்களாக பிரசவ வேதனையால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தாள். நானா சாஹேப் எல்லாவிதப் பரிகாங்களைச் செய்ய முயற்சித்தும் பலனில்லை. அவர் பாபாவை நினைவுகூர்ந்து அவரின் உதவியைத் தொழுது வேண்டினார். அப்போது ஷீர்டியில் பாபுகீர்புவா என்று பாபா கூப்பிடும் ராம்கீர்புவா என்பவர் காந்தேஷிலுள்ள தமது சொந்த ஊருக்குப் போக விரும்பினார்.
பாபா அவரைக் கூப்பிட்டு, அவர் வீட்டுக்குப் போகும் வழியில் உள்ள ஜாம்நேரில் சிறிது தங்கி ஓய்வெடுத்துக்கொண்டு செல்லுமாறும் நானா சாஹேபிடம் உதியையும், ஆரத்தியையும் அளிக்கும்படியும் சொன்னார். ராம்கீர்புபா தன்னிடம் இரண்டே ரூபாய்கள் தான் இருப்பதாகவும் ஜல்காவன் வரையிலுள்ள ரயில்வே கட்டணத்துக்கு மட்டுமே இது போதுமானது என்றும், ஜல்காவனில் இருந்து முப்பது மைல் தூரத்திலுள்ள ஜாம்நேர் வரை போவது தம்மால் இயலாது என்றும் கூறினார். இதற்கு பாபா, எல்லா ஏற்பாடுகளும் செய்யப்ப்படுமாதலால் அவரைக் கவலைப்பட வேண்டாம் என்றும் உறுதியளித்தார்.
பின்னர் மாதவ் அட்கரால் புனையப்பட்ட புகழ்பெற்ற ஆரத்திப்பாடலை — அதன் மொழிபெயர்ப்பு இறுதியில் அளிக்கப்படுகிறது — ஷாமாவிடம் எழுதச்சொல்லி, அதன் பிரதியை உதியுடன் ராம்கீர்புபாவிடம் கொடுத்து, நானா சாஹேபிடம் கொடுக்கும்படி கூறினார். பின்னர் ராம்கீர்புவா பாபாவின் மொழிகளை நம்பி ஷீர்டியைவிட்டுப் புறப்பட்டு ஜல்காவனை அதிகாலை இரண்டு மணியளவில் அடைந்தார். அப்போது அவரிடம் இரண்டே அணாக்கள்தாம் மீதமிருந்தன. மிகவும் நெருக்கடியான நிலையில் இருந்தார். அவரது பெருஞ்சுமை தணிவுறும் வகையில், "யார் ஷீர்டியைச் சேர்ந்த பாபுகீர்புவா?" என்று யாரோ கூப்பிடுவது கேட்டது. பின்னர் அவர் அவனிடம் சென்று, தாமே பாபுகீர்புவா என்று கூறினார். தாம் நானா சாஹேபிடமிருந்து வருவதாகவும் அவருடைய வேலையாள் என்றும் கூறி நல்ல ஜோடிக் குதிரைகளுடன் கூடிய ஒரு பிரமாதமான வண்டியிடம் அழைத்துச் சென்றான்.
அவர்கள் இருவரும் அதில் பிரயாணம் செய்தார்கள். வண்டி வேகமாக ஓடியது. அதிகாலையில் அவர்கள் ஓடைக்கரையொன்றை அடைந்தனர். வண்டியோட்டி குதிரைகளைத் தண்ணீர் குடிக்க அழைத்துச் சென்றான். பியூன், ராம்கீர்புவாவை சிறிது உணவு உட்கொள்ளுமாறு கூறினான். பியூனின் தாடி, மீசை இவைகளையெல்லாம் ராம்கீர்புவா பார்த்துவிட்டு அவனை முஹமதியனாகச் சந்தேகப்பட்டு எவ்விதச் சிற்றுண்டியையும் அவனிடமிருந்து பெற விருப்பமில்லாதவராய் இருந்தார். ஆனால் வேலையாளோ தாம் ஒரு ஹிந்து, கார்வாலைச் சேர்ந்த க்ஷத்திரியன் என்றும், நானா சாஹேப் இந்த சிற்றுண்டிகளையெல்லாம் அனுப்பியிருந்ததாகவும் இதை ஏற்றுக்கொள்வதில் எவ்விதக் கஷ்டமோ, சந்தேகமோ வேண்டியதில்லையென்றும் கூறினான். பின்னர் அவர்கள் இருவரும் சிற்றுண்டி உண்டு மீண்டும் புறப்பட்டனர். பொழுது விடியும்போது ஜாம்நேரை அடைந்தனர். ராம்கீர்புவா சிறுநீர் கழிக்கச் சென்று சிலநிமிடங்களில் திரும்பி வந்தார். அப்போது குதிரைவண்டியையும், வண்டியோட்டியையும் காணாது பேச்சற்றவரானார்.
பின்னர் அருகிலுள்ள கச்சேரிக்குச் சென்று விசாரித்து மம்லதார், வீட்டில் இருப்பதை அறிந்துகொண்டார். நானா சாஹேபின் வீட்டுக்குச் சென்று தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு பாபாவின் உதியையும், ஆரத்தியையும் அளித்தார். இத்தருணத்தில் மைனாதாயின் விஷயம் மிகமிகத் தீவிரமடைந்து வீட்டிலிருந்தோர் அனைவரும் அவளைக் குறித்து ஆழ்ந்த கவலையுற்றனர். நானா சாஹேப் தனது மனைவியை அழைத்து உதியைத் தண்ணீரில் கரைத்துக் கொடுக்கும்படியும், ஆரத்தியைப் பாடும்படியும் கேட்டுக்கொண்டார். பாபாவின் உதவி, உற்ற சமயத்தில் கிடைத்திருக்கிறதென அவர் நினைத்தார். சில நிமிடங்களில் பிரசவம் பத்திரமாக ஆனது என்றும், கண்டம் கடந்து போய்விட்டது என்றும் பிரசவ அறையிலிருந்து செய்தி கிடைத்தது. ராம்கீர்புவா நானா சாஹேபிடம், பியூன், வண்டி, சிற்றுண்டி முதலியவைகளுக்காக நன்றி செலுத்தியபோது நானா பெருமளவு ஆச்சரியப்பட்டார். ஏனெனில் அவர் ஸ்டேஷனுக்கு ஒருவரையும் அனுப்பவில்லை. ஷீர்டியிலிருந்து எந்த ஆள் வருவதும் அவருக்குத் தெரியாது.
தாணேவைச் சேர்ந்த திரு தேவ் என்னும் ஓய்வுபெற்ற மம்லதார் இதைப்பற்றி நானாவின் புதல்வனான பாபுராவ் சாந்தோர்கரிடமும், ஷீர்டியைச் சேர்ந்த ராம்கீர்புவாவிடமும் விசாரித்துவிட்டு தன்னைத்தானே திருப்திப்படுத்திக்கொண்ட பின்பு, சாயிலீலா சஞ்சிகையில் — தொகுப்பு 13, எண்.11,12 &13 — ஒரு பகுதி உரைநடையாகவும், ஒரு பகுதி கவிதையாகவும் கொண்ட கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார்.
சகோதரர் நரசிம்மஸ்வாமியும் (1) மைனாதாயி, (2) பாபு சாஹேப் சாந்தோர்கர், (3) ராம்கீர்புவா இவர்களிடமிருந்து 1.6.1936, 16.9.1936, 1.12.1936 ஆகிய தேதிகளிடப்பட்ட வாக்குமூலத்தைப் பெற்று "அடியவர்களின் அனுபவங்கள்" பகுதி Ⅲல் பதிப்பித்து இருக்கிறார். ராம்கீர்புவாவின் வாக்குமூலம் கீழ்வருமாறு.
"ஒருநாள் பாபா என்னை அவரிடம் அழைத்து, உதிப்பொட்டலம் ஒன்றையும், பாபாவின் ஆரத்தியின் பிரதி ஒன்றையும் கொடுத்தார். அச்சமயம் நான் கான்தேஷ் போகவேண்டியிருந்தது. பாபா என்னை ஜாம்நேர் போகும்படியும், ஆரத்திப்பாடலையும், உதியையும் ஜாம்நேரில் நானா சாஹேப் சாந்தோர்கரிடம் கொடுக்கும்படியும் கூறினார். என்னிடம் இருப்பதெல்லாம் ரூ.2 என்றும் கோபர்காவனிலிருந்து ஜல்காவன், பின்னர் வண்டியில் ஜல்காவனிலிருந்து ஜாம்நேர் செல்வதற்கும் அது எங்ஙனம் போதும் என்று நான் அவரிடம் கேட்டேன். பாபா "கடவுள் கொடுப்பார்" என்று கூறினார்.
அன்று வெள்ளிக்கிழமை. நான் உடனே புறப்பட்டேன். மன்மாட் இரவு 7:30 மணிக்குச் சென்றேன். பின்னர் ஜல்காவனிற்கு காலை 2:45க்குச் சென்றேன். அந்த நாட்களில் பிளேக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. ஜாம்நேர் செல்வதற்கு என்ன செய்யவேண்டும் என்று நான் கண்டுபிடிக்க வேண்டியதிருந்தது. காலை சுமார் 3 மணியளவில் பூட்ஸ், டர்பன், நல்ல உடைகளுடன் கூடிய ஒரு வேலையாள் என்னிடம் வந்து என்னை வண்டியில் அமர்த்தி ஓட்டிச்சென்றான். நான் திகிலுடன் இருந்தேன். வழியில் பாகூரில் சிற்றுண்டி உட்கொண்டேன். ஜாம்நேரை நாங்கள் அதிகாலை அடைந்தோம். நான் சிறுநீர் கழிக்கச் சென்று திரும்பியபோது குதிரைவண்டியைக் காணவில்லை. வண்டிக்காரனும் மறைந்துபோனான்".
நாராயண்ராவ்
பக்தர் நாராயண்ராவ் — தந்தை பெயரும், உபபெயரும் தரப்படவில்லை — பாபா வாழ்ந்திருக்கும்போது இரண்டுமுறை அவரைச் சந்திக்கும் நல்லதிர்ஷ்டம் பெற்றிருந்தார். பாபா காலமான 1918க்கு மூன்றாண்டுகளுக்குப் பின்னர் அவர் ஷீர்டிக்கு வர விரும்பினார். ஆனால் வர இயலவில்லை. பாபாவின் மஹாசமாதியான ஓர் ஆண்டிற்குள் அவர் நோய்வாய்ப்பட்டு மிகவும் அவதியுற்றார். எல்லாவிதமான சாதாரண சிகிச்சைகளும் அவருக்குப் பலன் அளிக்கவில்லை. எனவே பாபாவை அல்லும், பகலும் தியானித்தார். ஒரு நாளிரவு கனவில் அவர் ஓர் காட்சி கண்டார்.
பாபா நிலவறை ஒன்றிலிருந்து வெளிவந்து அவருக்கு ஆறுதலளித்து, "கவலைப்படாதே, நாளையிலிருந்து நீ குணமடைவாய். ஒரு வாரத்திற்குள் நன்றாக நடமாடுவாய்" என்று கூறினார். கனவில் குறிப்பிடப்பட்ட தினத்திற்குள் நாராயண்ராவ் பூரண குணமடைந்தார். இப்போது கருத்தில் கொள்ளவேண்டிய அம்சம் இதுதான்.
"உடல் இருந்ததனால் பாபா வாழ்ந்துகொண்டிருந்தார். உடலை விட்டுவிட்டதனால் இறந்துவிட்டாரா? இல்லை. பாபா எப்போதுமே வாழ்கின்றார். ஏனெனில் 'பிறப்பு - இறப்பு' என்ற இருமையையும் கடந்தவர் அவர். எவனொருவன் முழுமத்துடன் அவரை நேசிக்கிறானோ, அவன் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் அவரிடமிருந்து பதிலைப் பெறுகிறான். நமது அருகிலேயே அவர் எப்போதும் இருக்கிறார். எந்த ரூபத்தையும் எடுத்துக்கொள்கிறார். பிரியமுள்ள பக்தனிடத்துத் தோன்றி அவனை திருப்திப்படுத்துகிறார்."
அப்பா சாஹேப் குல்கர்ணி
1917ஆம் ஆண்டு அப்பா சாஹேப் குல்கர்ணிக்கு ஒரு வாய்ப்பு நேரிட்டது. அவர் தாணேவுக்கு மாற்றப்பட்டு, பாபா சாஹேப் பாடேயால் அளிக்கப்பட்ட பாபாவின் படத்தை வழிபடத் தொடங்கினார். உண்மையான ஆர்வத்துடன் அவர் வழிபாடு செய்தார். பூ, சந்தனம், நைவேத்யம் இவைகளைத் தினமும் பாபாவின் படத்தின்முன் சமர்ப்பித்தார். அவரை நேரில் காணவும் விரும்பினார். இது தொடர்பாக ஒன்றைக் குறிப்பிடலாம். பாபாவின் படத்தை ஆர்வத்துடன் பார்ப்பதானது, அவரை நேரில் காண்பதற்குச் சமமாகும். கீழ்வரும் கதை இவ்வுண்மையை வெளிப்படுத்துகிறது.
பாலாபுவா சுதார்
பம்பாயைச் சேர்ந்த பாலாபுவா சுதார் என்னும் அருட்தொண்டர், அவர்தம் கடவுள்பற்று, பக்தி மற்றும் பஜனை முதலியவற்றால் நவீன துகாராம் என்று அழைக்கப்பட்டார். அவர் முதல்முறையாக 1917ல் ஷீர்டிக்கு வந்தார். பாபாவின் முன்னால் நமஸ்கரித்தபோது பாபா, "இம்மனிதரை நான் நான்கு ஆண்டுகளாக அறிவேன்" என்றார். பாலாபுவா ஆச்சரியப்பட்டு, இதுவே தமது முதல் ஷீர்டி விஜயமாதலால், அஃதெங்கனம் இருக்கமுடியும் என்று எண்ணினார்.
ஆனால் அதைப்பற்றித் தீவிரமாகச் சிந்தித்தபோது நான்காண்டுகளுக்கு முன்னர் பம்பாயில் பாபாவின் படத்தின் முன்னர் வீழ்ந்து நமஸ்கரித்தது நினைவிற்கு வந்தது. தனக்குள் அவர், ஞானிகள் எத்தகைய நிறைபேரறிவு உடையவர்களாகவும், சர்வவியாபிகளாகவும் இருக்கிறார்கள். தமது அடியவர்களிடம் அவர்கள் எத்தகைய அன்புடன் விளங்குகின்றனர். அவர்தம் புகைப்படத்தின் முன்னர் நான் பணிந்தேன். இவ்வுண்மை பாபாவால் கவனிக்கப்பட்டது. உரிய தருணத்தில் தமது படத்தைக் காண்பது நேரில் தம்மைக் காண்பதற்குச் சமமாகும் என்பதை அவர் உணரும்படி செய்தார்.
அப்பா சாஹேபின் கதைக்குத் திரும்புவோம். அவர் தாணேவில் இருந்தபோது பிவண்டி என்னுமிடத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஒரு வாரத்திற்குள் அவர் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படவில்லை. அவர் இல்லாதபோது மூன்றாவதுநாள் பின்வரும் ஆச்சரியமான சம்பவம் நிகழ்ந்தது. மத்தியானம் ஒரு பக்கிரி அப்பா சாஹேபின் வீட்டிற்கு வந்தார். அவருடைய அங்க அமைப்பெல்லாம் பாபாவின் படத்துடன் சரியாக ஒத்திருந்தன. குல்கர்ணியின் மனைவியும், குழந்தைகளும் அவரை அவர் ஷீர்டி சாய்பாபாவா? எனக் கேட்டனர். அதற்கு அவர் இல்லை என்று கூறி ஆனால் தாம் அவரின் பணிவுள்ள ஒரு வேலையாள் என்றும், அவ்விடத்திற்கு அவர்தம் கட்டளைப்படியே அவர்களின் குடும்ப நலத்தை விசாரிக்க வந்திருப்பதாகவும் கூறினார். பின்னர் அவர் தஷிணை கேட்டார். அப்பெண்மணி ஒரு ரூபாய் கொடுத்தாள். அவர் உதிப் பொட்டலம் ஒன்றைக் கொடுத்து அதை வழிபாட்டுக்காக பூஜையறையில் படத்துடன் வைக்கும்படி கூறினார். பின்னர் அவர் வீட்டை விட்டுப் போய்விட்டார். இப்போது சாயியின் அற்புதமான லீலையைக் கேளுங்கள்.
அப்பா சாஹேப், தனது குதிரை பிவண்டியில் நோய்வாய்ப்பட்டதால் பயணத்தைத் தொடர முடியவில்லை. அந்நாள் மாலை அவர் வீட்டிற்குத் திரும்பினார். மனைவியின் மூலம் பக்கிரி விஜயத்தைப் பற்றி அறிந்தார். தான் அப்பக்கிரியின் தரிசனம் பெறாததையும் ஒரே ஒரு ரூபாய் மட்டும் தஷிணையாக அளிக்கப்பட்டது குறித்து திருப்தியில்லாததையும் நினைத்து மனதில் சிந்தனை செய்தார். தாம் அப்போது இருந்திருந்தால் பத்து ரூபாய்க்குக் குறைவாக தஷிணை அளித்திருக்கமாட்டேன் என்று கூறினார். பின் உடனே பக்கிரியைத் தேடிக்கொண்டு சென்றார். உணவு உட்கொள்ளாமல் மசூதியிலும் மற்ற இடங்களிலும் அவரைத் தேடினார். எங்கு தேடியும் காண இயலவில்லை. பாபாவின் கொள்கையை வாசகர்கள் 32ம் அத்தியாயத்தில் கண்டிருக்கலாம். அதாவது வெறும் வயிற்றுடன் கடவுளைத் தேடுதல் கூடாது என்பதாம். உணவுக்குப்பின் சித்ரே என்ற நண்பருடன் அவர் உலாவப் புறப்பட்டார்.
சிறிதுதூரம் சென்றபின், விரைவாக ஒரு பக்கிரி அவர்களை நோக்கி வருவதைக் கண்டனர். பாபாவின் புகைப்படத்தில் இருந்த அந்த அடையாளங்களுடன் இப்பக்கிரியினது உருவமும் ஒத்திருந்ததால் இவரே மத்தியானம் தமது வீட்டிற்கு வந்தவராக இருக்கக்கூடும் என்று அப்பா சாஹேப் எண்ணினார். பக்கிரி உடனே தமது கையை நீட்டி தஷிணை கேட்டார். அப்பா சாஹேப் அவருக்கு ஒரு ரூபாயை அளித்தார். அவர் மீண்டும் கேட்கவே அப்பா சாஹேப் மேலும் இரண்டு ரூபாய் கொடுத்தார். அப்போதும் அவர் திருப்தியடையவில்லை. பின்னர் அவர் சித்ரேயிடம் மூன்று ரூபாய் கடன் வாங்கி அதை அவருக்குக் கொடுத்தார். பக்கிரி மேலும் விரும்பினார். அப்பா சாஹேப் மீண்டும் அவருக்கு மூன்று ரூபாய் கொடுத்தார். மொத்தத்தில் ஒன்பது ரூபாய். பக்கிரி திருப்தியடைந்தவராகக் காணப்படவில்லை. மேலும் கேட்டார். பின்னர் தம்மிடம் ஒரு பத்து ரூபாய் கரன்ஸி நோட்டு இருப்பதாக அவரிடம் கூறினார். பக்கிரியும் அதையே கேட்டு வாங்கிக்கொண்டு ஒன்பது ரூபாயைத் திருப்பிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். முன்னர் அப்பா சாஹேப் தாம் பத்து ரூபாய் கொடுக்கிறேன் என்று கூறினார். அத்தொகையும் அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது. பாபாவின் ஸ்பரிசத்தால் புனிதமாக்கப்பட்ட ஒன்பது ரூபாய்களும் அவரிடமே திருப்பித்தரப்பட்டன. ஒன்பது என்ற எண் குறிப்பிடத்தக்கது. அது நவவித பக்தியைக் குறிக்கிறது. — 21ஆம் அத்தியாயத்தைப் பார்க்க — லக்ஷ்மிபாயி ஷிண்டேவுக்கு பாபா தமது கடைசித் தருணத்தில் ஒன்பது ரூபாய் கொடுத்ததைக் கவனிக்கலாம்.
அப்பா சாஹேப் உதிப்பொட்டலத்தைச் சோதனை செய்தார். அதில் சில மலர் இதழ்களும், அக்ஷதைகளும் இருப்பதைக் கண்டார். பின் சில நாட்களுக்குப் பிறகு ஷீர்டி சென்றபோது பாபாவின் ரோமம் ஒன்று அவருக்குக் கிடைத்தது. அதையும் உதிப்பொட்டலத்தையும் ஒரு தாயதிற்குள் வைத்து எப்போதும் தமது புயத்தில் அணிந்துகொண்டார். அப்பா சாஹேப் உதியின் சக்தியை உணர்ந்துகொண்டார். அவர் மிகவும் புத்திசாலியாய் இருந்தபோதும் ஆரம்பத்தில் சம்பளமாக ரூ.40 பெற்று வந்தார். பாபாவின் படமும், உதியையும் பெற்றான பிறகு நாற்பது ரூபாயைப் போலப் பலமடங்கு அவர் மாதச் சம்பளமாகப் பெற்றார். அதிக ஆற்றலும், செல்வாக்கும் படைத்தவரானார். இந்த உலக நன்மைகளுடன் கூட அவர்தம் ஆன்மிக முன்னேற்றமும் துரிதமானது.
எனவே பாபாவின் உதியைப் பெற்றிருக்கும் நல்லதிர்ஷ்டம் உடையவர்கள், அதை குளித்தபின் நெற்றியில் இட்டுக்கொண்டு சிறிதளவு எடுத்துத் தண்ணீரில் கரைத்துப் புனித தீர்த்தமாகக் குடித்துவிடவேண்டும்.
ஹரிபாவ் கர்ணிக்
1917ஆம் ஆண்டில் தாணே ஜில்லாவைச் சேர்ந்த ஹரிபாவ் கர்ணிக் ஷீர்டிக்குக் குருபூர்ணிமா தினத்தன்று — ஆவணி மாதம் — வந்து உரிய சம்பிரதாயங்களுடன் பாபாவை வணங்கினார். உடைகளையும், தஷிணையையும் அவர் சமர்ப்பித்தார். ஷாமா மூலமாக பாபாவிடம் விடைபெற்ற பிறகு மசூதியின் படிகளில் இருந்து இறங்கினார். பிறகு இன்னுமொரு ரூபாய் பாபாவுக்குத் தஷிணை கொடுக்க எண்ணினார். எனவே அவர் சற்றே திரும்பி, திரும்பவும் படிகளில் ஏற முயற்சித்தார். ஆனால் அவர் பாபாவின் விடையைப் பெற்றுக்கொண்டதால் போகும்படியும், திரும்பி வரவேண்டாம் என்றும் ஷாமா ஜாடை காண்பித்தார். எனவே அவர் வீட்டுக்குக் கிளம்பினார். திரும்புகையில் நாசிக்கில் காலாராமரின் கோவிலுக்குத் தரிசனத்துக்குச் சென்றார். கோவிலின் பெரிய கதவுக்கு சிறிதே உட்புறம் அமரும் நரசிங்க மஹராஜ் என்ற ஞானி தமது அடியவர்களை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு ஹரிபாவிடம் வந்து, அவரின் மணிக்கட்டைப் பிடித்து "எனது ஒரு ரூபாயைக்" கொடு என்றார். கர்ணிக் வியப்படைந்தார். மிகுந்த இஷ்டத்துடன் அந்த ஒரு ரூபாயைக் கொடுத்தார். சாயிபாபா எங்ஙனம் தான் கொடுக்க இஷ்டப்பட்டிருந்த ரூபாயை நாசிக்கைச் சேர்ந்த நரசிங்க மஹராஜ் வழியாக வாங்கினார் என்று எண்ணினார்.
இக்கதை ஞானிகள் அனைவரும் ஒன்றே என்ற உண்மையையும், எங்ஙனம் அவர்கள் ஒத்திசைவுடன் செயல்படுகிறார்கள் என்பதையும் காட்டுகிறது.
ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
1. டாக்டர் சகோதரியின் மகன்
2. டாக்டர் பிள்ளை
3. ஷாமாவின் மைத்துனி
4. ஈரானியப் பெண்
5. ஹர்தா கனவான்
6. பம்பாய்ப் பெண்மணி
உதியின் பெருமை என்னும் பொருளைப் பற்றி இந்த அத்தியாயம் தொடர்கிறது. உதியை இட்டுக்கொள்வதால் மிகுந்த பலனளித்த விஷயங்களைப் பற்றிக் கூறுகிறது.
டாக்டரின் சகோதரியின் மகன்
மாலேகாவனில் — நாசிக் ஜில்லா — ஒரு டாக்டர் இருந்தார். — படித்துப் பட்டம் பெற்றவர் — அவரின் சகோதரியின் மகன் குணமாக்க இயலாத எலும்புருக்கி நோய்க்கட்டியால் துன்பப்பட்டான். டாக்டர் தாமும், அவரின் சகோதரர்களும் மற்றும் மருத்துவ நிபுணர்களும் எல்லாவிதமான சிகிச்சைகளையும், அறுவை சிகிச்சையும் கூட முயன்று பார்த்தனர். குணம் என்பதே இல்லை. அச்சிறுவனின் துன்பத்துக்கும் ஒரு முடிவில்லை. நண்பர்களும், உறவினர்களும் அந்த சிறுவனின் பெற்றோர்களிடம் தெய்வீக உதவியைக் கோரும்படியும், குணமாக்க இயலாத வியாதிகளையெல்லாம் தமது வெறும் கடைக்கண் பார்வையினால் மட்டுமே குணமாக்கிவிடும் சாயிபாவிடம் முயற்சிக்கும்படியும் அறிவுறுத்தினர். எனவே பெற்றோர்கள் ஷீர்டிக்கு வந்தனர்.
பாபாவின் முன்னர் வைத்துப் பணிவுடனும், மரியாதையுடனும் வேண்டினர். தங்கள் பையனைக் காக்கும்படி மன்றாடிப் பிரார்த்தித்தனர். கருணையுள்ள பாபா அவர்களுக்கு ஆறுதலளித்து, "இம்மசூதியை அடைக்கலம் புகுவோர் இந்தப் பிறப்பிலும், காலத்தின் முடிவு வரையிலும் எதைக் குறித்தும் கஷ்டமே படமாட்டார்கள். இப்போது கவலையற்றிருங்கள். உதியை நோய் கட்டியின்மீது தடவுங்கள். ஒரு வாரத்திற்குள் அவன் குணமடைவான். கடவுளை நம்பு. இது மசூதியல்ல. த்வாரமாகாயி, இவ்விடத்தில் காலடி வைப்பவன் துரிதமாக உடல் நலத்தையும், மகிழ்ச்சியையும் பெறுவான். அவனுடைய தொல்லைகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்துவிடும்" என்றார். பையன் பாபாவின் முன்னர் உட்காரவைக்கப்பட்டான். நலிவுற்ற பகுதியின் மீது பாபா தமது கையை வைத்துத் தடவி அவன் மீது தமது அன்புப் பார்வையைச் செலுத்தினார். பையன் மகிழ்ச்சியடைந்தான். உதியைத் தடவிய பின்னர் அவன் குணமடையத் தொடங்கினான். சில நாட்களுக்குப் பின்னர் பூரண ஆரோக்கியமானான். பின்னர் பாபா உதியினாலும், அருட்பார்வையினாலும் குணப்படுத்தியதற்கு பாபாவுக்கு நன்றி சொல்லிவிட்டுப் பெற்றோர் ஷீர்டியை விட்டுப் புறப்பட்டனர்.
இதையறிந்த அப்பையனின் மாமாவாகிய டாக்டர் ஆச்சரியமடைந்தார். தாம் ஏதோ விஷயமாக பம்பாய்க்குப் போகும் வழியில் ஷீர்டிக்குப் போக விரும்பினார். ஆனால் மாலேகாவனிலும், மன்மாடிலும் அவரிடம் சிலர் பாபாவுக்கு எதிராகப் பேசி அவரது செவிகளில் விஷத்தைப் பாய்ச்சினர். எனவே ஷீர்டிக்குத் தாம் விஜயம் செய்ய இருந்த எண்ணத்தை விட்டுவிட்டு பம்பாய்க்கு நேரடியாகச் சென்றுவிட்டார். தமது விடுமுறையின் மீதமுள்ள நாட்களை அவர் அலிபாகில் கழிக்க விரும்பினார். ஆனால் பம்பாயில் இருந்தபோது மூன்று தொடர்ந்த இரவுகளிலும் "இன்னும் நீ என்னை நம்ப மறுக்கிறாயா?" என்ற ஒரு குரல் எழுந்தது.
பின்னர் டாக்டர் தமது மனதை மாற்றிக்கொண்டு ஷீர்டிக்குச் செல்லத் தீர்மானித்தார். பம்பாயில் ஒட்டு ஜூரம் வந்த ஒரு நோயாளியை அவர் கவனிக்க வேண்டியிருந்தது. அது விரைவில் குணமடையும் அறிகுறி எதையும் காணோம். எனவே தமது ஷீர்டி விஜயம் ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது என்று அவர் நினைத்தார். எனினும் தமது மனதில் ஒரு சிறிய பரீட்சை வைத்துக்கொண்டார்! நோயாளி இன்று குணமடைந்தால் நான் நாளை ஷீர்டி விஜயம் செய்வேன் என்று கூறிக்கொண்டார். ஆச்சர்யம் என்னவெனில் அவர் அத்தீர்மானம் எடுத்த அக்கணந்தொட்டே ஜூரம் நீங்கத் தொடங்கி உடல் சாதாரண நிலைக்கு வந்துவிட்டது.
பின்னர் தமது தீர்மானத்தின்படி அவர் ஷீர்டிக்குச் சென்றார். பாபாவின் தரிசனத்தைப் பெற்று அவரை வீழ்ந்துபணிந்தார். அவர் தமக்கு அடியவராகும் வண்ணம் பாபா அவருக்கு அத்தகைய அனுபவங்களை அளித்தார். அவர் அங்கு நான்கு நாட்கள் தங்கியிருந்தார். பாபாவின் உதி ஆசீர்வாதங்களுடன் வீட்டுக்குத் திரும்பினார். பதினைந்தே நாட்களுள் பீஜப்பூருக்கு உத்தியோக உயர்வில் மாற்றப்பட்டார். அவருடைய சகோதரி மகன் விஷயம் பாபாவைப் பார்ப்பதற்கு அவருக்கு ஒரு சந்தர்ப்பமளித்தது. இந்த விஷயம் ஞானியின் பாத கமலங்களின் மீது அசைக்க இயலாத பக்தியை அவரிடம் தோற்றுவிப்பதற்குக் காரணமாய் இருந்தது.
டாக்டர் பிள்ளை
டாக்டர் பிள்ளை என்பவர் பாபாவின் மிக நெருங்கிய பக்தர். பாபா அவரை மிகவும் விரும்பினார். எப்போதும் அவரை பாவ் — சகோதரன் — என்று அழைத்தார். பாபா அவருடன் அடிக்கடி பேசினார். எல்லா விஷயங்களிலும் அவரைக் கலந்தாலோசித்தார். அவர் எப்போதும் தமதருகில் இருக்கவும் விரும்பினார். இந்த பிள்ளை ஒருமுறை நரம்புச் சிலந்தி நோய் வந்து மிகவும் அவதியுற்றார். அவர் காகா சாஹேப் தீஷித்திடம், "இந்த வலி உயிர்வதையாகவும், தாங்க முடியாததாகவும் இருக்கிறது. அதைவிடச் சாவையே விரும்புகிறேன். முன் ஊழ்வினையால் இவ்வலி நேர்ந்தது என்பது எனக்குத் தெரியும். ஆனால் பாபாவிடம் சென்று வலியை நிறுத்தும்படியும், எனது முன் ஊழ்வினையை வரப்போகும் பத்து பிறப்புக்களுக்கும் மாற்றும்படியும் கூறுங்கள்" என்றார். தீஷித் பாபாவிடம் சென்று அவரின் வேண்டுகோளைத் தெரிவித்தார். பாபா அவரது வேண்டுகோளைக் கேட்டு மனமிரங்கி தீஷித்திடம் "பயப்படாதிருக்கும்படி அவரிடம் கூறுங்கள். ஏன் அவர் பத்து ஜன்மங்கள் கஷ்டப்படவேண்டும். பத்தே நாட்களில் அவர் தொல்லைகளையும், முன்னைய ஊழ்வினைகளையும் உழைத்து நிறைவேற்ற முடியும். அவருக்கு இகபர நலன்களை அளிக்க நான் இவ்விடத்தில் இருக்கும்போது அவர் ஏன் சாவதற்கு வேண்டிக்கொள்ள வேண்டும்?! யார் முதுகிலாவது அவரை இவ்விடம் கொண்டுவாருங்கள். நாம் வேலை செய்து அவர்தம் தொல்லைகளை அடியோடு களைந்துவிடலாம்" என்றார்.
டாக்டர் அந்நிலையில் கொண்டுவரப்பட்டார். பாபாவின் வலப்புறத்தில் ஃபக்கிர் பாபா எப்போதும் அமரும் இடத்தில் அமரச் செயவிக்கப்பட்டார். பாபா தமது திண்டையே அவருக்கு அளித்து, "இங்கேயே அமைதியாக படுத்து ஆசுவாசப்படுத்திக்கொள். உண்மையான சிகிச்சை யாதெனில் முன் வினைகளின் பலனை அனுபவித்துத் தீர்ப்பதேயாம். நமது கர்மங்களின் விளைவே இன்ப-துன்பங்கள். எனவே, உனக்கு நேரிடும் அனைத்தையும் பொறுத்துக்கொள். அல்லாவே தீர்ப்பவர். காப்பவர். அவரையே எப்போதும் நினை. அவர் உன்னைக் கவனித்துக்கொள்வார். உனது உடலால், உள்ளத்தால், செல்வத்தால், வாக்கால் அவரைச் சரணடை. அதாவது முழுவதுமாக, பின்னர் அவர் என்ன செய்கிறார் என்பதைக் கவனி!" என்றார். நானா சாஹேப் ஒரு பாண்டேஜ் போட்டிருப்பதாகவும், ஆயினும் அவர் எவ்வித நிவாரணத்தையும் உணரவில்லை என்றும் டாக்டர் பிள்ளை பதில் கூறினார். "நானா ஒரு மடையன்" என்றார் பாபா. "பாண்டேஜை எடுத்துவிடு. இல்லாவிடில் செத்துவிடுவாய். இப்போது ஒரு காக்கை வந்து உன்னைக் கொத்தும். அதன்பின் நீ குணமடைவாய்" என்றார்.
இவ்வுரையாடல் நிகழ்ந்து கொண்டிருக்கும்போது எப்போதும் விளக்குகளை ஒழுங்குபடுத்தி மசூதியைச் சுத்தப்படுத்தும் அப்துல் என்பவர் வந்தார். அவர் தனது சீர்செய்யும் வேலையை கவனித்துக்கொண்டிருக்கையில் தற்செயலாக அவரது பாதம் டாக்டர் பிள்ளையின் நீட்டப்பட்ட கால்களின்மீது பட்டுவிட்டது.— அதாவது மிதித்துவிட்டார் — கால் ஏற்கனவே வீங்கியிருந்தது. அப்துலின் கால்வேறு மிதித்துவிட்டதால் ஏழு சிலந்திப் புழுக்களும் வெளியே தள்ளப்பட்டன. வலி தாங்க முடியாமல் டாக்டர் பிள்ளை பெருங்கூச்சலில் அலறினார். சில சமயத்தில் அவர் அமைதியடைந்து மாறிமாறிப் பாடவும், அழவும் தொடங்கினார். பாபா அப்போது, "பார், நமது சகோதரன் இப்போது சௌக்கியமாகிப் பாடிக்கொண்டிருக்கிறார்!" என்றார். அப்போது பிள்ளை "காக்கை எப்போது வரும்? கொத்தும்" என்று கேட்டார். பாபா "காக்கையை நீ காணவில்லையா? அவன் மீண்டும் வரமாட்டான். அப்துல்தான் காக்கை என்றார். இப்போது வாதாவுக்குப் போய் ஓய்வெடுத்துக்கொள், விரைவில் நீ குணமடைவாய்" என்றார்.
உதியைத் தடவியும் அதைத் தண்ணீருடன் உட்கொண்டும் வேறு எவ்வித சிகிச்சையும், மருந்தும் இல்லாமலேயே பாபா முன்னரே கூறியபடி பத்தே நாட்களில் வியாதி பூரண குணமாக்கப்பட்டது.
ஷாமாவின் மைத்துனி
ஷாமாவின் தம்பியான பாபாஜி ஸாவ்லிவிஹீர் கிராமத்துக்கு அருகில் தங்கியிருந்தார். ஒருமுறை அவர் மனைவி கட்டிகளுள்ள பிளேக் வியாதியால் தாக்கப்பட்டாள். அவளுக்கு அதிகமான ஜூரமும், அடிவயிற்றில் இரு கட்டிகளும் ஏற்பட்டன. பாபாஜி ஷீர்டிக்கு ஷாமாவிடம் ஓடிவந்து உதவிசெய்யும்படி கூறினார். ஷாமா பீதி அடைந்தார். ஆனால் தமது வழக்கப்படி பாபாவிடம் சென்று அவர் திருமுன் வீழ்ந்துபணிந்து அவருடைய உதவியைக் கோரி வியாதியைக் குணமாக்கும்படி கேட்டுக்கொண்டார். தன் தம்பியின் வீட்டிற்குப் போகவும் அவருடைய உத்தரவை வேண்டி நின்றார். பாபா "அங்கே இந்தப் பின்னிரவு நேரத்தில் செல்லவேண்டாம். அவளுக்கு உதியை அனுப்புக. ஜூரத்தைப் பற்றியும், கட்டியைப் பற்றியும், ஏன் கவலைப்பட வேண்டும்? கடவுளே நமக்குத் தந்தையும், எஜமானருமாவார். எளிதில் அவள் குணமடைவாள். இப்போது போகாதே. நாளை காலையில் போய் உடனே திரும்பிவிடு" என்றார்.
பாபாவின் உதியில் ஷாமாவுக்குப் பூரண நம்பிக்கை உண்டு. அது பாபாஜியிடம் அனுப்பப்பட்டது. கட்டிகளின் மீது அது தடவப்பட்டது. சிறிது தண்ணீரில் கரைக்கப்பட்டு குடிக்கக்கொடுக்கப்பட்டது. அதை உட்கொண்டதுதான் தாமதம், பெருமளவில் வேர்த்துக்கொட்டி ஜூரம் விட்டது. நோயாளிக்கு நல்ல தூக்கம் கிடைத்தது. அடுத்தநாள் காலை பாபாஜி தமது மனைவியின் உடல்நிலை தேறிவிட்டதையும், ஜூரம், கட்டிகள் நீங்கி புதுவலுவூட்டப் பெற்றதையும் கண்டு அதிசயப்பட்டார். ஷாமா அவ்விடத்திற்கு அடுத்தநாள் சென்றபோது அப்பெண்மணி அடுப்பருகில் அமர்ந்து தேநீர் தயாரித்துக்கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். தம்பியைக் கேட்டதும் பாபாவின் உதி அவளை முழுவதுமாக ஒரே இரவில் குணமாக்கிவிட்டது என்று கூறினார். "காலையில் சென்று உடனே திரும்பு" என்னும் பாபாவின் மொழிகளிலுள்ள குறிப்பு நுட்பத்தை அப்போது ஷாமா புரிந்து கொண்டார்.
தேநீர் உட்கொண்டதும் ஷாமா திரும்பினார். பாபாவை வணங்கிய பின், "தேவா! தங்களது திருவிளையாடல்தான் என்ன? தாங்கள் முதலில் புயலை எழுப்பி எங்களை நிலைகுலையச் செய்கிறீர்கள். பின்னர் அதை அமைதிப்படுத்தி ஆசுவாசப்படுத்துகிறீர்கள்" என்றார். பாபா "நடவடிக்கைகளின் வழி விளங்காப் புதிர்நிலையாக உள்ளது. நான் எதையும் செய்யவில்லையாயினும், ஊழ்வினையின் காரணமாக நிகழும் செயல்களுக்கெல்லாம் அவர்கள் என்னைப் பொறுப்பாளியாக்குகிறார்கள். நான் அவர்களின் சாட்சி மாத்திரமே. கடவுள் ஒருவரே ஒரே செயலாளர். அகத்தூண்டுவிப்பாளர். மேலும் அவர் மிகவும் கருணையுள்ளவர். நான் கடவுளோ, பரமாத்மாவோ அல்ல. அவரின் பணிவுள்ள ஒரு வேலைக்காரனும் அவரை அடிக்கடி நினைவில் இருத்திக்கொள்பவனும் மட்டுமே. எவனொருவன் தனது அஹங்காரத்தை ஒதுக்கித்தள்ளி அவருக்கு நன்றி செலுத்தி அவரை முழுமையாக நம்புகிறானோ அவனது பந்தங்கள் அறுபட்டுப் போகின்றன. அவன் முக்தியடைகிறான்" என்றார்.
ஈரானியப் பெண்
ஒரு ஈரானிய கனவானுடைய அனுபவத்தை இப்போது படியுங்கள். அவரது சிறு மகளுக்கு ஒவ்வொரு மணிக்கும் வலிப்பு வந்தது. அப்போது அவள் பேசும் சக்தியை இழந்தாள். அங்கங்கள் குறுகி உணர்வின்றிக் கீழே சாய்ந்தாள். எந்த சிகிச்சையும் அவளுக்கு எவ்வித குணத்தையும் அளிக்கவில்லை.
பாபாவின் உதியைச் சில நண்பர்கள் அவளது தந்தைக்குச் சிபாரிசுசெய்து அதை பம்பாயில் விலேபார்லேயில் உள்ள காகா சாஹேப் தீஷித்திடம் இருந்து பெறும்படி கூறினார்கள். பின்னர் ஈரானிய கனவான் உதியைப்பெற்றுத் தினந்தோறும் அதை நீரில் கலந்து தன் மகளுக்குக் கொடுத்தார். ஆரம்பத்தில் மணிக்கு ஒருமுறை வந்துகொண்டிருந்த வலிப்பு, ஏழு மணிக்கு ஒருமுறை வரத்தொடங்கியது. அதற்குச் சில தினங்களுக்குப் பின் அவள் முழுமையும் குணமடைந்தாள்.
ஹர்தா கனவான்
ஹர்தாவைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தமது மூத்திரப் பையிலுள்ள கல் ஒன்றால் கஷ்டப்பட்டார். அத்தகைய கற்களெல்லாம் பொதுவாக ரணசிகிச்சை மூலமாகவே நீக்கப்படுகின்றன. மக்கள் அவரையும் ஒரு அறுவை சிகிச்சை செய்துகொள்ளும்படி கூறினர். அவர் முதுமையும், தளர்ச்சியும் உடையவராயிருந்தார். அவருக்கு மனோதிடமும் தேவையாயிருந்தது. அறுவை சிகிச்சைக்குத் தன்னை உட்படுத்திக்கொள்வதை அவரால் நினைக்க இயலவில்லை. அவரது கஷ்டம் மற்றொரு வகையில் தீர இருந்தது.
அந்த நகரத்தின் இனாம்தார் அந்நேரத்தில் அவ்விடத்துக்கு வரும்படியாக நிகழ்ந்தது. அவர் பாபாவின் அடியவர்களில் ஒருவர். எப்போதும் தம்மிடம் உதி கையிருப்பை வைத்திருந்தார். சிலரின் சிபாரிசின் பேரில் அம்முதியவரின் மகன் உதியை சிறிது அவரிடமிருந்து பெற்று தண்ணீரில் அதைக் கலக்கி தனது கிழத்தந்தைக்கு உட்கொள்ளக் கொடுத்தான். ஐந்தே நிமிடத்திற்குள் உதி உடம்பில் சார்ந்து, கல் கரைந்து சிறுநீர் வழியாக வெளிவந்துவிட்டது. முதியவரும் விரைவில் குணம் அடைந்தார்.
பம்பாய் பெண்மணி
பம்பாயில், காயஸ்த பிரபு ஜாதியைச் சேர்ந்த ஒரு பெண்மணி பிரசவத்தின்போதேல்லாம் கடும் வேதனையடைந்தாள். ஒவ்வொருமுறை தான் கர்ப்பமானதும் என்ன செய்வதென்று தெரியாமல் அவள் பீதியடைந்தாள். பாபாவின் ஒரு பக்தரான கல்யாணைச் சேர்ந்த ராமமாருதி என்பவர் சுகப்பிரசவத்துக்காக அவளை ஷீர்டிக்கு அழைத்துச் செல்லும்படி அவளது கணவனுக்கு அறிவுரைத்தார். மீண்டும் அவள் கருவுற்றபோது கணவனும் மனிவியும் ஷீர்டிக்குச் சென்று அங்கு சில மாதங்கள் தங்கி பாபாவை வணங்கி அவர்தம் கூட்டுறவால் ஆய பலன்களையெல்லாம் அடைந்தனர்.
சிலநாட்களுக்குப்பின் பிரசவ நேரம் வந்தது. வழக்கம்போல் கருப்பையிலிருந்து வரும் வழியில் தடங்கல் ஏற்பட்டது. பிரசவ வேதனையை அவள் அனுபவித்தாள். என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆனால் பாபாவை நோக்கி நிவாரணத்திற்குப் பிரார்த்தனை செய்தாள். இத்தருணத்தில் பக்கத்தில் இருந்த ஒரு பெண்மணி வந்து சேர்ந்தாள். பாபாவைத் தொழுது பிரார்த்தனை செய்தபின் உதிக் கலவையை பருகுவதற்கு அவளிடம் கொடுத்தாள். ஐந்தே நிமிடங்களில் அப்பெண் பத்திரமாகவும், வலியேதுமின்றியும் பிரசவித்தாள்.
பிறந்த குழந்தை அதன் தலைவிதிப்படி இறந்தே பிறந்தது. ஆனால் தாயோ கவலையினின்றும், வலியினின்றும் நீங்கியவளாய் பத்திரமான பிரசவத்துக்காக பாபாவுக்கு நன்றி செலுத்தி எப்போதும் அவர்பால் நன்றியுள்ளவளாய் இருந்தாள்.
ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
ஏதுமில்லை எனக் கண்டுணர்தல்
• காகா மஹாஜனியின் நண்பரும்,
எஜமானரும்
• பாந்த்ராகாரரின் தூக்கமின்மை வியாதி
• பாலாஜி பாடீல் நெவாஸ்கர்
இந்த அத்தியாயமும் உதியின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் செய்திகளைத் தொடர்கிறது. பாபா சோதிக்கப்பட்டுப் போதாக்குறை ஏதுமில்லை எனக் கண்டுணரப்பட்ட இரண்டு நிகழ்சிகளையும் அது உரைக்கிறது. இந்நிகழ்சிகளை முதலில் காண்போம்.
முன்னுரை
ஆன்மிக விஷயங்களில் அல்லது முயற்சிகளில் சமயப்பிரிவு உணர்ச்சி நமது முன்னேற்றத்துக்குப் பெருந்தடையாய் இருக்கிறது. கடவுள் உருவமற்றவர் என நம்புவோர்கள், "கடவுள் உருவமுள்ளவர் என நம்புவது மாயத் தோற்றமே. ஞானிகளும் மனிதர்களே" என்று கூறுவது நமது காதில் விழுகிறது. பின்னர் ஏன் அவர்கள் ஞானிகளின்முன் தலைவணங்கி தஷிணை கொடுக்கிறார்கள்? இதர சமயப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் ஆட்சேபணைகள் எழுப்பி தங்களது சத்குருக்களை விட்டுவிட்டு, மற்ற ஞானிகள்முன் தலைவணங்கி ஏன் தங்கள் உறுதியான கடப்பாட்டினைச் செலுத்தவேண்டும்?" என்று கூறுகின்றனர். முன்னால் இதைப்போன்ற ஆட்சேபணைகள் சாயிபாபாவைப் பற்றியும் சொல்லப்பட்டன.
இப்போதும்கூட அவைகள் செவியில் விழுகின்றன. சிலர் தாங்கள் ஷீர்டிக்குச் சென்றபோது பாபா அவர்களிடம் தஷிணை கேட்டதாகவும், இம்முறையில் ஞானிகள் பணம் சேர்ப்பது நல்லதா என்றும் இம்மாதிரி அவர்கள் செயல் புரிவார்களாயின் அவர்கள் ஞானம் எல்லாம் எங்கே போயிற்று என்றும் வினவினர். ஆனால் இம்மாதிரி ஏளனம் உரைக்க ஷீர்டிக்குச் சென்றவர்களெல்லாம் அங்கு பிரார்த்தனைக்குத் தங்கிவிட்டனர். அத்தகைய இரண்டு விஷயங்கள் கீழே தரப்படுகின்றன.
காகா மகாஜனியின் நண்பர்
காகா மகாஜனியின் நண்பரொருவர் கடவுளை உருவமற்ற நிலையில் வழிபடுபவர். உருவ ஆராதனைக்கு எதிர்ப்பாளர். வேடிக்கையாக அவர் ஷீர்டிக்கு காகா மகாஜனியுடன் இரண்டு நிபந்தனைகளின் பேரில் வந்தார். அவையாவன தாம் பாபாஜியின்முன் பணியவோ, தஷிணை கேட்டால் கொடுக்கவோ இயலாது. காகா இந்த நிபந்தனைகளுக்கு ஒத்துக்கொண்டார். அவ்விருவரும் ஒரு சனிக்கிழமை இரவு பம்பாயை விட்டுப் புறப்பட்டு ஷீர்டிக்கு அடுத்தநாள் சென்றனர்.
மசூதிப்படிகளில் அவர்கள் காலடி எடுத்து வைத்தவுடனேயே பாபா அந்த நண்பரைத் தூரத்திலேயே பார்த்துக் கீழ்கண்ட இனிமையான சொற்களால் அழைத்தார்: "காம் யாவேன் ஜி" — ஏன் வந்தீர் ஐயா! — இச்சொற்களை அவர் உதிர்த்த குரல் வெகுபுதிய விதமாக இருந்தது. அந்நண்பனின் தகப்பனார் குரல் போலவே அச்சாக இருந்தது. அது மறைந்த தனது தந்தையைப்பற்றி அவருக்கு நினைவூட்டி சந்தோஷத்தால் புல்லரிப்பை ஏற்படுத்தியது. அவரது குரலுக்குத்தான் எத்தகைய வியத்தகு சக்தி. ஆச்சரியப்பட்டு "இது எனது தந்தையின் குரல்தான் என்பதில் ஐயமில்லை" என்று கூறிவிட்டு உடனே மேலே சென்று பாபாவின் பாதங்களில் தனது தலையை வைத்து வணங்கினார்.
பின்னர் பாபா இரண்டுமுறை தஷிணை கேட்டார். காலை ஒருமுறையும், அவர்கள் விடைபெறும்போது மாலை ஒருமுறையும். ஆனால் அதை காகாவிடமிருந்து மட்டுமே கேட்டார். அவரது நண்பரைக் கேட்கவில்லை. நண்பர் காகாவிடம் கிசுகிசுத்தார். "இருமுறை பாபா உம்மிடமிருந்து தஷிணை கேட்டார். நான் உம்முடனே இருந்தும் அவர் ஏன் என்னைப் புறக்கணிக்க வேண்டும்?" என்றார். அதற்கு காகா "பாபாவையே கேளும்" என்றார். பாபா, காகாவிடம் அவர் நண்பர் என்ன முணுமுணுக்கிறார் என்று கேட்டார். அப்போது அந்த நண்பரே தாம் ஏதும் தஷிணை கொடுக்கலாமா என்று கேட்டார். பாபாவும் "உமக்குக் கொடுக்கப் பிரியமில்லை எனவே உம்மைக் கேட்கவில்லை, கொடுக்க இப்போது பிரியப்பட்டால் கொடுக்கலாம்" என்று பதிலளித்தார்.
அவர் காகா அளித்த அதே தொகையான பதினேழு ரூபாயை தஷிணையாக அளித்தார். பின்னர் அவரிடம் பாபா பின்வரும் மொழிகளை உரைத்தார். "தேலியின் — கோட்டையின் சுவர் - வேற்றுமை உணர்வு — சுவற்றை இடித்தால் தான் நாம் ஒருவரை ஒருவர் முகத்திற்கு முகம் பார்க்கலாம், சந்திக்கலாம்". பின்னர் பாபா, அவர்கள் புறப்படுவதற்கு அனுமதியளித்தார். வானிலை மப்பாகவும், பயமுறுத்துவதாகவும் இருந்தபோதும், பாபா அவர்களுக்கு பத்திரமான பிரயாணத்திற்கு உறுதி அளித்தார். இருவரும் சௌக்கியமாக பம்பாய் வந்தடைந்தனர்.
அவர்கள் வீட்டுக்குச்சென்று வீட்டின் கதவு, ஜன்னல்களைத் திறந்தபோது இரண்டு பக்ஷிகள் தரையில் விழுந்து இறந்து கிடப்பதையும், ஒன்று அப்போதுதான் ஜன்னல் வழியே பறந்து சென்றதையும் கண்டனர். ஜன்னலைத் திறந்து வைத்துவிட்டுப் போயிருந்தால் இரண்டு பக்ஷிகளும் காப்பாற்றப்பட்டிருக்கும். ஆனால் அவைகள் தங்களது விதியை எய்தின என்றும், மூன்றாவது பக்ஷியைக் காக்கவே பாபா தம்மை அனுப்பியிருப்பதாகவும் அவர் நினைத்தார்.
காகா மஹாஜனியின் எஜமானர்
டக்கர் தரம்ஸி ஜேடாபாஜி என்ற பம்பாய் வக்கீலின் கம்பெனியில் காகா மேலாளராகப் பணியாற்றி வந்தார். முதலாளியும், மேலாளரும் நெருக்கமான பழக்கத்தில் இருந்தனர். காகா அடிக்கடி ஷீர்டி போய்க்கொண்டிருப்பதும் அங்கு சில நாட்கள் தங்குவதும் பாபா அனுமதியளித்ததும், திரும்புவதும் டக்கருக்குத் தெரியும். வேடிக்கையாகவும் பாபாவைச் சோதிப்பதற்காகவுமே, டக்கர் காகாவுடன் ஷிம்கா விடுமுறையின்போது ஷீர்டி போக முடிவுசெய்தார். காகா உடனே திரும்புவது நிச்சயமில்லையாதலால் அவர் தன்னுடன் துணையாக வேறொருவரையும் அழைத்துக்கொண்டார். மூவரும் புறப்பட்டனர். காகா இரண்டு சேர் காய்ந்த திராட்சையை பாபாவுக்கு அன்பளிப்பாக வாங்கினார்.
அவர்கள் உரிய தருணத்தில் ஷீர்டிக்குப் போய் மசூதிக்கு பாபாவின் தரிசனத்தைப் பெறுவதற்காகச் சென்றனர். பாபா சாஹேப் தர்கட் அங்கு இருந்தார். டக்கர் அவரை ஏன் அவ்விடம் வந்தாரென்று விசாரித்தார்.
தர்கட்: தரிசனத்துக்கு
டக்கர்: ஏதாவது அற்புதங்கள் இங்கு நிகழ்கின்றனவா?
தர்கட்: எனது நோக்கம் அதுவல்ல— அற்புதத்தைப் பார்த்தல் . ஆனால் பக்தர்களின் ஆர்வமிக்க பிரார்த்தனைகள் இவ்விடத்தில் திருப்திப்படுத்தப்படுகின்றன.
பின்னர் காகா பாபாவின்முன் விழுந்து நமஸ்கரித்து திராட்சையைச் சமர்ப்பித்தார். பாபா அவைகளை வினியோகிக்கக் கட்டளையிட்டார். டக்கருக்கும் சில கிடைத்தது. அவருக்குத் திராட்சை பிடிக்கவில்லை. மேலும் நன்றாகக் கழுவிச் சுத்தப்படுத்தாமல் அவைகளைச் சாப்பிடவேண்டாம் என்று டாக்டர்கள் அவருக்குக் கூறியிருந்தனர். எனவே அவர் திகைத்தார். அதை அவர் விரும்பவில்லை. ஒதுக்கித் தள்ளவும் முடியவில்லை. சம்பிரதாயத்துக்காக அவைகளை வாயிலிட்டுக்கொண்டார். ஆனால் விதைகளை என்ன செய்வதென்று தெரியவில்லை. மசூதித் தரையில் அவைகளைத் துப்ப அவரால் இயலவில்லை. எனவே அவரது விருப்பத்துக்கு மாறாக அவைகளைத் தனது சட்டைப் பையில் போட்டுக்கொண்டார்.
பாபா ஒரு ஞானியாயிருந்தால் திராட்சையின் மீது தமக்குள்ள வெறுப்பை அவர் எங்ஙனம் அறியாமலிருந்து அதை உண்ணச்சொல்லி அவரை வற்புறுத்த முடியும் என்று தன் மனதுக்குள் சொல்லிக்கொண்டார். இவ்வெண்ணம் அவர் மனதில் எழும்பியதும், பாபா அவருக்கு மீண்டும் சில திராட்சைகளைக் கொடுத்தார். அதை அவரால் உண்ண இயலாமல் கைகளில் வைத்துக்கொண்டிருந்தார். அப்போது பாபா அதை உண்ணும்படி அவரைக் கேட்டார். அவரும் கீழ்ப்படிந்தார். அவரது ஆச்சரியத்திற்கேற்ப அவைகளெல்லாம் விதையற்ற திரட்சைகளாயிருந்தன. அற்புதங்களை அவர் காண விரும்பினார். இதோ ஒன்று! பாபா, தனது எண்ணத்தை அறிந்து அவரது விருப்பத்திற்கேற்ப விதையுள்ள திராட்சைகளை விதையற்றவைகளாக மாற்றிவிட்டார் என்பதை அவர் அறிவார்.
எத்தகைய வியத்தகு சக்தி! மேலும் சோதிக்க விரும்பி பக்கத்திலிருந்து தர்கட்டை அவர் எவ்வகைத் திராட்சை வைத்திருக்கிறார் எனக் கேட்டார். அவர் "விதையுள்ள திராட்சை" என்றார். டக்கருக்கு இதைக்கேட்க இன்னும் அதிக வியப்பாயிற்று. தமது வளர்ந்துவரும் நம்பிக்கையை உறுதிப்படுத்த பாபா ஒரு உண்மையான ஞானியானால் திராட்சை காகாவுக்கு முதலில் கொடுக்கப்பட வேண்டுமென நினைத்தார். இவ்வெண்ணத்தையும் படித்தறிந்த பாபா, காகாவிலிருந்து தொடங்கி வினியோகம் செய்யப்படவேண்டுமென ஆணையிட்டார். இந்த நிரூபணங்களெல்லாம் தக்கருக்குப் போதுமானவைகளாய் இருந்தன.
பின்னர் ஷாமா, டக்கரை பாபாவிடம் காகாவின் எஜமானர் என்று அறிமுகப்படுத்தினார்.
பாபா: அவரது எஜமானராக இவர் எங்ஙனம் இருக்க முடியும்? அவருக்கு முழுமையும் வேறொரு எஜமானர் இருக்கிறார்.
காகா இப்பதிலைப் பாராட்டினார். தனது தீர்மானத்தை மறந்துவிட்டு டக்கர் பாபாவை வணங்கிய பின்னர் வாதாவுக்குத் திரும்பினார்.
மத்தியான ஆரத்தி முடிந்ததும் அவர்களெல்லாம் புறப்படுவதற்கு பாபாவின் அனுமதி பெறுவதற்காக மசூதிக்குச் சென்றனர். ஷாமா அவர்களுக்காகப் பேசினார். பின்னர் பாபா இவ்விதமாக உரைத்தார்.
"நிலையற்ற புத்தியுள்ள ஒரு மனிதன் இருந்தான். அவன் செல்வம், ஆரோக்கியம் முதலியை வாய்க்கப் பெற்றிருந்தான். மனோ வேதனைகளிலிருந்து விடுபட்டவனாக இருந்தான். எனினும் தேவையற்ற கவலைகளையும், பாரங்களையும் தன்மீது போட்டுக்கொண்டு, மன அமைதியை இழந்து இங்குமங்கும் சுற்றித் திரிந்தான். சில சமயம் பாரத்தையெல்லாம் இறக்கிவிட்டும், சில சமயம் அவற்றை மீண்டும் சுமந்தவனாயும் இருந்தான். அவனது மனம் ஒரு உறுதிப்பாட்டையே அறிந்ததில்லை. அவனது நிலைகண்டு நான் இரக்கம் கொண்டேன். அவனிடம் "இப்போது நீ விரும்பும் ஏதாவது ஒரு இடத்தின் — குறிக்கோள் — மீது உனது நம்பிக்கையைத் தயவுசெய்து வைப்பாயாக, ஏன் இவ்வாறு சுற்ற வேண்டும்? அமைதியாக ஏதாவதொரு இடத்தைப் பற்றிக்கொள்" என்று கூறினேன்.
உடனே டக்கர் அப்பொருத்தமான வர்ணனை தமக்குரியதே என அறிந்தார். காக்காவும் தம்முடன் திரும்பவேண்டுமென அவர் நினைத்தார். காகா அவ்வளவு சீக்கிரம் அனுமதிக்கப்படுவார் என்று ஒருவரும் எண்ணவில்லை. பாபா அவரின் இந்த எண்ணத்தையும் படித்தறிந்து காகாவை அவருடைய எஜமானருடனேயே திரும்ப அனுமதியளித்தார். மற்றொருவரின் மனதில் இருக்கும் எண்ணத்தையறியும் பாபாவின் திறமைக்கு மேலுமொரு நிரூபணம் அவருக்குக் கிடைத்தது.
பின்னர் பாபா, காகாவிடமிருந்து ரூ.15 தஷிணையாகக் கேட்டுப்பெற்றார். அவர் காகாவிடம் பின்வருமாறு கூறினார். "எவரிடமிருந்தாவது ஒரு ரூபாய் தஷிணையாகப் பெற்றுக்கொண்டேன் என்றால் அவர்களுக்குப் பத்து மடங்காகத் திருப்பித்தர வேண்டியிருக்கிறது. நான் ஒருபோதும் எதையும் விலை இல்லாமல் இலவசமாகப் பெறுவது கிடையாது. சீர்தூக்கிப் பாராது நான் யாரிடமிருந்தும் தஷிணை பெறுவதில்லை.
யாரை பக்கிரி — என் குரு — சுட்டிக் காண்பிக்கிறாரோ அவரிடமிருந்து மட்டுமே நான் கேட்கிறேன். யாரேனும் பக்கிரிக்கு முன்பே கடன்பட்டிருந்தால் அவரிடமிருந்து பணம் வசூலிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் கணிசமான அறுவடை செய்வதற்கே அவர்கள் இப்போது கொடுப்பதன் மூலம் விதைக்கிறார்கள். தர்மத்தைச் செயல்படுத்துவதில் செல்வம் ஒருவழியாக இருக்கவேண்டும். இது சுய இன்பத்துக்காகப் பயன்படுத்தப்பட்டால் அது வீணாக்கப்படுகிறது.
நீ அதை ஏற்கனவே கொடுத்திருந்தாலொழிய தற்போது அதைப் பெறமுடியாது. எனவே பெறுவதற்கு மிகச்சிறந்த வழி கொடுத்தலேயாம். தஷிணை கொடுத்தல் வைராக்கியத்தை — பற்றின்மை — வளர்க்கிறது. அதன் மூலம் பக்தி, ஞானம் இவற்றை விருத்தி செய்கிறது. ஒன்றைக் கொடுத்துப் பத்தாகத் திரும்பப் பெறுங்கள்".
இம்மொழிகளைக் கேட்டுத் தமது தீர்மானத்தை மறந்தவராய் டக்கர் தாமாகவே ரூ.15ஐ பாபாவின் கைகளில் கொடுத்தார். அவரது எல்லா ஐயங்களும் தீர்க்கப்பட்டு பலவற்றைக் கற்றுக்கொண்டார். ஆதலால் ஷீர்டிக்குத் தாம் வந்தது நன்மையானது என்று அவர் எண்ணினார்.
இத்தகைய விஷயங்களைக் கையாளுவதில் பாபாவின் திறமை தனித்தன்மை வாய்ந்தது. இவைகள் யாவற்றையும் அவர் செய்தபோதும் மொத்தத்தில் இவைகளின் மேல் சாராதவராகவே இருந்தார். யாராவது அவரை வணங்குவதோ,அல்லது வணங்காமலிருப்பதோ, அவருக்குத் தஷிணை கொடுப்பதோ, கொடுக்காமல் இருப்பதோ, இவைகள் எல்லாம் அவருக்கு ஒன்றே. அவர் ஒருவரையும் அவமதிக்கவில்லை. தாம் வணங்கப்படுவதால் அவர் மகிழ்ச்சியடைந்ததில்லை. அன்றி தாம் மதிக்கப்படாததால் அவர் துன்புற்றதுமில்லை. மாறுபட்ட இருமைகளை — சுகம், துக்கம் போன்றவற்றை — அவர் கடந்து நின்றார்.
தூக்கமின்மை வியாதி
பாந்த்ராவில் காயஸ்த பிரபு ஜாதியைச் சேர்ந்த ஒருவர் நெடுநாள் தூக்கமின்மை நோயால் அல்லலுற்றார். அவர் படுக்கையில் படுத்தவுடனே அவரது இறந்துபோன தந்தையார் கனவில் தோன்றி அவரைக் கடுமையாகத் திட்டினார். இது அவரது தூக்கத்தைக் கலைத்து இரவு முழுவதும் அவரை இருப்புக்கொள்ளாமல் செய்தது. ஒவ்வொருநாள் இரவும் இது நடந்தது. அம்மனிதருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. ஒருநாள் பாபாவின் பக்தரொருவரை அவர் இவ்விஷயத்தில் கலந்தாலோசித்தார். பிழையாத நிவாரண சஞ்சீவினியாக பாபாவின் உதி ஒன்றையே அவர் அறிவார்.
அவருக்குச் சிறிது உதி கொடுத்து அவர் படுக்கைக்குப் போகும்முன்னர், அதைச் சிறிது நெற்றியிலிட்டுக் கொள்ளும்படியும், அவ்வுதிப் பொட்டலத்தை தலையணைக்கடியில் வைத்துக் கொள்ளும்படியும் கூறினார். இந்த சிகிச்சையை அவர் முயன்று பார்த்தார். அவரது பெரும் வியப்புக்கும், மகிழ்வுக்கும் ஏற்ப அவருக்கு நல்ல உறக்கம் ஏற்பட்டது. எவ்விதத் தொந்தரவும் இல்லை. இந்தச் சிகிச்சையையே அவர் தொடர்ந்து பின்பற்றி எப்போதும் சாயியையே நினைவு கூர்ந்தார். பின்னர் சாயிபாபாவின் படம் ஒன்றை பெற்று தனது தலையணைக்கருகில் அதைத் தொங்கவிட்டு அதனை தினந்தோறும் வழிபடத் தொடங்கி வியாழக்கிழமைகளில் பூமாலை, நைவேத்தியம் முதலியவற்றைச் சமர்ப்பித்தார். பின்னர் அவர் சௌக்கியமாகி முந்தைய தொந்தரவையே முழுவதும் மறந்துவிட்டார்.
பாலாஜி பாடீல் நெவாஸ்கர்
இம்மனிதர் பாபாவின் ஒரு பெரும் பக்தர். மிகமிகச் சிறப்பான பற்றற்ற பணியைப் பாபாவுக்கு அவர் செய்தார். ஒவ்வொரு நாளும் ஷீர்டியில் பாபா தமது தினசரி நியமமாக நடந்துவரும் தெருக்கள், பாதைகள் எல்லாவற்றையும் பெருக்கி சுத்தமாக்கினார். அவருக்குப் பின்னர், இப்பணியானது ராதாகிருஷ்ணமாயி என்ற பக்த மாதுவாலும், அதற்குப்பின் அப்துலாலும் அதே அளவு சிறப்புடன் செய்யப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் பாலாஜி கோதுமை அறுவடை செய்தபோது அனைத்தையும் பாபாவுக்குக் கொண்டுவந்து சமர்ப்பித்துவிடுவார். மீதமாக பாபா எதைக் கொடுத்தாரோ அதைப் பெற்றுக்கொண்டு தமது குடும்ப சம்ரக்ஷணத்தை செய்தார். இந்நடைமுறையானது அவரால் பல ஆண்டுகள் செய்யப்பட்டு அவருக்குப்பின் அவரது மகனாலும் செய்யப்பட்டது.
உதியின் சக்தியும் செயல் திறமையும்
ஒருமுறை பாலாஜியின் திவசத்தின்போது சில விருந்தினர்கள் அழைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு சமைக்கப்பட்டது. ஆனால் சாப்பாட்டு நேரத்தில் அழைக்கப்பட்டதைப் போல் மூன்று மடங்குபேர் வந்துவிட்டனர். பாலாஜியின் மனைவி திகைத்துப் போய்விட்டாள். குழுமியிருந்த மக்களுக்கு உணவு பற்றாது என்றும், அது பற்றாது போகுமானால் குடும்பத்தின் கௌரவம் பாதிக்கப்படும் என்றும் அவள் நினைத்தாள்.
அவளது மாமியார் "பயப்படாதே, அது நம்முடைய உணவல்ல, சாயியினுடையது. ஒவ்வொரு பாத்திரத்திலும் கொஞ்சம் உதியைப்போட்டு ஒரு துணியால் மூடி அதைத் திறக்காமலே அவர்களுக்குப் பரிமாறு! சாயி நம்மை இந்த அவமானத்திலிருந்து காப்பார்" என்று கூறித் தேற்றினாள். அவள் கூறியபடியே செய்தாள். தங்களது வியப்புக்கும், மகிழ்வுக்கும் ஏற்ப பரிமாறப்பட்ட உணவு எல்லோருக்கும் போதுமானதாக இருந்ததோடு மட்டுமல்லாமல் ஏராளமாக மீதமும் இருந்ததைக் கண்டார்கள். "ஒருவன் எவ்வளவு அதிகம் மனமார்ந்த அக்கறையுடன் உணர்கிறானோ அவ்வளவு அதிகமாக அவன் செயலுருவாக்கிக் காண்கிறான்" என்னும் மொழி இவ்விஷயத்தில் நிரூபணமாக்கப்பட்டது.**
** என்னுடைய நண்பரும் பாபாவின் பெரிய பக்தருமான இதைப்போன்ற ஒரு விஷயத்தை என்னிடம் அறிவித்தார். 1943ஆம் ஆண்டு மாசி மாதம், அஹமத்நகர் ஜில்லாவிலுள்ள கர்ஜத்தில் பூஜைத் திருவிழாவும், பொதுஜன விருந்தும் நடந்தது. பின்னைய நிகழ்ச்சிக்கு, விருந்துக்கு அழைக்கப்பட்டதைப் போல் ஐந்து மடங்குபேர் வந்துவிட்டனர். அவர்கள் அனைவருக்கும் உணவு அளிக்கப்பட்டது. பாபாவின் அருளால் அனைவரும் வியக்கும் வண்ணம் எவ்வித உணவுக்குறைவும் உணரப்படவில்லை.
சாயிபாபா நாகமாத் தோன்றுதல்
ஒருமுறை ஷீர்டியைச் சேர்ந்த ரகு பாடீல் என்பவர் நெவாசைச் சேர்ந்த பாலாஜி பாடீல் என்பாரிடம் சென்றார். அன்று மாலை மாட்டுத் தொழுவத்தில் ஒரு பாம்பு சீறிக்கொண்டு உள் நுழைவதைக் கண்டார். எல்லா மாடுகளும் பீதியடைந்து நகரத் தொடங்கின. வீட்டினரும் திகிலடைந்தனர். ஆனால் பாலாஜி தனது வீட்டில் சாயியே பாம்பாகத் தோன்றியிருக்கிறார் என எண்ணினார். துளிகூட பயப்படாமல் ஒரு கிண்ணத்தில் பாலை கொண்டுவந்து பாம்பின் முன்வைத்து, "பாபா! ஏன் சீறி சப்தப்படுத்துகிறீர்கள்? ஏன் எங்களைப் பயமுறுத்த விரும்புகிறீர்கள்? இந்தக் கிண்ணத்திலுள்ள பாலை அமைதியான மனதுடன் அருந்துங்கள்" என்று கூறிக்கொண்டே அதனருகில் குழப்பமுறாமல் அமர்ந்தார். மற்றவர்கள் பீதியடைந்தனர். என்ன செய்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. சிறிது நேரத்தில் பாம்பு தானாகவே மறைந்து போய்விட்டது. யாருக்கும் அது எங்கு சென்றதெனத் தெரியாது. மாட்டுத் தொழுவத்தில் தேடியும் அது காணப்படவில்லை.**
பாலாஜிக்கு இரண்டு மனைவிகளும், சில குழந்தைகளும் இருந்தனர். அவர்கள் சில சமயம் நெவாஸில் இருந்து பாபாவின் தரிசனத்துக்காக ஷீர்டிக்கு வருவர். அப்போது பாபா சேலையும் மற்ற உடைகளும் வாங்கி அவைகளைத் தமது ஆசியுடன் அவர்களுக்கு அளிப்பார்.
** கோயம்புத்தூரில் இதே மாதிரியாக 1943 தை 7ஆம் தேதி வியாழன் மாலை 3:30 மணிக்கு பாபா பாம்பாகத் தோன்றிய விவரம் சாயிசுதா சஞ்சிகையில் — தொகுப்பு 3, எண் 7&8, ஜனவரி 1943, பக்கம் 26 — பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. அங்கு அப்பாம்பு பஜனையைக் கேட்டது. மலரையும், பாலையும் ஏற்றுக்கொண்டது. ஆயிரக்கணக்கான மக்கள் தன்னைக் காணவும், புகைப்படம் எடுக்கவும் அனுமதித்தது. போட்டோ எடுப்பதற்காக பாபாவின் படம் அதன் அருகில் வைக்கப்பட்டது. படமும், பாம்பும் போட்டோவில் மிகச்சிறப்பாக பதிந்திருக்கிறது. விவரங்களுக்கும், போட்டோவுக்கும் வாசகர்கள் மேற்குறித்த சாயிசுதாவை காண்க.
ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
(2 ) திருமதி ஔரந்காபாத்கர்
ஆகியோரின் அற்புதக் கதைகள்
இந்த அத்தியாயம் கோவாவிலிருந்து வந்த இரண்டு கனவான்கள், சோலாபூரின் திருமதி ஔரந்காபாத்கர் ஆகியோரின் அற்புதக் கதைகளைப் பற்றிக்கூறுகிறது.
இரண்டு கோவா கனவான்கள்
ஒருமுறை சாயிபாபாவின் தரிசனத்தைப் பெறுவதற்காக கோவாவிலிருந்து இருவர் வந்து, அவர்முன் வீழ்ந்து பணிந்தனர்.
இருவரும் ஒன்றாக வந்தபோதும் அவர்களில் ஒருவரிடம் மட்டுமே, பாபா தஷிணையாக ரூ.15 கேட்டார். அதுவும் விருப்பமுடன் கொடுக்கப்பட்டது. மற்றொருவர் தாமாகவே முன்வந்து ரூ.35 அளித்தார். மற்றெல்லோரும் ஆச்சரியப்படும்படியாக பாபா அதைப் பெற்றுக்கொள்ளவில்லை. அங்கிருந்த ஷாமா பாபாவிடம், "என்ன பாபா! இருவரும் ஒன்றாக வந்தனர். ஒருவரின் தஷிணையை நீங்கள் கேட்டுப் பெறுகிறீர்கள். மற்றொன்றைத் தாமாகவே அளித்தபோதும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டீர்கள். ஏன் இந்த வேறுபாடு?" என்றார்.
அதற்கு பாபா, "ஷாமா உனக்கு ஒன்றுமே தெரியாது. நான் ஒருவரிடமிருந்தும் ஒன்றும் எடுத்துக்கொள்வதில்லை. இம்மசூதியின் ஆளும் தெய்வமான மசூதிமாயி குறிக்கப்பட்ட கடன் தொகையைக் கேட்டாள். அதை அவர் அளித்துக் கடனிலிருந்து விடுபடுகிறார். கவனிக்கும்படியாக எனக்கு எவ்வித வீடோ, சொத்தோ, குடும்பமோ இருக்கிறதா? எனக்கு எதுவுமே தேவையில்லை. எப்போதும் சுதந்திரமாகவே இருக்கிறேன். கடன், பகைமை, கொலை ஆகியவைகளுக்குப் பரிகாரம் தேடப்பட்டே ஆகவேண்டும். தப்ப வழியே இல்லை" என்று கூறிவிட்டுப் பின் தமக்கே உரித்தான பாணியில் பின்வருமாறு கூறத்தொடங்கினார்.
முதலில் அவர் எழையாயிருந்ததாகவும், அவருக்கு ஒரு வேலை கிடைத்தால் முதல் மாதச் சம்பளத்தை காணிக்கையாகச் செலுத்துவதாகவும் வேண்டிக்கொண்டார். மாதம் ரூ.15 சம்பளமுள்ள ஒரு வேலை அவருக்குக் கிடைத்தது. பின்னர் சம்பளம் படிப்படியாக உயர்ந்து ரூ.700ஐ அடைந்தது. ஆனால் அவரின் சுபிட்சத்தில் அவர் வேண்டிக்கொண்டதை முழுமையுமாக மறந்துவிட்டார். கர்மவினை அவரை இவ்விடம் தள்ளிவிட்டிருக்கிறது. அதனால் அத்தொகையை நான் அவரிடமிருந்து தஷிணையாகப் பெற்றேன்.
மற்றொரு கதை, கடற்கரை ஓரமாக நான் உலவித் திரிந்துகொண்டிருந்தபோது ஒரு பிரமாண்டமான மாளிகையை வந்தடைந்தேன். அதன் தாழ்வாரத்தில் அமர்ந்தேன். வீட்டுக்காரர் எனக்கு நல்ல வரவேற்ப்பளித்து, வயிறார உணவளித்தார். உறங்குவதற்காக அலமாரிக்கு அருகிலுள்ள தூய சுத்தமான இடத்தை எனக்குக் காண்பித்தார். அங்கு உறங்கினேன். நான் ஆழ்ந்த துயில் கொண்டிருக்கும்போது அம்மனிதன் சுவற்றைக் கன்னம் வைத்து உள்நுழைந்து என் பையிலிருந்த பணத்தையெல்லாம் கத்தரித்து எடுத்துக்கொண்டான். கண்விழித்தபோது எனது ரூ.30,000மும் திருடப்பட்டுவிட்டதை அறிந்தேன். பெரிதும் கவலையுற்று புலம்பிக்கொண்டிருந்தேன்.
பணம் கரன்ஸி நோட்டாக இருந்தது. அப்பிராமணன் அதைத் திருடிவிட்டான் என நான் நினைத்தேன். உணவிலும், பானத்திலும் எனது விருப்பத்தையெல்லாம் இழந்து அந்தத் தாழ்வாரத்திலேயே பதினைந்து நாட்கள் புலம்பி அழுதுகொண்டு உட்கார்ந்திருந்தேன். பதினைந்து நாட்கள் கழிந்ததும் வழிப்போக்கரான ஒரு பக்கிரி நான் அழுதுகொண்டிருப்பதைக் கண்டு எனது துன்பத்திற்கான காரணத்தை விசாரித்தார். நான் அவரிடம் எல்லாவற்றையும் கூறினேன். அதற்கு அவர் "நான் சொல்லுகிறபடி செய்தீரானால் உமக்குப் பணம் திரும்பக் கிடைக்கும்.
ஒரு பக்கிரியிடம் செல்லும். நான் அவரைப் பற்றிய விபரம் தருகிறேன். அவரிடம் உம்மை முழுவதும் சமர்ப்பித்துவிடும். அவர் உமது பணத்தை மீட்டுத் தருவார். இந்த இடைப்பட்ட வேளையில் பணம் திரும்பக் கிடைக்கும்வரை உமக்குப் பிடித்தமான உணவை விட்டுவிடவும்" என்றார். அப்பக்கிரியின் அறிவுரைப்படி நடந்து எனது பணத்தைத் திரும்பப்பெற்றேன். பின்னர் வாதாவி விட்டு நீங்கி கடற்கரையை அடைந்தேன். அங்கு ஒரு நீராவிக் கப்பல் நின்றுகொண்டிருந்தது. அதில் கூட்டமாக இருந்ததால் ஏற முடியவில்லை. ஆனால் அங்கிருந்த நல்ல குணமுடைய பியூன் ஒருவன் எனக்காகக் குறுக்கிட்டதால் அதிர்ஷ்டவசமாக உள்ளே ஏறினேன். கப்பல் என்னை அக்கரை கொண்டுசேர்த்தது. அங்கிருந்து ரயில் ஏறி மசூதிமாயிடம் — மசூதி தெய்வத்திடம் — வந்தேன்.
கதை முடிந்தது. பாபா ஷாமாவிடம் அவ்விருந்தாளிகளை அழைத்துச்சென்று அவர்களின் உணவுக்கு ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்கொண்டார். பின்னர் ஷாமா அவர்களை வீட்டிற்கு அழைத்துச்சென்று உணவளித்தார். உணவின்போது ஷாமா அவர்களிடம் பாபாவின் கதை விளங்காத புதிராக இருப்பதாகவும், ஏனெனில் அவர் கடற்கரைப் பக்கமே சென்றது கிடையாதென்றும், ரூ.30,000 போன்ற எவ்வித பணத்தையும் அவர் வைத்திருக்கவில்லையென்றும், பயணம் செய்ததேயில்லை, பணத்தைத் தொலைத்ததேயில்லை மீண்டும் அதைத் திரும்பப் பெற்றதேயில்லையென்றும் கூறி அதை அவர்கள் புரிந்துகொண்டு அதன் குறிப்பு நுட்பத்தை அறிந்துகொண்டார்களா என்று கேட்டார்.
விருந்தினர் ஆழ்ந்து மனமுருகி கண்ணீர் சிந்தினார். தொண்டை அடைக்கும் குரலில் அவர்கள், "பாபா நிறைபேரறிவுடையவர், எல்லையற்றவர், தன்நிகர் இல்லாத முழுமுதற்பொருள் — பரப்பிரம்மம் . அவர் உரைத்த கதை சரிநுட்பமாக எங்களது கதையேயாகும். அவர் பேசியது யாவும் எங்களைப் பொறுத்தவரை ஏற்கனவே நடந்துவிட்டன. இதையெல்லாம் அவர் எங்ஙனம் அறிந்தாரென்பது ஆச்சரியத்துள் எல்லாம் ஆச்சரியம்! எல்லாத் தகவல்களையும் நாங்கள் உணவுக்குப்பின் உரைக்கின்றோம்.
உணவுக்குப்பின் அவர்கள் வெற்றிலை போட்டுக்கொண்டிருக்கும்போது விருந்தினர் தங்கள் கதையைச் சொல்ல ஆரம்பித்தனர். அவர்களுள் ஒருவர் கூறுகிறார்.
மலைத்தொடரின் மீதுள்ள ஒரு கோடைவாசஸ்தலமே எனது சொந்த ஊர். ஒரு வேலைதேடிப் பணம் சம்பாதிக்கும்பொருட்டு கோவாவுக்குச் சென்றேன். தத்தர் தெய்வத்திடம் எனக்கு வேலை கிடைத்தால் முதல் மாத ஊதியத்தைச் சமப்பிப்பதாக வேண்டிக்கொண்டேன். அவரது அருளால் ரூ.15 சம்பளமுள்ள ஒரு வேலை கிடைத்தது. பாபா குறிப்பிட்டபடியே எனக்கு உத்தியோக உயர்வும் கிடைத்தது. எனது வேண்டுதலைப் பற்றியெல்லாம் அதன்பிறகு நிச்சயமாக மறந்தேவிட்டேன். இவ்வகையாக பாபா அதை நினைவுபடுத்தி ரூ.15 என்னிடமிருந்து மீட்டுப் பெற்றுக்கொண்டார். ஒருவர் நினைக்கும்படியாக அது தஷிணையன்று, பழைய கடன் ஒன்றை அடைத்தலும், நீண்ட நாள் மறந்துபோன வேண்டுதலை நிறைவேற்றுதலும் ஆகும்.
நீதி
உண்மையில் ஒருபோதும் பாபா எந்தப் பணத்தையும் யாசிக்கவில்லை. தமது அடியவர்களையும் யாசிக்க அனுமதிக்கவில்லை. ஆன்மிக முன்னேற்றத்துக்குப் பணத்தை ஒரு அபாயமாக, தடையாக அவர் கருதினார். தமது பக்தர்களை அதன் பிடியில் விழ அனுமதிப்பதில்லை. இது விஷயத்தில் பகத் மஹல்ஸாபதி ஓர் உதாரணம் ஆவார். அவர் பரம ஏழை. வரவையும் செலவையும் ஒன்றாக்க அவரால் இயலவில்லை. பாபா அவரை ஒருபோதும் எந்தப் பணத்தையும் சம்பாதிக்க அனுமதிக்கவில்லை. தமது தஷிணைப் பணத்தினின்றும் ஏதும் கொடுக்கவுமில்லை. ஒருமுறை ஹம்ஸ்ராஜ் என்ற தயாளமும், தாராள குணமும் உள்ள ஒரு வியாபாரி பாபாவின் முன்னால் மஹல்ஸாபதிக்கு ஒரு பெருந்தொகை அளித்தார். ஆனால் பாபா அதை ஏற்றுக்கொள்ள அவரை அனுமதிக்கவில்லை.
பின்னர் இரண்டாவது விருந்தினர் தனது கதையைக் கூறினார். எனது பிராமண சமையல்காரன் எனக்கு 35 ஆண்டுகள் விசுவாசத்துடன் பணிவிடை செய்துவந்தான். துரதிர்ஷ்டவசமாக தீய வழிகளில் இறங்கினான். அவன் மனம் மாறி என்னுடைய செல்வத்தையே கொள்ளையடித்தான். நாங்களெல்லாம் தூங்கிக்கொண்டிருக்கும்போது உள்ளே வந்து எனது அலமாரி வைக்கப்பட்டுள்ள அறையின் சுவற்றை கன்னம் வைத்து கரன்சி நோட்டுக்களாக நான் சேகரித்திருந்த ரூ.30,000 முழுவதையும் கொண்டுபோய்விட்டான். பாபா அதே தொகையை எங்ஙனம் குறிப்பிட்டார் என்பது எப்படி என்று எனக்குத் தெரியாது. இரவும், பகலும் நான் அழுதுகொண்டிருந்தேன்.
எனது விசாரணைகளின் பலன் ஒன்றுமில்லை. ஆழ்ந்த கவலையில் அரைமாதத்தைக் கழித்தேன். தாழ்வாரத்தில் நான் அமர்ந்திருந்தபோது அவ்வழியாகப் போய்க்கொண்டிருந்த ஒரு பக்கிரி, வருத்தப்பட்டு நொந்துபோயிருக்கும் எனது நிலையைக் கவனித்துவிட்டு அதன் காரணத்தை விசாரித்தார். அனைத்தைப் பற்றியும் அவரிடம் கூறினேன். கோபர்காவன் தாலூக்கா, ஷீர்டியில் சாயி என்ற பெயருடைய அவலியா ஒருவர் இருப்பதாக அவர் கூறினார். அவரிடம் ஒரு வேண்டுதல் செய்துகொள், உனக்கு மிகவும் பிடிக்கும் உணவு ஒன்றை மனதில் நினைத்து உமது தரிசனம் பெறும்வரை அவ்வுணவு உண்பதை நீக்கிவிட்டேன் என்று கூறிக்கொள் என்றார். பின்னர் அவ்வாறே நான் பிரார்த்தனை செய்துகொண்டேன். அரிசிச்சோறு சாப்பிடுவதை விட்டுவிட்டேன். "பாபா, அதை எனது சொத்து மீண்டபிறகும், நான் உமது தரிசனத்தைப் பெற்றான பிறகும் உண்பேன்" என்று உறுதி கூறிக்கொண்டேன்.
இதன்பின் பதினைந்து நாட்கள் கழிந்தன. அந்தப் பிராமணன் தானாகவே என்னிடம் திரும்பிவந்து எனது பணத்தைத் திருப்பிக் கொடுத்துத் தன் செயலுக்காக வருந்தி, "எனக்குப் பைத்தியம் பிடித்து இவ்வாறு நடந்துகொண்டேன். இப்போது உமது காலடிகளில் என் தலையை வைக்கிறேன். தயவு செய்து மன்னித்தருளும்" என்றான். இவ்வாறு எல்லாமே நலமாகவே முடிவடைந்தன. என்னைச் சந்தித்து எனக்கு உதவிய பக்கிரி மீண்டும் காணப்படவில்லை. அப்பக்கிரி எனக்குக் கூறிய சாயிபாபாவை காணவேண்டுமென்றே ஒரு தீவிர ஆர்வம் என்னுள் எழுந்தது. எனது வீடுவரை வந்த அப்பக்கிரி சாயிபாபாவைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் நினைத்தேன். என்னைக் காணவந்து எனது தொலைந்துபோன பணத்தை மீண்டும் பெற்றுத் தருவதற்காக எனக்கு உதவி புரிந்த அவரா 35 ரூபாய் பெறுவதற்காக ஆர்வமாயிருப்பார்? மாறாக எங்களிடமிருந்து எதையும் எதிபார்த்துக்கொண்டிராது எங்களை ஆன்மிக முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதில் அவர் தம்மாலான முழு முயற்சியை எப்போதுமே செய்கிறார்.
திருடப்பட்ட எனது சொத்து மீண்டும் கிடைத்தவுடன் நான் பெருமகிழ்வுற்றேன். அந்த மயக்கத்தில் எனது வேண்டுதலையெல்லாம் மறந்துவிட்டேன். பின்னர் நான் கொலாபாவில் இருந்தபோது ஒருநாள் இரவு கனவில் சாயிபாபாவைக் கண்டேன். இது நான் ஷீர்டிக்கு வருகிறேன் என்று எடுத்திருந்த பிரார்த்தனையை எனக்கு நினைவூட்டியது. அதனால் கோவாவுக்குச் சென்று அங்கிருந்து கப்பலில் பம்பாய் வழியாக ஷீர்டிக்குச் செல்ல விரும்பினேன். ஆனால் துறைமுகத்துக்கு வந்தபோது அக்கப்பல் ஏற்கனவே கூட்டமாயிருப்பதையும், இடமில்லாததையும் அறிந்தேன். கப்பல் தளபதி என்னை அனுமதிக்கவில்லை. நல்ல குணமுடைய எனக்கு பழக்கமில்லாத ஒரு பியூன் குறுக்கிட்டதால் எனக்கு கப்பலில் இடம் அனுமதிக்கப்பட்டு பம்பாய் வந்து சேர்ந்தேன். பின்னர் ரயில் மூலமாக இவ்விடம் வந்தேன். பாபா எவ்விடத்தும் வியாபித்து இருப்பவர் என்றும் எல்லாமறிந்தவர் என்றும் நான் நிச்சயமாக நம்புகிறேன். நாங்கள் யார்? எங்கள் வீடு எங்கே இருக்கிறது? பாபா எங்களது பணத்தை மீட்டுக்கொடுத்து, தாமே எங்களை ஈர்த்து இழுத்ததான எங்களது நல்ல அதிர்ஷ்டம் தான் எவ்வளவு பெரியது? ஷீர்டியைச் சேர்ந்த மக்களாகிய நீங்கள் நிச்சயமாக எங்களைக் காட்டிலும் எல்லையற்ற அளவு மேலானவர்களாகவும், மிகுந்த அதிர்ஷ்டம் வாய்ந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்.பாபா விளையாடி, சிரித்து, உரையாடி இவ்வளவு ஆண்டுகள் வாழ்ந்துகொண்டிருப்பதும் உங்களுடனேயே அல்லவா? உங்களுடைய பூர்வபுண்ணிய பலன் அளவிடற்கரியதாக இருக்கவேண்டும். ஏனெனில் அதுவே பாபாவை ஷீர்டிக்கு இழுத்துவிட்டிருக்கிறது. சாயியே எங்களது தத்தர். அவரே வேண்டுதலுக்குக் கட்டளையிட்டார். கப்பலில் ஓர் இடமும் அளித்து என்னை இவ்விடம் சேர்ப்பித்தார். இவ்விதமாக அவரது எங்கும்நிறை பேரறிவிற்கும், எல்லாம்வல்ல பேராற்றலுக்கும் நிரூபணத்தை அளித்தார்.
திருமதி. ஔரங்கபாத்கர்
ஸோலாபூரைச் சேர்ந்த சகாராம் ஔரங்கபாத்கர் என்பாரின் மனைவிக்கு 27 ஆண்டு காலமாகக் குழந்தையேயில்லை. கணக்கற்ற பிரார்த்தனைகளை அவள் கடவுளர்களிடமும், அம்மன்களிடமும் செய்துகொண்டாள். ஆனால் வெற்றிபெறவில்லை. பின்னர் அவள் பெருமளவு நம்பிக்கை இழந்தவளாக ஆனாள். இவ்விஷயத்தில் இறுதியான முயற்சியாகத் தனது சகோதரியின் புதல்வனான விஸ்வநாத்துடன் ஷீர்டி வந்து பாபாவுக்குச் சேவை செய்துகொண்டு இரண்டு மாதங்கள் தங்கியிருந்தாள். மசூதிக்கு அவள் சென்றபோதெல்லாம் கூட்டத்தால் மசூதி நிரம்பி இருப்பதையும், பாபா பக்தர்களால் சூழப்பட்டிருப்பதையும் கண்டாள்.
அவள் அவரைத் தனியாகக்கண்டு வீழ்ந்து வணங்கித் தனது இதயத்தைத் திறந்து பிள்ளை வரம் வேண்ட விரும்பினாள். ஆனால் உரிய சந்தர்ப்பம் கிடைக்கவே இல்லை. முடிவாக அவள் பாபாவிடம் அவர் தனியாக இருக்கும்போது தனக்காகப் பேசும்படி ஷாமாவிடம் கேட்டுக்கொண்டாள். ஷாமா அவளிடம் பாபாவின் தர்பார் வெளிப்படையானது என்றும், எனினும் அவளுக்காகத் தான் முயற்சிப்பதாகவும், கடவுள் அவரை ஆசீர்வதிக்க வேண்டும் என்றும் கூறினார். தேங்காயுடனும், ஊதுபத்தியுடனும் முன்னிருக்கும் திறந்தவெளியில் பாபாவின் உணவு நேரத்தில் தயாராக இருக்கும்படியும், அவர் அவளுக்கு ஜாடை காண்பித்ததும் வரவேண்டும் என்றும் கூறினார். ஒருநாள் உணவுக்குப்பின் பாபாவின் ஈரக்கையை ஷாமா துண்டால் துடைத்துவிட்டுக் கொண்டிருந்தார். பாபா அப்போது அவர் கன்னத்தைக் கிள்ளிவிட்டார்.
ஷாமா: — பொய்க்கோபத்துடன் — தேவா இந்த மாதிரி என்னைக் கிள்ளுவது சரியா? இந்த மாதிரி கிள்ளிக் குறும்பு செய்யும் கடவுள் எங்களுக்குத் தேவையில்லை. நாங்கள் உங்களையே சார்ந்து இருப்போரல்லவா? இதுதான் எங்களது நெருக்கமான உறவின் பலனா?
பாபா: ஓ! ஷாமா, கடந்த 72 தலைமுறைகளாக நீ என்னுடன் இருக்கிறாய். இதுவரை உன்னை நான் கிள்ளியதில்லை. இப்போது நான் உன்னைத் தொட்டதைக் குற்றமாகக்கொண்டு கோபித்துக் கொள்கிறாயே?
ஷாமா: எங்களுக்கு எப்போதும் முத்தங்களையும், உண்பதற்கு இனிப்புக்களையும் கொடுக்கும் ஒரு கடவுளையே நாங்கள் விரும்புகிறோம். தங்களிடமிருந்து எந்த மரியாதையையோ, மோக்ஷத்தையோ, புஷ்பக விமானம் முதலானவற்றையோ நாங்கள் வேண்டவில்லை. தங்கள் பாதாம்புயத்தின்பால் எங்களது நம்பிக்கை எப்போதும் மிக நன்றாக தெளிந்த விழிப்பு நிலையில் இருக்கவேண்டும், அதற்கு ஆசீர்வதியுங்கள்.
பாபா: ஆம் உண்மையில் அதற்காகவேதான் நான் வந்திருக்கிறேன். நான் உங்களுக்கு உணவூட்டிப் பேணி வளர்த்து வருகிறேன். உங்கள் மீது அன்பும், பாசமும் பூண்டிருக்கிறேன்.
இதன் பின்னர் பாபா தமது இருக்கையில் போய் அமர்ந்தார். ஷாமா அப்பெண்மணிக்கு ஜாடை செய்தார். அவள் மேலே வந்து வணங்கி தேங்காய், ஊதுபத்தி இவைகளை பாபாவிடம் அளித்தாள். பாபா அந்த முற்றல் தேங்காயை ஆட்டினார். அதனுள்ளிருந்த பருப்பு உருண்டு சப்தம் செய்தது.
பாபா: ஷாமா இது உருளுகிறதே, என்ன சொல்கிறதென்பதைக் கவனி.
ஷாமா: இப்பெண்மணி, அம்மதிரியாகவே ஒரு குழந்தையும் தனது வயிற்றில் உருண்டு உயிர்ப்புற வேண்டுமென்று வேண்டுகிறாள். எனவே அத்தேங்காயைத் தங்களது ஆசீர்வாதத்துடன் கொடுங்கள்.
பாபா: இத்தேங்காய் அவளுக்கு மதலையளிக்குமா? இம்மாதிரி விஷயங்களில் எல்லாம் ஜனங்கள் எவ்வளவு முட்டாள்தனமாகவும், போலி நம்பிக்கையுடனும் இருக்கிறார்கள்.
ஷாமா: தங்களது மொழி, ஆசி இவைகளின் சக்தியை நானறிவேன். தங்களது சொல் அவளுக்கு குழந்தைகளின் தொடரையே அளிக்கும். நீங்கள் விவாதித்துக்கொண்டிருக்கிறீர்களே தவிர உண்மையான ஆசியை அளிக்கவில்லை.
விவாதம் கொஞ்சநேரம் நடந்துகொண்டு இருந்தது. பாபா தேங்காயை உடைக்கும்படி மீண்டும் மீண்டும் ஆணையிட்டுக்கொண்டிருதார். ஷாமாவோ முழுத் தேங்காயையும் அப்பெண்மணிக்கே அளிக்கும்படி விவாதித்துக்கொண்டிருந்தார். முடிவாக பாபா சம்மதித்தார்.
பாபா: அவளுக்கு ஒரு குழந்தை பிறக்கும்
ஷாமா: எப்போது?
பாபா: 12 மாதங்களில்
இதன்பேரில் தேங்காய் இரண்டாக உடைக்கப்பட்டு ஒரு பகுதியை இருவரும் உண்டனர். மறுபகுதி அவளிடம் அளிக்கப்பட்டது.
பின்னர் ஷாமா அப்பெண்மணியின் பக்கம் திரும்பி "அன்புள்ள அம்மையே! நீ எனது மொழிகளுக்கு ஒரு சாட்சி. பன்னிரண்டு மாதங்களுக்குள் உனக்குக் குழந்தை ஏதும் பிறக்காவிட்டால் ஒரு தேங்காயை இந்த தெய்வத்தின் — சாயிபாபாவின் — தலையின்மீது அடித்து அவரை மசூதியிலிருந்து வெளியே விரட்டிவிடுவேன். இதை நான் செய்யத் தவறுவேனாயின் என்னை மாதவ் என்று நானே அழைத்துக்கொள்ள மாட்டேன். நான் கூறுவதை நீ விரைவில் உணர்வாய்" என்று சூளுரைத்தார்.
அவள் ஓராண்டுக்குள் ஒரு புதல்வனைப் பெற்றெடுத்தாள். புதல்வனது ஐந்தாவது மாதத்தில் அவனை மசூதிக்கு எடுத்துவந்தாள். கணவன், மனைவி இருவரும் பாபாவின் முன்னால் வீழ்ந்து வணங்கினார்கள். நன்றியுள்ள அத்தகப்பனார் ரூ.500ஐ அன்பளிப்பாகச் சமர்ப்பித்தார். ஷ்யாம் கர்ணா என்ற பாபாவின் குதிரைக்கு ஒரு கொட்டகை கட்டுவதற்காக அத்தொகை செலவிடப்பட்டது.
ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
இந்த அத்தியாயத்தில் ஹேமத்பந்த் வேதாந்தத்தின் கருத்துக்கள் சிலவற்றைக் குறிப்பித்துவிட்டுச் சாவடி ஊர்வலத்தை வர்ணிக்கிறார்.
முன்னுரை
சாயியின் வாழ்க்கை புனிதமானது. அவரது அன்றாட நடைமுறையொழுக்கம் புனிதமானது. அவரின் வழிகளும் செயல்களும் விவரிக்க இயலாதவை. சில நேரங்களில் அவர் பிரம்மானந்தப் பெருநிலையில் — தெய்வீக ஆனந்தம் — இருந்தார். மற்றும் சில சமயங்களில் ஆத்மஞானத்துடன் அடக்கமாய் இருந்தார். ஏராளமான பல செயல்களைச் செய்தாலும் சில சமயங்களில் அவைகளில் தொடர்பேதுமின்றித் தனித்து இருந்தார். முற்றிலும் செயலே அற்றவராகச் சில சமயம் தோன்றியபோதும் அவர் சோம்பலாகவோ, தூக்க மயக்கமாகவோ இருக்கவில்லை.
தமது சொந்த ஆன்மாவிலேயே கட்டுண்டு இருந்தார்.
அமைதியான நிசப்தமான அசைவற்ற கடலைப்போல காணப்பட்டாலும் அவர் அளவிட முடியாத ஆழமானவர். எவரே அவரின் சொல்லில் அடங்காப் பெருங்குணத்தை விவரிக்க இயலும்? அவர் ஆண்களை சகோதரர்கள் என்றும், பெண்களை சகோதரியாகவும், தாயார் ஆகவும் கருதினார். எல்லோரும் அறிந்துள்ளபடி அவர் பரிபூர்ண தூய நிரந்தர புனித பிரம்மச்சாரியாவார். அவர்தம் கூட்டுறவால் நாம் பெரும் ஞானமானது நிரந்தரமாக நம்மிடம் திகழட்டும். அவர்தம் பாதங்களுக்கு எப்போதும் முழுமையான பக்தியுடன் சேவை செய்வோம். அவரை அனைத்து ஜீவராசிகளிடமும் காண்போம். அவர் நாமத்தை எப்போதும் விரும்புவோம்.
ஹேமத்பந்த் தாமே விலகிச் செல்வதாகக் கருதும் வேதாந்தத்தின் சில தலைப்புக்களில் நீண்ட விளக்கவுரை புரிந்த பின்னர் சாவடி ஊர்வலத்தை விவரிக்கச் செல்கிறார்.
சாவடி ஊர்வலம்
பாபாவின் படுக்கையறை முன்னமே விவரிக்கப்பட்டது. ஒருநாள் அவர் மசூதியில் தூங்கினார். மறுநாள் சாவடியில் — மசூதிக்கு அருகில் ஓரிரண்டு அறைகள் உள்ள கட்டிடம் — தூங்கினார். இவ்வாறு மாறிமாறித் தூங்குவது பாபா மஹாசமாதி அடையும்வரை நடைபெற்றது.
1909ஆம் ஆண்டு மார்கழி 10ம் தேதி முதல் அடியார்கள் பாபாவுக்கு சாவடியிலேயே முறையான வழிபாடு செய்யத் தொடங்கினர். சாவடிக்குப் போகும்முறை வந்ததும் மக்கள் மசூதியைச் சூழ்ந்து கொள்வர். மண்டபத்தில் சில மணிநேரம் பஜனை செய்வர். அவர்களுக்குப் பின்னால் துளசி பிருந்தாவனத்தின் வடதிசைக்கும் பாபாவின் முன்பும் உள்ள இடைப்பட்ட இடத்தில் ஒரு அழகிய ரதம் இருந்தது. பஜனையில் விருப்பமுள்ள மக்கள் இருந்தனர். பஜனையில் விருப்பமுள்ள ஆண்களும், பெண்களும் உரிய நேரத்தில் வந்தனர். தங்கள் கைகளில் தால் — ஜால்ரா , சப்ளா கட்டை, கர்தால் — கஞ்சிரா , மிருதங்கம், கோல் — டோலக்கு — முதலிய இன்னிசைக் கருவிகளை வைத்துக்கொண்டு பஜனை நடத்தினர். அங்குள்ள அடியவர்களையெல்லாம் ஈர்த்து இழுத்த காந்தம் சாயிபாபா ஆவார். புறத்தேயுள்ள திண்ணையில் சிலர் தங்கள் தீவட்டிகளை ஒழுங்குபடுத்தினர். சிலர் பல்லக்கை அலங்கரித்தனர்.
சிலர் தங்கள் கைகளில் பிரம்புக்குச்சியை வைத்துக்கொண்டு பாபாவுக்கு ஜெயகோஷம் செய்துகொண்டிருந்தனர். மசூதியின் மூலையானது ஜோடனைத் துணிகளால் அலங்கரிக்கப்படது. மசூதியைச் சுற்றிலும் எரியும் விளக்குகளின் வரிசை தங்கள் ஒளியைச் சிந்தின. ஷ்யாம் கர்ணா என்ற பாபாவின் குதிரை முழுவதுமாக அலங்கரிக்கப்பட்டு வெளியே நின்றுகொண்டிருந்தது. பின்னர் தாத்யா பாடீல் சில ஆட்களுடன் பாபாவிடம் வந்து அவரைத் தயாராகும்படி கேட்டுக்கொள்கிறார்.
தாத்யா வந்து தனது கைகளை பாபாவின் அக்குளில் கொடுத்து அவருக்கு உதவி செய்யும் வரை பாபா அமைதியாக உட்கார்ந்திருப்பார். தாத்யா பாபாவை மாமா என்றழைத்தார். உண்மையில் அவர்களது உறவு மிகமிக நெருக்கமானது. தமது உடம்பில் பாபா வழக்கமான கஃப்னியை அணிந்து சட்காவைத் — சிறுதடி — தமது அக்குளில் வைத்துக்கொண்டு, தம் சில்லிம் — புகைபிடிக்கும் மண்குழாய் , புகையிலை இவற்றோடு ஒரு துணியைத் தோழில் போட்டுக்கொண்டு கிளம்ப ஆயத்தமாகிறார். பின்னர் தாத்யா பொன்னால் எம்ப்ராய்டரி வேலை செய்யப்பட்ட ஓர் அழகிய சால்வையை அவர்மீது அணிவித்தார். இதன்பின் பாபா பின்னால் இருக்கும் விறகுக் கட்டைகளைத் தமது வலதுகால் கட்டை விரலால் சிறிது இழுத்து, வலது கையால் எரிந்துகொண்டிருக்கும் விளக்கை அணைத்துவிட்டுச் சாவடிக்குப் புறப்படுகிறார். டாஷே — முரசு , பேண்டு, சங்குகள், மிருதங்கம் முதலிய எல்லாவிதமான இசைக்கருவிகளும் தங்கள் விதவிதமான ஒலிகளை எழுப்புகின்றன. வாணவேடிக்கைகள் மாறுபாடான வெவ்வேறு வகையான வர்ணஜாலக் காட்சிகளைக் காட்டுகின்றன.
வீணை, மிருதங்கத்துடன் இணைந்து ஆண்களும், பெண்களும் பஜனை செய்துகொண்டு, பாபாவின் பெயரைப் பாடிக்கொண்டு நடக்கத் துவங்குகின்றார்கள். சிலர் மகிழ்ச்சியால் நடனமாடினர். சிலர் பலவகையான கொடிகளையும், கம்புகளையும் எடுத்துச் செல்கின்றனர். மசூதியின் படிகளுக்கு பாபா வந்ததும் பல்தார்கள் பாபாவுக்குக் கட்டியம் கூறினர். பாபாவின் இரண்டு பக்கங்களிலும் சாமரம் பிடித்துக்கொண்டிருப்பவர்களும், விசிறுபவர்களும் நின்றுகொண்டிருந்தனர். அடியவகளின் கைகளால் தாங்கப்பட்டவாறே பாபா நடந்துவரும் வழியில் துணி மடிப்புக்கள் விரிக்கப்பட்டிருந்தன. தாத்யா பாடீல் அவரது இடது கையையும், பாபு சாஹேப் ஜோக் அவர் தலைமீது குடையையும் பிடித்திருந்தனர்.
இவ்விதமாக பாபா சாவடிக்கு நடந்து செல்கிறார். முழுமையும் அலங்கரிக்கபட்ட ஷ்யாம் கர்ணா என்ற சிவப்புக் குதிரை வழிவகுத்துக்கொண்டு சென்றது. அதன்பின் பல்லக்குத் தூக்கிகள், ஏவலாட்கள், இசைபாடுவோர் மற்றும் அடியவர் கும்பலும் வந்தனர். ஹரி நாமமும், சாயி நாமமும் இசையுடன் இணைந்து குரலொலி வானைப்பிளந்தது. இவ்விதமாகவே ஊர்வலம் வீதி முனையை அடைந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட யாவரும் மிக்க மகிழ்ச்சியடைந்து களிப்புடன் காணப்பட்டனர்.
வீதியின் இந்த முனைக்கு வந்ததும் பாபா சாவடியை நோக்கி நின்றுகொண்டார். ஒரு தெய்வீக ஒளியுடன் அவர் பிரகாசித்தார். அதிகாலையைப் போன்றோ, உதயசூரியனின் பிரபையைப் போன்றோ அவர் முகம் சுடரொளி வீசியது. ஒருமுகப்பட்ட மனதுடன் பாபா அங்கு யாரையோ கூப்பிடுவோர்போல் வடக்குத் திக்கை நோக்கி நிற்கிறார். எல்லா இசைக்கருவிகளும் ஒலித்துக்கொண்டிருக்கும்போது பாபா தமது வலது கையை மேலும்கீழும் சிறிதுநேரம் அசைக்கிறார். இந்நேரம் காகா சாஹேப் தீஷித் குலால் என்ற சிவப்புப் பொடியுடன் கலந்த மலர்களைக்கொண்ட வெள்ளித்தட்டுடன் முன்னேவந்து அவைகளை பாபாவின் திருமேனியில் அடிக்கடி தூவினார். இத்தருணத்தில் இன்னிசைக் கருவிகள் மிகச்சிறப்பாக ஒலித்தன. பாபாவின் முகம் நிலையுறுதியான அதிகரிக்கப்பட்ட காந்தியுடனும், அழகுடனும் கதிரை உமிழ்ந்தது. எல்லா மக்களும் இந்த ஜோதியை தங்கள் மனநிறைவுகொள்ளும்வரை பருகுகிறார்கள்.
இந்நிகழ்ச்சியின் காட்சியையும், உயர்வான கீர்த்தியையும் விவரிக்க வார்த்தைகள் தவறிவிடுகின்றன. சில சமயங்களில் மஹல்ஸாபதி ஏதோவொரு ஆவேசம் பிடித்தவர் போல் ஆடுகிறார். அதனால் பாபாவின் ஏகாக்கிரசித்தம் — கவனம் — சிறிதளவும் கலைக்கப்படாதது கண்டு அனைவரும் அதிசயித்தனர். தமது கையில் விளக்குடன் தாத்யாபாடீல் பாபாவின் இடப்புறத்திலும் பகத் மஹல்ஸாபதி வலப்புறத்திலும் பாபாவின் ஆடையின் நுனியைப் பிடித்துக்கொண்டு வருகிறார்கள். எத்தகைய சுந்தர ஊர்வலம்! எத்தகைய பக்தியின் பாங்குகள்! இதைக்காண ஆண்களும் - பெண்களும், ஏழைகளும் - பணக்காரர்களும் அங்கு ஒன்றாகத் திரண்டுள்ளனர். பாபா மிக மெதுவாகவே நடக்கிறார்.
பக்தர்கள் இருமருங்கிலும் அன்புடனும், பக்தியுடனும் தொடர்கிறார்கள். அவ்விடத்து வளி மண்டலம் முழுவதும் மகிழ்ச்சி ஊடுருவிப்பரந்து ஊர்வலம் சாவடியை அடைகிறது. அக்காட்சியும் அந்நாட்களும் சென்றுவிட்டன. ஒருவரும் அவைகளை இப்போதோ எதிர்காலத்திலோ பார்க்கமுடியாது. எனினும் அக்காட்சியின் தோற்றத்தை நினைவுகூர்ந்தும், மனக்கண்முன் கொணர்ந்தும் நமது உள்ளங்களுக்கு அமைதியையும், திருப்தியையும் வழங்கலாம்.
சாவடியும் நல்ல வெண்மையான கூரை, கண்ணாடிகள், பல்வேறுவித விளக்குகள் இவைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. அதை அடைந்ததும் தாத்யா முன்னால் சென்று ஒரு ஆசனத்தை விரித்து ஒரு திண்டை வைத்துவிட்டு பாபாவை அங்கு அமரச்செய்து நல்ல கோட்டையும் அணிவிக்கிறார். பின்னர் அடியவர்கள் அவரைப் பல்வேறு விதங்களில் வழிபடுகின்றனர். இறகுகளுடன் கூடிய கிரீடத்தை அவருக்குச் சூட்டுகின்றார்கள். அவர் கழுத்தைச் சுற்றி பூமாலைகளையும், அணிமணிப்பூண் மாலைகளையும் அணிவித்து நறுமணம் கமழும் நேர்கோடுகளையும் ஒரு புள்ளியையும் — வைணவ அடியார்களைப் போன்று — இட்டு அவர்கள் அவரை உள்ளம் நிறைவடையும் வண்ணம் நீண்டநேரம் கூர்ந்து பார்க்கிறார்கள். தலைப்பாகையை அடிக்கடி மாற்றுகின்றனர். தூக்கியெறிந்து விடுவாரென்று பயந்து அவர் தலையிலிருந்து எடுத்து மேலே சிறிது தூக்கிப் பிடிக்கிறார்கள். அவர்கள் உங்களையெல்லாம் பாபா அறிகிறார். அடக்கவொடுக்கமுடனும், தடைசெய்யாமலும் அவர்கள் இஷ்டங்களுக்கெல்லாம் பாபா சாதுவாகக் கீழ்ப்படிக்கிறார். இவ்வலங்காரங்களுடன் அவர் வியக்கத்தக்க அழகுடன் திகழ்கிறார்.
நானா சாஹேப் நிமோண்கர் கம்பைச் சுற்றிச் செய்யப்பட்டுள்ள அழகான குஞ்சரங்களுடன் கூடிய குடையை மேலே பிடிக்கிறார். பாபு சாஹேப் ஜோக் ஒரு வெள்ளிப் பாத்திரத்தில் பாபாவின் பாதங்களைக் கழுவுகிறார். அர்க்கியமும், பூஜையும் உரிய சம்பிரதாயங்களுடன் செய்துவிட்டு அவர் கைகளில் சந்தனம் பூசி, தாம்பூலம் அளிக்கிறார். பாபா தமது ஆசனத்தில் அமரும்போது தாத்யாவும், மற்றவர்களும் நின்றுகொண்டிருக்கிறார்கள். அவர் பாதங்களில் வீழ்ந்து பணிகிறார்கள். பாபா வசதியாக திண்டின்மேல் சாய்ந்து அமர்ந்துகொண்டிருக்கும்போது இருமருங்கும் உள்ள அடியவர்கள் சாமரமும், விசிறியும் வீசுகிறார்கள்.
பின்னர் ஷாமா சில்லிம் — புகைபிடிக்கும் மண்குழாய் — தயார்செய்து அதை தாத்யா பாடீலின் கையில் கொடுக்க அவர் அதைத் தமது சுவாசத்தால் ஒருமுறை உறிஞ்சிய பின்னர் பாபாவிடம் கொடுக்கிறார். பாபா புகைத்த பின்னர் அது பகத் மஹல்ஸாபதியிடம் கொடுக்கப்பட்டு பின்னர் சுற்றி எல்லோரிடமும் வழங்கப்படும். ஜடமான சில்லிம் புனிதமாக்கப்பட்டது. அது பலவித தண்டனைகளுக்கும், துயரங்களுக்கும் ஆட்படவேண்டியிருக்கிறது. குயவர்களால் மிதியுண்டும், வெயிலில் காய வைக்கப்பட்டும், நெருப்பில் சுடப்பட்டும் இருப்பினும், பாபாவின் கைகளில் படுவதற்கும், அவரின் முத்தத்தைப் பெறுவதற்கும் அது நல்லதிர்ஷ்டம் பெற்றிருக்கிறது. இதன் பின்னர் விழா முடிவடைந்து பூமாலையை பாபாவின் கழுத்தில் அடியவர்கள் அணிவிக்கிறார்கள். பூச்செண்டும் அளிக்கிறார்கள்.
உணர்வுவசமுறா - நடுநிலைமையின், அவாவின்மையின் அவதாரமாகிய சாயி அட்டிகை, அணிமணிகள், பூமாலைகள் மற்றும்பல அலங்காரங்கள் இவைகளைப் பற்றியெல்லாம் எவ்வளவும் கவலைப்படுவதில்லை. ஆனால் தம் அடியவர்களிடம் உள்ள உண்மையான அன்பின் காரணமாக அவரவர்கள் தாங்கள் விரும்பிய வழிகளைக் கையாண்டு மகிழ்வடைய அனுமதித்தார். முடிவாக இன்னிசைக் கருவிகள் தங்கள் புனித ராகங்களை ஒலித்துக்கொண்டிருக்க பாபா சாஹேப் ஜோக் எல்லா சம்பிரதாயங்களுடனும் ஆரத்தி காண்பிக்கிறார். இந்த ஆரத்தி முடிவுற்றதும் அடியவர்கள் ஒவ்வொருவராக வணங்கி விடைபெற்றுக்கொண்டு வீடுகளுக்குத் திரும்புகிறார்கள்.
தாத்யா பாடீல் அவருக்குச் சில்லிம், பன்னீர், அத்தர் சென்ட் இவைகளை அளித்துவிட்டுப் புறப்படுவதற்காக எழும்போது பாபா அவரிடம் அன்பு ததும்ப "என்னைப் பார்த்துக்கொள். வேண்டுமானால் போ. இரவில் சில சமயங்கள் வந்து என்னை விசாரித்துக்கொள்" என்று கூறுகிறார். சரியென விடையளித்துக்கொண்டு தாத்யாபாடீல் சாவடியைவிட்டு வீட்டுக்குச் செல்கிறார். பின்னர் பாபா தாமே படுக்கையைத் தயாரித்துக்கொள்கிறார். ஒன்றின்மேல் ஒன்றாக ஐம்பது, அறுபது வெள்ளைத் துண்டுகளை விரித்துப் படுக்கையைத் தயார் செய்துகொண்டு இளைப்பாறச் செல்கிறார்.
வாசகர்கள் ஒவ்வொருநாளும் படுக்கப்புகும்முன் சாயிபாபாவையும் அவரது சாவடி ஊர்வலத்தையும் நினைவு கூரும்படியான வேண்டுகோளுடன் இந்த அத்தியாயத்தை முடித்து அனைவரும் இளைப்பாறுவோமாக.
ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
• கோவிலை மதிக்காதிருத்தல்
• காலா அல்லது கதம்ப உணவு
• ஒரு கிண்ணம் மோர்
சென்ற அத்தியாயத்தில் நாம் பாபாவின் சாவடி ஊர்வலத்தைப் பற்றிப் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் ஹண்டி— பெரிய அண்டா — என்ற பாபாவின் சமையல் பாத்திரத்தைப் பற்றியும் மற்றும் சில விஷயங்களையும் காண்போம்.
முன்னுரை
ஓ! புனிதமான சத்குரு சாயி உலகமனைத்துக்கும் மகிழ்ச்சியை நல்கி அடியவர்களின் நலன்களை நிறைவேற்றி தங்களின் திருவடிகளைச் சரணடைந்தவர்களின் பேரிடர்களைப் போக்குபவருமான தங்களை வணங்குகிறோம். மிகுந்த தாராள குணமுடையவராகவும், தங்களைச் சரணடைவோர்களின் பாதுகாவலராகவும், ரட்சகராகவும் விளங்கும் தாங்கள் மக்களுக்காக இரங்கி அவர்களுக்கு நன்மை செய்யவே அவதரித்திருக்கிறீர்கள்.
தூய ஆன்மாவின் சாராம்சமான சாறு பிரம்மாவின் அச்சில் ஊற்றப்பட்டு இதிலிருந்து ஞானிகளுக்குள் எல்லாம் முடிமணியாக சாயி அவதரித்து விளங்குகிறார். இந்த சாயி ஆத்மராமனேயாவார். தூய தெய்வீகப் பேரின்பத்தின் இருப்பிடமே அவர். வாழ்க்கையின் அனைத்துக் குறிக்கோளையும் தாமே அவர் எய்தியதோடு நில்லாது, தமது அடியவர்களைப் பற்றற்றவர்களாகவும், சுதந்திரமானவர்களாகவும் ஆக்கினார்.
பாபாவின் ஹண்டி
நமது சாஸ்திரங்களில், வெவ்வேறு காலங்களுக்கு வெவ்வேறு சாதனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.
தவம் - க்ருதயுகத்துக்கும்
ஞானம் - த்ரேதாயுகத்துக்கும்
யக்ஞம் - த்வாபரயுகத்துக்கும்
தானம் - கலியுகத்துக்கும்
சிபாரிசு செய்யப்பட்டிருக்கின்றன. தானங்கள் அனைவற்றிலும் அன்னதானமே சிறந்தது. மத்தியான நேரத்தில் நமக்கு உணவு கிடைக்காதபோது நாம் மிகவும் குழப்பமடைகிறோம்.
அதைப்போன்ற சூழ்நிலைகளில் மற்ற ஜீவராசிகளும் அங்ஙனமே உணர்கின்றன. இதையறிந்து எளியவர்களுக்கும், பசியடைந்தோர்க்கும் உணவளிப்பவரே மிகச்சிறந்த கொடையாளி அல்லது தர்மவான். "உணவே பிரம்மம். உணவிலிருந்தே எல்லா உயிர்களும் பிறக்கின்றன. பிறந்த பின்னும், உணவாலேயே உயிர் வாழ்கின்றன. அழிந்த பின்னும் உணவின் உள்ளேதான் மீண்டும் உட்செல்லுகின்றன" என்கிறது தைத்திரீய உபநிஷதம்.
விருந்தாளி ஒருவர் நம் வீட்டுக்கு வர நேர்ந்தால் அவரை உணவளித்து வரவேற்பது நம்மைக் கட்டுப்படுத்தும் ஒரு கடமையாகும். செல்வம், சொத்து, உடை முதலான மற்றவித தானங்கள் செய்வதற்கு விவேகம் தேவைப்படுகிறது. ஆனால் உணவின் விஷயத்தில் அத்தகைய யோசனைகள் எதுவும் தேவையில்லை. மத்தியான நேரத்தில் யார் வேண்டுமானாலும் நம் வீட்டு வாசலிடை வரட்டும். அவருக்கு உணவு அளிக்கப்பட வேண்டும். அதிலும் முடவர்கள், சரியாக நடக்க முடியாதவர்கள், குருடர்கள், வியாதியஸ்தர்களான ஆண்டிகள் முதலியோருக்கு முதலில் உணவு அளிக்கப்படவேண்டும்.
முதலில் குறிப்பிட்டோருக்கு உணவளிப்பதால் உண்டாகும் புண்ணியம் பின்னால் குறிப்பிட்டவர்களுக்கு அளிப்பதைவிட மிகவும் அதிகமாகும். அன்னதானம் இல்லாத மற்ற தானங்களெல்லாம், நிலவற்ற நஷத்திரங்கள் போன்றும், பதக்கமற்ற அட்டிகை போன்றும், முடிமணி அற்ற கிரீடம் போன்றும், தாமரையற்ற குளத்தைப் போன்றும், பக்தியற்ற பஜனையைப் போன்றும், குங்குமமற்ற சுமங்கலியைப் போன்றும், இனிமையான சாரீரமில்லாத பாடலைப் போன்றும், உப்பற்ற தயிரைப் போன்றுமாக இருக்கிறது.
வரண் — பருப்பு சூப் — மற்றெல்லா பதார்த்தங்களையும்விடச் சிறந்திருப்பதைப் போன்று மற்றெல்லா புண்ணியங்களையும்விட அன்னதானம் சிறந்திருக்கின்றது. இப்போது பாபா எங்ஙனம் உணவு சமைத்து அதை வினியோகித்தார் என்பதைக் காண்போம்.
பாபாவுக்காக ஒரு சிறிதே உணவு தேவைப்பட்டது என்றும் அவருக்குத் தேவையானதும் சில வீடுகளில் பிச்சையெடுத்துப் பெறப்பட்டது என்பதும் முன்னமேயே எடுத்துச் சொல்லப்பட்டுவிட்டது. ஆயின் அனைவர்க்கும் உணவளிக்க வேண்டுமென்று அவர் தீர்மானித்தால் அவராகவே எல்லா ஏற்பாடுகளையும் செய்கிறார். இந்த விஷயத்தில் அவர் எவரையும் சார்ந்திருக்கவோ, தொல்லைப்படுத்தவோ இல்லை. முதலில் கடைவீதிக்குச் சென்று சோளம், மாவு, நறுமண பலசரக்கு வகைகள் முதலிய எல்லாவற்றையும் பணம் கொடுத்து வாங்குகிறார். கோதுமை அரைத்தலையும் தாமே செய்கிறார்.
மசூதிக்கு முன்னாலுள்ள திறந்தவெளியில், ஒரு பெரிய அடுப்பை வைத்து நெருப்பை மூட்டி அதற்குமேல் ஹண்டி என்னும் ஒரு பாத்திரத்தை சரியான அளவு தண்ணீர் ஊற்றிவைக்கிறார். இரண்டு விதமான ஹண்டிகள் இருந்தன. ஒன்று சிறியது. மற்றொன்று பெரியது. முன்னது 50 பேருக்கு உணவளிக்க ஏற்றது. பின்னது 100 பேருக்கானது. சில சமயம் அவர் மிட்டா சாவல் என்னும் சர்க்கரைப் பொங்கலைச் சமைத்தார். மற்றும் சில சமயங்களில் புலவை மாமிசத்துடன் சமைத்தார். சில சமயங்களில் கொதித்துக்கொண்டிருக்கும் வரண் என்னும் சூப்பில், கோதுமை மாவை சிறு உருண்டைகளாகவோ, அல்லது தட்டையான ரொட்டிகளாகவோ செய்து மிதக்கவிட்டார்.
வாசனைப் பொருட்களை அம்மியில் வைத்து இடித்துத் தூளை சமையல் பாத்திரத்தில் போட்டார். உணவை மிகவும் சுவையானதாக்க அவர் எல்லாச் சிரமங்களையும் எடுத்துக்கொண்டார். ஜவ்வாரி — கேள்வரகு — மாவைத் தண்ணீருடன் கொதிக்கவிட்டு அதைத் தயிருடன் கலந்து அம்பீல் — கூழ் — தயார் செய்தார். உணவுடன் இந்த அம்பீலை ஒரே மாதிரியாக விநியோகித்தார். உணவு ஒழுங்காக வேகிறதா என்பதைப் பார்க்க பாபா தனது கஃப்னியின் கைகளை மேலே சுருட்டிவிட்டுக்கொண்டு தனது வெறும் கையைக் கொதிக்கும் பாத்திரத்தில் துளியும் பயமின்றி விட்டுக் கொதிக்கும் கலவையை நன்றாக மேலும் கீழும், பக்கங்களிலும் கலக்கிவிடுகிறார்.
கை வெந்ததற்கான எந்த அடையாளத்தையோ முகத்தில் பயத்தின் எவ்விதச் சாயலையோ காணமுடிவதில்லை. சமையல் முடிந்ததும், பாத்திரங்களை மசூதிக்குக் கொண்டுவந்து உரியமுறையில் மௌல்வியைக்கொண்டு புனிதமாக்கினார். முதல் உணவின் ஒரு பகுதியை மஹல்ஸாபதிக்கும், தாத்யா பாடீலுக்கும் அனுப்பிவிட்டு மிச்சத்தை எல்லா ஏழை எளியவர்களுக்கும், திக்கற்றவர்களுக்கும் அவர்கள் உளம்நிறையும் வண்ணம் தமது கையாலேயே பரிமாறினார். பாபா தாமே சமைத்து தாமே பரிமாறிய உணவை உட்கொண்டவர்கள் நிச்சயமாக ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், அதிர்ஷ்டசாலிகள். இத்தருணத்தில் ஒரு சிலர் சந்தேகத்தையும் கிளப்பலாம். பாபா காய்கறிகளையும், அசைவ உணவையும் பிரசாதமாக தமது அடியவர்களுக்கு ஒரே மாதிரியாகவா வழங்கினார்? விடை வெளிப்படையானதும், எளிதானதுமாகும். அசைவ உணவு பழக்கப்பட்டோருக்கு ஹண்டியிலிருந்து பிரசாதமாக உணவு வழங்கப்பட்டது. அதில் பழக்கமில்லாதவர்களை அதைத்தொட அனுமதிப்பதில்லை. இவ்வுணவை விசேஷமாக அனுசரிக்க அவர் அவர்களிடம் எவ்வித விருப்பத்தையோ, ஆசையையோ தூண்டிவிட்டதில்லை.
குருவே பிரசாதமாக எதையாவது அளிக்கும்போது அது ஏற்றுக்கொள்ளத்தக்கதா இல்லையா என்று எண்ணுபவன் நரகத்தை அடைகிறான் என்னும் ஒரு கொள்கை நன்றாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்தக் கொள்கையை எந்த ஒரு சீடனும் எவ்விதம் மனதில் ஏற்றுக்கொண்டிருக்கிறான் என்பதை அறிய சில நேரங்களில் பாபா சோதனைகள் நடத்துவார். உதாரணமாக பாபா ஒரு ஏகாதசி தினத்தன்று தாதா கேல்கரிடம் சில ரூபாய்கள் கொடுத்து அவரையே நேராக கொரலாவுக்குச் சென்று அங்கிருந்து மாமிசம் வாங்கிவரும்படி கூறினார். இந்த தாதா கேல்கர் ஒரு வைதீக பிராமணர். எல்லா வைதீகச் சம்பிரதாயங்களையும் வாழ்க்கையில் அனுசரித்தவர். செல்வம், தானியங்கள், உடை முதலியவைகளை சத்குருவிற்குச் சமர்ப்பிப்பதெல்லாம் போதாதென்றும், முழுநிறை நம்பிக்கையுள்ள கீழ்ப்படிதலும், அவரது உத்தரவுகளை சரி நுட்பமாக நிறைவேற்றுதலுமே அவரை மிகவும் மகிழ்விக்கும் உண்மையான தஷிணையாகும் என்பதை அவர் அறிவார்.
எனவே தாதா கேல்கர் உடைகளை உடுத்திக்கொண்டு அவ்விடத்துக்குக் கிளம்பினார். பிறகு பாபா அவரைக் கூப்பிட்டு "நீயே போகாதே. யாரையாவது அனுப்பு" என்று கூறினார். இதன் பேரில் தாதா, தமது வேலையாள் பாண்டுவை இதற்காக அனுப்பினார். பாபா அவரையும் திரும்பிவரச் சொல்லி, அதையும் ரத்து செய்துவிட்டார். மற்றொரு சந்தர்ப்பத்தின்போது 'புலவ்' என்னும் மாமிசக்கறியில் உப்பு சரியாக இருக்கிறதா என்பதைச் சற்று சுவைத்துப் பார்க்கும்படி பாபா தாதாவைக் கேட்டார். பின்னர் சாதாரணமாகவும், முறைக்காகவும் அது சரியாக இருக்கின்றது என்று கூறினார்.
அதற்கு பாபா நீ அதைக் கண்ணால் பார்த்ததோ, நாவால் சுவைத்ததோ கிடையாது. பின்னர் அது சுவையாய் இருக்கிறது என்று எப்படி உன்னால் உரைக்கமுடியும். பாத்திரத்தின் மூடியைத் திறந்து பார் என்று கூறிக்கொண்டே, பாபா அவரது கையைப் பிடித்து பானைக்குள் அழுத்தி, "கையை முன்னால் நீட்டி கரண்டியை எடுத்து, வைதீகத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பதறாமல், கொஞ்சம் எடுத்து சாப்பாட்டில் போட்டுக்கொள்" என்றார்.
தாய்க்கு குழந்தையிடம் ஒரு உண்மையான அன்பின் அலை தோன்றும்போது, அதைக் கிள்ளிவிட்டு அழத் தொடங்கியதும் தன் மார்போடு அணைத்துக்கொள்கிறாள். அவ்வாறே பாபா உண்மையான தாய் என்றமுறையில் தாதா கேல்கரை இவ்விதமாகக் கிள்ளிவிட்டார். உண்மையில் எந்த ஞானியோ அல்லது குருவோ தடுக்கப்பட்ட உணவைத் தமது வைதீகச் சீடனை உண்ணும்படி வற்புறுத்தி அதன்மூலம் தம்மை கீழ்மைப்படுத்திக் கொள்ளமாட்டார்.
இந்த ஹண்டி விவகாரம் 1910ஆம் ஆண்டுவரை சிலகாலம் நடந்தது. பிறகு நின்றுவிட்டது. முன்னரே கூறியதைப்போன்று தாஸ்கணு, பாபாவின் புகழை பம்பாய் மாகாணமெங்கிலும் தம் கீர்த்தனைகளால் பரப்பினார். அப்பகுதியிலிருந்து ஷீர்டிக்கு மக்கள் திரளாக வந்து கூடத்தொடங்கினர். ஷீர்டி சில நாட்களுக்குள்ளாகவே ஒரு புனித ஷேத்திரம் ஆகிவிட்டது. பக்தர்கள் வெகுமதி அளிப்பதற்காக பல்வேறு பொருட்களைக் கொணர்ந்தனர். வெவ்வேறு உணவுவகைகளை நைவேத்யமாகச் சமர்ப்பித்தனர். அவர்கள் அவ்வாறு அளித்த உணவுப் பொருட்கள் எவ்வளவு என்றால் பக்கிரிகளும், ஆண்டிகளும் வயிறு புடைக்க உண்டுவிட்டு பின்னும் மீதி இருக்கும் அளவு இருந்தது. எங்ஙனம் நைவேத்யம் பகிர்ந்தளிக்கப்பட்டது என்று கூறும்முன்பு, உள்ளூரில் இருந்த கோவில்களின் மீதும், தெய்வங்களின் மீதும் பாபாவுக்கு எத்தகைய மரியாதையும், ஆர்வமும் இருந்தது என்பதை விளக்கும் நானா சாஹேப் சாந்தோர்கரின் கதையை எடுத்துக்கொள்வோம்.
நானா சாஹேப் கோவிலை மதியாதிருத்தல்
சிலர் தங்களுக்கே உரியமுறையில் அனுமானித்துக்கொண்டும், யூகித்துக்கொண்டும் சாயி ஒரு பிராமணர் என்றும், சிலர் அவர் ஒரு முஹமதியர் என்றும் கூறினர். உண்மையில் அவர் எந்த ஜாதியையும் சேர்ந்தவர் அல்ல. எப்போது எந்த ஜாதியில் பிறந்தார் என்பதையும், அவரது பெற்றோர் யார் என்பதையும் ஒருவரும் நிச்சயமாக அறிந்திருக்கவில்லை.
முன்பே அத்தியாயம் 7ல் உள்ள பாபாவின் சொந்த கூற்றுப்படி அவர் பிராமணர் என்றாலும் பரமாத்மாவிடம் தன்னை முழுவதும் சரணாகதிசெய்து, அஹங்காரத்தையும் - உடல் உணர்வையும் ஒழித்து அவருடன் ஒன்றிவிடுபவனுக்கு ஜாதி - தேசம் என்னும் கேள்விகள் குறித்துக் கருத்திற்கொள்வதற்கு ஏதுமில்லை. பின்னர் அவர் எங்ஙகனம் ஒரு பிராமணராகவோ, முஹமதியராகவோ இருக்கமுடியும்? அவர் ஒரு முஹமதியர் என்றால், மசூதியில் அணையாமல் எப்போதும் துனியை எங்ஙகனம் எரியவைத்துக் கொண்டிருக்கமுடியும்? அங்கு எங்ஙனம் ஒரு துளசி பிருந்தாவனம் இருக்க முடியும்? சங்கோசை, மணி ஓசை, இன்னிசைக்கருவிகள் ஆகியவைகளை அனுமதிக்க முடியும்? அவர் ஹிந்து வழிபாட்டு முறைகளின் எல்லா அம்சம்களையும் எங்ஙனம் நடக்கவிட்டிருக்க முடியும்? அவர் ஒரு முஹமதியராக இருந்தால், அவர் காதுகள் குத்தப்பட்டிருக்குமா? ஹிந்து கோவில்களைச் செப்பனிடத் தம் கையில் இருந்த பணத்தை அவர் செலவு செய்திருக்க முடியுமா? மாறுபாடாக ஹிந்து கோவில்களையும், தெய்வங்களையும் மதியாமல் இருப்பதை அவர் சிறிதும் சகிப்பதில்லை.
ஒருமுறை நானா சாஹேப் சாந்தோர்கர் பினிவாலே என்ற தனது ஷட்டகருடன் ஷீர்டிக்கு வந்தார். அவர்கள் மசூதிக்குச்சென்று பாபாவின் முன்னால் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது பாபா திடீரென்று நானா சாஹேபின் மீது கோபம் அடைந்தார். "நீ இவ்வளவு காலம் எனது கூட்டுறவில் இருக்கிறாய். எங்ஙனம் நீ இவ்விதம் நடந்துகொள்கிறாய்?" என்று அவரைக் கேட்டார். முதலில் நானா சாஹேபுக்கு ஒன்றும் புரியவில்லை. தாழ்மையுடன் விளக்கும்படி கேட்டுக்கொண்டார். பாபா அவரை கோபர்காவன் எப்போது வந்தாரென்றும், அங்கிருந்து ஷீர்டிக்கு எங்ஙனம் வந்தாரென்பதையும் கேட்டார்.
உடனே நானா சாஹேப் தன் தவறைப் புரிந்துகொண்டார். அவர் ஷீரடிக்கு வரும்போதெல்லாம் கோபர்காவனில் கோதாவரிக் கரையிலுள்ள தத்தரின் கோவிலை வழிபட்டு வருவது வழக்கம். ஆனால் இம்முறை தத்தரின் பக்தரான தனது உறவினரையும், அக்கோவிலுக்குப் போகாமல் தடுத்து, தாமதத்தைத் தவிர்க்கும் பொருட்டு ஷீர்டிக்கு நேரடியாக வந்துவிட்டார். இக்குற்றத்தை எல்லாம் அவர் பாபாவிடம் ஒப்புக்கொண்டு கோதாவரியில் குளித்துக்கொண்டிருக்கும்போது ஒரு பெரியமுள் அவர் பாதத்தில் குத்திவிட்டதனால், அது அவருக்கு மிகுதியான தொல்லையைக் கொடுத்தது என்று கூறினார். பாபா அது அவருக்கு லேசான தண்டனை என்று கூறி எதிகாலத்தில் ஜாக்கிரதையாக இருக்கும்படி கூறினார்.
காலா — கதம்ப உணவு
நைவேத்தியம் வினியோகிக்கப்படும் கதைக்குத் திரும்புவோம். ஆரத்தி நிகழ்ச்சி முடிந்தபின்னால் எல்லோரையும் உதியுடனும், ஆசீர்வாதங்களுடனும் அனுப்பிய பிறகு உள்ளே சென்று, நிம்பாரில் தமது முதுகைச் சாய்த்துக்கொண்டு இரண்டு வரிசையுள்ள பந்தியுடன் அமர்ந்திருப்பார். நைவேத்யம் கொண்டுவந்த பக்தர்கள் பூரி, மாண்டி, போளி, பாஸந்தி, சன்ஸா, சோறு முதலியவை உள்ள தங்களது உணவுப் பதார்த்தங்களை வலிந்து உள்ளே அனுப்புவார்கள்.
பாபாவினால் புனிதமாக்கப்பட்ட உணவின் பிரசாதத்திற்காக வெளியே காத்துக்கொண்டிருப்பார்கள். எல்லா உணவுகளும் கதம்பக் கூட்டாகக் கலக்கப்பட்டு பாபாவின் முன் வைக்கப்படும். அதை அவர் கடவுளுக்குச் சமர்ப்பித்து புனிதப்படுத்துவார். அதன் பகுதிகள் வெளியில் காத்துக்கொண்டிருக்கும் நபர்களுக்கு அளிக்கப்பட்டு மீதம் உள்ளே பாபா நடுநாயகமாக அமர்ந்திருக்கும் மக்களுக்குப் பரிமாறப்படும். இரண்டு வரிசையில் அமர்ந்திருக்கும் பக்தர்களும் வயிறார உண்ணுவர். புனிதமாக்கப்பட்ட உணவை உள்ளே அமர்ந்திருக்கும் அனைவருக்கும், ஒவ்வொருவரின் தேவையையும் சௌகரியத்தையும் கவனித்துப் பரிமாறும்படி நானா சாஹேப் நிமொண்கரையும், ஷாமாவையும் பாபா தினந்தோறும் கேட்டுக்கொள்வார்.
அவர்கள் இதை மிகவும் ஜாக்கிரதையாகவும், பிரியத்துடனும் செய்வர். இவ்வாறு அளிக்கப்பட்ட ஒவ்வொரு கவள உணவும் அடியவர்களுக்குப் போஷாக்கையும், திருப்தியையும் தந்தது. எத்தகைய இனிமையான, விருப்பமான, புனிதமாக்கப்பட்ட உணவு அது! எப்போதும் புனிதமானது, தெய்வீகமானது.
ஒரு கிண்ணம் மோர்
ஒருமுறை இந்த கூட்டத்திலிருந்தபோது ஹேமத்பந்த் வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டார். அப்போது பாபா அவருக்கு ஒரு கிண்ணத்தில் மோர் கொடுத்தார். அதன் வெள்ளையான தோற்றம் அவரை மகிழ்வித்தது. ஆனால் வயிற்றில் அதற்கு இடம் இருக்காது என்று அஞ்சி லேசாக உறிஞ்சினார். மிகவும் சுவையாக இருந்தது. அவரது தடுமாறும் எண்ணத்தைப் புரிந்துகொண்ட பாபா, "எல்லாவற்றையும் குடித்துவிடு. இனிமேல் இம்மாதிரி வாய்ப்பு உனக்குக் கிடைக்காது" என்று கூறினார். அப்போது ஹேமத்பந்த் அதை முழுக்கவும் பருகினார். பாபாவின் உரை தீர்க்கதரிசனமானது என்று கண்டார். ஏனெனில் பாபா சீக்கிரத்தில் மஹாசமாதியடைந்தார்.
இப்போது வாசகர்கள் ஹேமத்பந்துக்கு நிச்சயம் நன்றி செலுத்த வேண்டும். அவர் கிண்ணத்தில் இருந்த மோரை அருந்தினார். ஆனால் பாபாவின் லீலைகள் என்ற ரூபத்தில் வேண்டிய அளவு அமிர்தத்தை நமக்கு விநியோகித்தார். பற்பல கிண்ணங்கள் அமிர்தத்தை நாம் பருகுவோம், திருப்தியடைந்து மகிழ்வோம்.
ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
• கீதையின் ஒரு ஸ்லோகத்திற்கு
பாபாவின் பொருள் விளக்கம்
• சமாதி மந்திர் கட்டுதல்
இந்த அத்தியாயம் பகவத்கீதையின் ஒரு செய்யுளுக்கு பாபாவின் விளக்கத்தை அளிக்கிறது. பாபாவுக்கு வடமொழி தெரியாது என்றும், பொருள் விளக்கம் நானா சாஹேப் சாந்தோர்கரினுடையது என்றும் சிலர் ஆட்சேபித்ததால், ஹேமத்பந்த் அந்த ஆட்சேபத்தை மறுத்து வாதாடி வேறொரு அத்தியாயம் எழுதினார். ஐம்பதாம் அத்தியாயமும் இதே உட்கிடைப் பொருளை விவரிப்பதால் அதுவும் இந்த அத்தியாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
முன்னுரை
மஹாசமாதி எய்தும்வரை ஸ்ரீ சாயி வாழ்ந்து நடமாடிய ஷீர்டியும், த்வாரமாகாயியும் நற்பேற்றுக்குரியவைகள். யாருக்காக அவர் அத்தனை தூரம் வந்தாரோ, எவருடைய நன்றிக்கடனுக்குத் தம்மை உரியவராக்கிக் கொண்டாரோ, அத்தகைய ஷீர்டி மக்கள் ஆசீர்வதிக்கபப்ட்டவர்கள். முதலில் ஷீர்டி ஒரு குக்கிராமம்தான். ஆனால் அவர்தம் தொடர்பின் காரணமாக பெரும் முக்கியத்துவத்தை எய்திற்று. ஒரு தீர்த்தமாகவும், புனிதப் பயணத்துக்குரிய ஒரு புண்ணிய ஷேத்திரமாகவும் ஆனது. ஷீர்டியின் பெண்மணிகளும் அதே அளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்பால் அவர்கள் கொண்டிருந்த முழுமனதான சிதையாத நம்பிக்கையும் நற்பேற்றுக்குரியது. அவர்கள் குளிக்கும்போதும், சோளத்தை அரைக்கும்போதும், பொடி செய்யும்போதும், மற்ற இல்லற தர்மங்களைச் செய்யும்போதும் பாபாவின் புகழைப் பாடினார்கள். அவர்களின் அன்பு நற்பேற்றுக்குரியது. ஏனெனில் கேட்போரின், பாடுவோரின் மனங்களில் கொந்தளிப்பை அகற்றி சாந்தப்படுத்தியது. இனிமையான பாடல்களை அவர்கள் பாடினார்கள்.
பாபாவின் பொருள் விளக்கம்
பாபாவுக்கு வடமொழி தெரியும் என்பதை ஒருவரும் நம்பவில்லை. ஒருநாள் நானா சாஹேப் சாந்தோர்கருக்குக் கீதையின் ஒரு செய்யுளுக்கு சிறந்த பொருள் விளக்கம் அளித்து அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தினார். இதைப்பற்றிய சுருக்கமான விபரம் தேவ் என்னும் ஓய்வுபெற்ற மம்லதாரால் எழுதப்பட்டு, சாயிலீலா சஞ்சிகையில் — தொகுப்பு 7 'ஸ்புதவிஷயா' பக்கம் 563 — மராத்தியில் பதிப்பிக்கப்பட்டது.
சகோதரர் நரசிம்மஸ்வாமி எழுதிய இரு நூல்களான 'சாயிபாபாவின் சாஸனாம்ருதத் திருமொழிகள்' — பக்கம் 61 , ' ஆகியவற்றில் இதைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். இது மேற்குறித்து ஸ்வாமி எழுதிய 'பக்தர்களின் அனுபவங்கள் 3' — பக்கம் 66 — இலும் பதிப்பிக்கப்பட்டு இருக்கிறது. இப்பொருள் குறித்து நானா சாஹேபிடமிருந்தே தேவ் நேரடித் தகவல் பெற்றாராதலால் அவருடைய கூற்றையே கீழே அளிக்கிறோம்.
நானா சாஹேப் சாந்தோர்கர் வேதாந்தத்தில் ஒரு சிறந்த மாணவர். அவர் கீதையை விளக்கங்களுடன் பயின்று இருக்கிறார். அவைகள் எல்லாவற்றையும் பற்றி தாம் மிகவும் கற்றுச் சிறந்த அறிவாளியெனக் கர்வமடைந்தார். இவைகளைப் பற்றியோ, வடமொழியைப் பற்றியோ பாபாவுக்கு ஒன்றுமே தெரியாது என்று கற்பனை செய்துகொண்டார். எனவே, ஒருநாள் பாபா குட்டை அம்பலப்படுத்தினார்.
இந்நாட்கள் பாபாவிடம் கூட்டம் திரளத் தொடங்குவதற்கு முன்பாகும். அப்போது அத்தகைய அடியவர்களிடம் பாபா தனியாக உரையாடல் நிகழ்த்துவதுண்டு. நானா அவரருகில் பாபாவின் கால்களைப் பிடித்துவிட்டுக்கொண்டு எதையோ முணுமுணுத்துக்கொண்டிருந்தார்.
பாபா: நானா, உனக்குள்ளே என்ன முணுமுணுத்துக்கொண்டிருக்கிறாய்?
நானா: வடமொழியிலிருந்து ஒரு ஸ்லோகத்தை நான் ஒப்புவித்துக்கொண்டிருக்கிறேன்.
பாபா: என்ன ஸ்லோகம்?
நானா: பகவத்கீதையிலிருந்து
பாபா: அதைப் பலமாகக் கூறு
நானா: — பகவத்கீதை அத்தியாயம் 4இல், 34வது ஸ்லோகத்தைப் பின்வருமாறு ஒப்பித்தார்
தத்வித்தி ப்ரணிபாதேனே பரிப்ரஷ்னேன ஸேவயா
உபதேக்ஷ்யந்தி தே ஞானம் ஞானினஸ்தத்வ தர்ஷின:
பாபா: அது உனக்குப் புரிகிறதா?
நானா: ஆம்
பாபா: அப்படியானால் என்னிடம் அதை விளக்கிக் கூறு.
நானா: சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தும், குருவிடம் கேட்டும், பணிவிடை செய்தும், இந்த ஞானம் என்பது என்ன என்பதை அறிவாயாக. அப்போது உண்மை ஞானத்தின் சத்பொருளை — பிரம்மத்தை — எய்திய அந்த ஞானிகள், ஞானோபதேசத்தை உனக்கு நல்குவார்கள் என்பது அதன் பொருள்.
பாபா: செய்யுள் முழுவதற்குமான இத்தகைய திரள் கருத்து எனக்குத் தேவையில்லை. ஒவ்வொரு சொல்லுக்கும் அதன் இலக்கணவேகம், பொருள் ஆகியவற்றை எனக்குச் சொல்.
பின்னர் நானா அதைப் பதம் பதமாக விவரித்தார்.
பாபா: வெறுமனே சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தால் போதுமா?
நானா: ப்ரணிபாத என்ற சொல்லுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் என்னும் பொருள் தவிர வேறு எப்பொருளும் எனக்குத் தெரியாது.
பாபா: பரிப்ரஷ்னா என்றால் என்ன?
நானா: கேள்வி கேட்டல்
பாபா: ப்ரஷ்னா என்றால் என்ன பொருள்?
நானா: அதுவே — கேட்டல்
பாபா: பரிப்ரஷ்னாவைப் போல் ப்ரஷ்னாவும் அதே பொருளை உணர்த்தினால் வியாஸர் ஏன் பரி என்னும் அடைமொழியை முன்னால் சேர்த்தார்? வியாஸர் பைத்தியமாய் இருந்தாரா?
நானா: பரிப்ரஷ்னாவுக்கு அதைத்தவிர வேறெந்த பொருளும் எனக்குத் தெரியாது.
பாபா: 'சேவா' அது எத்தகைய சேவையைக் குறிக்கிறது?
நானா: நாங்கள் எப்போதும் செய்துகொண்டிருக்கும் அதையே தான்.
பாபா: அத்தகைய சேவை செய்தால் போதுமா?
நானா: 'சேவை' என்ற சொல் அதைத்தவிர வேறு எதைக் குறிக்கிறது என்று எனக்குத் தெரியாது.
பாபா: அடுத்த வாக்கியத்தில் 'உபதேஷ்யந்தி தே ஞானம்' என்பதில் ஞானம் என்ற சொல்லுக்கு வேறு எந்த சொல்லையாவது போட்டு அதை அங்ஙனம் படிக்க முடியுமா?
நானா: ஆம்.
பாபா: என்ன சொல்?
நானா: அஞ்ஞானம்
பாபா: இந்தச் சொல்லைக் போட்டு — ஞானத்துக்குப் பதில் — செய்யுளிலிருந்து ஏதாவது பொருள் உணரப்படுகிறதா?
நானா: சங்கரபாஷ்யம் அத்தகைய பொருள் தரும் அமைப்பு எதையும் தரவில்லை.
பாபா: அவர் தராததைப் பற்றி இலட்சியம் செய்யாதே. அஞ்ஞானம் என்ற சொல் என்னும் சிறந்த பொருளை உணர்த்துமென்றால், அதை உபயோகிப்பதற்குத் தடை ஏதும் உண்டா?
நானா: அஞ்ஞானம் என்பதை அதில் வைத்து பொருளை உணர்வது எவ்வாறு என்பது எனக்கு விளங்கவில்லை.
பாபா: கிருஷ்ணர் அர்ஜுனனை ஞானிகளையும், தத்துவ தரிசிகளையும் நாடி அவர்களை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து தத்துவ விசாரணையையும், சேவையையும் செய்யுமாறு ஏன் சொல்கிறார்? கிருஷ்ணர் தாமே ஒரு தத்துவதரிசியும் உண்மையில் ஞானரூபமுமேயல்லவா?
நானா: ஆம். அங்ஙனமேயானால் அவர் அர்ஜுனனிடம் ஞானிகளை அணுகுமாறு ஏன் குறிப்பிட்டார் என்பது எனக்குப் புரியவில்லை?
பாபா: இதை நீ புரிந்துகொள்ளவில்லையா?
நானா செருக்குக் குலைவுற்றார். கர்வம் அழிக்கப்பட்டது. பின்னர் பாபா விவரிக்க ஆரம்பித்தார்.
ஞானிகளின் முன்னால் வெறுமனே சாஷ்டாங்கமாக நமஸ்கரிப்பது மட்டும் போதாது. நம் சத்குருவிடம் சர்வவாஸ்வ சரணாகதியடைய — பரிபூரண — சமர்ப்பணம் வேண்டும்.
கேள்வி கேட்டால் மட்டும் போதாது. ஒழுங்கற்றமுறையிலும், குருவை சிக்கலில் மாட்டிவிடும் வகையிலும் கேட்கக்கூடாது. விடைகளிலுள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டவோ அல்லது பயனற்ற ஆர்வத்துடன் கேட்கப்படவோ கூடாது. அது காரிய மனப்பான்மையுடன் ஆன்மிக முன்னேற்றம் அல்லது மோட்சத்தை அடையும் நோக்கத்துடன் இருக்கவேண்டும்.
சேவை என்பது ஏதோ ஒரு பணிசெய்வது அல்ல. தான் செய்ய அல்லது செய்யமறுக்க உரிமையுள்ளவன் என்பது போன்ற உணர்வுகளைத் தன்னுள் இருத்திக்கொண்டு செய்வது சேவையன்று. உடலின் அதிபதி தான் அல்ல என்றும் உடல் குருவுக்கே அர்ப்பணமானது என்றும் அவருக்குச் சேவை செய்வதற்காக மட்டுமே உளதாய் இருக்கிறது என்றும் உணரவேண்டும். இதன்படி நடந்தால் முந்தைய ஸ்லோகத்தில் குறிப்பிட்ட 'ஞானம்' என்பது எதனைக் குறிக்கிறது என்று சத்குரு உணர்த்துவார். குரு அஞ்ஞானத்தைப் போதிக்கிறார் என்று கூறுவதன் பொருள் நானாவுக்கு விளங்கவில்லை.
பாபா: எங்ஙனம் ஞானோபதேசம் செயற்படுத்தப்படுகிறது? அறியாமையை அழிப்பதே ஞானம். கீதை அத். 18ல் 66வது ஸ்லோகத்துக்கு ஞானேஷ்வரியின் விளக்கச்செய்யுள் 1396ல் கூறப்படுவதாவது: "ஓ! அர்ஜுனா, அறியாமையை அகற்றுவது இத்தகையது, அதாவது கனவும், தூக்கமும் மறைந்துவிடுமானால் நீ உன்னுடையவனே. அது அங்ஙனமே", மற்றும் கீதை அத்.5, ஸ்லோகம் 16க்கு ஞானேஷ்வரியின் விளக்கச்செய்யுள் 83 கூறுவதாவது அறியாமையை அழிப்பது என்பதைத் தவிர ஞானத்தில் மாறுபாடாகவோ தற்சார்புடையதாகவோ வேறு எதுவும் உள்ளதா?! — இல்லையென்பது குறிப்பு . இருளைத் துரத்துவது என்றால் ஒளி எனப்பொருள்.
த்வைதத்தை அழிப்பதென்றால் அத்வைதம் எனப்பொருள். த்வைதத்தை அழிப்பதுபற்றிப் பேசும்போதெல்லாம் நாம் அத்வைதத்தைப்பற்றிப் பேசுகிறோம். இருளை அகற்றுவது பற்றிப் பேசும்போதெல்லாம் ஒளியைப் பற்றிப் பேசுகிறோம். அத்வைத நிலையை நாம் உணர வேண்டுமென்றால், நம் மனதிலுள்ள த்வைத உணர்வை நீக்கவேண்டும். அதுவே அத்வைத நிலையை நாம் உணர்வதாகும். த்வைத நிலையை மனதில் கொண்டுள்ள ஒருவன், அத்வைத நிலையைப்பற்றி எங்ஙனம் பேசமுடியும்? அப்படி ஒருவன் பேசுவானாகில் அதே நிலையை அடைந்தாலொழிய அதை எங்ஙனம் ஒருவன் அறிமுடியம்? உணர முடியும்?
மீண்டும் கூறுமிடத்து சீடனும் சத்குருவைப் போலவே
உண்மையில் ஞானத்தின் பண்புருவமானவன். மனப்பான்மை, மேலான உணர்வு, மிகச்சிறந்த அமானுஷ்ய சத்துவநிலை, ஒப்பற்ற செயலாற்றல், ஐஸ்வர்ய யோகம் — தெய்வீக சக்திகள் — இவைகளிலேயே சீடனுக்கும், குருவுக்குமுள்ள வேறுபாடு நிலவுகிறது. குரு நிர்குணமானவர், சச்சிதானந்தமானவர். உண்மையிலேயே மனித வர்க்கத்தை உயர்த்தி உலகை உய்விப்பதற்கே அவர் மானுட உருவம் எடுக்கிறார். ஆனால் அதன் பொருட்டாக அவரது உண்மையான நிர்குணத்தன்மை எள்ளளவும் பாதிக்கபடுவதில்லை.
அவர்தம் வியாபகம் — அல்லது உளதாயிருக்கும் தன்மை — தெய்வீக சக்தி, ஞானம் முதலியன குறைவதில்லை. சீடனும் அதே ஸ்வரூபத்தில்தான் இருக்கிறான். கணக்கற்ற பிறப்பு, இறப்புக்களுடைய முன்வினைகளின் விளைவானது அறியாமை என்னும் ரூபத்தில் அவன் பார்வையினின்று, தான் சுத்த சைதன்யைன் என்பதை அறியவிடாமல் மறைக்கிறது. — கீதை: அத். 5, சுலோகம். 15 — இங்ஙனமே மேலே கூறப்பட்டவிதமாக அவன் 'நான் ஜீவன்' தான் ஒரு தாழ்வான பரிதாபமான ஜீவன் என்று எண்ணுகிறான். அறியாமையாகிய இவ்வேர்களை குரு கிள்ளியெறிந்து அவனுக்கு உபதேசம் அல்லது அறிவுரை அளிக்கவேண்டும்.
தாழ்வான ஈனமான எல்லையற்ற பிறவிகளை எடுத்து பல முடிவில்லாத பிறப்புகளினால் திக்பிரமை அடைந்துள்ள சீடனுக்கு குரு நூற்றுக்கணக்கான பிறப்புகளில் "நீ கடவுள், நீ வலிமையுள்ளவன், நீ செல்வமுள்ளவன்' என்று உபதேசித்து அறிவுறுத்துகிறார். பின்னர் தானே உண்மையில் கடவுள் என்பதை சிறிதளவு உணர்கிறான்.
சீடன் உழன்றுகொண்டிருப்பதான மாயத்தோற்றமானது யாதெனின் - தானே உடலென்றும், தானே ஜீவனென்றும் — அஹங்காரம் , பரமாத்மாவாகிய கடவுளும், உலகமும் தன்னிலிருந்து வேறுபட்டவைகள் என்பதுமாகும். இது கணக்கற்ற முற்பிறவிகளில் அவன் மரபுரிமையாகப் பெற்ற பிழையானதொரு கருத்தாகும். அந்த மாயையின் அடிப்படையிலான செயல்களால் மகிழ்ச்சி - துயரம் இரண்டையும் கலந்து அனுபவிக்கிறான். இம்மாயையை, இப்பிழையை, இந்த அறியாமையின் வேரை அகற்றுவதற்கு அவன் விசாரணை செய்யத் தொடங்கவேண்டும். எங்ஙனம் இந்த அறியாமை உண்டாகிறது? அது எங்கு உள்ளது? இதை அவனுக்கு உணர்த்துவதுதான் குரு உபதேசம்.
அஞ்ஞானம் என்பது கீழ்க்கண்டவையே:
1. நான் ஒரு ஜீவன் — ஜந்து
2. உடம்பே ஆத்மா — நானே உடல்
3. கடவுள், உலகம், ஜீவன் இவை எல்லாம் வேறானவை
4. நான் கடவுளல்ல
5. உடல், ஆத்மா அன்று என்பதை அறியாமலிருத்தல்
6. கடவுள், உலகம், ஜீவன் இவைகள் எல்லாம் ஒன்று
என்பதை அறியாமலிருத்தல்
இப்பிழைகளெல்லாம் அவனது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டாலன்றி ஜீவன், உலகம், உடம்பு இவைகளெல்லாம் என்ன?! அவைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவா!, ஒன்றுக்கொன்று மாறுபாடானவையா! அல்லது அனைத்தும் ஒன்றேதானா என்பதை சீடன் அறிந்துகொள்ள முடியாது.
இவைகளை அவனுக்குப் போதித்து, அவனது அறியாமையை அழிப்பதே இந்த ஞானம், அஞ்ஞானம் இவைகளின் போதனைகளாகும். ஞானமூர்த்தியாகிய ஜீவனுக்கு ஏன் இந்த ஞானம் போதிக்கப்படவேண்டும்? உபதேசம் என்பது அவரது தவறைச் சுட்டிக்காட்டி அறியாமையை அழிக்கவேயாகும்.
பாபா தொடர்ந்தார்: 'ப்ரணிபாத' என்பது சரணாகதி - உடலால், உள்ளத்தால், செல்வங்களுடன் சரணாகதியடையவேண்டும் - ஏன் கிருஷ்ணர் அர்ஜுனனை வேறு ஞானிகளைக் கேட்கும்படி கூறுகிறார்?
நல்ல பக்தன் யாவற்றையும் வாசுதேவன் எனக்கொள்கிறான். — கீதை அத்.7, சுலோகம் 9
எந்த குருவும் அடியவருக்குக் கிருஷ்ணராகிறார். குரு, சீடனை வாசுதேவனாக நினைக்கிறார். இவர்கள் இருவரையும் கிருஷ்ணர் தம்முடைய பிராணனும், ஆத்மனுமாக்கிக்கொள்கிறார். — கீதை அத். 7, சுலோகம் 18 ஞானதேவரின் விளக்கம் — அத்தகைய பக்தர்களும், குருவும் இருப்பதைக் கிருஷ்ணர் அறிந்திருப்பதால் அவர்களின் பெருமை உயர்ந்து திகழுதற்பொருட்டாகவும், அனைவரும் அறிதற்பொருட்டாகவும் அர்ஜுனனிடம் அவர்களைப்பற்றிச் சொல்கிறார்.
சமாதி மந்திர் கட்டுதல்
தாம் நிறைவேற்றி முடித்தற்பொருட்டாக ஆர்வம்கொண்ட விஷயங்கள் குறித்து பாபா பேசியதோ எவ்விதமான வெற்று ஆர்ப்பரிப்பு செய்ததோ கிடையாது.
ஆனால் நிதானமாக, நிச்சயமாக பலன்கள் கிட்டுமாறு சூழ்நிலைகளையும், சுற்றுப்புறங்களையும் அவர் அவ்வளவு திறமையாக அமைத்தது குறித்து மக்கள் ஆச்சரியப்பட்டனர். இக்கருத்துக்கேற்ற நிகழ்ச்சி சமாதிமந்திரின் கட்டிடவேலையாகும்.
நாக்பூரைச் சேர்ந்த புகழ்பெற்ற கோடீஸ்வரரான ஸ்ரீமான் பாபு சாஹேப் பூட்டி தனது குடும்பத்துடன் ஷீர்டியில் வசித்து வந்தார். அங்கு தனக்குச் சொந்தமான கட்டிடம் ஒன்று வேண்டும் என்று அவர் மனதில் எண்ணம் ஒன்று எழுந்தது. இதற்கு சில நாட்களுக்குப் பிறகு தீஷித் வாதாவில் தூங்கிக்கொண்டிருக்கும்போது அவர் ஒரு காட்சி கண்டார்.
பாபா அவர் கனவில்தோன்றி அவருக்குச் சொந்தமான வாதா ஒன்றை கோவிலுடன் கட்டும்படி பணித்தார். அங்கு தூங்கிக்கொண்டிருந்த ஷாமாவுக்கும் அதே மாதிரி காட்சி தோன்றியது. பாபு சாஹேப் கண்விழித்தபோது, ஷாமா அழுதுகொண்டிருப்பதைப் பார்த்தார். ஏன் என்று அவரைக் கேட்டார். அவர் பாபா தம் கனவில், தமதருகில் நெருங்கிவந்து "வாதாவைக் கோவிலுடன் கட்டுக, நான் உங்களுடைய ஆசைகளைப் பூர்த்தி செய்வேன்!" எனத் தெளிவாக ஆணையிட்டார். பாபாவின் இனிமையும், அன்பும் பொருந்திய மொழிகளைக் கேட்டு நான் உணர்ச்சிவசப்பட்டேன். என் தொண்டை அடைத்தது. எனது கண்களில் நீர் பொங்கி வழிந்தது. நான் அழத் தொடங்கிவிட்டேன் என்றார்.
பாபு சாஹேப் இருவரது கனவும் ஒத்திருந்ததைக் கண்டு ஆச்சயரியப்பட்டார். பணமும், வசதியும் பொருந்திய அவர் அங்கு ஒரு வாதா கட்டத் தீர்மானித்தார். மாதவ்ராவுடன் கூடி ஒரு திட்டம் தீட்டினார். காகா சாஹேப் தீஷித்தும், அதை ஆமோதித்தார். பாபாவின் முன்னர் அது சமர்ப்பிக்கப்பட்டபோது அவரும் அதை உடனே அங்கீகரித்தார். பின்னர் கட்டிடவேலை முறைப்படி ஆரம்பமானது. ஷாமாவின் மேற்பார்வையில் கீழ்த்தளம், உக்கிரான அறை, கிணறு முதலியன பூர்த்தியாயின. லெண்டிக்குப் போகும்போதும் வரும்போதும், பாபாவும் சில முன்னேற்றங்களுக்கு யோசனை தெரிவித்தார். தொடர்ந்து மேற்படி வேலைகள் பாபு சாஹேப் ஜோகிடம் ஒப்படைக்கப்பட்டது. அது நிறைவேறிக் கொண்டிருக்கும்போது திறந்த முற்றம் அல்லது மேடை இருக்கவேண்டும் என்றும், நடுவில் ஸ்ரீ முரளீதரின் உருவம் — கண்ணன் குழலுடன் — ப்ரதிஷ்டை செய்யப்பட வேண்டுமென்றும் பாபு சாஹேப் பூட்டிக்கு எண்ணம் உதித்தது. இவ்விஷயத்தை பாபாவிடம் சொல்லி பாபாவுடைய சம்மதத்தைப் பெறுவதற்கு அவர் ஷாமாவைக் கேட்டுக்கொண்டார். பாபா வாதாவைக் கடந்து சென்றுகொண்டிருக்கும்போது ஷாமா இதைப்பற்றி அவரிடம் கேட்டார். ஷாமா கூறியதைக் கேட்டு பாபா சம்மதித்து "கோவிலின் வேலை முடிந்ததும் நான் அங்கு தங்குவேன்" என்றார்.
பின்னர் வாதாவை உற்றுப்பார்த்து மேலும் தொடர்ந்தார். "வாதா பூர்த்தியானதும் நாமே அதை உபயோகித்துக்கொள்ளலாம். நாம் அங்கு வாழ்வோம், நடப்போம், விளையாடுவோம், ஒருவரையொருவர் கட்டியணைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருப்போம்". பின்னர் ஷாமா பாபாவிடம் வாதாவின் மத்திய மணடபத்துக்கு அஸ்திவாரம் போட இது மங்கள வேளையா என்று கேட்டபோது பாபா சரியெனக் கூறினார். ஷாமா ஒரு தேங்காயை உடைத்து வேலையை ஆரம்பித்தார். உரிய சமயத்தில் வேலை முடிவடைந்து முரளீதரின் சிலை ஒன்றுக்கும் ஆர்டர் கொடுக்கப்பட்டது. ஆனால் அது தயாராகும் முன்னரே ஒரு புதிய நிகழ்ச்சி நேரலாயிற்று.
பாபா மிகவும் கடுமையாக நோயுற்று இயற்கை எய்தும் தருணத்தில் இருந்தார். பாபா இயற்கை எய்தினால் தமது வாதா பாபாவின் திருவடிகளால் புனிதப்படுத்தப்பட இயலாது போகும் என்றும், அவரது பணம் முழுவதும் — சுமார் ஒரு இலட்சம் ருபாய் — வீணாக்கப்பட்டுவிட்டது என்றும் பூட்டி நினைத்து மிகவும் வருத்தமும், மனச்சோர்வும் அடைந்தார். இயற்கை எய்துவதற்குச் சிறிது தருணத்துக்கு முன், "என்னை வாதாவில் வையுங்கள்" என்ற பாபாவின் மொழிகள் பாபு சாஹேபை மட்டுமல்ல, மற்ற எல்லோரையுமே தேற்றின. உரிய தருணத்தில் பாபாவின் புனிதமேனி, முரளீதரருக்காகத் திட்டமிடப்பட்ட கோவிலின் மேடையில் சமாதியாக்கப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டது. பாபா தாமே முரளீதரரானார். வாதாவும் சாயிபாபாவின் சமாதிமந்திர் — கோவில் — ஆனது. அவரின் அற்புதமான வாழ்வு ஆழங்காண இயலாதது.
பாபு சாஹேப் பூட்டி ஆசீர்வதிக்கப்பட்டவர். அதிர்ஷ்டம் உள்ளவர். அவருடைய வாதாவில் பாபாவின் புனிதமான தூய உடம்பு இருக்கிறது.
ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
(1) திருமதி தேவின் 'உத்யாபன்' விழாவிற்கு
ஒரு சந்நியாசி போல் மற்ற இருவருடன்
செல்லுதல்
(2) ஒரு சித்திர ரூபத்தில் ஹேமத்பந்தின்
வீட்டுக்குச் செல்லுதல்
முன்னுரை
தம் அடியவர்களுக்கு லௌகிக, ஆன்மிக விஷயங்களில் அறிவுரை பகரும் ஸ்ரீ சமர்த்த சாயி புனிதமானவர்.
தங்கள் வாழ்வின் இலட்சியத்தை அவர்கள் எய்தும் வண்ணம் அவர்களை ஊக்குவித்து மகிழ்வடையச் செய்கிறார். அவர்களின் தலையில் தம் கையால் ஆசீர்வதிக்கும்போது தமது சக்தியை அவர்களிடம் மாற்றி, பேதப்படுத்தும் உணர்ச்சியை அழிக்கிறார். த்வைத உணர்வின்றி, வித்தியாசமின்றி பக்தர்கள் கீழே வீழ்ந்து வணங்கும்போது அவர்களை அரவணைத்து எட்டி அடையமுடியாத பொருளாகிய தம்மையே அவர்களுக்குக் கொடுக்கிறார்.
மழைக்காலத்தில் கடல், ஆறுகளுடன் கலப்பதுபோல் பக்தர்களுடன் அவர் ஒன்றாகி அவர்களுக்குத் தம் ஆற்றலையும், அந்தஸ்தையும் அளிக்கிறார். கடவுளின் லீலைய மட்டும் பாடிக்கொண்டிருப்போருக்கு நிகராக அல்லது அவர்களைக் காட்டிலும் கடவுளின் அடியவர்களின் லீலா வினோதங்களைப் பாடுவோர் பாபாவுக்குப் பிரியமானவர்கள் என்பது இதன்மூலம் அறியப்படுகிறது. தற்போது இவ்வத்தியாயத்தின் கதைகளுக்குத் திரும்புவோம்.
திருமதி தேவின் உத்யாபன் விழா
தாணே ஜில்லாவிலுள்ள டஹாணூ மம்லதார் திரு தேவ், அவரது தாயார் 25 - 30 விதமான பிரார்த்தனைகளை அனுஷ்டித்ததன் முடிவாக ஒரு உத்யாபன் — பூர்த்தி — விழாவை நடத்த இருந்தார். நூறு அல்லது இருநூறு அந்தணர்களுக்கு உணவளிப்பதும் இவ்விழாவுடன் சேர்ந்தவொரு அம்சமாகும். தேவ், விழாவுக்கு ஒரு நாளை நிச்சயித்தார். சாயிபாபாவின் விஜயத்தாலன்றி விழா உரியமுறையில் பூர்த்தி அடையாதாகையால், விழா விருந்தில் கலந்துகொள்ள அவரின் சார்பில் பாபாவை வேண்டிக்கொள்ளுமாறு பாபு சாஹேப் ஜோகிற்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். பாபாவிடம் பாபு சாஹேப் ஜோக் அக்கடிதத்தைப் படித்துக் காண்பித்தார். பாபா, தேவின் தூய்மையான, உள்ளபூர்வமான அழைப்பினை கவனத்துடன் கருத்திற்கொண்டு கூறினார், "என்னை நினைவில் கொண்டிருப்பவனை நான் எப்போதும் நினைத்துக்கொண்டு இருக்கிறேன். எனக்கு எவ்வித வாகனமோ, வண்டியோ, இரயிலோ, அல்லது விமானமோ தேவையில்லை. என்னை எவன் அன்புடன் கூப்பிடுகிறானோ அவனிடம் ஓடிச்சென்று நானே வெளிப்படையாகக் கலந்துகொள்கிறேன். நம்மில் மூன்றுபேர் — மூவர் — நான், நீ, மற்றும் ஒருவன் சென்று அவ்விழாவில் கலந்துகொள்வதாக அவருக்கு ஒரு மகிழ்வான பதில் எழுது" என்றார்.
ஜோக், பாபா கூறியதை தேவிடம் தெரியப்படுத்தினார். பின்னர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாராயினும், பாபா தாமே நேரிடையாக ராஹதா, ரூய், நீம்காவன் முதலிய இடங்களைத் தவிர வேறு இடங்களுக்குச் சென்றதில்லை என்று அவருக்குத் தெரியும். பாபா சர்வவியாபியாய் இருப்பதால் அவரால் இயலாதது ஒன்றும் இல்லை என்றும், அவர் விரும்பினால் எந்த ரூபத்திலும் திடீரென்று வந்து தமது சொற்களை நிறைவேற்றலாம் என்றும் எண்ணினார்.
இதற்கு சில நாட்களுக்கு முன்னர் வங்காள உடையிலுள்ள ஒரு சந்நியாசி, பசுக்களைப் பாதுகாத்தாலே தனது குறிக்கோள் எனக் கூறிக்கொண்டு டஹாணு ஸ்டேஷன் மாஸ்டரிடம் நிதி வசூலிக்க வந்தார். பின்னவர் அவரை ஊருக்குள் சென்று மம்லதார் தேவ்வைப் பார்த்து அவரின் உதவியால் நிதி சேகரிக்கச் சொன்னார். அத்தருணம் மம்லதார் அங்குவர நேர்ந்தது. ஸ்டேஷன் மாஸ்டர் சந்நியாசியை அவருக்கு அறிமுகப்படுத்தினார். இருவரும் மேடையில் இருந்து பேசிக்கொண்டிருந்தனர்.
தேவ், வேறு தர்மத்திற்காக ஒரு நிதி வசூல் ஏற்கனவே ராவ் சாஹேப் நரோத்தம் ஷெட்டி என்ற பெரிய மனிதர் ஒருவரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் பிறிதொரு நிதி வசூலைத் தற்போது ஆரம்பிப்பது நன்றல்லவென்றும் அவர் இரண்டு அல்லது நான்கு மாதங்களுக்குப் பின்னர் அவ்விடத்துக்கு விஜயம் செய்தால் நல்லதென்றும் அவரிடம் கூறினார். இதைக்கேட்டு அத்துறவி அவ்விடத்தைவிட்டு அகன்றார்.
ஒரு மாதத்திற்குப் பின்னர் அத்துறவி ஒரு குதிரை வண்டியில் காலை சுமார் 10 மணியளவில் வந்து தேவ்வின் வீட்டின்முன் நின்றார். தேவ் அவர் நிதிக்காக வந்திருப்பதாக நினைத்தார். விழாவுக்கான ஏற்பாடுகளில் அவர் ஈடுபட்டிருப்பதைக் கண்டு, அத்துறவி தாம் பணத்துக்காக வரவில்லையென்றும் உணவிற்காக அங்கு வந்திருப்பதாகவும் கூறினார்.
தேவ்: மிக்க நன்று. மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கு நல்வரவு. இவ்வீடு தங்களுடையது.
துறவி: என்னுடன் மற்றும் இருவர் இருக்கிறார்கள்.
தேவ்: நல்லது, அவர்களையும் அழைத்துக்கொண்டு வாருங்கள்.
விருந்து நடைபெற இன்னும் இரண்டு மணிநேரம் இருந்ததால், எங்கு சென்று அவர்களை அழைத்து வரவேண்டுமென தேவ் கேட்டார். "அது தேவையில்லை. குறிப்பிட்ட நேரத்தில் நானே அவர்களுடன் வருவேன்" என்றார். தேவ் அவரை நடுப்பகலில் வரும்படி கூறினார். சரியாக மதியம் பன்னிரண்டு மணிக்கு அம்மூவரும் வந்து விருந்தில் பங்கேற்று, விருந்து உண்டபின் சென்றுவிட்டனர்.
விழா முடிந்ததும் தேவ், பாபாவின் வாக்குறுதி மீறலைக் குறித்து வருந்தி பாபு சாஹேப் ஜோக்கிற்கு ஒரு கடிதம் எழுதினார். ஜோக் பாபாவிடம் அக்கடிதத்துடன் சென்று அதைத் திறக்கும் முன்னரே பாபா, "ஆ! நான் வாக்குறுதி அளித்துவிட்டு ஏமாற்றிவிட்டதாக அவன் கூறுகிறான். விருந்துக்கு நான் மற்ற இருவருடன் செல்லவே செய்தேன். ஆனால் அவன் என்னைப் புரிந்துகொள்ளவில்லை. பின்னர் எதற்காக என்னை அழைக்கவேண்டும்? சந்நியாசி நிதி கேட்க அவனிடம் வந்திருப்பதாக அவன் எண்ணினான். அதுபற்றி அவனது ஐயத்தை நான் நீக்கவில்லையா? மற்றும் இருவருடன் வருவதாக நான் கூறவில்லையா? மூவரும் உரிய நேரத்தில் வந்து உணவு உட்கொள்ளவில்லையா?
பார், எனது மொழிகளைக் காப்பதற்கு நான் எனது உயிரையே தியாகம் செய்வேன். எனது மொழிகளுக்கு மாறுபட்டு நான் இருக்கவே மாட்டேன்" என்றார். இப்பதில் ஜோக்கின் உள்ளத்தை மகிழ்வடையச் செய்தது. இவை அனைத்தையும் தேவ்வுக்குத் தெரிவித்தார்.
அதை அவர் படித்தவுடனே ஆனந்தக் கண்ணீர் விட்டார். வீணாக பாபாவைக் குற்றம் கூறியதற்காக தம்மைத்தாமே கடிந்துகொண்டார். துறவியின் முந்தைய வருகையினால், தான் எவ்வாறு ஏமாற்றப்பட்டார் என்பதையும், உணவுக்காக தாம் இருவருடன் வருவதாகக் கூறிய துறவியின் கூற்றிலுள்ள குறிப்பை தான் எங்ஙனம் புரிந்துகொள்ளத் தவறிவிட்டார் என்பதையும் குறித்து மிகவும் ஆச்சரியப்பட்டார்.
அடியவர்கள் தாங்களே முழுமையாக சத்குருவிடம் சரணாகதி அடையும்போது, அவர்தம் வீட்டில் நடைபெறும் மதச்சடங்குகள் உரியமுறையில், தேவையான சம்பிரதாயங்களுடன் நடத்தப்படுகின்றனவா என்று அவர் கவனிக்கிறார் என்பதை இக்கதை நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது.
ஹேமத்பந்தின் ஹோலிப்பண்டிகை விருந்து
பாபா தமது சித்திர ரூபத்தில் தோன்றி தமது அடியவரின் ஆவலைப் பூர்த்தி செய்தார் என்பதைக் கூறும் மற்றொரு கதையைக் காண்போம்.
1917ம் ஆண்டு பங்குனி மாதம் பௌர்ணமி ஹோலிப்பண்டிகையன்று காலை ஹேமத்பந்த்க்கு ஒரு காட்சி தோன்றியது. பாபா அவரது கனவில் நன்றாக உடையணிந்த ஒரு துறவியைப்போன்று தோன்றி அவரை எழுப்பி அன்று உணவுக்காக அவரிடம் வருவதாகக் கூறினார். கண்விழித்து எழுந்த அவர் துறவியையோ அல்லது சாயியையோ காணவில்லை. ஆனால் அவர் கனவு நினைவுகூரத் தொடங்கியபோது, கனவில் துறவி கூறிய ஒவ்வொரு வார்த்தையையும் ஞாபகத்தில் கொணர்ந்தார்.
ஏழு ஆண்டுகளாக பாபாவுடன் அவர் தொடர்புடையவராக இருந்தாலும், பாபாவையே எப்போதும் தியானித்தபோதிலும் பாபா உணவுக்காகத் தம் வீட்டுக்கு வருவார் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. ஆயினும் பாபாவின் மொழிகளால் மனம் மகிழ்ந்து தமது மனைவியிடம் சென்று அன்று ஒரு புனிதமான நாளாக இருப்பதால் ஒரு துறவி விருந்தாளி உணவுக்காக வருகிறார் என்றும், அதிகமான உணவு தயார் செய்யவேண்டுமென்றும் கூறினார். அவள் விருந்தாளியைப் பற்றி யார்? எப்போது வருகிறார்கள்? எனக் கேட்டாள். தமது மனைவியை அலைக்கழிக்காத நியதியின் பொருட்டும், தப்பு எண்ணத்தைத் தவிர்த்தற்காகவும் உண்மையை அதாவது கனவினைப் பற்றி அவளிடம் கூறினார்.
பாபா, அவ்விடத்திற்கு — பாந்த்ரா — ஷீர்டியிலிருந்து அங்குள்ள நேர்த்தியான உணவை விடுத்து சாதாராணமான தங்கள் வீட்டு உணவை ஏற்க வருவாரா என்று அவள் ஐயத்துடன் கேட்டாள். ஹேமத்பந்த் அவளுக்கு, பாபா நேரிடையாக வரமாட்டார் என்றும், ஒரு விருந்தினர் ரூபத்தில் வருவார் என்றும் உறுதியளித்து இன்னும் சற்று அதிகமாக சாதம் வடிப்பதினால் அவர்கள் இழக்கப்போவது ஒன்றுமில்லை என்றும் கூறினார்.
இதன்பின்னர் விருந்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு மதியத்திற்குள் அது தயாராகியது. ஹோலி வழிபாடும் செய்யப்பெற்று இலை போடப்பட்டது. அதைச் சுற்றிலும் கோலமிடப்பட்டது. நடுஸ்தானம் விருந்தாளிக்கெனவும் மற்றவர்களுக்கு இரண்டு வரிசைகளிலும் இலைகள் போடப்பட்டன. குடும்பத்தின் எல்லா உறுப்பினர்களும், மகன்கள், பேரன்கள், புத்திரிகள், மருமகன்கள் அனைவரும் வந்து தத்தமது இடங்களில் அமர்ந்தனர். பல்வேறுவித உணவுவகைகள் பரிமாறப்பட்டன. இது நிகழ்ந்துகொண்டிருக்கையில் அனைவரும் விருந்தாளிக்காக எதிர்பார்த்திருந்தனர்.
மதியம் கடந்துவிட்டபோதிலும் ஒருவரும் வரவில்லை. பின்னர் கதவு சாத்தப்பெற்று தாளிடப்பட்டது. பின் அன்னசுத்தி — நெய் — விடப்பட்டது. இதுவே உண்ண ஆரம்பிப்பதற்கு அடையாளம். அக்கினிக்கு முறையான சமர்ப்பணமும், கிருஷ்ணருக்கு நைவேத்தியமும் கூட ஆயிற்று. குடும்பத்தினர் உண்ண ஆரம்பிக்கும் அதே தறுவாயில் வாசலில் காலடிச் சத்தம் தெளிவாகக் கேட்டது. ஹேமத்பந்த் உடனே சென்று கதவைத் திறந்தார். அலி முகமது, மௌலான இஸ்மு முஜாவர் ஆகிய இருவரைக் கண்டார். உணவு தயாராக இருப்பதையும், குடும்பத்தினர் உண்ணத் தயாராக இருப்பதையும் அவ்விருவரும் கண்டு ஹேமத்பந்த்திடம் மிகுந்த வருத்தம் தெரிவித்துத் தங்கள் குறுக்கீட்டுக்கு மன்னிப்புக் கோரினர்.
அவர்கள், "எங்களுக்காக நீங்கள் இருக்கையைவிட்டு எழுந்து ஓடி வந்திருக்கிறீர்கள். மற்றவர்கள் உங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றனர். எனவே தயவுசெய்து இந்த உங்கள் பொருளைப் பெற்றுக்கொள்ளுங்கள். நாங்கள், அதன் வியத்தகு கதை முழுவதையும் தங்களுக்குச் சௌகரியப்ப்படும்போது பின்னர் விவரிப்போம்" என்று கூறினார்கள். இவ்வாறு கூறிக்கொண்டே பழைய செய்தித்தாள் ஒன்றை மேசையின்மேல் வைத்தார்கள். ஹேமத்பந்த் அதனைப் பிரித்துப் பார்க்கையில், அவருக்குப் பெரும் ஆச்சரியத்தையும், வியப்பையும் விளைவிக்கும் வகையில் சாயிபாபாவின் பெரிய அழகிய படம் ஒன்றைக் கண்டார். உடம்பு முழுவதும் மயிர்க்கூச்செறிய, கண்களில் நீர்வழிய மிகவும் மனமுருகி தனது தலையைத்தாழ்த்தி படத்திலுள்ள பாபாவின் பாதங்களில் வைத்துக்கொண்டார். பாபா இத்தகைய ஆச்சர்ய லீலையால் தம்மை ஆசீர்வதித்திருப்பதாக நினைத்தார். அறிவதற்கு ஆர்வம் மேலிட, அப்படத்தை அவர்கள் எப்போது வாங்கினார்கள் என்று கேட்டார்.
அலி முஹமது தாம் அதை ஒரு கடையிலிருந்து வாங்கியதாகவும் எல்லோரும் காத்திருப்பதால் அப்படத்தைப் பற்றிய எல்லா விவரங்களையும் பிறிதொரு சமயம் சொல்லுவதாகவும் மற்றவர்களுடன் அவரை உண்ணச் செல்லுமாறும் கூறினார். ஹேமத்பந்த் அவர்களுக்கு நன்றி தெரிவித்து வழியனுப்பிவிட்டுச் சாப்பிட வந்தார். பின்னர் ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் படம் வைக்கப்பட்டு நைவேத்தியம் உரியமுறையில் செய்தான பிறகு அனைவரும் உண்ணத் தொடங்கினார்கள். படத்திலுள்ள அழகிய ரூபத்தைக்கண்டு அனைவரும் மிகமிக சந்தோஷமடைந்தனர். இவையெல்லாம் எங்ஙனம் நிகழ்ந்தன என்பது குறித்து வியந்தனர்.
ஹேமத்பந்த்தின் கனவில் கூறிய மொழிகளை பாபா இவ்வாறாக நிறைவேற்றினார். எல்லா விவரங்களுடன் கூடிய அப்படத்தின் கதை அதாவது எங்ஙனம் அலி முஹமது அதை பெற்றார்? ஏன் அதை அவர் வாங்கினார்? ஹேமத்பந்த்திடம் பின் ஏன் அதைக் கொடுத்தார்? என்பவை எல்லாம் அடுத்த அத்தியாயத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.
ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
• கந்தல் துணி திருடுதலும்
ஞானேஷ்வரி பாராயணமும்
முந்தைய அத்தியாயத்தில் குறிக்கப்பட்டுள்ளது போல் அந்தச் சித்திரத்தின் கதையை இங்கே தொடர்கிறோம்.
இந்து நிகழ்ந்து ஒன்பது ஆண்டுகளுக்குப் பின் அலி முஹமது, ஹேமத்பந்த்தைப் பார்த்துக் கீழ்வரும் கதையைக் கூறினார்.
பம்பாய் வீதிகளில் ஒருமுறை அவர் சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்தபோது இந்தப் படத்தை ஒரு தெரு வியாபாரியிடமிருந்து வாங்கினார். பின்னர் அதை கண்ணாடி, சட்டம் போட்டு பாந்த்ராவில் உள்ள தம் வீட்டில் தொங்க விட்டார். அவர் பாபாவை விரும்பினாராகையால் அப்படத்தைத் தினந்தோறும் தரிசித்து வந்தார். ஹேமத்பந்த்துக்கு அதைக் கொடுப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு, காலிலுள்ள கட்டிக்காக — வீக்கத்திற்காக — அவருக்கு ஒரு அறுவைச் சிகிச்சை செய்யப்பட வேண்டியிருந்தது. பம்பாயில் அவரது மைத்துனரான நூர் முஹமது பீர்பாயின் வீட்டில் அவர் தங்கியிருந்தார். பாந்த்ராவில் உள்ள அவரது வீடு மூன்றுமாத காலமாக சாத்தப்பட்டிருந்தது. ஒருவரும் அங்கு வசிக்கவில்லை. புகழ்பெற்ற பாபா அப்துல் ரஹ்மான், மௌலானா சாஹேப், முஹமது ஹுஸேன், பாபா சாயி, பாபா தாஜூதின் மற்றும் பல உயிருடன் இருந்த ஞானிகள் படங்களும் அங்கு இருந்தன. காலச்சக்கரம் இவைகளையும் விட்டு வைக்கவில்லை. பம்பாயில் அலி சுகவீனமுற்று கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார். படங்கள் எல்லாம் ஏன் அங்கு — பாந்த்ராவில் — கஷ்டப்படவேண்டும்? அவைகளுக்கும் உள்ளே வருதலும் வெளியே போதலும் — பிறப்பும், இறப்பும் — உண்டு எனத் தெரிகிறது. எல்லாப் படங்களும் தங்கள் விதியைச் சந்தித்தன. ஆனால் சாயிபாபாவின் படம் எங்ஙனம் அதற்குத் தப்பியது என்பதை ஒருவரும் எனக்கு இதுவரை விளக்கியதே இல்லை. சாயியின் எங்கும்நிறை தன்மையையும், சர்வவியாபித்துவத்தையும் அறிவுக்கெட்டாத அவரின் சக்தியையும் அது காண்பிக்கிறது.
அலிமுஹமது பல வருடங்களுக்கு முன் முஹமது ஹுஸேன் தாரியா டோபணிடமிருந்து ஞானி பாபா அப்துல் ரஹ்மானின் சிறிய படம் ஒன்றைப் பெற்றார். அதை அவர் தன் மைத்துனரான நூர் முஹமது பீர்பாயிடம் கொடுத்தார். அப்படம் அவரது மேசையில் எட்டு வருடங்கள் இருந்தது. ஒருமுறை நூர் முஹமது பீர்பாய் அதை ஒரு புகைப்படக்கலை நிபுணரிடம் எடுத்துச்சென்று உயிர் அளவுப்படமாகப் பெரியதாக்கி, அதன் பிரதிகளை அலிமுஹமது உட்பட தமது உறவினர்களிடையேயும், நண்பர்களிடத்தும் விநியோகித்தார்.
அலிமுஹமது அதை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் மாட்டினார். நூர் முஹமது, ஞானி அப்துல் ரஹ்மானின் சீடர். தமது குருவிடம் அவரால் நடத்தப்பட்ட ஒரு திறந்த தர்பாரில் அப்படத்தை அளிக்கச் சென்றபோது குரு கோபமடைந்து அவரை உதைப்பதற்காக ஓடினார். அவரை வெளியில் தள்ளினார். அவர் மிகவும் வருத்தமுற்று மனம் உடைந்தார். நூர் தனது பெரும் பணத்தையும் இழந்து, குருவின் கோபத்தையும், துன்பத்தையும் பெற்றதற்காக வருந்தினார். அவருடைய குருவுக்கு உருவ ஆராதனை பிடிக்காதாகையால், பெரிதாக்கபட்ட அப்படத்தை அப்போலோபந்தருக்கு எடுத்துச்சென்று ஒரு படகை வாடகைக்கு அமர்த்தி நீரில் சென்று மூழ்கடித்தார். நண்பர்களையும், உறவினர்களையும் தங்கள் பிரதிகளைத் திருப்பிக்கொடுக்கும்படி வேண்டி, அவைகளைத் திரும்பப் பெற்றபின் — மொத்தத்தில் ஆறு பிரதிகள் — அனைத்தையும் பாந்த்ரா கடலில் மீனவனைக்கொண்டு எறியச் செய்தார். இச்சமயத்தில் அலிமுஹமது அவரின் மைத்துனரது வீட்டில் இருந்தார்.
ஞானிகளின் படங்களையெல்லாம் உடனே தண்ணீரில் மூழ்கடித்துவிட்டால் அவரது துன்பங்கள் ஒரு முடிவுக்கு வந்துவிடுமென்று நூர் முஹமது கூறினார். இதைக்கேட்ட அலிமுஹமது தனது மேதாவை — மேனேஜரை — பாந்த்ரா வீட்டிற்கு அனுப்பி அங்கிருந்த ஞானிகள் அனைவரது படங்களையும் கடலில் எறியச்செய்தார்.
இரண்டு மாதத்திற்குப்பின் அலிமுஹமது தன் வீட்டிற்குத் திரும்பியதும் சுவரில் பாபாவின் படம் முன்போலவே மாட்டியிருந்ததைக்கண்டு வியந்தார். அவரது மேதா இதைத் தவிர்த்து பிற படங்களை எங்ஙனம் எடுத்துவந்தார் என்பது அவருக்குப் புரியவில்லை. அவரது மைத்துனர் அதைக் கண்டால், அதையும் வழக்கப்படி செய்துவிடுவார் என்று பயந்து உடனே அப்படத்தை எடுத்து அலமாரியில் வைத்துவிட்டார். யார் அப்படத்தை நன்றாக வைத்துக் காப்பாற்றுவார்கள்? அதை என்ன செய்யவேண்டும் என்று அவர் யோசித்துக்கொண்டிருக்கையில் மௌலானா இஸ்மு முஜாவர் என்பவரைச் சென்றுபார்த்து அவர் கூற்றுப்படி செய்யவேண்டும் என்று சாயிபாபாவே தெரிவித்ததுபோல் இருந்தது.
தீவிர ஆலோசனைக்குப்பின் இருவரும் அப்படம் அண்ணா சாஹேபுக்கு — ஹேமத்பந்க்கு — அன்பளிப்புச் செய்யப்பட்டால் அவர் அதை நன்கு பாதுகாப்பார் என்று தீர்மானித்தார். பின்னர் இருவரும் ஹேமத்பந்த்தின் இல்லத்திற்குச் சென்று தக்க சமயத்தில் அதனை வெகுமதியாக அளித்தனர்.
கந்தல் துணி திருட்டும் ஞானேஷ்வரி பாராயணமும்
தாணே ஜில்லாவிலுள்ள டஹாணூவின் மம்லதார் தேவ் நெடுநாளாக ஞானேஷ்வரியை — பகவத்கீதைக்கு ஞானேஸ்வர் எழுதிய புகழ்பெற்ற மராத்திய வியாக்கியானம் — மற்ற நூல்களுடன் பயிலவேண்டுமேன்று ஆர்வம் கொண்டிருந்தார். தினந்தோறும் அவருக்கு பகவத்கீதையின் ஒரு அத்தியாயத்தையும் மற்ற புத்தகங்களின் சில பகுதிகளையும் படிக்க இயன்றது. ஆனால் ஞானேஷ்வரியைக் கையில் எடுத்தவுடன் ஏதாவதொரு தடை ஏற்பட்டு அதைப்படிக்க முடியவில்லை. மூன்றுமாத விடுமுறையில் ஷீர்டிக்குச் சென்று பின்னர் பவுண்டில் உள்ள தனது சொந்த வீட்டிற்குச் சென்றார். அங்கு அவர் மற்ற புத்தகங்களைப் படிக்க முடிந்தது.
ஆனால் ஞானேஷ்வரியைப் பிரித்தபோது சில நூதனமான சம்பந்தமற்ற அல்லது தீய எண்ணங்கள் அவர் மனதில் திரளாகத் தோன்றி அவரது முயற்சியைத் தடைசெய்தன. எவ்வளவு அதிகமாக முயற்சி செய்தபோதிலும் அப்புத்தகத்தின் சில வரிகளைக்கூட அவரால் எளிதாகப் படிக்கமுடியவில்லை. எனவே பாபா அப்புத்தகத்தின் மீது தனக்கு அன்பு ஏற்படும்படி செய்து, படிக்கக் கட்டளை இடும்போதுதான் தாம் அதைப் பயில ஆரம்பிக்கவேண்டும் என்றும், அதுவரை அதைப் படிக்கக்கூடாது என்றும் தீர்மானித்தார். பின்னர் 1914ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவர்தம் குடும்பத்துடன் ஷீர்டிக்குச் சென்றார். அங்கு ஜோக், அவரைத் தினந்தோறும் ஞானேஸ்வரி படிக்கிறாரா என்று வினவினார். தேவ் தாம் அதைப் பயில்வதற்கு ஆர்வம் உள்ளவராக இருப்பினும் அதில் வெற்றிபெற இயலவில்லை என்றும், பாபா அவருக்குக் கட்டளையிடும்போதுதான் அதைப் படிக்க ஆரம்பிக்கப் போவதாகவும் கூறினார். அப்புத்தகத்தின் பிரதி ஒன்றை எடுத்துச்சென்று அதை பாபாவுக்கு அளித்து, அவரால் புனிதமாக்கப்பட்டுத் திருப்பி அளிக்கப்படும்போது அதைப் படிக்கலாம் என்று ஜோக் அறிவுரை பகர்ந்தார். பாபா அவரது உள்ளத்தை அறிவாராதலால் இந்தமாதிரி செய்ய தாம் விரும்பவில்லை என்று தேவ் பதிலளித்தார். அவரது ஆவலை சாயி அறியமாட்டாரா? அதைப் படிக்கச் சொல்லித் தெளிவான உத்தரவை அவர் கொடுக்க மாட்டாரா? பின்னர் தேவ் பாபாவைப் பார்த்து ஒரு ரூபாயைத் தஷிணையாகக் கொடுத்தார். பாபா இருபது ரூபாய் கேட்டார். தேவ் கொடுத்தார். இரவில் அவர் பாலக்ராம் என்பவரைப் பார்த்து அவர் எங்ஙனம் பாபாவின் அன்பையும், பக்தியையும் பெற்றார் என்று விசாரித்தார். பாலக்ராம் தாம் எல்லாவற்றையும் அடுத்தநாள் ஆரத்திக்குப்பின் தெரிவிப்பதாகக் கூறினார். தேவ் அடுத்தநாள் தரிசனத்திற்காகச் சென்றிருந்தபோது பாபா அவரை இருபது ரூபாய் கேட்டார். அதை அவர் விருப்புடன் கொடுத்தார். பின்னர் கூட்டம் அதிகமாக இருந்ததால் தனியாக மசூதியின் ஒரு மூலையில் சென்று அமர்ந்தார்.
பாபா அவரைத் தம் அருகில் வந்து அமைதியான மனத்துடன் அமரும்படி கூறினார். அங்ஙனமே அவர் செய்தார். பின்னர் மத்தியான ஆரத்தி முடிவடைந்தது. மக்கள் எல்லோரும் கலைந்து சென்றதும், தேவ் மீண்டும் பாலக்ராமைச் சந்தித்து, பாபா அவருக்கு என்ன கூறினார்? எங்ஙனம் தியானம் செய்யக் கற்றுக்கொடுத்தார்? என்று அவரது முந்தைய சரித்திரத்தைக் கேட்டார். பதிலளிக்கும் தறுவாயில் பாபா, சந்துரு என்ற ஒரு தொழுநோய்கொண்ட அடியவரை, தேவ்வை அழைத்துவரும்படி அனுப்பினார். தேவ் பாபாவிடம் சென்றபோது, யாருடன் எதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார் என்று பாபா கேட்டார். அவர் தாம் பாலக்ராமுடன் பேசிக்கொண்டிருந்ததாகவும், பாபாவின் புகழைக் கேட்டதாகவும் கூறினார்.
பாபா அவரை மீண்டும் 25 ரூபாய் தஷிணை கேட்டார். அவரும் அதை மகிழ்வுடன் கொடுத்தார். பின்னர் பாபா அவரை உள்ளே அழைத்துச்சென்று கம்பத்தருகில் அமர்ந்துகொண்டு, "என்னுடைய கந்தல் ஆடைகளை எனக்குத் தெரியாமல் நீ திருடினாய்" என்று குற்றம் சாட்டினார். தேவ் கந்தல் ஆடைகள் பற்றி தமக்கு எதுவும் தெரியாதென்று மறுத்தார். ஆனால் பாபா அவரைத் தேடச் சொன்னார். தேடிய அவரால் ஒன்றையும் காண முடியவில்லை. பாபா கோபமடைந்து, "இங்கு வேறு ஒருவரும் இல்லை. நீயேதான் திருடன். தலை நரைத்து கிழவனாகியும் நீ இங்கு திருடுவதற்கு வந்திருக்கிறாய்" என்றார்.
இதன்பின் பாபா பொறுமை இழந்து, கடுமையாக கோபமுற்று பலவிதமாக திட்டவும், குற்றம் சாட்டவும் ஆரம்பித்தார். தேவ் எல்லாவற்றையும் அமைதியாக கவனித்துக்கொண்டு தனக்கு அடியும் கூடக் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். சுமார் ஒரு மணிநேரத்திற்குப்பின் பாபா அவரை வாதாவுக்குப் போகச்சொன்னார். அவர் வாதாவுக்குத் திரும்பிவந்து பாலக்ராமிடமும், ஜோகிடமும் நடந்தவை அனைத்தையும் கூறினார். பின்னர் மாலையில் பாபா, தேவ்வையும் மற்ற எல்லோரையும் கூப்பிட்டனுப்பினார். தமது வார்த்தைகள் கிழவரைத் துன்புறுத்தி இருக்கலாமென்றும் ஆயினும் அவர் திருடியிருப்பதால் தம்மால் வெளியே சொல்லாமல் இருக்க முடியவில்லை என்றும் கூறினார். பின்னர் பாபா மீண்டும் பன்னிரண்டு ரூபாய் அவரிடம் கேட்டார். தேவ் அதைச் சேகரித்து கொடுத்து அவர்முன் சாஷ்டாங்கமாகப் பணிந்தார்.
பாபா கூறினார்: போதியை — ஞானேஸ்வரி — தினமும் படித்துக்கொண்டிரு, வாதாவில் போய் அமர்ந்து தினந்தோறும் ஒழுங்காக கொஞ்சமாவது படி, அவ்வாறு படிக்கையில் நீ படித்த பகுதியை அனைவர்க்கும் அன்புடனும், பக்தியுடனும் விளக்கிச் சொல். நான் இங்கு உனக்குத் தங்கச்சரிகை போட்ட மதிப்புமிக்க சால்வை அளிப்பதற்குக் காத்துக்கொண்டிருக்கிறேன். அப்படியிருக்க மற்றவர்களிடம் நீ ஏன் கந்தலைத் திருடுகிறாய்? ஏன் திருட்டுப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறாய்?
பாபாவின் மொழிகளைக் கேட்டு தேவ் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ஏனெனில் அவர் போதியைப் படிக்கச் சொல்லிவிட்டார். தாம் விரும்பியதைப் பெற்றுவிட்டதாக அவர் நினைத்தார். இனி அந்நூலை எளிதில் படிக்கலாம் என்ற நம்பிக்கை கொண்டார். மீண்டும் அவர் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தாம் பாபாவிடம் சரணாகதி அடைந்திருப்பதாகக் கூறித் தம்மை ஒரு குழந்தையைப்போல் பாவிக்குமாறும், தனது பாராணயத்தின்போது உதவி செய்யுமாறும் வேண்டிக்கொண்டார். 'கந்தலைத் திருடுவது' என்று பாபா கூறியதன் பொருளை அவர் உணர்ந்தார். பாலக்ராமிடமிருந்து அவர் கேட்டதெல்லாம் கந்தல் என்று பொருள் கொள்ளப்பட்டது. இந்நடத்தை பாபாவுக்குப் பிடிக்கவில்லை. எக்கேள்விக்கும் பாபா தாமே விடையளிக்கத் தயாராய் இருக்கும்போது மற்றவர்களைக் கேட்பதையும், அனாவசியமாகப் பிறரிடம் விசாரிப்பதையும் அவர் விரும்பவில்லை. எனவே பாபா அவரைத் திட்டித் தண்டனைக்குள்ளாக்கினார். உண்மையில் பாபா அவரைத் துன்புறுத்தவோ, திட்டவோ இல்லையென்றும், பாபா தமது ஆசைகளைப் பூர்த்திசெய்ய ஆவலாய் இருக்கும்போது வீணாக மற்றவர்களைக் கேட்டுத் தெரிவது பயனில்லையெனத் தனக்குப் போதித்ததாகவும் நினைத்தார். தேவ் இத்திட்டல்களையெல்லாம் புஷ்பங்களாகவும், ஆசீர்வாதமாகவும் கருதி திருப்தியுடனும், மனநிறைவுடனும் வீடுக்குச் சென்றார்.
இவ்விஷயம் இத்துடன் முடிவடைந்துவிடவில்லை. பாபா படிப்பதற்கு உத்தரவு செய்ததோடு மட்டும் நின்றுவிடவில்லை. அந்த வருடத்திற்குள் அவர் தேவ்விடம் சென்று அவரின் முன்னேற்றத்தைப் பற்றி வினவினார். 1914 ஏப்ரல் 2ம் தேதி வியாழக்கிழமை காலை பாபா அவருக்கு 'தெய்வீகக் காட்சி' ஒன்றை அளித்தார். மேல் திண்ணையில் அமர்ந்துகொண்டு தேவ் போதியைப் புரிந்துகொண்டாரா என்று கேட்டார்.
தேவ்: இல்லை
பாபா: பின் எப்போது நீ புரிந்துகொள்ளப் போகிறாய்?
தேவ்: — அழுகை பொங்க — நீங்கள் உங்கள் அருளைப் பொழிந்தாலன்றி பாராயணம் ஒரு தொந்தரவாகவும் புரிந்துகொள்ளுதல் கஷ்டமாகவும் இருப்பது நிச்சயம்.
பாபா: படிக்கும்போது துரிதமாகப் படி. எனது சந்நிதானத்தில் என்முன் படி.
தேவ்: எதை நான் படிக்கவேண்டும்?
பாபா: அத்யாத்மிகம் — ஆன்மிகம் — படி
தேவ் நூலைக் கொணர்வதற்காகச் சென்றபோது காட்சியிலிருந்து விடுபட்டு முழு விழிப்புணர்வு எய்தினார். தேவ் பெற்ற அளவற்ற மகிழ்ச்சியையும், பேரானந்தத்தையும் கற்பனைசெய்து பார்த்தலை நமது வாசகர்களுக்கே விட்டுவிடுகிறோம்.
ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
• முன்பாகவே உணர்த்திய குறிப்பு
• ராமச்சந்திர தாதா பாடீல் -
தாத்யா கோதே பாடீல்
இவர்கள் மரணம் தவிர்த்தல்
• லஷ்மிபாய் ஷிண்டேவுக்கு
தர்மம் செய்தல்
• கடைசி நேரம்
இந்த அத்தியாயம் பாபா மஹாசமாதியடைதலை விளக்குகிறது.
முன்னுரை
இவ்வுலக வாழ்க்கையின் பயத்தை குருவின் கிருபை என்ற ஒளி நீக்குவதை முந்தைய அத்தியாயத்தில் கொடுக்கப்பட்ட கதைகள் காண்பிக்கின்றன. முக்திக்கு வழி வகுக்கின்றன. நமது துன்பத்தை இன்பமாக மாற்றுகின்றன. சத்குருவின் பாதங்களை நாம் எப்போதும் நினைத்துக்கொண்டு இருப்போமானால், நமது துன்பங்கள் ஒரு முடிவுக்கு வருகின்றன. மரணம் தனது கொடுமையைத் தளர்த்திவிடுகிறது. இவ்வுலக வாழ்வின் துயரங்கள் நீக்கப்படுகின்றன. எனவே, தங்கள் நலத்தை விரும்புவோர் மனதைத் தூய்மைப்படுத்தும் சமர்த்த சாயியின் இக்கதைகளைக் கேட்கவேண்டும். ஆரம்பத்தில் ஹேமத்பந்த், டாக்டர் பண்டிட்டின் வழிபாட்டையும், அவர் பாபாவின் நெறியில் மூன்று பட்டைகள் இட்டதைப் பற்றியும் கூறுகிறார். ஆனால் இது அத்தியாயம் 11இல் முன்பே கூறப்பட்டுவிட்டதால், இவ்விடம் நீக்கப்பட்டுவிட்டது.
முன்பாகவே உணர்த்திய குறிப்பு
வாசகர்கள் இதுவரை பாபாவின் வாழ்க்கையைப் பற்றிய கதைகளைக் கேட்டார்கள். அவர்கள் தற்போது பாபாவின் மறைவைப்பற்றி கவனத்துடன் கேட்கட்டும். பாபாவுக்கு 1918 செப்டம்பர் 28ம் திகதி லேசான ஜூரம் கண்டது. ஜூரம் இரண்டு, மூன்று நாட்கள் இருந்தது. பின்னர் பாபா உணவு சாப்பிடுவதை நிறுத்திக்கொண்டார். அதனால் நாளுக்கு நாள் பலவீனமானார். 17வது நாளன்று அதாவது 1918ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி மாலை சுமார் 2:30 மணிக்கு பாபா தமது பூத உடலை நீத்தார். விவரங்களுக்கு தாதா சாஹேப் கபர்டேவுக்கு பேராசிரியர் நார்கேயின் 1918 நவம்பர் 5ஆம் தேதி எழுதப்பட்ட கடிதம் சாயிலீலா சஞ்சிகையில் — முதல் வருடம், பக்கம் 78 — பார்க்க. இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 1916ல் பாபா, தாம் இயற்கை எய்துவதைப் பற்றிய குறிப்பு ஒன்றைக் கொடுத்தார். ஆனால் அதை அவர்கள் அப்போது புரிந்து கொள்ளவில்லை. அது பின்வருமாறு:
"விஜயதசமியன்று — தசரா — மாலையில் மக்கள் ஷிமோலங்கணிலிருந்து — ஷிமோலங்கண் என்பது கிராம எல்லையைத் தாண்டுதல் — திரும்பிவரும்போது பாபா திடீரென்று கோபாவேசமடைந்து தமது தலையணி, கஃப்னி லங்கோடு முதலியவைகளை எல்லாம் கழற்றி அவைகளைக் கிழித்து அவருக்கு முன்னால் உள்ள துனியில் எறிந்தார். இந்தச் சமர்ப்பணத்தை உண்டு துனியிலுள்ள தீ, மிக்க ஒளியுடன் எரிந்து பிரகாசிக்கத் தொடங்கியது. பாபா முற்றிலும் நிர்வாணமான நிலையில் அங்கு நின்றார். நெருப்பைப்போன்ற சிவந்த கண்களுடன் எல்லோரையும் நோக்கி, "ஓ! பேர்வழிகளே, இப்போது என்னை எல்லோரும் நன்றாகப் பார்த்து, நான் ஒரு இந்துவா அல்லது முஸ்லீமா என்பதைத் தீர்மானியுங்கள்" என்று உரக்கக் கூறினார். எல்லோரும் பயத்தால் நடுங்கிக்கொண்டிருந்தனர். ஒருவருக்கும் பாபாவிடம் நெருங்கத் தைரியமில்லை.
கொஞ்ச நேரத்திற்குப்பின் பாபாவின் தொழுநோய் அடியவரான பாகோஜி ஷிண்டே தைரியத்துடன் அருகில் சென்று லங்கோடை கட்டிவிடும் முயற்சியில் வெற்றிபெற்றார். "பாபா என்ன இதெல்லாம். இன்றைக்கு ஷிமொலங்கண் - தசரா விடுமுறை" என்றார். பாபா தமது சட்காவைத் தரையில் அடித்து, "இது என்னுடைய ஷிமொலங்கண் என்றார். இரவு பதினோரு மணிவரை சாந்தமடையவில்லை. அன்றிரவு சாவடி ஊர்வலம் நடக்குமா என்று அனைவரும் ஐயம் அடைந்தனர்.
ஒரு மணி நேரத்திற்குப்பின் பாபா தமது சாதாரண நிலைக்குத் திரும்பினார். வழக்கம்போல் உடையணிந்துகொண்டு முன்னமே விளக்கப்பட்டவிதமாக சாவடி ஊர்வலத்தில் பங்குகொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் தசராவே தமது வாழ்வின் எல்லையைக் கடப்பதற்குரிய சமயம் என்ற கருத்தை அவர் தெரிவித்தார். ஆனால் ஒருவரும் அதன் பொருளைப் புரிந்துகொள்ளவில்லை. மற்றுமொரு குறிப்பாலும் பாபா இதனை உணர்த்தினார். அது பின்வருமாறு.
ராமச்சந்திர, தாத்யா பாடீல்களின் மரணத்தைத் தவிர்த்தல்
இதற்குச் சில நாட்களுக்குப் பின்னர் ராமச்சந்திர பாடீலுக்குத் தீவிரமான காய்ச்சல் கண்டது. அவர் பெரிதும் துன்பமடைந்தார். அவர் எல்லாவித சிகிச்சைகளையும் கையாண்டு, குணமேதும் காணாமல் தமது வாழ்வில் வெறுப்படைந்து கடைசி வினாடிக்காகக் காத்துக்கொண்டிருந்தார். பின்னர் ஒருநாள் நள்ளிரவு பாபா திடீரென்று அவரது தலையணைக்கருகில் நின்றார்.
பாடீல் பாபாவின் பாதங்களைப் பிடித்துக் கொண்டு, "வாழ்க்கையின் எல்லாவித நம்பிக்கைகளையும் நான் இழந்துவிட்டேன். நான் எப்போது சாவேன் என்று எனக்கு உறுதியாகக் கூறுங்கள்" என்றார். கருணையுள்ள பாபா, "கவலைப்படாதே, உனது ஹண்டி — மரண ஓலை — வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. நீ விரைவில் குணம் ஆவாய். ஆனால் தாத்யா பாடீலைக் குறித்து நான் கவலைப்படுகிறேன். அவன் சக வருடம் 1840ல் (1918) விஜயதசமியன்று மரணமடைவான். யாருக்கும் இதை வெளியிட்டுவிடாதே. அவனுக்கும் இதைச் சொல்லாதே. ஏனென்றால் அவன் பயங்கரமான அளவுக்குப் பீதியடைவான்" என்றார்.
ராமச்சந்திர தாதா சுகமடைந்தார். ஆனால் தாத்யாவின் வாழ்வைப்பற்றி அவர் நடுக்கமுற்றார். ஏனெனில் பாபாவின் மொழிகள் மாற்ற இயலாதவை என்பதாலும், இரண்டாண்டுகளில் தாத்யா மரணமடைவார் என்பதைக் குறித்துமே. பாலா ஷிம்பி — தையல்காரர் — என்பவரைத் தவிர வேறொருவரிடமும் இக்குறிப்பைக் கூறாமல் இரகசியமாக வைத்திருந்தார். ராமச்சந்திர தாதா, பாலா ஷிம்பி என்ற இவ்விரண்டுபேர் மட்டும் தாத்யாவின் உயிரைப்பற்றி, என்ன ஆகுமோ என்று பயந்துகொண்டு இருந்தனர். ராமச்சந்திர தாதா படுக்கையைவிட்டு நீங்கி நடமாடத் தொடங்கினார். காலம் வேகமாகச் சென்றது. சக வருடம் 1840 (1918) புரட்டாதி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் வரத்தொடங்கியது.
பாபாவின் கூற்றுப்படியே தாத்யா காய்ச்சலினால் படுத்த படுக்கையானார். எனவே அவரால் பாபாவின் தரிசனத்துக்கு வரமுடியவில்லை. பாபாவுக்கும் காய்ச்சல் வந்தது. பாபாவிடம் தாத்யாவுக்கு முழுநம்பிக்கை இருந்தது. தாத்யாவின் காய்ச்சல் மோசமடைந்துகொண்டே வந்தது. அவரால் அசையமுடியவில்லை. எப்போதும் அவர் பாபாவை ஞாபகப்படுத்திக்கொண்டார். பாபாவின் கஷ்டமான நிலைமையும் அதே அளவு வளர்ந்தது. முன்னால் பாபாவால் உருவாக்கபட்ட விஜயதசமி நாளும் வந்துகொண்டிருந்தது.
ராமச்சந்திர தாதாவும், பாலா ஷிம்பியும் தாத்யாவைப் பற்றி பயங்கரமான அளவு பீதியடைந்தனர். பாபா முன்னுரைத்தபடி தாத்யாவின் முடிவு வந்துவிட்டது என்று அவர்கள் எண்ணி, அவர்கள் உடல் நடுங்கி வியர்த்தது. விஜயதசமியும் மலர்ந்தது. தாத்யாவின் நாடி மிகமெதுவாக அடித்துக்கொள்ளத் தொடங்கியது. விரைவில் அவர் மரணமடைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு வினோதமான நிகழ்ச்சி நடைபெற்றது. தாத்யா பிழைத்துக்கொண்டார். அவரது மரணம் தவிர்க்கப்பட்டது. அவருக்குப் பதிலாக பாபா உடலை உகுத்தார். ஒரு பரிவர்த்தனை ஏற்பட்டதாகத் தோன்றியது. பாபா தாத்யாவுக்காகத் தமது உயிரைக் கொடுத்தார் என்று மக்கள் கூறினர். அவர் அங்ஙனம் செய்தாரா? அவரது வழிகள் அளவுக்கு அப்பாற்பட்டவையாகையால் அவருக்கு மட்டுமே தெரியும், என்றாலும் இந்நிகழ்ச்சியில் பாபா தமது மரணத்தைப் பற்றி தமது பெயருக்குப் பதில் தாத்யாவின் பெயரைப்போட்டுக் குறிப்புப் தந்தார் என்றே தோன்றுகிறது.
அடுத்தநாள் காலை — அக்டோபர் 16 — பண்டாரீபுரத்தில் தாஸ்கணுவின் கனவில் பாபா தோன்றி, "மசூதி இடிந்து விழுந்துவிட்டது. ஷீர்டியில் எல்லா எண்ணெய்க்காரர்களும், கடைக்காரர்களும் என்னைப் பெருமளவு துயரப்படுத்தினர். எனவே நான் அவ்விடத்தை விட்டு நீங்கிவிட்டேன். நான் இதை உனக்குத் தெரிவிக்கவே இங்கு வந்தேன். தவுசெய்து அங்கு உடனே சென்று 'பக்கல்' — கதம்ப மலர்கள் — புஷ்பங்களால் என்னைப் போர்த்து" என்றார். தாஸ்கணு இவ்விஷயத்தை ஷீர்டியிலிருந்து வந்த கடிதங்கள் மூலமாக அறிந்தார். எனவே அவர் ஷீர்டிக்குத் தமது சீடர்களுடன் வந்து பஜனையும், கீர்த்தனைகளும் செய்யத் தொடங்கினார்.
இறைவன் நாமத்தை பாபாவின் சமாதி முன்னால் நாள் முழுவதும் பாடினார். ஹரி நாமத்துடன் தாமே ஒரு அழகிய பூமாலை தொடுத்து பாபாவின் சமாதி முன்னர் வைத்து பாபாவின் பெயரால் மக்களுக்கு அன்னதானமும் செய்துவைத்தார்.
லக்ஷ்மிபாயிக்குத் தானம்
எல்லா இந்துக்களாலும் தசரா அல்லது விஜயதசமி மிகமிகப் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது. பாபா தமது எல்லைக்கோட்டைத் தாண்டுவதற்கு இந்நாளைத் தேர்ந்தெடுத்தது பொருத்தமேயாகும். இதற்குச் சில நாட்களுக்கு முன்னர் அவர் துன்புற்றார் என்றாலும் எப்போதும் அவர் உள்ளுணர்வுடன் இருந்தார்.
கடைசித் தருணத்திற்குச் சிறிது முன்னரே எவருடைய உதவியுமின்றி நன்றாக நிமிர்ந்து அமர்ந்து காட்சியளித்தார். பாபாவுக்கு அபாயம் நீங்கிவிட்டதென்றும் அவர் தேறி வருகிறாரென்றும் மக்கள் நினைத்தனர். தாம் விரைவில் காலமாகப் போவதை அவர் அறிந்திருந்தார். எனவே லஷ்மிபாய் ஷிண்டேவுக்கு தாம் ஏதும் தர்மம் செய்யவேண்டுமென்று நினைத்தார்.
எல்லா ஜந்துக்களிலும் பாபா விஜாபித்திருத்தல்
இந்த லக்ஷ்மிபாய் ஷிண்டே ஒரு நல்ல வசதியுள்ள பெண்மணி. இரவும் பகலும் அவள் மசூதியில் வேலை செய்தாள். பகத் மஹல்ஷாபதி, தாத்யா, லக்ஷ்மிபாய் இவர்களைத் தவிர வேறு எவரும் இரவில் மசூதிக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. ஒருநாள் மாலை பாபா, தாத்யாவுடன் மசூதியில் அமர்ந்துகொண்டிருக்கும்போது லஷ்மிபாய் வந்து வணங்கினாள். பாபா அவளிடம், "ஓ! லக்ஷ்மி, நான் மிகவும் பசியாய் இருக்கிறேன்" என்றார். அதற்கு அவள், "பாபா சிறிதுநேரம் பொறுங்கள். நான் ரொட்டியுடன் வருகிறேன்" என்று கூறிக்கொண்டு சென்றாள். பிறகு ரொட்டி, காய்கறிகளுடன் அவள் திரும்பினாள். அவற்றை பாபாவின்முன் வைத்தாள். அவர் அதை எடுத்து நாய்க்குக் கொடுத்தார்.
அதற்கு லக்ஷ்மி, "பாபா! இது என்ன? உங்களுக்காக நான் அவசரமாக ஓடி எனது சொந்தக் கைகளால் ரொட்டி தயாரித்தேன். நீங்கள் அதில் சிறிதேனும் எடுத்துகொள்ளாமல் நாயிடம் தூக்கி எறிகிறீர்களே! வீணாக எனக்குத் தொல்லை கொடுத்தீர்கள்?" என்றாள்.
அதற்கு பாபா, "ஒன்றுமில்லாததற்காக ஏன் கவலைப்படுகிறாய். நாயின் பசியைத் தணிப்பது என் பசியைத் தணிப்பது போன்றதேயாம். நாய்க்கும் ஒரு ஆத்மா இருக்கிறது. ஜந்துக்கள் வெவ்வேறாயிருப்பினும், சில பேசினும், சில ஊமையாயிருப்பினும் அவைகள் யாவற்றுமுடைய பசியும் ஒன்றேயாம். பசியாய் இருப்போர்ர்க்கு உணவு அளிப்பவன் உண்மையிலேயே எனக்கு உணவைப் பரிமாறுகிறான் என்று நிச்சயமாக அறிந்துகொள்வாயாக. இதை ஒரு ஆதார நீதியாகக் கருது" என்று பதிலளித்தார். இது ஒரு சாதாரண சிறிய நிகழ்ச்சிதான். ஆனால், ஒரு மிகப்பெரும் ஆன்மிக உண்மையை பாபா அதன்மூலம் முன்னிலைக்குக் கொணர்ந்து காட்டினார். தினசரி வாழ்வில் அதை நடைமுறைக்குக் கொண்டுவருதலை, எவருடைய உணர்ச்சியும் துன்புறாதமுறையில் எடுத்துக்காட்டினார்.
இத்தருணத்திலிருந்து லக்ஷ்மிபாய் அவருக்குத் தினந்தோறும் பாலையும், ரொட்டியையும் அன்புடனும் பக்தியுடனும் அளித்து வந்தாள். பாபா அதை ஏற்றுக்கொண்டு பசி தணியும் வரை உண்டார். இதில் ஒரு பகுதியை அவர் ராதாகிருஷ்ணமாயிக்கு லக்ஷ்மிபாயிடமே கொடுத்தனுப்புவார். அவளும் பாபாவின் மீதியான பிரசாதத்தை உவப்புடனும், மகிழ்ச்சியுடனும் உண்டாள். இந்த ரொட்டிக்கதையை ஒரு சம்பந்தமில்லாத விஷயமாகக் கருதக்கூடாது. அது எங்ஙனம் சாயிபாபா எல்லா ஜீவராசிகளிடமும் வியாபித்து ஊடுருவி இருக்கிறார் என்றும், அவைகளைக் கடந்தும் இருக்கிறார் என்றும் காட்டுகிறது. அவர் சர்வவியாபி, பிறப்பற்றவர், இறப்பற்றவர், அழிவற்றவர்.
பாபா லக்ஷ்மிபாயின் சேவையை நினைவு கூர்ந்தார். அவளை எங்ஙனம் அவர் மறக்கமுடியும்? உடம்பைவிட்டு நீங்குவதற்குமுன் தமது கையைப் பைகளில் போட்டு ஒருமுறை ஐந்து ரூபாயும், மீண்டும் நான்கு ரூபாயும் மொத்தத்தில் ஒன்பது ரூபாய் கொடுத்தார்.
ஒன்பது என்ற எண் 21ம் அத்தியாயத்தில் விவரிக்கப்பட்ட நவவித பக்தியைப்பற்றிக் குறிப்பிடுகிறது. — இந்த நவவித பக்தியும் ஸ்ரீராமரால் சபரிக்கு உபதேசிக்கப்பட்டது. — அல்லது ஷிமொலங்கண் நேரத்தில் அளிக்கப்பட்ட்ட தஷிணையாக இருக்கலாம்.
லக்ஷ்மிபாயி ஒரு வசதியான பெண்மணி. எனவே பாபா அவளுக்குக் குறிப்பால் உணர்த்தி, நல்ல அடியார்களுக்கு வேண்டிய ஒன்பதுவித குணங்களைச் சொல்லியிருக்கலாம்.
பாகவதத்தில் 11வது காண்டத்தில், 10வது அத்தியாயத்தில் 6வது பாடலில் முதலாவது, இரண்டாவது செய்யுளில் முறையே முதல் ஐந்து குணங்களும், பின் நான்கு குணங்களும் கூறப்பட்டுள்ளன. பாபாவும் அத்தகைய ஒழுங்கைப் பின்பற்றி முதலில் ஐந்து ரூபாயும், பின்னர் நான்கு ரூபாயும் மொத்தத்தில் ஒன்பது ரூபாய் அளித்தார். அப்போது மாத்திரமல்ல. பலமுறை லக்ஷ்மிபாயின் கைகளில் ஒன்பது ரூபாய் சென்றிருக்கிறது. ஆனால் பாபாவின் இந்த ஒன்பதை எப்போதும் அவள் நினைவில் கொண்டிருப்பாள். கவனமானவரும், எப்போதும் ஜாக்கிரதையானவருமான பாபா தமது கடைசித் தருணத்தில் மற்ற முன்னேற்பாடுகளையும் செய்தார். தமது அடியவர்களுடைய அன்பாலும், பாசத்தாலும் சிக்கிக்கொள்ளாதபடி அல்லது பிணிக்கப்படாதபடி அவர்கள் எல்லோரையும் நீங்கச் சொல்லி ஆணையிட்டார்.
காகா சாஹேப் தீஷித்தும், பாபு சாஹேப் பூட்டியும் பாபாவிடம் கவலையுடன் காத்திருந்தனர். ஆனால் பாபா, அவர்களை வாதாவுக்குப்போய் உணவுக்குப்பின் வரும்படி கூறினார். பாபாவின் சந்நிதாதனத்தைவிட்டு அவர்களால் நீங்க முடியவில்லை. எனினும் பாபாவுக்குக் கீழ்ப்படியாமலும் இருக்கமுடியவில்லை. எனவே அவர்கள் சுமை நிறைந்த மனத்துடன் வாதாவிற்குச் சென்றனர். பாபாவின் நிலை மிகவும் மோசமாகியுள்ளது என்பதை அவர்கள் அறிவார்களாதலால் அவரை அவர்களால் மறக்க முடியவில்லை. உணவுக்காக அமர்ந்தாலும் அவர்கள் மனம் எங்கேயோ இருந்தது. அது பாபாவுடன் இருந்தது. அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் முன்பாக பாபா பூதவுடலை நீத்துவிட்டார் என்ற செய்தி வந்தது. உடனே தங்கள் உணவை விட்டுவிட்டு மசூதிக்கு ஓடினார்கள். பயாஜி கோதேயின் மடியில் இறுதியாகப் படுத்திருந்ததைக் கண்டார்கள். அவர் தரையில் விழவில்லை. தமது படுக்கையிலும் அவர் படுத்திருக்கவில்லை. ஆனால் அமைதியாக தமது இருக்கையில் அமர்ந்துகொண்டே, தமது சொந்தக் கைகளால் தர்மம் செய்துகொண்டே தமது பூதவுடலை நீத்தார்.
ஞானிகள் ஒரு குறிப்பான காரணத்துடன் இந்த உலகிற்கு வருகை தருகிறார்கள். அது நிறைவேறியபின் அவர்கள் வந்த மாதிரியாகவே அமைதியாகவும், எளிதாகவும் இயற்கை எய்துகிறார்கள்.
ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
தொடர்ச்சி
• ஏற்பாடுகள்
• சமாதி மந்திர் — கோவில்
• செங்கல் உடைதல்
• 72 மணிநேர சமாதி
• ஜோகின் துறவு
• பாபாவின் அமுத மொழிகள்
அத்தியாயம் 43, 44 பாபா மஹாசமாதியடையும் நிகழ்ச்சி பற்றியே குறிப்பிடுவதால் அவைகள் ஒன்றாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
முன்னேற்பாடு
ஒருவன் மரணத்தறுவாயில் இருக்கும்போது அவனது போகும்வழி இயற்கையாகவும், எளிதாகவும் இருக்கும்பொருட்டு, உலக விஷயங்களிலிருந்து அவன் மனதை மீட்டு ஆன்மிக விஷயங்களில் நிலைத்திருக்கச் செய்யும் எண்ணத்துடன் சில மத சம்பந்தமான நூல்கள் பராயணம் செய்யப்படுவது இந்துக்களிடையே உள்ள பொதுவான வழக்கமாகும். ஒரு அந்தண ரிஷியின் புதல்வனால் பரீக்ஷித்து மஹாராஜன் சாபமிடப்பட்டு மரணத்தறுவாயில் இருந்த நாட்களில் மாபெரும் ரிஷியான சுகர் புகழ்பெற்ற பாகவத புராணத்தை — சப்தாஹம் — அவருக்கு விளக்கினார்.
இப்பழக்கம் இன்றளவும் பின்பற்றப்பட்டு பகவத்கீதை, ஸ்ரீமத் பாகவதம் இன்னும் பல புனிதநூல்களும் மரணத்தறுவாயில் இருப்பவர்களிடம் வாசிக்கப்படுகிறது. கடவுளின் அவதாரமான பாபாவுக்கு அத்தகைய உதவி எதுவும் தேவையிருக்கவில்லை. ஆனால், மக்களுக்கு வழிகாட்டும் பொருட்டாக இவ்வழக்கத்தை அவர் பின்பற்றினார். தாம் விரைவில் காலமடையப் போவதை அறிந்த அவர், வஸே என்பாரை தம்மிடம் ராமவிஜயத்தைப் படிக்கும்படி கட்டளையிட்டார். வஸே வாரமொருமுறை அதைப் படித்தார்.பின்னர் இரவும், பகலும் அதையே படிக்கும்படி பாபா கேட்டுக்கொண்டார். அவர் மூன்றே நாட்களில் இரண்டாவது பாராயணத்தை முடித்தார். இவ்வாறாக பதினோரு நாட்கள் சென்றன. பின்னர் மீண்டும் மூன்று நாட்கள் படித்துக் களைப்படைந்து விட்டார். எனவே பாபா அவரைப்போக அனுமதித்துவிட்டு தாமே அமைதியாக இருந்துகொண்டார். தமது ஆத்மபோதத்திலேயே மூழ்கினவராய் தமது கடைசி வினாடிக்காகக் காத்திருந்தார்.
இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்னரே தமது காலை சஞ்சாரத்தையும், பிக்ஷாதனம் பெறச்செல்லும் நியமத்தையும் அவர் நிறுத்திவிட்டு மசூதியிலேயே தங்கிவிட்டார். தமது இறுதி வினாடிவரை உணர்வுடன் இருந்து தமது அடியவர்களை மனமுடைய வேண்டாமென்று உபதேசித்துக்கொண்டிருந்தார். தாம் சமாதி அடையவுள்ள சரியான தருணத்தை அவர் ஒருவருக்கும் அறிவிக்கவில்லை. மசூதியில் தினந்தோறும் அவருடன் காகா சாஹேப் தீஷித்தும், பூட்டியும் மதிய உணவு உண்டனர். ஆனால் அன்று — அக்டோபர் 15 — ஆரத்திக்குப் பின்னர் பாபா அவர்களை, தங்கள் இருப்பிடங்களுக்குச் சாப்பிடச் செல்லும்படி பாபா கூறினார் என்றாலும் லக்ஷ்மிபாய் ஷிண்டே, பாகோஜி ஷிண்டே, பஜாஜி, லக்ஷ்மண் பாலா ஷிம்பி, நானா சாஹேப் நிமோண்கர் போன்றவர்கள் அங்கேயே இருந்து கொண்டனர்.
ஷாமா கீழே படிகளில் அமர்ந்திருந்தார். லக்ஷ்மிபாய் ஷிண்டேவுக்கு ரூ.9 கொடுத்தபின்பு பாபா தமக்கு மசூதியில் சௌகரியமாய் இல்லையென்றும், பூட்டியினுடைய தகடி வாதாவுக்கு — கல் கட்டிடம் — எடுத்துச் செல்லப்படவேண்டும் என்றும், அங்கு தாம் நலமுற்றுவிடப் போவதாகவும் கூறினார். இக்கடைசி மொழிகளை உதிர்த்துவிட்டு பஜாஜி கோதேயின் மேனியில் சாய்ந்துகொண்டு உயிர் நீத்தார். அவரது மூச்சு நின்றுவிட்டதை பாகோஜி கவனித்து கீழே அமர்ந்திருந்த நானா சாஹேப் நிமொண்கரிடம் கூறினார். நானா சாஹேப் சிறிது தண்ணீர் கொணர்ந்து பாபாவின் வாயில் ஊற்றினார். அது வெளியே வந்துவிட்டது.
பின்னர் அவர் பலமாக "ஓ! தேவா" என்று கதறினார். பாபா சிறிதே தமது கண்களைத் திறந்து "ஆ!" என்று மெல்லிய குரலில் கூறுவதைப் போன்றிருந்தது. ஆனால், பாபா தமது பூத உடலை க்ஷேமமாக நீத்துவிட்டார் என்பது சீக்கிரமாக நிதர்சனமாயிற்று.பாபா காலமான செய்தி ஷீர்டி கிராமத்தில் காட்டுத்தீபோல் பரவியது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் யாவரும் மசூதிக்கு ஓடி வந்து இந்த இழப்பின் துயரைப் பல்வேறு விதங்களில் வெளியிட்டனர். சிலர் பலமாகக் கதறினர். சிலர் தெருவில் உருண்டு புரண்டனர். சிலர் மூர்ச்சித்து விழுந்தனர். எல்லோருடைய கண்களிலிருந்தும் தாரை தாரையாக நீர் வழிந்தது. அனைவரும் வருத்தத்தால் பீடிக்கப்பட்டிருந்தனர்.
சிலர் சாயிபாபாவின் மொழிகளை நினைவூட்டிக்கொள்ள ஆரம்பித்தனர். வரப்போகும் காலங்களில் தாம் ஒரு எட்டுவயதுப் பையனாகத் தோன்றப்போவதாக மஹராஜ் — சாயிபாபா — தம் பக்தர்களிடம் தெரிவித்ததாகச் சிலர் கூறினர். இவைகள் ஞானியின் மொழிகள். எனவே, இது குறித்து யாரும் ஐயுறத் தேவையில்லை. ஏனெனில் கிருஷ்ணாவதாரத்தில் சக்ரபாணி — மகாவிஷ்ணு — இதே காரியத்தைத்தான் நிகழ்த்தினார். சிறையிலிருந்த தேவகியின்முன் கிருஷ்ணர் ஒளி பொருந்திய நிறத்தினராகவும், தமது நான்கு கரங்களிலும் ஆயுதங்கள் தரித்த எட்டுவயது பையனாகவும் தோற்றமளித்தார்.
அந்த அவதாரத்தின்போது கிருஷ்ணர் பூமியின் பாரத்தைக் குறைத்தார். இந்த அவதாரம் தமது பக்தர்களின் முன்னேற்றத்திற்கானது. எனவே ஐயத்துக்குரிய காரணம் எங்கேயுள்ளது? ஞானிகளின் வழியோ உண்மையான அறிவெல்லை கடந்தது. சாயிபாபாவுக்குத் தமது பக்தர்களுடன் உண்டான தொடர்பு இந்த ஒரு தலைமுறைக்குரியது மட்டுமன்று அது கடந்த 72 ஜென்மங்களின் தொடர்பாகும். இத்தகைய அன்புப் பிணைப்புக்களை உருவாக்குதற் பொருட்டே மஹராஜ் — சாயிபாபா — திக்விஜயம் செய்யச் சென்றுள்ளார் போலத்தோன்றுகிறது. அவர் மீண்டும் விரைவில் திரும்பி வருவார் என்று அவர் பக்தர்கள் உறுதியான நம்பிக்கை பூண்டுள்ளனர்.
பின்னர் பாபாவின் பூதவுடலை எங்ஙனம் அடக்கம் செய்வது என்ற கேள்வி எழுந்தது. சில — முஸ்லிம்கள் — பாபாவின் உடல் திறந்த வெளியில் அடக்கம் செய்யப்பட்டு அதன் மேல் ஒரு சமாதி கட்டவேண்டும் என்றனர். குஷால் சந்த்தும், அமீர் ஷக்கரும் இந்தக் கருத்தையே கொண்டிருந்தனர். ஆனால் ராமச்சந்திர பாடீல் என்னும் கிராம அதிகாரி உறுதியான தீர்மானமான குரலில் கிராம பரிஷத்தை நோக்கி, "எங்களுக்கு உங்கள் கருத்து சம்மதமில்லை. வாதாவைத் தவிர வேறு எவ்விடத்திலும் பாபாவின் உடல் அடக்கம் செய்யப்படக்கூடாது" என்று கூறினார். மக்கள் இந்த விஷயத்தில் கருத்து வேறுபாடுகொண்டு முப்பத்தாறு மணிநேரம் வரை இதைப்பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர். புதன்கிழமை காலை பாபா, லக்ஷ்மண் மாமா ஜோஷியின் கனவில் தோன்றி அவரைத் தம் அருகில் அழைத்து, "சீக்கிரம் எழுந்திரு, பாபு சாஹேப் நான் இறந்துவிட்டதாக நினைக்கிறார். எனவே அவர் வரமாட்டார். நீ வழிபாட்டை நடத்தி காகட் — காலை — ஆரத்தி செய்" என்றார். லக்ஷ்மண் மாமா, கிராம ஜோசியரும் ஷாமாவின் தாய் மாமனுமாவார். அவர் ஒரு வைதீகப் பிராமணர். பாபாவைக் காலையில் வணங்கிய பின்னர் கிராம தெய்வங்களை வணங்கினார். பாபாவிடம் அவருக்கு மிகுந்த பக்தி உண்டு. இக்கனவுக்குப் பின்னர் பூஜாத்திரவியங்கள் அனைத்துடனும் வந்து மௌல்விகளின் எதிர்பையும் பொருட்படுத்தாது உரிய சம்பிரதாயங்களுடன் பூஜையும், காலை ஆரத்தியும் காண்பித்துச் சென்றுவிட்டார். பின்னர் மத்தியானம் பாபு சாஹேப் ஜோக் மற்றெல்லாருடனும் வந்து வழக்கம்போல் மத்தியான ஆரத்தியைச் செய்தார்.
பாபாவின் இறுதி மொழிகளுக்கு கிராமமக்கள் உரிய மதிப்புக் கொடுத்து அவர்தம் திருமேனியை வாதாவில் வைக்க முடிவுசெய்து, அதன் நடுப்பகுதியைத் தோண்டத் துவங்கினார்கள். அடுத்தநாள் மாலை ராஹாதாவிலிருந்து சப்-இன்ஸ்பெக்டரும் மற்ற இடங்களிலிருந்து மக்களும் வந்து எல்லோரும் கலந்து பேசி அம்முடிவை ஏற்றுக்கொண்டனர். அடுத்தநாள் காலை பம்பாயிலிருந்து அமீர்பாயும், கோபர்காவனிலிருந்து மம்லதாரும் வந்தனர். மக்கள் கருத்து வேறுபாடு கொண்டதாகத் தோன்றியது. சிலர் அவர் உடம்பு திறந்தவெளியில் அடக்கம் செய்வதற்கு வற்புறுத்தினர். எனவே மம்லதார் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தி வாதாவை உபயோகப்படுத்தும் தீர்மானம் மற்றதைப் போல் இரண்டு பங்கு ஓட்டுக்கள் பெற்றதைக் கண்டார்.
ஆயினும் அவர் கலெக்டரிடம் இதுகுறித்து குறிப்பிட விரும்பியதையொட்டி காகா சாஹேப் தீஷித் அஹமத்நகருக்குப் புறப்பட ஆயத்தமானார். இத்தருணத்தில் பாபாவின் அகத்தூண்டுதலால் மறுசாராரிடம் ஒரு கருத்துமாற்றம் ஏற்பட்டு அனைவரும் எதிர்ப்பின்றி ஒரே முடிவை ஆதரித்தனர். புதன்கிழமை மாலை பாபாவின் திருமேனி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வாதாவுக்கு கொண்டுவரப்பட்டு உரிய சம்பிரதாயங்களுடன் முரளீதரின் மூலஸ்தானமாக ஒதுக்கப்பட்ட மத்திய இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. உண்மையில் பாபா முரளீதர் ஆனார்.
எங்கே அவ்வளவு அதிகமான பக்தர்கள் அமைதியும், சாந்தியும் தேடிச்சென்றார்களோ, சென்று கொண்டிருக்கிறார்களோ அத்தகைய கோவிலாகவும், புனித ஆலயமாகவும் வாதா திகழத் தொடங்கியது. பாபாவின் இறுதிச் சடங்குகள் யாவும் பாலா சாஹேப் பாடேயாலும், பாபாவின் ஒரு பெரும் அடியவரான உபாஸனியாலும் நிறைவேற்றப்பட்டது.
பேராசிரியர் நார்கே கவனித்த விதமாக இந்த இடத்தில் இது குறிப்பிடப்படுகிறது. முப்பத்தாறு மணிநேரம் பாபாவின் உடல் திறந்து வைக்கப்பட்டிருந்தபோதிலும் சடலம் விறைத்துப் போகாமலும், அங்கங்கள் வளைந்து கொடுக்கும் விதத்திலும் மிருதுவாக இருந்ததால் அவர் அணிந்துகொண்டிருந்த கஃப்னி துண்டுகளாகக் கிழிக்கபடாமல் கழற்றி எடுக்கப்பட்டது.
செங்கல் உடைதல்
பாபா இறுதிவிடை பெறவிருந்த சில தினங்களுக்கு முன்பாக இது குறித்து முன்கூட்டியே ஒரு சகுனம் ஏற்பட்டது. மசூதியில் பாபா கைவைத்து அமரும் ஒரு பழைய செங்கல் இருந்தது. இரவில் அதன் மீது சாய்ந்துகொண்டு இருக்கையில் அமர்வார். இது பல ஆண்டுகள் நிகழ்ந்து கொண்டிருந்தது. ஒருநாள் பாபா இல்லாதபோது தரையைக் கூட்டிக்கொண்டிருந்த ஒரு பையன் தனது கையில் அதை எடுத்தான். துரதிர்ஷ்டவசமாக கைதவறிக் கீழே விழுந்து அது இரண்டாகியது.
பாபா இதைத் தெரிந்துகொண்டதும் அவர் அதன் இழப்பைக் குறித்து வெகுவாகக் கவலை அடைந்து "உடைந்தது செங்கல் அல்ல. எனது விதியே துண்டுகளாக உடைந்துவிட்டது. அது எனது ஆயுட்கால நண்பன். அதன் ஸ்பரிசத்துடன் நான் எப்போதும் ஆத்மதியானம் செய்தேன். அது என் உயிரைப்போன்று அவ்வளவு பிரியமானது. இன்று அது என்னைவிட்டு நீங்கிவிட்டது" எனப் புலம்பி அழுதார். செங்கல்லைப் போன்ற ஒரு ஜடப்பொருளுக்கு பாபா ஏன் இவ்வளவு வருந்தவேண்டும்? என்று சிலர் கேட்கலாம். இதற்கு ஹேமத்பந்த், "ஞானிகள் இவ்வுலகில் ஆதரவற்றோரைக் காப்பது என்ற முக்கிய நோக்கத்துக்காகவே அவதரிக்கிறார்கள். அவதரித்த உருவில் மக்களுடன் கலந்து அம்மக்களைப் போலவே வெளிப்படையாகச் சிரித்தல், விளையாடுதல், அழுதல் ஆகியவற்றைச் செய்தாலும் தமக்குள்ளே அவர்கள் தமது கடமைகளையும், பிறவியெடுத்த நோக்கத்தையும் பற்றி முழுதும் விழிப்பாய் இருக்கிறார்கள்" என பதிலளித்திருக்கிறார்.
72 மணி நேர சமாதி
இதற்கு முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் அதாவது 1886ல் பாபா எல்லைக்கோட்டை — ஆயுள் என்ற எல்லை — தாண்ட முற்சித்தார். ஒரு மார்கழிப் பௌர்ணமி தினத்தன்று பாபா கடுமையான ஆஸ்த்மாவால் பீடிக்கப்பட்டார். அதைத் தொலைப்பதற்கு பாபா தனது பிராணனை மிகஉயர எடுத்துச்சென்று சமதிநிலையை அடையத் தீர்மானித்தார். பகத் மஹல்ஸாபதியிடம் "எனது உடலை மூன்று நாட்கள் பாதுகாப்பாயாக. நான் திரும்பினால் எல்லாம் சரியாகிவிடும். நான் திரும்பவில்லை என்றால் அந்த திறந்தவெளியில் — சுட்டிக்காண்பித்து — எனது உடலைப் புதைத்துவிட்டு அதன்மேல் இரண்டு கொடிகளை அடையாளமாக நட்டுவிடு" என்று கூறினார்.
இதைக் கூறிவிட்டு இரவு சுமார் பத்துமணிக்கு பாபா கீழே சாய்ந்தார். அவரது மூச்சும், நாடியும் நின்றுபோயின. உடம்பை விட்டுவிட்டு உயிர் அகன்றுவிட்டதைப்போல் தோன்றியது. கிராம மக்கள் உள்ளிட்ட அனைவரும் அங்குவந்து விசாரணை ஒன்றை நடத்தி, பாபாவால் சுட்டிக்காண்பிக்கபட்ட இடத்தில் அவரை அடக்கம்செய்ய வந்தனர். ஆனால் மஹல்ஸாபதி இதைத் தடை செய்தார். தமது மடியிலேயே வைத்துக்கொண்டு மூன்று நாட்கள் விடாமல் காத்திருந்தார். மூன்று நாட்கள் கழிந்ததும் காலை 3 மணிக்கு பாவாவிடம் உயிரின் அறிகுறிகள் தெரிந்தன. அவரது சுவாசம் ஆரம்பித்து, அடிவயிறு அசையத் தொடங்கியது. கண்கள் திறந்தன. தனது அங்கங்களை நீட்டிக்கொண்டு மீண்டும் உணர்வுக்கு வந்தார்.
இதிலிருந்தும் மற்ற காரணங்களாலும் வாசகர்கள், சாயிபாபா இத்தனை ஆண்டுகளாக உறைந்த 3½ முழ அளவான உடலைக் கொண்டவர்தானா, அதை விட்டுவிட்ட பிறகு அவர் நீங்கிவிட்டாரா, அல்லது அகத்தே உறையும் ஆத்மவடிவாக விளங்கினாரா என்று தீர்மானித்துக்கொள்ளலாம். பஞ்ச பூதங்களான இவ்வுடம்பு அழியக்கூடியது, நிலையற்றது. ஆனால் அதனுள் இருக்கும் ஆன்மாவே பரம்பொருள். அதுவே அழியாததும், நிலையானதுமான பரிபூர்ண உண்மையாகும். இப்புனித மெய்மை, உணர்வுநிலை அல்லது பிரம்மமே மனத்திற்கும், புலன்களுக்கும் அதிபதியாகவும் ஆட்டுவிப்போராகவும் உள்ள சாயி என்ற பரம்பொருள்.
இப்பரம்பொருளாகிய சாயியே அண்ட பேரண்டங்களிலும் இடைவெளி இல்லாமல் வியாபித்திருக்கிறார். இடைவெளி இல்லாமல் வியாபித்திருக்கிறார். குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக இவ்வுடம்பை எடுத்துக்கொண்டார். தமது குறிக்கோள் நிறைவேறியதும் தமது அழியும் உடம்பைத் — வரையறையுள்ள பண்புக்கூறு — துறந்துவிட்டு தமது வரையறையற்ற பண்புக்கூற்றை அடைந்தார். கடவுள் தத்தர், கனகாபூரைச் சேர்ந்த ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி போன்ற முந்தைய அவதாரங்கள் போலவே சாயி எப்போதும் வாழ்கிறார். அவரது மரணம் ஒரு புறத்தோற்றமே தவிர உயிருள்ளவற்றிலும், ஜடப்பொருட்களிலும் நிலைபெற்று ஆதிக்கம் செலுத்தி அவைகளைக் கட்டுப்படுத்துகிறார். இது இயல்பானதே. இப்போதும் கூடத் தங்களைத் தாங்களே முழுமையும் சரணாகதியடைவோரும் அவரையே முழுமனதாக பக்தியுடனும் வணங்குவோருமாகிய பலரும் அனுபவபூர்வமாக இதை உணரலாம்.
பாபாவின் ஸ்தூல உருவத்தை நாம் தற்போது காண இயலாவிடினும், இப்போதும்கூட ஷீர்டிக்குச் செல்வோமானால், மசூதியில் அவரது அழகான, தத்ரூபமான சித்திரம் காட்சியளித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். பாபாவின் புகழ்பெற்ற அடியவரும், சித்திரக்காரருமான ஷாம்ராவ் ஜெயகரால் இந்த ஓவியம் வரையப்பட்டது. கற்பனைவளம், பக்தியுள்ள பார்வையாளருக்கு இப்படம் இன்றும் பாபாவின் தரிசனம் தரும் திருப்தியையளிக்கிறது. பாபா இப்போது உடல் உருவில் இல்லையாயினும் அவர் அங்கும், எங்கும் இருந்து அவர் பூதவுடலுடன் இருந்த சமயம் எவ்வாறு பக்தர்களை நலமுடன் ஆராதித்தாரோ அவ்வாறே இப்போதும் அருள் செய்கிறார். பாபாவைப் போன்ற ஞானிகள் மனிதர்களைப்போன்று தோன்றினாலும், இறப்பதே இல்லை. உண்மையில் அவர்கள் கடவுளே ஆவர்.
பாபு சாஹேப் ஜோக்கின் துறவு
ஜோகின் சந்நியாசத்தைப் பற்றிய செய்தியுடன் ஹேமத்பந்த் இந்த அத்தியாயத்தை முடிக்கிறார். புனேவைச் சேர்ந்த புகழ்பெற்ற வர்க்காரி விஷ்ணுபுவா ஜோக் என்பவரின் மாமா சகாராம் ஹரி என்ற பாபு சாஹேப் ஜோக் ஆவார். அவர் அரசாங்க உத்தியோகத்திலிருந்து — டிபார்ட்மெண்டில் சுப்பர்வைசர் — 1909ல் ஓய்வு பெற்றதும், தமது மனைவியுடன் ஷீர்டிக்கு வந்து வசித்து வந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. கணவனும், மனைவியும் பாபாவை நேசித்தனர். பாபாவை வழிபடுவதிலும், அவருக்குச் சேவை செய்வதிலும், தங்கள் முழுநேரத்தையும் செலவிட்டனர். மேகாவின் மரணத்திற்குப்பின் மசூதியிலும், சாவடியிலும் பாபாவின் மஹாசமாதிவரை ஜோக் ஆரத்தி எடுத்தார். சாதேவின் வாதாவில் ஞானேஷ்வரியையும், ஏக்நாத் பாகவதத்தையும் மக்களுக்குப் படித்து விவரிக்கும் வேலையும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜோக் பல ஆண்டுகள் பாபாவுக்குச் சேவை செய்தபின்ன்னர் பாபாவை நோக்கி, "நான் இத்தனை காலம் தங்களுக்குச் சேவை செய்தேன். எனது மனம் இன்னும் அமைதியும், சாந்தியும் பெறவில்லை. ஞானிகளுடன் எனக்கு உண்டான தொடர்பு எங்ஙனம் என்னை முன்னேற்றாமல் இருக்கிறது? எப்போது என்னைத் தாங்கள் ஆசீர்வதிப்பீர்கள்?" என்று கேட்டார்.
பக்தரின் வேண்டுகோளைச் செவிமடுத்த பாபா, "உரிய காலத்தில் உனது தீவினைகள் — அவைகளின் விளைவு அல்லது பயன் — அழிக்கப்பட்டுவிடும். உனது நன்மை, தீமை யாவும் சாம்பலாக்கப்படும். எல்லாப் பற்றுக்களையும் துறந்து, அடங்காச் சிற்றின்ப அவாவையும், சுவை உணர்வையும் ஜெயித்து, எல்லாத் தடைகளையும் ஒழித்துவிட்டு, முழு மனதுடன் கடவுளுக்கே சேவை செய்து பிச்சைப் பாத்திரத்தை எப்போது நாடி அடைகிறாயோ — சந்நியாசம் ஏற்கிறாயோ — அன்றே நான் உன்னை புனிதமடைந்தவனாக நினைப்பேன்" என்றார். சில நாட்களுக்குப் பின் பாபாவின் மொழிகள் உண்மையாயின. அவரது மனைவி அவருக்குமுன் இயற்கை எய்தினாள். வேறு பற்றொன்றும் அவருக்கு இல்லை. அவர் சுதந்திரமானார். இறப்பதற்குமுன் சந்நியாசம் ஏற்றார். வாழ்க்கையின் இலட்சியத்தை எய்தினார்.
பாபாவின் அமுத மொழிகள்
அன்பும், கருணையும் உள்ள சாயிபாபா பலமுறை கீழ்கண்ட இனிய மொழிகளை மசூதியில் கூறியிருக்கிறார்.
"என்னை எவன் மிகவும் விரும்புகிறானோ, அவன் எப்போதும் என்னைக் காண்கிறான். என்னைவிட்டு நீங்கினால் இவ்வுலகமே அவனுக்கு சூன்யமாய்த் தோன்றுகிறது. எனது கதைககளைத் தவிர பிறவற்றை அவன் கூறுவதில்லை. இடையறாது என்னையே தியானித்து, என் நாமத்தையே அவன் ஸ்மரணம் செய்கிறான். முழுமையாக தன்னை என்னிடம் சமர்ப்பித்து, என்னையே எப்போதும் எவன் நினைவில் கொண்டிருக்கிறானோ அவனுக்கு நான் கடன்பட்டதாக உணர்கிறேன். அவனுக்கு விடுதலையை — தன்னையுணர்தல் — அளித்து எனது கடனைத் தீர்ப்பேன். என்னை நினைத்து, எனக்காக ஏங்குபவனையும், எதையும் முதலில் என்னை நினைக்காமல் உண்ணாதவன்பாலும் நான் சார்ந்திருக்கிறேன். இங்ஙனம் என்னிடம் வருபவன் ஆறு கடலுடன் ஒன்றாவதுபோல் என்னுடன் இரண்டறக் கலக்கிறான். பெருமையையும், அஹங்காரத்தையும் விட்டொழித்துவிட்டு எள்ளளவும் அவற்றின் அடையாளம் கூட இல்லாதபடி விலக்கி உங்கள் இதயத்தே அமர்ந்துகொண்டிருக்கிற என்னிடம் உங்களைப் பூரணமாகச் சமர்ப்பியுங்கள்!"
யார் இந்த 'நான்'
பலமுறை சாய்பாபா யார் இந்த நான் என்பதை விளக்கியிருக்கிறார். அவர் கூறினார், "நீங்கள் தொலைதூரமோ அல்லது எங்கெங்கேயோ என்னைத் தேடிக்கொண்டு போகவேண்டாம். உங்களது நாமத்தையும், ரூபத்தையும் நீக்கினால் உங்களுக்கும், அதைப்போன்று அனைத்து ஜீவராசிகளுள்ளும் உளதாயிருக்கும் உணர்வு அல்லது ஸ்தாபிக்கப்பெற்றிருக்கும் உணர்வுநிலை காணப்பெறுகிறது. அது நானேயாகும். இதை உணர்ந்துகொண்டு உங்களிடத்தும், எல்லா ஜீவராசிகளிடத்தும் என்னைக் காண்பீர்களாக. இதை நீங்கள் பயிற்சிப்பீர்களானால் சர்வ வியாபகத்தை உணர்ந்து என்னுடன் ஒன்றாகும் நிலையை நீங்கள் பெறுவீர்கள்".
எனவே வாசகர்களுக்கு ஹேமத்பந்த் வணக்கம் தெரிவித்துவிட்டு எல்லாத் தெய்வங்களையும், ஞானிகளையும், பக்தர்களையும் மரியாதை செய்யும்படி பணிவுடனும், அன்புடனும் வேண்டிக்கொள்கிறார். "எவனொருவன் பிறர்மீது குறைகூறி குற்றங்கண்டு குதர்க்கம் செய்கிறானோ, அவன் என்னை உள்ளத்தில் துளைத்துக் காயமேற்படுத்துகிறான். ஆனால் எவன் கஷ்டப்பட்டுப் பொறுமையுடன் இருக்கிறானோ, அவன் என்னை மிக அதிகமாக சந்தோஷப்படுத்துகிறான்" என்று பாபா அடிக்கடி கூறியதில்லையா?
பாபா இங்ஙனம் எல்லா ஜந்துக்களிடமும், ஜீவராசிகளிடமும் வியாபித்து அவைகள்பாலும், எல்லாத் திசைகளிலும் சூழ்ந்து இருக்கிறார். எல்லா உயிர்களிடமிருந்தும், அன்பைத் தவிர வேறெதையும் அவர் விரும்புவதில்லை. இத்தகைய புனிதமான அமிர்தம் எப்போதும் பாபாவின் திருவாயினின்று பெருக்கெடுத்தது. அவர்தம் புகழை அன்புடன் பாடுவோர், அதையே பக்தியுடன் கேட்போர் ஆகிய இருவரும் சாயியிடம் ஒன்றாகிவிடுகிறார்கள்.
ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
ஆனந்த்ராவ் கண்ட காட்சியும்
• மரப்பலகை பாபாவின் படுக்கைக்கானது,
பகத்தினுடையது அல்ல!
முன்னுரை
முந்தைய மூன்று அத்தியாயங்களில் பாபாவின் மறைவைக் குறித்து நாம் விவரித்தோம். அவரது நிலையற்ற ஸ்தூல உருவம் நமது காட்சியிலிருந்து மறைந்ததில் ஐயமில்லை. ஆனால் அவரது அழிவற்ற சூட்சும உருவம் எப்போதும் வாழ்கிறது. அவரது வாழ்நாளில் நடைபெற்ற லீலைகள் இன்றும் பெருமளவில் சொல்லப்பட்டு வருகின்றன. அவர் மறைந்த பின்னரும் அவரது புதியதான லீலைகள் நடைபெற்றன. இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவை பாபா எப்போதும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார் என்பதையும், அவர்தம் பக்தர்களுக்கு முன்னைப்போலவே உதவிக்கொண்டிருக்கிறார் என்பதையும் தெளிவாக்குகின்றன. பாபாவின் வாழ்நாளில் அவரது தொடர்பைப் பெற்றவர்கள் மிக அதிர்ஷ்டசாலிகளே. ஆனால் அவர்களில் எவராவது இவ்வுலகப் பற்றையும், இன்பங்களின் மேல் விருப்பத்தையும் விடாமல் கடவுள்மேல் உள்ளத்தைத் திருப்பவில்லை என்றால் அது அவர்களது துரதிர்ஷ்டமேயாகும். அப்போதும், இப்போதும் தேவை என்னவென்றால் பாபாவின்பால் முழுமனதான பக்தியே. நமது புலன்கள், உறுப்புக்கள், மனம் யாவும் பாபாவை வழிபடுவதில் ஒருங்கிணைத்து அவருக்குச் சேவைபுரிய வேண்டும். வழிபாட்டில் சில உறுப்புக்களை மட்டும் ஈடுபடுத்தி, மற்றவற்றை வேறுபக்கம் செலுத்துவது பயனற்றது. வழிபாடு, தியானம் போன்றவை மனப்பூர்வமாகவும், ஆத்மார்த்தமாகவும் செய்யப்படவேண்டும்.
கற்புறுமாதர் தம் கணவரிடம் கொண்டிருக்கும் அன்பு, சீடன் குருவிடம் கொண்டிருக்கும் அன்புடன் சிலசமயம் ஒப்பிடப்படுகிறது. எனினும் முன்னது குருபக்தியை விட மிகத்தாழ்வானபடியால் இரண்டையும் ஒப்பிட இயலாது. தந்தையோ, தாயோ, சகோதரனோ அல்லது வேறுஎந்த உறவினரோ நம் வாழ்க்கையின் இலட்சியத்தை அடைய — ஆத்ம உணர்வு பெற — உதவிக்கு வரமாட்டார்கள். நாமே திட்டமிட்டுக்கொண்டு ஆன்ம உணர்வு பெறும் பாதையில் வழிநடக்க வேண்டும். உண்மைக்கும், மாயைக்கும் இடையில் பேதம் கண்டு இகபர இன்பங்களையும் பொருட்களையும் துறந்து, புலன்களையும் மனதையும் அடக்கி முக்தியை அடைவதில் மட்டுமே விருப்பமுள்ளவர்களாக இருக்கவேண்டும். மற்றவர்களைச் சார்ந்திருப்பதற்குப் பதிலாக நம்மிடமே நமக்குப் பூரண நம்பிக்கை வேண்டும்.
பேதங்கள் உணர பயிற்சி செய்யத்தொடங்கும்போது உலகம் ஒரு மாயை என்றும் நிலையற்றது என்றும் அறிந்து கொள்வதால் உலக ஆசைகள் மீதான பற்று குறைந்து முடிவில் பற்றற்ற நிலையைப் பெறுகிறோம். பிரம்மம் என்பது நமது குருவைத்தவிர வேறல்ல என்றும், அவரே முழு நிச்சயநிலையில் நாம் காணும் அண்டசராசரங்களிலும் வியாபித்து ஆட்கொண்டிருப்பதையும் உணர்ந்து, அவரை எல்லா உயிர்களிடத்திலும் கண்டு வணங்கத் தொடங்குகிறோம். இதுவே கூட்டுப் பிராத்தனை — பஜனை — அல்லது வழிபாடாகும்.
இவ்விதம் குருவாகிய பிரம்மத்தை மனமுருகி வழிபடும்போது நாம் அவர்களுடன், ஒன்றி ஆன்ம உணர்வைப் பெறுகிறோம். சுருக்கமாக, குருவின் நாமத்தை எப்போதும் ஸ்மரணம் செய்துகொண்டு இருப்பதும், அவரைத் தியானிப்பதும் எல்லா ஜீவராசிகளிலும் அவரைக் காணச்செய்து நம்மீது அழியாத பேரின்பத்தைச் சொரிகிறது. பின்வரும் கதை இதனை விளக்குகிறது.
காகா சாஹேபின் ஐயமும் ஆனந்த்ராவ் கண்ட காட்சியும்
ஏக்நாத்தின் நூல்களான ஸ்ரீமத் பாகவதம், பாவார்த்த ராமாயணம் இரண்டையும் காகா சாஹேப் தீஷித்தை தினந்தோறும் வாசிக்கச்சொல்லி சாயிபாபா உத்தரவிட்டார் என்பது நன்றாகத் தெரிந்த விஷயம். காகா சாஹேப் தீஷித், பாபா உயிருடன் இருக்கும்போதும், அவர் மறைந்த பின்பும் இதனைப் பின்பற்றினார். பம்பாய் சௌபாத்திலுள்ள காகா மஹாஜனியின் வீட்டில் ஒருநாள் காலை காகா சாஹேப் தீஷித் ஏக்நாத்தின் பாகவதத்தை வாசித்துக்கொண்டிருந்தார். ஷாமா என்றழைக்கப்பட்டும் மாதவராவ் தேஷ்பாண்டேயும், காகா மகாஜனியும் புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயத்தில் பதினோராம் காண்டம் படிக்கப்பட்டதைக் கவனத்துடன் கேட்டனர். அதில் ரிஷபக் குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது சித்தர்கள் அல்லது நாதர்கள் என்றழைக்கப்பட்ட கவி, ஹரி, அந்தரிக்ஷா, பிரபுத்தா, பிப்பலாயன், அவிர்ஹோத்ரர், த்ருமில், சமஸ், கரபாஜன் முதலியோர் பாகவத தர்மத்தை ஜனகராஜனுக்கு உபதேசித்தார்கள்.
ஜனகர் அவ்வொன்பது நாதர்களையும் மிகமிக முக்கியமான கேள்விகளைக் கேட்டார். அதற்கு அவர்கள் ஒவ்வொருவரும் திருப்திகரமானமுறையில் பதிலளித்தார்கள்.
முதல்வரான கவி பாகவத தர்மம் என்றால் என்ன! என்று விவரித்தார்.
ஹரி பக்தனின் குணநலன்களை விளக்கினார்.
மாயை என்றால் என்ன என்பதை அந்தரிக்க்ஷா விளக்கினார்.
மாயையை எவ்வாறு கடப்பதென்பதை பிரபுத்தா விளக்கினார்.
பரப்பிரம்மம் என்பதை பிப்பலாயன் விவரித்தார்.
கர்மத்தைப் பற்றி அவிர்ஹோத்ரர் விளக்கினார்.
த்ருமில் கடவுள் அவதாரங்களையும் அவர் செயல்களையும் விளக்கினார்.
மரணத்துக்குப்பின் பக்தனில்லாதவன் எங்ஙனம் கூலி கொடுக்கப்படுகிறான் என்பதை சமஸ் கூறினார்.
வெவ்வேறு யுகங்களில் விவ்வேறு விதமான கடவுள் வழிபாட்டைப் பற்றி கரபாஜன் விளக்கினார்.
கலியுகத்தில் ஹரி அல்லது குருவின் பாதங்களை நினைவூட்டிக்கொள்வதே விடுதலைக்கு ஒரேவழி என்பதே எல்லா விளக்கங்களின் கருத்துமாகும்.
வியாக்கியானம் முடிவடைந்த பின்னர், மாதவ்ராவிடமும் மற்றவர்களிடமும் காகா சாஹேப் மனஞ்சோர்ந்த குரலில் கூறினார். "பக்தியைப் பற்றி ஒன்பது நாதர்களின் விளக்கமும் எவ்வளவு ஆச்சரியமானதாக இருக்கிறது! அதே நேரத்தில் அதை அப்பியாசத்திற்குக் கொண்டுவருவது எவ்வளவு கடினம்! நாதர்கள் பூரணத்துவம் பெற்றவர்கள். ஆனால் அவர்களால் விவரிக்கப்பட்ட பக்தியை நம்போன்ற அறிவற்றவர்கள் அடைவது சாத்தியமா? பல பிறவிகளுக்குப் பின்னரும் நாம் அதை அடையப்போவதில்லை. பின்னர் எங்ஙனம் நாம் முக்தியடைய முடியும்? நமக்கெல்லாம் கதிமோட்சத்திற்கான நம்பிக்கையே இல்லையென்றே தோன்றுகிறது". காகா சாஹேபின் இந்த சோர்வான எண்ணத்தை மாதவ்ராவ் விரும்பவில்லை.
அவர் கூறினார், "வைரத்தைப் போன்ற பாபாவைக் குருவாக அடைந்த நல்லதிர்ஷ்டம் உள்ள ஒருவர் இவ்வளவு தாழ்வுணர்ச்சியுடன் அழுவது பரிதாபமானது. பாபாவிடம் அவருக்கு அசைவற்ற நம்பிக்கை இருக்குமானால் ஏன் அவர் மனச்சலனமடைய வேண்டும். நாதர்களின் பக்தி உறுதியானதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் இருக்கலாம். ஆனால் நமது பக்தி அன்பும், பாசமும் உடையதல்லவா? ஹரியினுடைய அல்லது குருவினுடைய பெயரை ஸ்மரணம் செய்துகொண்டிருப்பதே நமக்கு முக்தியை அளிக்கும் என்று பாபா நமக்கு ஆணித்தரமாகக் கூறவில்லையா? பின் பயத்துக்கும், கவலைக்கும் ஏது காரணம்?". மாதவ்ராவின் விளக்கத்தால் காகா சாஹேப் தீஷித் திருப்தியடையவில்லை. அன்று முழுவதும் அவர் நாதர்களின் சிறந்த பக்தியுணர்வைப்போல் தாமும் எவ்விதம் பெறுவது என்ற சிந்தனையிலும் எண்ணத்திலும், கவலையாகவும், மன அமைதியற்றும் இருந்தார். அடுத்த நாள் காலை பின்வரும் அற்புதம் நிகழ்ந்தது.
ஆனந்த்ராவ் பாகாடே என்ற ஒரு பெருந்தகை மாதவ்ராவைத் தேடி அங்கு வந்தார். பாகவத பாராயணம் அப்போது நடந்துகொண்டிருந்தது. பாகாடே, மாதவ்ராவின் அருகில் அமர்ந்து எதையோ அவரிடம் முணுமுணுத்தார். அவர் தாம் கண்ட தெய்வீகக் காட்சியை மெல்லிய குரலில் கூறிக்கொண்டிருந்தார். பாராயணத்துக்கு அவரது முணுமுணுப்பு சிறிது இடையூறாக இருந்ததால் காகா சாஹேப் படிப்பதை நிறுத்திவிட்டு மாதவ்ராவை விஷயம் என்னவென்று கேட்டார். மாதவ்ராவ்,"நேற்று உங்கள் சந்தேகத்தை எழுப்பினீர்கள். இப்போது அதற்கு விளக்கம் கிடைத்திருக்கிறது. பக்தியின் 'காப்பாற்றும்' குணாதிசயத்தையும், குருவின் பாதங்களை வணங்குதல், வழிபடுதல் ஆகிய ஆர்வம் மட்டுமே போதும் என்று பாபா கனவின் மூலம் பாகடே அவர்களுக்குக் காண்பித்ததைக் கேளுங்கள்" எனக்கூறினார்.
எல்லோரும், குறிப்பாக காகா சாஹேப் தீஷித், அக்கனவுக் காட்சியைக் கேட்க ஆர்வம் கொண்டவர்களாக இருந்தனர். அவர்களது யோசனையின்பேரில் பாகாடே தமது காட்சியைப் பின்வருமாறு வர்ணிக்கத் தொடங்கினார்.
ஆழமான கடலில் இடுப்பளவு நீரில் நான் நின்றுகொண்டிருந்தேன். திடீரென்று அங்கு சாயிபாபாவைக் கண்டேன். அவர்தம் பாதங்கள் நீரில்பட வைரங்கள் பதிக்கப்பட்ட அழகிய சிம்மாசனத்தில் அமர்ந்துகொண்டிருந்தார். பாபாவின் ரூபத்தால் நான் மிகமிக மகிழ்வுகொண்டு திருப்தியடைந்தேன். கனவு என்று நினைக்கமுடியாத அளவுக்கு தத்ரூபமாக அக்காட்சி இருந்தது. மிகுதியான ஆர்வத்துடன் மாதவ்ராவும் அங்கு நின்றுகொண்டிருந்தார். அவர் உணர்ச்சிவசப்பட்டு, "ஆனந்த்ராவ், பாபாவின் பாதத்தில் விழு!" என்றார். "நானும் அங்ஙனமே செய்ய விரும்புகிறேன், ஆனால் பாபாவின் பாதங்கள் தண்ணீரில் இருக்கின்றன. எங்ஙனம் எனது சிரசை அவற்றின் மேல் வைக்கமுடியும்? நான் இயலாதவனாக இருக்கிறேன்". பின்னர் நான் பாபாவிடம், "ஓ! தேவா, நீரில் இருக்கும் தங்கள் பாதங்களை வெளியே எடுத்துக்கொள்ளுங்கள்" என்றேன். உடனே பாபா தமது பாதங்களை வெளியே எடுத்துக்கொண்டார். தாமதமின்றி நான் அவைகளைப் பற்றிக்கொண்டு வணங்கினேன். இதைக்கண்டு பாபா என்னை ஆசீர்வதித்து, "இப்போது போ, உனது நன்மையை நீ பெறுவாய். பயத்துக்கோ, கவலைக்கோ காரணமில்லை. எனது ஷாமாவுக்கு பட்டுக்கரை வேட்டி ஒன்றைக்கொடு. நீ நன்மை அடைவாய்" என்றார்.
பாபா கனவிலிட்ட ஆணைக்கேற்ப பாகாடே ஒரு வேஷ்டி கொணர்ந்து அதை மாதவ்ராவிடம் கொடுக்கும்படி காகா சாஹேப் தீஷித்தை வேண்டிக்கொண்டார். ஆனால் பாபா அதனை ஏற்றுக் கொள்வதற்கேற்ற ஏதாவதொரு குறிப்பு அல்லது யோசனை கூறினாலன்றி தாம் அதை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று மாதவ்ராவ் கூறிவிட்டார்.
சிறிது விவாதத்திற்குப்பின் காகா சாஹேப் திருவுளச் சீட்டுப் போடத் தீர்மானித்தார். ஐயப்பாடுள்ள எல்லா விஷயங்களிலும் திருவுளச் சீட்டுப்போட்டு பொறுக்கி எடுக்கப்பட்ட சீட்டில் கண்டுள்ளபடி நடப்பது காகா சாஹேபின் நிரந்தரமான வழக்கமாகும். இந்தக் குறிப்பிட்ட விஷயத்தில் 'ஏற்றுக்கொள்ள', 'தள்ளிவிட' என்று இரு சீட்டுக்களில் எழுதப்பட்டு பாபாவின் படத்தின் அடியில் வைக்கபப்ட்டு ஒரு குழந்தையால் ஒரு சீட்டு எடுக்கும்படி கேடக்கப்பட்டது. 'ஏற்றுக்கொள்' என்ற சீட்டே குழந்தையால் எடுக்கப்பட்டு வேஷ்டியும் மாதவ்ராவிடம் கொடுக்கப்பட்டு, அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவ்விஷயமாக ஆனந்த்ராவ், மாதவ்ராவ் இருவருமே திருப்தியடைந்தனர். காகா சாஹேபின் பிரச்சனை தீர்ந்தது.
மற்ற ஞானிகளின் மொழிகளுக்கு மரியாதை கொடுக்க இக்கதை நம்மை ஊக்குவிக்கிறது. அதே சமயம் நமது அன்னையிடம் — அதாவது குருவிடம் — முழு நம்பிக்கைகொண்டு அவரது அறிவுரைகளின்படி நடக்கவும் கூறுகிறது. ஏனெனில் அவர் வேறு எவரையும்விட சிறப்பாக நமது நலத்தை அறிகிறார். பின்வரும் பாபாவின் மொழிகளை உங்கள் உள்ளத்தில் ஆழப்பதித்துக் கொள்ளுங்கள். "இவ்வுலகில் எண்ணற்ற ஞானிகள் இருக்கிறார்கள். ஆனால் 'நமது தந்தையே' — குருவே , 'உண்மையான தந்தை' — நிஜமான குரு — ஆவார். மற்றவர்கள் பல நல்ல விஷயங்களைக் கூறலாம். ஆனால் நமது குருவின் மொழியை மறக்கவே கூடாது. சுருக்கமாக உங்கள் குருவை முழு மனதுடன் நேசியுங்கள். அவரிடமே பரிபூர்ண சரணாகதியடையுங்கள். பயபக்தியுடன் அவர்முன் சாஷ்டாங்கமாக வணங்குங்கள். பின்னர் ஆதவனுக்குமுன் இருள் இல்லாதிருப்பதைப் போல் உங்கள் முன் நீங்கள் கடக்கவேண்டிய உலக வாழ்வெனும் கடல் இல்லாததைக் காண்பீர்கள்."
மரப்பலகை - பாபாவின் படுக்கைக்கானது,
பகத்தினுடையது அல்ல!
தமது ஆரம்ப நாட்களில் நாலு முழ நீளமும் ஒரு முழ அகலமும் உள்ள ஒரு மரப்பலகையின் நான்கு மூலைகளிலும் சிட்டி — அகல் — விளக்குகள் எரிந்துகொண்டிருக்க பாபா உறங்கினார். பின்னர் அவர் அப்பலகையைத் துண்டுதுண்டாக உடைத்துத் தூக்கி எறிந்துவிட்டார். — அத்தியாயம் 10 — ஒருமுறை இப்பலகையின் பெருமையையும், முக்கியத்துவத்தையும் காகா சாஹேப் தீஷித்திடம் பாபா விவரித்தார். இதைக்கேட்டுக்கொண்டிருந்த அவர் பாபாவிடம், "நீங்கள் இன்னும் மரப்பலகையை விரும்பினால் சௌகரியமாகத் தூங்குவதற்காக மசூதியில் மீண்டும் ஒன்றைத் தொங்கவிடுகிறேன்" என்றார்.
பாபா: மஹல்ஸாபதியைக் கீழே விட்டுவிட்டு நான் மேலே துயில விரும்பவில்லை.
காகா: மஹல்ஸாபதிக்காக நான் மற்றொரு பலகையையும் ஏற்பாடு செய்கிறேன்.
பாபா: அவன் எங்ஙனம் பலகையில் தூங்கமுடியும்? பலகையின் மீது தூங்குவது எளிதல்ல. தன்னிடத்து பல நல்ல குணங்கள் - பண்புகள் உள்ள ஒருவனே அங்ஙனம் செய்ய இயலும். தனது கண்கள் 'அகல விழித்திருக்கும் நிலையில்' தூங்கக் கூடியவனே அதில் தூங்கமுடியும். நான் தூங்கப்புகும்முன் மஹல்ஸாபதியை என் அருகில் அமரச் சொல்லி எனது நெஞ்சின் மீது கைவைத்து நாமஸ்மரணம் கேட்கிறதா எனக் கவனிக்கும்படியும், தூங்கிவிட்டால் எழுப்பும்படியும் அவனைக் கேட்கிறேன். இதைக்கூட அவனால் செய்ய இயலுவதில்லை. தூக்க மயக்கத்தில் தலையை ஆட்ட ஆரம்பிக்கிறான். எனது நெஞ்சில் அவனது கை ஒரு கல்லைப் போல் கனப்பதை உணர்ந்து நான், "ஓ! பகத்" என்று கூவும்போது அவன் அசைந்து கண் விழிக்கிறான். தரையின் மீதே சரியாக அமர முடியாமலும், தூங்குமுடியாமல் தடுமாறுபவனும் தனது ஆசனம் — தோற்ற அமைவு — நிலையுறுதியாக இல்லாதவனும், தூக்கத்திற்கு அடிமையானவனுமான அவன் உயரத்திலுள்ள பலகையில் எவ்விதம் தூங்க இயலும்?
மற்ற அநேக முறைகளில் அடியோர்கள் மேல் கொண்ட அன்பினால், "எது நம்முடையதோ — நன்மையோ, தீமையோ — அது நம்மிடம் இருக்கிறது. எது மற்றவனுடையதோ அது அவனிடம் இருக்கிறது" என்று பாபா கூறினார்.
ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
• ஆடுகளின் கதை
இந்த அத்தியாயம் ஷாமா காசி, பிரயாகை, கயா முதலிய இடங்களுக்குப் பயணம் செல்வதையும், பாபா எங்ஙனம் அவருக்கு முன்னால் சென்று அங்கிருந்தார் என்பதையும் விளக்குகிறது. மேலும் இரண்டு ஆடுகளைப்பற்றிய பாபாவின் பழைய நினைவுகளையும் விவரிக்கிறது.
முன்னுரை
ஓ! சாயி, தங்களது பாதங்களும் தங்களைப் பற்றிய நினைவுகளும் தங்களது தரிசனமும் புனிதமானவை. அவை எங்களை கர்ம தளைகளிலிருந்து விடுவிக்கிறது. எங்களுக்குத் தங்கள் ரூபம் தெரியாமலிருந்தாலும், இப்போதும் அடியவர்கள் தங்களை நம்பினால் பிரத்தியட்சமான அனுபவங்களை உடனே தங்களிடமிருந்து பெறுகிறார்கள். கட்புலனுக்குத் தென்படாத சூட்சுமமான நூலால் தாங்கள் அருகிலும், தொலைவிலுமுள்ள பக்தர்களைத் தங்கள் பாதகமலங்களுக்கு ஈர்த்து இழுத்து, அன்பும் பாசமுமுள்ள தாயாரைப் போல அரவணைக்கிறீர்கள். தாங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை அடியவர்கள் அறியவில்லையென்றாலும், தாங்கள் அவர்களின் அருகிலேயே இருந்து அவர்களுக்கு உதவி புரிந்து ஆதரிக்கிறீர்கள் என்பதைக் கடைமுடிவாக அவர்கள் உணர்ந்துகொள்ளும்படி அவ்வளவு சாமர்த்தியமாக நூலை இழுக்கிறீர்கள்.
தங்கள் அஹங்காரத்தின் காரணமாக புத்திசாலிகள், அறிவாளிகள், கற்றறிந்தோர் இவர்களெல்லோரும் சம்சாரக் குழியில் விழுகிறார்கள். ஆனால் மிகவும் ஏழ்மையான, சாதாரண பக்தர்களைத் தங்கள் சக்தியினால் காப்பாற்றுகிறீர்கள். ஆன்மஸ்வரூபமாகவும் யாரும் அறியாதபடியும் எல்லா லீலைகளையும் புரிந்துவிட்டு அவற்றுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாததுபோல் தோற்றமளிக்கிறீர்கள். தாங்களே செயல்களைச் செய்கிறீர்கள். ஆனால் செய்யாதவரைப் போன்று காட்சியளிக்கிறீர்கள். ஒருவருக்கும், ஒருபோதும் தங்கள் வாழ்க்கையைப்பற்றித் தெரியாது. எனவே எங்களது பாவங்களைப் போக்கும் எங்களுக்குண்டான சிறந்த வழி, மனம், மொழி, மெய் இவற்றால் தங்கள் பாதாரவிந்தங்களைச் சரணடைந்து தங்களது நாமத்தை எப்போதும் ஸ்மரணம் செய்வதேயாகும். அடியவர்களின் ஆசைகளைத் தாங்கள் பூர்த்தி செய்கிறீர்கள். பற்றற்றவர்களுக்குப் பேரானந்தப் பெருநிலையை அளிக்கிறீர்கள். தங்கள் இனிமையான பெயரை ஸ்மரணம் செய்வதே அடியவர்களுக்கு மிகமிக எளிதான சாதனமாகும்.
இச்சாதனங்களால் ராஜச, தாமசப் பண்புகள் மறைந்து சத்துவ குணமும், நேர்மையும் முக்கியத்துவம் அடைகின்றன. விவேகம், பற்றின்மை, ஞானம் முதலியவையும் தொடர்கின்றன. பின்னர் நாம், நமது ஆன்மாவுடனும், குருவிடமும் ஒன்றிவிடுவோம். — இரண்டும் ஒன்றே — இதுவே குருவிடம் பூரண சரணாகதி அடைவது என்பதாகும். நமது மனம் அமைதியும், சாந்தியும் பெறுவதே இதற்கான ஒரே நிச்சயமான அடையாளமாகும். இச்சரணாகதி, பக்தி, ஞானம் இவற்றின் பெருமை தனித்தன்மை வாய்ந்தது. ஏனெனில் அமைதி, பற்றின்மை, புகழ், முக்தி முதலியவை அதைத் தொடர்ந்து வருகின்றன.
ஒரு அடியவரை பாபா ஏற்றுக்கொண்டால், அவரை அவர் தொடர்கிறார். இரவும், பகலும், வீட்டிலும், வெளியிலும் அவருடனேயே இருக்கிறார். அவர் விரும்பியவாறு எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும். அறிவுக்கெட்டாத வகையில் ஏதாவது ஒரு ரூபத்தில் அவருக்கு முன்பாகவே சென்று பாபா அங்கு இருக்கிறார். கீழ்வரும் கதை இதை விளக்குகிறது.
கயா பயணம்
காகா சாஹேப் தீஷித், சாயிபாபாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, தனது மூத்த மகன் பாபுவுக்கு, நாக்பூரில் பூணூல் திருமணம் நிகழ்த்த நிச்சயித்தார். ஏறக்குறைய அதே தருணம் நானா சாஹேப் சாந்தோர்கர் தமது மூத்த மகனுக்கு குவாலியரில் திருமண வைபவம் நிகழ்த்த நிச்சயித்தார். தீஷித், சாந்தோர்கர் ஆகிய இருவரும் ஷீர்டிக்கு வந்து, இவ்வைபவங்களுக்கு பாபாவை அன்புடன் வரவேற்றனர். தமது பிரதிநிதியாக ஷாமாவை ஏற்றுக்கொள்ளும்படி பாபா அவர்களிடம் கூறினார். அவரே நேரடியாக வரவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டபோது ஷாமாவை அவர்களுடன் கூட்டிக்கொண்டு செல்லும்படி அவர்களிடம் கூறி காசிக்கும், பிரயாகைக்கும் சென்றபின்பு நாம் ஷாமாவைவிட முன்னாலிருப்போம் என்று கூறினார். இத்தருணம் பாபாவின் மொழிகளைக் குறித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அவைகள், அவரின் சர்வ வியாபகத்தைக் காண்பிக்கின்றன.
ஷாமா, பாபாவின் அனுமதியைப் பெற்றுக்கொண்டு இந்த வைபவங்கள், விழாக்கள், ஆகியவற்றுக்காக நாக்பூருக்கும், குவாலியருக்கும் சென்றுவிட்டு பின்னர் காசி, பிரயாகை மற்றும் கயாவுக்கும் செல்லத் தீர்மானித்தார். ஆபாகோதேவும் அவருடன் அவருடன் செல்வதாக இருந்தார். இருவரும் முதலில் நாக்பூருக்கு பூணூல் விழாவுக்குச் சென்றனர். காகா சாஹேப் தீஷித், ஷாமாவுக்கு அவரின் செலவுக்காக ரூ.200 கொடுத்தார். பின்னர் அவர்கள் குவாலியருக்குத் திருமண வைபவத்துக்காகச் சென்றனர். அங்கே நானா சாஹேப் சாந்தோர்கர், ஷாமாவுக்கு நூறு ரூபாயும் அவரது சம்பந்தியான ஜடார் நூறு ரூபாயும் கொடுத்தனர். பின்னர் ஷாமா காசி, அயோத்தி முதலிய இடங்களுக்குச் சென்றார். காசியில் ஜடாரின் அழகான லக்ஷ்மி நாராயணர் கோவிலிலும், அயோத்தியில் ராமர் கோவிலிலும் ஜடாரின் மேனேஜரால் நன்கு வரவேற்கப்பட்டார்.
அவர்கள் — ஷாமா, கோதே — அயோத்தியில் இருபத்தொரு நாட்களும், காசியில் இரண்டு மாதங்களும் தங்கினர். பின்னர் அங்கிருந்து கயாவுக்குப் புறப்பட்டனர். கயாவில் பிளேக் பரவியிருக்கிறது என்பதை ரயிலில் அவர்கள் கேள்விப்பட்டு மனக்கிலேசம் அடைந்தனர். இரவில் கயா ஸ்டேஷனில் இறங்கி தர்மசாலையில் தங்கினார்கள். காலையில் கயாவாலா — யாத்திரீகர்களுக்கு உணவும், இருப்பிடமும் அளிக்கும் அந்தணர் — வந்து "யாத்ரீகர்கள் எல்லாம் முன்னரே புறப்பட்டுவிட்டனர். நீங்களும் சீக்கிரம் புறப்படுவது நல்லது" என்றார். ஷாமா தற்செயலாக அவரை கயாவில் பிளேக் இருக்கிறதா என்று வினவினார். இல்லை என்றார் கயாவாலா. "தயவுசெய்து எவ்விதக் கவலையும், பயமுமின்றி வந்து தாங்களே பாருங்கள்" என்றார். பின்னர் அவர்கள் அவருடன் சென்று அவரது இல்லத்தில் தங்கினார்கள். அது பெரிய விசாலமான சத்திரமாகும்.
தனக்குக் கொடுக்கப்பட்ட இடத்தைப் பற்றி ஷாமா மிகவும் மகிழ்ந்தார். ஆனால் கட்டிடத்தின் முற்பகுதியில் நடுவே மாட்டப்பட்டிருந்த பாபாவின் பெரிய அழகான சாயி படமே அவரை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இப்படத்தைப் பார்த்ததும் ஷாமாவுக்கு உணர்ச்சி பொங்கியது. "அவர் காசிக்கும், பிரயாகைக்கும் சென்ற பிறகு ஷாமாவுக்கு முன்னதாகவே நாம் அங்கு இருப்போம்" என்ற பாபாவின் மொழிகளை நினைவுகூர்ந்தார். கண்களில் கண்ணீர் பொங்கியது. மயிர்க்கூச்செறிந்து தொண்டை அடித்துத் தேம்பி அழத்தொடங்கினார். அங்கு பிளேக் இருப்பது குறித்துப் பயந்து அதனால் அவர் அழுகிறார் என கயாவாலா நினைத்தார். ஆனால் ஷாமா பாபாவின் படத்தை எங்கிருந்து, எப்போது அவர் பெற்றார் என்று விசாரித்தார். கயாவுக்கு வரும் யாத்ரீகர்களின் வசதிகளைக் கவனித்துக்கொள்வதற்காக அவருக்கு 200 அல்லது 300 ஏஜெண்டுகள் மன்மாடிலும், புண்தாம்பேயிலும் வேலை செய்வதாகவும், அவர்களிடமிருந்து பாபாவின் புகழைக் கேள்விப்பட்டதாகவும் கூறினார்.
பின்னர் ஏறக்குறையப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் ஷீர்டிக்கும் சென்று பாபாவின் தரிசனத்தைப் பெற்றார். அங்கு ஷாமாவின் வீட்டில் தொங்கவிடப்பட்டிருந்த பாபாவின் படத்தை பாபாவின் அனுமதிபெற்று, ஷாமா அவருக்குக் கொடுத்தார். இது அதே படம்தான். இந்த முந்தைய நிகழ்ச்சியை ஷாமா அப்போது நினைவுகூர்ந்தார். முன்னால் தனக்கு பணிவன்பு புரிந்த அதே ஷாமாதான் தனது விருந்தினர் என்று தெரிந்தவுடன் கயாலாவுக்கு மகிழ்ச்சி கரை காணவில்லை. பின்னர் அவர்களிருவரும் அன்பையும், சேவையையும் பரிமாறிக்கொண்டார்கள். மிகமிக உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருந்தனர். கயாவாலா அவருக்குச் சரியான ராஜோபசாரம் செய்தார். அவர் பெரும் பணக்காரர். தான் ஒரு பல்லக்கில் அமர்ந்து, யானையின் மேல் ஷாமாவை அமரச்செய்து அவரது தேவை, சௌகர்யங்கள் அனைத்தையும் கவனித்துக்கொண்டார்.
இக்கதையின் நீதியாவது பாபாவின் மொழிகள் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே உண்மையாகின்றன. தமது அடியவர்கள்பால் அவர் கொண்டுள்ள அன்பு எல்லையற்றதாகும். அதைவிட்டுவிடுவோம், அவர் எல்லா ஜீவராசிகளையும் கூடச் சமமாக நேசித்தார். ஏனெனில் அவர்கள்பால் தாம் ஒன்றியவராக நினைத்தார். பின்வரும் கதை இதை விளக்குகிறது.
இரண்டு ஆடுகள்
ஒருமுறை லெண்டியிலிருந்து பாபா திரும்பி வந்துகொண்டிருக்கும்போது, ஆட்டு மந்தையொன்றைக் கண்டார். அவைகளில் இரண்டு அவரின் கவனத்தைக் கவர்ந்தன. அவைகளிடம் சென்று அவற்றைத் தடவிக்கொடுத்து அன்புசெலுத்தி அவைகளை ரூபாய் 32க்கு விலைக்கு வாங்கினார். பாபாவின் இந்தச் செயலைக்கண்டு பக்தர்கள் ஆச்சரியமுற்றனர். இவ்வியாபாரத்தில் பாபா ஏமாற்றப்பட்டார் எனவும், ஒரு ஆடு ரூ.2 வீதம் அல்லது அதிகபட்சம் ரூ.3 அல்லது 4 வீதம் இரண்டு ஆடுகளும் ரூ.8 மட்டுமே பெறும் எனவும் நினைத்தனர். அவர்கள் இதற்காக பாபாவைக் கடிந்துகொண்டனர். ஆனால் பாபா அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தார். ஷாமாவும், தாத்யா கோதேவும் அதற்கு விளக்கம் கேட்டனர். தமக்கென வீடும், கவனிக்கக் குடும்பமும் இல்லாதபடியால் தாம் பணத்தைச் சேமிக்கக்கூடாது என்று அவர் கூறினார். தமது செலவில் நான்குசேர் பருப்பு வாங்கி ஆடுகளுக்கு அளிக்கும்படி கூறினார். இது முடிந்தபின், பாபா அவ்வாடுகளை மந்தையின் சொந்தகாரருக்குக் கொடுத்துவிட்டு, ஆடுகளைப் பற்றிய தமது பழைய ஞாபகத்தையும், கீழ்கண்ட கதையையும் கூறினார்.
"ஓ! ஷாமா, தாத்யா!", இவ்வியாபாரத்தில் நான் ஏமாற்றப்பட்டு விட்டேன் என நீங்கள் நினைக்கிறீர்கள். கிடையாது. அவைகளின் கதையைக் கேளுங்கள். அவைகளின் முந்தைய பிறவியில் மனிதர்களாய் இருந்தனர். எனது நண்பர்களாய் இருந்து, எனது அருகில் அமரும் நல்லதிர்ஷ்டம் பெற்றிருந்தனர். அவர்கள் ஒருதாய் மக்கள். முதலில் ஒருவரையொருவர் நேசித்தனர். ஆனால் பிற்காலத்தில் பகையாளிகளாய் ஆகிவிட்டனர். மூத்தவன் சோம்பேறி, பின்னவன் சுறுசுறுப்பானவன். ஆதலால் பெரும்பொருள் திரட்டினான். மூத்தவன் பேராசையும், பொறாமையும் கொண்டு பின்னவனைக் கொன்று பணத்தை எடுத்துக்கொள்ள விரும்பினான்.
தங்கள் சகோதர உறவை மறந்து, ஒருவருடன் ஒருவர் சண்டை போடத்தொடங்கினர். மூத்தவன் இளையவனைக் கொல்லப் பல வழிமுறைகளைக் கையாண்டு அவனது முயற்சிகளில் தோல்வியடைந்தான். இவ்வாறாக அவர்கள் மரண விரோதியானார்கள். முடிவாக ஒரு சந்தர்ப்பத்தில் மூத்தவன், இளையவன் தலையில் தடிக்கம்பால் பலத்த மரணஅடி ஒன்று கொடுக்க, இளையவன் மூத்தவனை கோடாரியால் தாக்க இதன் விளைவாக இருவரும் அவ்விடத்திலேயே மாண்டனர். அவர்கள் வினையின் காரணமாக இருவரும் ஆடுகளாகப் பிறந்தனர். சற்றுமுன் என்னைக்கடந்து சென்றபோது, நான் அவர்களை அறிந்துகொண்டேன். அவைகளின் முந்தைய பிறவிகளை நினைவுகூர்ந்து இரக்கம்கொண்டு அவைகளுக்கு இளைப்பாறுதாலும், சௌகரியமும் தர விரும்பி என்னிடம் இருந்த எல்லாப் பணத்தையும் செலவழித்தேன். இதற்காகத்தான் நீங்கள் என்னைப் குறை கூறுகிறீர்கள். நீங்கள் என்னுடைய பேரத்தை விரும்பாததால் நான் அவைகளை மேய்ப்பவனிடமே திருப்பி அனுப்பிவிட்டேன்", என்றார். ஆடுகளிடம் சாயியின் அன்பு அத்தகையது.
ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
• வீரபத்ரப்பா, சனபஸப்பா — பாம்பு, தவளை
ஆகியோரின் கதை
இரண்டு ஆடுகளைப்பற்றி பாபாவின் பழைய ஞாபகங்களை சென்ற அத்தியாயம் விவரித்தது. இது அத்தகைய இன்னும் பல ஞாபகங்களையும் வீரபத்ரப்பா, சனபஸப்பா ஆகியோரின் கதையையும் கூறுகிறது.
முன்னுரை
சாயியின் முகம் புனிதமானது. சில கணங்களுக்கு நாம் நமது பார்வையை அவர்பால் செலுத்தினாலும் நமது முந்தைய பல பிறவிகளின் துக்கங்களையழித்து நம்மீது பேரானந்தத்தைப் பொழிகிறார். கருணையுடன் அவர் நம்மீது நோக்குவாராயின் நமது முன்னைய கர்மவினைக் கட்டுக்களெல்லாம் அறுபட்டு மகிழ்ச்சிக்கு வழிகாட்டப்படுகிறோம். கங்கை நதியானவள், அவளிடம் குளிப்பதற்காகச் செல்லும் மக்களனைவரின் பாவங்களையும், அழுக்கையும் நீக்குகிறாள். ஆனால் ஞானிகள் தன்னிடம் வரவேண்டுமென்றும், அவர்களது பாதாரவிந்தங்களால் தான் ஆசீர்வதிக்கப்பட்டு, தன்னிடம் குவிக்கப்பட்ட அழுக்கு — பாவங்கள் — நீக்கப்படவேண்டுமென்றும் மிகுந்த ஆவலுடன் விரும்புகிறாள். ஞானிகளின் பாதாரவிந்தங்களால் மட்டுமே இப்பாவமூட்டை அழிக்கப்படும் என்று அவள் உறுதியாக அறிகிறாள். ஞானிகளுக்கெல்லாம் தலையாய முடிமணியாக சாயி விளங்குகிறார். அவரிடமிருந்து இப்போது நம்மைத் தூய்மைப்படுத்தும் பின்வரும் கதையைக் கேளுங்கள்.
பாம்பும் தவளையும்
ஒருநாள் எனது காலை உணவை உண்டபின் ஒரு சிறு நதிக்கரை வரும்வரை மெதுவாக உலவிக்கொண்டிருந்தேன். களைப்பாய் இருந்தபடியால் அங்கு சற்று இளைப்பாறினேன். எனது கைகால்களைக் கழுவிக்கொண்டு, குளித்துவிட்டு புத்துணர்ச்சி பெற்றேன். அங்கு மரங்கள் அடர்ந்து நிழல்மிகுந்த ஒரு வண்டிப்பாதையும், ஒற்றையடிப்பாதையும் இருந்தது. மெல்லிய இளங்காற்றும் இதமாக வீசிக்கொண்டிருந்தது. நான் புகைபிடிப்பதற்கு சில்லிம் — புகைக்குழாய் — தயார் செய்துகொண்டிருந்தபோது ஒரு தவளை ஒலமிடுவதைக் கேட்டேன். சிக்கிமுக்கிக் கல்லைத் தட்டி நெருப்புப் பற்றவைத்தபோது, ஒரு வழிப்போக்கன் எனதருகில் வந்து அமர்ந்து, என்னைப் பணிவுடன் வணங்கி உணவுக்கும், இளைப்பாறுதலுக்கும் தன் வீட்டுக்கு வருமாறு அழைத்தான். புகைக்குழாயைப் பற்றவைத்து என்னிடம் கொடுத்தான். மீண்டும் ஓலம் கேட்டது. அவன் அது என்னவென்று அறிந்துகொள்ள விரும்பினான்.
நான் அவனிடம் ஒரு தவளை கஷ்டத்தில் இருக்கிறதென்றும், அது தன்னுடையதேயான முந்தைய வினைகளின் கசப்பான பலனை அனுபவித்துக்கொண்டிருக்கிறது என்றும் கூறினேன். முந்தைய பிறவிகளில் நாம் விதைத்த பழத்தின் பலனை நாமே அறுவடை செய்யவேண்டும். அதைப்பற்றிக் கதறுவதால் பலன் ஒன்றும் இல்லை என்றேன். பின்னர் அவன் புகைபிடித்துவிட்டு குழாயை என்னிடம் கொடுத்துவிட்டு தானே நேரடியாகச் சென்று அதைப் பார்த்து வருவதாகக் கூறினான். அதற்கு நான், ஒரு பெரிய பாம்பு தவளையைப் பிடித்துக்கொண்டிருப்பதாகவும், தவளை ஓலமிட்டு அழுவதாகவும் முந்தைய பிறவிகளில் இவ்விருவருமே மிகக் கொடூரமானவர்களாயிருந்தனர் என்றும், இப்போது அவைகளின் பலனை இவ்வுடம்பில் அனுபவிக்கிறார்கள் என்றும் நான் அவனிடம் கூறினேன். அவன் வெளியேசென்று ஒரு பெரும் கருநாகம், ஒரு பெரிய தவளையைத் தன் வாயில் கவ்விக்கொண்டிருந்ததைக் கண்டான்.
பிறகு என்னிடம் திரும்பிவந்து இன்னும் பத்துப் பன்னிரண்டு நிமிடங்களில் தவளையைப் பாம்பு தின்றுவிடும் என்று கூறினான். நான், "இல்லை அப்படி இருக்கமுடியாது. நானே அதன் தந்தை — பாதுகாவலன் — மேலும் நான் இப்போது இங்கேயே இருக்கிறேன். அப்பாம்பு அதைத் தின்பதை எங்ஙனம் நான் அனுமதிப்பேன்? வெறும் தண்டத்துக்கா நான் இங்கு இருக்கிறேன்? அதை எங்ஙனம் விடுவிக்கிறேன் என்பதைச் சற்றே பாருங்கள்" என்று கூறினேன்.
மீண்டும் புகைபிடித்த பின்னர் நாங்கள் அவ்விடத்துக்கு நடந்துசென்றோம். அவன் பயந்து பாம்பு எங்களைத் தாக்கலாமாதலால் மேற்கொண்டு செல்லவேண்டாமென்று என்னிடம் கூறினான். அவனைப் பொருட்படுத்தாது நான் முன்னேசென்று அந்த ஜந்துக்களை நோக்கி இங்ஙனம் விளித்துக் கூறினேன், "ஓ! வீரபத்ரப்பா, உனது பகைவனான பஸப்பா தவளையாகப் பிறந்தபோதிலும், தான் செய்ததற்காக வருத்தப்படவில்லையா? நீயும் பாம்பாகப் பிறந்தும் அவன்மீது இன்னும் கசப்பான பகைமையை வைத்திருக்கிறாயா? சீ! கேவலம் வெட்கப்படு. உன்னுடைய பகைமையை இப்போதே ஒழித்துவிட்டு அமைதியாக இரு" என்றேன்.
இவ்வார்த்தைகளைக் கேட்டு, பாம்பு தவளையை விட்டு உடனே அகன்று ஆற்றில் தாவி மறைந்துவிட்டது. தவளையும் குதித்து புதர்களில் தன்னை மறைத்துக்கொண்டது.
வழிப்போக்கன் மிகவும் ஆச்சரியப்பட்டான். அந்த மொழிகளைக் கூறியவுடன் பாம்பு எங்ஙனம் தவளையைப் போட்டுவிட்டு மறைந்தது என்பது தனக்கு விளங்கவில்லை என்றும், யார் வீரபத்ரப்பா? யார் பஸப்பா? அவர்களின் பகைக்குக் காரணம் என்ன என்றும் கேட்டான். அவனுடன் நான் மரத்தடிக்கு வந்து சிறிது புகைபிடித்த பின்னர் அப்புதிர் முழுவதையும் பின்வருமாறு விளக்கினேன்.
எனது இடத்திலிருந்து நாலைந்து மைல் தொலைவில் மஹாதேவரின் கோவிலால் புனிதமாக்கப்பட்ட ஒரு புராதன க்ஷேத்திரம் இருந்தது. கோவில் மிகப் பழமையானதாகவும், சிதிலம் அடைந்தும் இருந்தது. அவ்வூரார் கோவிலின் பழுதுபார்க்கும் வேலைகளுக்கு நிதி வசூலித்தனர். பெருந்தொகை வசூலிக்கப்பட்டதும் வழிபாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பழுதுபார்ப்பதற்குத் திட்டமும், மதிப்பீடும் தயாரிக்கப்பட்டது. ஒரு உள்ளூர் பணக்காரன் பொக்கிஷதாரனாக நியமிக்கப்பட்டு, முழு வேலையும் அவனிடம் ஒப்படைக்கப்பட்டது. அவன் ஒழுங்காகக் கணக்கு வைத்துக்கொண்டு, தனது எல்லா விஷயங்களிலும் நேர்மையாக இருந்திருக்கவேண்டும். அவன் முதல் தரமான கஞ்சன். பழுதுபார்க்கும் செலவுகளுக்காக மிகக்கொஞ்சமே பணம் கொடுத்ததால் வெகுசொற்ப முன்னேற்றமே காணப்பட்டது.
எல்லா நிதியையும் அவனே செலவழித்து ஏப்பம் விட்டுவிட்டான். தனது பணம் ஏதுமே செலவழிக்கவில்லை. அவனுக்கு இனிமையாகப் பேசுந்திறன் இருந்தது. வேலையின் தாமதத்தைப் பற்றியும், மிகசொற்ப முன்னேற்றத்துக்கும் சாமர்த்தியமாக ஒப்புக்கொள்ளக்கூடிய சமாதானங்கள் கூறினான். அவனாலான மிகச்சிறந்த முயற்சியை செய்து உதவினாலன்றி வேலை பூர்த்தியடையாது என்று மக்கள் மீண்டும் அவனிடம் சென்று கூறினர். அவ்வேலையைச் செய்துமுடிக்க அவர்கள் அவனிடம் வேண்டிக்கொண்டு மீண்டும் நிதி சேகரித்து அவனிடம் கொடுத்தனர். அவன் அதைப் பெற்றுக்கொண்டு முன்போலவே எவ்வித முன்னேற்றமும் செய்யாமல் இருந்தான்.
சிலநாட்களுக்குப் பிறகு கடவுள் — மஹாதேவ் — அவனது மனைவியின் கனவில் தோன்றி, "எழுந்திரு, கோவிலின் கோபுரத்தைக் கட்டு. நீ செலவழித்ததைப் போல் நூறு பங்கு உனக்குத் திருப்பித் தருகிறேன்" என்று அவளிடம் கூறினார். இக்காட்சியை அவள் தன்னுடைய கணவனுக்கு அறிவித்தாள். அது அவனுக்குக் கொஞ்சம் செலவுவைக்கும் என்று பயந்து, அது வெறும் கனவே என்றும் அதை நம்பிச் செயலில் இறங்கத் தேவையில்லை என்றும், அல்லாவிடில் தன்னிடமும் ஏன் கடவுள் தோன்றிச் சொல்லவில்லை என்றும் கூறி, சிரித்து மழுப்பிவிட்டான். அவன் அவளிடமிருந்து நெடுந்தொலைவிலா இருந்தான்? கணவன் மனைவியிடத்தே மனஸ்தாபம் உண்டாக்கும் நோக்கத்துடன் கூடிய கெட்டகனவு மாதிரி தோன்றுகிறது என்றான். அவள் அமைதியாக இருக்கவேண்டியதாயிற்று.
நன்கொடையாளர்களின் விருப்பத்துக்கு மாறாக சேகரிக்கப்படும் பெருந்தொகைகளைக் கடவுள் விரும்புவதில்லை. ஆனால் அன்பு, பக்தி, ஆர்வம் இவற்றுடன் கொடுக்கப்படும் எளிய தொகைகளையே அவர் உவப்புடன் ஏற்கிறார். சில நாட்களுக்குப் பின்னர் கடவுள் மீண்டும் அவளது கனவில் தோன்றி, "உனது கணவனைப்பற்றியோ அல்லது அவனிடமிருக்கும் நிதியைப்பற்றியோ கவலைப்படாதே. கோவிலுக்காக அவனை எதையும் செலவு செய்யும்படியும் வற்புறுத்தாதே. எனக்குத் தேவையானது உணர்வும், பக்தியுமே. எனவே உனக்குச் சொந்தமானது எதையும் நீ விரும்பினால் கொடுப்பாயாக" என்று அவளிடம் கூறினார். இக்காட்சியைப்பற்றி அவள் தன் கணவனுடன் கலந்தாலோசித்தாள்.
தனது தந்தையால் கொடுக்கப்பட்ட ஆபரணங்களையெல்லாம் கொடுக்கத் தீர்மானித்தாள். கஞ்சன் கலக்கமடைந்து கடவுளையே இவ்விஷயத்தில் ஏமாற்றத் தீர்மானித்தான். அவன் அவ்வாபரணங்களை ரூபாய் ஆயிரத்துக்கு குறைவாக மதிப்பீடுசெய்து தானே வாங்கிக்கொண்டு அதற்குப் பதிலாக கடவுளுக்கு ஒரு நிலத்தை பாதுகாப்புச் சொத்தாக அளித்தான். இதற்கு மனைவியும் சம்மதித்தாள். இந்நிலமும் அவனுடையது அல்ல. டுபகி என்ற ஏழைப் பெண்மணி ஒருத்தி அதை அவனிடம் ரூ.200க்கு அடமானம் வைத்து நெடுநாளாக அதை மீட்க முடியாமல் இருந்தாள். எனவே கபடமான அக்கஞ்சன் தனது மனைவி, டுபகி மற்றும் கடவுள் அனைவரையும் ஏமாற்றினான். நிலமோ தரிசு, ஒன்றுக்கும் பயனற்றது. சிறந்த பருவகாலங்களில் கூட விளைச்சல் ஏதும் கொடுக்காது.
இவ்விதமாக இந்த வாணிப நடவடிக்கை முடிவுபெற்றது. ஒரு ஏழைப் பூசாரியின் பொறுப்பில் நிலம் விடப்பட்டது. அவனும் இத்தர்மத்தால் மகிழ்ச்சியடைந்தான். சில நாட்களுக்குப் பிறகு வினோதமான நிகழ்சிகள் நடைபெற்றன. பயங்கர புயலும், பேய்மழையும் வந்தது. கஞ்சன் வீட்டில் இடிவிழுந்து கணவனும், மனைவியும் இறந்தனர். டுபகியும் மரணமடைந்தாள்.
அடுத்த பிறவியில் அப்பணக்காரக் கஞ்சன் மதுராவில் ஒரு அந்தணக் குடும்பத்தில் பிறந்து வீரபத்ரப்பா என்று பெயரிடப்பட்டான். அவளுடைய பக்தியுள்ள மனைவி கோவில் பூசாரியின் மகளாகப் பிறந்து கௌரி என்று பெயரிடப்பட்டாள். டுபகி கோவில் பணி செய்பவர் ஒருவரின் குடும்பத்தில் ஆணாகப் பிறந்து சனபஸப்பா என்று பெயரிடப்பட்டாள். அப்பூசாரி எனது நண்பன். அப்பூசாரி எனது நண்பன். அவன் அடிக்கடி என்னிடம் வந்து உரையாடி புகைபிடிப்பான். அவனது மகளான கௌரியும் என்னிடம் பக்தி பூண்டவள். அவள் வேகமாக வளர்ந்தாள். அவளது தகப்பனார் நல்ல வரன் ஒன்றை அவளுக்குத் தேடினார்.
அவனிடம் நான் இதைப்பற்றிக் கவலையுற வேண்டாமென்றும், மாப்பிள்ளையே அவளைத் தேடிக்கொண்டு வருவானென்றும் கூறினேன். அவர்கள் ஜாதியில் உள்ள வீரபத்ரப்பா என்ற ஏழைப்பையன் ஊரூராகத் திரிந்துகொண்டும், பிச்சையெடுத்துக்கொண்டும் அப்பூசாரியின் வீட்டுக்கு வந்தான். என்னுடைய சம்மதத்தின்பேரில் பூசாரி கௌரியை அவனுக்கு மணம்செய்து வைத்தான். அவனுடைய திருமணத்திற்கு நான் சிபாரிசு செய்ததால் வீரபத்ரப்பாவும் முதலில் என்பால் பக்தி பூண்டவனாக இருந்தான். இப்புது ஜன்மத்திலும் அவன் பணத்தாசை பிடித்தவனாக இருந்தான். தான் சம்சாரியாக இருப்பதால் பணம் சம்பாதிக்க என்னை உதவி செய்யச் சொன்னான்.
அதன்பின் விசித்திரமான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விலைவாசிகளில் ஒரு திடீர் ஏற்றம் கண்டது. கௌரியின் நல்லதிர்ஷ்டத்தினால் நிலத்துக்குப் பெரும் கிராக்கி ஏற்பட்டு அந்தத் தர்ம நிலம் ஒரு இலட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. — அவளது ஆபரணத்தின் மதிப்பைப்போல் நூறு மடங்கு — பாதித்தொகை பணமாகவும், மீதித்தொகை ரூ.2000 வீதமாக இருபத்தைந்து தவணைகளில் கொடுக்கப்படவும் இருந்தது. இந்த விவகாரத்தை அனைவரும் ஒப்புக்கொண்டனர். ஆனால் பணத்துக்காகச் சண்டை பிடித்துக்கொண்டனர். எனது யோசனைக்காக அவர்கள் என்னிடம் வந்தனர். கடவுளுக்குரிய அந்த சொத்து பூசாரியின் பாதுகாப்பில் இருந்தது.
கௌரியே அதன் பிதுரார்ஜித சொத்துக்கு வாரிசுக்காரி, உரிமைக்காரி. அவளது சம்மதமின்றி எந்தப் பணமும் செலவழிக்கப்படக்கூடாது. அவளது கணவனுக்கு அதில் எவ்வித உரிமையில்லை என்று நான் கூறினேன். என்னுடைய கருத்தைக்கேட்டு வீரபத்ரப்பா என்மீது கடுமையான கோபமடைந்தான். நான் கௌரியின் உரிமையைப் பலப்படுத்தி அவளது சொத்தைக் கவர விரும்புவதாக அவன் கூறினான். அவன் கூற்றைக்கேட்டு நான் கடவுளை நினைவுகூர்ந்து அமைதியாய் இருந்தேன். வீரபத்ரப்பா அவனது மனைவியைத் திட்டினான். மதியம் அவள் என்னிடம் வந்து பிறர் மொழிகளைப் பொருட்படுத்த வேண்டாம் என்றும், எனது மகளாயிருப்பதால் அவளைக் கைவிடவேண்டாம் என்றும் கூறினாள். இவ்வாறாக அவள் எனது பாதுகாப்பை வேண்டியதனால் அவளைக் காப்பதற்காக நான் ஏழ்கடலையும் கடப்பேன் என்று அவளுக்கு வரம் கொடுத்தேன்.
பின்னர் அன்றிரவு கௌரி ஒரு கனவு கண்டாள். மஹாதேவ் அவளது கனவில் தோன்றி, "பணம் முழுவதும் உன்னுடையது. அதை யாரிடமும் கொடுக்காதே, கொஞ்சம் பணத்தை கோவில் வேலைக்காக சனபஸப்பாவிடம் கலந்து ஆலோசித்துச் செலவிடு. வேறெதற்காவது அதை நீ செலவிட விரும்பினால் மசூதியிலுள்ள பாபாவிடம் கலந்தாலோசி" என்று சொன்னார். கௌரி என்னிடம் அக்கனவைக் கூறினாள். இவ்விஷயத்தில் அவளுக்கு நான் உரிய ஆலோசனை கூறினேன். அசல் தொகையை அவளே எடுத்துக்கொள்ளவும், வட்டியில் பாதியை சனபஸப்பாவுக்குக் கொடுக்கவும், இவ்விஷயத்தில் வீரபத்ரப்பாவுக்கு ஒன்றுமில்லையென்றும் கூறினேன். இவ்வாறு நான் பேசிக்கொண்டிருக்கும்போது வீரபத்ரப்பாவும், சனபஸப்பாவும் சண்டை போட்டுக்கொண்டே வந்தனர். அவர்களைச் சாந்தப்படுத்த என்னாலான முழு முயற்சியைச் செய்து அவர்களுக்குக் கௌரியின் கனவைக் கூறினேன். வீரபத்ரப்பா மூர்க்கனாகிக் கோபமடைந்து சனபஸப்பாவை கண்டதுண்டமாக வெட்டப்போவதாக பயமுறுத்தினான். பின்னவன் பீதியடைந்து என் கால்களைப் பிடித்துக்கொண்டு எனது அடைக்கலத்தை வேண்டினான். அவனது எதிரியின் கொண்டுங்கோபத்திலிருந்து அவனைக் காப்பதாக நான் என்னுடையதான வாக்குறுதியைக் கொடுத்தேன்.
சில காலத்திற்குப்பின் வீரபத்ரப்பாவும், சனபஸப்பாவும் காலமாகி முறையே பாம்பாகவும், தவளையாகவும் பிறந்தனர். சனபஸப்பாவின் ஓலத்தைக் கேட்டதும் எனது வாக்குறதியை நினைவுகூர்ந்து இங்குவந்து அவனைப் பாதுகாத்து என் வார்த்தையைக் காப்பாற்றினேன். தமது அடியவர்களின் அபாயகாலத்தில் கடவுள் ஓடிச்சென்று உதவுகிறார். அவர் என்னை இங்கு அனுப்பியதன் மூலம் சனபஸப்பாவைக் காத்தார். இவைகளெல்லாம் கடவுளின் லீலை அல்லது திருவிளையாடல்.
நீதி
ஒருவன் விதைப்பதை அவனே அறுவடைசெய்து தீரவேண்டும் என்றும், மற்றவர்களிடம்பட்ட பழைய கடனையும், விவகாரங்களையும் கஷ்டத்துடன் அனுபவித்து தீர்த்தாலன்றி வேறு விமோசனம் இல்லையென்றும், பணத்தின் மீதுள்ள பேராசையானது அப்பேராசைக்காரனைக் கீழான நிலைக்கு இழுத்துச்சென்று கடைசியில் அவனுக்கும், பிறருக்கும் அழிவைக் கொணர்கிறந்து என்பதுமே இக்கதையின் நீதியாகும்.
ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
• ஷேவடே
• சபட்ணேகர் ஆகியோரின் கதைகள்
இவ்வத்தியாயத் தொடக்கத்தில் சாயிபாபா குருவா, சத்குருவா என்று யாரோ ஒருவர் ஹேமத்பந்த்தைக் கேட்டார். அக்கேள்விக்கு விடையளிக்குமுகமாக ஹேமத்பந்த் சத்குருவின் லட்சணங்களையும், அடையாளங்களையும் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
சத்குருவின் லட்சணங்கள்
வேதம், வேதாந்தம் அல்லது சாஸ்திரங்கள் ஆறையும் நமக்குக் கற்பிப்பவர் அல்லது மூச்சைக் கட்டுப்படுத்துபவர், அன்றித் தமது உடம்பில் முத்திரைச் சின்னகளைப் — விஷ்ணுவின் சங்கு சக்கரச் சின்னங்களைப் — பொறித்துக்கொண்டிருப்பவர் அல்லது பிரம்மத்தைப் பற்றி இனிமையாக உபதேசம் செய்பவர், தமது சீடர்களுக்குச் சில மந்திரங்களை உபதேசித்து அதைக் குறிப்பிட்ட முறை ஜெபிக்கச் சொல்லி, குறிப்பிட்ட நிச்சயமான காலத்தில் அதனால் ஏற்படும் பலனைக் காட்டஇயலாதவர், முடிவான தத்துவங்களைத் தனது வார்த்தை ஞானத்தால் அழகாக விளக்கினாலும் தனக்கு எவ்வித சொந்த அனுபவமோ, ஆன்ம உணர்வோ இல்லாதவர் எவரோ ஆகிய இவரெல்லாம் சத்குரு அல்ல.
தனது உபன்யாசத்தால் இகபர இன்பங்களின் மீது வெறுப்புத் தோன்றச்செய்து, ஆன்ம உணர்வில் ஒரு சுவையை அளிப்பவரும், ஆன்ம உணர்வைப்பற்றிய ஏட்டுக்கல்வி, நடைமுறை ஞானம் இவை இரண்டிலும் தேர்ச்சி பெற்றவரும் 'சத்குரு' என்று அழைக்கபபடுவற்குத் தகுதி உடையவராகிறார். ஆன்ம உணர்வில் குறைபாடுடைய ஒருவர் அஃதை எங்ஙனம் பிறருக்கு அளிக்கஇயலும்? சத்குரு என்பார் கனவிலும்கூடத் தமது அடியவர்களிடம் இருந்து எவ்விதச் சேவையையோ, இலாபத்தையோ எதிர்பார்ப்பதில்லை. மாறாக அவர்களுக்குச் சேவைசெய்ய விரும்புகிறார். தாம் உயர்ந்தவர், தமது அடியவர் தாழ்ந்தவர் என்றும் அவர் எண்ணுவதில்லை. அவரைத் தமது புதல்வன் என்று கருதுவதோடு மட்டுமல்லாது தமக்குச் சமமானவன் அல்லது பிரம்மத்துக்குச் சமமானவன் என்று கருதுகிறார். சத்குருவின் முக்கியமான பண்பு அவர் அமைதியின் உறைவிடம் என்பதே. அவர் அமைதியற்றோ, மனவுளைவுடனோ இருந்ததே இல்லை. கற்றோன் என்ற கர்வம், அவருக்குக் கிடையாது. ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் யாவரும் அவருக்கு ஒன்றே.
முந்தைய பிறப்புக்களில் செய்த நற்கருமங்களின் குவியலின் விளைவால் சாயிபாபாவைப் போன்ற சத்குருவைச் சந்தித்து தாம் அவரால் ஆசீர்வதிக்கப்படும் நல்லதிர்ஷ்டத்தைப் பெற்றதாக ஹேமத்பந்த் நினைக்கிறார். தம்முடைய இளமையான காலத்தில்கூட பாபா எதையும் சேகரிக்கவில்லை. — சில்லிம் என்ற புகைக்குழாய் மட்டும் இருக்கலாம் — அவருக்குக் குடும்பம் ஏதுமில்லை, நண்பர் யாருமில்லை, வீடு ஏதும் இல்லை, எவ்வித ஆதாரமும் இல்லை, பதினெட்டாம் வயதிலிருந்தே அவரின் மனக்கட்டுப்பாடு முழுமையானதும், அசாதாரணமானதாகவும் இருந்தது. அப்போது அவர் தனியான இடத்தில் பயமற்று வாழ்ந்தார். எப்போதும் அவர் ஆன்ம உணர்விலேயே மூழ்கி இருந்தார். தமது அடியவர்களின் தூய அன்பைக்கண்டு அவர்களின் விருப்பப்படியே, அவர் எப்போதும் நடந்தார். எனவே ஒருவகையில் அவர்கள்பால் அவர் சார்ந்தவரானார். பூதவுடலில் வாழ்ந்தபோது தமது அடியவர்களுக்கு என்னென்ன அனுபவங்களை அளித்து வந்தாரோ, அதே அனுபவங்களை அவரை நேசிப்பவர்களுக்கு மஹாசமாதியான பின்பு இன்றும் அளித்து வருகிறார்.
பக்தி, நம்பிக்கை என்னும் அகவிளக்கை அவர்கள் ஏற்றி, அன்பெனும் திரியை ஏற்றவேண்டும். அது செய்யப்படும்போது, ஞானம் — ஆன்ம உணர்வு — என்னும் ஜோதி சுடர்விட்டு அதிகமாகப் பிரகாசிக்கும். அன்பில்லாத வெறும் ஞானம் வறண்டது, எவரும் அத்தகைய ஞானத்தை விரும்புவதில்லை. அன்பின்றி திருப்தி ஏற்படுவதில்லை. எனவே நாம் தடையற்ற, எல்லையற்ற, அன்பு உடையவர்களாக வேண்டும். அன்பை எங்ஙனம் நாம் புகழ்வது? அதன்முன் எதுவும் முக்கியமற்றுவிடுகிறது? அன்பின்றி நமது கல்வி, கேள்வி, படிப்பு யாவும் பயனற்றுவிடுகிறது. அன்பு உதயமாகும்போது பக்தி, பற்றின்மை, அமைதி, விடுதலை இவையாவும் அவைகளின் அனைத்துச் செல்வக் களஞ்சியங்களுடன் வருகின்றன. அன்பை அதையடைய ஊக்கத்துடன் விரும்பினாலன்றி, எதைக்கொடுத்தும் பெற இயலாது. எனவே எங்கே உண்மையான ஆர்வமும், ஏக்கமும் இருக்கின்றதோ, கடவுள் தம்மைத்தாமே அவ்விடத்தில் ப்ரதிஷ்டை செய்துகொள்கிறார். அது அன்பை உள்ளடக்கி விடுதலைக்கு ஒரு வழியாகிறது.
இந்த அத்தியாயத்தின் முக்கிய கதைக்கு இப்போது திரும்புவோம். ஒரு ஞானியிடம் ஒரு மனிதன் தூய உள்ளத்துடன் அல்லது அவ்விதமின்றி — கள்ள உள்ளத்துடன் — சென்று அவரின் காலைப் பிடிக்கட்டும். முடிவாக அவன் காப்பாற்றப்படுவது உறதி. இது பின்வரும் கதைகளால் விளக்கப்படுகிறது.
ஷேவடே
சோலாப்பூர் ஜில்லா, அக்கல்கோட்டைச் சேர்ந்த சபட்ணேகர் வக்கீலுக்குப் படித்துக் கொண்டிருந்தார். அவருடன் படிக்கும் ஷேவடே அவரைச் சந்தித்தார். மற்றும் பல மாணவர்களும் ஒன்றாகக் கூடித் தாங்கள் படிக்கும் பாடங்களை ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களுக்குள் ஏற்பட்ட வினா விடைகளிலிருந்து ஷேவடே என்பவர்தான் எல்லோரைக்காட்டிலும் பரீட்சைக்குத் தயாரற்ற நிலையிலிருந்தார் என்று தெரியவந்தது. எனவே, மற்றவர்கள் அவரைக் கேலி செய்தனர். தாம் சரியாகப் படிக்கவில்லையாயினும் தமது சாயிபாபா இருப்பதால் தம்மை வெற்றியடையச் செய்வார் என்று தான் உறுதியாக நம்புவதாகக் கூறினார்.
சபட்ணேகர் இக்கூற்றால் ஆச்சரியமடைந்தார். அவர் ஷேவடேயைத் தனியே அழைத்துக்கொண்டுபோய் அவர் அவ்வளவு உயர்வுபடக் கூறும் சாயிபாபா என்பவர் யார் என்று கேட்டார். அஹமத்நகர் ஜில்லா ஷீர்டியில் உள்ள மசூதியில் பக்கிரி ஒருவர் வாழ்கிறார். அவர் மிகப்பெரும் சத்புருஷர். மற்ற ஞானிகள் இருக்கலாம், ஆனால் இவர் ஒப்பற்றவர். முன்வினையில் பல நற்கருமங்களின் பலன் பெருமளவில் குவிக்கப்பட்டு இருந்தாலன்றி ஒருவரும் அவரைப் பார்க்க முடியாது.
நான் முழுமையும் அவரை நிச்சயம் நம்புகிறேன். அவர் சொல்வது பொய்யாவதில்லை. அடுத்த ஆண்டு நான் தேறிவிடுவேன் என்று அவர் எனக்கு உறுதிகூறி இருக்கிறார். கடைசி வருடப் பரீட்சையையும் அவர்தம் கருணையால் நான் தேறிவிடுவேன் எனக்கூறினார். சபட்ணேகர் அவர் நம்பிக்கையைக் கண்டு சிரித்து அவரையும், சாயிபாபாவையும் கேலி செய்தார்.
சபட்ணேகர்
சபட்ணேகர் தமது பரீட்சையில் தேறி அக்கல்கோட்டில் குடியேறி அங்கு வக்கீலாகத் தொழில் நடத்தினார். இதற்குப் பத்தாண்டுகளுக்குப் பிறகு அதாவது, 1913ல் தொண்டையில் வந்த வியாதி காரணமாக அவரது ஒரே மகனை இழக்கநேரிட்டது. அது அவர் உள்ளத்தைப் பிளந்தது. பண்டரீபுரம், கனகாபூர் மற்றும் பல புனித க்ஷேத்திரங்களுக்கு அவர் க்ஷேத்ராடனம் செய்து அமைதியைத் தேடினார். அவருக்கு மனஅமைதி கிடைக்கவில்லை. பின்னர் வேதாந்தம் கற்கத் தொடங்கினார். அதுவும் அவருக்குப் பயனளிக்கவில்லை. இத்தருணத்தில், தமது நண்பரான ஷேவடே பாபாவைப் பற்றிக் கூறியதும் பாபாவின்மேல் அவருக்குள்ள நம்பிக்கையையும் சபட்ணேகர் நினைவு கூர்ந்தார். தாமும் ஷீர்டிக்குச் சென்று பாபாவைக் காணவேண்டுமென்று அவர் எண்ணினார். தம் தம்பி பண்டிட்ராவுடன் அவர் ஷீர்டிக்குச் சென்றார். பாபாவைத் தூரத்திலிருந்து கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
அவர் அருகே சென்று வீழ்ந்துபணிந்து, பக்தியுடன் ஒரு தேங்காயை முன்னே வைத்தபோது, "போ! வெளியே" என்று பாபா கூச்சலிட்டார். சபட்ணேகர் தலைகுனிந்துகொண்டு பின்னால் நகர்ந்துபோய் வேறுபக்கம் அமர்ந்திருந்தார். மேற்கொண்டு என்னசெய்யவேண்டும் என்பதை அவர் யாரிடமாவது கலந்து ஆலோசிக்க விரும்பினார். யாரோ பாலா ஷிம்பியின் பெயரைக் குறிப்பிட்டனர். சபட்ணேகர் அவரைச் சந்தித்து அவருடைய உதவியை வேண்டினார். அவர்கள் பாபாவின் போட்டோக்களை வாங்கிக்கொண்டு அவற்றுடன் மசூதிக்குள் வந்தனர். பாலா ஷிம்பி ஒரு போட்டோவை எடுத்து பாபா கையில் கொடுத்து அது யார் போட்டோ என்று கேட்டார். பாபா சபட்ணேகரைக் காண்பித்து, இது அவரது காதலன் போட்டோ என்று கூறிவிட்டுச் சிரித்தார். எல்லோரும் சிரித்தனர். பாலா பாபாவை அச்சிரிப்பின் குறிப்பு என்ன என்று கேட்டுக்கொண்டே சபட்ணேகரை முன்னால் வந்து தரிசனம் செய்துகொள்ளும்படி சமிக்ஞை செய்தார்.
சபட்ணேகர் வீழ்ந்து கும்பிடத் தொடங்குகையில், பாபா மீண்டும் "போ! வெளியே" என்று கூச்சலிட்டார். சபட்ணேகருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. பின்னர், இருவரும் — பாலா, சபட்ணேகர் — கைகோர்த்து பாபாவின்முன் அமர்ந்து பிரார்த்தனை செய்தனர். பாபா முடிவாக சபட்ணேகரை உடனே வெளியே போகும்படி கட்டளையிட்டார். இருவரும் வருத்தமடைந்து, மனமுடைந்து போயினர். பாபாவின் ஆணைக்குக் கீழ்ப்படிய வேண்டுமாதலால் மறுமுறை வரும்போது தரிசனம் தரவேண்டுமென்று, பிரார்த்தனை செய்துகொண்டு சபட்ணேகர் சோர்ந்த உள்ளத்துடன் வீடு திரும்பினார்.
திருமதி சபட்ணேகர்
ஓர் ஆண்டு ஓடியது. எனினும் அவர் மனம் அமைதியடையவில்லை. கனகாபூருக்குச் சென்றார். அங்கு அவர் இன்னும் அதிகமான மனக்கலக்கத்தை அடைந்தார். பின்னர் ஓய்வுக்காக மதேகாவன் சென்றார். பின்னர் முடிவாக காசிக்குச் செல்லத் தீர்மானித்தார். புறப்படுவதற்கு இரண்டு தினங்களுக்குமுன் அவரின் மனைவி ஒரு கனவு கண்டாள். அக்கனவில் தான் ஒரு மண் பானையுடன் லக்கட்ஷாவின் கிணற்றுக்குப் போய்க்கொண்டு இருப்பதாகவும், வேப்பமரத்தடியில் ஒரு துண்டைத் தலையில் கட்டிக்கொண்டு ஒரு பக்கிரி அமர்ந்திருப்பதையும், அவர் அவளருகில் வந்து, "அன்புள்ள பெண்ணே! எதற்காக ஒன்றுமில்லாத ஆயாசம்? நான் உனது பானையில் தண்ணீர் நிரப்பித் தருகிறேன்" என்று கூறியதாகவும் கண்டாள். அப்பக்கிரிக்குப் பயந்து காலிப் பானையுடன் விரைவாகத் திரும்பியபோது அவரால் தொடரப்பட்ட தருணத்தில் தூக்கம் கலைந்து கண்ணைத் திறந்து பார்த்தாள்.
இக்கனவைத் தனது கணவனிடம் கூறினாள். இது ஒரு புனிதமான நேரம் என்று அவர்கள் நினைத்து ஷீர்டிக்குப் புறப்பட்டனர். அவர்கள் மசூதியை அடைந்தபோது பாபா அங்கில்லை. லெண்டித் தோட்டத்திற்குச் சென்றிருந்தார். அவர் திரும்பிவரும் வரையில் காத்திருந்தனர். அவர் திரும்பிவந்ததும் அவள் கனவில் கண்ட அப்பக்கிரியின் தோற்றம் பாபாவுடன் சரியாக ஒத்திருந்ததைக் கண்டு அவள் ஆச்சரியமடைந்தாள். பணிவுடன் அவள் பாபாவின்முன் வீழ்த்து வணங்கிவிட்டு அவரை நோக்கி அமர்ந்திருந்தாள்.
அவளது பணிவைக்கண்டு பாபா மிகவும் மகிழ்ச்சி அடைந்து, அவருக்கே உரிய விசித்திரமான பாணியில் மூன்றாமவர் ஒருவரிடம் ஒரு கதை சொல்லத் தொடங்கினார். எனது புயம், அடிவயிறு, இடுப்பு எல்லாம் நீண்ட நாட்களாக வலித்துக்கொண்டு இருந்தன. பல மருந்துகளைச் சாப்பிட்டேன். வலி குறையவில்லை. மருந்துகள் எவ்வித நிவாரணத்தையும் அளிக்கவில்லை. ஆதலால் நான் மருந்துகளின்மேல் வெறுப்படைந்தேன். ஆனால் இப்போது திடீரென்று எல்லா வலிகளும் நீங்கிவிட்டதுகண்டு ஆச்சரியம் அடைகிறேன்" என்றார். எவ்விதப் பெயரும் சொல்லப்படவில்லை. ஆயினும் உண்மையில் அது திருமதி சபட்ணேகரின் கதையே ஆகும். பாபா விவரித்தபடியாகவே அவளது வலி உடனே நீங்கிவிட்டது. அவள் மகிழ்ச்சியடைந்தாள்.
பின் சபட்ணேகர் தரிசனம் செய்துகொள்ள முன்னால் சென்றார். அவர் மீண்டும் முந்தைய "வெளியே போ!" என்ற வார்த்தைகளுடன் வரவேற்கப்பட்டார். இந்தமுறை அவர் தவறுக்கு வருந்துபவராகவும், இன்னும் விடாமுயற்சியுள்ளவராகவும் இருந்தார். தனது முந்தைய வினைகளே பாபாவின் அதிருப்திக்குக் காரணம் என்று சொல்லி அதற்கு ஈடுசெய்யத் தீர்மானித்தார். பாபாவைத் தனியாகக்கண்டு தனது முந்தைய வினைகளுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்ள முடிவுசெய்து தனது தலையை பாபாவின் பாதத்தின் மீது வைத்தார்.
பாபா தமது கையை கையை அவர் தலைமீது வைத்தார். பாபாவின் கால்களை சபட்ணேகர் கீழே அமர்ந்து வருடத் தொடங்கினார். பின் ஆடுமேய்க்கும் ஆய்மகள் ஒருத்தி பாபாவின் இடுப்பை உட்கார்ந்து பிடித்துவிடத் தொடங்கினாள். பாபா தமக்கே உரிய பாணியில் ஒரு — பனியா — வணிகனின் கதையைச் சொல்லத் தொடங்கினார்.
அவனது வாழ்க்கை முழுவதிலும் ஏற்பட்ட மாறுதல்களை அவனது ஒரே மகன் இறந்தது உட்பட அனைத்தையும் எடுத்துரைத்தார். பாபா கூறிக்கொண்டிருந்த கதை முழுவதும் தன்னுடையதே என்று அறிந்து, சபட்ணேகர் ஆச்சரியமடைந்தார். பாபாவுக்கு அதன் ஒவ்வொரு விவரமும் தெரிந்தது கண்டு அதிசயமடைந்தார். அவர் நிறைபேரறிவுடையவர் என்றும், அனைவரின் இதயங்களையும் அறிந்திருப்பவர் என்றும் அறியலானார்.
இந்த எண்ணம் அவர் மனத்துக்கு வந்தபோது, பாபா ஆடுமேய்க்கும் பெண்ணை நோக்கி சபட்ணேகரைச் சுட்டிக்காண்பித்து, "இந்த ஆள் அவரது குழந்தையை நான் கொன்றுவிட்டதாக, என் மீது பழி சுமத்தித் திட்டுகிறார். நான் மக்களின் குழந்தைகளைக் கொல்கிறேனா? ஏன் இவர் மசூதிக்கு வந்து அழுகிறார்? நான் இப்போதே இதைச் செய்கிறேன். அதே குழந்தையை மீண்டும் அவரது மனைவியின் கருப்பையில் கொண்டுவைக்கிறேன்" என்று கூறினார்.
இவ்வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டே தமது ஆசிநல்கும் கரத்தை, அவர் தலைமீது வைத்து, "இப்பாதங்கள் தொன்மையானவை, புனிதமானவை. இப்போது உனக்குக் கவலையில்லை. என்மீது முழு நம்பிக்கையையும் வை. நீ சீக்கிரத்தில் உனது குறிக்கோளை எய்துவாய்!" என்று கூறித் தேற்றினார். சபட்ணேகர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, பாபாவின் பாதங்களைத் தன் கண்ணீரால் கழுவிவிட்டுத் தனது இருப்பிடத்தை அடைந்தார்.
பின்னர் அவர் பூஜை, நைவேத்தியம் இவைகளைத் தயார் செய்துகொண்டு மனைவியுடன் மசூதிக்கு வந்தார். தினந்தோறும் இவைகளை பாபாவுக்குச் சமர்ப்பித்து, அவரிடமிருந்து பிரசாதம் பெற்றுக்கொண்டிருந்தார். மசூதிக்குள் கூட்டமாக இருந்தது. சபட்ணேகர் அங்குசென்று மீண்டும் மீண்டும் வணங்கிக்கொண்டிருந்தார். தலையோடு தலைகள் மோதிக்கொள்வதைக் கண்ட பாபா சபட்ணேகரை நோக்கி, "ஓ! நீ ஏன் அடிக்கடி வணங்கிக்கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார். "பணிவுடனும், அன்புடனும் செய்யும் ஒரு நமஸ்காரமே போதும்" என்றார். அன்றிரவு முன்னரே விவரிக்கப்பட்ட சாவடி ஊர்வலத்தை சபட்ணேகர் கண்டுகளித்தார். ஊர்வலத்தின்போது பாபா, பாண்டுரங்கன் மாதிரியே காட்சியளித்தார்.
மறுநாள் விடைபெறும்போது தக்ஷிணையாக ஒரு ரூபாய் கொடுக்கவேண்டுமென்றும், பாபா மீண்டும் கேட்டால் இல்லையென்று சொல்லாமல் பிரயாணம் செய்வதற்குப் போதுமான பணத்தை ஒதுக்கி வைத்துக்கொண்டு மேலும் ஒரு ரூபாய் கொடுக்கவேண்டுமென்றும் நினைத்தார். மசூதிக்கு அவர் சென்று ஒரு ரூபாய் அளித்தபோது, அவருடைய எண்ணப்படியே பாபா மேலும் ஒரு ரூபாய் கேட்டார். அது கொடுக்கப்பட்டபோது, பாபா இதைக்கூறி ஆசீர்வதித்தார்.
"இத்தேங்காயை எடுத்து உனது மனைவியின் சேலை முந்தானையில் போட்டுவிட்டு எவ்விதக் கவலையும்படாமல் சௌகரியமாகப் போய் வா" என்றார். அவரும் அங்ஙனமே செய்தார். ஒரு வருடத்திற்குள் அவருக்கு ஒரு மகன் பிறந்தான். எட்டு மாதக் குழந்தையுடன் அவ்விருவரும் ஷீர்டிக்கு வந்தனர். அதை பாபாவின் காலடிகளில் வைத்து, "ஓ! சாயிநாத், தங்கள் உதவிக்கு என்ன கைம்மாறு செய்வது என்று நாங்கள் அறியாமல் இருக்கிறோம். எனவே தங்கள்முன் வீழ்ந்து பணிகின்றோம். எளிய ஆதரவற்ற எங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறோம். இனி தங்களின் புனிதப் பாதங்களே எங்களது ஒரே அடைக்கலமாக இருக்கட்டும். பற்பல எண்ணங்கள் கனவிலும், நனவிலும் எங்களை தொல்லைப்படுத்துகின்றன. எங்கள் மனதை அவைகளிலிருந்து எல்லாம் தங்கள் வழிபாட்டுக்குத் திருப்பி, எங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறோம்" எனப் பிரார்த்தித்தனர். புத்திரனுக்கு 'முரளீதர்' என்று பெயரிடப்பட்டது. பின்னர் பாஸ்கர், தினகர் என்ற இருவரும் பிறந்தனர். இங்ஙனமாக சபட்ணேகர் தம்பதிகள் பாபாவின் மொழிகள் பொய்ப்பதில்லை என்றும், நிறைவேறாமல் போவதில்லை என்றும், முற்றிலும் உண்மையாகவே நிகழ்கின்றன என்றும் உணர்ந்தனர்.
ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
• ஸோமதேவ் ஸ்வாமி
• நானா சாஹேப் சாந்தோர்கர்
ஆகியோரின் கதைகள்
முன்னுரை
வேதங்களும், புராணங்களும் பிரம்மத்தையோ, சத்குருவையோ போதுமான அளவில் விவரிக்க இயலாது. அவ்வாறெனின் ஏதுமறியாதவர்களாகிய நாம் எங்ஙனம் நமது சத்குரு, சாயிபாபாவை விவரிக்க இயலும்? இவ்விஷயத்தில் அமைதியாக இருப்பதே சிறந்தது என்று எண்ணுகிறோம். உண்மையில் மௌனவிரதம் அனுஷ்டிப்பதே, சத்குருவைப் புகழ்வதற்கு சிறப்பான வழியாகும். ஆனால் சாயிபாபாவினது நல்ல பண்புகள் மௌன விரதத்தை மறக்கச்செய்து நம்மைப் பேசுமாறு ஊக்குவிக்கின்றன. நண்பர்கள், உறவினர்கள் இவர்களும் நம்மோடு இருந்து உண்ணவில்லையாயின் நல்ல ருசியான உணவுகூட நமக்குச் சுவையாக இருப்பதில்லை. ஆனால் அவர்கள் நம்முடன் சேர்ந்து உண்பார்களானால், அவைகள் இன்னும் அதிக சுவையைப் பெறுகின்றன. சாயி லீலைகள் என்ற ரூபத்தில் உள்ள அமிர்தமான சாயி லீலாம்ருதமும் இது போன்றதே. அமிர்தத்தை நாம் மட்டுமே தனியாக உண்ணமுடியாது. நண்பர்களும், சகோதரர்களும் நம்முடன் சேரவேண்டும். எவ்வளவு அதிகமோ அவ்வளவு நலம்.
இக்கதைகளுக்குத் தெய்வீக உணர்ச்சியூட்டுவதும் தம் விருப்பப்படியே அவைகளை எழுதுமாறு செய்வதும் சாயிபாபா அவர்களேயாகும். பரிபூரண சரணாகதியடைவதும், தியானிப்பதும் மட்டுமே நமது கடமை. க்ஷேத்ராடனம், பிரதிக்ஞை, தியாகம், தர்மம் இவை எல்லாவற்றையும்விட தவமிருத்தல் நல்லது. தவமிருத்தலைக் காட்டிலும் ஹரியைத் தொழுவது நலம். இவையெல்லாவற்றையும் விட சத்குருவைத் தியானிப்பது மிகச்சிறந்தது.
ஆகவே சாயியின் நாமத்தை ஸ்மரணம் செய்து அவர் மொழிகளை மனதில் நினைத்து, அவர் உருவைத் தியானித்து, இதயபூர்வமாக அவரிடம் அன்பு செலுத்தி, அவருக்காகவே எல்லாச் செயல்களையும் செய்வோமாக. சம்சார பந்தத்திலிருந்து விடுபட இதைவிட வேறு சிறந்த வழியில்லை. மேலே கூறியவாறு நமது கடமையைச் செய்தோமானால் சாயி நமது விடுதலைக்கு உதவக் கட்டுப்பட்டவர். இப்போது இந்த அத்தியாயத்தின் கதைக்கு வருவோம்.
ஹரி கானோபா
பம்பாயைச் சேர்ந்த ஹரி கானோபா என்பவர் தனது நண்பர்கள், உறவினர்கள் மூலம் பாபாவின் பல லீலைகளைக் கேள்வியுற்றார். அவர் ஒரு சந்தேகப் பிராணியாக இருந்ததால் அவற்றை நம்பவில்லை. அவர் பாபாவைத் தாமே பரீட்சிக்க விரும்பினார். எனவே சில பம்பாய் நண்பர்களுடன் ஷீர்டிக்கு வந்தார். ஜரிகைத் தலைப்பாகையும், காலில் இரண்டு புதிய காலணிகளையும் அணிந்திருந்தார். பாபாவைத் தொலைவிலிருந்து கண்ட அவர், அவரிடம் சென்று வீழ்ந்துபணிய எண்ணினார். அவரது புதிய காலணிகளை என்ன செய்வதென்று தெரியவில்லை. எனினும் திறந்தவெளியில் ஒரு மூலைக்குச் சென்று அவைகளை வைத்துவிட்டு, மசூதிக்குள் சென்று பாபாவின் தரிசனத்தைப் பெற்றார்.
பாபாவைப் பக்தியுடன் வணங்கி உதி, பிரசாதம் இவைகளைப் பெற்றுக்கொண்டு திரும்பினார். அங்கு மூலையில் வைத்திருந்த காலணிகள் மறைந்து போயிருந்ததை அவர் கண்டார். அவைகளுக்காக வீணாகத் தேடியபின், தான் இருந்த இடத்துக்கு மிகவும் மனமுடைந்துபோய்த் திரும்பினார். குளித்து வழிபட்டு நைவேத்தியம் சமர்ப்பித்துவிட்டு, உணவுக்காக அமர்ந்தார். ஆயினும் அவ்வளவு நேரமும் காலணிகளைத் தவிர வேறொன்றையும் பற்றி அவர் நினைக்கவில்லை.
உணவை முடித்துக்கொண்டபின், கை கழுவுவதற்காக வெளியே வந்தபோது ஒரு மராத்தியப் பையன் அவரை நோக்கி வந்துகொண்டிருந்தான். அவனது கையில் ஒரு கோல் இருந்தது. அதன் நுனியில் ஒரு ஜோடி புதிய காலணிகள் தொங்கவிடப்பட்டிருந்தன. கை கழுவ வெளியேவந்த நண்பர்களிடம் பாபா தன்னை இக்கோலுடன் அனுப்பியிருப்பதாகவும், 'ஹரிகா பேடா ஜரிகா ஃபேடா!' — 'க' என்பவரின் புதல்வரான ஹரியே! ஜரிகைத் தலைப்பாகைக்காரரே! — என்று கூவிக்கொண்டே வீதிகளில் செல்லும்படி சொல்லியிருப்பதாகவும், யாராவது இக்காலணிகளைக் கேட்டால் அவரது பெயர் ஹரிதானா என்றும் அவர் 'க'வின் — அதாவது கானோபா — புதல்வர்தானா என்றும், அவர் ஜரிகை தலைப்பாகை அணிபவர்தானா என்றும் தன்னை உறுதிப்படுத்திக்கொண்ட பின்பு, அதை அவரிடம் கொடுக்கும்படி கூறியிருப்பதாகவும் சொன்னான். இதைக்கேட்டு ஹரி கானோபா மிகவும் மகிழ்வும், ஆச்சரியமும் அடைந்தார். அவர் பையனிடம் சென்று காலணிகள் தம்முடையவையே என்றார். தனது பெயர் ஹரி என்றும், தாம் 'க'வின் — கானோபா — புதல்வன் என்றும் கூறி ஜரிகைத் தலைப்பாகையையும் காண்பித்தார்.
பையன் திருப்தியடைந்து அவரிடம் காலணிகளைத் திருப்பிக் கொடுத்துவிட்டான். தனது ஜரிகைத் தலைப்பாகை வெளியில் அனைவருக்கும் தெரியுமாறு இருந்தது. எனவே பாபாவும் அதைக் கண்டு இருக்கலாம். ஆனால் தன் பெயர் ஹரி என்பதும், கானோபாவின் மகன் என்றும், தான் முதல் முறையாக ஷீர்டிக்கு வந்திருப்பதால் பாபா எங்ஙனம் அறிந்திருக்கக்கூடும் என மனதில் நினைத்து வியந்தார். வேறு எவ்வித குறிக்கோளும் இன்றி பாபாவைச் சோதிக்கும் ஒரே நோக்கத்துடன் மட்டுமே அவர் ஷீர்டிக்கு வந்தார். இந்நிகழ்ச்சியால் பாபா ஒரு மிகப்பெரும் சத்புருஷர் என்று அவர் அறிந்துகொண்டார். அவர் விரும்பியதை அறிந்துகொண்டு திருப்தியுடன் வீடு திரும்பினார்.
சோமதேவ் ஸ்வாமி
பாபாவை சோதிக்கவந்த மற்றொரு மனிதரின் கதையை இப்போது கேளுங்கள். காகா சாஹேபின் சகோதரரான பாயிஜி நாக்பூரில் தங்கியிருந்தார். 1906ம் ஆண்டில் இமயமலை சென்றிருந்தபோது கங்கோத்ரி பள்ளத்தாக்கில் உள்ள உத்தர் காசியில், ஹரித்வாரைச் சேர்ந்த சோமதேவ் ஸ்வாமி என்பாருடன் அறிமுகமானார். இருவரும் ஒருவர் மற்றவரின் பெயரை தங்கள் நாட்குறிப்பேட்டில் எழுதிக்கொண்டனர். ஐந்தாண்டுகளுக்குப்பின் சோமதேவ் ஸ்வாமி, பாயிஜியின் விருந்தினராக நாக்பூருக்கு வந்தார். பாபாவின் லீலைகளைக் கேட்டு மகிழ்வெய்தினார்.
ஷீர்டிக்குச் சென்று பாபாவைக் காண அவருக்கு ஒரு பெரும் ஆசை எழுந்தது. பாயிஜியிடம் இருந்து அறிமுகக் கடிதம் ஒன்றைப் பெற்றுக்கொண்டு, ஷீர்டிக்குக் கிளம்பினார். மன்மாட், கோபர்காவன் இவைகளைக் கடந்ததும், ஒரு வண்டியமர்த்திக்கொண்டு ஷீர்டிக்குப் போனார். ஷீர்டிக்கு அருகில் வந்ததும் மசூதியில், இரண்டு உயரமான கொடிகள் பறந்து கொண்டிருப்பதைக் கண்டார். வெவ்வேறு ஞானிகளிடம் வெவ்வேறு விதமான குணாதிசயங்களும், வெவ்வேறு வாழ்க்கை முறைகளும், வெவ்வேறு புறப்பரிவாரங்களும் இருப்பதை நாம் பொதுவாகக் காண்கிறோம். ஆயின் இப்புறச் சின்னங்கள் அந்த ஞானிகளின் தகுதிகளை எடை போடுவதற்கு உகந்த அளவுகோல் ஆகா. ஆனால் சோமதேவ் ஸ்வாமியின் விஷயத்தில், அது வேறு விதமாய் இருந்தது. கொடிகள் பறப்பதை அவர் கண்டவுடனே, "ஞானி ஒருவர், கொடிகள் மீது ஏன் ஆர்வம் வைக்கவேண்டும்? இது துறவையா உணர்த்துகிறது? இது அந்த ஞானி புகழுக்காக ஏங்குவதை அல்லவா உணர்த்துகிறது" என எண்ணினார்.
இவ்வாறாக அவர் தமது ஷீர்டி விஜயத்தை ரத்துச் செய்ய விரும்பி, தாம் திரும்பிப் போவதாக கூட வந்த சக பயணிகளிடம் கூறினார். அவர்கள் அதற்கு, "பின் இவ்வளவு தூரம் நீங்கள் ஏன் வரவேண்டும். கொடியைக் கண்டே தங்கள் மனம் கலக்கமுறும்போது ஷீர்டியில் ரதம், பல்லக்கு, குதிரை மற்றும் பல பரிவாரங்களையெல்லாம் கண்டால் தங்கள் மனம் எவ்வளவு நிலைகுலையும்" என்றார்கள். இதைக்கேட்டு ஸ்வாமி மேலும் குழப்பமடைந்தவராக, "குதிரை, பல்லக்கு இன்னோரன்ன படாடோபங்களையுடைய சாதுக்கள் சிலரை மட்டும் நான் கண்டதில்லை, — அனேகரைக் கண்டிருக்கிறேன் — அத்தகைய சாதுக்களைக் காண்பதைவிட திரும்பிப் போதலே எனக்கு நன்று" என்றுரைத்தார். இதைக்கூறிக்கொண்டு அவர் திரும்பிப்போகக் கிளம்பினார். உடன் வந்தோர் அங்ஙனம் செய்யவேண்டாம் என்றும், தொடர்ந்து போகலாம் என்றும் வற்புறுத்தினர்.
பாபாவை இங்ஙனம் குறுகிய மனமுள்ளவராக சிந்திப்பதை நிறுத்தும்படியும், அந்த சாது — அதாவது பாபா — கொடிகளையோ, பரிவாரங்களையோ, புகழையோ எள்ளளவும் பொருட்படுத்துபவர் அல்ல என்று கூறினர். அன்பாலும், பக்தியாலும் அவரது அடியவர்களும், பக்தர்களுமே இவற்றையெல்லாம் ஏற்படுத்தியுள்ளார்கள் என்றும் கூறினர். முடிவாகப் பயணத்தைத் தொடரும்படி அவரை இணங்கவைத்து ஷீர்டிக்குச் சென்று பாபாவைத் தரிசிக்கச் செய்தனர். பாபாவை முற்றத்திலிருந்து கண்டவுடன் அகமுருகி கண்களில் கண்ணீர் மல்க குரல் நெகிழ அவரது கெடுதலான எண்ணங்களெல்லாம் அவரைவிட்டு அகன்று போயின. "எங்கே நமது மனம் மிகமிக மகிழ்ந்து களிப்படைகிறதோ, அதுவே நமது இருப்பிடமும், களைப்பாறும் இடமுமாகும்", என்ற அவரது குருவின் மொழிகளை நினைவுகூர்ந்தார். பாபாவின் பாதத் தூளிகளில் அவர் புரள விரும்பி பாபாவை நெருங்கியபோது, பாபா கடுங்கோபமடைந்து "எங்களுடைய டம்பமெல்லாம் எங்களுடம் இருக்கட்டும். நீ திரும்ப உன் வீட்டிற்குப் போ. இம்மசூதிக்குள் வந்தாயோ, ஜாக்கிரதை. மசூதிமேல் கொடி பறக்கவிட்டுக் கொண்டிருக்கும் ஒருவரின் தரிசனத்தை ஏன் காணவேண்டும்? இது துறவின் அறிகுறியா? இங்கே கணமேனும் இருக்காதே" என்றார். ஸ்வாமி ஆச்சரியத்தால் திடுக்கிட்டார்.
பாபா தமது உள்ளத்தைப் படித்து அதைப் பேசினார் என உணர்ந்தார். எத்தகைய நிறைபேரறிவுடையவர் அவர்! தாம் ஞானமற்றவர் என்றும், பாபா புனிதமான உயர்ந்தோர் என்றும் அவர் உணர்ந்தார். சிலரை பாபா அரவணைப்பதையும், வேறு ஒருவரைக் கையால் தொடுவதையும், மற்றவர்களைத் தேற்றுவதையும், சிலரை நோக்கிப் புன்னகை செய்வதையும், சிலருக்கு உதிப்பிரசாதம் அளிப்பதையும், இவ்வாறாக அனைவரையும் மகிழ்வூட்டி, திருப்திப்படுத்திக் கொண்டிருப்பதையும் கண்டார். தான் மட்டும் ஏன் அவ்வளவு கடுமையாக நடத்தப்பட வேண்டும்? அதைப்பற்றி அவர் தீவிரமாகச் சிந்தித்து, தமது அந்தரங்க எண்ணமே பாபாவின் நடத்தையில் எதிரொலிப்பதை உணர்ந்து இதையே ஒரு பாடமெனக் கருதி முன்னேறவேண்டுமென நினைத்தார். பாபாவின் கோபம் மறைமுகமான ஆசீர்வாதமே. பிற்காலத்தில் பாபாவின் மீது அவருக்குள்ள நம்பிக்கை, உறுதிப்படுத்தப்பட்டு பாபாவின் ஒரு முற்றிலும் பற்றுறுதியுள்ள அடியவராக ஆனார் என்று சொல்லத் தேவையில்லை.
நானா சாஹேப் சாந்தோர்கர்
நானா சாஹேப் சாந்தோர்கரின் கதையுடன் ஹேமத்பந்த் இந்த அத்தியாயத்தை முடிக்கிறார். ஒருமுறை மசூதியில் நானா சாஹேப், மஹல்ஸாபதி மற்றுமுள்ளோருடன் அமர்ந்திருக்கையில், பீஜப்பூரிலிருந்து ஒரு முஹமதிய கனவான் தனது குடும்பத்துடன் பாபாவைக் காணவந்தார். கோஷா— பர்தா — அணிந்த பெண்மணிகளைக் கண்ட நானா, அப்பால் போய்விட விரும்பினார். ஆனால் பாபா அவர் அங்ஙனம் செய்வதைத் தடுத்துவிட்டார். பெண்மணிகள் வந்து பாபாவைத் தரிசனம் செய்தனர். பாபாவின் பாதங்களை வணங்குமுகமாக அவர்களில் ஒருத்தி முகத்திரையை எடுத்து வணங்கிவிட்டுப் பிறகு மூடும்போது, நானா சாஹேப் அவளது முகத்தைக்கண்டு அவளின் அபூர்வ அழகின் கவர்ச்சியால் பாதிக்கப்பட்டவராய், அவளது முகத்தை மீண்டும் காண விரும்பினார். அப்பெண்மணி அந்த இடத்தைவிட்டு அகன்றதும், நானாவின் குழப்பத்தை அறிந்துகொண்டு, பாபா அவரை நோக்கி,
"நானா நீ ஏன் வீணாகக் கலங்குகிறாய். புலன்கள் அவைகளுக்கிடப்பட்ட பணியை அல்லது கடமையைச் செய்யட்டும். நாம் அவைகளின் வேலையில் குறுக்கிட வேண்டாம். கடவுள் இவ்வழகிய உலகத்தைப் படைத்துள்ளார். அதன் அழகைப் பாராட்ட வேண்டியது நமது கடமையாகும். மனம் மெதுவாகப் படிப்படியாக அமைதியுறும். முன்கதவு திறந்திருக்கும்போது, பின்வழியாக ஏன் செல்ல வேண்டும். உள்ளம் தூய்மையாக இருக்குமிடத்து எவ்வகையிலும் எவ்விதக் கஷ்டமும் இல்லை. நம்மிடத்தே எவ்விதக் கெட்ட எண்ணமும் இல்லையென்றால், ஏன் ஒருவர் மற்றொருவருக்குப் பயப்படவேண்டும்? கண்கள் தம் வேலையைச் செய்யலாம், நீ ஏன் வெட்கப்பட்டுத் தடுமாறுகிறாய்?" என்றார்.
ஷாமா அவ்விடத்தில் இருந்தார். பாபா கூறியதன் பொருளை அவரால் உணர இயலவில்லை. எனவே வீடு திரும்பும் வழியில் இதை நானாவிடம் கேட்டார். நானா, அழகிய பெண்மணியைக் கண்டதும், தாம் மனக்கலக்கமடைந்ததையும், பாபா அதை எங்ஙனம் அறிந்து அதைப்பற்றி அறிவுரை கூறினார் என்பதையும் கூறினார். பாபாவின் பொருளை நானா இவ்வாறாக விளக்கினார். "அதாவது நமது மனம் இயற்கையாகவே சலனமுள்ளது. அதைத் தான்தோன்றித்தனமாகப் போக அனுமதிக்கக் கூடாது. உணர்வுகள் குழப்பமுறலாம். ஆயினும் உடம்பு கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்படவேண்டும். பொறுமையை இழக்க அனுமதிக்கக் கூடாது.
விஷயங்களின் பின்னால் உணர்வுகள் தம் குறிக்கோளை நோக்கி ஓடுகின்றன. ஆனால் அவைகளை நாம் தொடர்ந்து சென்று அவைகளின் குறிக்கோளுக்காக ஏங்கக்கூடாது. மெதுவான படிப்படியான பயிற்சியினால் சலனங்களை வெற்றிகாண இயலும். உணர்ச்சிகளால் நாம் இயக்கப்படக்கூடாது. ஆயினும் அவைகளை முழுவதுமாகக் கட்டுப்படுத்த இயலாது. தக்க முறையிலும், ஒழுங்காக சந்தர்ப்பத்துக்குத் தேவையானபடியும் அவைகளைக் கட்டுப்படுத்த வேண்டும். அழகு என்பது பார்க்கப்படவேண்டிய ஒன்றே. பொருட்களின் அழகை நாம் பயமின்றிக் காணவேண்டும். வெட்கத்துக்கோ, பயத்துக்கோ அதில் இடமில்லை. கெட்ட எண்ணங்களை மட்டும் நம் மனதில் அனுமதிக்கக் கூடாது. பற்றில்லாத மனதுடனே கடவுளின் அழகான படைப்புக்களைக் கவனிக்கவேண்டும். இவ்வாறாக உணர்வுகள் எளிதாகவும், இயற்கையாகவும் கட்டுக்குள் கொணரப்பட்டுவிடும். பொருட்களை அனுபவிப்பதில்கூட நீங்கள் இறைவனைப்பற்றி ஞாபகப்படுத்தப்டுவீர்கள்.
வெளி உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்து, மனம் இலட்சியத்தை ஓடித்தொடர அனுமதிக்கப்பட்டு அவைகள்பால் பற்றுக்கொண்டிருப்பின் ஜனன மரணச் சுழல் முடிவுறாது. புலன் உணர்வுகளின் விஷயங்கள் தீமையானது. விவேகம் என்னும் சாரதியைக்கொண்டு நாம் மனதைக் கட்டுப்படுத்தி உணர்வுகளைத் தாறுமாறாக அலையவிடாமல் இருப்போம். அத்தகையதொரு சாரதியுடன் நம் முடிவான இருப்பிடமும், நமது உண்மையான வீடுமாகிய, எங்கு சென்றால் மறுபிறவி இல்லையோ அந்தத் திருமாலின் திருவடிகளை எய்துவோம்" என்றார்.
ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
• ஸ்ரீ தேம்பே ஸ்வாமி
• பாலாராம் துரந்தர்
ஆகியோரின் கதைகள்
சத்சரிதம் மூலநூலில் ஐம்பதாவது அத்தியாயத்தின் மையப்பொருள் 39ஆம் அத்தியாயத்தில் உள்ள அதே மையப் பொருளைப் பற்றியது. ஆதலால் இந்த அத்தியாயத்துடனேயே இணைக்கப்பட்டிருக்கிறது. இப்போது 51வது அத்தியாயம் இங்கே 50ஆம் அத்தியாயமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்த அத்தியாயம் காகா சாஹேப் தீஷித், ஸ்ரீ தேம்பே ஸ்வாமி, பாலாராம் துரந்தர் ஆகியோரின் கதைகளைக் கூறுகிறது.
முன்னுரை
பக்தர்களின் மூலாதாரமும், சத்குருவும், கீதையை விளக்குபவரும், நமக்கு எல்லா ஆற்றல்களையும் கொடுப்பவருமான சாயிக்கு ஜெயம் உண்டாகட்டும். ஓ! சாயி, எங்களுக்கு அனுகூலம் செய்து ஆசீர்வதியுங்கள். மலயகிரியில் வளரும் சந்தன மரங்கள் உஷ்ணத்தைப் போக்குகின்றன. மேகங்கள் மழைநீரைப் பொழிந்து மக்களைக் குளிர்வித்து புத்துணர்வூட்டுகின்றன. வசந்தகாலத்தில் மலர்கள் மலர்ந்து அவைகளால் நாம் கடவுளை வழிபட வகை செய்கின்றன. அது போலவே சாயிபாபாவின் கதைகள் பயில்வோருக்குச் சாந்தியையும், சௌகரியத்தையும் அளிக்க முன்வருகின்றன. பாபாவின் கதைகளை எடுத்துக் கூறுவோர், அதைக் கேட்போர் இருபாலரும் மற்றும் முன்னவர்களின் வாக்கும், பின்னவர்களின் காதுகளும் ஆசீர்வதிக்கப்பட்டுப் புனிதம் அடைகின்றன.
நூற்றுக்கணக்கான பயிற்சிகளையும் செயல்முறைகளையும் நாம் கடைப்பிடித்தும், ஒரு சத்குரு அவர்தம் அருளால் நம்மை ஆசீர்வதித்தாலன்றி, நாம் ஆன்மிக இலட்சியத்தை அடையமாட்டோம். இந்த வாக்கிற்கு எடுத்துக்காட்டாக பின்வரும் கதையினைக் கேளுங்கள்.
காகா சாஹேப் தீஷித் (1864 - 1926)
ஹரி சீதாராம் என்னும் காகா சாஹேப் தீஷித் 1846ல் வத்நாகர நகர், காண்ட்வாவில் — மத்திய மாகாணம் — பிராமணக் குடும்பத்தில் அவதரித்தார். அவர் ஆரம்பக் கல்வி காண்ட்வா, ஹிங்கான்காட் என்னும் ஊர்களிலும், நடுத்தரக் கல்வி நாக்பூரிலும் பயின்றார். மேற்படிப்புக்காக பம்பாய் வந்து வில்ஸன் கல்லூரியில் முதலிலும், பின்னர் எல்பின்ஸ்டன் கல்லூரியிலும் பயின்றார். 1883இல் பட்டம் பெற்ற பிறகு அவர் யிலும் வக்கீல் பரீட்சையிலும் தேறி, அரசு தரப்பு வக்கீல்களின் லிட்டில் & கம்பெனி என்ற நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு, சிறிது காலத்திற்குப்பின் தாமே சொந்தமாக வழக்குரை அறிஞர்கள் நிறுவனத்தைத் தொடங்கினார்.
1909ஆம் ஆண்டுக்கு முன்னர் சாயிபாபாவின் பெயர், காகா சாஹேப் தீஷித்துக்குத் தெரியாமல் இருந்தது. ஆனால் அதற்குப்பின் அவர் பாபாவின் ஒரு பெரும் பக்தராக ஆனார். லோனாவாலாவில் தங்கியிருந்தபோது தனது பழைய நண்பரான நானா சாஹேப் சாந்தோர்கரைச் சந்திக்க நேர்ந்தது. பல விஷயங்களைப் பற்றிப் பேசுவதில் இருவரும் சிறிதுநேரத்தைச் செலவழித்தனர். காகா சாஹேப், தாம் லண்டனில் ஒரு டிரெயினில் போய்க்கொண்டிருக்கும்போது எங்ஙனம் ஒரு விபத்து நேரிட்டு தனது பாதம் நழுவிக் காயமடைந்தார் என்று அவருக்கு விளக்கினார். நூற்றுக்கணக்கான சிகிச்சைகள் செய்தும் எதுவும் அவருக்குப் பலனை அளிக்கவில்லை.
நானா சாஹேப் அவரிடம் அவர்தம் காலின் ஊனத்தையும், வழியையும் நீக்கிக்கொள்ள விரும்பினால் தனது சத்குரு சாயிபாபாவிடம் செல்லவேண்டும் என்றார். மேலும் சாயிபாபாவைப்பற்றிய முழு விபரத்தையும் அவர் காகாவுக்குக் கொடுத்து சாயிபாபாவின் மஹாவாக்கியமான "எனது மக்களை நெடுந்தொலைவிலிருந்தும், ஏழ்கடலுக்கு அப்பாலிருந்தும் கூட குருவியின் காலில் நூலைக் கட்டி இழுப்பதைப் போன்று இழுக்கிறேன்" என்பதைக் கூறினார்.
பாபாவின் ஆளாயில்லாவிட்டால் அவர் பாபாவால் கவரப்படமாட்டார் என்பதையும், தரிசனம் அளிக்கப்படமாட்டார் என்பதையும் அவர் தெளிவாக்கினார். இவைகளையெல்லாம் கேட்க காகா சாஹேபுக்கு மகிழ்வுண்டாயிற்று. தாம் பாபாவிடம் போவதாகவும், அவரைத் தரிசித்துப் பிரார்த்தித்து கால் ஊனத்தை அவ்வளவாக குணமாக்காவிடினும் ஊனமான ஒட்டித்திரியும் மனத்தை ஒழுங்காக குணப்படுத்தி தமக்கு எல்லையற்ற பேரின்பத்தை நல்கும்படியும் வேண்டிக்கொள்ளப் போவதாகவும் கூறினார்.
காகா சாஹேப் தீஷித் சில நாட்களுக்குப் பிறகு பம்பாய் கீழ் சட்டசபையில் தமக்கு ஒரு இடம் கிடைப்பதற்காக, ஓட்டுக்கள் பெறும் நோக்குடன் அஹமத்நகர் சென்று சர்தார் காகா சாஹேப் மிரீகருடன் தங்கினார். காகா சாஹேப் மிரீகருடைய புதல்வரான பாலா சாஹேப் மிரீகர் என்னும் கோபர்காவனின் மம்லதார், அச்சமயத்தில் அஹமத்நகருக்கு அவ்விடத்தில் நடைபெற்ற குதிரைக் கண்காட்சியைக் காணும்பொருட்டு வந்தார். தேர்தல் வேலை முடிந்ததும் காகா சாஹேப் தீஷித் ஷீர்டி செல்ல விரும்பினார். தந்தையும், மகனுமாகிய இரு மிரீகர்களும், அவருடன் அனுப்புவதற்கு ஒரு தகுதியான, ஒழுங்கான வழிகாட்டியாக யாரை அனுப்பலாம் என்று தங்கள் இல்லத்தில் யோசித்துக்கொண்டிருந்தனர்.
ஷீர்டியில் சாயிபாபா அவர்களின் வரவேற்புக்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தார். ஷாமாவுக்கு அவரின் மாமனாரிடமிருந்து ஷாமாவின் மாமியார் தீவிரமாகக் காய்ச்சலாக இருப்பதையும், ஷாமா தனது மனைவியுடன் அவளைக் காண அஹமத்நகர் வரவேண்டுமென்றும் ஒரு தந்தி வந்தது. ஷாமா பாபாவின் அனுமதியுடன் அங்கு வந்து தனது மாமியார் முன்னைவிட இப்போது நலமாகி வருவதைக் கண்டார். நானா சாஹேப் பான்சேயும், அப்பா சாஹேப் கத்ரேயும் அவர்கள் குதிரைக் கண்காட்சிக்குப் போகும்வழியில் ஷாமாவைக் கண்டு, அவரை மிரீகரின் வீட்டுக்குச் சென்று காகா சாஹேப் தீஷித்தைப் பார்த்து ஷீர்டிக்கு அவரையும் உடனழைத்துச் செல்லும்படி கூறினார்கள். காகா சாஹேப் தீஷித்துக்கும், மிரீகர்களுக்கும் கூட ஷாமாவின் வருகை தெரிவிக்கப்பட்டது. மாலையில் ஷாமா மிரீகர்களிடம் வந்தார். அவரை அவர்கள் காகா சாஹேப் தீஷித்துக்கு அறிமுகப்படுத்தினர்.
ஷாமா, காகா சாஹேப் தீஷித்துடன் இரவு 10 மணி ரயில் வண்டியில் கோபர்காவனுக்குச் செல்வதென ஏற்பாடு செய்யப்பட்டது. இது முடிவானதும் ஒரு விசித்திர நிகழ்ச்சி நடைபெற்றது. பாலா சாஹேப் மிரீகர் பாபாவின் படத்தின்மீது இருந்த திரையை அகற்றிவிட்டு அதை காகா சாஹேப் தீஷித்துக்குக் காண்பித்தார். யாரைப் பார்க்க ஷீர்டிக்குப் போகப் போகிறாரோ அவர் அவ்விடத்திலேயே தமது சித்திர ரூபத்தில் வரவேற்க இருந்ததைக் கண்டு அவர் ஆச்சரியப்பட்டார். அவர் மிகவும் மனமுருகி படத்தின்முன் வீழ்ந்துபணிந்தார். அப்படம் மேகாவுடையது. அதன்மேல் உள்ள கண்ணாடி உடைந்துவிட்டதால், பழுதுபார்க்க அது மிரீகர்களிடம் அனுப்பபட்டிருந்தது. தேவையானபடி பழுது பார்க்கப்பட்டு விட்டபடியால் படத்தை இப்போது ஷாமாவிடமும், காகா சாஹேபுடனும் அனுப்புவது என்று தீர்மானிக்கப்பட்டது.
பத்து மணிக்கு முன்னரே அவர்கள் ரயில் நிலையத்துக்குச் சென்று நுழைவுச்சீட்டு வாங்கிக்கொண்டனர். ஆனால் வண்டி வந்ததும் இரண்டாம் வகுப்பு மிகவும் கூட்டமாக இருப்பதையும், அவர்களுக்கு இடமில்லாதிருப்பதையும் அறிந்தனர். அதிர்ஷ்டவசமாக அந்த வண்டியின் கார்டு, காகா சாஹேபின் நண்பராக இருந்தார். அவர்களை முதல் வகுப்பில் அமர்த்தினார். இவ்வாறாக அவர்கள் சௌக்கியமாகப் பிரயாணம் செய்து கோபர்காவனில் இறங்கினார்கள். ஷீர்டிக்குச் செல்ல நானா சாஹேப் சாந்தோர்கரும் அங்கு வந்திருப்பதை அவர்கள் கண்டபோது அவர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை.
காகா சாஹேபும், நானா சாஹேபும் ஒருவரையொருவர் கட்டித் தழுவிக்கொண்டனர். பிறகு புனித கோதாவாரியில் நீராடிய பின்னர் அவர்கள் ஷீர்டிக்குப் புறப்பட்டனர். அங்கு போய்ச்சேர்ந்து பாபாவின் தரிசனத்தைப் பெற்றவுடன் காகா சாஹேபின் மனது உருகியது. அவர் கண்கள் குளமாயின. அவர் மகிழ்ச்சிப் பெருக்கில் மூழ்கடிக்கப்பட்டார்.
பாபா அவரிடம் தாம்கூட அவருக்காகவே காத்துக்கொண்டிருப்பதாகவும், அவரை வரவேற்பதற்காகவே ஷாமாவை முன்னால் அனுப்பியதாகவும் கூறினார்.
பின்னர் காகா சாஹேப் பல சந்தோஷமான வருடங்களை பாபாவின் கூட்டுறவில் கழித்தார். ஷீர்டியில் அவர் ஒரு வாதா— சத்திரம் — கட்டினார். ஏறக்குறைய அதையே நிரந்தர வாசஸ்தலமாக ஆக்கிக்கொண்டார். பாபாவிடமிருந்து அவர் பெற்ற அனுபவங்கள் எண்ணற்றவையாதலால் அவைகளை எல்லாம் கூறுவதற்கு இங்கு இடமில்லை. இது குறித்து சாயிலீலா சஞ்சிகை — தொகுப்பு 12, எண் 6,7,8,9 — 'காகா சாஹேப் தீஷித்" சிறப்புமலரைப் பார்க்குமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
ஒரே ஒரு உண்மையைக் கூறி இந்த விஷயத்தை முடித்துக் கொள்கிறோம். பாபா அவரை "நான் உன்னை புஷ்பக விமானத்தில் எடுத்துச் செல்கிறேன்" என்று கூறியிருந்தார். — அதாவது மகிழ்வான மரணத்தை அவருக்குக் கொடுத்தல் — இது உண்மையாயிற்று. 1926ஆம் வருடம் ஜூலை மாதம் 5ஆம் தேதி அவர் ஹேமத்பந்துடன் ரயிலில் செல்லும்போது சாயிபாபாவைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். அவர் நினைவிலேயே ஆழ்ந்திருந்தார். திடீரெனத் தமது கழுத்தை ஹேமத்பந்தின் தோள்களில் சாய்த்து எவ்வித வலியோ, அசௌகரியமோ இன்றிக் காலமானார்.
ஸ்ரீ தேம்பே ஸ்வாமி
ஞானிகள் ஒருவருக்கொருவர் சகோதர பாசத்துடன் எங்ஙனம் நேசித்துக்கொள்கிறார்கள் என்பதை விளக்கும் அடுத்த கதைக்கு வருவோம். ஸ்ரீ வாசுதேவானந்த் சரஸ்வதி என்ற தேம்பே ஸ்வாமி என்பார் ஒருமுறை ஆந்திராவில் கோதாவரிக் கரையிலுள்ள ராஜமஹேந்திரியில் வந்து தங்கியிருந்தார். அவர் பக்தியும் வைதீகமும் உடைய ஞானியாகவும், யோகியாகவும் இறைவனாகிய தத்தாத்ரேயரின் பக்தருமாக விளங்கிவந்தார். நிஜாம் ராஜ்யத்தைச் சேர்ந்த நாந்தேட் நகரின் வக்கீலான ஸ்ரீ புண்டலிக்ராவ் என்பவர் சில நண்பர்களுடன் அவரைக் காணச் சென்றிருந்தார். அவர்கள் அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது ஷீர்டி, சாயிபாபா முதலிய பெயர்கள் தற்செயலாக அப்பேச்சின்போது கூறப்பட்டன.
பாபாவின் பெயரைக் கேட்டதும், ஸ்வாமி கைகளால் வணங்கி ஒரு தேங்காயை எடுத்து அதை புண்டலிக்ராவிடம் கொடுத்து, "என் வணக்கங்களுடன் சகோதரர் சாயியிடம் இதைச் சமர்ப்பித்து விடுங்கள். என்னை மறந்துவிடாமல் என்மேல் அன்புடனிருக்கச் சொல்லுங்கள்" என்றார். மேலும் "ஸ்வாமிகள் பொதுவாக யாரையும் வணங்குவதில்லை. ஆனால் இந்த விஷயத்தில் இந்த விதி விலக்குச் செய்யப்படவேண்டும்" என்றும் கூறினார். புண்டலிக்ராவ் தேங்காயையும், செய்தியையும் பாபாவிடம் எடுத்துச்செல்லச் சம்மதித்தார். பாபாவைச் சகோதரன் என்று இந்த ஸ்வாமி அழைப்பது சரியே. ஏனெனில் அவருடைய வைதீக சம்பிரதாயப்படி அக்னிஹோத்ரம் என்ற புனித நெருப்பை இரவும், பகலும் அவர் காத்துவந்ததைப் போலவே பாபாவும் அக்னிஹோத்ரத்தை அதாவது துனியை மசூதியில் எப்போதும் எரியவிட்டுக் கொண்டிருந்தார். ஒரு மாதத்திற்குப் பின்னர் புண்டலிக்ராவும் மற்றவர்களும் தேங்காயுடன் ஷீர்டிக்குப் புறப்பட்டு மன்மாடை வந்தடைந்தனர். தாகமாக இருந்ததால் ஓர் ஓடைக்குத் தண்ணீர் பருகச் சென்றனர். வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கக் கூடாதாகையால் கொஞ்சம் சிவடா என்ற காரம் கலந்த அவலை சிற்றுண்டியாக உட்கொண்டனர். அது அதிகக் காரமாக இருந்ததால் யாரோ ஒருவர் தேங்காயை உடைத்து தேங்காய்ப்பூவை அதனுடன் கலந்துவிடலாம் என்று கூறி அதேபோல் செய்தும் விட்டார். சிவடாவை அதிகச் சுவையுள்ளதாகவும், நாவுக்கு ருசியுள்ளதாகவும் செய்துகொண்டனர். துரதிர்ஷ்டவசமாக அந்தத் தேங்காய் புண்டலிக்ராவிடம் ஒப்படைக்கப்பட்ட தேங்காயாக இருந்தது.
அவர்கள் ஷீர்டியை நெருங்கியதும் புண்டலிக்ராவ், தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொருளாகிய தேங்காய் உடைக்கப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டுவிட்டது என்பதை வெகுவருத்ததுடன் அறிந்தார். பயந்து நடுங்கிக்கொண்டு ஷீர்டிக்கு வந்து சாயிபாபாவைப் பார்த்தார். பாபா முன்னமேயே தேம்பே ஸ்வாமி தேங்காய் அனுப்பியுள்ள கம்பியில்லாத் தந்தியின் செய்தியைப் பெற்றுவிட்டார்.
பாபா தாமாகவே தமது சகோதரன் கொடுத்தனுப்பியுள்ள பொருளை முதலில் கொடுக்கும்படி புண்டலிக்ராவிடம் கேட்டார். அவர் பாபாவின் பாதங்களைப் பிடித்துக்கொண்டு தமது குற்றத்தையும் கவனமின்மையையும் கூறி, மனம் வருந்தி பாபாவின் மன்னிப்பை வேண்டினார். மற்றொரு தேங்காயை அதற்குப் பதிலாகக் கொடுத்துவிடுவதாகக் கூறினார். ஆனால் அத்தேங்காய்க்கு இணையாக வேறொன்றை ஈடுசெய்ய முடியாதென்றும், சாதாரணக் காயைக் காட்டிலும் பல மடங்கு அது உயர்ந்ததென்றும் கூறி பாபா அதைப் பெறுவதற்கு மறுத்துவிட்டார். மேலும் பாபா கூறினார், "இனிமேல் இவ்விஷயத்தைப்பற்றி நீ கவலைகொள்ளத் தேவையில்லை. எனது விருப்பத்தின் காரணமாகவே தேங்காய் உன்னிடம் ஒப்படைக்கப்பட்டு முடிவில் உடைக்கப்பட்டும் விட்டது. செயல்களின் கர்த்தாவாக உன்னையே ஏன் நீ ஆக்கிக்கொள்கிறாய்?
நற்கருமங்களையோ அல்லது தீய செயல்களையோ செய்யும் கர்த்தாவாக உன்னை நீயே எண்ணிக்கொள்ளும் உணர்வை அனுமதிக்காதே. எல்லாவற்றிலும் முழுமையாக அஹங்காரமற்று இரு. அதனால் உனது ஆன்மிக முன்னேற்றம் துரிதமடையும்" என்றார். எத்தகைய அழகிய ஆன்மிக போதனையை இந்நிகழ்ச்சியின் மூலம் பாபா உணர்த்தியிருக்கிறார்!
பாலாராம் துரந்தர் (1878 - 1925)
பாலாராம் துரந்தர், பம்பாய் சாந்தாகுருசைச் சேர்ந்த பதாரே பிரபு இனத்தைச் சேர்ந்தவர். அவர் பம்பாய் ஹைகோர்ட்டின் வக்கீலாகவும், சிறிது காலம் பம்பாய் அரசாங்க சட்டப்பள்ளியின் தலைவராகவும் பணியாற்றினார். துரந்தர் குடும்பம் முழுவதுமே தெய்வபக்தியும், மத உணர்வும் கொண்டது. பாலாராம் தனது இனத்தாருக்குச் சேவை செய்தார். அதைப்பற்றி ஒரு கட்டுரையை எழுதி அதைப் பதிப்பித்தார்.
பின்னர் அவர் ஆன்மிக மத விஷயங்களுக்கு திரும்பினார். கீதையையும், அதற்கான வியாக்கியானமான ஞானேஸ்வரியையும், மற்ற தத்துவ நூல்களையும், நுண்ணியல் கோட்பாட்டு நூல்களையும் ஆழ்ந்து படித்தார். அவர் பண்டரீபுரத்து விட்டோபாவின் பக்தர். பாபாவுடன் 1912ல் தொடர்பு கொண்டார். அதற்கு ஆறு மாதங்களுக்குமுன் பாபுல்ஜி, வாமன்ராவ் என்ற அவரின் இரு சகோதரர்களும் ஷீர்டிக்கு வந்து பாபாவின் தரிசனத்தைப் பெற்றனர். வீடு திரும்பி அவர்களின் இனிய அனுபவங்களை பாலாராமுக்கும், குடும்பத்தினருக்கும் எடுத்துரைத்தனர். அதன் பின்னர் அவர்களெல்லோரும் சாயிபாபாவைத் தரிசிக்கத் தீர்மானித்தார்கள்.
அவர்கள் ஷீரடிக்கு வரும்முன்னரே பாபா வெளிப்படையாக "இன்று எனது தர்பாரைச் சேர்ந்த பெருபாலோர் வருகிறார்கள்" என உரைத்தார். துரந்தர் சகோதரர்கள் முன்கூட்டியே செய்தி ஏதும் அனுப்பவில்லையாதலால், மற்றவர்களிடமிருந்து பாபா கூறிய இக்குறிப்பைக் கேட்டு ஆச்சரியமடைந்தனர். மற்றவர்கள் எல்லோரும் பாபாவின் முன் வீழ்ந்து வணங்கி அவருடன் உரையாடிக் கொண்டிருந்தனர். பாபா அவர்களிடம் "நான் முன்னரே குறிப்பிட்ட எனது தர்பார் மக்கள் இவர்களே" எனக்கூறி, துரந்தர் சகோதரர்களிடம் "கடந்த அறுபது தலைமுறைகளாக நாம் ஒருவரோடொருவர் உறவுபூண்டு இருக்கிறோம்" என்றார். அச்சகோதரர்கள் எல்லோரும் எளிமையுடனும், பணிவுடனும் உற்றுப் பார்த்தவண்ணம் நின்றிருந்தனர். கண்ணீர், தொண்டை அடைத்தல், மயிர்க்கூச்செறிதல் முதலான எல்லா சத்துவ உணர்வுகளும் அவர்களை உருக்கின.
அவர்களெல்லோரும் மகிழ்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் தங்களது இருப்பிடத்துக்குச் சென்று உணவு உட்கொண்டு சிறிது களைப்பாறிவிட்டு மீண்டும் மசூதிக்கு வந்தனர். பாபாவுக்கு, பாலாராம் அமர்ந்து அவரது கால்களைப் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தார். சில்லிம் என்ற மட்குழாயில் புகை பிடித்துக்கொண்டிருந்த பாபா, அதை அவரிடம் நீட்டி புகை பிடிக்குமாறு அழைத்தார். புகைபிடித்து வழக்கமில்லை எனினும், பாலாராம் அக்குழாயை வாங்கிக்கொண்டு பெருஞ்சிரமத்துடன் புகைபிடித்துவிட்டு, பக்தியுடன் வணங்கி அதைத் திருப்பி அளித்தார். பாலாராமுக்கு இதுவே மிகமிகப் புனிதமான நேரம். ஆறு ஆண்டுகளாக அவர் ஆஸ்துமாவால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார். இப்புகை அவரை முழுவதுமாகக் குணப்படுத்தியதுடன் மீண்டும் அவ்வியாதிக்கு உட்படுத்தவேயில்லை. ஆறு ஆண்டுகளுக்குப் பின் ஒரு குறிப்பிட்ட தினத்தில் மீண்டும் அவருக்கு ஆஸ்துமாவின் தாக்குதல் நேரிட்டது. இது பாபா மஹாசமாதி அடைந்த அதே நேரமாகும்.
அவர்கள் சென்றிருந்த தினம் வியாழக்கிழமையாதலால் துரந்தர் நண்பர்கள் சாவடி ஊர்வலத்தை அன்று இரவு கண்டுகளிக்கும் நல்லதிர்ஷ்டம் பெற்றிருந்தனர். சாவடியில் ஆரத்தி நிகழ்ச்சியின்போது பாலாராம் பாபாவின் முகத்தில் பாண்டுரங்கரின் ஜோதியைக் கண்டார். மறுநாள் காலை காகட் ஆரத்தியின்போதும் அதே அபூர்வ நிகழ்ச்சியை, அதாவது அவரின் அன்புக்குரிய தெய்வமான பாண்டுரங்கரின் ஜோதி பாபாவின் முகத்தில் ஒளிர்ந்ததைக் கண்டார்.
பாலாராம் துரந்தர் மராத்தியில் மகாராஷ்ட்ர ஞானி துகாராமின் வாழ்க்கைச் சரிதத்தை எழுதினார். ஆனால், அதன் பதிப்பைக் காண அவர் உயிருடனிருக்கவில்லை. பின்னர் 1928இல் அவரது சகோதரர்களால் பிரசுரிக்கப்பட்டது. பாலாராமின் வாழ்க்கையைப்பற்றிக் கொடுக்கப்பட்டுள்ள ஒரு சிறுகுறிப்பு அந்நூலின் ஆரம்பத்தில் உள்ளது. பாலாராமைப் பற்றிய மேற்கூறிய தகவல் அதில் முழுவதுமாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
அந்தப் புத்தகத்தின் 6ம் பக்கத்தில் காண்க
ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
எனவே பாபாவின் ஆசிபெற்ற சிறந்த பக்தரான தாணேவைச் சேர்ந்த மாஜி மம்லதார் திரு தேவ் என்பவர் அதை அமைத்து வழங்கினார். ஆங்கிலப் புத்தகங்களில் ஆரம்பத்தில் அட்டவணை கொடுத்து ஒவ்வொரு அத்தியாயத்தில் கண்டுள்ளவற்றை அதன் தலைப்பில் கொடுப்பதுபோல், இந்த அத்தியாயத்தில் கண்டுள்ளவற்றை அட்டவணையின் கடைசியாகக் கருதவேண்டாம். எனவே இதை முடிவுரையாகக் கருதுவோம். துரதிர்ஷ்டவசமாக இந்த அத்தியாயத்தின் கையெழுத்துப் பிரதியைச் சரிபார்த்து அச்சிடும் வரையில் ஹேமத்பந்த் உயிருடன் இல்லை. அது அச்சகத்துக்கு அனுப்பப்படும் சமயம் தேவ் அவர்கள் அவற்றின் முடிவற்ற நிலையையும் சில இடங்களில் புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருப்பதையும் கண்டார். ஆயினும் அது அவ்வாறே பிரசுரிக்கப்பட வேண்டியதாயிற்று. அவற்றின் முக்கியமான தலைப்புக்கள் இங்கு சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
சத்குரு சாயி மகிமை
விருப்பு வெறுப்பு இல்லாதவரும், உயர்வு தாழ்வுகளைக் கருதாதவரும், எவருக்கு பக்தர்கள் எல்லோரும் ஒரே மாதிரியாகக் காணப்படுகிறார்களோ, எவர் உயிரினங்கள் எல்லாவற்றிலும் எவ்வித பேதமுமின்றி கலந்து நிற்கிறாரோ, எவர் இந்த அண்ட சராசரங்களில் உள்ள அசையும் - அசையாப் பொருட்களை பகவான் பிரம்மனுடைய ரூபத்தில் உண்டாக்கி வீடுகள், அரண்மனைகள் மற்றும் ஆகாயம் இவை யாவற்றையும் சூழ்ந்து நிற்கிறாரோ அந்த சமர்த்த சாயியை சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கிறோம்.
அவரை நினைத்தாலும், சரணடைந்தாலும் அவர் நமது எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றி நம்மை வாழ்வின் இலட்சியங்களை அடையச் செய்கிறார்.
லோகாயத இச்சைகளாகிய இந்த சமுத்திரத்தைக் கடப்பது மிகக் கடினம். மோகம் என்ற அலைகள் உயர்ந்து, தீய எண்ணங்களாகிய கரையை நோக்கி ஓடி மோதுகின்றன. ஆதலால் நமது மன வலிமையாகிய மரங்கள் வேருடன் வீழ்த்தப்படுகின்றன. அஹங்காரமென்னும் காற்று கடுமையாக வீசி, கடலைக் கொந்தளிக்கச் செய்கிறது. வெறுப்பு, கோபமாகிய முதலைகள் பயமின்றித் திரிகின்றன. நான், எனது என்ற எண்ணங்களும் மற்ற சந்தேகங்களும் நீர்ச்சுழல்களாக இடையறாது சுற்றிக்கொண்டிருக்கின்றன. திட்டுதல், வெறுத்தல், பொறாமை ஆகிய எண்ணற்ற மீன்கள் அங்கு விளையாடுகின்றன.
இவ்வளவு பயங்கரமானதாகவும், கொடுமையானதாகவும் இந்தக் கடல் இருந்தாலும் சத்குரு சாயி இதை அழிக்கவல்லவர். அவரது பக்தர்கள் இதைப்பற்றிப் பயமடைய வேண்டியதில்லை. நமது சத்குரு இந்தக் கடலை பத்திரமாகக் கடப்பதற்கு வேண்டிய படகு போன்றவர்.
பிரார்த்தனை
இப்போது நாம் சாயிபாபாவின் முன்னே முழுவதுமாக வீழ்ந்து அவர் பாதகமலங்களைப் பற்றிக்கொண்டு கீழ்கண்டவாறு எல்லோரும் எல்லாவற்றிற்குமாகப் பிரார்த்திப்போம்.
"எங்களது மனம் கண்டவாறு அலையாமல் தங்களைத் தவிர வேறு எதையும் விரும்பாமல் இருக்கட்டும். இந்த சத்சரிதம் எல்லோருடைய இல்லங்களிலும் இருந்து தினசரி பாராயணம் செய்யப்படட்டும். இதைத் தினமும் முறையாகப் படிப்பவர்களின் துயரங்களைத் தீருங்கள்."
பலஸ்ருதி — பாராயண பலன்
இச்சரிதம் படிப்பதால் நீங்கள் பெறும் நலன்களைப் பற்றிச் சில வார்த்தைகள். புனித கோதாவரி நதியில் குளித்துவிட்டு ஷீர்டியில் உள்ள சமாதி மந்திரிலுள்ள பாபாவின் சமாதியை வணங்கித் தரிசித்து இந்த சத்சரிதத்தைப் படிக்கவோ அல்லது கேட்கவோ வேண்டும். இதைச் செய்தால் உங்கள் உடல், பொருள், ஆவியைத் தாக்கும் தீங்குகள் மறையும். தற்செயலாக சாயியின் கதைகளை நினைப்பதன் மூலம், உங்களை அறியாமலேயே நீங்கள் ஆன்மிக வாழ்வில் விருப்பம் கொள்வீர்கள். இச்சரிதத்தை ஆர்வமுடனும், பக்தியுடனும் படிப்பதால் உங்கள் பாவங்கள் அழிக்கபபடும். ஜனன மரணச் சுழலை ஒழிக்க நீங்கள் விரும்பினால் சாயியின் சரிதங்களைப் பாராயணம் செய்து, அவரை நினைத்து அவரது திருவடிகளில் உங்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் சாயி சரித சாகரத்தில் மூழ்கி மேலெழுந்து அதன் இன்பத்தை மற்றவர்களுக்குக் கூறும்போது அவற்றின் புதுப்புது நித்ய சுகந்தத்தை உணர்ந்து மற்றவர்களையும் தொல்லைகளிலிருந்து காப்பீர்கள்.
சாயியின் உருவையே நீங்கள் தொடர்ந்து தியானித்தால் நாளடைவில் உருவம் மறைந்து உங்கள் தன்னுணர்விலேயே கலந்துவிடும். தன்னையறிதலும், பிரம்மத்தை உணர்தலும் மிகக் கடினம். ஆனால் சகுண பிரம்மாவாகிய சாயியின் உருவத்தின் மூலம் வழிபட்டால் உங்கள் பிரம்ம உணர்வின் முனேற்றம் எளிதாகும். பக்தனானவன் தன்னை சாயியிடம் பரிபூர்ண சரணாகதியாக்கிவிட்டால் தன்னுடைய தனித்தன்மையை இழந்து ஐக்கியமாகி கடலுடன் நதி சங்கமிப்பது போல் அவருடன் ஒன்றாகிறான். கனவிலோ, உறக்கத்திலோ அல்லது விழித்திருக்கும் நிலையிலோ இவ்வாறு அவருடன் இரண்டறக் கலந்தால், நீங்கள் சம்சார பந்தத்தை ஒழிக்கிறீர்கள். யாராயினும் குளித்துவிட்டு அன்புடனும், உண்மையுடனும் இதை ஒரு வாரத்திருக்குள் படித்தால் அவர்களைப் பிடித்த கேடுகள் மறையும். படிக்கக் கேட்பவர்களுக்கு வரும் அபாயங்களும் நீக்கப்படும்.
இதைப் பாராயணம் செய்து செல்வத்தை விரும்புபவன் செல்வத்தையும், நல்ல வியாபாரிகள் வியாபாரத்தில் வெற்றியையும் அடைவர். உண்மைக்கும், பக்திக்கும் தகுந்தவாறே பலன்களும் அமையும். இவைகளின்றி எவ்விதமான அனுபவமும் இல்லை. இச்சரிதத்தை பக்தியுடன் படித்தால் சாயி மனம் மகிழ்ந்து உங்கள் அறியாமையையும், ஏழ்மையையும் நீக்கி உங்களுக்கு ஞானமும், செல்வமும், க்ஷேமமும் நல்குவார். கருத்தூன்றிய மனத்துடன் ஒவ்வொரு நாளும் ஒரு அத்தியாயம் படித்தால் அது எல்லையற்ற ஆனந்தத்தைக் கொடுக்கும். தனது நலனை எவன் மனதில் கொண்டுள்ளானோ, அவன் கட்டாயம் கவனமாகப் படிக்கவேண்டும். தொடரும் பிறவிகளில் ஒவ்வொரு பிறவியிலும் எப்போதும் சந்தோஷமாக அவன் சாயியை நினைப்பான். முக்கியமாக குருபூர்ணிமா, கோகுலாஷ்டமி, ராமநவமி, நவராத்திரி — பாபா சமாதியான விஜயதசமி — தினங்களில் இச்சரிதம் வீடுகளில் பாராயணம் செய்யப்படவேண்டும். இதைக் கவனமுடன் படித்தால் உங்கள் ஆசைகள் நிறைவேற்றப்படும்.
அவர் பாதகமலங்களை உங்கள் மனத்தால் நினைப்பதால் சம்சார சாகரத்தைச் சுலபமாகக் கடப்பீர்கள். இதைக் கற்பதால் நோயாளிகள் குணமுற்று திடகாத்திரமடைவர். ஏழைகள் செல்வம் அடைவர். கீழ்நிலையில் உள்ளோரும், நசுக்கப்பட்டோரும் உன்னத நிலை பெறுவர். மனம் சலனங்களிலிருந்து விடுபட்டு ஒருநிலைப்படும்.
நல்ல அன்பும், பக்தியுமுள்ள வாசகர்களே, கேட்போரே! உங்களை வணங்குகிறோம். வணங்கி ஒரு வேண்டுகோள் விடுக்கிறோம். தினமும், மாதக்கணக்கிலும் படித்த சாயியின் கதைகளை ஒருபோதும் மறக்காதீர்கள். நீங்கள் எவ்வளவு ஆவலுடன் படிக்கிறீர்களோ அல்லது கேட்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு உங்களுக்குச் சேவை செய்வதில் உதவியாக இருப்போம். இதன் ஆசிரியர், வாசகர் இருவரும் ஒத்துழைத்து உதவிசெய்து மகிழ்ச்சியுற வேண்டும்.
ப்ரசாத் யாசனா - பிரசாதம் கோரல்
கீழ்கண்ட பிரசாதம் அல்லது உதவிகோரிப் பிரார்த்தித்து இவ்வத்தியாயத்தை முடிக்கிறோம்.
வாசகரும், பக்தர்களும் சாயியின் பாதகமலங்களை சர்வ பக்தி பூர்வமாக நினைக்கட்டும். சாயியின் உருவம் அவர்கள் கண்களில் நிலைக்கட்டும். அவர்கள் சாயிபாபாவை எல்லா உயிர்களிலும் காணட்டும்.
ததாஸ்து - அப்படியே நடக்கட்டும்
ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
தங்களுடைய சேவார்த்திகளும், பக்தர்க்களுமான எங்களுக்குத் தங்கள் பாதாரவிந்தங்களில் அமைதியைக் கொடுங்கள். ஆசைகளை அழித்து, எங்களது ஆத்மாவுக்குள்ளேயே தாங்கள் கலந்து, வேண்டுவோர்க்கு இறைவனைக் காட்டுகிறீர்கள். பேரார்வத்துடன் விரும்பினோர்க்குத் தாங்கள் அனுபவங்களையும் அல்லது உணர்வுகளையும் கொடுக்கிறீர்கள்.
ஓ! அன்புள்ளம் கொண்டோரே, தங்கள் சக்தி அத்தகையது. தங்கள் திருநாமஸ்மரணை எங்கள் சம்சார பயங்களைப் போக்குகிறது. தங்களது லீலைகள் ஆழங்காண முடியாதவை. எப்போதும் ஏழைகளுக்கும், ஆதரவற்றோர்களுக்கும் அருள்கிறீர்கள். இந்தக் கலியுகத்தில் சர்வவியாபியான, தத்தாவாகிய தாங்கள் சகுணப் பிரம்மமாக உண்மையில் அவதரித்தீர். வியாழக்கிழமை தோறும் தங்களிடம் வரும் பக்தர்களைக் கடவுளின் திருவடிகளைக் காணச்செய்து அவர்களின் சம்சார பயங்களைப் போக்குங்கள்.
ஓ! இறைவனுக்கெல்லாம் இறைவனே! எனது செல்வங்கள் யாவும் தங்களது சேவையில் இருக்கவேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன். சாதகப் பறவைக்கு மேகங்கள் சுத்தமான நீரை அளிப்பதுபோல் இதைப் படிப்பவர்களுக்கு — இந்த ஆரத்திப் பாடல் சமகாலத்தில் வாழ்ந்த மாதவ் அட்கர் என்னும் அடியவரால் இயற்றப்பட்டது — மகிழ்வுடன் உணவளித்துத் தங்கள் வாக்கை நிலைநிறுத்துங்கள்.
ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்